அத்தியாயம் 7
ரதியின் இழப்பை மன்மதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் கண்முன்னேயே அவள் தீக்கிரையானது அவனது ஆன்மாவை உலுக்கியது. ஆருயிர் பிரிந்த வேதனையில் மீள முடியாமல் தவித்தவன், சிவபெருமான் அருளிய வழிகாட்டுதலை நினைவுகூர்ந்தான். விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரம் எப்போது நிகழும் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு, உருவமற்ற காமதேவன் வைகுண்டத்திற்கு விரைந்தான்.
அங்கே, பாற்கடலின் மீது அமைந்த ஆதிசேஷப் படுக்கையில் கண்ணபிரான் கண்கள் மூடித் துயிலும் யோகநித்திரையில் இருந்தார். நடப்பவை யாவற்றையும் உணர்ந்திருந்த பரந்தாமன், மன்மதனின் வருகையை அறிந்து மெல்ல விழிகளைத் திறந்தார். அவனது மனக் கலக்கத்தையும் தவிப்பையும் அவர் அறிவார்.
“வணங்குகிறேன் பெருமானே!”
அனங்கனின் உருவமற்ற வணக்கத்தை ஜெகன்னாதன் புன்னகையோடு ஏற்றார்.
“மன்மதா, நீ வந்ததன் நோக்கத்தை நான் அறிவேன். அது கூடிய விரைவில் நிறைவேறும். என் அண்ணனாக இந்த ஆதிசேஷன் முதலில் பூமியில் அவதரிப்பார். அதன் பிறகு அவருக்குத் தம்பியாக நான் கிருஷ்ணனாக அவதரிப்பேன். அப்போது என் மகனாக நீ தோன்றுவாய் . இன்னும் சொற்ப காலம் பொறுத்திரு. உனக்குரிய ரூபமும் கிடைக்கும்; உன் ஆருயிர் ரதியும் உன்னை வந்தடைவாள். உன் துயரங்கள் நீங்கி இனி என்றும் இன்புற்றிருப்பாய்” என்று பகவான் அருளினார்.
பரம்பொருளே வாக்குக் கொடுத்த பிறகு மன்மதனுக்கு ஏது கவலை? அவனது மனம் பேரானந்தத்தில் திளைத்தது. நெகிழ்ச்சியோடு விஷ்ணுவின் திருவடிகளைப் பணிந்து வேண்டினான்.
“இறைவா! இனி ஒருபோதும் நான் சோகத்தில் மூழ்க மாட்டேன். உங்கள் புனித அவதாரத்திற்காகக் காத்திருப்பேன். அந்த இடைப்பட்ட காலத்தை என் ரதியின் நினைவுகளால் நிரப்பி இன்புறுவேன். அவளை மீண்டும் சந்திக்கையில், என் மாறாதக் காதலை இந்த உலகறிய அவளுக்கு உணர்த்த வேண்டும். அதற்குத் தங்களின் சம்மதமும் அருளும் வேண்டும்” என்றான்.
“உன் விருப்பம் என்ன மன்மதா?” என்று எம்பெருமான் புன்னகையுடன் வினவினார்.
“தாங்கள் அவதரிக்கும் புண்ணிய பூமியே, தங்களின் மகனாகப் பிறக்கப்போகும் எனக்கும் இல்லமாகும். ஆகையால், அந்த நிலம் முழுவதையும் நான் காதலால் நிரப்ப விரும்புகிறேன். அங்கே பூக்கும் மலர்கள், காய்க்கும் காய்கள், அடர்ந்த மரங்கள், செடிகொடிகள், ஓங்கும் மலைமுகடுகள் ஏன்… வீசும் காற்றில் கூட என் காதலைக் கலந்துவிடப்போகிறேன். இதற்குத் தாங்கள் இசைவளிக்க வேண்டும்” என்றான்.
