arrow_back
காஞ்சித் தலைவன் 15
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 17 / 19

15

visibility 517
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அயன்மீர்!… உங்கள் திறமைக்கு அளவே  இல்லை.  கண்    கோடி  வேண்டும்   இந்த    அரண்மனையைக்   காண,   வர்ணிக்க   ஆயிரம்   நாவன்ங்கள் (நாக்கு)   இருந்தாலும் கூறுவது கடினமே.” என்றான்   ஆதித்தியன்.

“இளவரசே!…  இந்த  எல்லா   பெருமையும்   நம் முன்னோர்களையே  சேரும்.” என்றார் தேவநாராயணர்.

“அது  எங்கனம்…?…  விவரித்து    இயம்பினால் நம் முன்னோர்களின் திறனை, அறிவூகூர்மையை தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். நமக்குப் பின் வரும் சந்ததிகளும் பயன் பெரும்.” என்றான் ஆதித்தியன்.

“இளவரசே!… நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணில் அடங்காக் கலைகளுக்கு ஈடு, ஈரேழு பதினான்கு உலகளிலும் காண முடியாது.

ஒரு மனையாகட்டும், ஒரு கந்த கோட்டம் ஆகட்டும், ஒரு ஊர், நகரம் எப்படி அமைய வேண்டும் என்பதில்  மிகத்  தெளிவாக  இருந்து  இருக்கிறார்கள்.

‘நான்குபுறம் சுவர் இருந்து விட்டால் மட்டும் அது மனை ஆகி விடாது என்கிறது’ அதர்வ வேதம்.

வசிஷ்ட  மகரிஷி,  ஆயிரம்  கம்பம்  (தூண்) கொண்ட மூன்று  அடுக்கு மனை நிர்மாணித்துக் கொண்டதாகவும்  அது, ‘த்ரி தத்து சரணம்’ (மூன்று அடுக்கு மாளிகை)  என்று  அழைக்கப் பட்ட தாய் சொல்வார்கள்.  

‘கல்ப  சாஸ்திரத்தின்’ விரிவுரையான, ‘சுல்வ சூத்திரம்’   ஒருமனையின்  அளவு,  அகலம்,   நீளம்  போன்றவற்றைச் சொல்கிறது.

‘கந்த புராணம்’ ஒரு ஊர் எப்படி அமைக்கப் பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதில் கூறப்பட்டு   இருக்கும்  தங்க  மாளிகை, மூன்று ரதங்களில்  வடிவில்  நிர்மாணித்த  கல்வினையாளர்கள் பெயரினை  உரைக்கிறது.

‘கருட புராணம்’  மூன்று  வகை வடிவமைப்புகளைப் பற்றிச் சொல்கிறது.

மக்கள், அரசர் குலம் வாழும்  மனை,  படை  தங்கும்  படைவீடு, இறைவன்  வாழும்  ஆலயம்  அமையும்  முறை  இருக்கிறது.

‘அக்னி  புராணத்தில்’  பதினாறு  காண்டங்கள்,  நகர நிர்மாணிப்பைப் பற்றி மட்டும் சொல்கிறது. மீதம்  உள்ள  பதிமூன்று   காண்டங்கள்,  சிற்ப சாஸ்திரத்தைப்  பற்றிக்  கூறுகிறது.

‘நாரத  புராணம்’ குளம்,  கேணி,  ஆறு,  ஆலயம்    பற்றியும், ‘வாயு புராணம்’ மலைமேல் ஆலயங்கள் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்பதையும்,  ‘மட்சய   புராணம்,   பவிஷய புராணம், பிருஹதா ஷமிதா, ஆகாம, கமிக ஆகமா’ என்று ஆகமத்தில் மட்டும்   பத்துக்கும் மேற்பட்டவை மனை, கோட்டம்,  கந்தவராம்,  ஆலயம் நிர்மாணிப்பைப் பற்றிச் சொல்கிறது.

இவை எல்லாம் எட்டுத்திக்கிலும் உள்ள தெய்வ அலைகளை மனையின் உள் செலுத்தும் வண்ணம்   வழிமுறைகளைச்   சொல்கிறது. இவை  தவிர,  மேலும்   எட்டு வகையான  முன்னோர்களின்   ஓலைச்சுவடி  குறிப்புக்கள் கொண்டே  எந்த  ஒரு  கல்வினையாளரும்       எங்கள்  நிர்மாணிப்பு தொழிலைச் செய்கிறோம்.” என்றார்    தேவநாராயணர்.

“அவை என்ன தந்தையே?” என்றாள் நித்திலவல்லி.

