arrow_back
கொண்டவன் கொடுத்தானடி கொண்டவன் கொடுத்தானடி – 6

கொண்டவன் கொடுத்தானடி – 6

visibility 97
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கொண்டவன் கொடுத்தானடி – 6

 

சரியாக இருபது வருடங்கள் சென்று!.

 

முனியசாமியின் பெற்றோர்களான மரகதம்மாள் மற்றும் பச்சையப்பனின் நினைவு நாள் இன்று.இருவரும் உயிரோடு இருந்த நாட்களில் கந்தசாமியை தவிர்த்து மற்றவர்களிடம் அத்தனை நெருக்கம் கிடையாது, ஆனால் கந்தசாமி மற்றும் நாச்சி தம்பதிக்கு மகன் ஒன்று, மகள் ஒன்று என்று இரு பிள்ளைகள் பிறந்ததோ அன்றில் இருந்து, அத்தனை நெருக்கம் காட்டி நின்றார்கள் இருவரும்.

 

ஆம் கந்தசாமி – நாச்சிக்கு இரு பிள்ளைகள் மகன் பனையடி கருப்பன், குலசாமியே வந்து பிறந்தது போல் எண்ணம் போலும் அதான் குலசாமியின் பெயரை வைத்து விட்டனர்.இளையவள் அழகு நாச்சி பெயருக்கு ஏற்றார் போல் அழகி தான்.

 

பிரசவ காலத்தில் கால் வழியாக வெளியே வந்த குழந்தையை எடுக்க முயற்சிக்கும் போது, சிறு பிசகு ஏற்பட்டு அழகின் ஒரு கால் பாதம் மட்டும் வளைந்து இருக்கும்.தாங்கி நடப்பது போல் இல்லாமல், கொஞ்சமாக நடையில் வித்தியாசம் தெரியும்.

 

அவளைப் பொறுத்தவரை அது குறை, ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் என்றும் தேவதை தான்.சாத்வீக அழகு என்பார்களே அது போல் தான் இருப்பாள்.இடையைத் தாண்டிய பட்டு கூந்தல் இன்னும் அவளுக்கு அழகு சேர்க்கும்.

 

இதோ இன்று அப்புச்சி, ஆயாவின் நினைவு நாளின் பொருட்டுப் பூஜை முடிந்து அழகு நாச்சியை தவிர  அனைவரும் உண்டு விட்டு கூடத்தில் அமர்ந்திருக்க. மங்கல நாச்சியின் தாயும், தகப்பனும் வந்திருந்தனர்.

 

முதலில் அவர்களைக் கண்டது கருப்பன் தான், ” அம்மாயி வா! வா! என்றவன் ஓடி சென்று அவரை அனைத்துக் கொண்டான்”

 

“ஆத்தா வா!” என்ற நாச்சி வள்ளியின் கையைப் பிடித்து அழைத்து வர.அவளை தொடர்ந்து முனியசாமியும், சாந்தாவும் அவர்களை வரவேற்று அமர வைத்தனர்.

 

மருந்தின் தோற்றம் கொஞ்சம் பதட்டமாக இருக்க, “என்ன மாமா சங்கதி? முகமே சரியில்லை?” கந்தசாமி கேட்கவும் தான் நாச்சி தந்தையின் முகத்தைப் பார்த்து வைத்தாள்.

 

“அப்பா! என்ன?”

 

“ஒன்னுமில்லை நாச்சி என்றவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறு மௌனம் கொண்டு பின் பேசினார், நேத்திக்கு இந்நேரம் வூடே இரண்டு பட்டு போச்சு சாமி” என்றதும் நாச்சி குழப்பமாக வள்ளியை பார்க்க.

 

“சுந்தரியும், உம்ம அக்காளுங்களும் சேர்ந்து சந்தி சிரிக்க வச்சு புட்டாளுக” சொல்லும் போதே வள்ளியின் கண்ணில் இருந்து நீர் வடிந்து விட்டது.

