arrow_back
கனியாத்ரேயம் கனி 22
கனியாத்ரேயம் chevron_right பகுதி 22 / 26

கனி 22

visibility 9
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 22

 

மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் கிருத்திகாவின் பிரசவ வலி அதிகரித்தது. வலியால் அவள் அலற, மித்ரன் அவளுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

 

“கிருத்தி, தைரியமா இரு. நான் உன் கூடத்தான் இருக்கேன்” என்று ஆறுதல் கூறினான்.

 

அவளுடைய வேதனையைப் பார்க்க முடியாமல் மித்ரனின் கண்களும் கலங்கின. அவளுடைய கைகளைப் பற்றியிருந்தாலும், வலியைக் குறைக்க முடியாத இயலாமை அவனை நசுக்கியது.

 

வெளியே நின்றிருந்த வெற்றி, அமிர்தவள்ளி, யோகநாதன், மலர்விழி ஆகியோரும் கலங்கிய கண்களுடன் காத்திருந்தனர்.

 

“கிருத்திகா பாவம்! எவ்வளவு வலியைத் தாங்கிக்கிறா!” என்று அமிர்தவள்ளி கண்களைத் துடைத்துக்கொண்டார்.

 

வெற்றியால் அந்தச் சத்தத்தைக் கேட்கக்கூட முடியவில்லை. கனி ஒருநாள் இதே வலியை அனுபவிக்க வேண்டியிருக்குமே என்று நினைத்ததும் அவனுடைய மனம் வேதனையில் துடித்தது.

 

சிறிது நேரத்தில் பிரசவ அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

 

அந்தச் சிறிய அழுகுரல் அனைவரின் பதற்றத்தையும் கலைத்தது. மித்ரன் ஆழமாக மூச்சை விட்டான்.

 

மருத்துவர் வெளியே வந்து, “உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா!” என்றார்.

 

அந்தச் செய்தியைக் கேட்டதும் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி மலர்ந்தது.

 

மித்ரன் கிருத்திகாவின் நெற்றியில் முத்தமிட்டான்.

 

“கிருத்தி… நமக்குப் பொண்ணு பிறந்திருக்கா!” என்றான் கண்ணீருடன்.

 

அவனுடைய கண்களில் தெரிந்த கண்ணீரைப் பார்த்த கிருத்திகா, சோர்விலும் புன்னகைத்தாள். தன் வலியை விட அவன் பட்ட தவிப்பே அவளுடைய மனதைத் தொட்டது.

 

அமிர்தவள்ளி உடனே திருச்செல்வத்திற்குத் தொலைபேசியில் அழைத்தார்.

 

“ஏங்க, நம்ம வீட்டுக்கு மகாலட்சுமி வந்திருக்கா! நம்மகிட்ட வேலை பார்க்கிற எல்லாருக்கும் பணமும் இனிப்பும் கொடுத்திருங்க. கிருத்திகாவுக்கு ரெண்டு பவுன்ல ஒரு நல்ல செயின் வாங்கிட்டு வந்துடுங்க. நம்ம மருமகளுக்கு நம்ம கையால கொடுக்கணும்” என்றார்.

 

திருச்செல்வமும் அவர் சொன்னபடியே ஏற்பாடுகளைச் செய்தார்.

 

காலையில் கல்லூரிக்குச் செல்வதற்கு முன் கனி, சரண், கௌரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

 

“அண்ணா, கிருத்தி அக்கா எப்படி இருக்காங்க?” என்று கனி கேட்டதும், “நல்லா இருக்கா, அண்ணி. ரெஸ்டெடுத்துட்டு இருக்கா” என்றான் மித்ரன்.

 

குழந்தையைப் பார்க்க அனைவரும் அருகே சென்றனர். கிருத்திகாவின் கட்டிலுக்கு அருகில் சிறிய தொட்டிலில் குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. புசுபுசுவென்ற கன்னங்களும் அடர்த்தியான கருங்கூந்தலும் கொண்ட அந்தப் பிஞ்சு, பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருந்தது.

 

“அடடா! என்ன அழகு!” என்று வியந்தாள் கௌரி.

 

“மித்ரனும், கிருத்தியும் கலந்த மாதிரி இருக்குடா!” என்றான் சரண்.

 

“அத்தான், பாருங்க! எவ்வளவு அழகா இருக்கு!” என்றாள் மகிழ்ச்சியுடன்.

