arrow_back
காஞ்சித் தலைவன் 16- the end
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 19 / 19

16- the end

visibility 526
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

ஆண்டு -2019.
இடம் – காஞ்சிபுரம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் அகண்ட காவேரி போல் ஓடிக் கொண்டு இருந்த வேகவதி ஆறு இன்று ஆடு, மாடுகள் மேயும், ஆகாயத் தாமரை  மலர்ந்த,  மனித கழிவுகள் கொட்டப்பட்டுக் கொண்டு  இருக்கும்   சிறு    கால்வாய்.
அடுத்த  கூவம்  நதி ஆகும் தகுதிகளுள்ள பல நதிகளில்  இதுவும்  ஒன்று. 

அந்தக் கால்வாயையும் பிரிக்கும் விதமாய் நடுவே ஒரு பாலம். அதைக் கடந்து சென்றால் அந்த ஆற்றின்,  தவறு  கால்வாயின்  அருகே  அமைந்து   இருந்தது   ஆட்சியர்   அலுவலகம்.

அதன் ஒரு பகுதியாய் காஞ்சிபுரம் தலைமை காவல் அதிகாரி அலுவலகம்.
அந்த அலுவலகத்தின் முன் மிகப் பரந்த மைதானம். அங்குத் தான் காவல்துறை  அணிவகுப்பு, சுதந்திர தின கொண்டாட்டம்   எல்லாம்    நடைபெறும். அந்தக் மைதானம் தாண்டிக் காவல்துறை அலுவலக வாயிலில் வந்து நின்றது சமுத்திராவின் ஸ்கூட்டி.

அங்கு   வேலையாய்   வந்தவர்கள் செல்பவர்கள் ஒரு கணம்  சமுத்திராவின் அழகைக் கண்டு,  ‘அப்பா!… என்ன அழகுடாச்   சாமி!” என்று நினைக்காமல்   கடக்கவில்லை.
உடனடி கவி சக்ரவர்த்திகளை, உருவாக்கிக் கொண்டு இருப்பதை அறியாதவளாய் உள்ளே நுழைந்தாள்.  

வழக்கத்தை  விடக் கெடு பிடி மிக அதிகமாய் இருந்தது.

“நில்லு மா… உன்னைத் தான் மா. பிரஸ்காரங்கனாப்   பின்னாடி  போங்க.  வேற ஏதாவது வேலைனா  அந்தப் பக்கம் இருக்கும் பிளாக்ல அலுவலகம்    இருக்கு    அங்கே   போய்  விசாரி மா.” என்றார்   வாயிலில்   நின்ற    கான்ஸ்டபிள்.

“ஹலோ!… அங்கிள்!… அங்கிள்!… ரிலாக்ஸ்… கொஞ்சம் மூச்சு விட்டுவிட்டு பேசுங்கள்…”  என்றாள்  சமுத்திரா.

ஒரு கணம் அதிர்ந்த அவர், “ஓஹ்!…. சமுத்திரா! நீயாடா கண்ணு.  சாரிமா  பார்க்கவில்லை.வேறு யாரோன்னு… ஆமா,   நீ என்ன இந்தப் பக்கம்?” என்றார் சமுத்திராவிற்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்த   அவர்    சோமநாதன்.

“அதான் அங்கிள் என் கல்லூரி தோழி ஒருத்தி காணாமல் போனான்னு உங்க கிட்டே கூடச் சொல்லி   இருந்தேன்   இல்லை.   மூன்று    நாள்  முன்   கம்பளைண்ட்   பைல் செய்து இருந்தேன் அங்கிள்.  நேற்று   இங்கே   இருந்து,  கால் செய்து, மார்னிங்   பத்து   மணிக்கு   வரச்   சொல்லி                இருந்தார்கள்.  அதான்…”  என்றாள்   சமுத்திரா.

“இங்கேயா?… இருக்காதுமா.  எந்த ஸ்டேஷன் கம்பளைண்ட் பைல் செய்து இருந்தீயோ அங்கே வரச்   சொல்லி    இருப்பார்கள்.”   என்றார்    சோமு.

“நானும்   அதைத்   தான் கேட்டேன்    அங்கிள்.  இங்கே ஆட்சியர் ஆபீஸ் A பிளாக் இரண்டாவது   மாடிக்குத் தான் அங்கிள் வரச் சொன்னார்கள்.  யாரோ  SP  அழகர்நம்பி அவரை மீட் செய்யச் சொன்னார்கள்.

ஆமா என்ன அங்கிள் இன்றைக்கு…   இவ்வளவு   பரபரப்பாய் இருக்கிறது இந்த    இடம்? மத்த  நாள்  எல்லாம்   ஈ,   காக்கை   கூட   இருக்காது.  கிரௌண்ட்ல   பசங்க   கிரிக்கெட், புட்பால்ன்னு   அதகளம்   செய்துட்டு இருப்பார்கள் என்றைக்கும்   இல்லாத    திருநாளாய்    வெளிமாநில செய்தி  சேனல்   வண்டி எல்லாம் நிற்கிறது?” என்றாள்   சமுத்திரா   சுத்தி   பார்த்தவாறு.

அதற்குள்   வேறொரு கான்ஸ்டபிள் அங்குச் செக்யூரிட்டிக்கு  நிற்க   வைத்து விட்டு வந்த சோமு, “இந்தப்  பக்கம் வாம்மா.” என்று வராண்டாவில் அழைத்துக்   கொண்டு    சென்றார்.

அந்த நீண்ட வராண்டாவில் நடந்தவாறே,  “என்னமா இப்படி கேட்டுட்டே!… உனக்கு விஷயமே    தெரியாதா?”   என்று
ஆரம்பித்தவர், தன் தலையில் தானே தட்டிக் கொண்டு, 
“யாருக்குமே தான் தெரியாது.  இன்னும்   சார்     இன்டெர்வியூ கொடுக்கலை.  விஷயம்   ரொம்ப  ரகசியமா வைத்து இருக்கிறார்கள் சமுத்திரா.

நேற்று   நைட் காஞ்சிபுரம் சுத்தி முப்பத்தியாறு   இடங்களில்   நள்ளிரவில்   மழையைக்    கூடப் பொருட்படுத்தாமல்    ரைட்    நடந்துச்சு. கிட்டத்தட்ட   ரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், தங்கம், சில்வர், பஞ்சலோகம், கல்லுன்னு  மீட்டு   வந்து இருக்கிறார்கள்…

எல்லாமே   ராஜா    காலத்துக் கோயில் சிற்பங்கள். அது தவிர   முன்னூறு குறையாத ஓலைச் சுவடிகளாம். அதில்  விலை   உயர்ந்த மருத்துவ குறிப்புக்கள் போகர் முதலிய   சித்தர்கள்   எழுதிய   மருந்துப்   பத்தி        எல்லாம்    இருக்காம்.  

