13
புரவியிலிருந்து கீழே இறங்கியவர்கள், அவர்கள் இருவரையும் வணங்கினார்கள்இளவரசன் தன் குருவான தேவநாராயணர் காலில் விழுந்து வணங்க,
“சிரஞ்சீவியாக வாழ்க மகனே!” என்று அவர் வாழ்த்த, அந்த புனிதரின் இதழில் மர்ம புன்னகை விரிந்தது.
“இளவரசே!… இவர் என் குரு. இவர் திருநாமம் சிவானந்த போகர்!… பெரும் தவசீலர். வேதங்களில் கரை கண்டவர். இதுவரை இமயமலையில் தவத்திலிருந்தார்.
சில காலமாய் கச்சியம்பதி கோயில் பூஜை இவர் தான் ஏற்று உள்ளார்.அவரின் ஆசி பெரு. இவர் ஆசி நம்மைப் படைத்தவன் தரும் ஆசிக்கு நிகர்.” என்றார் தேவநாராயணர் ஆதித்தியனிடம்.
அவர் காலில் விழுந்து வணங்க ஆதித்தியன் முயல, அதை கை காட்டிதடுத்தவர், “தேவையில்லை” என்றார்.
அதைக் கேட்டு அனைவரும் ஒரு கணம் திகைத்துப் போயினர்.
“அயன்மீர்!.” என்றார் தேவநாராயணர் நெஞ்சம் பதைக்க.
என்றுமே அந்தப் புனிதர் தன்னை வணங்க வரும் யாரையும் தடுத்ததில்லையே!
இன்று என்ன?
அவர் சிவ சொரூபம் என்பது மறுக்க முடியாத உண்மை.
தேவநாராயரானார் கண் முன்னே தான், அரவம் தீண்டி இறந்து விட்டதாக நம்பப் பட்ட குழந்தை ஒன்றை மீண்டும் உயிர் பெறச் செய்தவர்.
அவர் அங்கு வந்தபின் தான் கச்சியம்பதியின் இறைத் தன்மை அதிகமானதாய் தோன்றியது அவருக்கு. சில மனிதர்களின் முன் தான் நாம் அமைதி, இறைத்தன்மையை உணர முடியும். இறைவனோடு பேசுபவர் என்று கூட இவர் கேள்விப்பட்டதுண்டு.
அந்த தவசீலர் வருங்கால மன்னனை வாழ்த்த மறுக்கிறார் என்றால்!
“இளவரசர் உடல் நலம் இல்லாதவர். வணங்கத் தேவையில்லை. மீண்டும் சந்திப்போம் தேவ நாராயணா!…” என்றவர் அந்த இடத்திலேயே இருப்பதற்கு விரும்பாதவர் போல் கிளம்ப முயல,
“அய்யனே!” என்ற தேவநாராயணர் குரல் கேட்டு நின்றார் அவர்.
“இவள் என் புத்திரி. நித்திலவல்லி!. உங்கள் ஆசி வழங்குங்கள்.” என்ற அவர் பேச்சு கேட்டு, தவசீலர் ஏதோ சொல்ல வருவதற்குள் அவர் திருப்பாதத்தைப் பணிந்து இருந்தாள் நித்திலவல்லி.
அவர் முகத்தில் மீண்டும் புன்முறுவல் தோன்றியது.
“உன் மனம் போல் உன் வாழ்வு மலரும். உன்னுடையது உன்னை விட்டு என்றுமே நீங்காது. மகாராணியாகக் கடவாய்” என்றார் அவர்.
அவர் வாழ்த்தைக் கேட்டு அதிர்ந்து நின்றார் தேவநாராயணர்.
‘என்னவிதமான வாழ்த்து இது?…’அவர் மனம் பதைக்க ஆரம்பித்தது.
‘கல்வினையாளர் குலத்தில் பிறந்த தன் பெண்ணரசி நாட்டினை ஆளப் போகும் அரசியா? அரண்மனை, அரசவை தர்பார் இதை எப்படி ஒப்பும்?…
மகள் தன் நிலையை மறந்து, இளவரசனை மணாளனாய் வரித்து விட்டாளா?… இறைவா!… இது என்ன சோதனை?’ தேவநாராயனர் மனம் பதைக்க ஆரம்பித்தது.