 

வெற்றி புன்னகைத்தான். ஆனால் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த கனியைப் பார்த்ததும், அவளுடைய ஆசை அவனுக்குப் புரிந்தது.

திருச்செல்வம் மருத்துவமனைக்கு வந்து, வாங்கி வந்திருந்த தங்கச் சங்கிலியை அமிர்தவள்ளியிடம் கொடுத்தார். வள்ளி அதை கிருத்திகாவின் கழுத்தில் அணிவித்தார்.

“அத்தைம்மா, எதுக்கு இதெல்லாம்?” என்று கேட்டாள் கிருத்திகா.

“எங்களைத் தாத்தா, பாட்டியாக்கி எவ்வளவு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்க! எங்க பேத்தியப் பெத்தெடுத்திருக்க. நீ அனுபவிச்ச வலிக்கு முன்னாடி இது ஒண்ணுமே இல்லம்மா. உனக்காக இன்னும் நிறைய செய்யணும்னு ஆசை இருக்கு” என்றார் அமிர்தவள்ளி.

அவருடைய அன்பான வார்த்தைகளைக் கேட்ட கிருத்திகாவின் கண்கள் கலங்கின.

அப்போது அங்கு வந்த மருத்துவர், குழந்தையைச் சுற்றி அதிகமானோர் நிற்கக் கூடாது என்றும், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அனைவரும் அறையைவிட்டு வெளியேறினர்.

கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருந்ததால் கனி வெற்றியிடம் விடைபெற்றுக் கிளம்பினாள். சரண் அலுவலகத்திற்கும், கௌரி வீட்டிற்கும் சென்றனர். யோகநாதனும் மலர்விழியும் வீட்டிற்குத் திரும்பினர். கிருத்திகாவையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் வீட்டைச் சுத்தம் செய்து தயார்படுத்த வேண்டியிருந்ததால் இருவரும் வேலையில் இறங்கினர்.

குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. கிருத்திகாவும் மித்ரனும் கிருத்திகாவின் தாய் வீட்டில் தங்கியிருந்தனர். மித்ரன், கிருத்திகாவுக்கு உதவியாக இருந்தான். அவளை நன்றாக ஓய்வெடுக்கச் செய்ததுடன் இரவில் குழந்தையையும் அக்கறையாகப் பார்த்துக்கொண்டான்.

அன்று கல்லூரி முடிந்ததும் கனியை அழைத்துச் செல்ல வெற்றி வந்திருந்தான். காரில் ஏறியவளிடம்,

“பொண்டாட்டி, முதல்ல ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வரலாம்” என்றான்.

“சரி அத்தான்”

மருத்துவமனைக்குச் சென்று கண்களைப் பரிசோதித்துக்கொண்ட பிறகு, மருத்துவர் எல்லாம் நன்றாக இருப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட கனிக்குத்தான் அத்தனை நிம்மதியாக இருந்தது.

“அப்பாடா! நல்லா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இனிமேல் பரவாயில்லை” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

அவளுடைய முகத்தில் தெரிந்த நிம்மதியைப் பார்த்த வெற்றி புன்னகைத்தான்.

“சரி, இப்போ எங்கே போகலாம்?” என்று கேட்டான்.

“வீட்டுக்குத்தானே போகணும், அத்தான்?” என்றாள் கனி.

“இல்லை, இன்னைக்கு வெளியே சாப்பிடலாம். உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றவன், அவளை ஓர் அழகான ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே இருவரும் அமர்ந்து உணவு ஆர்டர் செய்தனர். அப்போதுதான் கனிக்கு நாளைய தினம் நினைவுக்கு வந்தது.

“அத்தான், நாளைக்கு நம்ம அனிவர்சரி!” என்றாள் புன்னகையுடன்.

“எனக்கு ஞாபகம் இருக்கு, பொண்டாட்டி” என்றான் வெற்றி.

“அப்படியா? அதனாலதான் இன்னைக்கு வெளியே கூட்டிட்டு வந்தீங்களா?” என்று கேட்டாள்.

“அதுவும் ஒரு காரணம்தான். இன்னொரு விஷயம் கேட்கணும்” என்றவன் அவளைப் பார்த்தான்.

“என்ன அத்தான்?”

“நாம திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா, பொண்டாட்டி?” என்று கேட்டான்.

அவனைப் பார்த்துச் சிரித்தாள் கனி.

