arrow_back
ஒரு கூட்டு கிளிகளின் கூட்டம் அத்தியாயம் – 01

அத்தியாயம் – 01

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அதிகாலை நேரம். குளித்து முடித்துவிட்டுச் சமையலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த அகல்யாவைப் பின்னாலிருந்து கட்டிக்கொண்டாள் அவரது மூத்த மகள் கீர்த்தனா.

“என்னடி, இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்சிட்ட?” என்று அவர் கேட்க, “அம்மா, நீங்க போடுற காபி வாசம் என்னை எழுப்பி விட்டுருச்சுமா,” என கீர்த்தி சொன்னாள்.

“ரொம்ப ஐஸ் வைக்காத! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா வாலு? இப்ப என்ன பண்ணனும்? ஏன் காலங்காத்தால வந்து ஐஸ் வைக்கிற?” என அகல்யா கேட்க, “அம்மா, உனக்கு வர வர என் மேல மரியாதையே இல்லை. என்னை மதிக்கவே மாட்டேங்குற,” எனப் போலி உறைப்புடன் குறைபட்டுக் கொண்டாள் கீர்த்தனா.

“ஆமா, உனக்கு மரியாதை ஒன்றுதான் குறைச்சல்! போடி, போய் இந்தக் காபியை உங்க அப்பாக்குக் கொடுத்துட்டு வா போ,” என அவளை விரட்ட, “சரி சரி, ரொம்ப பண்ணாதீங்க, நான் போறேன் இருங்க,” என்றவள் தன் தந்தைக்குக் காபியை எடுத்துச் சென்றாள்.

தன் தந்தைக்குக் காபி கொடுத்துவிட்டுத் தனது அறை நோக்கிச் சென்றாள் கீர்த்தனா. அங்கு அவளது தங்கை, தன் கரடி பொம்மையைக் கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளைப் பார்த்துக் கடுப்புற்றவள், “எருமை மாடு! மணி என்ன ஆச்சு, இன்னும் எந்திரிக்காம என்னடி பண்ற? எழுந்திரு, காலேஜுக்கு நேரமாச்சு!” என அவளை உலுக்கினாள்.

“டைம் என்னடி?” என அவளது தங்கை கேட்க, “ஒன்பது மணி ஆயிடுச்சு,” என கீர்த்தி பொய் சொன்னாள். பதறி அடித்து எழுந்த அவளது தங்கை மோஹிதாவைப் பார்த்துச் சிரித்த கீர்த்தனா, “சும்மா சொன்னேன்டி, மணி ஆறுதான் ஆகுது. போய் குளி போ,” என்றாள்.

“ஏண்டி உனக்கு இந்த வெறி? நீயெல்லாம் ஒரு அக்காவா? உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு,” எனக் கூறியவள் தலையணையைத் தூக்கி எறிய, கீர்த்தனா அவளைத் திருப்பி அடிக்க, கலவரமாக ஆரம்பித்தது அந்த வீட்டின் காலைப் பொழுது.

அவர்களின் சத்தம் கேட்டு அறைக்கு வந்த அகல்யா, அவர்கள் இருவரையும் விலக்கித் திட்டி விரட்டினார். மோஹிதா மீண்டும் தூங்கப் போக, “ஏய் தூங்குமூஞ்சி! போய் குளிடி, மறுபடியும் தூங்கப் போகுது எருமை,” என அகல்யா திட்டுவதையும் பொருட்படுத்தாது மீண்டும் படுக்கையில் விழுந்தாள் மோஹிதா. ‘இவளெல்லாம் திருந்த மாட்டாள்’ என எண்ணிய அகல்யா, அந்த இடத்தை விட்டு விலகி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தார்.

ஒரு எட்டு மணி அளவில் இருவரும் ஆயத்தமாகி உணவு அருந்த வந்தனர். அகல்யா அவர்களுக்கான காலை உணவாக இட்லி சமைத்து வைத்திருந்தார். காலை உணவை முடித்துவிட்டு அவர்கள் கிளம்ப எத்தனிக்க, “ஏய் கீர்த்தி இருடி, நீ எங்க போற? வீரா இன்னும் வரல, கொஞ்சம் வெளியே போயிருக்கான். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு,” என அகல்யா கூறினார்.

