arrow_back
கனியாத்ரேயம் கனி 15
கனியாத்ரேயம் chevron_right பகுதி 15 / 21

கனி 15

visibility 7
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 15

 

கனி வெற்றியின் கையோடு கை கோர்த்துப் படியிறங்குவதைப் பார்த்த மணிமாறன், இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருப்பதைப் போல உணர்ந்தார். அவருடைய மனம் மேலும் சந்தோஷத்தில் நிறைந்தது.

 

“அப்பா!” என்று அவரை அணைத்துக்கொள்ள, மகளின் அன்பில் திளைத்தார் மணிமாறன்.

 

“மாப்பிள்ளை, எப்படி இருக்க?” என்று வெற்றியைப் பார்த்துக் கேட்டார்.

 

“நல்லா இருக்கேன் மாமா!” என்று சிரித்தவாறு வெற்றி பதிலளித்தான்.

 

அப்போது வெற்றியின் கண்களைப் பார்த்த மணிமாறன், அவை சிவந்திருப்பதைக் கவனித்தார்.

 

“என்னம்மா, மாப்பிள்ளையோட கண்ணு செவந்திருக்கு! அடிச்சு அழ வச்சுட்டியா?” என்று விளையாட்டாகக் கேட்க,

 

“ஆமாம், ஆமாம்! உங்க மாப்பிள்ளையை நான்தான் அடிச்சுக் கொடுமை பண்ணுறேன்!” என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு, கனி சமையலறைக்குள் போய்விட்டாள்.

 

மணிமாறன் வெற்றியின் கண்களைப் பற்றிக் கேட்டார். வீட்டிலிருந்த அனைவரும் ஏற்கெனவே அவனுடைய கண்களைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். இப்போது மணிமாறன், “வெற்றி, உன் கருவிழி பிரவுன் கலர்ல இருக்கேப்பா! டாக்டர்கிட்டக் காட்டினியா?” என்று கவலையுடன் கேட்டார்.

 

“அது எதுவும் பிரச்சினை இல்லன்னு நினைக்கிறேன் மாமா. அடுத்த மாதம் டாக்டரைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்காங்க. நீங்க பயப்படாதீங்க!” என்று வெற்றி அவருக்கு ஆறுதலாகச் சொன்னான்.

 

வெற்றியின் தோளைத் தட்டிக்கொடுத்த மணிமாறன், அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

 

நாளை கௌரிக்கும் சரணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்ததால், அதற்கான துணிமணிகளை வாங்குவதற்காக மித்திரனும் திருச்செல்வமும் அமிர்தவள்ளியும் சென்றிருந்தார்கள். இந்த முறை அவர்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை.

 

போன முறை நடந்த சம்பவங்களால் மிகவும் பயந்துபோன அமிர்தவள்ளி, ‘வேணாம், பிள்ளைங்க இருக்கட்டும். பிள்ளைகளுக்குப் பிடிச்ச மாதிரி நாமளே எடுத்துக்கலாம்!’ என்று முடிவெடுத்தார்.

 

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஐயர் குறித்துக் கொடுத்திருந்த சுபமுகூர்த்த நேரமான காலை ஒன்பது மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது.

 

அமிர்தவள்ளியின் குடும்பத்தினர், திருச்செல்வத்தின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், அங்காளி பங்காளிகள் என அனைவரும் வீட்டில் கூடியிருந்தனர். வீட்டின் பின்புறத்தில் பெரிய விருந்துக்கான சமையல் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது.

 

இரண்டு மகன்களுக்கும் நிச்சயதார்த்தம் செய்து பார்க்க முடியாமல் போனதோடு, அவசரமாகத் திருமணம் நடைபெற்றதால் நிறைய உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும் முடியாமல் போய்விட்டது. அதனால், இப்போது அந்தக் குறையை கௌரியின் நிச்சயதார்த்தத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில், இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

சரணுக்கு மணிமாறனும் கலைவாணியும் அப்பா, அம்மா என்ற உரிமையைக் கொடுத்து, தங்கள் பெற்ற பிள்ளையாகவே ஏற்றுக்கொண்டனர்.