சாமிக்குப் போட்டு வைத்து இருந்தநகைகளை மாத்திட்டு போலி நகைகளை வேற வச்சி இருக்கிறார்கள்.  பலபெரும் புள்ளிகள் இதில் ஈடு பட்டு இருக்கிறார்களாம்.” என்றார் சோமு.

“என்ன   அங்கிள்   சொல்றீங்க?…  இவ்வளவு   சிலைகளா? விளையாடறீங்களா என்ன?”            என்றாள்   சமுத்திரா    நம்ப    முடியாமல்.

“என்னமா இப்படி சொல்லிட்டே… !ஐஜி  சுந்தர மாணிக்கவேல் அய்யா அவருடன் சிலை கடத்தல் சிறப்புப்  பிரிவு, பொருளாதார குற்ற பிரிவு,              ஆஃபீஸ்ர்   முப்பது   பேர்,   ஒரு   மாசமாய்    இங்கே தான்மா   முகாம்   இட்டு     இருங்காங்க.

தினமும்  ரைட்   போய்ட்டு,   கிடைச்சவனை   எல்லாம்    நொண்டி   நொங்கு எடுத்துட்டு இருக்காங்க. நேத்து   ராத்திரி, நம்ம பெரிய சிவன் கோயில் இருக்குல்ல…   அங்கே   போய்க்   கை வரிசை காட்ட போய் இருக்கானுங்க…  உள்ளே என்ன நடந்துச்சோ….

பேய் அடிச்சா மாதிரி எல்லாத்தையும்   கக்கிட்டு இருக்கானுங்க.   சொன்னது வைத்து  நேற்று   போன   ரைட்டில் தான் இவ்வளவு சிலை   மீட்டு    இருக்கிறார்கள்.” என்றவர்கள் பேசிக்கொண்டே,   இரண்டாம் தளத்தை அடைந்து இருந்தார்கள்.

“சுந்தர மாணிக்கவேல் சார்! முதலமைச்சர்     ஸ்பெஷல்லா   நியமித்த    நேர்மையான ஐஜி  சார்.  அவரே   வந்து இருக்கிறாரா!. அப்போ விஷயம் பெரிசு   தான்.”   என்றாள்    சமுத்திரா.

இவர்கள்   பேசிக் கொண்டே முதல் அறை       ஒன்றைத்   தாண்ட,   அடுத்த அறையிலிருந்து   வெளி  வந்த   ஒருவன் இவர்களைக் கண்டு கோபத்துடன்   இவர்கள்   அருகே   வந்தான்.

“என்ன   சோமு  சார்!…  பிரஸ் யாரையும்  உள்ளே விடக் கூடாதென்று ஸ்ட்ரிக்ட்டா சொல்லிக்  கூட  இந்தப்   பெண்ணை   ஏன்   உள்ளே விட்டிங்க?…  மேடம்!…   ஐஜி  சார்     இன்டர்வியூ கொடுப்பார். ப்ளீஸ் கோ அபேரட்.  கீழே வெயிட் செய்யுங்கள்.”  என்றான்   எரிச்சலுடன்.

“சார்!… சார்!… இவங்க பிரஸ் இல்லை சார்.  உங்களைப்   பார்க்கத் தான் வரச் சொல்லி இருந்தீங்களாம்.  இவங்க காலேஜ் பிரென்ட் காணோம் என்று கம்பளைண்ட் கொடுத்த…” என்று அவர் சொல்வதற்குள்,
“மிஸ் சமுத்திரா தேவராஜன் ரைட்.  சாரி. உங்களை நாங்க தான் வரச் சொல்லி இருந்தோம்.  பை   தி   பை ஐ யாம் SP அழகர்நம்பி. திஸ் வே ப்ளீஸ்.  சோமு சார்!  நீங்கப்   போங்க.   இனி    யார் என்ன   சொன்னாலும்   இனி   யாரையும்   இங்கே   அல்லோவ்   செய்யாதீர்கள்.” என்றவன் சமுத்திராவை   நான்கு   அறைகள் தாண்டி அழைத்துச் சென்றான்.

அந்த அறை மிகப் பெரிதாய் இருந்தது. பெரிய ஆஃபீஸ்ர் ஒருவரின் அறை  போல் இருந்தது.

அங்கு அழைத்துச் சென்றவன், “ப்ளீஸ் டேக் யுவர் சீட். சார் ஒரு இன்வெஸ்டிகஷன்ல இருக்கிறார். வந்துடுவார்.” என்றான்   அழகர்நம்பி.

“என்ன சார் நடக்குது இங்கே? நீங்கத் தானே வரச் சொல்லி இருந்தீர்கள்.  என் பிரென்ட் கவிக்கு என்ன ஆச்சு சார்?” என்றாள் சமுத்திரா நடப்பது ஒன்றும்    புரியாமல்.

“சிஸ்டர்!..  டென்ஷன் ஆக வேண்டாம். உங்க பிரென்ட் கவி   நல்லாவே இருக்காங்க. மீதத்தைச் சார்   வந்து சொல்வார். இப்போ கவியையும்,   அவங்க   பியான்சி மிஸ்டர் நிகில்லையும் டாக்டர்   செக்   செய்ய   வந்துட்டு  இருக்காங்க. டோன்ட் ஒர்ரி. அவங்களை  காணோம்  என்று      கம்பளைண்ட் கொடுத்து இருந்தீங்க இல்லை அதான்   இங்கே வரவழைத்தோம்.  மிஸ் கவியும் உங்களைத்   தான்    கேட்டாங்க.” என்றான் அழகர்.

“எந்தச்  சார்   பத்தி சொல்றீங்க சார்?” என்றாள் சமுத்திரா – இனம்   புரியாத   படபடப்பு நெஞ்சில் எழ.

“ஏசிபி  ஆதவ்   காலேஸ்வர்!…  சிலை கடத்தல் தடுப்பு   பிரிவு   ஸ்பெசல் அதிகாரி” என்றான் அழகர். ஒரு கணம் மனக்கண்ணில் உருவம் ஒன்று தோன்றி மறைய, நெஞ்சத்தின் படபடப்பு காரணமே   இல்லாமல்   அதிகமாகி  போனது     அவளுக்கு.

அந்தப் பெயர் அவள் இதயத்தில்  பல அதிர்வ லைகளை உண்டு செய்தது “ஆதவ் காலேஸ்வர்…. ஆதவ்…. ஆதித்ய… காலேஸ்வர்…கரிக்கலா…”  என்று அவளையும் அறியாமல்   அவள்   வாய்    முணுமுணுத்தது.

“சுந்தர மாணிக்கவேல் சார் மகனா?” என்றாள் சமுத்திரா.