“சில்ப  சாஸ்திரத்தின்  வகையில்  வருபவை,

‘மனசாரா,  மாயாமாதா  சில்ப  சாஸ்திரம்,  

காஸ்யப  முனிவரின்   அம்சுமத்பேதா, 

விஸ்வகர்மா சிற்ப சாஸ்திரம், 

அகஸ்திய முனிவர் சாஸ்திரம்,

சனத் குமார   வாஸ்து  சாஸ்திரம்,  மந்தன சாஸ்திரம்,  

சம்கிரஹா’ போன்றவை  கற்ற  பின்னே,   ஒரு நிலத்தின் புனிதம், அங்கு எவ்வகையான  அலைகள்   பரவி   உள்ளன, அதில் எவ்வகையான மனை, கோட்டம், ஆலயம், எவ்விதமான பொருள் கொண்டு நிர்மாணிக்கலாம், எத்தனை மாடம், சாளரம்,கம்பம்/ தூண் இருக்க வேண்டும் என்ற நியதி   உள்ளது.

அதனால்  இறை  சன்னிதானத்திற்குள்  செல்லும் போது    நம்மையும் அறியாமல்,  இறைவன்  பால் ஈர்க்கப் படுகிறோம்.” என்றார் தேவநாராயணர்.

“’உங்கள் திறமை, நீங்கள் கற்ற வித்தை இந்தச் சாதரூப  கந்தகோட்டத்தின் நிர்மாணிப்பிலேயே   தெரிகிறது  குருவே!… உமது மாணாக்கனாய்   இருப்பது   எனக்குப் பெருமையே.

இனி இந்த முன்னோர்களின் அறிவினை, மறைந்து உள்ள நம் அறிவு செல்வத்தைத் தரணி எங்கும்    பரவும்  வகை, இவை எல்லாம் போற்றி பாதுகாக்க  வேண்டிய   கலை  பொக்கிஷங்கள். எங்குமே   இல்லாத   அறிவின்   வெளிப்பாடு .

’மக்களைப் பிரித்து வைக்க மட்டுமே வேதங்கள் பயன்படுகின்றன’ என்று சொல்லும் அறிவிலிகளுக்கு உங்கள் விளக்கம் அறிவுக் கண்ணைத் திறக்கட்டும்.

கல்லாதவரும்   இதை எளிதாகப் புரிந்து கொள்ளும்   வகையில்   இவற்றை    எழுத   ஆணை    பிறப்பிக்கப்   போகிறேன்.”   என்றான்    ஆதித்தியன்.

“வாழ்க இளவரசே!… வாழ்க உமது எண்ணம். வேதங்கள்,  சிற்பசாஸ்திரத்தையும், நிர்மாணிப்பையும் மட்டும்  சொல்வதில்லை.
மருத்துவம், வானவியல் சாஸ்திரம், எண் கணிதம், சஸ்திர, அஸ்திர வித்தைகள், ஒரு  தரணியின்       நிர்வாகம், அரசியல், ராஜதந்திரம், தவம் போன்றவற்றையும்    சொல்கிறது.

இவை  எல்லாம்   மீண்டும்   மறுமலர்ச்சி   பெற வேண்டும். காலத்திற்கு ஏற்றார் போல் எது தேவையோ அதைச் சாதக பட்சியின் அறிவுடன், தெளிவுடன்   ஏற்றுக்   கொள்வதே கூர்மை.” என்றார்    தேவநாராயணர்.

அவர்கள்  நால்வரும் பேசிய படியே உலா வந்து கொண்டு இருக்க, அவர்கள் முன் திடீர் என்று வந்து  குதித்தது  அந்தப் பகைவன்  படை. 

அடுத்த நொடி இளவரசனை பின்னுக்கு அனுப்பி அழகன், தேவநாராயணர், நித்திலவல்லி அரண் போல் அவனைக் காக்க, ஆதித்தியனை சூழ்ந்து தங்கள்  வாட்களை  ஏந்தி   நின்றார்கள்.

“யார் நீங்கள்?… உத்தரவின்றி எங்கனம் உள்ளே வந்தீர்கள்?…  இந்த  கணமே வெளியேற வில்லை என்றால் உமது உயிர் உமக்கு உரிமையானது இல்லை.”  என்று  உறுமினார்  தேவநாராயணர்.

“ஓஹ் தேவநாராயணர் இங்குத் தான் இருக்கிறாரா?…   வணக்கம்  குருவே!… ” என்றபடி வந்தான் ரவிதான்.

“ரவிதாஸ!… என்ன இது? இங்கு உமக்கு என்ன பணி?” என்றார்  தேவநாராயணர்.

“இளவரசர் ஆதித்திய கரிகாலரின் உயிர்க்குக் காலனாகும் பணி தான் குருவே. நீர் எனக்கு வித்தை சொல்லிக் கொடுத்த ஆசான். என் தாதைக்கு நிகர். அதனால் சிரம் தாழ்த்தி பணிவுடன்  வேண்டிக்   கேட்டுக்  கொள்கிறேன்.  தாங்களும்   தங்கள்  புதல்வியும் இங்கிருந்து  அகன்று விடுங்கள்” என்றான் ரவி தாசன் கைகள் கூப்பி.

“உமக்கு என்ன துணிச்சல்! என் முன்னால் நின்று இளவரசரின் உயிரைப் பறிப்பேன் என்கிறாய்? தேசத்துரோகி.” என்றார் தேவநாராயணர் கடும் கோபத்துடன்.

