அத்தியாயம் 31
அன்று மதுவின் முகம் மிகத் தெளிவாக இருந்தது. காலையிலேயே குளித்து முடித்து, பார்த்திபனுக்கு பிடித்த அந்த சிகப்பு நிற புடவையை உடுத்திக் கொண்டு தயாராகி இருந்தாள்.
டிஃபன் சாப்பிட கீழே வந்தவனுக்கு ஆச்சரியம். கல்லூரி போக, புடவை உடுத்தியதில்லை அவள்!
“ஏய் என்னடி… புடவைல கலக்கற?” என்று கேட்டபடி இருக்கையில் அமர, அவனுக்கு பரிமாறிவிட்டு, தானும் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.
இப்போது மனைவிக்கு பரிமாறுவது கணவனின் முறையானது!
“போலீஸ் ஸ்டேஷன் போலாம் மாமூ…” நிர்சலனமான முகத்தோடு அவள் கூற,
“அப்படியா…” என்றவன், குறும்புப் புன்னகையோடு, கையிலிருந்த ரிமோட்டை கொண்டு டிவியை ஆன் செய்ய, பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது.
“ரதீஷ், வயது 26, சஞ்சய் வயது 25. இருவரின் மேலும் இருந்த கற்பழிப்பு குற்றசாட்டை விசாரிக்க வேண்டி காவல்துறை அவர்களை காவலில் எடுத்து இருந்தது. போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்து, அவர்களிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவர்களை சுட்டதால், வேறு வழியின்றி, காவல் துறை அதிகாரிகள், அவர்களின் சொந்த பாதுகாப்புக்காக அவர்களை சுட்டுக் கொன்றனர்.
இதில் சஞ்சய் அமைச்சர் ஜெயச்சந்திரனின் மகனாவார். சமீபத்தில் நடந்து முடிந்த, கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் சாட்சி கூற யாருமில்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கை நேரடியாக கண்காணித்த மாவட்ட ஆட்சியர் நந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது! டிவிட்டரில் ஹாஷ்டாக் நந்தினி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.”
சேனலில் செய்தியை படித்து முடித்தப் பிறகு, “இந்த ரெண்டு பேரையும் என்கவுன்ட்டர் பண்ணது சரியா தப்பா?” என்ற கேள்விக்கு,
“இவனுங்களையெல்லாம் அங்கேயே சுட்டுத் தள்ளனும் சார். எதுக்கு விசாரணை எல்லாம்? அந்த வீடியோல பாத்தப்பவே ரத்தம் கொதுச்சுது. ஒவ்வொரு பொண்ணும், அண்ணா என்னை விட்டுடுங்க அண்ணான்னு கதறினப்ப இவனுங்க இரக்கம் காட்டினானுங்களா? இல்லையே! அந்த கேசையே இல்லாம ஆக்கிட்டாணுங்களே. கேஸ் போட்டு சட்டம் தன் கடமையை செய்யும்ன்னு பொறுமையா இருக்கறது வேஸ்ட். அப்பப்பவே தண்டனை கொடுக்கணும். இப்ப கலெக்டர் சரியான ஆர்டர் கொடுத்து இருக்காங்க. இனிமே இன்னொரு பொண்ணை தொடனும்ன்னு நினைக்கறவன் கதறனும்…” ஒரு பெண் ஆவேசமாக கூற, சுற்றி இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இது போலவே மற்ற அனைவரின் கருத்துக்களும் இருக்க, அந்த அந்த ராட்சசர்களின் இறப்பை தீபாவளியாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
உறைந்துப் பார்த்துக் கொண்டிருந்த மதுவின் முகத்தில் அத்தனை சந்தோஷம். அத்தனை மகிழ்ச்சி. முகம் விகசிக்க பார்த்துக் கொண்டிருந்தவளின் கையை பிடித்து, எதையோ கொடுத்தான் பார்த்திபன்.
கையை விரித்து பார்க்க, அது பென்டிரைவ், சிம் கார்டுகள்!
