அத்தியாயம் 27
மொத்தமாக இருபத்தி ஐந்து நாள் கழித்து திவ்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட… டாக்டர் ஜானகியும் அவளை முழு பரிசோதனை செய்ய ஜிப்மர் வந்திருந்தாள்! திவ்யா குடும்பத்திலும் சரி கார்த்திகேயன் குடும்பத்திலும் சரி ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்து கொண்டே இருந்தாலும் முழு நேரமும் திவ்யாவை கவனித்து கொண்டது அதாகப்பட்டது மற்றவர்களை பக்கத்தில் விடாமல் அவளை தான் மட்டுமே தாங்க வேண்டும் என்று சதி வேலை பல செய்தது வேறு யார்? கார்த்தி தான்!
“ஹேய் கியூட்டீ… ஹவ் டூ யு பீல் நொவ்…” ஸ்டேட்த்தை தோளில் போட்டவாறே திவ்யாவின் நாடியை பிடித்து பார்த்து கொண்டிருந்தாள் ஜானகி!
“பைன் ஜானுக்கா… ஏன் ஒரு வாரமா இங்க வரல…” கேள்வியாக வினவினாள் திவ்யா!
“கிளினிக்ல எக்கச்சக்க வேலை திவி… இவனை மாதிரி கண்ணை காட்டினா வேலை செய்ய ஆயிரம் பேரெல்லாம் என் கிட்ட இல்லையே… என்னடா பண்றது?” சிரித்து கொண்டே அங்கே அமர்ந்திருந்த கார்த்தியையும் சேர்த்து வாரினாள்!
“ஏங்க அம்மணி… அப்படீன்னா கண்ணை மட்டும் காட்டுற சோம்பேறின்னு சொல்லாம சொல்றீங்களா?” பதிலுக்கு நக்கல் அடித்தவனை புன்னகைத்து கொண்டே பார்த்து…
“ஏங்க அய்யா… இந்த நக்கல் விக்கலெல்லாம் இத்தனை நாளா எங்க ஒளிச்சு வைச்சுட்டு இருந்தீங்க…” என்று கண்ணை சிமிட்ட…
“அதுவா… கொஞ்ச நாள் ஊர் சுத்திட்டு வரேன்னு பர்மிஷன் கேட்டுச்சு டாக்டரம்மா… சரி போனா போகுதுன்னு பர்மிஷன் கொடுத்து அனுப்பி வைச்சேன்…” சிரிக்காமல் சொன்னவனின் முதுகில் ஒரு அடி வைத்து திவ்யாவிடம்…
“இந்த பாவி இப்போ இப்படி பேசறான்… சந்தோஷமா இருக்கு டா இருபது நாள் முன்ன பார்க்கணுமே… காண சகிக்கல… சாப்பாடு தூக்கமே இல்லாம திவ்யா மந்திரம் தான் சஹஸ்ரநாமம் அஷ்டோத்திரம் மாதிரி ஜெபிச்சுட்டு இருந்தான் திவி… ரியலி யூ ஆர் கிப்டட் டா…” உணர்ந்து கூறிய ஜானகியிடம்…
“ஆமா ஜானுக்கா… நீங்க சொல்றது கரெக்ட் தான்… ஐம் கிப்டட் கா…” கார்த்திகேயனை பெருமையாக பார்த்து கொண்டே அவள் கூற… அதை கவனித்த ஜானகி…
“கார்த்தி… நீ எதுக்கு எல்லாரையும் விரட்டி விட்டுட்டு தனியா திவிய பார்த்துக்கறேன்னு சொன்னன்னு இப்போ தான் புரியுது…” சிரித்து கொண்டே…
“அடப்பாவி… சொல்றத ஒழுங்கா சொல்லு ஜானு… நான் விரட்டி எல்லாம் விடல… என் பொண்டாட்டிய பார்த்துக்க நான் போதும்ன்னு தான் சொன்னேன்…” சிரிக்காமல் அவன் கூறவும்…
“யாரோட டிஸ்டர்பன்சும் இல்லாம ஹாஸ்பிட்டல்ல ரொமான்ஸ் பண்ற ஒரே ஆள் நீயா தான் இருப்ப…” ஜானகியும் சிரித்து கொண்டே கூறினாள்…
“அபச்சாரம் அபச்சாரம்… என்ன வார்த்தை சொல்லிட்ட ஜானு… என் ஆளுக்கு இங்கிலிபீசுல பிடிக்காத ஒரே வார்த்தை ரொமான்ஸ்… அதை போய் அவ முன்னாடி சொல்றியே…” நெஞ்சை பிடித்து கொண்டு நடித்தவன் திவ்யாவிடம் அடி வாங்கி கொண்டு…
“இங்க பாரு திவி… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்… அதை விட்டுட்டு வன்முறைல இறங்க கூடாது… சொல்லிட்டேன்…” மிகவும் சீரியசாக சொல்வது போலவே அவன் கூறவும் ஜானகியும் திவ்யாவும் மனம் விட்டு சிரித்தனர்!