“நான்  தேசத் துரோகி எல்லாம் இல்லை தேவநாராயணரே!…  ராஜ விசுவாசி. என் அரசர் சுந்தர சோழன்  இல்லை.  அறிஞ்ஜெயர் தான். என் இளவரசர்   ஆதித்திய சோழர் இல்லை… மதுராந்தக சோழர்  மட்டுமே. 

அவர்   குலத்திற்குச்  சொந்தமானது   இந்தச்   சோழ   மகுடம். 
அது  அலங்கரிக்க  வேண்டியது  எங்கள்   இளவரசர் மதுராந்தகரின்  சிரத்தை  (தலையை)  மட்டுமே.
அதனால் தான் அதற்கு இடையூறாக இருக்கும் ஆதித்திய கரிகாலனின் சிரத்தை கொய்ய  வந்து   இருக்கிறோம்.   இப்பொழுது சொல்லுங்கள் தேவநாராயணரே! இந்த ஆதித்தியர், எப்படி இந்த நாட்டின் அரசர் என்ற உரிமை பாராட்டுகிறார்? இதன்  நிஜ  வாரிசு  எங்கள்  மாதுராந்தகர் தானே?

காவலாய்  வந்தவன்  எல்லாம்   கோவலன் (அரசன்) ஆக   நினைத்தால்,   கை கட்டி சேவகம் செய்ய  நாங்கள்  என்ன பேடிகளா?”  என்றான் ரவிதான் கோபத்துடன்.

“மக்கள் உன் இளவரசர் மதுராந்தகனை அரசர் ஆக்க விரும்பவில்லை. எங்கள் ஆதித்தியரைத் தான் விரும்புகிறார்கள் என்பதை மறந்து விட்டுப் பேச வேண்டாம் ரவிதாஸ” என்றார் தேவநாராயணர்.

“மக்கள்!… அவர்கள் மாக்கள். அவர்கள் யார் வழி வழியாய்   வரும்   ராஜகுல  மகுடத்தின் இடத்தை நிர்ணயிப்பதற்கு?… அரியணை ஏறப்போவது    எங்கள்    இளவரசர் மாதுராந்தகர் மட்டுமே. சுந்தர சோழனும், இந்த ஆதித்தியனும், இவன் இளவல் அருள்மொழி வர்மனும் சிரம்  கொய்யப்படுவார்கள்.  இது   எங்கள் இளவரசரின்  உரிமை.   மீட்டுக் கொடுக்காமல் ஓய மாட்டோம் வெல்க   நாடு! வெல்க சோழ இளவரசர்!…”  என்றான்   ரவிதாசன்   கோபத்துடன்.

“குருவே!…  இவனுடன் தர்க்கம் புரிவது வீண். இவன்   சிரத்தை   கொய்வது தான் ஒரே வழி இவன் வாய் மூட நம் காவல் படை அழைத்து  வருகிறேன். சற்று நேரம் இவனைக் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்றான் முத்தழகன்.

“இல்லை முத்தழகா. இந்த மழையில், படை வீட்டிற்கு  நீ   சென்று  வருவதற்குள்  கால   தாமதம்   ஆகி  விடும்.  நீ இளவரசரை விலகாதே. அவர் உயிர் தான்   இப்பொழுது   முக்கியம்.  படை   அழைத்து வர நான் வேறு வழி செய்கிறேன். ஹ்ம்ம்!…  நித்திலவல்லி.  தொடங்கு.”   என்றார்   தேவநாராயணர்.

தந்தையின்  கட்டளை வந்ததும்,  வாயால்  வினோத  சப்தம் ஒன்றை, அங்கு இருந்த கருவி ஒன்றில் நித்திலவல்லி எழுப்ப, சற்று நேரத்தில் அவர்களின்  பின்புறம் இருந்து முப்பதிற்கும் குறையாத பெண்களும், காட்டில் பாதுகாப்பிற்கு வந்த  தேவநாராயணர் மாணவர்களும் இவர்களைச் சூழ்ந்து பத்ம வியூகத்தை ஏற்படுத்தினார்கள்.   

உள்ளே  வந்த பெண்களைக் கண்டதும் ஒரு கணம்  திகைத்த ரவிதாசன்,  பின் அந்த இடமே அதிரும்   வகையில் உரத்துச் சிரிக்க ஆரம்பித்தான்.

(ancient female warriors )

“அட ஆதித்யா! உம்மைப் பெரிய வீரன் என்று நினைத்து இருந்தால் பேதையின் பின் ஒளிகிறாயே!…. வெட்கம்.” என்றான்   ரவிதான்.

“ரவிதாஸ!… பெண்கள் என்றால் உமக்கு என்ன அத்தனை இளக்கமாய் தோன்றுகிறதோ?

உன்னை இங்கனம் பிறக்க வைத்தவளே ஒரு பெண் என்பதை மறவாதே. உமக்கு என்ன பெண்கள் என்றால், ‘அந்தப்புர ஆரணங்கு, கனிகைகள், அந்தப்புர தாசிகளாய்’ இருக்க மட்டுமே பயன் படுவோம் என்ற திண்ணமா?