“கிளவுட்ல இருந்ததை எல்லாம் நந்தினி டெலீட் பண்ணியாச்சு. இது மாஸ்டர் காப்பி. வேற எங்கயாவது ஸ்டோர் பண்ணி இருக்கானுங்களான்னு அவங்க பெர்சனலா பார்த்துட்டு இருக்காங்க.” என்று வெகு இயல்பாக கூற, அவனை ஆச்சரியமாக பார்த்தாள். கண்களில் ஆனந்த கண்ணீர்!
“நேத்து உன்னை கூட்டிட்டு வந்தப்பவே, போலீஸ் ஸ்க்வாட் அவனுங்களை தூக்கிடுச்சு. நைட் நானும் ஸ்பாட்டுக்கு போனேன் மது…” என்று அவன் கூறுகையில் ஆச்சரியம் தாளவில்லை அவளால்.
“பென்டிரைவ், போன் மட்டும் நான் எடுத்துட்டு வந்துட்டேன். மத்ததை எல்லாம் நந்தினி டிஸ்போஸ் பண்ணிட்டாங்க..”
“நந்தினி ரொம்ப கிரேட் மாமூ. ஷி இஸ் என் இன்ஸ்பிரஷன்…”
“எஸ்..”
“ஆனா எப்படி மாமூ? இப்படி இருக்கீங்க?” முகம் விகசிக்க அவள் கேட்க,
“உன்னை அழ வெச்சவனை நான் சும்மா விடுவேனாடி பொண்டாட்டி?” என்று புன்னகைத்தான்!
சாப்பிடுவதை விட்டு, எழுந்தவள் கை கழுவ,
“ஏய் சாப்பிடுடி…” என்று புன்னகையோடு பார்த்திபன் கூற,
“எனக்கு பசிக்கல மாமூ. எல்லாமே நிறைஞ்சு போச்சு…” என்று கண்ணீரோடு கூறியவள், “ஆனா இந்த மிருகங்களுக்கு இந்த பனிஷ்மெண்ட் தான் சரி…” தனக்குள்ளாக கூறினாளா, கணவனிடம் கூறினாளா? அவளே அறியவில்லை. ஆனால் மனம் நிறைந்திருந்தது!
பார்த்திபன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ஐ லவ் டா மாமூ…”
“ம்ம்ம்… எனக்கு கேக்கல…”
“ஐ லவ் யூ…” இன்னும் கொஞ்சம் சப்தமாக கூற,
“ம்ஹூம்… கேக்கல…”
“ம்ம்ம்.. போடா பக்கி…” என்றவள், தப்பித்து ஓட முயல, அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், முரட்டுத்தனமாக அவளது இதழ்களை கைப்பற்றினான்.
அவனது அணைப்பின் கதகதப்பில் மது அப்படியே ஒடுங்கினாள். அந்த முத்தத்தில் வலி இல்லை; கசப்பான கடந்த காலத்தின் சுவடுகள் இல்லை. கணவன் தன் மனைவியின் காயங்களுக்குத் தரும் மருந்தாக, அந்தத் தருணம் நீண்டு கொண்டே போனது. இனி மதுவுக்குப் பயமில்லை… அவளது உலகம் இப்போது அவனது கைகளுக்குள் பத்திரமாக இருந்தது!
பார்வை போகிற தூரம் நீ இன்றி யார் வேண்டும்!
பாவை ஊன் உயிர் எங்கும் உன்னோடு ஒன்றாகும்!
ஒரு கரை நீயாக மறு கரை நானாக –
கரை புரண்டே ஆறாகினோம்!
*****
“பார்த்தி… கிணத்துக்குள்ள நீ மட்டும் இறங்கு… புள்ளய இறக்கி வுற்றாத… புரியுதா?”
தோட்டத்திலிருந்த கிணற்றுக்கு குளிக்க போகிறேன் என்று பார்த்திபன் கூறியதிலிருந்து நான்காவது முறையாக கூறிவிட்டார் சகுந்தலா.
அவருக்கு பயம்!