“ஜானுக்கா… குழந்தைய டெஸ்ட் செய்தீங்களா? ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே…” சாதாரணமாக ஜானகியிடம் கேட்ட திவியை வித்யாசமாக பார்த்தாள் ஜானகி… அதன் பின் கார்த்தியிடம் திரும்பி…
“கார்த்தி… திவ்யா கிட்ட சொல்லலையா?”
“ம்ஹூம்… இல்லப்பா…” முகம் இறுக மறுதலித்தான்! இருவரையும் குழப்பமாக பார்த்த திவ்யாவை பெருமூச்சோடு ஒரு ஆழ பார்வை பார்த்த கார்த்தி… ஜானகியிடம் திரும்பி…
“நீயே சொல்லிடுப்பா…” மெல்லிய குரலில் கூறினான்! செல்பேசி அழைக்கவே வெளியே விரைந்தான்!
“என்னக்கா…” குழப்பமாக திவி ஜானகியிடம்!
“ஒன்னும் இல்லடா… ஆக்சிடென்ட்ல உனக்கு அபார்ஷன் ஆய்டுச்சும்மா… வேற ஒன்னும் இல்ல…” சாதாரணமாக கூறிவிட்டு செல்வது போல ஜானகி கூற அதிர்ச்சியாக பார்த்தாள் திவ்யா…
“என்ன ஜானுக்கா…”
“ஹேய்… இதில என்னம்மா இருக்கு… இது ஒரு பெரிய விஷயமே இல்லையே… நல்லா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு… யு வில் பீ ஆல்ரைட்… ஒரு வருஷம் போகட்டும்… ஓகே வா திவ்யா…” சாதாரணமாக அவள் கூற அதை ஜீரணம் செய்வதற்கு திவ்யாவுக்கு நேரம் தேவைப்பட்டது! அவள் கல்லாக சமைந்து அமர்ந்திருப்பதை பார்த்த ஜானகி…
“திவி… என்னடா… கார்த்தி முகத்துல இப்போ தான் சிரிப்பையே பார்க்க முடிஞ்சது… நீ ஐசி ல இருந்தப்போ மனுஷன் நடை பிணமாத்தான் இருந்தாப்ல… இப்போ இதுக்கு நீ இந்த அளவு கஷ்டபட்டா இன்னும் அவன் தான் பீல் பண்ணுவான் திவி… டேக் இட் ஈசி…” அவளை வேறு வழியில் மாற்ற முயற்சித்தாள் ஜானகி! பேசி கொண்டிருக்கும் போதே மங்கை, வைஷ்ணவி, ஸ்ரீராம், திவ்யாவின் பெற்றோர் என்று அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வர… ஒருவர் மாற்றி ஒருவர் பேச திவ்யா ஒருவாறாக அவர்களுக்குள் கலந்தாள்…
ஸ்ரீராமுடன் சாஹித்யா வந்தது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது… இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது தெரியுமென்றாலும் இருவரின் சந்தோஷத்தை நேரில் பார்க்கும் போது மனம் லேசானது… ஆனால் கண்கள் என்னவோ கார்த்திகேயனை துழாவி கொண்டிருந்தது!
***
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் கார்த்திகேயனிடம் எதுவும் பேசாமல் மௌனமாகவே வந்தாள்… அதுவரை அவனிடம் வாயடித்து கொண்டிருந்தவளின் மௌனத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை… குழந்தை விஷயத்தினாலா இல்லை வேறேதுவுமா என்றும் அவனால் முடிவுக்கு வர முடியாமல் தவித்து அவ்வப்போது அவனது மனைவியின் முகத்தை பார்த்தவாறே வாகனத்தை செலுத்தினான்! வைஷ்ணவி ஆரத்தி எடுத்து வரவேற்ற போதும் யாரும் அவளுக்கு எந்த தொல்லையும் கொடுக்க கூடாது என்று மங்கை தனது மருமகளை ஓய்வெடுக்க கூறினார்!