ஆதித்தியனும், நித்திலவல்லியும் திகைத்தவர்களாய் பார்வையைப் பறிமாறிக் கொண்டனர்.
அவர்கள் சத்திரிய முறைப்படி, கந்தருவ முறைப்படி சதி, பதி ஆகி இருந்தார்கள் உள்ளதாலும், உடலாலும். அழகனைத் தவிர, மலை குடிகளைத் தவிர வேறு யாரும் அறியாத இவர்கள் இணைவு இந்த முனிபுங்கவருக்கு எங்கனம் தெரிய வந்தது?
அவர்களின் தடுமாற்றம், கைப்பினை அந்தச் சன்னியாசியும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
“அய்யனே!…. என் மகள் தரணியை ஆளும் மகாராணியா?…. என்ன விபரீதம் இது?” என்றார் தேவநாராயணர்.
“நடப்பது நடக்கும் போது புரியும் தேவ நாராயணா!… மகாராணி என்றால், ‘தரணியை ஆள்பவள்!…’ என்று மட்டும் பொருள் இல்லையே!
மனநிம்மதியுடன், பூரணத்துவமான வாழ்வை வாழும் அனைத்து காரிகைகளும் மகாராணிகளே. மனதிற்குப் பிடித்த மணாளனோடு, கருத்து ஒருமித்து, இல்வாழ்க்கை நியதிகளைக் கடைப்பிடித்து, தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் எந்தப் பெண்ணுமே சக்ரவர்த்தினிகள் தான்.
உன் புத்திரி, அந்த வகையில், தன் மணாளனின் இதயத்தை ஆளப் போகிறாள். உன் அருந்தவச் செல்வி, அந்த வகையில் மகாராணி தான் தேவ நாராயணா!. அவள் உயிரினும் மேலாக விரும்பும் வாழ்வு, அவளை வந்து அடையும். இம்மையிலும், மறுமையிலும்!….” என்றவர் புதிராகப் பேசி விட்டு விலக, அவர்கள் திக்ப்ரமை பிடித்து நின்றனர்.
‘அவர், ‘சிரஞ்சீவியாக வாழு!’ என்று இளவரசனையும் வாழ்த்தவில்லை. நித்திலவல்லியை, ‘சௌபாக்கியவதியாய் வாழு!’ என்றும் வாழ்த்தவில்லை’ என்பதைக் கண்ட அழகனின் கண்கள் சுருங்கியது.
தேவநாராயணர், ஆதித்தியன், நித்திலவல்லி உரையாடிக் கொண்டு விலகி விட, அந்தத் தவசீலரை தொடர்ந்து சென்றான் அழகன்.
வேகவதி ஆற்றங்கரையில் விச்ராந்தியாய் நடந்து கொண்டு இருந்தார் அந்தத் தவசீலர்.
ஒரு இடத்தில் நின்று விட்டார் அவர்.
அந்த மாலை வேளையில், பகலவனின் பொற்கிரணங்கள் பட்டு, ஜொலித்து கொண்டு இருந்தது வேகவதி ஆறு.
அந்த ஆற்றின் ஒரு புறம் ஜொலித்து கொண்டு இருந்தது பொன்மாளிகை. அதைக் கண்டவாறு கை கூப்பி நின்று விட்ட , அவரின் முன் சென்றான் அழகன்.
“யார் நீ?” என்றான் வாளின் மேல் கை வைத்தவாறு.
மெல்லிய புன்முறுவல் புரிந்த அவர் “அந்தக் கேள்விக்கான விடையைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறேன் அப்பனே!…” என்றார் அவர்.
“அறிவு பூர்விகமாகப் பேசி விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். எங்கள் இளவரசைக் கொல்ல வந்த கபட வேடதாரி தானே நீர்?” என்றான் அவன்.
“இன்னொரு உயிரை வதைப்பதால், எனக்கு என்ன சோழமகுடமா கிடைக்கப் போகிறது?
நான், ‘சிவனே’ என்று இருக்கும் சந்நியாசி.
எனக்கு எதற்கு அப்பா உன் இளவரசன் உயிர்?” என்றார்.
அவர் பேச்சில் பல உள்ளர்த்தங்கள்.