வீரன் என்று மார்தட்டிக் கொள்ளும் உன்னைப் போன்ற அற்பன் உருவாகவே தேவை பெண் தானடா!.  போகப்  பொருளாய்   மட்டும்  பெண்களைக்  காணும் உன்னைப் போன்றோரின் மத்தியில்  பெண்களைப் போர்வீரர்களாகி அவர்களும் நாட்டிற்காகப்  போர்  புரிய  ஆவண  செய்யும்   எங்கள்  இளவரசர்  எங்கே?…   நீ எங்கே?… நீசனே!


பெண் சக்தி புரியாத அற்பனே!…  இவர்கள் என் தந்தையால் போர்க் கலை  பயிற்றுவிக்கப் பட்ட யாளிகள்.  உன்னையும்  உன் கூட்டத்தையும் வேரோடு சாய்க்க உருவாக்கப் பட்ட நிசும்பசூதனி சைன்யமடா.
வாயால் பேசாதே!… 


எங்கள் வாட்களோடு, உருமிகளோடு,  அயுத  கத்தியுடன்  பேசு.   அவை சொல்லும் கேலிக்கான விடையை…  ஹ்ம்ம்!… உன் ஆட்களை உருவ சொல் ஆயுதத்தை… பார்த்து விடலாம்.”  என்று  பெண்     சிங்கமாய் கர்ஜித்த,  நித்திலவல்லியின் கோபத்தைக் கண்டு அங்கு இருந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.

ஒரு  நொடி  ,அவனையும்  அறியாமல்  ரவிதாசனின் கைகள்  காளியின் அவதாரமாய், வீரத்தின் வித்தாய்  நின்ற,  அந்தப்  பேதையைக்  கண்டு  கூப்பியது.

‘பத்ம வியூகம்’ என்பது பல அடுக்கு கொண்ட போர்த்  தந்திரம். ஏழு   அடுக்குவரை மலர்ந்த தாமரை வடிவம் போன்றது.

மஹாபாரத யுத்தத்தில் அமைக்கப் பட்ட  வடிவம்.   வடிவ தலைவர் சொல்லும் படி குறிப்பிட்ட சில வீரர்கள் இரு பக்கமும் முன்னேறித் தாக்குவார்கள்.  இந்த  வீரர்களின் இடத்தை அடுத்த அணி நிரப்பும்.

அப்படியே இருமருங்கிலும் எதிரிகளைச் சுற்றி  வளைக்கவும்  செய்வார்கள். உள்ளே எதிரிகள் மாட்டிக் கொண்டு விட வெளி வர முடியாமல் உள்ளே  சிக்கிக்  கொள்வார்கள்.

பெரிய  படைகளைக்   கொண்டு  ரத, கத, கஜ, புரத  படைகளைக் கொண்டு, செய்ய வேண்டிய பத்ம வியூகத்தின்  செயலைத் தேவநாராயணர் நாற்பதும் + நால்வர் கொண்டு ஆதித்தியனைக் காக்க அந்தப்  பொன்  மாளிகையில்  நிறுத்தினார்.

அந்தப் பத்ம வியூகம் எதிரிகளை உள்ளே விட்டு அழிக்க முயலும், இந்தப் பத்ம வியூகம் எதிரிகள் உள்ளே  இளவரசனிடம்   நெருங்காத வகையில்  மற்றொரு  முறையாகத் தேவநாராயணர்    நியமித்தார்.

நடுவே ஆதித்தியன் நிற்க, அவனைச் சுற்றி தேவநாராயணர்,  நித்தில வல்லி,  முத்தழகன்  கொண்ட முதல் அடுக்கு. அவர்களைச்  சுற்றி  பத்து  பேர்   இருக்கும் இரண்டாவது அடுக்கு. 

அடுத்த பத்து அடுத்த அடுக்கு என்று நாற்பது பெரும் பெரும் அரணாக நின்று ஆதித்தியனைப்  பாதுகாத்தனர்.

இவர்களை  மீறித்  தான்  யாருமே ஆதித்தியனை நெருங்க முடியும் என்ற நிலை. அவர்கள் நாற்பது பெரும்  முழு  கவசம்  அணிந்து,  ஒரு கையில் வாள்,  இன்னொரு  கையில் கேடயம், இடைக் கச்சையில்   பீச்சாங்கத்தி  அயுதா கத்தி, தோளின் பின் புறம் சென்ற  பட்டையில்  உருமி   எனப்படும்    சுருள் வாள்  வைத்து  இருந்தார்கள்.

பார்ப்பவர்களின் கண்களுக்கு அந்த நித்தில வல்லியுடன் சேர்த்து அந்த முப்பது பெண்டிரும், ‘சும்பன், நிசும்பனை’ வதம் செய்து, ‘நிசும்பசூதனி’ என்ற  பெயர்  பெற்ற, காளி தேவியின் படை தெய்வங்களாகத்  தான்   தெரிந்தார்கள்.

