arrow_back
கனியாத்ரேயம் கனி 21
கனியாத்ரேயம் chevron_right பகுதி 21 / 24

கனி 21

visibility 13
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 21

 

வெற்றிக்குக் கண் பார்வை திரும்பிய பிறகு, கனி அவனிடம் காட்டிய தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அவளுடைய ஒவ்வொரு தயக்கத்தையும் குறும்பாலும் காதலாலும் மாற்றிக்கொண்டிருந்தான் வெற்றி.

அவனுடைய பார்வையில் தெரிந்த காதலும், அவளிடம் அவன் காட்டிய அன்பும் கனிக்குள் புதுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தின. இத்தனை நாட்களாகத் தயக்கமின்றிப் பழகியவளுக்கு, இப்போது அவன் தன்னைப் பார்க்கிறான் என்ற எண்ணமே வெட்கத்தை ஏற்படுத்தியது. அவனுடைய பார்வை தன்னைத் தொடரும்போதெல்லாம், முன்புபோல் இயல்பாக இருக்க முடியாமல் தடுமாறினாள்.

அவளது வெட்கத்தை இரசிப்பதற்கென்றே வெற்றி புதுப்புது குறும்புகளைச் செய்தான். சில நேரங்களில் அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு நகர்ந்துவிடுவான். அவள் அவனை முறைத்துப் பார்த்தால், ஒன்றுமே தெரியாதவனைப் போலப் புன்னகைப்பான்.

ஆரம்பத்தில் அவனது செயல்களுக்குத் தயங்கிய கனி, நாளடைவில் அவனுடைய காதலைப் புரிந்துகொண்டு அவனுடன் இயல்பாகப் பழகத் தொடங்கினாள். அவ்வப்போது அவளும் அவனுக்குப் பதிலாகக் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிடுவாள். அவள் எதிர்பாராமல் செய்யும் அந்தச் சிறிய குறும்புகள்கூட வெற்றிக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தன.

அவர்களுடைய நாட்கள் காதலும் குறும்புமாக நகர்ந்தன. அதே நேரத்தில், வெற்றி தனது எதிர்காலத்திற்கான அடுத்த அடியையும் எடுத்து வைத்தான்.

வெற்றி சரண் குரூப் ஆஃப் எஞ்சினியரிங்!

அந்தப் பெயரில் தனது நிறுவனத்தைத் தொடங்கிய வெற்றி, அதில் சரணுக்கும் முக்கியமான பொறுப்பைக் கொடுத்தான்.

இதுநாள் வரை வெற்றியிடம் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றிய சரணுக்கு, இந்த மாற்றம் எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தது. தனது தங்கையின் வாழ்க்கையை வெற்றி நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டதோடு, தன்னுடைய எதிர்காலத்திலும் நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருப்பதை நினைத்துச் சரண் நெகிழ்ந்தான்.

“அண்ணா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. நான் உங்ககிட்ட வேலை பார்த்தவன். இன்னைக்கு என்னையும் உங்க கூடவே இவ்வளவு பெரிய பொறுப்புல உட்கார வச்சிருக்கீங்க!”

சரணின் உணர்ச்சியைப் புரிந்துகொண்ட வெற்றி, அவனது தோளில் தட்டினான்.

“என்ன சரண், நீயும் நானும் வேற வேறயா? உன்னை நான் எப்பவுமே அப்படிப் பார்த்ததில்ல. நீ என்னோட தம்பி மாதிரி. இந்தத் தொழில் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வளர்க்க வேண்டியது. அதனால, இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காத!”

“சரி அண்ணா. உங்க நம்பிக்கையைக் காப்பாத்துறேன்!”

அன்றிலிருந்து சரணும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முழுமையாக உழைக்கத் தொடங்கினான். வெற்றியின் திட்டமிடலும் சரணின் உழைப்பும் ஒன்றுசேர, நிறுவனம் நல்ல முறையில் முன்னேறத் தொடங்கியது.

வெற்றியின் தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்க, கனியும் வழக்கம்போலக் கல்லூரிக்குச் சென்று வந்தாள். அவளுடைய படிப்பிலும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்ட வெற்றி, அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தான். காலையில் அவள் கல்லூரிக்குக் கிளம்பும்போது குறும்பு செய்வதும், மாலையில் திரும்பி வந்ததும் அன்றைய நிகழ்வுகளைப் பற்றிக் கேட்பதும் அவனது அன்றாட வழக்கமாக மாறியிருந்தது.