அதைப் புரிந்து கொண்டு இருந்தால், அழகன் நடக்கப் போகும் விபரீதத்தைத் தடுத்து இருக்கலாமோ!
‘சோழ மகுடத்திற்காக உயிர்ப் பலி ஏற்படுவதற்கான ஆயுத்தங்கள் ஆரம்பமாகி விட்டது என்கிறாரா?’ என்று ஒரு கணம் திகைத்த முத்தழகன், “வார்த்தையில் ஜாலம் காட்டுவது தான் உமது இயல்போ?…. உண்மையான தவசீலராய் இருந்து இருந்தால், வணக்கத்தைக் கூட ஏன் நீர் தடுக்க வேண்டும்?… ஆசான் இளவரசரை வாழ்த்தும் போது உமது முகம் ஏன் அப்படி மாறியது? காணவில்லை என்று மட்டும் நினைக்காதீர். யார் நீ?” என்றான் அழகன்.
“நீ காண வேண்டியதைக் காண மறுத்து, காணத் தேவை இல்லாததைக் கண்டு கொண்டு இருக்கிறாய் முத்தழகா!. அமைதி கொள். இந்தப் பயம், பதட்டம் என்னிடம் தேவை அற்றது. நான் தவ வாழ்வு மேற்கொண்டவன். எனக்கும் அரசியல் சூதுகளுக்கும் வெகுதூரம்.” என்றார் அவர்.
“உங்கள் வாதம் வேண்டாம். இளவரசை ஏன் வாழ்த்தவில்லை?” என்றான் அழகன்.
“இருக்க வேண்டியது இருக்கக் கூடாத இடத்தில் இருப்பதால், உயர வேண்டியது, இல்லாமல் போகப் போகிறது.
இது காலத்தின் நியதி.
முழு சாதரூபம்/தங்கம் கொண்டு நிர்மாணிக்கப் பட வேண்டியது கந்தகோட்டம் இல்லை. இங்கு மனிதர்கள் வாழ முடியாது.
பக்திக்கு மத்தியில் இருக்க வேண்டியவளைப் பேராசைக்கும், பஞ்சமாபாதகத்திற்கும் நடுவே கொண்டு வைத்து ஆணவத்தைக் காட்டினால், அவள் தன்னை மறைத்துக் கொள்ள நினைத்து விட்டாள் அழகா.
அங்கே பார் ஆலயத்தின் அழகை.
அரசர்கள் வசிக்கும் இடம் மட்டும் இல்லை, இறை சொரூபம் இருக்கும் இடமும் ஆலயம் தான். மேலே காண்.
பகலவனை மறைக்கக் கரும் மேக திரள்கள் சூழ தொடங்கி விட்டது.
பகலவன் மறைவான்.
அவன் சுவடு காலப்பக்கங்களில் இருக்காது. இனி இருள் சூழும்.” என்று அவர் கை காட்ட, ஒரு கணம் திரும்பிய அழகன் தன்னை மறந்து, ஏதோ ஒரு சக்தி ஊந்த, எதிரே வானை முட்டி உயர்ந்து நின்ற தங்க அரண்மனையை நோக்கி கை கூப்பி நின்றவனின் மேல், பொழிய ஆரம்பித்தது வான் மழை.
ஒரு கணம், அந்தத் தங்க அரண்மனை மறைந்து அங்குக் காணாமல் போன நிசும்பசூதினி வைர சிலை அங்கே ஜொலிப்பது போன்று தோன்ற, ஸ்தம்பித்து போனான் அழகன்.
பாண்டிய வீரர்களால் களவாடப்பட்டதாகச் சோழ சாம்ராஜ்யம் நினைத்துக் கொண்டிருந்த அந்த வைர சிலை, தான் இருக்கும் இடத்தைச் சூசகமாக, அழகனுக்கு தெய்வ காட்சியாய் சொல்வதை புரிந்து கொள்ளும் ஆற்றல், அவனிடம் இல்லாமல் போனது.
“பார்த்தாயா அழகா!… தேவியின் அழகு வடிவத்தை!… ஆயிரம் நாவங்கள்/நாக்கு கொண்ட ஆதிசேஷனாலும், இந்தச் சொரூபத்தை வர்ணிக்க முடியுமா சொல்!…. பிறவி என்னும் மாய கடலைக் கடக்க உதவும் கடைக்கண் பார்வை அல்லவா இது!….