நாணம்  கொண்டு  நிலம்  நோக்க வேண்டிய  அந்தக்  கண்கள், அரக்கர்களை வதம் செய்யும் கோபாக்கினி  பொழிந்து  கொண்டு  இருந்தது. 

ஆரம்பித்தது சோழ மகுடத்திற்கான யுத்தம்    அந்தப் பொன் மாளிகையில்.

அந்த வாட்சண்டை முறை, ‘தனுர்வேதத்தில்’ சொல்லப் பட்டு இருப்பது. ‘அதர்வ,  ரிக்  வேதத்தில்  வருவது.

சோழ நாட்டில், ‘சிலம்பம்’ என்று, சேர நாட்டில், ‘களரியாப்பட்டு’ என்றும் அறியப்படுவது. விஷ்ணுவின் அவதாரமான, ‘பரசுராமர்’ நாற்பத்து இரண்டு பள்ளிகள் அமைத்து, இருபத்தி ஒன்று குருக்களை இந்தச் சண்டைப் பயிற்சி முறை கற்பிக்க என்றே   நியமித்தார்   என்கிறது    புராணம்.

அகநானூறு, புறநானூறு நூல்களில் வரும் யுத்த முறை. போதி தர்மரால் சீன தேசத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டு, ஷாலின் கோயில்களில் இன்றளவும்   கற்பிக்கப்படுவது.   விலங்குகளின் அசைவைக் கொண்டு போரிடும் முறை அது.

சிங்கம், புலி, கரடி, யானை, பன்றி, பாம்பு, முதலை அசைவைக் கொண்டு “சாட்டம் (குதித்தல்), ஓட்டம் (ஓடுதல்) மார்ச்சில் (கரணம் போடுதல்) போன்றவை வாள் சண்டையோடு இணைத்துப் போரிடும் முறை.

இதில் மேதாரி எனப்படும் முறை உடல் வலிமை மற்றும்  திண்மை  கொண்டு பலமணி நேரம் போராட உதவும். அடுத்து, ‘கொள்தரி’ என்பது கையில் கிடைக்கும் மர பொருள்களை ஆயுதமாய் பயன்படுத்தக்   கற்றுத் தரும்.

போர்க்களத்தில் வாள் கையில் இல்லை என்றால் கீழே கிடைக்கும் கம்பு, மரக் கிளை  கொண்டு  போராடும்  படி  செய்யும்.

‘அங்கதாரி’  என்பதில்  வில்,  வாள், கேடயம், உருமி, கத்தி, குறுவாள் கொண்டு போரிடலாம். 

‘வெறும் கைப்பிரயோகம்’ என்பதில் ஆயுதம் இல்லாத போது, ‘சுஸ்ருத சமிதாவில்’ சொல்லப்பட்டு  உள்ள, ‘நூற்றியெழு நாடிகள் /ஸ்தானங்கள்’ அடிப்பது போன்ற பல முறைகள் கொண்டு    அந்தப் பெண்கள் போரிட ரவிதாசனின் குழு நிலை குலைந்தது.

இனி  பேதை,  ‘எதையும்  அறியாத  அப்பாவி’ என்று பெண்ணை வர்ணிப்பது நின்று விடும். பெண்களின்  கண்களை   மான்,   மீன்,   என்றொடு    ஒப்பிடுவதற்குப்    பதில்  எரிமலையின் சீற்றம், எரிநட்சத்திரத்தின்   தகிப்பு என்று வர்ணிக்கத் தான் தோன்றும்.

‘கோலினை  தழுவும்  கொடிகள்  போன்ற  மங்கை தலைவனைத் தழுவினாள்’  என்பதற்குப் பதில்,‘ அந்தக்  கொடியே பாசக்கயிறு ஆகும் பகைவனிடம்’  என்று   எழுதட்டும்.

ஆடவரை  மட்டும் தான், ‘ஆளி, அரிமா!’ என்று    சிங்கத்துடன் ஒப்பிடுவார்களா என்ன!
இந்தப் பெண்டிரைக்  கண்ட  பிறகு,  பஞ்சநகாயுதம் (சிங்கம்) என்று   வர்ணிக்கட்டும்.

“அண்ணலே!..  தேவநாராயணர்  மாணாக்கள் என்றதும்   நாம்   பின்வாங்கி இருக்க வேண்டுமோ? பெண்களா   இவர்கள்!…  பேய்  கூட்டம்  போல் சதிராடுகிறார்கள்.   நாம்   தோற்பது   உறுதி அண்ணா!…”  என்றான்    ரவிதாசன்.

“கவலை வேண்டாம் ரவிதாஸ!… அங்கே காண்.” என்று    சோமன்  சாம்பவன்  கைகாட்ட, மேலும்   ஐம்பது   வீரர்கள்   உள்ளே   நுழைந்தனர்.

“யார் அண்ணா இவர்கள்?” என்றான் ரவிதான் வியப்புடன்.

“வீர பாண்டியன் ஆட்கள்!

