அத்தியாயம் ஆறு
கல்லூரிக்குச் சென்ற நந்தினிக்கு என்ன செய்வதென்று முதலில் புரியவில்லை. வளர்மதியும் சித்ராவும் இருந்தாலாவது அவர்களிடம் ஏதாவது யோசனை கேட்டிருப்பாள்.
தோழிகள் நிறைய பேர் இருந்தாலும், அவர்களைத் தவிர மிகவும் நெருக்கமான தோழிகள் யாரும் அவளுக்கு இருக்கவில்லை. மற்ற தோழிகளிடம் எல்லாம் மேலோட்டமாக மட்டுமே பழகி அவளுக்குப் பழக்கம். சிறுவயது முதல் இந்த மூவர் மட்டுமே ஒரு குழுவாகத் திரிவது என்பதால், இந்தக் குழப்பமான நேரத்தில் என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் விழித்தாள்.
தந்தை டிசிக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லியிருக்க, மூன்று மாதம் மட்டுமே மீதமிருந்த படிப்போ அவளது ஏக்கத்தை அதிகப்படுத்தியது. அதையும் அவளது தந்தையிடம் சொல்லிப் பார்த்திருந்தாள்.
“அப்பா… மூணு மாசம் மட்டும்தாங்கப்பா இருக்கு. இந்த மூணு மாசம் மட்டும் வெயிட் பண்ணுங்கப்பா. இல்லைன்னா மூணு வருஷமா படிச்சது வீணா போயிடும்… ப்ளீஸ் பா…” என்று கெஞ்ச,
“ஏம்மா… அங்க உன்னை வேலைக்கு அனுப்பப் போறாங்களா? பொங்கிப் போடறதுக்கு இதுவே போதும். பெரிய படிப்பு படிச்சவனெல்லாம் மாப்பிள்ளையோட மில்லுல அவர்கிட்ட கைகட்டி சம்பளம் வாங்கறான். நீயென்ன இந்த பிசாத்து படிப்புக்கு இப்படிக் கூப்பாடு போடற…” ஒரே வார்த்தையில் முடித்து விட்டுச் சென்று விட்டார். ஆனால் தங்கப் பதக்கக் கனவில் இருந்த நந்தினிக்கு இது அதிர்ச்சியை கொடுத்திருந்தது!
“அட்டெண்டன்ஸ் வேணும்னா போடச் சொல்லிடறேன் நந்தினி. மூணு மாசம் கழிச்சு எக்ஸாம் மட்டுமாச்சும் அட்டெண்ட் பண்ணிடு. இப்போ போய் டிசி வேணும்ன்னு கேட்கறியே. உன்னை நாங்க கோல்டு மெடல் வாங்குவன்னு எதிர்பார்த்துட்டு இருக்கோம்மா…”
கல்லூரி முதல்வர் அவளது ஏக்கத்தை அதிகப்படுத்த, டிசிக்கு அப்ளை செய்வதற்காகக் கல்லூரி ஆபீஸ் அறைக்கு வந்தவள், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
அவளது இப்போதைய முடிவில் தான் அவளது வாழ்க்கையே அடங்கியிருப்பதாகப்பட்டது. வளர்மதிக்கு நடப்பது கட்டாயத் திருமணமல்ல, முதலில் பேசி வைத்தது தான். ஆனால் சித்ராவுக்குத் தன்னைப் போலவே கட்டாயத் திருமணமென்பதால், அவளுடைய மனநிலையும் மிகவும் மோசமாகத்தான் இருக்கும். அவளே அந்தச் சூழ்நிலையில் இருக்கும்போது தன்னுடைய குழப்பத்திற்கு என்ன முடிவு சொல்லிவிடக்கூடும்? இருவரையும் அழைக்கப் பிரியப்படவில்லை அவள்.
சிறிது நேரம் யோசித்தவள், அந்த ஆபீஸ் போனிலிருந்து சக்தியின் எண்ணிற்கு அழைத்தாள். தான் செய்வது சரியா இல்லை தவறா என்றும் அவளுக்குப் புரியவில்லை.
“ஹலோ…” அவனது குரலைக் கேட்ட நந்தினி,
“ச… சக்தி… சக்திண்ணா… நான் நந்தினி…” பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் நந்தினி திணறிக் கொண்டிருக்க, மறுபுறமும் சிறிது மௌனமானது.
“சொல்லும்மா… ஏதாவது பிரச்சனையா?”
“இல்ல… எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. ஒரு அட்வைஸ் வேணும், அதான் கூப்பிட்டேன்…”
“சொல்லும்மா… என்ன ஆச்சு?”