 

இதில் கலைவாணிக்குத்தான் சரணை மிகவும் பிடித்துப்போனது. ஆண் பிள்ளைகள் என்றால் அவருக்கு அத்தனை பிரியம்!

 

மலர்விழியும் யோகநாதனும் மாப்பிள்ளை வீட்டுப் பக்கம் அமர்ந்துகொண்டனர்.

 

கௌரி, அவளுக்காக அழகுக்கலை நிபுணர் ஒருவரை வரவழைத்துத் தயாராகிக்கொண்டிருந்தாள்.

 

ஏழு மாதக் கர்ப்பிணியான கிருத்திகா, புடவை வேண்டாமென்று சுடிதார் உடுத்தியிருந்தாள்.

 

கனியோ, அவர்களது அறையில் புதுப் புடவையைக் கையில் வைத்துக்கொண்டு, அதன் சுருக்கங்களைச் சரிசெய்ய முடியாமல் தடுமாறினாள்.

 

அப்போதுதான் வெற்றி, துண்டைக் கட்டிக்கொண்டு குளித்துவிட்டு வெளியே வந்தான்.

 

“அத்தான், நீங்க டிரெஸ் பண்ணிட்டு, இந்தச் சாரியோட முந்தானையை மட்டும் கொஞ்சம் பிடிக்க முடியுமா?” என்று கனி கேட்க,

 

“இரு, பொண்டாட்டி வாறேன்” என்றவன், தடவித் தடவி தன்னுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டான்.

 

ஆடைகளை அணிந்த பிறகு வெற்றி, கனியின் அருகில் வந்தான்.

 

பாவாடையும் பிளவுஸும் அணிந்து, புடவையை ஒரு கையில் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தாள் கனி.

 

“என்னடி, காலையிலேயே அறைகுறையா நின்னுட்டு, என்னைச் சீண்டிவிடுறியா?” என்று குறும்பாகக் கேட்டான்.

 

“அத்தான், உங்களால இப்போ பார்க்க முடியுதா?” என்று விழிகளை அகல விரித்து, வாயைப் பிளந்து வெற்றியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் கனி.

 

“வாயைப் பிளந்தது போதும். உன்னை மனக்கண்ணால யோசிச்சுப் பார்த்தேன், பொண்டாட்டி. அதான் இப்படிச் சொன்னேன்!” என்றான் வெற்றி.

 

“ச்சீ! நீங்க ரொம்ப மோசம்! ஆனாலும் ஏதோ ஒரு பக்கம் இடிக்குது, அத்தான்!” என்று சிணுங்கினாள்.

 

தான் வாயைப் பிளந்து நிற்பதைக்கூட மனக்கண்ணால் பார்க்க முடியுமா என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க,

 

“சரி, பொண்டாட்டி! லேட்டாகுது. முந்தானையைக் கொடு, பிடிச்சுக்கிறேன்” என்றான் வெற்றி.

 

அதற்கு மேல் யோசிக்க நேரமில்லாமல், கனி புடவையை அவனிடம் கொடுத்தாள். அவன் முந்தானையைப் பிடித்துக்கொள்ள, கனி புடவையைக் கட்டி முடித்தாள்.

 

புடவையைக் கட்டி முடித்ததும், இருவரும் கீழே இறங்கிச் சென்றார்கள்.

 

பிள்ளைகள் அவரவர் ஜோடியுடன் இருக்க, சபையினரின் கண்கள் அவர்களின் மீதே இருந்தன.

 

கலைவாணியும் மணிமாறனும் ஒரு பக்கம் தட்டுகளை ஏந்திக்கொண்டு நின்றனர். மறுபக்கம் திருச்செல்வமும் அமிர்தவள்ளியும் நின்றிருந்தனர்.