கனியும் அவனுடைய அன்புக்குப் பழகிக்கொண்டாள். அவனுடன் சண்டை போடுவதும், அவனைச் சீண்டுவதும், அவனது குறும்புகளுக்குப் பதில் கொடுப்பதுமாக அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தது.

******

இதற்கிடையில், ஆந்திராவில் தனது வேலைகளை முடித்துக்கொண்ட மணிமாறன், திருநள்ளாறில் ஒரு சிறிய மளிகைக் கடை தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.

இத்தனை நாட்களாக வேலையின் காரணமாக மனைவியைப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு இருந்தது. வயதாக ஆக, இனிமேலும் அவளைப் பிரிந்து வாழ முடியாது என்ற எண்ணம் அவருக்குள் வலுத்தது. பெரிய அளவில் தொழில் செய்வதைவிட, தனக்கென ஒரு சிறிய கடையை அமைத்துக்கொண்டு மனைவியுடன் நிம்மதியாக வாழ்வதையே அவர் விரும்பினார்.

கடைக்குத் தேவையான பொருட்களையும் வியாபாரத்திற்கான ஏற்பாடுகளையும் ஒவ்வொன்றாகச் செய்துகொண்டிருந்தார். எல்லாம் சரியாக அமைந்ததும், மனைவியுடன் சேர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்.

இப்படியே நாட்கள் நகர்ந்து, இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.

கிருத்திகா ஒன்பதாவது மாதத்தை எட்டியிருந்தாள். அவளுக்கு வளைகாப்பு நடத்துவதற்கான நேரமும் நெருங்கியிருந்தது.

அன்று, அமிர்தவள்ளி கிருத்திகாவைத் தன்னருகே அழைத்தார்.

“கிருத்திகா, உனக்கு ஒன்பதாவது மாதம் நடந்துகிட்டிருக்கு. வளைகாப்பு நடத்தணும். உனக்கு எப்படிப் பண்ணணும்னு ஆசை? மண்டபம் புக் பண்ணி விமரிசையா நடத்தலாமா, இல்ல வீட்டிலேயே வச்சுக்கலாமா?”

அமிர்தவள்ளியின் கேள்வியைக் கேட்ட கிருத்திகா, மனதில் இருந்த எண்ணத்தை எப்படிச் சொல்வது என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு மெதுவாகப் பேசினாள்.

“அத்தைம்மா, எனக்கு வளைகாப்பை ரொம்பப் பெருசா நடத்த வேண்டாம். சிம்பிளா பண்ணிடலாம்!”

அமிர்தவள்ளி அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“ஏம்மா, ஏன் அப்படிச் சொல்ற? உனக்கு வளைகாப்பு நடத்துறதுல எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? நல்லா மண்டபம் புக் பண்ணி, எல்லாரையும் கூப்பிட்டு விமரிசையா நடத்தலாமே!”

கிருத்திகா உடனே மறுத்துத் தலையசைத்தாள்.

“இல்லை அத்தைம்மா. எனக்கு அதெல்லாம் வேண்டாம். இப்போ நம்ம வீட்டுல தொடர்ந்து நல்ல விஷயங்களா நடந்துகிட்டே இருக்கு. அதனால கண்ணு பட்டுருமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு!”

அமிர்தவள்ளி அவளது கையைப் பிடித்துக்கொண்டார்.

“அட, இதுக்கெல்லாமா பயப்படுற? நல்ல விஷயங்கள் நடக்கிறப்போ சந்தோஷப்படணும். பயந்துகிட்டு இருக்கக்கூடாது!”

“அது தெரியும் அத்தைம்மா. இருந்தாலும், எனக்கு ஏதோ மனசுக்குள்ள பயமா இருக்கு. அதனாலதான் சொல்றேன். எனக்கு ஒரு கோயில்ல வளைகாப்பு வச்சா நல்லா இருக்கும்னு தோணுது. நம்ம குடும்பத்துல இருக்கிறவங்களும் நெருங்கிய சொந்தக்காரங்களும் ஒரு அம்பது பேர் இருந்தாலே எனக்குப் போதும் அத்தைம்மா!”

அவளுடைய விருப்பத்தை அமைதியாகக் கேட்ட அமிர்தவள்ளி, சிறிது நேரம் யோசித்தார்.