கீர்த்தனா “சரி” என்று ஒப்புக்கொள்ள, மோஹிதா உடனே, “அம்மா, இது எந்த ஊர் நியாயம்? இவளை மட்டும் மாமா கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல விடுவாராம், நான் மட்டும் தனியா போகணுமா?” எனச் சண்டைக்கு வந்தாள்.

“ஏய், நீ எங்கடி தனியா போற? உங்க அப்பாகூடத்தான போற?” என்றார் அகல்யா.

“சரி சரி விடுங்க, ஆனாலும் இந்த மாம்ஸ் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறாரு. இவளை மட்டும் டெய்லி கூட்டிட்டுப் போறாரு, கேட்கிறதெல்லாம் வாங்கித் தராரு. நான் யார் இந்த வீட்ல?” என்று மோஹிதா கேட்க, “நான் தான் அப்பவே சொன்னேன்ல மோஹி, உன்னை நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்கக் குப்பைத் தொட்டியில இருந்துதான் தூக்கிட்டு வந்தாங்கன்னு… சொன்னா கேக்குறியா நீ?” என்றாள் கீர்த்தனா.

அவளைப் பார்த்து “போடி!” எனப் பழிப்புக் காட்டிவிட்டு, காலேஜ் செல்லத் தந்தையுடன் வண்டியில் ஏறிப் புறப்பட்டாள் மோஹிதா. அவர்கள் புறப்படும்போது, எதிரே புல்லட்டில் ஆண்மையின் முழு இலக்கணமாய் வந்து கொண்டிருந்தான் வீரராகவன். அவனைக் கண்டதும் மோஹிதாவின் தந்தை வெங்கடாசலம், “வா வீரா, போன வேலை என்ன ஆச்சு?” எனக் கேட்டார்.

“எல்லாம் ஓகேதான் மாமா. அந்தப் பாலாதான் சும்மா குடைச்சல் கொடுக்கிறான். விஜய்யை விட்டு என்னன்னு பார்க்கச் சொல்லியிருக்கேன், அவன் பாத்துப்பான்,” என வீரா கூறினான். “சரி வீரா, உள்ளே போ. கீர்த்தி உனக்காகத்தான் வெயிட் பண்ணுறா,” என வெங்கடாசலம் சொல்ல, “ஆ சரி மாமா,” எனக் கூறியவன் கீர்த்தனாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

மதுரை அலங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் சுந்தரேசன் குடும்பத்தை அறியாதவர்களே அந்த ஊரில் இருக்க முடியாது. மதுரை நகரில் உள்ள பெரிய மனிதர்களுள் அவரும் ஒருவர். அவரது மனைவி தெய்வானையைப் பார்க்கும்போது மதுரை மீனாட்சி அம்மனையே பார்ப்பது போன்று தோன்றும்; அவரது குணமும் மீனாட்சி அம்மனை ஒத்திருந்தது.

சுந்தரேசன் – தெய்வானை தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி. கதிரேசன் – மீனாட்சி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள்: அஸ்வந்த், பிரதிக்ஷா, மித்ராதேவி.

தெய்வானை – சுந்தரேசன் தம்பதியரின் இரண்டாவது மகள் அகல்யா, அவரது கணவர் வெங்கடாசலம். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள்: கீர்த்தனா, மோஹிதா, சித்தார்த்.