 

“என்னத்துக்கு அவளுக சண்டை கட்டி வச்சாளுக?”

 

“உம்ம தம்பிக்காரனுக்குச் சுந்தரி மவளை கட்டிக்கக் கேட்டா, முத்து முடியாதுன்னு சொல்லிப்புட்டான். அதுக்கு வேண்டி அத்தினி பேச்சு” என்றதும் முனியசாமி திடுக்கிட்டு கந்தசாமியை பார்க்க, அவனோ முகத்தில் எதுவும் காட்டாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“அவன் வேணான்னு சொன்னாக்க விட வேண்டியது தானே என்னத்துக்கு இவளுங்க கச்ச கட்டுறாளுக? ஆசை இல்லாம கட்டி அல்லாடி நிற்கவா? நீ வா! ஆத்தா நான் பேசிக்கிடுறேன்”

 

“நாச்சி உம்ம அக்காகாரின்னா நானே பேசிப்புடுவேன், பேசுனது மருமவேன். அவீங்க வூட்டு ஆளுங்க கிட்ட சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம கிடக்கோம். மருமவேன் போனகிட்டு சோறு கூட பரிக்காம போராக என்ன செய்யுறதுனே தெரியல.அதேன் உம்ம கிட்டையும், மருமவேன் கிட்டையும் பேசி என்ன செய்யலாம்னு பார்க்க வந்தோம் ” என்றதும் முனியசாமி சில நொடிகள் யோசித்து விட்டு.

 

“மருது! முத்து உம்ம மவேன், உம்ம மனசுல என்ன கிடக்கு முதல அத சொல்லு?”

 

“அவனுக்கு அப்பன், ஆத்தா எல்லாம் நாச்சியும், மருமவனுந்தேன், வளர்த்தது அவீங்க தானே, அவீங்க முடிவுத்தேன் எங்க முடிவு ” என்றதும் மீண்டும் முனியசாமி மகனை பார்க்க.

 

“மாமா! நானே போயி பேச முடியாது, முதல முத்துக்கிட்ட பேசிக்கிடுறேன் அப்புறம் அவீங்க பேச்சுக்கு வந்தா நான் அண்ணன் கிட்ட பேசிப்புடுறேன் ” அதாவது சுந்தரியின் கணவனிடம் பேசுவதாகக் கந்தசாமி சொல்ல. அப்போது தான் மருதுவும், வள்ளியும் கொஞ்சமாகத் தெளிந்தனர்.

 

அதுவரை இவர்களது பேச்சை உள் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அழகு நாச்சிக்குக் கண்ணில் நீர் வழிந்த வண்ணம் இருந்தது.மருதுவும், வள்ளியும் அவளைப் பார்க்க உள்ளே வர தூங்குவது போல் இருந்து கொண்டாள் சின்னவள்.

 

சிறிது நேரம் இருந்துவிட்டு அவர்கள் இருவரும் விடைபெற, கருப்பன் அவளது அறைக்குள் நுழைந்தான்.கந்தசாமியை கொண்டு உயரமும் ,உருவமும் போலும்.அத்தனை பெரிதாக இருந்தான். வயதுக்கு மிஞ்சிய தோரணை என்று தான் சொல்ல வேண்டும் அதுவும் ஒருவித அழகை கொடுத்தது அவனுக்கு.

 

“பாப்பா குட்டி! எழுந்து உட்காரு சாமி எம்புட்டு நேருந்தேன் அழுது வைப்ப” என்றதும் படக்கென எழுந்தவள் அறையின் கதவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அண்ணனை தாவி அனைத்து கொண்டு மீண்டும் அழுகை.

 

“ப்ச்! அழகு என்னபுள்ள? புஞ்சை உடம்பு இப்படிக் கரைஞ்சு வச்சா உடம்பு சூடு கண்டு போகும் சாமி”

 

“அண்ணே! மாமா!” என்றதும் சிறு கடுமையாக தங்கையை பார்த்தவன்.