“அப்பா டிசிக்கு அப்ளை பண்ணச் சொல்லிட்டாங்க. ஆனா எங்க பிரின்சிபல், அட்டெண்டன்ஸ் போட்டுடறேன் எக்ஸாம் மட்டும் வந்து எழுதிடு, இல்லைன்னா மூணு வருஷப் படிப்பு வீணாகிடும்ன்னு சொல்றாங்க. அதான் என்ன செய்யறதுன்னு புரியல…” மௌனமாகக் கேட்டவனுக்கு மனதின் ஓரத்தில் மகிழ்வாக இருந்தது. ஒரு ஜீவன் அவனிடம் யோசனை கேட்பது ஒன்றே அவனது மகிழ்வுக்கான காரணமாகப் போதுமானதாக இருந்தது.
“இப்போ என்ன நான் செய்யட்டும்?”
“டிசி அப்ளை பண்ண வேணாம்மா. உங்க அப்பா கேட்டா பண்ணிட்டேன்னு சொல்லிடலாம். டைம் இருக்குல்ல, அந்தப் பையனை கன்வின்ஸ் பண்ணி எக்ஸாம் எழுதிடலாம் இல்லையா…” அவளுக்கு அது சரியாகப் பட,
“சரிங்கண்ணா… ரொம்ப தேங்க்ஸ். பயங்கர குழப்பத்துல இருந்தேன்…”
“கவலைப்படாதம்மா… எது நடக்கணும்ன்னு இருக்கோ அது மட்டும் தான் நடக்க முடியும். அதை மட்டும் நம்பு!” இந்த வார்த்தைகளே அவளுக்கு இப்போதைக்கு போதுமானதாக இருந்தன. பேசிவிட்டு வைத்தவளுக்குப் புதியதாகப் பலம் வந்தது போல இருந்தது!
அன்று மாலை கட்டிடப் பணிக்காகச் சிமெண்ட் அவசரமாகத் தேவைப்பட, செந்திலை மினி லாரியில் அந்தப் பணிக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் காலேஜ் டிரிப்புக்கு வந்திருந்தான் சக்திவேல். யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் வந்த நந்தினியைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர் உடன் இருந்த அவளது தோழிகள்.
எப்போதும் சோழியை குலுக்கி விசிறியது போல லொடலொடவெனப் பேசிக்கொண்டே வருபவள் மெளனமாக வந்தால்… ஆனால் யாருக்கும் பதிலளிக்கும் மனநிலையில் இல்லை அவள். அனைவரையும் இறக்கி விட்டபின் வாங்கலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த டெம்போ டிராவலர்.
“என்னம்மா ஆச்சு?” டிரைவர் சீட்டில் இருந்தபடியே சக்தி கேட்க, “நீங்கச் சொன்ன மாதிரி டிசிக்கு எழுதிக் கொடுக்கலை…” சோகமாகவே கூற,
“அதுக்கு எதுக்கு கலெக்டர் மேடம் இப்படி சோகமா இருக்கீங்க?” புன்னகையோடு அவன் கேட்க, அவனா இவன் என்று வியப்பாகப் பார்த்தாள் நந்தினி. அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பார்த்தால் அவனை நன்றாகப் பார்க்க முடியுமாதலால், அவனது சிரித்த முகம் அவளுக்கு வியப்பைத் தந்தது.
“ஏன்மா அப்படிப் பார்க்கற?” அதே புன்னகையோடு சக்திவேல் கேட்க,
“இல்ல… உங்களுக்குச் சிரிக்கவெல்லாம் தெரியுமா?” அதே பார்வையோடு கேட்டாள். ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த சக்திவேல்,
“கலெக்டர் மேடம் கல்யாணமாகிப் போகப் போறீங்க… அப்புறம் கலெக்டராவும் ஆகிட்டா நம்மளை எல்லாம் கண்ணு தெரியுமோ தெரியாதோ… எதுக்கும் இப்போவே ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வெச்சுக்கலாம்ன்னு யோசனைல இருந்தேன். அதுல கொஞ்சம் சிரிப்பு வந்துடுச்சு…” நீளமாகப் பேசியவனை இன்னும் ஆச்சரியமாகப் பார்த்தாள் நந்தினி!
“நீங்க இவ்வளவு பேசுவீங்களா?” வியப்பாகக் கேட்டவளை,
“சிரிக்கத் தெரியுமான்னு கேட்கற, பேசத் தெரியுமான்னு கேட்கற… இதெல்லாம் தெரியாமையா இருபத்தி ஒன்பது வருஷமா இருக்கேன்? என்னம்மா நீ?”