“சரி, உனக்கு எப்படிப் பண்ணணும்னு ஆசையோ அப்படியே பண்ணிடலாம். இது உன்னோட வளைகாப்பு. உனக்குப் பிடிச்ச மாதிரி நடக்கிறதுதான் முக்கியம்!”

அவருடைய பதிலைக் கேட்ட கிருத்திகாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“தேங்க்ஸ்மா… சாரி, அத்தைம்மா! நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்க!”

அமிர்தவள்ளி அவளது தலையை அன்பாக வருடினார்.

“எதுக்கும்மா இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்க? நீ என் பொண்ணும்மா. உனக்கு என்ன வேணும்னு எங்ககிட்ட தாராளமா சொல்லலாம்!”

அதற்குப் பிறகு, கோயிலில் எளிமையாக வளைகாப்பு நடத்தவும், நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைக்கவும் முடிவு செய்தனர்.

கிருத்திகா எளிமையாக வளைகாப்பு நடத்த விரும்பியதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருந்தது. கனியின் வாழ்க்கையில் இன்னும் குழந்தைச் செய்தி வரவில்லை என்பதால், சிலர் அவளைப் பற்றிக் கேள்விகள் கேட்பதும், மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. தனது வளைகாப்பிலும் யாராவது அப்படிப் பேசி கனியின் மனதைப் புண்படுத்திவிடுவார்களோ என்ற கவலை அவளுக்குள் இருந்தது.

மேலும், குடும்பத்தில் இருந்த மூத்த மூன்று தம்பதிகளும் ஒன்றாகச் சேர்ந்து கோயில்களுக்குச் சுற்றுலா சென்று வந்திருந்தனர். இத்தனை காரணங்களால்தான் வளைகாப்பை எளிமையாக நடத்த அவள் விரும்பினாள்.

வளைகாப்பு நடக்கும் அன்று காலை, வெற்றி கனியின் புடவையை இஸ்திரி செய்து கொடுத்தான். அவனே அவளது புடவையைத் தயார்படுத்திக் கொடுத்ததில் கனிக்கு அவன்மீது இன்னும் கொஞ்சம் காதல் கூடிப்போனது.

புடவையை அணிந்து தயாரான கனி, தலையில் நிறைய மல்லிகைச் சரங்களைச் சூடியிருந்தாள். பூக்களின் மணமும் புடவையும் சேர்ந்து அவளைப் புதுப்பெண் போலக் காட்சியளிக்கச் செய்தன. அவளது அழகில் சில நொடிகள் தன்னை மறந்த வெற்றி, அவளைக் காதல் பொங்கப் பார்த்தான். அவளது அழகை ரசித்தபடியே, தன் பார்வையால் அவளை விழுங்கிக்கொண்டிருந்தான்.

அவனது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட கனி, இதழோரத்தில் குறும்புப் புன்னகையுடன் அவனை நெருங்கிப் பார்த்தாள்.

“என்ன அத்தான், கண்ணாலேயே சாப்பிடுறீங்களா?” என்று துடுக்காகக் கேட்டாள்.

அவளது கேள்வியில் சிரித்தவன், குறும்பு நிறைந்த பார்வையுடன் அவளைப் பார்த்தபடி,

“கண்ணால என்ன சாப்பிடுறது? இப்பக்கூட சாப்பிடுவேன்” என்றான்.

அவனது பார்வையும் பதிலும் ஏற்படுத்திய குறுகுறுப்பை மறைத்துக்கொண்ட கனி, அவனை அவசரப்படுத்தினாள்.

“அத்தான், சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்க. கோயிலுக்குப் போகணும். வளைகாப்புக்கு நேரமாச்சு. எனக்குக் கீழே நிறைய வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு, அவனது பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் கீழே சென்றுவிட்டாள்.

அவள் சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த வெற்றி, புன்னகையுடன் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் அனைவரும் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கே கிருத்திகாவுக்கு நலங்கு வைத்து வளைகாப்புச் சடங்குகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. வந்திருந்த உறவினர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப பணமும் பரிசுகளும் வழங்கினர்.