 

“இந்தாரு புள்ள மாமே பிடியே கொடுக்க மாட்டேங்குது. எம்புட்டுத் தரம் பேசுனேன் தெரியுமா அப்பாரை கண்டா அலறி அடிச்சிக்கிட்டு ஓடுது, நான் என்னபுள்ள செய்ய?”

 

“நானும் பேசி பார்த்தேன் ‘போடி கோட்டி சிறுக்கி விளையாண்டுக்கிட்டு கிடக்கன்னு’ போகுது” தனது விருப்பத்தை முத்துக் காளையிடம் எத்தனையோ முறை அழகு நாச்சி சொல்லி இருக்க, அவனோ அவளைச் சிறு பிள்ளையாகப் பாவித்து வம்பு செய்து விட்டு சென்று விடுவான்.

 

இந்த அரிவையின் ஆள் மனம் கண்டு கொள்ள முடியவில்லை. அந்தக் காளைக்கு அவளது பிடித்தம் ஆழம் கண்ட பின் என்ன எதிர்வினை புரிவானோ கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.

 

“ஆத்தா கிட்ட சொல்லிப்புடுவோம் அழகு, அப்பாரு மனசு புரியாம பேசி வைக்க முடியாது, ஏன்னா மாமனை கண்டாலே அவுக வம்பு செஞ்சுக்கிட்டே கிடப்பாக. எமக்கே அப்பாருக்கு மாமாவ புடிக்குமா? இல்லையான்னு? தெரியாம பேச பயமா இருக்கு புள்ள” தங்கைக்காக தகப்பனிடம் பேசலாம் என்றால் அதற்கும் பயமாக இருந்தது.

 

கந்தசாமி சில விஷயங்களில் அத்தனை கெடுபிடி அதுவும் மகனிடம் கொஞ்சம் கூடுதல் தான் அதனாலே கருப்பன் பயந்து வைத்தான்.

 

“ஆத்தா வஞ்சு வைக்குமே அண்ணே!”

 

“வஞ்சா மாமனுக்கு வேண்டி வாங்கிகிடு இதை விட்டா வேற வழியே இல்லை சாமி”

 

“மாமன் கிடக்காட்டி எமக்குக் கண்ணாலம் எல்லாம் இல்ல” என்றவளை கூர்ந்து பார்த்தவன்.

 

“இந்தாரு கூறு கெட்ட தனமா பேசி வைக்கக் கூடாது, நேர்மையா உமக்கு வேண்டியதை வாங்கிகிடுற வழிய பாரு. அதை வுட்டுப்புட்டு எங்களை பயம் காட்டுறது, மாமனை இக்கட்டுல நிறுத்தி வைக்கிறது இது போல எதுவும் செஞ்சுபுடாத. காலம் இன்னும் கிடக்கு பொறுமையெடு.

 

நம்ப ஆத்தா, அப்பன் கணக்கா ஆசையா வாழனும் புள்ள.எமக்கும் அதுதேன், உமக்கும் அதேன் பேசி போராடு” என்றவன் பேச்சில் மறைந்திருக்கும் பொருளை உணர்ந்தவள் அவனை அசையாமல் பார்த்தாள்.

 

இப்போது சுந்தரியும்,அவளது மகளும் கொடுக்கும் இக்கட்டை நீ செய்யக் கூடாது.அதே நேரம் நீயும் தவறான முடிவை எடுக்கக் கூடாது என்பதைக் கொஞ்சம் சுற்றி கருப்பன் சொல்லி வைக்க.தமையன் மீது அன்பு கொண்ட தங்கையும் அவனது கூற்றை ஏற்று நின்றாள்.

 

“நான் அந்த மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் அண்ணே!”