 

முதலில் இரு குடும்பத்தினரும் தட்டுகளை மாற்றிக்கொண்டனர். அதன்பிறகு, கௌரி புடவை மாற்றி வந்ததும், சரணும் கௌரியும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டனர்.

 

கௌரியின் கையைப் பிடிப்பதற்காகச் சரண் தன் கையை நீட்டினான். கௌரி அவனுடைய கையின் மேல் தன் கையை வைக்க, ஏற்கெனவே ஜில்லென்று இருந்த அவனுடைய கை லேசாக நடுங்கியது.

 

சரணுடைய கையைப் பார்த்த கௌரிக்கு ஒருவிதக் கவலை ஏற்பட்டது.

 

‘ஏன் இவர் இப்படி நடுங்குறாரு?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

 

இருந்தாலும், சரண் தன்னைச் சமாளித்துக்கொண்டு கௌரியின் விரலில் மோதிரத்தை அணிவித்தான். அதன்பிறகு கௌரியும் சரணின் விரலில் மோதிரத்தை அணிவித்தாள்.

 

இருவரும் மோதிரத்தை மாற்றிக்கொண்டதும், உறவினர்கள் அனைவரும் கைதட்டித் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதன்பிறகு, சரணையும் கௌரியையும் அருகருகே நிற்கவைத்து, புகைப்படங்கள் எடுத்தார்கள். இருவரும் இணைந்து நிற்கும் அழகிய தருணங்களைப் புகைப்படக் கலைஞர் ஒவ்வொன்றாகப் படம்பிடித்தார்.

 

“என்ன சரண், நல்லா போஸ் குடுக்குறியா? எப்படி?” என்று வெற்றி கலாய்க்க,

 

“அண்ணா, பழிக்குப் பழி வாங்குற நேரமா இது?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் சரண்.

 

புகைப்படங்கள் எடுத்து முடித்ததும், விருந்தினர்கள் அனைவரும் உணவருந்த அமர்ந்தனர்.

 

வெள்ளைச் சோறு, காய்கறிப் பிரியாணி, சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல், காய்கறிக் கூட்டு, அப்பளம், பாயசம், ஐஸ்கிரீம் எனப் பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

 

வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தனர்.

 

கௌரி சரணுக்கு உணவை ஊட்டிவிட, அவன் ஆசையாக அதைச் சாப்பிட்டுக்கொண்டான். அதன்பிறகு, அவனும் கௌரிக்கு உணவை ஊட்டிவிட்டான்.

 

கிருத்திகா, மித்திரன், வெற்றி, கனி நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நால்வரும் இப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது அவர்களுக்குள் ஒருவிதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கலகலப்பான பேச்சுகளுக்கும், அவ்வப்போது எழுந்த சிரிப்பொலிகளுக்கும் நடுவே உணவு நேரம் இனிமையாகக் கழிந்தது.

 

அன்றைய நிச்சயதார்த்தமும் எந்தவிதமான குறையுமின்றிச் சிறப்பாக முடிந்தது. உறவினர்களும் விருந்தினர்களும் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்ற பிறகு, வீடு முழுவதும் ஒரே களேபரமாகக் காட்சியளித்தது. விருந்து நடந்ததற்கான அடையாளமாக ஆங்காங்கே நாற்காலிகளும் மேசைகளும் கலைந்து கிடந்தன. உணவு பரிமாறிய இடங்களில் பாத்திரங்கள் குவிந்திருந்தன. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சுத்தம் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தன.

 

திருச்செல்வம், மணிமாறன், அமிர்தவள்ளி, கலைவாணி, கனி, மித்திரன் மற்றும் அவனுடைய மாமா, மாமி என அனைவரும் ஆளுக்கொரு வேலையை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினர். ஆண்கள் நாற்காலிகளையும் மேசைகளையும் ஒழுங்குபடுத்த, பெண்கள் பாத்திரங்களைச் சேகரித்துச் சமையலறையைச் சுத்தம் செய்தனர். வேலைகள் அதிகமாக இருந்தாலும், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்ததால் வீடு மெல்ல மெல்லத் தனது பழைய தோற்றத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தது.