  “யெஸ் அவரே தான். ஆதவ்… ஐ மீன் ஏசிபிசார் உங்களுக்குத் தெரியுமா சிஸ்டர்?” என்றான் அழகர்.

“இல்லை சார். பேர் கேள்விப் பட்டு இருக்கேன். என்கவுண்டர்  ஸ்பெசலிஸ்ட்.  ரொம்ப நேர்மையானவர்.  தப்பென்றால், ‘ஸ்பாட் தண்டனை’ என்று   ஒரு  புக்லப்  போட்டு   இருந்தார்கள்.  பார்த்தது இல்லை.” என்றாள்   சமுத்திரா.

“இப்போ வருவார் பாருங்க. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. ஏதாவது வேண்டும்   என்றால்  சொல்லுங்கள். ஹெசிட்டேட் செய்யாதீர்கள் சிஸ்டர்.  காவல் நிலையம் என்றால் பெண்கள் வரச் சங்கட படுவாங்கன்னு    தெரியும்.   என்னை    உங்க பிரதர்   மாதிரி      நினைசீக்கோங்கோ   அடுத்த அறையில் தான் இருப்பேன்.” என்றவன் தலை அசைப்புடன் வெளியேற  முயல,  அவனைத்     தடுத்தது    சமுத்திராவின்    குரல்.

“அண்ணா!… ”  என்ற   அவள்   குரல்    கேட்டுத் திரும்பினான்   அழகர்   நம்பி.

“கேக்கறேன்   என்று தப்பாய் நினைக்காதீங்க…உங்களை   இதுக்கு முன் பார்த்த மாதிரி நியாபகம்.ரொம்ப  பழகிய  முகம்  போல்  இருக்கு…  நீங்க எந்த வகையிலாவது  என்  உறவா?” என்றாள் சமுத்திரா.

  அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்து    அவன்  மனமும் அப்படி தான்சொல்லிக்கொண்டிருந்தது  அந்தப் பெண்ணைத் தனக்கு தெரியும் என்று.

ஏதோ அவனையும் அறியாத பாசம் அவள்மேல் பொங்கியது.  அவன் குழப்பத்தையே அவள் வார்த்தையாகக் கேட்க என்ன சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை.  

“எனக்கும்  உங்களைப்  பார்த்து  நெடு  நாள்         பழகியது போல் தான் தோணுது சிஸ்டர்…ஆனா எங்கே, எப்போன்னு  தான் தெரியலை… “என்றான் அழகர் நம்பி.

“ஒருவேளை  முன்  ஜென்மத்தில்  உங்க   தங்கையாகப்  பிறந்து   இருப்பேனோ   என்னவோ!…”      என்றாள்   சமுத்திரா    விளையாட்டாக.

“இருக்கலாம்   சிஸ்டர்.. விட்ட குறை தொட்ட குறையாக   இருக்கலாம்…. ”  என்றான்  அவன்.

  “மே பி இருக்கலாம் அண்ணா.  டு மீட் யு பிரதர்.” என்றாள் சமுத்திரா.
“பிளேசர்  இஸ் மைன் சிஸ்டர்… ப்ளீஸ் வெயிட் செய்யுங்க… சார் வருவாங்க…. உங்க கூட    இன்னும்  பேசணும்  போல்  இருக்கு  தான்.   பட்  இப்போதைக்கு   கடமை  என்னை  அழைக்கிறது  பின்னையே!….  என்   கடமையைச் செய்ய நான்   புறப்படுகிறேன்…”  என்று  தூய   தமிழில் பேசியவனை   கண்டு    வாய்   விட்டு    நகைத்தாள்           சமுத்திரா.

சமுத்திராவின் புன்னகையை ஒரு சகோதரனின் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன்,  அவளுக்கு   இரு   விரலால்    சலூட் ஒன்றை வைத்து, வாக்கிடாக்கி  அழைக்க, சிறு தலை அசைப்புடன்   அங்கிருந்து    சென்றான்.

அழகர்  நம்பி   சென்றவுடன்   அங்கிருந்த  இருக்கையில்   அமர்ந்தாள்   சமுத்திரா.   ‘என்னங்கடா   நடக்குது இங்கே? தலையும்                 புரியலை    வாலும்   புரியலை. இந்தக் கவிக்கும் இந்தச்   சிலை   கடத்தல்    மேட்டருக்கும்   ஏதாவது    லிங்க்  இருக்குமோ?

ஏற்கனவே அது ஒரு முந்திரி… அவ லவ் செய்த அந்த   நிகில்    ஒரு    முந்திரி. இரண்டும்  சேர்ந்து,   என்ன செஞ்சி வச்சி இருக்குங்கனே தெரிலையே!…’  என்று மனதிற்குள் புலம்பியவள், நேரம்  ஆக   ஆகப்   பொறுமை   இழந்தவளாய்   தன் மொபைல்   எடுத்தாள்.

அதில் யூ ட்யூப் ஆன் செய்து, பாடல்களை ஓட விட்டு,  ஹியர்போன் மாட்டிக் கொண்டு, அந்த அறையில் மாட்டி இருந்த படங்களைப் பார்த்தவாறே   நடந்து   கொண்டு    இருந்தாள்.

அதே   சமயம்   மற்றொரு    அறையில் அமர்ந்து இருந்தனர் கவியும், அவள் பியான்சி நிகிலும். உடன் ஒரு காவல்துறை அதிகாரி. அதே சமயம் உள்ளே   வந்தார்   அவர்.

“ஹலோ  சார்!…  ஐ  ஆம்   டாக்டர்   சிவானந்த்.”   என்றபடி  வந்தார் அந்த அறுபது வயது முதியவர். பார்க்க   அப்படியொரு   தேஜஸ்  அந்த    முகத்தில்.

“வாங்க  சார்!…  உங்க    அடையாள அட்டை    ப்ளீஸ் .” என்றவரிடம் அடையாள அட்டை  கொடுக்க , அதை   வாங்கி பார்த்தவர்,
“சார்! இவங்க தான் சார். தலையில் அடி பட்டு இருக்கு.  என்னன்னு பாருங்க.” என்றார் அந்தப் போலீஸ்.  “கொஞ்சம் வெளியே வெயிட் செய்யுங்கள் சார்.” என்றார் டாக்டர்.

அவர் வெளியே சென்றவுடன் இருவரையும் சோதித்த அவர்,  நெற்றியில்   பட்டு     இருந்த அடிக்கு   மருந்திட்டார் .
அவர் விரல் மேல்பட்டதும் அப்படியொரு பரவசம் அவர்கள் தேகம் சிலிர்த்தது. வார்த்தைகளால் விவரிக்க   முடியாத    ஒரு    சாத்வீக  சூழலில்            மாட்டியது   போன்ற    உணர்வு     இருவருக்கும்.