“அத்தான், நான் அன்னைக்கே நம்ம கல்யாணத்தை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன்” வெற்றியின் முகம் சற்றே வாடியது.

அதைக் கவனித்த கனி, அவனைக் கிண்டல் செய்யும் விதமாக, “வேணும்னா நம்ம அறுபதாம் கல்யாணத்துக்கு வெயிட் பண்ணுங்க, அத்தான்!” என்றாள்.

அவளுடைய பேச்சைக் கேட்டு வெற்றி சிரித்துவிட்டான்.

“அதுவரைக்கும் காத்திருக்கணுமா?” என்று அவன் கேட்க, கனி சிரித்தபடியே தலையசைத்தாள்.

உணவு முடிந்ததும் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். வெற்றி பானம் அருந்திக்கொண்டிருக்க, கனி அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.

ஒரு வருடம் ஆகியிருந்தும், அடுத்த கட்டத்திற்கு இன்னும் காலடி எடுத்து வைக்காதது கனிக்குள் தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல நாட்களாக இதைப் பற்றிக் கேட்க நினைத்தவள், இன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

“அத்தான், நம்ம எப்போ குழந்தை பெத்துக்கிறது?” என்று கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் வெற்றிக்குப் புரையேறியது. எதிர்பாராத நேரத்தில் அந்தக் கேள்வி வந்ததால், தன்னைச் சமாளித்துக்கொண்டு அவளுடைய முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“இதைப்பத்தி வீட்டுக்குப் போயிட்டுப் பேசலாம், பொண்டாட்டி!” என்றான்.

அதற்குப் பிறகு கனியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்ற எண்ணமே அவளுடைய மனதை ஆக்கிரமித்திருந்தது.

வீட்டிற்கு வந்ததும் இருவரும் வழக்கம்போல அனைவருடனும் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் கனி அறைக்குச் சென்றுவிட்டாள். வெற்றியுடன் பேச வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவள் காத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து வெற்றி குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு அறைக்குள் வந்தான். கட்டிலில் அமர்ந்திருந்த கனியைப் பார்த்தவன்,

“என்ன பொண்டாட்டி, இன்னும் தூங்கலையா?” என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த கனி, “நீங்கதானே வீட்டுக்குப் போயிட்டுப் பேசலாம்னு சொன்னீங்க!” என்றாள்.

வெற்றியின் முகம் சற்றே மாறியது. அவளுடைய எதிர்பார்ப்பைப் பார்த்ததும், தன் மனதில் இருந்த பயத்தைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான்.

“ஓ… அதுவா, பொண்டாட்டி? நீ படிச்சிட்டு இருக்கல்ல… அதனாலதான் கொஞ்சம் உனக்கு ஸ்பேஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட கனி புருவத்தைச் சுருக்கினாள்.

“அத்தான், உங்களுக்கு முப்பத்தொரு வயசு முடிஞ்சுருச்சு. இதுக்கு அப்பறம் குழந்தை பெத்து வளர்த்து அவங்களை எல்லாம் நம்ம கரை சேர்க்க வேணாமா?”

“ஆமா பொண்டாட்டி, புரியுது. நம்ம வாழ்க்கையில எல்லாமே ஓகேதான். ஆனா, குழந்தைன்னு வரும்போது மட்டும் கொஞ்சம் பயமா இருக்கு” என்று யதார்த்தமாகப் பேச முயன்றான்.

அவனுடைய பதிலைக் கேட்ட கனி குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

“குழந்தை பெத்துக்கிட்டு படிப்பை என்னால கண்டினியூ பண்ண முடியும், அத்தான். நம்ம வீட்ல ஆளுங்க இருக்காங்க. நம்ம எதுக்குக் கவலைப்படணும்?” என்றாள்.

வெற்றி அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டு, ஆழமாக மூச்சை இழுத்தான். அவளுடைய ஆசையைப் புரிந்துகொண்டாலும், தன் பயத்தை மறைத்துக்கொண்டு சம்மதிக்க அவனால் முடியவில்லை.

“பொண்டாட்டி, நம்ம வேணும்னா வாடகைத் தாயை மூலமா குழந்தை பெத்துக்கலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டான்.