 

அந்த நேரத்தில், வீட்டின் ஓரமாக இருந்த இருக்கையில் கிருத்திகா அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் சரணும் கௌரியும் அமர்ந்திருந்தனர்.

 

ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த கிருத்திகாவுக்கு, மற்றவர்கள் அனைவரும் வேலை செய்துகொண்டிருக்கும்போது சும்மா அமர்ந்திருப்பது சங்கடமாக இருந்தது.

 

சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்திருந்த கிருத்திகா, பின்னர் எழுந்து நின்றாள்.

 

“நானும் ஏதாவது வேலை செய்யுறேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் நகர்ந்தாள்.

 

அப்போது அங்கே வந்த அமிர்தவள்ளி, அவளை நிறுத்தினார்.

 

“என்னம்மா, ஏன் வேலை செய்யுறது? நீ எதுவும் செய்ய வேண்டாம். அமைதியா உட்கார்ந்திருந்தாலே போதும்!”

 

அமிர்தவள்ளியின் குரலில் அத்தனை அக்கறையும் கண்டிப்பும் கலந்திருந்தன.

 

அதைக் கேட்ட மலர்விழி, கிருத்திகாவை வேலை செய்யவிடாமல் தடுத்துக்கொண்டிருந்த அமிர்தவள்ளியைப் பார்த்தாள்.

 

“ஏன் அண்ணி, அவளை வேலை செய்ய விடுங்க. கொஞ்சம் நடமாடினாத்தானே நல்லது?” என்று மலர்விழி கேட்க,

 

“அப்படி இல்ல, மலர்விழி. இப்பல்லாம் இயல்பான பிரசவத்துக்கு என்னென்னவோ செய்யச் சொல்றாங்க. அதெல்லாம் செய்தால் சுகப்பிரசவம் ஆகும்னு சொல்றாங்க!” என்று அமிர்தவள்ளி பதிலளித்தார்.

 

அமிர்தவள்ளியைப் பார்த்து மலர்விழி சிரிக்க,

 

“அதெல்லாம் இருக்கட்டும், மலர்விழி. என் மருமகளை நான் வேலை செய்ய விட விரும்பலை. நான் பட்ட கஷ்டமெல்லாம் என் மருமகள் படக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன். அவளை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு!” என்று அமிர்தவள்ளி அழுத்தமாகக் கூறினார்.

 

அவருடைய வார்த்தைகளைக் கேட்ட மலர்விழியின் முகத்தில் மென்மையான உணர்வு படர்ந்தது.

 

தன் மகள் புகுந்த வீட்டில் இவ்வளவு அன்பாகப் பார்த்துக்கொள்ளப்படுவதை நினைத்தபோது, அவருடைய மனம் நெகிழ்ந்தது. மகள் திருமணமாகிச் சென்ற பிறகும், அவளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே நினைத்து அக்கறை காட்டும் மனிதர்கள் கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.

 

‘நம்ம பொண்ணை நல்ல இடத்தில்தான் கொடுத்திருக்கோம். நம்ம பிள்ளையை இவ்வளவு அன்பா பார்த்துக்கிறாங்களே!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார் யோகநாதன்.

 

அப்போது கிருத்திகாவால் மட்டும் அமைதியாக இருக்க முடியவில்லை.

 

“அம்மா, டீ குடிக்கிற கப்பைக்கூடக் கீழே வைக்க விட மாட்டேங்கிறாங்கம்மா! எதையாவது செய்யலாம்னு நினைச்சா, உடனே வந்து உட்காரச் சொல்லிடுறாங்க. இப்படியே இருந்தா எனக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு!” என்று அலுத்துக்கொண்டாள்.