 

“ஹ்ம்ம்! நாங்க உம்ம மேல உசரையே வச்சிருக்கோம், அப்பாரை சொல்லவே வேணாம் பார்த்துக்கிடு” என்றவன் விலகி செல்ல.சோர்வாகப் படுத்துக் கண்களை மூடி கொண்டாள் அழகு நாச்சி.

 

இங்கே தனது தோட்டத்தில் பூச்சி வைத்த செடிகளை அழித்துக் கொண்டிருந்தான் முத்துகாளை காளையின் பருவத்தில் நிற்கும் முழுமையான ஆண் மகனாகக் கருமை நிறத்தில் கம்பீரமாக இருந்தான்.

 

அவனது நெருங்கிய தோழன் செழியன் வேகமாக ஓடி வந்து,”முத்து!” என்றதும் திரும்பி நண்பனை பார்த்தவன்.

 

“வாடா! முண்டகலப்ப நீத்தேன் காய் பறிக்க வர ஆள? உம்ம நம்பி ஒரு நாள் சோலி போச்சு எருமை கெடா!“

 

“ப்ச்! ஒரு சின்னச் சம்பவம் மச்சான் அதேன் வர முடியல ” என்றதும்

 

“என்னடா எங்கன சண்டை கட்டி வச்ச?”

 

“அதெல்லாம் இல்லை இது வேற” என்றவன் செய்தியை சொல்ல முடியாமல் தவிக்க.

 

“என்னடா தொண்டைக்குழி வரைக்கும் வர வார்த்தையை முழுங்குறவேன் பெரிய சம்பவம் எதுவும் பண்ணிபுட்டியா என்ன?”

 

“இப்போ சங்கதிய உம்மைக் கிட்ட சொல்ற நிலையில நான் இல்ல” என்றதும் அவனைக் கூர்ந்து பார்த்தவன் அவனிடம் நெருங்கி.

 

“சரி சொல்லும் போது சொல்லு, இப்போ என்னத்துக்கு என்ன பார்க்க வந்த?”

 

“வரேன்னு சொல்லிப்புட்டு வரல அதேன்! என்றவன் சிறு இடைவெளி விட்டு சுந்தரி அக்கா நேத்துச் சண்டை கட்டி வச்சுதாமே.சோமு பையல சந்தை கிட்ட பார்த்தேன் சொன்னான்” என்றதும் முத்துகாளை ஒரு பெருமூச்சுடன் செடியின் நடுவில் அமர்ந்து கொண்டான்.

 

“என்னடா?”

 

“அது புரியாம சண்டை கட்டி வைக்குது. எமக்கு அந்தப் புள்ளைய கட்ட முடியாதுடா.நான் தூக்கிகிட்டு திரிஞ்ச புள்ள, அதுவும் போக எமக்கு அந்தப் புள்ளய பொஞ்சாதி கணக்கா பார்க்க முடியாதுடா”

 

“அதை உங்க அக்கா கிட்ட பக்குவமா எடுத்து சொல்ல வேண்டியது தானே”

 

“நீ வேற செழியா! நான் என்ன சொன்னாலும் அது மண்டைக்கு ஏற மாட்டேங்குது.இந்த பக்கம் மாமனை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்குது.அந்த பக்கம் சம்மந்தமே இல்லாம நாச்சி அம்மாளு மேல பழி பேசி வைக்குது.இரண்டுக்கும் நான் அடங்கலையா அதேன் நேத்திக்கு அழுது கத்தி ஊரை கூட்டிருச்சு.நல்ல வேளை சொக்கப்பன் பெரியப்பாவும், அவுக மகேன் சின்ன அண்ணே குமாரு இருக்காருல?”

 

“ஆமா!”

 

“அவுக வந்து சுந்தரியை அதட்டி வச்சு, மாமாக்கு எடுத்துச் சொல்லவுந்தேன் கம்முனு போச்சு” இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே முத்து காளையின் இன்னொரு கூட்டாளி ஒருவன் ஓடி வந்து மூச்சு வாங்கி நின்றான்.