மாயக்கண்ணன் சிரித்தபடியே, “நீ செய்யும் இச்செயல் எனக்குச் சம்மதமே! நான் வீற்றிருக்கும் இடத்தில் காதலும் நிறைந்திருப்பதால், உலகத்தோர் என்னையும் ‘காதல் மன்னன்‘ என்று அழைப்பர். இந்த கிருஷ்ணாவதாரம் எனக்கு எத்தனை மனைவிகளைத் தரப்போகிறதோ தெரியவில்லையே! உன் விருப்பப்படியே ஆகட்டும்” என ஆசி வழங்கினார்.
வைகுண்டத்திலிருந்து விடைபெற்ற மன்மதன், பேரானந்தத்தோடு பூலோகம் வந்தடைந்தான். ஸ்ரீகிருஷ்ணர் வளரப்போகும் மதுராவிற்கு அருகில் இருந்த ஒரு அடர்ந்த வனப் பகுதியைத் தேர்ந்தெடுத்தான்.
அங்கே தன் காதல் லீலையைத் தொடங்கினான். அந்தக் காட்டை ஒப்பற்ற எழில் கொஞ்சும் சோலையாக மாற்றினான். பச்சையும் மஞ்சளும் பழுப்புமாக வண்ணக் கலவைகளான மரங்கள், அடர்ந்த புல்வெளிகள், நறுமணம் வீசும் மலர்கள் என அக்காடு பொலிவுற்றது. ஏலக்காய், மஞ்சள், மிளகு, சோம்பு, சீரகம், இலவங்கம் எனச் சகல நறுமணப் பொருட்களும் ஆங்காங்கே அடர்த்தியாக விளைந்தன. அவசியமான வாசனை அந்த வனமெங்கும் வீசியது. ரோஜா, அல்லி, முல்லை, ஜாதிமல்லி, தாமரை, நீலோத்பலம், சாமந்தி எனப் பலவகை மலர்கள் பூத்துக் குலுங்கின.
நாளடைவில் அந்த அற்புதம் நிறைந்த காடு ‘காம்யவனம்‘ என்று பெயர்பெற்றது. ‘காம்ய‘ என்றால் ‘அழகிய‘, ‘வசியப்படுத்தக்கூடிய‘, ‘ஈர்க்கக்கூடிய‘ என்று பொருள். அதனுள் பிரவேசிக்கும் எவரும் அதன் வசிய அழகில் மயங்கி, மனத்திற்குள் காமத்திற்கும் ஆசைக்கும் இடம் கொடுத்துவிடுவர். மனித மனத்தின் ஆழ்ந்த ஆசைகளைச் சுலபமாகத் தட்டி எழுப்பும் ஆற்றல் அக்க காட்டிற்கு இருந்தது. அத்தகைய மாய நிலத்தை உருவாக்கிவிட்டு, அனங்கனும் அங்கேயே உலவிக்கொண்டிருந்தான்.
காலம் கனிந்தது; கிருஷ்ணாவதாரமும் நிகழ்ந்தது. தன் ரதியை அடையும் தருணம் நெருங்கிவிட்டதை எண்ணி மன்மதன் ஆனந்தக் கூத்தாடினான். ஸ்ரீகிருஷ்ணனின் பால்ய பருவம் முழுவதும் அந்தக் காம்யவனத்தின் சூழலிலேயே கழிந்தது.
அக்காற்றில் கலந்திருந்த மாயைக் காதல், அனைவரையும் கிருஷ்ணன் மீது அளப்பரிய அன்பு கொள்ள வைத்தது. ஆயர் சிறுவர்கள் முதல் மூத்த கோபியர் வரை யாவரும் கண்ணனைச் சுற்றியே சுழன்றனர். அவன் தன் புல்லாங்குழலை உதட்டில் வைத்து மீட்டும்போது, காம்யவனத்தின் காற்றுடன் கலந்துவந்த அந்த கானம் ஜீவராசிகள் அனைத்தையும் வசியப்படுத்தியது. ஆடு, மாடுகள் முதல் மரம், செடிகள் வரை மெய்மறந்து நின்றன. கிருஷ்ணனின் லீலா வினோதங்கள் யாவும் காம்யவனத்தின் தெய்வீகச் சக்தியால் செவ்வனே அரங்கேறின.