உலகத்திற்கே அன்னை. பார் எப்படி நம்மைக் கண்டு கடையிதழ் புன்னகை புரிகிறாள்.
‘மனிதரும், தேவரும், மாயா முனிவரும்,
வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே!….
கொன்றை வார்சடைமேல் பனிதரும்
திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த புனிதரும்
நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!…’
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர், தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே!
தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும், இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.” என்று துதித்து முடிக்க, இப்பொழுது அங்கே தெய்வ ரூபத்திற்கு பதில், தங்க அரண்மனை ஜொலித்து கொண்டிருந்தது தன்னுள் வைர சிலையை ஒளித்து வைத்தபடி.
அவர் அங்கேயே சப்பணமிட்டு அமர்ந்து தன் தவத்தில் ஈடுபட்டு விட, அவரை கடந்து, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தான்.
சில கணம் கழித்துத் திரும்பிய அழகன், ஆற்றங்கரையில் தான் மட்டும் தனியாக நிற்பதைக் கண்டு, தலையை உலுக்கிக் கொண்டு இளவரசனைத் தேடிச் சென்றான்.
அதுவரை இருந்த ஒளி, வெளிச்சம் மறைந்து, அந்தத் தரணியை இருள் சூழ ஆரம்பித்தது. பகல் வேளை நள்ளிரவு போல் மாறிப் போனது.
ஒருவேளை நடக்கப் போவதை இயற்கையே கட்டியம் நவில்கிறதோ?
அதுவரை காதலியின் செல்லச் சிணுங்கல் போல் பட்டும், படாமலும் வீசிக் கொண்டு இருந்த தென்றல், ருத்ரதாண்டவம் ஆடும் சிவனின் நர்த்தனம் போல் சுழன்று வீசத் தொடங்கியது.
மழை!… பெரும் மழை. சூறைக்காற்றுடன் பெரும் மழை.
.தலைவனின் அணைப்பில் மெல்ல மயங்கிக் கொண்டு இருக்கும் தலைவியின் நெகிழ்ச்சி போல் ஓடிக் கொண்டு இருந்த வேகவதி ஆற்றின் அளவு, அரக்கக் கூட்டத்தின் அதகளம் போல் உயர ஆரம்பித்தது.
வெள்ளம்!… வெள்ளம்!…
வேகவதி ஆற்றில் அதுவரை காணாத அளவுக்கு வெள்ள நீரின் அளவு உயர ஆரம்பித்தது. வெள்ளத்தின் வேகம்தாள முடியாமல் கரையோரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள நீரின் அளவு உயர்ந்து, தங்க மாளிகையின் அடிப்பகுதியில் தேங்க ஆரம்பித்தது.
அதே சமயம், காஞ்சியின் ஒரு மனையில் (வீட்டில்) பத்துக்கும் மேற்பட்டோர் கூடி இருந்தனர்.
கண்கள் சிவந்து, அவர்கள் இருந்த தோரணையே மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. அதில் மூவர் மட்டும் அந்த இடத்திற்குச் சற்றும் பொருந்தாத தோற்றத்திலிருந்தனர்.
மார்பில் ஆடிய முப்புரி நூல் அவர்கள் அந்தணர் குலத்தினர் என்பதையும், அவர்கள் அணிந்து இருந்த விலையுயர்ந்த பட்டுப் பீதாம்பரம், ஆபரணங்கள் அவர்கள் பெரும் தனக்காரர்கள் (பணக்காரர்கள்) என்பதையும் பறை அறிவித்துக் கொண்டு இருந்தது.
நிச்சயம் சோழ சாம்ராஜ்யத்தின் உயர்ந்த பதவியில் இருக்கும் கர்வம்,அவர்கள் முகத்தில் தெரிந்தது. அரசவை ஆட்கள் அந்தச் சிறு வீட்டினுள் என்ன செய்கிறார்கள்?
நடுநாயக்கமாய் அமர்ந்து இருந்தவன் முதலில் பேசினான். அவன் பெயர் ரவிதாசன்.
அவனுக்கு இன்னொரு நாமமும் (பெயர்) இருந்தது. ‘பஞ்சவன் ப்ரமாதிராஜன்’ என்பது.