ஆதித்தியனைக் கொல்ல துடித்துக் கொண்டு இருந்தார்கள்.  
நிச்சயம்   தேவநாராயணர் இருக்கும் வரை ஆதித்தியனை நெருங்குவது இயலாது என்று தெரியும். நம்மிடம்  உள்ளவர்களும் போதாது என்று தெரிந்தே  இவர்களுக்கும்  தகவல்  அனுப்பி  இருந்தேன்.  இனி  இவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

நமக்கு  இனி   இங்கு வேலை இல்லை.கிளம்பு ரவிதாஸ.” என்ற சோமனுடன் ரவிதாசன் கிளம்பி விட, வீரபாண்டியனின் பாண்டிய படைக்கும்,  ஆதித்தியனின்   பெண்கள்  படைக்கும் பெரும்   சண்டை   மூண்டது.

மரணிக்கும் அந்தக் கடைசி நொடியிலும் தன்னுடன்  ஒரு பகைவனின் உயிரையாவது பறிக்க அந்தப்  பெண்கள் தயங்கவேயில்லை.

கீழே  கால்   இழந்து  துடித்த போதும் அருகே வீழ்ந்த பகைவனின் குரல் வளையை கடித்தாவது அவனைக்  கொல்ல  அவர்கள்  தயங்க வில்லை. ஒரு  பெண்ணின் வாயிலிருந்தும் காயம்     ஏற்பட்ட வலியின் முனகல் வெளி கேட்கவேயில்லை.

ஒருவேளை பிள்ளை பேறு என்ற பெரும் வலியினை தாங்கும்அந்தத் தியாக செம்மல்களுக்கு இந்த வாள் வலி பெரிதாகத் தோன்றவில்லை போல்  இருக்கிறது.

ரவிதாசன் ஆட்கள்  போல் இந்தப் பாண்டிய  வீரர்கள் நேர்மையாகப் போரிடவில்லை. மறைந்து  இருந்து  தாக்கி, பின்னால் தாக்கி, ஆலகாலம் தடவிய  ஊசிகளைக்  குழல்  மூலம் ஊதியும் ஆதித்தியன் படைகளை நிலைகுலையச் செய்து கொண்டு   இருந்தார்கள்.

அதில்  ஒரு  விஷ ஊசி தேவநாராயணரை நோக்கிப் பறந்து வர,  அதைத்  தன்  மேல்   ஏற்றான்  முத்தழன்.

“அழகா!…  என்ன காரியம் செய்து விட்டாய் நீ?” என்றார்   தேவநாராயணர்   அவனை   மடி  தாங்கி.

“குருநாதரே!… இங்கு  இளவரசைக் காக்க என்னை விட   நீங்கள் மிக முக்கியம். உங்களுக்காக,  என்  உயிர்   பிரிவதை   விட   வேறு என்ன பேறு   கிடைக்கப் போகிறது?…  பிறந்த  பலன் கிடைத்து விட்டது. வாழ்க சோழ தேசம். வாழ்க ஆதித்திய  கரிகாலர்”  என்ற  அழகனின் உயிர் பிரிந்தது.

சாம்ராஜ்யங்கள்  உருவாவது   தியாகங்களால்  தான்.  தன்னை  விடக்   குருநாதர்   உயிரோடு  இருப்பின், இளவரசனின் உயிர்  காக்க முடியும் என்று  முத்தழகன்  தன் உயிரை நீத்து   இருந்தான்.

தன்  உயிரைக்  காக்க  உயிர் விட்டவனைக் கண்ட  தேவ நாராயணரின் கோபம் அதிகரிக்க, பிரளய கால ருத்திரன் போல் பகைவர்கள் படையைத்  துவம்சம்  செய்ய  ஆரம்பித்தார்.

பல போர் முறைகளை மீண்டும் உலகம்  அறியச்   செய்தவர்,   என்னும் போது பகைவர்களால்  தாக்குப்   பிடிக்க     முடியாமல்     திணற ஆரம்பித்தனர்.  இவர் உயிரோடு இருந்தால் ஆதித்தியனை   அழிப்பது   இயலாது   என்று   புரிந்து
போனது    அவர்களுக்கு.

அவர் காது படவே, “இவரைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம். இவர் மகள் அவள் தான். முதலில் அவளை அழியுங்கள்.” என்றான் பாண்டிய படைத் தலைவன்   ஒருவன்.

‘மகள் உயிர்க்கு ஆபத்து’ என்றதும் ஒரு கணம் தேவநாராயணரின் கவனம் பிசகியது. மகளை நோக்கி   விஷம்  தோய்ந்த  நான்கு   பெரிய    ஈட்டிகள்  பறந்து  வர, சண்டையில் மிக மும்முரமாய் இருந்த தன்  மகளை  இழுத்து  கீழே  தள்ளியவர், பாய்ந்து   வந்த  ஈட்டிகளை,  தன் மார்பில் ஏற்று நிலத்தில்  சரிந்தார்.