 

“என்னத்துக்கு இம்புட்டு வேகமா வார “

 

“அடேய்! உம்ம அக்கா மக அரளி விதைய அரைச்சுக் குடிச்சு புட்டாலம் உங்க அக்கா ஆத்தாளை பாடா படுத்தி வைக்குது நீ வா!” என்றவன் அவனை இழுத்துக் கொண்டு ஓட அவன் பின்னே செழியனும் ஓடினான்.

 

“சண்டாள சிறுக்கி காரியம் சாதிக்க என்ன வேலை பண்ணி வைக்கிறா” அக்கா மகளைத் திட்டி கொண்டே ஓடினான் முத்து காளை.

 

செய்தி சடுதியில் பரவி இரவு போல் கொட்டாம்பட்டி வந்து சேர.நாச்சியும், கந்தசாமியும் உடனே கிளம்பி சென்று விட்டனர்.அழகு நாச்சிக்கு தெளிவாகத் தெரிந்தது இனி அம்சவேணி பிழைத்தால், கண்டிப்பாக முத்து காளையின் மனைவி தான் என்று.துக்கத்தைத் தொண்டையில் அதக்கி கல்லாகச் சமைந்து போனாள் அரிவை.

 

செய்தி கேட்டு கருப்பன் அவசர கதியில் வீடு வந்து சேர்ந்தவன் முதலில் தனது தங்கையை தான் தேடினான்,”பாப்பா!” என்ற அழைப்புடன் கதவை வேகமாகத் திறக்க.ஓடி வந்து அவனை அனைத்தவள், “எல்லாமே போச்சே அண்ணே!” என்று கதற அவளைக் கதறலை கேட்டு சாந்தாவும், முனியசாமியும் அறையின் வாயிலில் வந்து நின்றனர்.

 

“பாப்பா! பொறுமையா இரு சாமி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றவன் தலையைத் தடவி அவளைச் சமாதானம் செய்ய.

 

“இல்ல அண்ணே! இனி மாமா எமக்கில்ல. நான் கண்ட கனா  அம்புட்டும் பகல் கனாதேன். நான் ஊனம் காண்டவ அதேன், எமக்கெல்லாம் எதுக்கு ஆசை” மனதின் வலி தாங்காமல் புலம்பியவளை சாந்தாவும், முனியசாமியும் அதிர்ந்து ஒருவரை, ஒருவர் பார்த்து கொண்டனர்.

 

“இந்தாரு? எஞ்சாமி என்ன பேச்சு புள்ள நீ பேசுற? உமக்கு என்ன குறை கண்ட. கோவில் சிலை கணக்கா இருந்துகிட்டு!… என்ன புள்ள இது?” என்றவன் தவித்துத் தான் போனான்.

 

 

 

 

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

கொண்டவன் கொடுத்தானடி – 7

கொண்டவன் கொடுத்தானடி - 7 மாலை பொழுதை எட்டி பிடிக்கக் காத்திருக்கும் தருணம் போலும்.குடும்ப மக்கள் அனைவரும் வாடிப்பட்டி மருது வீட்டின் முன் அமர்ந்திருந்தனர்.சுந்தரியின் ஒப்பாரி தவிர்த்து, அந்த இடமே அத்தனை அமைதியாக இருந்தது.அம்சவள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு கத்தி அழுது கொண்டிருந்தாள்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 2

  1. Jeyasurya Sபொதுக் கருத்துJeyasurya S

    சூப்பர் சூப்பர் பா❤️❤️❤️ waiting next episode come fast baby ❤️

    1. தனுஜா செந்தில்குமார்பொதுக் கருத்துதனுஜா செந்தில்குமார்

      thanks ma tmw i post next epi

உங்கள் கருத்தைப் பகிருங்கள்