இந்த ப்ரஹ்மாதிராஜன் என்பது சோழ அரசவையில் உயர்ந்த பதவியில் உள்ள அந்தண குலத்தவருக்கு வழங்கப் படும் பட்ட பெயர்.
எப்படி ஆதித்தியன், வீரபாண்டியனைக் கொன்றதும் ‘யுவராஜா’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டதோ அவ்வாறு.
அவன் அருகே இருந்த மற்றும் இருவர், அவன் சக உதரன்ங்கள் (சகோதரன்).
‘சோமன் சாம்பவன், பரமேஷ்வரன்’ என்கிற, ‘இருமுடி சோழ ப்ரமாதிராஜன்’. அவர்களுடன், ‘மலையனூர் ரவிதாஸ க்ரமவிதான்’ என்பவனும் அமர்ந்து இருந்தான்.
“சோழ அரசரும், இளவல் அருள்மொழி வர்மனும் இந்தத் தடவையும் உயிர் பிழைத்த விட்டனர்.” என்றான் சோமன்.
“இனி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகச் சரியாக எடுத்துவைக்க வேண்டும் அண்ணலே!… சோழ வம்சம் என்ன நடந்தது என்று உணரும் முன், இந்தக் குலம் வேர் அறுந்தால் தான் நம் உண்மையான அரசர், ‘மதுராந்தகர்’ அரசராய் அரியணை ஏற முடியும்.” என்ற ரவிதாசன் மேலும்.
“மதுராந்தகரின் தந்தை மரணிக்கும்போது அவர் பாலகனாய் இருந்த காரணத்தினால், மணிமகுடம், சுந்தர சோழனுக்குக் கொடுக்கப்பட்டது. அது தான், நமது இளவரசர் அரியணை ஏற வந்து விட்டபிறகும் தன் மகன் ஆதித்திய கரிகாலனை அடுத்த அரசனாய் இவர் எங்கனம் அறிவிக்கலாம்?…
இவரே நிஜ அரசர் கிடையாது. இதில் இவர் குருதிக்கு அரசபதவி. வேதனை!… வெட்கம்!… அவமானம்!… யாரின் உரிமையை யார் தட்டிப் பறிப்பது?” என்றான் கோபத்துடன்.
“நேரம் வந்து விட்டது சகோதரா! நம் உண்மையான அரசரை அரியணை ஏற்ற நேரம் வந்து விட்டது. அந்த நயவஞ்சக இளவரசன் இன்று அவன் கட்டும், காந்தரூபத்தை காண வந்து இருக்கிறான். இதுவே தக்க சமயம். இவனைக் கருவறுத்தால், சுந்தர சோழன் மனதளவில் ஒடிந்து போய் விடுவான். முடி நம் இளவரசர் மதுராந்தகருக்கே… வெல்க நாடு!… வெல்க நாடு!…” என்று முழங்கினான் பரமேஸ்வரன்.
“வெல்க நாடு!… வெல்க இளவரசர் மதுராந்தகர்!” என்ற முழக்கம் இடி முழக்கத்தைத் தாண்டி ஒலித்தது.
“ஹ்ம்ம் கிளம்புங்கள்… இந்தப் பாதாள அறை வழியே சென்றால் யாரும் அறியாமல் அந்தப் பொன் மாளிகைக்குள் நுழைந்து விடலாம்.” என்றான் ரவிதாசன்.
இந்த நால்வருடன் மேலும் பன்னிரண்டு பேர் அந்த நிலவழியின் மூலம் பொன்மாளிகைக்குள் பிரவேசித்து, இளவரசன் ஆதித்தியன் வருகைக்காக ஒளிந்து நின்றார்கள்.
காலம் கடந்து கொண்டு இருந்தது. அதே சமயம், கச்சி ஏகம்ப நாதனின் கோயில் கதவுகளை மூடி, உள் பக்கம் தாளிட்டு கொண்டார் அந்தத் தவசீலர் சிவானந்த போகர்.
கருவறையில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்தவர் வெளியே வர, அவரை எதிர்கொண்டான் அவன். கரிய நிறத்தில் நல்ல அஃருதியான தேகம் கொண்டவன்.
அவன் முகத்தில் அப்படியொரு தேஜஸ்.