மித்ரன், கிருத்திகாவுக்காக மரகதக் கல் பதித்த தங்கக் காப்பைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு அணிவித்திருந்தான். மனைவிக்காக அவன் ஆசையுடன் தேர்ந்தெடுத்த அந்தக் காப்பு, அவளது கையில் அழகாக மின்னியது. அமிர்தவள்ளியும் திருச்செல்வமும் சேர்ந்து இரண்டு சவரன் எடையுள்ள தங்கக் காப்பை கிருத்திகாவுக்குப் பரிசளித்தனர். வெற்றியும் கனியும் தங்கள் பங்கிற்கு ஒரு தங்கக் காப்பை வழங்கினர். அதோடு, கிருத்திகாவின் பெற்றோர்களான யோகநாதனும் மலர்விழியும் தங்கள் மகளுக்குத் தங்கக் காப்புகளை அணிவித்தனர்.

இப்படியாக, கண்ணாடி வளையல்களுடன் சேர்த்து கிருத்திகாவின் கைகளில் கிட்டத்தட்ட மூன்று ஜோடி தங்கக் காப்புகள் சேர்ந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் அன்பையும் ஆசையையும் தாங்கியிருக்க, அவற்றைப் பார்த்த கிருத்திகாவின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

வளைகாப்பு நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நோக்கில், கிருத்திகா அதை கலைவாணியிடம் கொடுத்து வைத்திருந்தாள்.

மற்றொரு பக்கம், அன்று கோயிலுக்கு வருகை தரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால், மாறனும் திருச்செல்வமும் சரணும் சேர்ந்து சாப்பாட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். வந்திருந்த விருந்தினர்களுக்குச் சாப்பாடு குறைவில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதில் மூவரும் கவனமாக இருந்தனர்.

அந்த நேரத்தில், அங்கிருந்த உறவினர்களில் ஒருவர் கௌரியையும் சரணையும் பற்றிக் கேட்டார்.

“கௌரிக்கும் சரணுக்கும் கல்யாணத்தை எப்போ வைக்கப் போறீங்க?”

அருகிலிருந்த மற்றொருவரும் அதையே ஆமோதித்தார்.

“ஆமாம், இப்போ நிச்சயதார்த்தமும் முடிஞ்சிருச்சு. அடுத்தது கல்யாணம்தானே? எப்போ வைக்கப் போறீங்க?”

கௌரி சற்றே வெட்கத்துடன் புன்னகைத்தாள். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் தயங்கியபோது, அருகிலிருந்த அமிர்தவள்ளி அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“முதல்ல கிருத்திகாவுக்குக் குழந்தை பிறக்கட்டும். அதுக்கப்புறம் வீட்டுல எல்லாரும் சேர்ந்து கல்யாணத்தைப் பற்றிப் பேசுவோம். அதுக்காக இப்பவே அவசரப்பட வேண்டியதில்ல!”

அதைக் கேட்டவர்கள் தலையசைத்தபடி வேறு பேச்சுக்குத் திரும்பினர். கௌரியும் நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

வெற்றிக்கு கண் பார்வை திரும்பியதைப் பற்றியும் பேசிக்கொண்டனர். 

சிறிது நேரத்தில், அங்கிருந்த சிலர் கனியைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.

“சின்ன மருமகளுக்கு வளைகாப்பு நடக்குது. ஆனா, மூத்த மருமகள் இன்னும் உண்டாகலையே! கனியையும் பக்கத்துல வச்சு வளையல் போட்டிருக்கலாம்!”

அந்த வார்த்தைகள் கனியின் காதிலும் விழுந்தன. அருகிலிருந்த வெற்றியின் காதுகளையும் அவை எட்டின. முகத்தில் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், கனியின் மனம் அந்தப் பேச்சால் வலித்தது. கிருத்திகா எதை நினைத்துப் பயந்தாளோ, அதுவே இப்போது நடந்துகொண்டிருந்தது.

அதே நேரத்தில், அமிர்தவள்ளியின் தோழி ஒருவர் அவரிடம் நேரடியாகக் கேட்டார்.

“என்ன அமிர்தா, உன்னோட மூத்த மருமகள் இன்னும் உண்டாகலையா? நீங்க டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்ப் பார்த்தியா?”

கேள்வியைக் கேட்டதும் அருகில் நின்றிருந்த வெற்றிக்குச் சங்கடமாகிப்போனது. தன் மனைவியைப் பற்றிய கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் தயங்கினான். கனியின் மனம் மேலும் வருந்திவிடக் கூடாது என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. 

அவன் பதில் சொல்லத் தயங்கிக்கொண்டிருந்தபோதே, அமிர்தவள்ளி பேசத் தொடங்கினார்.