இங்கே உருவமில்லாத காமதேவன் சிறுவன் கிருஷ்ணனை ரசித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ரதிதேவி ‘மாயாவதி‘ என்னும் பெயரில் பூலோகத்தில் அவதரித்திருந்தாள். மன்மதனின் பிறப்பிற்கு முன்பே பிறந்த அவள், ஒப்பற்ற பேரழகியாக உருவெடுத்தாள். பருவமடைந்ததும் அவளது பேரழகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இருப்பினும், தான் யார் என்பதும், தன் பூர்வஜென்ம நினைவுகளும் அவளுக்கு மறந்திருந்தன.
இந்நிலையில், அவளது வசிய அழகில் மயங்கிய சம்பராசுரன் என்னும் அசுரன் அவளைச் சிறையெடுத்துச் சென்றான். ஆனால், கற்பினைக் காக்கும் தெய்வமாக விளங்கிய மாயாவதியை அவனது விருப்பமின்றித் தொட அவனால் இயலவில்லை. இதனால், அவளைத் தன் அரண்மனைச் சமையற்கூடப் பொறுப்பில் அமர்த்தினான். அவளும் தப்பிக்க வழியின்றி அங்கே பணிபுரிந்து வந்தாள்.
இதனிடையே, துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணர் ருக்மிணி தேவியை மணமுடித்தார். அவர்களுக்கு மன்மதனே மகனாக வந்து அவதரித்தான். பெற்றோர் அவனுக்கு ‘பிரத்யும்னன்‘ எனப் பெயரிட்டனர். தெய்வீக எழிலோடு பிறந்த அந்தப் பாலகனுக்கும் தான் மன்மதன் என்ற உண்மை தெரியாதிருந்தது.
பிரத்யும்னனின் பிறப்பின் முதன்மை நோக்கமே ரதியுடன் இணைவதுதான் என்பதை அறிந்த கிருஷ்ணர், அவனைக் காப்பாற்றி மாயாவதியிடம் சேர்க்க எண்ணினார். உடனே சம்பராசுரனிடம், “உன்னைக் கொல்பவன் கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னனே!” என்று அசரீரி வாக்கினை ஒலிக்கும்படிச் செய்தார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சம்பராசுரன், நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்து, யாருக்கும் தெரியாமல் குழந்தையான பிரத்யும்னனைக் கடத்திச் சென்று ஆழ்க்கடலில் வீசியெறிந்தான்.
அப்போது அங்கே நீந்திவந்த ஒரு பெரிய மீன், அக்குழந்தையை விழுங்கியது. எதிர்பாராதவிதமாக, மீனவர்கள் வலை விரித்து அந்த மீனைப் பிடித்து, சம்பராசுரனின் அரண்மனைச் சமையலுக்கு அனுப்பினர்.
சமையற்கூடத்தில் மாயாவதி அந்த மீனைச் சமைப்பதற்காக வெட்டியபோது, அதன் வயிற்றுக்குள் உயிருடன் இருந்த பேரழகுமிக்க பாலகனைக் கண்டு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தாள். செய்வதறியாது தவித்த அவள் முன் தேவமுனிவர் நாரதர் தோன்றினார்.
“மாயாவதி! இவன் ஸ்ரீகிருஷ்ணரின் புதல்வன் பிரத்யும்னன். சம்பராசுரனின் அந்திமக் காலம் இவனாலேயே நிகழப்போகிறது. இவனை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்த்து வா. இவன் வாலிபனானதும் சம்பராசுரனைக் வதம் செய்து, உனக்கும் இந்தச் சிறையிலிருந்து விடுதலை தருவான்” என்று கூறி மறைந்தார்.