“வணங்குகிறேன் சிவானந்த போகரே!.” என்றான் அவன்.
“வணக்கம் பைரவரே!… தாங்கள் என்னைத் தேடி வருவது?” என்றார் போகர்.
“திருக்கோயிலின் கதவுகளை இந்த நொடிக்கே தாளிட்டு… கோயில் விசையினை (சாவி) என்னிடம் ஒப்படைத்து விட்டீர்கள். மாலை நேரச் சாயரட்சை இன்னும் இறைவர்க்கு நடக்கவில்லையே!” என்றார் அவர்.
“என்ன பைரவரே!… இது என்ன சோதனை? காலத்திற்கே அதிபதி தாங்கள். நடக்கப் போகும் விபரீதங்களை அறியாதவர் போல் இது என்ன கேள்வி? விநாசம் நடக்கும் போது திருக்கோயில் கதவங்கள் , நடை சாற்றப் பட்டு, அன்றைய வரவு, செலவு கணக்கினை இந்தத் திருக்கோயிலின் காவல், தங்களிடம் சமர்ப்பிப்பது தானே எங்கும் நடக்கும் வழிமுறை.” என்றார் சிவானந்த போகர்.
“இதைத் தடுக்க உம்மால் முடியாதா என்ன?” என்றார் அவர்.
“அனைத்திற்கும் சாட்சியாய் இருக்கும் தாம், இப்படி வினவி என்னைச் சோதிக்கலாமா? இது தெய்வ சங்கல்பம். அந்த மாளிகையைத் தன் இருப்பிடமாய் தேவி தீர்மானித்து விட்டார்கள்.
அவர்களின் மூல சொரூபம் உலகத்தின் கண்களிலிருந்து முழுதாய் மறைய தீர்மானித்து என்னை இமயத்திலிருந்து வரவழைத்து விட்டது.
நானும் தேவியின் அஞ்சனை (உத்தரவு) படி திருவுருவ வடிவத்தைத் தஞ்சையில் அரண்மனையிலிருந்து கொண்டு வந்து, அந்தப் பொன் மாளிகையினுள் மறைத்து விட்டேன். இனி, ‘நிசும்பசூதனி தேவி, ஜல மூல சொரூபியாய்’ இருக்கத் திருவுள்ளம் செய்து விட்டார். தஞ்சையின் காவல் தெய்வம், இனி கச்சியம்பதி சாதரூப (தங்க) திருக்கோயில் ஜல தேவி!….” என்றார் சிவானந்த போகர்.
“ஹ்ம்ம்!… நடப்பது நடந்தே தீரும் என்கிறாய். இனி கலி காலம் வரும். தெய்வ மூர்த்தங்கள் களவாடப்படும். இந்தத் தேவி இருப்பது மறக்கப்படும்.சிலவை மறைந்து இருப்பதே பிரபஞ்சத்திற்கு நல்லது.” என்றவர் பிரகாரத்தில் விலகிப் போகச் சிவானந்த போகர் கை கூப்பி வணங்கினார்.
ஒரு நொடி நாம் கண் சிமிட்டி பார்ப்பதற்குள் அந்தக் கரிய உருவம் காணாமல் போய் இருந்தது.
அவர் இடத்தில் நின்று கொண்டு இருந்தது கரிய பெரும் நாய் ஒன்று. அப்படியொரு உருவம் கொண்ட அஃருதியான நாய்.
ஒரு ஆள் உயரத்திற்கு இருந்தது அந்த நாய் என்றால் மிகையல்ல. ஒருவேளை அந்த ஆள் மிகவேகமாய் நடந்து போய் இருப்பார். கவனித்து இருக்க மாட்டோம். வெளியிலிருந்து நாய் கோயிலுக்குள் மழைக்கு அஞ்சி உள்ளே வந்து இருக்கும் போல் இருக்கிறது.
தங்க மாளிகையின் வெளிப்புறம் மழையும், வெள்ளமும் அதிகரித்துக்கொண்டு இருக்க, ஆதித்தியன், தேவ நாராயணர், நித்திலவல்லி, முத்தழகன் நால்வரும் அந்த மாளிகையின் நிர்மாணிப்பின் பிரம்மாண்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டு, ஒவ்வொரு இடமாய் உலா வந்து கொண்டு இருந்தனர்.