“சார்!….  உங்களை   நான்   அந்த   ரவி   வீட்டில் பார்த்தேன்.  நீங்க   அங்கே இருந்தீங்க தானே!….  அங்கே இருக்கும் சிலைகளுக்குப் பூஜை செய்தீங்க தானே!… அங்கே  அந்தரத்தில் வைரசிலை…. எங்களைக் கறுப்பு நிற நாயின் பின்   போகச்  சொன்னதும்  நீங்கத்  தானே!….” என்றான்    நிகில்.

“அது   நான்   இல்லை   மை சன்.  தலையில் அடி பட்டு   இருக்கிறது   இல்லையா!… அதான்   யாரையோ   பார்த்துட்டு,  அது நான் என்று சொல்றே. கண் மூடித் தூங்கு. எல்லாம் சரி ஆகிடும். கோ டு ஸ்லீப்.  டோன்ட்   ஸ்ட்ரெஸ்    யூர்செல்ப்.  மனசைப்  போட்டுக் குழப்பிக் கொள்ளாதே. ஸ்லீப். அங்கே நடந்தது எதுவும் உங்களுக்கு நியாபகத்தில்  இல்லை.  புரிந்ததா?… நன்றாக  உறங்கி   எழுங்கள்.   எழும்   போது என்னை  அங்கே  பார்த்ததெல்லாம்  மறந்திருக்கும். ஸ்லீப்.” என்ற அவர் குரலும், அவர் போட்ட   இன்ஜெக்ஷன்   வேலை   செய்ய , இருவரும் சிறு  பிள்ளைகள் போல்   கண்   மூடி  உறங்க  ஆரம்பித்தனர்.

தூங்கும்   இருவரையும்  ஒரு   நொடி   நின்று,   பார்த்தவரின் முகத்தில் மெல்லிய புன்முறுவல் மலர்ந்தது.

அதே   சமயம் அடுத்த அறையில் பாட்டுக் கேட்டுக்  கொண்டு  உலவிக்  கொண்டு  இருந்த  சமுத்திரா பக்கத்து   அறையிலிருந்து   வெளி   வந்த அவனுக்கு   முதுகு   காட்டி   நின்று   கொண்டு     இருந்தாள்.

யப்பா!…
என்ன   உயரம்,   நிச்சயம் ஆறடி  இருப்பான். கண்களில் அப்படியொரு தேஜஸ்.
அவன் நின்ற   விதமே,  தனி    கம்பீரத்தைத்   தர,   அந்த மாநிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு! 

முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும் என மொத்தத்தில் ஆண் அழகன்.   பல   பெண்களின்  கனவு   நாயகன்.
விசாரணை  முடித்து  விட்டு வந்து இருப்பான் போல் இருந்தது.

காக்கி கால்சட்டை அணிந்து இருந்தவன் காக்கி சட்டையைக் களைந்து உள்ளே  அணிந்து  இருந்த  கருமை  நிற     பனியனுடன்,   தசைகள்   முறுக்கேறி   நின்ற    விதம்…           நிச்சயம்  அனல்  மூச்சினை   ஏற்படுத்தாமல்       இருக்காது. 

‘ஆண்மை  என்ற  வார்த்தைக்கு 
ஏற்றத்  
தோற்றம்   நீ   தானா?
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த
தேகம் இது தானா…?’ 
என்ற பாடல் வரிகள் இவனுக்காகவே எழுதி   இருப்பார்களோ… !

“ஹலோ மிஸ்! யார் நீங்க?” என்றான்  வழிந்த       வியர்வையை   ட்வெல்    கொண்டு   துடைத்த படி.

அவள்  தான்  காதில்   ஹியர் போன் மாட்டிப் பாட்டுக்  கேட்டுக் கொண்டு இருக்கிறாளே, இவன்           கேட்டது    எங்கே    அவளுக்குக்    கேட்கப்           போகிறது?

ஏற்கனவே கடுப்பிலிருந்தவன், இவன் கேட்கக் கேட்கப் பதில் கூறாமல் திரும்பி நின்று கொண்டு இருக்கும்   அந்தப் பெண்ணின் மேல் கோபம் பிறக்க  என்ன    செய்கிறோம்    என்று       புரியாதவனாய்,   தன்    பலம்    கொண்ட   மட்டும்    அவள்    கையைப்    பிடித்துத்   திருப்ப,    அவளின்              கரங்களிலிருந்து    பறந்து    சென்றது      போன்.

இழுத்த  வேகத்தில்   பேலன்ஸ்   தவிர   விட,    இழுத்தவன் மேல் மோதி நின்றாள் சமுத்திரா.

இதுவே  ராஜாக்கள்   காலமாய்    இருந்தால்,       ‘கண்கள்    இரண்டும் கூர் வாட்களாய் ஒன்றை ஒன்றை   உரசின’   என்று   கூறி    இருப்பார்கள்.

இது   நிகழ்    காலம்    ஆயிற்றே!
‘ரெண்டு   அக்னி     ஏவுகணைகள்’   போல்   இவர்கள்    கண்கள்    மோதிக் கொள்ள, வேதியியல் அங்கு   அணு   ஆயுதமாய்    வெடித்துச்     சிதறியது.
பறந்து   சென்று விழுந்த தொலைப்பேசி தன் வேலையைச்   செவ்வனே செய்தது.
யூ   டூப்   அடுத்த   பாடல்   தானாய்   பாட   ஆரம்பித்தது.

‘நறுமுகையே!… நறுமுகையே!….
நீயொரு நாழிகை நில்லாய்.
செங்கனி ஊறிய வாய் திறந்து,
நீயொரு திருமொழி சொல்லாய்.
அற்றைத் திங்கள் அந்நிலவில்.
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்.
பொய்கை ஆடியவள் நீயா ?
திருமகனே!… திருமகனே!….
நீ ஒரு நாழிகைப் பாராய்.
வெண்ணிறப் புரவியில் வந்தவனே!.
வேல்விழி மொழிகள் கேளாய்.
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்.
போய்கை ஆடுகையில்.
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா?
மங்கை மான்விழி அம்புக்ள்.
என் மார் துளைத்ததென்ன.?
பாண்டி நாடனைக் கண்டு என்.
உடல் பசலை கொண்டதென்ன?
நிலாவிலே பார்த்தவண்ணம்.
கனாவிலே தோன்றும் இன்னும்.
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை.
இடையினில் மேகலை
இருக்கவில்லை.
ஞாயும் ஞாயும் யாராகியறோ?
நெஞ்சில் நேர்ந்தததென்ன.
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன?….’

ஒருவேளை  முன்னர்,  ஆற்றினில் நீர் ஆடும் போது, சந்தித்த இரு உள்ளங்களைப் பற்றி நினைவு   படுத்துகின்றனவோ?