தெய்வானை – சுந்தரேசன் தம்பதியரின் இளைய புதல்வன் வீரராகவன். வயது 30 தாண்டியும் அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

தெய்வானைக்குத் தன் மகனுக்குத் தனது மூத்த பேத்தி கீர்த்தனாவைத் திருமணம் செய்து வைக்க ஆசை. அதைப் பற்றி அவர் பலமுறை சுந்தரேசனிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், “பைத்தியம் மாதிரி பேசாத தெய்வா! வீரா வயசு என்ன, கீர்த்தி வயசு என்ன? அதைவிட நம்ம வீராவோட படிப்பும் வேலையும் கீர்த்திக்கு எப்படிச் சரியா வரும்? அவ டாக்டரா இருக்கா, இவன் நம்ம ஊர்ல விவசாயம், ரைஸ்மில்னு சுத்துறான், ஸ்கூல் கூட முடிக்கல. அவனுக்கு எப்படி அவளைக் கல்யாணம் பண்ணி வைக்கிறது? இதைப்பத்தி நாம ஏதாவது பேசி, கீர்த்திக்குப் பிடிக்காமல் போனா நம்ம பிள்ளைதான் கஷ்டப்படுவான். நம்ம மகனுக்கு ஏத்த மாதிரி மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணா பார்த்துப் பண்ணி வைப்போம்,” என்றார்.

“இவன்தான் யாரைக் காட்டினாலும் வேணாம்னு சொல்றானே!” எனத் தெய்வானை ஆதங்கமாகச் சொல்ல, “கவலைப்படாத தெய்வா, அவனுக்காக ஒருத்தி கண்டிப்பா அவன் வாழ்க்கையில வருவா,” என அவரைச் சமாதானம் செய்தார் சுந்தரேசன்.

கதிரேசன் வீட்டில், அவர் காலையிலேயே வயலுக்குக் கிளம்பிவிட, அஸ்வந்த், பிரதிக்ஷா இருவரும் காலை உணவு உண்ண உணவு மேசைக்கு வந்தனர். அங்கே ஏற்கனவே 5 பூரிகளை உண்டுவிட்டு அடுத்த பூரிக்காகக் காத்துக்கொண்டிருந்தாள் மித்ரா.

“ஏய் கேப்சிகம்! என்ன காலையிலேயே ஒரு கட்டு கட்டுற போல? பார்த்து ஸ்கூல்ல போய் தூங்கப் போற,” என அஸ்வந்த் அவளை வம்பு இழுத்தான். “ஏய், என்னை கேப்சிகம்னு சொல்லாதடா எருமை!” என்றாள் மித்ரா.

“ஆமா அச்சு, அவ பூசணிக்காய் மாதிரி இருக்கா, அவளை கேப்சிகம்னு சொன்னா கோபம் வராதா?” என்று பிரதிக்ஷாவும் சேர்ந்து அவளைக் கிண்டல் செய்தாள்.

“அம்மா! இந்த ரெண்டு பக்கிகளையும் பாருங்களேன்,” என்று அவளது அம்மா மீனாட்சியிடம் முறையிட்டாள் மித்ரா. “ஏய், உங்க ரெண்டு பேருக்கும் என்னடா பிரச்சனை? எதுக்கு அவளை வம்பிழுக்கிறீங்க?” என அவர்களை அதட்டிவிட்டு, “அதுங்க கிடக்குதுங்க பைத்தியங்கள், நீ சாப்பிடு செல்லம்,” என மேலும் இரண்டு பூரிகளை அவளுக்கு வைத்துவிட்டுச் சென்றார் மீனாட்சி.

“அம்மா, நீங்க அவளுக்கு ஆயிலியான புட் (oily food) நிறைய கொடுக்கிறீங்க, அது அவ ஹெல்த்துக்கு நல்லது இல்லை,” என அஸ்வந்த் கூறினான்.

“டேய் டாக்டர்! அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் அவளுக்கு ஹெல்தியான புட்சும் (healthy food) கொடுக்கத்தான் செய்றேன். இப்ப இதெல்லாம் சாப்பிடாம கிழவி ஆனதுக்கு அப்புறமா சாப்பிடப் போறா? உனக்கு வேணும்னா சாப்பிடு, இல்லன்னா இடத்தை காலி பண்ணு,” என்று மீனாட்சி கூற, “நல்லது சொன்னா யாரு கேக்குறா? சரி சரி, எனக்கும் பூரி வைங்க,” என்றான் அஸ்வந்த்.

“டேய் அண்ணா, இப்ப பூரி அன்ஹெல்தி (unhealthy) இல்லையா?” என்றாள் பிரதிக்ஷா. “அதெல்லாம் இல்லை,” என்றான் அஸ்வந்த். “போடா கேடி!” என்று அவனைத் திட்டிய மித்ரா, மீண்டும் சாப்பாட்டில் கவனமானாள்.