இந்த பெண்ணுக்கு பயம் என்பதே கிடையாது என்பது தெரியும். மனைவிக்கு என்றால் பார்த்திபன் நன்றாகவே ஜால்ரா தட்டுவான் என்பதும் தெரியும். அதை கொண்டு, மது கிணத்துக்குள் இறங்கி வைத்துவிட போகிறாளோ என்று பயந்து கொண்டுதான் கூறினார்.
இருவருமாக தோட்டத்துக்கு போவதாக கூறியதிலிருந்து தான் இந்த ராமாயணம். முதலிலெல்லாம் அவனுடைய செட் பையன்கள் எல்லாம் சேர்ந்து கொள்வார்கள்! அதில் மாமன் மச்சான், அண்ணன் தம்பி என்று அனைவரும் அடக்கம். எல்லாருமாக சேர்ந்து போகும் போது, கச்சேரி களை கட்டும்.
இப்போதெல்லாம் இருவர் மட்டும் தனியாக!
தான் மட்டும் போவதாக கூறியபோதும், பிடிவாதமாக தானும் வந்தேயாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று சாதித்துக் கொண்டாள் மது!
“நீ பம்பு செட்ல வேணா குளி. என்கூட கிணத்துல இறங்கிடலாம்ன்னு கனவு காணாத…” சகுந்தலா முன்னே அவளைக் கடித்தாலும், அவளில்லாமல் பார்த்திபன் கிணத்துக்குள் இறங்கி விடுவானா என்ன?
குறும்பாக கண்ணை சிமிட்டியவள், உதட்டை மடித்து புன்னகைக்க, அவளது கணவனுக்கு கிறுக்குப் பிடித்துக் கொண்டது.
அவள் இப்படி செய்யும் போதெல்லாம் அவன் பாடு திண்டாட்டம் தான்!
திருமணமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது ஆனாலும் அந்த மயக்கமும் கிறக்கமும் சற்றும் மாறவில்லை இருவருக்குள்ளும்!
மது படித்துக் கொண்டிருந்தாள்.
நடுவே மாடலிங்கும் போய்க் கொண்டிருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த விளம்பரங்களை மட்டும் ஒப்புக் கொண்டு செய்து கொடுப்பாள். மற்றபடி, ராம்ப் வாக்கை தவிர்த்து விட்டாள் அவளாகவே! அவளது எதிர்காலத் திட்டம் ஒரு விளம்பர கம்பெனி. அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள். கண்டிப்பாக செய்து விடுவாள் என்ற தைரியம் அவளுக்கு இருக்கிறதோ இல்லையோ… அவளது கணவனுக்கு இருந்தது.
காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவிலும் கைக்கொடுத்தாக வேண்டுமா என்ன? அவனும் அவளுக்கு கொடுக்கலாமே!
கைக்கொடுத்தான்… கொடுக்கிறான்… இனியும் கொடுப்பான்!
ஷாலினி இப்போது விஸ்காம் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளால் மாடலிங்கில் எதிர்நீச்சல் போட்டு ஜெய்க்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு ஏமாற்றங்கள் ஏதுமில்லை. அவளது திட்டம், ஒரு மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்க வேண்டும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம். அவளும் போராடுவாள்!
ஷிவானி இப்போது பிரபலமான நடிகை, டாப் மாடலும் கூட! இவளை போன்ற நரிகள் தங்கள் இருப்பை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று ஒரு பெரிய சுற்றாக சுற்றிக் கொண்டிருக்கிறாள். பத்தொன்பது வயதிலேயே தனக்கு இதுதான் தேவை என்று முடிவு செய்து கொண்டு, அதற்கு எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுத்து போகலாம் என்று அவள் முடிவெடுத்த பின், சரி தவறென்று யார் கூறுவது?
நந்தினிக்கு இப்போது சென்னையில் போஸ்டிங். வருடத்துக்கு ஒருமுறை மாற்றல் வருவது வாடிக்கையாகி இருந்தது. காரணம் அவளது நேர்மை! அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் தோள் கொடுக்க சக்திவேலோடு, இப்போது தோழனாக பார்த்திபனும் இருக்க அவளுக்கென்ன கவலை?