ஆதவ்விற்கு   தன் மேல் விழுந்த பெண்ணின் முகத்தைப்  பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை.

வந்த  கோபம்  அந்த   பெண்ணைக்   கண்டதும்   கானல்   நீராய்   மறைந்து    போனது.

தன் மனைவியாய் வரப் போகும் பெண்   எப்படி இருக்க வேண்டும் என்று உருவகப்படுத்தி  இருந்தானோ,  அந்த நினைப்பிற்கு உயிர்வந்து விட்டதை போல் தன் மேல் சாய்ந்து இருக்கும் பெண் இருக்க அவன் திகைத்துப் போய் நிற்க, சமுத்திராவோ கனவில் வந்து காதல் தொல்லை புரிந்து  கொண்டு  இருந்த உருவத்தை நேரில் கண்டதும்,  திகைத்து   விழித்துக்    கொண்டு  இருந்தாள்.

  தினமும்  கனவில்  வந்து  அவளிடம்  காதல்    நாடகம் நடத்தும்,  அவள் உள்ளம் கவர் கள்வன் அந்தக்  காவலனே!  

விட்ட  குறை  தொட்ட  குறை போல், பூர்வ ஜென்மத்துப்  பந்தம்  கைச்சேர்ந்தது  போல் அலை பாய்ந்து கொண்டு இருந்த அந்த இரு உள்ளங்கள்  சேர  வேண்டிய இடத்தை அடைந்து விட்டதை போன்ற  நிம்மதி இருவருக்குள்ளும்.

இருவருக்கும் ஏன் என்று புரியாமல் கண்கள் தானாய் கலங்க ஆரம்பித்தது. கை எடுத்தால் மறைந்து  விடுவார்களோ  என்று  பயத்தில்,          இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டனர்.

‘பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது,
அழுதால் கொஞ்சம் நிம்மதி,
பேசமறந்து சிலையாய் இருந்தால்!…
பேசமறந்து சிலையாய் இருந்தால்!…
அதுதான் தெய்வத்தின் சந்நிதி!…
அதுதான் காதலின் சந்நிதி.’

எவ்வளவு நேரம் அப்படியே உறைந்து நின்றார்களோ, “சார்!… ”என்ற அழைப்பு இருவரையும் பிரித்தது.

“வாங்க டாக்டர் சார்!… செக் செய்துடீங்களா?… அடி பலம்  இல்லையே!” என்றான் தன்னை மீட்டுக் கொண்ட ஆதவ்.

“இல்லை  சார்.   தே   ஆர்   ஆல்ரைட்.    தூங்க சொல்லிவிட்டு    வந்து இருக்கிறேன். ரொம்ப ரெஸ்ட்லெஸ் சா   இருந்தார்கள்.   கொஞ்ச         நேரத்தில் முழிச்சுடுவாங்க.  அப்போ   நான்         கிளம்பறேன்.”  என்றார்   டாக்டர்   சிவானந்த்.

“தேங்க்   யு   சார்!..   கிரேட் ஹெல்ப்” என்றான் ஆதவ்.

“உதவத் தானே வந்தேன்… என் கடமை ஆச்சே.
சீக்கிரம் தேதி பார்த்துத் திருமணம் செய்துட்டு ராஜா, ராணி   மாதிரி     சந்தோசமா வாழுங்கள்.” என்றார்    சிவானந்த்.

ஒரு  கணம்  திகைத்த  இருவரும் ஒருவரை ஒருவர்  பார்த்துக்  கொண்டு,  “நிச்சயம் சார்.   நிச்சயம்   உங்களை   இன்வைட் செய்வோம்.” என்றனர்            கோரஸாக.

“ஆயுஷ்மான்  பவ!….
அகண்ட சௌபாக்யவதி பவ!….
இந்தப் பந்தம், உங்களின் இந்தக் காதல் ஜென்மம்   ஜென்மமாய்   தொடரட்டும்.   காலம்   பிரித்த இந்த இணைவு,  காலமே  சேர்த்து   விட்டது.   மகாராணியாய்   வாழ்வாய் மகளே!…”   என்று மனமார  வாழ்த்தினார்,  தன்   பாதம்   பணிந்த       இருவரின்   தலை  மேல்   கை   வைத்து.  

ஒருவேளை வேகவதி ஆற்றங்கரையில் அன்று தடைபட்ட  வாழ்த்து,   இன்று    நிறைவேறுகிறதோ! 

ஆதவ் கை நீட்ட எந்தத் தயக்கமும் இல்லாமல் அவன் கரத்தில், தன் கரத்தை வைத்தாள்   சமுத்திரா. 

அதைப்  பார்த்துப் புன்னகையுடன் அகன்றார் சிவானந்த்.

அவர்   சென்றதும்,  “ஹாய்!… ஐ ஆம் ஆதவ் காலேஸ்வர்” என்றான்   ஆதவ்.

“ஹாய்!…  ஐ   ஆம்   சமுத்திரா.” என்றாள் அவள்.

“முத்து!…  நித்திலம்ன்னு  கூடச்   சொல்வாங்க!…   எனக்குப்   நித்திலம்,   முத்து என்றால் ரொம்ப பிடிக்கும்.   ஐ   லவ்    நித்திலம்… ஐ மீன் இந்த முத்தை ரொம்ப பிடிச்சி இருக்கிறது.”   என்றான் அவன்.

“இந்த முத்து விற்பனைக்கு இல்லை சார்.”  என்றாள்   அவள்.

“விலை மதிப்பிடவே முடியாத முத்து தான் இதுன்னு     தெரியுது.   இதற்கு   இடாய் என் உயிரைக்  கொடுத்தாலும்,   இந்த   முத்து   என்    கைச்சேராதா?”  என்றான்   ஆதவ்.

“சேருமா… சேராதான்னு தெரியாமலா அவர் கிட்டே, ‘நிச்சயம்’ என்று சொன்னீர்கள் சார்?   உங்க   அப்பாவைக்   கூப்பிடுங்கள்.   அவர் கிட்டே கம்பளைண்ட் செய்கிறேன் உங்களைப் பத்தி”   என்றாள்   சமுத்திரா   முகம்    சீரியசாக.

‘நாம் தான் அவசர பட்டுட்டோமோ!…’ என்று நினைத்த ஆதவ்,  “வருவார்   கம்பளைண்ட் செய்யுங்க. சாரி”  என்றான்.

“ஆமா ஏசிபி சார்!… கம்பளைண்ட் செய்யத் தான் போகிறேன்… இத்தனை நாள் கனவில் வந்து இம்சை செய்த உங்கள் அன்பு மகன், இப்போது நிஜத்தில்  என்   இதயத்தைக்   களவாடிவிட்டார். 