நாரதரின் வாக்குப்படி, மாயாவதி பிரத்யும்னனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். மாயாவதி வயதில் மூத்தவளாக இருந்தாலும், பிரத்யும்னனை ஒருபோதும் தன்னைத் ‘தாய்‘ என்று அழைக்க அனுமதித்ததில்லை.
“தங்களை நான் எவ்வாறு அழைப்பது?” என்று அவன் மழலை மொழியில் கேட்டபோதெல்லாம்,
“என்னை நீ ‘மாயா‘ என்றே அழைக்கலாம். அதுவே எனக்குப் பிடிக்கும்” என்று உடனடியாகப் பதிலளிப்பாள்.
தான் ஏன் அவ்வாறு கூறுகிறோம் என்று அவளுக்கே சில நேரங்களில் புரியவில்லை. எனினும், அவன் தன்னைத் தாய்மை ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதை அவளது ஆன்மா ஏற்கவில்லை.
“நீங்கள் தானே என்னை ஆருயிராய்ப் பராமரித்து வளர்க்கிறீர்கள்? பிறகேன் உங்களை நான் தாய் என அழைக்கக் கூடாது?” என்று பிரத்யும்னன் பலமுறை வினவியபோதும்,
” உன்னை வளர்க்கும் பொறுப்பு மட்டுமே என்னுடையது. உன் பெற்றோர் யார் என்பதை உரிய காலம் வரும்போது கூறுகிறேன்” என்று அவன் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாள்.
பிரத்யும்னன் வாலிபப் பருவத்தை அடைந்ததும், மாயாவதி அவனிடம் உண்மையை வெளிப்படுத்தினாள். “பிரத்யும்னா! நீ யாதவக் குலத் தோன்றல், ஸ்ரீகிருஷ்ணரின் புதல்வன். உன் தாய் ருக்மிணி தேவி. இருவரும் துவாரகையில் வசிக்கிறார்கள்” என்றாள்.
உண்மையை உணர்ந்த பிரத்யும்னன், தன்னைப் பெற்றவர்களிடமிருந்து பிரித்த சம்பராசுரன் மீது கடும் சினம் கொண்டு, அவனுடன் போரிட்டு அவனைக் கொன்றொழித்தான்.
வெற்றி வீராப்பாகத் திரும்பிய பிரத்யும்னன், தன்னை வளர்த்த மாயாவதியை அழைத்துக் கொண்டு வான்மார்க்கமாக துவாரகையை அடைந்தான். துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணனின் அதே கம்பீரச் சாயலில் இருந்த பிரத்யும்னனைக் கண்ட யாதவர்கள், கிருஷ்ணனே நேரில் வருவது போல் எண்ணிப் பூரிப்படைந்தனர்.
ருக்மிணி தேவிக்கு அவனைக் கண்டதும் தாய்மைப் பாசம் பெருக்கெடுத்தது. அதே சமயம் நாரத முனிவரும் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். நீண்ட நாட்களாகக் காணாமல் போன தன் அருமைப் புதல்வன் மீண்டு வந்ததைக் கண்டு ருக்மிணி எல்லைகளற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.
மாயாவதி பிரத்யும்னனை விட வயதில் மூத்தவளாக இருந்தாலும், அவளது மேனி என்றும் வாடாத இளமையோடு மிளிர்ந்தது. சில காலம் கழித்து, பிரத்யும்னன் துவாரகையின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை உலா வந்து பார்வையிட எண்ணினான்.
அப்போது மதுராவிற்குச் செல்ல முடிவெடுத்தான். மாயாவதிக்கும் மதுராவைக் காண வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தது. அவள் பிரத்யும்னனிடம் சென்று, “நானும் உன்னுடன் வரலாமா?” என்று வினவினாள்.
“தாராளமாக…” என்று மென்னகையுடன் கூறிய பிரத்யும்னன், அவளையும் தன் தேரில் ஏற்றி அழைத்துச் சென்றான்.