புன்னகையை கைவிடாத முகத்தோடு அவன் கூற, முதல் முறையாக அவனை ஒரு ஆணாகப் பார்க்க உந்தியது நந்தினியின் உள்ளம். வசீகரமான அந்தப் புன்னகை அவனுக்கு அவ்வளவு அழகாகப் பொருந்திப் போக, இவன் ஏன் சிரிப்பதே இல்லையென ஒரு நிமிடம் ஆராயத் தோன்றியது.
அவனது உயரத்தையும் உடற்கட்டையும் அந்தப் புன்னகை தவழும் முகத்தையும் கண்டவளுக்குள் மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு. அந்த உணர்வு அவளைச் சிலிர்க்க வைத்தது.
அவளாகச் சென்று எப்போதும் செந்தில் அமரும் இருக்கையில் அமர்ந்தாள்.
“என்ன கலெக்டரம்மா பேசவே மாட்டேங்கறீங்க…” புன்னகை மன்னனாக அவன் கேட்க, அந்த வசியப் புன்னகையில் தனது உள்ளம் பறிபோவதை அந்த நொடியில் உணர்ந்தாள் நந்தினி.
“நீங்க பேசறீங்க இல்லையா… அதான் நான் வாயடைச்சுப் போயிட்டேன்…” என்று கூறிவிட்டு, “சும்மா சும்மா இப்படிக் கிண்டல் பண்ணாதீங்க…” வெட்கப் புன்னகையோடு அவள் கூற,
“எப்படி?”
“கலெக்டர் கலெக்டர்ன்னு… ப்ளீஸ்…” அவளைத் திரும்பிப் பார்த்த சக்திவேல், புன்னகையோடு,
“நம்ம கிட்ட இருக்கவே கூடாத ஒன்னு இருக்கு. அது என்ன தெரியுமா?” அவளைக் கேட்க, இருக்கவே கூடாததா என்று யோசித்தாள். தெரியவில்லை என்று தலையாட்ட,
“நெகட்டிவ் தாட் தான்ம்மா. நாம இப்படி ஆகணும்ன்னு நாம முடிவு பண்ணிட்டா கற்பனைல அதுவாகவே ஆகிடணும். ஜேம்ஸ் ஆலன்னு ஒரு ஆத்தர் சொல்லியிருக்கார், ‘The outer conditions of a person’s life will always be found to reflect their inner beliefs’. அதாவது எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிடறோம். நீ கலெக்டராகணும்ன்னு நினைச்சுட்டே இரு, அதுக்கு உன்னோட ஃபுல் பொட்டென்ஷியலை போட்டுப் படி… கண்டிப்பா ஆகிடுவ…”
நீளமாக அவன் கூறி முடிக்க, அவள் வியப்பாகப் பார்த்தாள். ஒரு வேன் டிரைவருக்குள் இப்படியொரு எண்ணப்போக்கா? நம்பவே முடியவில்லை.
“ஜேம்ஸ் ஆலன் யாரு?” தெரியாத விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லையே என்று எண்ணிக்கொண்டு அவள் கேட்க, “ம்ம்ம்… அவர் ஒரு பிரிட்டிஷ் தத்துவஞானி. செல்ஃப் ஹெல்ப் மூவ்மென்டுக்கு முன்னோடி. ‘As a Man Thinketh’ அவரோட பெஸ்ட் செல்லர் புக்மா. நல்ல புக் படிச்சுப் பாரு… பெரும்பாலும் சுயமுன்னேற்ற புக்ஸ் தான் அவர் எழுதினது எல்லாம்…”
“எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுருக்கீங்க? என்ன படிச்சுருக்கீங்க?”
“ஏன்…” அவளைக் கேள்வியாகத் திரும்பிப் பார்த்தான்!
“இல்ல சொல்லுங்க… சும்மா தெரிஞ்சுக்கத்தான். படிக்கத் தெரியுமா இல்லையான்னு இன்னொரு முறை நான் கேட்டுடக் கூடாது இல்லையா…”
“ம்ம்ம்… ஏதோ ஓரளவு படிச்சிருக்கேன். விடும்மா… சரி உன்னோட ஆப்ஷனல் சப்ஜெக்ட்ஸ் என்ன? சொல்லு. எனக்குக் கிடைக்கிறதைக் கொடுக்கறேன். என் பிரண்ட் கூட சிவில் சர்வீஸ் அட்டெம்ப்ட் பண்ணிருக்காப்ல…” நழுவிக்கொண்டு பேச்சை மாற்றுவதைப் புரிந்து கொண்டவள் தலையாட்டிக் கொண்டாள்.
“அதுக்காகத்தான் நான் சென்னை போகணும்ன்னு நினைக்கிறேன். அங்க எம்எஸ்சி ஜாயின் பண்ணிட்டு கோச்சிங் சென்டர்ல சேரணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா…” அவளால் முடிக்க முடியவில்லை.