இந்தத்    இதய   திருடனை எப்படி காவல்துறை ஏசிபி  அதிகாரி என்ற பதவி கொடுத்து உள்ளீர்கள்.   இவர்    காவலன் இல்லை.   மனதை கொள்ளை   அடிப்பதில்    வல்லவன்   என்று  நியாயம் கேட்கத் தான் போகிறேன்.” என்றவள் அதற்கு  மேல்   முடியாமல்    சிரிக்க   ஆரம்பிக்க,   அவளுடன்  சேர்ந்து   நகைக்க   ஆரம்பித்தான் ஆதவ்.

அதே சமயம் வெளியே காரிடோரில் நடந்து கொண்டு   இருந்த   சிவானந்த்  மேல்   வந்து மோதினார்   தேவராஜன்.

“ஓஹ் சாரி சார்!… தெரியாமல் வந்துட்டேன்…       கவனிக்கவில்லை.” என்றவர் இடித்த வேகத்தில் தன்   கையிலிருந்து கொட்டிய பொருட்களைச் சேகரிக்க,   அவருக்கு   உதவி    செய்தார்   சிவானாந்த்.

சேகரித்த பொருட்களில் அவர் கையில் வந்தது, ‘முத்துசாமி தீக்ஷிதரின்’ பாடல் பதித்த தகடு தான்.

அதைக்  கண்ணில் ஒற்றிக் கொண்டவர், “இசை சக்ரவர்த்தியின்  இசையை   வெல்ல    யாரால்         முடியும்    இல்லையா   தேவராஜா?” என்றார்.

“ஓஹ்!… சார் உங்களுக்கும் பழம் எழுத்துக்கள் தெரியுமா?”   என்றார்    தேவராஜன்    வியப்புடன்.

“ஏன் தெரியாமலா இதே போல் ஒன்று வாங்கி வைத்து   இருக்கிறேன்.”   என்றார்   சிவானந்த்.

“சார் என்ன சார் சொல்கிறீர்கள்?… இதே போல் வாங்கி   வைக்க  எப்படிச் சார் முடியும்? இது தங்கத்தில் செய்யப்பட்டது  சார். முத்துசாமி தன்  கையால்   செதுக்கிய  பாடல் சார்.” என்றார் தேவராஜன் அதிர்ந்தவராய்.

“என்ன தேவராஜா!…  கற்றது   எல்லாம்    மறந்து விட்டதா    என்ன?  உண்மையான தங்கத் தகட்டிற்கும், தங்க மூலம் பூசப் பட்ட போலிக்கும் கூடவா   உனக்கு வித்தியாசம் தெரியவில்லை? இது போலி தேவராஜா. நீயே பார்.  சந்தேகமாய் இருந்தால் இங்கே பழமை பரிசோதிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.  பரிசோதித்துப்   பார்த்துக்கொள்.
தஞ்சையில் இப்படி போலி தகடு செய்து அது உண்மை என்று விற்பனை செய்கிறார்களாம். ஏமாந்து விடாதே!…. 

அதே போல் வேகவதி ஆற்றங்கரையில் தங்க அரண்மனை என்பதும் பொய்யே!…. கட்டுக் கதை….  மக்களை  ஏமாற்றி  பணம்  பறிக்கப்  போடும்   நாடகம்… புரிந்ததா?… அங்கே மண் ஸ்திர தன்மை இல்லாதது.
அங்கே எப்படி தங்க அரண்மனை இருக்க முடியும்?…. காஞ்சிபுரத்தில் நிசும்பசூதனி வைர சிலை, அது இருக்கும் தங்க அரண்மனை எல்லாமே கட்டுக் கதை….  உலகத்திற்கு   இதை    உரக்க   சொல்….

களவாடப்படும் தெய்வ மூர்த்தங்களை மீட்டு  கொண்டு வரும் உன் பணி சிறக்கட்டும்….           

ஒவ்வொரு தெய்வ மூர்த்தமும்,   ஒவ்வொரு கோயிலும்   ஒவ்வொரு   குடும்பத்தின் சொத்து.          
     முன்னோர்களின் திறமைக்குச் சான்று என்பதை உணரட்டும்.  மூர்த்தங்களும் ஒவ்வொரு மனிதனின் அடையாளம். கலாச்சார, பண்பாட்டின் சின்னம்.
அது  இல்லாத  மனிதன்  பிரேதத்திற்கு சமம். உன் அடையாளம் அழிக்கப் பட்டால், நீ இறந்த பிணம் தானே!… 

மக்கள் இதைப் புரிந்து கொள்ளும் வரை, ‘சிலைகளுக்கு எதுக்கு ஆயுத காவல்?…   தன்னையே   காத்து கொள்ளாத தெய்வம் தானா மனிதனை காக்க   போகிறது   என்று    சில     பைத்தியங்கள் உளறிக்   கொண்டு    தான்    இருக்கும்.”  என்ற   அவர் கிளம்ப, அந்தத் தகட்டைப் பரிசோதித்த   ஆய்வாளர்   அது   போலி   என்று   சொன்னார்.

“நல்லவேளை!…  தக்க சமயத்தில் உண்மை தெரிந்தது.  இல்லையென்றால் என் மானம் போய் இருக்கும்.  கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினார் அவர்.” என்றார் தேவராஜன் பெரு மூச்சு விட்டவாறு. 
பொறுமையாய்   படிகளில்  இறங்கிச்   சென்ற       சிவானந்தர் கைகைளில் இருந்தது ஒரு தகடு.

அதன்   ஜொலிப்பு வைத்தே சொல்லி விடலாம் அது சுத்தமான தங்கத்தில் செய்யப் பட்ட தகடு என்று.

அதைக்   கண்டு   புன்னகைத்தவர்   தன் பிரீப் கேஸ்சில்   வைத்து   மூடினார்.

அதே சமயம் பிரஸ் மீட் ஆரம்பம் ஆகி இருந்தது  ஆதவ் காலேஸ்வர்,ஐஜி சுந்தர மாணிக்கவேல்   கலந்து கொண்டு இருந்தார்கள்.

  அவனைக் காதலோடு கண்களால் அணைத்துக் கொண்டு இருந்தாள்,  தேவராஜன், உடன் நின்ற சமுத்திரா – அவனின்   நித்திலம்.

“வணக்கம்!

தமிழகம் கலைகளின் சுரங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. அதைத் தெரிந்து வைத்து   இருப்பதால் தான் இவற்றினை விற்கப் பல  பேர்  தயங்குவதில்லை.  சில மாதமாய் இங்கு உள்ள கோயில்களிலிருந்து பல  சிற்பங்கள், தங்கம், வெள்ளி, கல், பஞ்ச லோகம் என்று லட்சக்கணக்கில் கணக்கில்  கொள்ளை  அடிக்கப்பட்டுப்   போலி சான்றிதழ் வாங்கப்பட்டு   ஏற்றுமதி செய்யப் படுகிறது.