கணவன் அப்படிக் கூறியதும், கனியின் எண்ணங்கள் எங்கெங்கோ செல்லத் தொடங்கின. தன்னிடம் ஏதேனும் குறை இருக்கிறதா? தாம்பத்திய வாழ்க்கையில் அவனுக்கு விருப்பம் இல்லையா? இல்லை, தன்னையே பிடிக்கவில்லையா? எனப் பல கேள்விகள் அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்க, அவளுடைய மனம் வலியில் துடித்தது.

“ஏன் அத்தான்… எங்கிட்ட ஏதாவது குறை இருக்கா? என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள். அவளுடைய குரலில் கோபத்துடன் சேர்ந்து வலியும் வெளிப்பட்டது.

“ஐயோ, அப்படியெல்லாம் இல்ல பொண்டாட்டி!” என்று உடனே மறுத்தவன், அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“அப்புறம் எதுக்கு அத்தான் இப்படிச் சொல்றீங்க? என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?” என்று கேட்டவளின் கண்கள் மீண்டும் கலங்கின.

அவளுடைய முகத்தைப் பார்த்த வெற்றிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டவன், மெதுவாகப் பேசத் தொடங்கினான்.

“பொண்டாட்டி, எனக்கு உங்கிட்ட எந்தக் குறையும் தெரியல. நீ குழந்தை பெத்துக்க முடியாதுன்னும் நான் நினைக்கல. உண்மையைச் சொல்லணும்னா… எனக்குத்தான் பயமா இருக்கு”

“என்ன பயம், அத்தான்?”

“அன்னைக்கு கிருத்திகாவைப் பார்த்துல்ல… அவ பட்ட கஷ்டத்தையும், அந்த வலியையும் பார்த்ததும் எனக்கு ரொம்பப் பயமாயிடுச்சு, கனி. அவள் அலறின சத்தத்தைக் கேட்கவே முடியல என்னால. நீயும் ஒருநாள் அந்த வலியை அனுபவிக்கணும்னு நினைச்சுப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு”

அவன் சொன்னதைக் கேட்ட கனி அமைதியாக அவனைப் பார்த்தாள். அவனுடைய கண்களில் தெரிந்த அச்சம் உண்மையானது என்பதை உணர்ந்தாலும், தாயாக வேண்டும் என்ற தன் ஆசையை அவனுக்குப் புரியவைக்க விரும்பினாள்.

“பிரசவம்னா எவ்வளவு வலி இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா, அதுக்காக…” என்று அவள் ஏதோ சொல்ல வர, வெற்றி அவளை இடைமறித்தான்.

“வேணாம், பொண்டாட்டி. நீ அந்த ரிஸ்க் எடுக்கவே வேண்டாம்னு தோணுது. நீ அந்த நிலைமையில இருக்கிறதை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. கர்ப்பமாக இருக்கிற பெண்களைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு. கிருத்திகா பிரசவ வலியில துடிச்சதைப் பார்த்ததிலிருந்து, அந்த நினைப்பு என்னை விடவே மாட்டேங்குது. அதனாலதான் வாடகைத் தாயைப் பத்தி யோசிச்சேன், பொண்டாட்டி” என்றான்.

அவளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே தன் வார்த்தைகளால் அவளைப் புண்படுத்திவிட்டதோ என்ற வேதனை அவனுக்குள் எழுந்தது.

“அத்தான், நீங்க இப்படி முடிவு பண்ணா, எனக்குக் கர்ப்பப்பையே தேவையில்லைன்னு நானே முடிவு எடுக்க வேண்டிவரும். நம்ம பிள்ளையைத் தாங்காத கர்ப்பப்பை என் உடம்புல இருந்து என்ன பிரயோஜனம்?” என்று விசும்பியபடியே அழுதாள்.

அவளுடைய வார்த்தைகள் வெற்றியின் நெஞ்சைத் துளைத்தன. அவள் தன் உடலைப் பற்றியே இவ்வளவு கடுமையாகப் பேசும் அளவுக்குத் துன்பப்பட்டுவிட்டாள் என்பதை உணர்ந்ததும் அவனுடைய மனம் உடைந்தது.

வெற்றி அவளைப் பார்த்தபடியே அமைதியாக இருந்தான்.

“நீங்க பயப்படுறது எனக்குப் புரியுது, அத்தான். ஆனா, எனக்கு ஒரு குழந்தை வேணும்னு ஆசை இருக்கு. நம்ம குழந்தையை நானே வயிற்றுல சுமந்து பெத்துக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காகத்தான் உங்ககிட்ட கேட்டேன்” என்றாள் கனி.