“எந்தச் சூழ்நிலைல இருந்தாலும் படிப்பு வரும்மா. அது நம்ம மனசைப் பொறுத்ததுதான். என்ன சூழ்நிலையோ அதுக்கேத்த மாதிரி உன்னை அடாப்ட் பண்ணிக்கோ…” அவளை வசியம் செய்து கொண்டிருப்பதை அறியாமலேயே அவன் பேசிக் கொண்டு இருந்தான்.
பேசிக்கொண்டிருந்த அவனை மொத்தமாக ரசிக்க ஆரம்பித்திருந்தாள் நந்தினி. சிரித்துக் கொண்டிருந்த விழிகள், அழுத்தமான உதடுகள், வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் அந்த வலிமையான கைகள்… அவன் கைகளில் தன் கை சிக்குண்டு கன்றியது நினைவுக்கு வர, நந்தினிக்கு குப்பென்று வியர்த்தது.
இந்த உணர்வுதான் சித்ராவுக்கும் வந்திருக்குமோ என்று யோசித்தாள், உடனே அவசரமாக அழிக்கவும் செய்தாள். இது போன்ற விஷயங்களில் அடுத்தவரை ஒப்புமைப்படுத்துதல் தவறு என்று புத்தி சொன்னது.
தனது இந்த எண்ணப்போக்கு சரியா என்று அவளால் உணர முடியவில்லை. இது மறைந்து கலைந்து போகும் உணர்வுகளாக இருக்கக் கூடுமோ? இருக்கலாம்… ஆனால் இந்த உணர்வை வெறும் ஈர்ப்பு என்று அவளால் வகைப்படுத்த இயலாதபோது, சித்ரா சக்தியைக் காதலிப்பதை நினைத்து மனம் குற்ற உணர்ச்சியின் பால் வசப்பட்டது.
சட்டென்று சடன் பிரேக்கில் நின்ற வாகனத்தால் தன்னுணர்வு அடையப் பெற்றவள், நிமிர்ந்து என்னவென்று பார்க்க, சக்திவேல் யோசனையாகச் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்… அதிர்ச்சியோடு!
சாலையில் போக்குவரத்து இல்லாததால் வேகமாக வந்த லாரியில் சட்டென்று திரும்பிய இருசக்கர வாகனம் சிக்கியிருக்க, அதில் பயணம் செய்த மூவரும் தூக்கி எறியப்பட்டுக் கிடந்தனர். நந்தினி அந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் ஐயோவெனக் கண்களை மூடித் தன் முகத்தை மறைத்துக் கொள்ள, சக்திவேல் அவசரமாகத் தனது இருக்கையை விட்டு இறங்கினான்.
இடித்த அந்த லாரிக்காரனும் இறங்கியிருக்க, இருவருமாக அந்த மூவருக்கும் சுவாசம் இருக்கிறதா என்று பார்த்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போன வாகனங்களிலிருந்து இறங்கி ஒவ்வொருவராகப் பார்க்க, அரசு பஸ்சும் நிற்க, கூட்டம் சேர ஆரம்பித்தது.
“யோவ்… கண்ணை என்ன பொடனில வெச்சுக்கிட்டா ஓட்டுன? இல்ல தண்ணில இருக்கியா?” சக்திவேல் கடுமையாக அவனைக் கேட்க.
“தம்பி… திடீர்ன்னு வந்து விழுந்துட்டாங்க…” அவனுமே பயந்திருந்தான்.
“ஆமா அவங்களுக்கு வேண்டுதலாக்கும்?” பக்கத்தில் இருந்த பஸ் டிரைவரும் சேர்ந்து கொள்ள அந்த இடத்தில் பதற்றம் சூழ்ந்தது. லைசென்ஸ், ஆர்சி புத்தகம் என அனைத்தையும் பறிமுதல் செய்தவன், அவசரமாகக் காவல் நிலையத்திற்கு அழைத்தான், நடந்ததைக் கூறினான்.
“சார்… மூணு பேருக்கும் உயிர் இருக்கு. நாங்க எங்க வேன்லையே கொண்டுட்டு போறோம். என்ன பார்மாலிட்டினாலும் நீங்க பார்த்துக்கங்க சார்…” என்று கூறி வைத்து விட்டு அங்கிருந்தவர்களை அழைத்தான்.
இரண்டு பெண்களையும் அந்த ஆணையும் அங்கிருந்தவர்கள் தூக்கி வேனில் வைக்க, உடன் அவர்களும் உதவிக்கு வர, நந்தினி இன்னும் இறக்கிவிடப்படாமல் இருப்பதை உணராமல் வேன் கரூர் அரசு மருத்துவமனையை நோக்கிப் பறந்தது.