“தந்தையே!..” அலறியபடி அவரிடம் வந்த நித்திலவல்லி,

“என்ன  காரியம்  செய்து விட்டீர்கள்! இதற்கு  என்  உயிர்  பிரிந்து இருக்கலாமே!….”என்று  கதற  அவள்  தலையைத்   தடவிய  அவர்,

“இளவரசர் பத்திரம்… உன் உயிர் கொடுத்தாவது அவரைத் தப்ப வைத்து விடு. இவர்கள் நேர்மையாகப் போரிடவில்லை…  மேலும் மேலும்  ஆட்கள்   வந்து    கொண்டே    இருக்கிறார்கள். என்ன காரணமோ படை இங்கு வர,  நாம்  அனுப்பிய   செய்தி   கேட்டு   யாரும்             வரவில்லை.  இளவரசரைத்  தப்ப   வை நித்தில  வல்லி.” என்றவரின் உயிர் மகளின் மடியில் பிரிந்தது.

ஒரு  கணம்   மட்டுமே   அழுத    நித்திலவல்லி அடுத்த கணம் எரிமலையாய் பொங்கி எழுந்தாள்.

அவளின்  வேகத்தில்,  ஆக்ரோஷத்தில் சில கணங்களில்   பத்துக்கும்   மேற்பட்ட பகைவர்களின்  உயிர்   பிரிந்தது.

இரு கைகளிலும்  ஆயுதம் ஏந்தி போரிடுவது அனைவராலும்   இயலாத    ஒன்று. ஆனால்,  ஒரு கையில் வாள், இன்னொரு கையில்  உருமி  என்று நித்திலவல்லி ருத்ரதாண்டவம் கண்டு,  அங்கு   இருந்தவர்கள்  மிரண்டார்கள்.

சுழற்காற்றின் வேகம் அவள் இரண்டு கைகளின்  சுழற்சிக்கு   முன், ஒன்றுமே இல்லை என்றே தோன்றியது. அவள்  வாள்  தூக்குவதும்  தெரியவில்லை,  எதிரிகளின்   மேல் பிரயோகிப்பதும்   கண்களுக்குப் புலப்படவில்லை.

ஆனால் அவள் வாள், உருமிச் சுழன்ற  இடம்  எல்லாம்   பகைவர்களின்  உயிர் அற்ற   உடல்களே   கிடந்தன.

தஞ்சையின் காவல் தெய்வமே அவள் உருவில் வந்து போரிடுவதாகவே நினைக்கத் தோன்றியது.

முகத்தில்  செங்குருதி  படிந்து,  கண்கள்  கோபாக்கினியில் சிவந்து, அவளே   ஒரு   காளியின் மறு   உருவமாய்   நின்று   போரிட்டுக் கொண்டு இருந்தாள்.

ஆதித்தியன் பக்கம் மீதம் அவனையும், நித்தில வல்லியையும் சேர்த்து பன்னிரண்டு பேர்   மட்டுமே மீதம் இருந்தனர். 

பகைவர்களின் எண்ணிக்கையோ முப்பதிற்கும் மேல். 

உள்ளே  ரத்த  ஆறு   ஓடிக் கொண்டு இருக்க, வெளியே காற்றற்று வெள்ளம் கச்சியம்பதியை  ஒரு  வழியாக்கிக்   கொண்டு இருந்தது.

அந்தப்  பொன்   மாளிகையின்  அடிப்பகுதி    வெள்ளப்  பெருக்கால்  மண் அரிப்பு  ஏற்பட்டு  மெல்ல    அப்படியே    மண்ணுக்குள்   புதைய  ஆரம்பித்தது. ஆற்றின்  வெள்ளம்  பொன்  மாளிகைக்குள்    பெரும் அரக்கச்  சேனையாய்,   திபுதிபுவெனப் புகுந்து   அரண்மனையை   நில   மகளும்,   ஜல  மகளும்  சேர்ந்து தங்களுக்குள் ஐக்கிய படுத்த ஆரம்பித்தனர். 

அப்படியொரு மாளிகை இருந்ததற்கான சுவடு மெல்ல, மெல்ல மறைய ஆரம்பித்தது கண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும், வரலாற்றுப்   பக்கத்திலிருந்தும்.

முழங்கால் அளவு இருந்த நீரில் நின்று நடந்து கொண்டு  இருந்தது  அந்தச்  சண்டை. 

தேவநாராயணர்  கவனத்தைத்  திசை  திருப்பியது போலவே, இந்த முறை நித்தில வல்லியின் கவனத்தைத் திசை திருப்ப, ஆதித்தியன் மேல் அனைத்து வாட்களும், ஈட்டிகளும் திரும்பியது.

அவனை நோக்கிப் பறந்து வந்த கூறுவாளினை தன்  இடையில் தங்கினாள் நித்திலவல்லி.

குருதி   கொப்பளித்துப் பெருக அதைக் கவனத்தில் கொள்ளாமல், இடையில் பதிந்து இருந்த குறுவாளினை  பிடுங்கி   எடுத்தவள், அதை அடுத்த நொடி  எய்தவனின்  கழுத்திலேயே  அடித்து,  அவன்      உயிரைப்   பறித்தாள். 