ஆறுநூறு கிலோ உள்ள பெரிய சுதைச் சிற்பங்களைக் கூடத் திருடி அவற்றைக் கப்பலில், லாரியில் பழம், காய் என்று ஏற்றுமதி செய்கிறார்கள். இது பல பில்லியன் டாலோர் புழங்கும் தொழில்.
நேற்று  நடந்த  ரைடில்  கிடைத்த   சிற்பங்கள் எண்ணிக்கை  மட்டும்   இரண்டாயிரத்திற்கும் மேல்.

ஒரு    சிற்பம்  விற்கப்படுவது      ஒரு சமுதாயத்தின் அடையாளத்தை’ அழிப்பதற்குச்   சமம்.

கடவுள் இருக்கிறார் இல்லை என்பது இங்குப் பெரிசு இல்லை. நமது முன்னோரின் திறமை, அறிவு,  ஏதோ   ஒரு நாட்டின் கோடீஸ்வரனின் ஷோ கேஸ்  பொம்மை  ஆக  விட்டு விட்டு   இருக்கிறோம். ‘
பிலடெல்பியா   அருங்காட்சி’   அகத்தில்,    ‘மதுரை மதன   கோபால ஸ்வாமி சிலைகள்’ தனி  ஒருவனின்  சொத்தாய்   காட்சிக்கு        வைக்கப் பட்டு   இருக்கிறது. முப்பத்தியாறு   வருடம்   முன்    களவாடபட்ட,   ‘கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி’ கோயில் சிற்பங்களை 2018 தான்           மீட்டோம். வருடத்திற்கு பத்தாயிரத்திற்கும் குறையாத சிலைகள் விற்கப்படுகின்றன என்று ஆய்வு அறிக்கை சொல்கிறது. ”  என்றான்  ஆதவ்        வேதனையுடன்.

“அந்தத்   திருட்டு, ‘ஆட்கடத்தல்’ வரை போய் இருக்கிறது. சாலை போடும் பணிக்காக நிலம் தோண்டும்   போது கிடைத்த  தகடு   ஒன்று    முன்னர் காணாமல் போன, ‘ஆதித்திய கரிகாலன் அரண்மனை,   காணாமல் போன தஞ்சை காவல் தெய்வத்தின் சிலை இருக்கும் இடம்’ என்று நம்பி அதை ஆராய்ச்சிக்காகக் கொடுத்த ஆஃபீஸ்ர் நிகில்   என்பவரைக்   கடத்தி    இருக்கிறார்கள்.     பத்திரமாக   அவரை   மீட்டு    விட்டோம்…”   என்றார் சுந்தர்.

  “காஞ்சிபுரத்தில்   நிலத்துக்கு  அடியில் அப்படியொரு   தங்க அரண்மனை இருக்கா?” என்றார் நிருபர்   ஒருவர்.

“இதற்கு   நான்   பதில் சொல்வதற்குப் பதில், ‘திரு தேவராஜன், இந்தியத்   தொல்லியல்   துறை      இயக்குநர்’  ஆக   இருந்து    ஓய்வு    பெற்றவர்    இருக்கிறார்.   அவர்    சொன்னால் சரியாய்            இருக்கும்.”  என்று   கைக்காட்ட   தேவராஜன்   பேச   ஆரம்பித்தார

. “வணக்கம்!… . நிகில்   தன்   கையில் கிடைத்த தகட்டினை   என்னிடம்   தான் கொடுத்தார். நானும் முதலில் அதைத் தங்கம் என்று நினைத்தேன்.’  கார்பன்   டேட்டிங்  செய்து பார்த்த பின்னர் தான் அது   தகரம்    என்று    தெரிந்தது.   இது தஞ்சையில் பரவி வரும் நூதன மோசடி. இதோ நிகில் என்னிடம்   கொடுத்த தகடு.”  என்று காமெராவிற்கு தூக்கிக் காட்டினார்.

“சார்!… அப்போ  அந்த தங்க மாளிகை என்பது?” என்றார்   ஒரு   நிருபர்.

“அந்த மாளிகை இருப்பதாகச் சொல்லப்படும் இடம், இதோ வெளியே எட்டி பார்த்தீங்கன்னா கால்வாய்   மாதிரி  ஓடும்,  இந்த    வேகவதி     ஆற்றங்கரையில்   தான்.   இதை    இப்போது   ஆறென்று கூடச்   சொல்ல   முடியாது.
இங்கே    மண்   ரொம்பவே   நிலைத் தன்மை           அற்றது.  அப்படி ஸ்திரம் இல்லாத   இடத்தில்   அரண்மனை   எப்படிக் கட்ட முடியும்? கட்டினாலும்  மண்ணுக்குள்   புதையாமல்   நிற்குமா?
  இதை யோசிக்காமல் எந்த மடையனும் கட்ட மாட்டான். தங்க  மாளிகை என்பது எல்லாம் சுத்தப் பொய்.” என்றார்    தேவராஜன்.

அதே   சமயம்   அழகர்   வந்து   சுந்தர மாணிக்கவேல் காதில் ஏதோ சொல்ல, “இப்போது வந்த தகவல்.
இந்தச் சிலை கடத்தலின் தமிழக தலைவன் ரவி என்பவன் தப்பிச் செல்ல முயன்ற போது, சாலை   விபத்தில், அவர்   சகோதரர்களுடன்     இறந்து     விட்டார். அவர்   இடம்   இருந்து கிடைத்த  நாட்குறிப்பு   வைத்து,   இதில்   இந்திய   அளவில்,   உலக அளவில்   யார்     எல்லாம் ஈடுபட்டு    இருக்காங்கன்னு    தெரியவரும்.” என்றார் சுந்தர மாணிக்கவேல்.

பேட்டி   அதோடு    முடிய, “ராஜ்! எப்படி டா இருக்கே?…  டெல்லியில் பார்த்தது.  இருபது      வருஷம்    ஆச்சுடா.”   என்றார்    சுந்தர்.

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?” என்றார்   தேவராஜன். “உனக்கு   ஒரு   மகள்   தானே!…  எங்கே அவ… ?”

“ உனக்கு   ஒரு மகன் தானே!…. எங்கே அவன்?” இருவரும்   கோரஸாய்   கேட்டுச்    சிரித்தனர்.

பின் இருவரும் தங்கள் பிள்ளைகளைத் தேட, அவர்கள் இருவரும் தங்களுக்கு என்று, ‘ தனி உலகம், காதல் உலகம்’ உருவாக்கி,  அதில்     சஞ்சரித்துக் கொண்டு இருப்பதைக் கண்ட            தந்தையர்    இருவரும்    சிரித்தனர்.