“இல்லை, என்னோட மூத்த மருமகள் இப்போதைக்குக் குழந்தை பெத்துக்கணும்னு நாங்க நினைக்கல. அவ கொஞ்சம் படிக்கிறா. படிக்கட்டும்! அவளுக்குக் குழந்தை பிறந்தாலும் நாங்க பார்த்துக்குவோம். அதுல எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. இருந்தாலும், அவளுக்குச் சின்ன வயசுதானே! ரெண்டு மூணு வருஷம் கழிச்சுக் குழந்தை பெத்துக்கிட்டா போதும்னு நாங்களே நினைக்கிறோம்!”

அவரது பதிலில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. கேள்வி கேட்டவரை அவமானப்படுத்தாமல், அதே நேரத்தில் தன் மருமகளைப் பற்றிய பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

அமிர்தவள்ளியின் பதிலைக் கேட்ட வெற்றிக்கு நிம்மதி ஏற்பட்டது. தான் சொல்ல நினைத்ததைத் தன் தாய் சொல்லிவிட்டார் என்று எண்ணினான். தன்னைப் புரிந்துகொண்டு தனக்காகப் பேச ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் கனிக்கும் ஆறுதலாக இருந்தது.

இதற்கிடையில், கிருத்திகாவுக்கு நலங்கு வைத்துக்கொண்டிருந்தபோது, வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் அவளுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கினார்.

“குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யணும். துணியெல்லாம் துவைக்கணும்!”

அவர் பழைய கால வழக்கங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அமிர்தவள்ளி, பொறுமையாக அவரருகே சென்றார்.

“அதெல்லாம் அந்தக் காலம், அத்தை! எங்களுக்கு இதையெல்லாம் சொல்லி மிரட்டி வச்சது போதும், அத்தை!”

புன்னகையுடன் தொடங்கியவர், அடுத்ததாகத் தன் மனதில் இருந்த உறுதியையும் வெளிப்படுத்தினார்.

“நார்மல் டெலிவரின்னாலும் சரி, சிசேரியன்னாலும் சரி, என்னோட மருமகள் எந்த வேலையும் பார்க்க வேண்டாம். அவங்க மனசுக்கு நிம்மதியா இருந்தாலே போதும். சந்தோஷமா குழந்தை பெத்துக்கிட்டாலே போதும். யாரும் தயவுசெஞ்சு என்னோட ரெண்டு மருமகள்களையும் எதுவும் சொல்லாதீங்க. எனக்குப் பிடிக்காது!”

அவரது வார்த்தைகளில் இருந்த அக்கறை அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது. தன் மருமகள்கள் இருவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அந்தக் கூட்டத்தின் நடுவே நின்றிருந்த வெற்றி, தன் தாயைப் பெருமிதத்துடன் பார்த்தான். அமிர்தவள்ளியின் பேச்சு கனிக்கும் கிருத்திகாவுக்கும் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது.

வளைகாப்பு நிகழ்ச்சி இனிதே முடிந்ததும், யோகநாதனும் மலர்விழியும் கிருத்திகாவைத் தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாரானார்கள். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த மகளைச் சில நாட்கள் தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாக இருந்தது.

மருமகளை வழியனுப்பிய அமிர்தவள்ளியின் மனதிலும் சிறிய கவலை இருந்தது. பிரசவத்துக்கான நாட்கள் நெருங்கிவிட்டதால், கிருத்திகா பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மனதார வேண்டிக்கொண்டார்.

மித்ரனும் மனைவியுடன் மாமனார் வீட்டிற்குச் சென்றான். அங்கே மனைவிக்காக ஒரு சிறிய பேபி ஷவர் கொண்டாட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தான். அதை எதிர்பார்க்காத கிருத்திகா, கணவனின் அன்பான பரிசால் இன்ப அதிர்ச்சியில் திளைத்தாள்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து, வீட்டில் அனைவரும் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில், வெற்றியின் கைப்பேசி ஒலித்தது. அழைத்தது மித்ரன்.

வெற்றி அழைப்பை ஏற்றான்.

“அண்ணா, கிருத்திகாவுக்குப் பனிக்குடம் உடைஞ்சிட்டு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கோம்!”

பதற்றமடைந்த வெற்றி, “என்னடா சொல்ற? சரி, நாங்க இப்பவே கிளம்பி வர்றோம்!” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

வெற்றியின் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த அமிர்தவள்ளி, என்னவென்று கேட்டார்.