அவளுடைய ஆசையை மறுக்கவும் அவனால் முடியவில்லை; அவளைப் பிரசவ வலியில் தவிக்க விடவும் அவனுக்குத் தைரியமில்லை. எந்த முடிவை எடுத்தாலும் அவளைத் துன்பப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணம் அவனைச் சிதைத்தது.

வெற்றி மேலும் பேசாமல் அமைதியாக இருக்க, கனியும் ஏதோ பேச வாயைத் திறந்தாள். ஆனால், தொண்டைக்குழி அடைத்துக்கொண்டது.

“உங்களுக்கு எங்கூட சேர்ந்து வாழப் பிடிக்கலையா, அத்தான்?” என்று கேட்டாள்.

தன்னவள் அப்படிக் கேட்டதும் வெற்றியின் உள்ளம் கனத்தது. அடுத்த நொடியே அவளைத் தன் மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டான். சட்டையில்லாத அவனுடைய வெற்று மார்பு, அவளுடைய கண்ணீரில் நனைந்தது.

அவளுடைய முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், கண்ணீரால் நனைந்த கன்னங்களில் முத்தங்களைப் பதித்தான். நடுங்கிக்கொண்டிருந்த அவளுடைய இதழ்களோடு தன் இதழ்களைச் சேர்த்து, அவளுடைய தவிப்பைத் தணிக்க முயன்றான்.

இதழ்கள் பிரிந்த பின்னரும் கனி அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவளுடைய முகத்தைத் தன் மார்பில் புதைத்துக்கொண்டிருந்தவளை மெதுவாக விலக்கிய வெற்றி, அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

“உன்கூட சேர்ந்து வாழ எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா, பொண்டாட்டி? நீ என் வாழ்க்கைக்குள்ள வந்ததிலிருந்து, ஒவ்வொரு நாளும் உன்னோட சேர்ந்து வாழணும்னுதான் ஆசைப்படுறேன். ஆனா, என்னோட வாழ்க்கைக்குள்ள நீயா வந்ததால உன்னோட எதிர்காலம் பாதிக்கப்பட்டுடக் கூடாதுன்னு நினைக்கிறேன். உன்னோட படிப்பு வீணாகிடக் கூடாது. உன்னோட கனவுகளையெல்லாம் நீ நிறைவேற்றிக்கணும். அதுக்காகத்தான் இத்தனை நாளா கொஞ்சம் பொறுமையா இருக்கேன்”

அவன் கூறியதைக் கேட்ட கனி மெதுவாகத் தலை நிமிர்ந்தாள். அவன் தன்னைத் தள்ளி வைக்கவில்லை, தன் எதிர்காலத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதற்காகவே பொறுமையாக இருந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்தாள்.

“நிறைய தடவை உங்கிட்ட நெருங்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன், பொண்டாட்டி. ஆனா, அப்போதெல்லாம் உன்னோட படிப்பையும் எதிர்காலத்தையும் நினைச்சு நான் கண்ட்ரொல இருந்தேன். இப்பவும் உங்கூட ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்னு ஆசை இல்லாம இல்ல. ஆனா, அந்த ஆசைக்காக உன்னை ஆபத்துல தள்ளிடக் கூடாதுன்னுதான் பயப்படுறேன், பொண்டாட்டி” என்று இத்தனை நாட்களாகத் தானும் அதே தவிப்பில் இருந்ததைச் சொன்னான் வெற்றி.

அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட கனியின் கண்கள் மீண்டும் கலங்கின. ஆனால், இம்முறை அந்தக் கண்ணீரில் கோபம் இல்லை. தன்னுடைய ஆசையைவிடத் தன்னுடைய பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் பெரிதாக நினைக்கும் கணவனின் அன்பு அவளுக்குப் புரிந்தது.

அடுத்த நொடியே அவள் வெற்றியை இறுக அணைத்துக்கொண்டாள்.

********

 

அடுத்த அத்தியாயம்

கனி 23

காலையில் கண் விழித்த கனி, தனக்கு அருகில் குழந்தையைப் போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வெற்றியைப் பார்த்தாள். அவனது முகத்தில் தெரிந்த அமைதியைக் கண்டதும், நேற்றிரவு நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அவளது நினைவில் வந்து போயின. இனியும் அப்படி எதுவும் நடந்துவிடக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்