“அப்போ இவர்கள் பிறக்கும்போது நாம பேசி வைத்தது    போல்   திருமணத்தை    முடித்து   விடலாமா   சம்பந்தி?”   என்றார்   சுந்தர்.
“பேஷா   செய்திடலாம்   சம்பந்தி!…   போகும் போக்கு   பார்த்தா,   நமக்கு அந்த வேலை கூட  இருக்காது   போல இருக்கு.   சீக்கிரம்    நல்ல    நாள் பாருடா.”  என்றார்   தேவராஜன்.

இவர்கள்   பேசியதைக்   கேட்டுக்   கொண்டே        வந்தனர்    இருவரும். “இன்றைக்கே கூட நல்ல நாள் தான் டாட்.பொண்ணு   ரெடி.  மாப்பிள்ளை   நான்   ரெடி.     பெத்தவங்க   நீங்க   ரெடி.   இது   கோயில்   நகரம்.    திரும்பிய   பக்கம்   எல்லாம்    கோயில் தான்.              ஏதாவது    ஒரு    கோயிலில்     திருமணம்   செய்துட    வேண்டியது    தான்.   என்ன   என்     நித்திலமே!…    உனக்கு   ஒகே    தானே?”    என்றான் ஆதவ்.

“டபுள்    ஒகே…”    என்றாள்   சமுத்திரா.

அடுத்த  ஒரு மணி நேரத்தில் நித்திய  சுமங்கலி காஞ்சி  காமாக்ஷி  அம்மன்   சந்நிதியில்     அன்னையை  சாட்சியாய் வைத்து,  கை விட்டுப் போன  தன்  முத்தினை  ஊர் அறிய, உலகம் அறிய தன்  உடமை   ஆக்கிக்  கொண்டான்  அந்தக்  காஞ்சி காவலன்.

அடுத்து ஈசனின் சன்னிதானமான ஏகம்பத்தின் நாயகனை   வணங்கி,   அந்த   நீண்ட   முடிவில்லா பிரகராதில்   வலம்   வந்தனர்.

“என்னமோ   தெரிலை  நித்திலா….இந்தக்  கோயில் பிரகாரத்தில் நடக்கும்போது ஜென்ம   ஜென்மமாய்   இங்கேயே இருந்தது போன்ற உணர்வை   நீக்க   முடியவில்லை…  என்   உயிரோடு,  உணர்வோடு கலந்து விட்ட இடம் இது என்று   தோன்றுகிறது. ” என்றான்   ஆதவ்.  

“எனக்கும்   அப்படி தான் தோணுது….  பூர்வ ஜென்மத்து  பந்தம் போலிருக்கு. இந்தக் கோயில்    நகரத்திற்கும், உங்களுக்கும்,   எனக்குமான              இந்தப் பந்தம் கூட…. மனம் இப்போ எப்படி நிறைஞ்சி   இருக்கு   தெரியுமா   ஆதவ்?… “என்றாள்    சமுத்திரா.

இவர்க ள்  பேசிக்   கொண்டே   நடக்க,   அந்த மாலை   வேளையில்   கோயில்    பிரகாரம் தேவலோகம்   போல்    ஜொலித்து  கொண்டிருந்தது.

ஆயிரத்து   எட்டு   லிங்க   மூர்த்தங்களுக்கும், சகஸ்ர லிங்கத்திற்கும், மண் லிங்கத்திற்கும் அபிஷேகம் ஆராதனை,   மாலை    இட்டு முடித்து வணங்கி வலம்   வந்து    கொண்டிருந்தவர்களின்    மேல் வந்து   மோதியது   அழகிய குழந்தை ஒன்று.

அதன் அருகே அதன் தாத்தா என்று சொல்லும் அளவுக்கு   வயதானவர்    நின்றிருந்தார்.

“இந்தா பிடி….இது உனக்குத் தான்…” என்ற குழந்தை  கை   நீட்ட, அதில் கையகல நிசும்பசூதனி   சிலை   ஒன்று   இருந்தது.

“இனி உனக்கும், உன் வம்சத்திற்கும் தான் நான் சொந்தம். உன்னை விட்டுப் பிரிந்தேன்…      உன்னிடமே   வந்து   சேர்ந்து விட்டேன் … 

தீர்க்கச் சுமங்கலி பவ!…

ஆயுஷ்மான் பவ!….” என்றது அந்தக் குழந்தை.

அடுத்த நொடி அந்தக் குழந்தையின் பாதம் பணிந்து   இருந்தார்கள்   சமுத்திராவும், ஆதவ்வும்.

‘அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே...” என்ற        மகிஷாசுர மர்த்தினியின் பாடலை இருவரும் பாடி   முடித்த போது,   அவர்கள் பார்க்கும் போதே, எழுந்த  குழந்தை  காலின் கொலுசு ஒலிக்க, கலகலவென்ற   சிரிப்புடன்   அங்கிருந்த    சிவ     லிங்கத்திற்குள்   சென்று      மறைந்தது.   

இனி இவர்கள் வாழ்வில் நிதமும் தேன் மழை பொழிந்து   கொண்டே   தான்    இருக்கப்   போகிறது.

அந்தத்   தெய்வ    நாடகத்திற்க்கு சாட்சியாய் இருந்த  சிவானந்த  போகர்,   இங்கே  மகிழ்ச்சியுடன்  பேசிக்   கொண்டு,  கோயிலை   விட்டு    வெளியேறும்   அந்தத் தம்பதிகளை     பார்த்து  முகத்தில்   மெல்லிய    புன்னகை   பரவ, அங்கிருந்து     சென்ற    அவர்    உடன்   கறுப்பு    நிற    நாய் ஒன்று   நடந்து    சென்றது.

சிறிது   நேரத்தில் அந்தப் பிராகாரத்திலிருந்து       காற்றோடு  காற்றாய், அந்தத் தவசீலரும், அந்தக் கறு நிற நாயும்   அவர்கள் இருவரும் மறைந்து போனார்கள். 

விண்டவர் கண்டிலர்!…. 
கண்டவர் விண்டிலர்!

                      முற்றும்.   

(காஞ்சித்தலைவனோடு தொடர்ந்து பயணித்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.💐💐💐💐
இந்த சரித்திர ஆன்மீக நாவல் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.👏
படித்தவர்கள் மறக்காமல் உங்கள் ரிவ்யூ ரேட்டிங் கொடுங்கள்.
உங்கள் மேலான கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயங்க வேண்டாம்.
உங்கள் கருத்துக்கள் ரிவ்யூ தான் எனக்கு மிகப்பெரிய boost.அதுதான் களைப்பில்லாமல் எழுத தூண்டும் காரணி.💓💓💓

அன்புடன் 💐💐💐
உங்கள் தோழி
அனிதா ராஜ்குமார்.)
👏👏👏👏👏👏👏👏👏

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்