“அம்மா, கிருத்திகாவுக்குப் பனிக்குடம் உடைஞ்சிருச்சாம். இப்போ ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்களாம். மித்ரன் சொன்னான்.”

அவ்வளவுதான். வீட்டிலிருந்த அனைவரும் பரபரப்படைந்தனர். அமிர்தவள்ளி, சரண், கௌரி, கனி என அனைவரும் உடனே மருத்துவமனைக்குக் கிளம்பினர்.

“அத்தான், சீக்கிரம் போலாம்!” என்ற கனிக்குப் பயமானது.

மருத்துவமனையை அடைந்ததும், பதற்றத்துடன் காத்திருந்த மித்ரனிடம் வெற்றி விசாரித்தான்.

“அண்ணா, பனிக்குடம் உடைஞ்சதால இதுக்குமேல வெய்ட் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மருந்து கொடுத்து பிரசவ வலியைத் தூண்ட ஏற்பாடு செய்றாங்க!” என்றான் மித்ரன்.

அவனுடைய குரலில் பயமும் தவிப்பும் கலந்திருந்தன.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, பிரசவ அறையிலிருந்து கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்ட மித்ரன், பதற்றத்துடன் கதவுக்கு வெளியே நின்றான். அவளிடம் ஓடிச் செல்ல முடியாத ஒவ்வொரு நொடியும் அவனுக்குப் பல மணி நேரமாகத் தோன்றியது.

பதற்றத்துடன் வெளியே வந்த மருத்துவரை நோக்கி விரைந்து சென்றவன், நிலைமையை விசாரித்தான்.

“இப்போதான் பிரசவ வலி ஆரம்பிச்சிருக்கு. நாளைக்கு விடியற்காலையில குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கு. கவலைப்படாதீங்க. நாங்க பார்த்துக்கிறோம்!” என்றார் மருத்துவர்.

மருத்துவரின் வார்த்தைகள் ஓரளவு நிம்மதியளித்தாலும், கிருத்திகாவின் அலறல் மித்ரனின் நெஞ்சை அறுத்தது. அவளுடைய வலையைக் குறைக்க முடியாத இயலாமையுடன் அமர்ந்திருந்தவனுக்கு வெற்றி ஆறுதல் கூறினான்.

சிறிது நேரத்தில் திருச்செல்வமும் மணிமாறனும் வந்து கிருத்திகாவின் நிலையை விசாரித்துவிட்டுத் தோப்பில் வேலை இருப்பதால் கிளம்பினர். யோகநாதனும் மருத்துவமனைக்கு வந்தார். கலைவாணி வீட்டிலிருந்து அனைவருக்கும் உணவு தயாரித்து அனுப்ப ஏற்பாடு செய்தார்.

இரவு நெருங்கியதும், மறுநாள் அலுவலகப் பொறுப்புகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால் சரண் கிளம்பினான். கல்லூரி இருந்ததால் கனி, கௌரியுடன் வீட்டிற்குச் சென்றாள். வெற்றியும் அமிர்தவள்ளியும் மித்ரனுக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கினர். இவர்களுடன் மலர்விழியும் இருந்தார்.

வீட்டிற்குச் சென்ற கனிக்குத் தூக்கம் வரவில்லை. கிருத்திகாவின் அலறலும் மருத்துவமனையின் பதற்றமான சூழலும் அவள் நினைவில் மீண்டும் மீண்டும் தோன்றின. பிறக்கப்போகும் குழந்தையை நினைத்தால் மகிழ்ச்சியாக இருந்தாலும், கிருத்திகாவின் வலியை நினைத்ததும் மனம் சுருங்கியது. வெற்றியைப் பிரிந்திருக்கும் கவலையுடனேயே, மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுக் கல்லூரிக்குப் போகலாம் என நினைத்தபடி உறங்கினாள்.

 

*******

 

 

அடுத்த அத்தியாயம்

கனி 22

கனி 22 மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் கிருத்திகாவின் பிரசவ வலி அதிகரித்தது. வலியால் அவள் அலற, மித்ரன் அவளுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். “கிருத்தி, தைரியமா இரு. நான் உன் கூடத்தான் இருக்கேன்” என்று ஆறுதல் கூறினான். அவளுடைய வேதனையைப் பார்க்க முடியாமல் மித்ரனின்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்