உணவு உண்டு முடித்த அஸ்வந்த், “மித்து, சீக்கிரம் வாடா. உன்னை ஸ்கூல்ல விட்டுட்டுதான் நான் ஹாஸ்பிட்டல் போகணும்,” எனச் சொல்ல, “இருண்ணா வாரேன்,” எனக் கூறிப் புத்தகப்பையுடன் வந்தவள், “அம்மா பை (bye),” என்றாள். “பை செல்லம்,” என மீனாட்சி கொஞ்சி அனுப்பி வைத்தார். தன் அக்காவிடம் வந்தவள், “அக்கா பை,” என்று சொல்ல, “பைடி கேப்சிகம்,” எனச் சொல்லி அவளது இரு பக்க கன்னத்தையும் கிள்ளி வைத்தாள் பிரதிக்ஷா. “பார்ட் டைம் சைக்கோ (part-time psycho),” எனத் தன் அக்காவைத் திட்டிக்கொண்டே வெளியே வந்தவள், தன் அண்ணனுடன் காரில் ஏறிப் பள்ளி நோக்கிச் சென்றாள்.

கீர்த்தனா, அஸ்வந்த் இருவரும் ‘வர்மா ஹாஸ்பிட்டலில்’ மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். இருவரும் சிறுவயது முதலே ஒன்றாகவே சுற்றித் திரிந்ததால், உயிர் தோழர்களாக இருந்தனர். அஸ்வந்த் – கீர்த்தனா நட்பைப் பார்த்துப் பொறாமைப்படாதவர்களே இருக்க முடியாது எனும் வகையில் அவர்களது நட்பு இருந்தது.

மோஹிதா, பிரதிக்ஷா இருவரும் ஆர்க்கிடெக்சர் (architecture) இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தனர். மித்ரா, சித்தார்த் இருவரும் பள்ளியில் பிளஸ் டூ (+2) வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர்.

மித்ராதான் அந்தப் பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி. அவளது அண்ணன்மார்களும் அக்காமார்களும் அவளை எந்நேரமும் வம்பிழுத்துக் கொண்டே இருப்பார்கள்; ஆனால் அவர்கள் அனைவருக்கும் மித்ரா என்றால் அதீத பிரியம். பெரியவர்களுக்கும் மித்ராவிடம் அலாதி செல்லம். இந்த அதிக செல்லத்தினாலேயே வெளிஉலகம் பற்றித் தெரியாத ஒரு குழந்தையாகவே மித்ரா வளர்ந்திருந்தாள். இவர்கள் அனைவரும் வீரராகவன் மீது மிகுந்த பிரியமும் மரியாதையும் கொண்டிருந்தனர்.

சுந்தரேசன் குடும்பத்தினர் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காட்டாமல் அனைவருடனும் சமமாகப் பழகுபவர்கள். அதனாலேயே அவர்கள் வீட்டில் வீரராகவனுக்கு உதவியாகப் பல வேலைகளைச் செய்யும் விஜய்யைத் தங்களின் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்தினர். அதன் காரணமாக அவனுக்கும் அந்தக் குடும்பத்தின் மீது அதீத விசுவாசம் இருந்தது.

வீரராகவன் விஜய்யை வேலைக்காரனாகப் பார்த்ததே கிடையாது, தன் தம்பி போலவே அவனை நடத்தினான். விஜய்க்குப் பெற்றோர், உறவினர் என எவரும் இல்லை. அவனுக்கு இந்தக் குடும்பத்தைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் ஒரு ஏக்கமும் வலியும் ஏற்படும். ஆனால், ‘அதெல்லாம் தேவையில்லை, நீயும் இந்தக் குடும்பத்தில் ஒருவன்தான்’ என்பதை வார்த்தைகளில் சொல்லாமல் தங்களின் செயல்களில் காண்பித்தனர் சுந்தரேசன் குடும்பத்தினர்.

forum 2 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்