மதுராவிற்குச் செல்லும் வழியில் தான் அந்த மாயக் காம்யவனம் அமைந்திருந்தது. தேரை பிரத்யும்னன் செலுத்த, பின்னால் அமர்ந்திருந்தாள் மாயாவதி. காம்யவனத்தின் எல்லைக்குள் தேர் நுழைகையில், அதன் வேகம் மெல்லக் குறைந்தது. ஓரிடத்தில் தேரை நிறுத்தினான்.
தேர் நின்றதும் மாயாவதி கீழே இறங்கினாள். பிரத்யும்னனும் இறங்கி, அவளுடன் அக்காட்டின் அடர்ந்த பாதையில் நடக்கத் தொடங்கினான்.
இருவரின் பாதங்களும் அந்தப் புனித மண்ணைத் தொட்ட கணத்தில், அவர்தம் நினைவுகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. தாங்கள் யார் என்னும் உண்மை இருவருக்கும் சட்டென புலப்பட்டது! அத்தனை காலமாகத் தான் யாருக்காகக் காத்திருந்தோம் என்பதை இருவரின் ஆன்மாவும் உணர்ந்துகொண்டன.
தான் ரதிக்காக இந்த வனமெங்கும் விதைத்த மாறாத காதலின் நறுமணம் இன்று பலன் தந்ததை பிரத்யும்னன் உணர்ந்தான். அங்கிருந்த செடி கொடிகளும் மரங்களும் அவனது பூர்வஜென்மக் காதலை மாயாவதியாகிய ரதிக்கு மௌனமாக உணர்த்தின. அவள் மிதித்து வந்த மண், அவனது காமதேவ வாசனை அவளுக்கு நினைவூட்டியது. தான் இல்லாத காலத்தில் அவன் அடைந்த வேதனையை ரதி தன் இதயத்தில் உணர்ந்தாள்.
இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் நோக்கினர். ‘உனக்காகவே நான்‘ என்று இருவரின் விழிகளும் மௌன மொழி பேசின. பிரத்யும்னனின் முகத்தில் தன் பழைய காமதேவனின் பிம்பத்தைக் கண்ட மாயாவதி, சிறிதும் தாமதிக்காமல் ஓடிவந்து அவனை ஆருயிராகக் கட்டித் தழுவினாள்.
“காமா… நீதானா! நீயேதானா? இத்தனை காலம் உன்னை உணராமல் இருந்தேனே!” என்று கண்ணீர் மல்கக் கதறினாள்.
“ரதி! எனக்கும் இப்போதுதான் புரிந்தது. நாம் யார் என்பதை உணர்வதற்கு இறைவனே இந்தக் காம்யவனத்தைக் காலக்களமாக அமைத்திருக்கிறான் போலிருக்கிறது. இனி ஒருபோதும் உன்னைப் பிரிய மாட்டேன்” என்று உணர்ச்சிப் பெருக்கில் தவித்தான் காமன்.
நீண்ட நெடிய பிரிவிற்குப் பிறகு தங்களின் உயிர்த்துணையை அடைந்த பேரானந்தத்தில், இருவரும் அந்த வனத்தில் உலா வந்தனர். பிரத்யும்னன் அவளிடம், தான் எவ்வாறு சிவபெருமானின் உத்தரவுப்படி விஷ்ணுவிடம் சென்று ஆசி பெற்று, இக்காடு முழுதும் தங்களின் காதலைக் காற்றோடு கலந்தான் என்பதை விவரித்தான்.
“அந்தக் காதலின் வீச்சுதான் உன்னையும் என்னையும் இந்த இடத்தில் ஒன்றுசேர்த்து, நம் பூர்வஜென்ம நிலையை உணர வைத்தது” என்று அவளைத் தோளோடு அணைத்துக் கூறியவாறு, காம்யவனத்தின் ஓர் அடர்ந்த இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.