அவளது வாழ்க்கை சக்திவேலோடு மிகப் பிரமாதமாக போய்க் கொண்டிருந்தது. ஜெயசந்திரன் தான் அவள் மேல் வஞ்சம் வைத்து காத்திருந்தார். ஆனால் பின்னால் இருப்பது பார்த்திபன் என்று அறிந்தவுடன் மனிதர் மௌனமாகி விட்டார். முதலிலேயே அவனிடம் எவ்வளவோ கெஞ்சித்தான் மகனை காப்பாற்ற முடிந்தது. இப்போது அதை அறியாமல் மீண்டும் மது மேல் கைவைத்ததால் மகனுக்கு வந்த நிலை என்பதை தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டார்.
பார்த்திபன் கிணத்துக்குள் குதிக்க தயாராகிக் கொண்டிருக்க, அவனது செல்பேசி அழைத்தது. எப்போதும் போல அவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது!
உடற்பயிற்சியால் இறுகிய உடல். நரம்புகள் புடைத்த கைகள். அந்த கைகளுக்குள் சிக்கிய கணங்களெல்லாம் அவளது நினைவில் வந்து போக, முகம் சிவக்க அவனைப் பார்த்தாள்.
செல்பேசிக்கு காதை கொடுத்திருந்தவன், கண்களை மனைவி மேல் வைத்திருக்க, அவனது முகம் யோசனையால் சுருங்கியது!
பேசி முடித்தவன், அவளருகில் வர, அம்மாச்சி
“என்ன மாமூ? என்னாச்சு?” என்னவாயிற்று என்ற பயம்.
“ஒரு பெரிய ஆர்டர். இனிமே கொஞ்சம் பிஸியா இருப்பேன். அதான் என்ன பண்றதுன்னு தெரியலடி பொண்டாட்டி..!”
“ஷப்பா நான் ஃப்ரீயா இருப்பேன்…” கேலியாக கூற, அவளுக்கு நெருக்கமாக வந்தவன், அவளது இடையை வளைத்து தன்னோடு சேர்த்து கொண்டான்.
“ஸ்ஸ்ஸ்ஸ்… மொரட்டு கை… விடு மாமூ…” அவனது கையை விலக்க முயல… அவனது பிடி இன்னமும் இறுகியது.
“ஏன்டி ஃ பிரீயா விடறதுக்கா உன்னை கட்டுனேன்?”
“பின்ன வேற எதுக்காம்?” குறும்பாக உதட்டை சுளிக்க, அவளது உதட்டை பற்றியவன்,
“இப்படி பண்ணியே என்னை உசுப்பேத்தி விட்டுட்டு இருக்க…” என்றபடி அவளிடம் இன்னும் கொஞ்சம் நெருங்க முயல, அவனை அவசரமாக தள்ளிவிட்டவள்,
“யோவ் மாமா… உனக்கு பப்ளிக்ல ரொமான்ஸ் கேக்குதா?” என்று சிரித்தபடி தப்பிச் செல்ல,
“ஒழுங்கா வந்துடு… இல்லைன்னா உனக்குத்தான் சேதாரம் அதிகம்…” கொஞ்சுவதை கூட மிரட்டலாக செய்யும் முரடனவன்!
“பேபிக்கு ஓகே சொல்லு… நான் வர்றேன்…” அவனிடம் பேரம் பேசியவளை, காதலாக பார்த்தவன்,
“ஓகே…” என்று புன்னகையோடு கூற,
“யாஹூஊஊஊ…” பாய்ந்து சென்று பார்த்திபனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள், மது!
‘க்கிட்ட கவிதை மரபுக் கவிதை
இவள் மரபுகளை மீறிய புது கவிதை!’
அந்த கவிதைக்கு சொந்தக்காரன் இவன்!
இனியெல்லாம் சுகமே!






Super story
நன்றி