அவள்   தள்ளாடி   தரையில் சரிய, அவர்களின் அரணாய்   மீதம்   உள்ள பத்து பேர் நிற்க, “தேவி!.” என்ற   அலறலுடன்   அவளை    நீரிலிருந்து  எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் ஆதித்தியன்.

“மன்னிக்க வேண்டும் அன்பரே!… உம்மைக்  காக்க என்னால்  இயலவில்லை.கோழைகள் கவனம் திசை திரும்பிய நேரத்தில் பின்னால் இருந்து  தாக்கி விட்டார்கள். 
எப்படியாவது நீர் தப்பித்து  விடுங்கள். சென்று விடுங்கள் அன்பரே!.” என்றாள்   நித்திலவல்லி.

“தேவி!…  என்னை  விரும்பிய  நேரம் என் விதி, உன்னையும் இப்படிச் சாய்த்து விட்டதே. வீரன் என்று பெயர் எடுத்து என்ன பயன்? உன்னைக் காக்க  முடியவில்லையே அன்பே!… இந்த ஜீவன், இந்தப் பிறப்பில் சேராமல் போகலாம்.

ஆனால், இந்த  ஆதித்தியனின்   மனம்  கவர்ந்தவள்  என்றால், ‘அது  நீ  ஒருத்தி’ என்று இந்தப் பிரபஞ்சமே   இனி   சொல்லட்டும்.

நம் அன்பு உண்மை என்றால் அது காலத்தைத் தாண்டி வாழட்டும். ஆதித்தியனின் பெயர் உள்ளவரை இனி உன் பெயரும் நிலைக்கட்டும்.”   என்றான்  அவள்   நெற்றியில்   தன்   இதழ்   பதித்து.

“இதைவிட வேறு  பேறு  என்ன வேண்டும் அன்பே!… இம்மைக்கும் (இந்தப் பிறவிக்கும்) மறுமைக்கும் (இனி எடுக்கப் போகும் பிறவிக்கும்) நீரே, எம்பதியாக வேண்டும்.

இந்தக், ‘காஞ்சி தலைவனுக்காக’ இன்று நான் சிந்திய  இந்தக் குருதி என்னைப் பொறுத்த வரை  தேன்  மழையே!… உமது அன்பிற்கு என்    சமர்ப்பணம்   இந்த    உயிர்,   உடல்   எல்லாம்.  உமது   மனையாட்டியாக  வாழ்ந்த அந்த  நொடி என்    பிறவிப்   பயனை  அளித்து    விட்டது.  விடை கொடுங்கள்   இளவரசே…”   என்று  அவனை  நோக்கி கைக்கூப்பிய,  நித்திலவல்லியின்  கண்கள்,  மீளா  உலகத்தைக்  காண  மூடிக் கொள்ள,  அவளை  ஓடும் நீருக்குத் தாரை வார்த்தவனாய் களம்  புக  எழுந்து  நின்றான்  ஆதித்தியன்.

அதற்குள்  இவன்  பக்கம்   காவலாய்  இருந்த    அந்தப்   பத்து   பேரும்  வீர மரணம் அடைந்து  இருக்க, பகைவர்களின் பக்கம் பத்து பேர்  மீதம்   இருக்க,  தனி ஒரு தானை தலைவனாய் ஒரு கையில் வாளுடன், ஒரு கையில் உறுமியோடு, பகைவர்களுக்கு, ’காருகபத்தியம்’  முத்தி அளிக்க முப்புரம்  எரித்த சிவசொரூபமாய், பதினோரு ருத்திரர்களின் பிம்பமாய், ‘வைதரணி நதியோன் (யமன்)’ போல் அவர்களின் சீவனை மேல் உலகத்திற்கு  அனுப்பி  வைத்தான்.

சோழ  தேசத்தின்  சூரியனையும்,  அவன் காதலையும்,  சோழ  அகண்ட   சாம்ராஜ்யத்தின் காவல் தெய்வத்தையும்   தன்னகத்தே   ஏற்று கொண்டு, நில  மகளுக்குள் ஐக்கியமானது தங்க அரண்மனை.  

உயிரோடு   இருந்திருந்தால்  பல  சரித்திரங்களை படைத்திருப்பான்,   இந்தக்   காஞ்சி    தலைவன்!

விதியின்   தீர்ப்பை    மாற்ற   வல்லார் யார்?

அடுத்த அத்தியாயம்

16- the end

ஆண்டு -2019.இடம் - காஞ்சிபுரம்.பல நூற்றாண்டுகளுக்கு முன் அகண்ட காவேரி போல் ஓடிக் கொண்டு இருந்த வேகவதி ஆறு இன்று ஆடு, மாடுகள் மேயும், ஆகாயத் தாமரை  மலர்ந்த,  மனித கழிவுகள் கொட்டப்பட்டுக் கொண்டு  இருக்கும்   சிறு    கால்வாய்.அடுத்த  கூவம்  நதி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்