 

கிருத்திகா பேசி முடித்ததும், மலர்விழி அமிர்தவள்ளியின் அருகில் வந்து, அவருடைய முகத்தை இரு கைகளாலும் நெட்டி முறித்துவிட்டார். பத்து விரல்களிலும் சடசடவெனச் சுடக்கு சத்தம் கேட்டது.

 

அமிர்தவள்ளியும் மலர்விழியும் கிருத்திகாவுடன் பேசிக்கொண்டிருக்க, அங்கே வந்த வெற்றி, “அம்மா, நீங்களும் அப்பாவும், மாறன் மாமாவும் அத்தையும், நாதன் மாமாவும் அத்தையும் உங்க ஆறு பேருக்கும் மூணு நாள் கோயில்களுக்குப் போயிட்டு வர ஏற்பாடு பண்ணியிருக்கேன்மா. முதல்ல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், அப்புறம் சங்கரநாராயணர் கோயில். நாளைக்கு ஒரு சின்ன வண்டி வரும். நீங்க எல்லாரும் சந்தோஷமா போயிட்டு வாங்கம்மா. எப்பப் பார்த்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களே!” என்றான்.

 

அமிர்தவள்ளி, வெற்றி சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாமல் முழித்தார்.

 

வீட்டில் எப்போதும் குடும்பத்தையும் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு சிறிய மாற்றம் தேவை என்று வெற்றி நினைத்தான். ஆண்கள் ஏதாவது வேலையாக வெளியே சென்று வந்தாலும், அமிர்தவள்ளி, கலைவாணி, மலர்விழி மூவரும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தங்களுடைய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால், மூவரும் தங்களுடைய கணவர்களுடன் கோயில்களுக்குச் சென்று வந்தால் மனதுக்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று எண்ணிய வெற்றி, அவர்களைச் சம்மதிக்க வைப்பதற்காக எடுத்துச் சொன்னான்.

 

அமிர்தவள்ளி அனைவரையும் அழைத்துப் பேசினார்.

 

“இந்த வயசுல நாங்க மட்டும் தனியா கோயில்களுக்குப் போயிட்டு வரணுமா! குடும்பமா எல்லாரும் சேர்ந்து போயிட்டு வரலாமே?” என்று கலைவாணி தயக்கத்துடன் தனது கருத்தைத் தெரிவித்தார்.

 

அதைக் கேட்ட வெற்றி சிரித்துக்கொண்டே, “கோயிலுக்குப் போறதுக்கு வயசு தேவையில்லையே அத்தை. இப்போ நாங்க கிளம்பினா கிருத்திகா வர முடியாது. அதனால, நாங்க அடுத்த வாட்டி போயிட்டு வாறோம் அத்தை!” என்றான்.

 

வெற்றியின் பேச்சைக் கேட்டதும் கலைவாணி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.

 

“நான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டேன். பயணத்துக்கான பணத்தையும் கட்டிட்டேன். இப்போ அதைத் திரும்ப வாங்க முடியாது. அதனால, நாளைக்கு மதியம் எல்லாரும் கிளம்பிடுங்க!” என்று வெற்றி உறுதியாகக் கூறினான்.

 

அவனுடைய முடிவைக் கேட்டதும், என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். வேறு வழியில்லாமல், வெற்றி ஏற்பாடு செய்திருந்த பயணத்துக்குச் செல்ல அனைவரும் சம்மதித்தனர்.

 

*****

 

 

அடுத்த அத்தியாயம்

கனி 16

கனி 16  விடிந்த காலைப் பொழுதில், வீட்டில் இருந்த நால்வரும் தங்களது பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அமிர்தவள்ளியின் வீட்டில் இருந்த அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பைகளில் எடுத்து வைத்திருந்தனர். பத்து மணி அளவில் யோகநாதனும் மலர்விழியும் தங்களது வீட்டிலிருந்து தயாராகி வந்திருந்தனர். வெற்றிக்கு மட்டும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்