ஒன்றுமே பேசாமல் அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்து மௌனமாகவே விட்டத்தை பார்த்து கொண்டிருந்தவளை பார்த்தபோது மனதுக்குள் சிறிது கலவரமாக… தோளில் கை வைத்து…
“திவி… என்னடா…” குரலில் தனது காதலை எல்லாம் தேக்கி கார்த்தி அழைக்க… சேர்த்து வைத்த துக்கம் அனைத்தும் வெடித்தது திவ்யாவுக்கு! வாய் விட்டு கதறியவளை சமாதானப்படுத்த முடியாமல் தவித்தான்!
“ஹேய்… என்னடா குட்டி… ஏன் இப்படி அழற… வேணாம்மா… அழ கூடாது… ப்ளீஸ் கண்ணா… சொன்னா புரிஞ்சுக்கோடா செல்லம்… இப்போ தலைவலி வர கூடாதும்மா… தங்கமில்ல… ப்ளீஸ்…” பூமுகத்தை பற்றி கெஞ்சி கொண்டே இருக்க அவளது அழுகை நிற்ப்பேனா என்றது!
“நான் தான் காரணம் கார்த்திக்… நான்தான்…” தேம்பி கொண்டே திவ்யா கூற…
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா… நீ எதுக்குடா அழற?”
“இல்ல… நான் தான் அச்சானியமா குழந்தைய அபார்ஷன் பண்ணிடுவேன்னு சொன்னேன்… அதான்…” முகத்தை மூடி கொண்டு கதறியவளை இழுத்து அணைத்து கொண்டான்… தன்னுடைய மனஅழுத்தங்கள் எல்லாம் ஒரே நொடியில் கரைந்து காணமல் போயின… காற்று கூட நுழைய முடியாமல் போனது அவனது அந்த இறுக்கமான அணைப்பில்! நான் இருக்கிறேன் உனக்காக… உனது துக்கம், சந்தோஷம், லட்சியம், எதிர்பார்ப்பு, ஆசை, நேசம் என்று அனைத்திலும் கை கொடுக்க உன்னுடைய உயிராய் என்னில் நீ வசிக்க… நான் இருக்கிறேன் என்பதை ஆத்மார்த்தமாக அறிவித்தது அந்த சில கணங்கள்!
நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை!
உன்னை கை விடுவதும் இல்லை!
அந்த அணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தனது துக்கத்தை தொலைத்தவள் அந்த பரந்த மார்பின் தின்மையில் கரைந்து போனாள்! முதலில் சுதாரித்தவன் கார்த்திகேயன் தான்… மென்மையாக அவளை விளக்கி நிறுத்தியவன்… அவளது கண்களை பார்த்து…
“இப்போ உனக்கு நான் குழந்தை… எனக்கு நீ குழந்தை… ஓகே வா திவிகுட்டி… நோ கிரையிங்… என் செல்லக்குட்டி தானே…” என்று அவளது கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்ச… அந்த கைகளை அங்கேயே பிடித்து வைத்து கண்களில் நீர் சூழ அவனது கைகளை முத்தமிட்டு அவனை அணைத்து கொள்ள… கண்களை மூடி இருவருமே அந்த ஏகாந்தத்தை அனுபவித்தனர்! அணைப்பு எவ்வளவு நேரம் நீண்டதோ? யாமறியேன் பராபரமே!
செல்பேசி அழைக்க… சட்டென்று தன்னிலைக்கு திரும்பிய இருவரின் முகமும் சிவந்து இருந்தது… அந்த நேரத்தின் தடுமாற்றம் இருவரிலும் பிரதிபலிக்க வெட்கபுன்னகையோடு அவளை பார்த்து கொண்டே செல்பேசியை காதுக்கு கொடுத்தான்! பேச பேச முகம் மாறியது…
“எப்போ…”
“…”
“சரி… நான் உடனே வந்துடறேன்…”
“…”
“ஓகே…”
செல்பேசியை வைத்து விட்டு திவ்யாவை பார்த்தவனது முகம் இரும்பாக இறுகி கிடந்தது…
“என்ன ஆச்சு கார்த்திக்… எனிதிங் சீரியஸ்?” சிறிது பயத்தோடு திவ்யா கேட்க…
“ம்ம்ம்… அரவிந்த் சூசைட் பண்ணிகிட்டானாம்…” வேதனையை மீறிய நடுக்கம் தெரிந்தது அவனது குரலில்!
“என்னப்பா சொல்றீங்க…” நம்ப இயலாத பாவனை அவளது குரலில்!
“ஆமாம் திவ்யா… நாளைக்கு கேஸ் ஹியரிங் வரதா இருந்தது… நானும் பப்ளிக் ப்ராசிக்யுட்டர் கிட்ட சொல்லி இருந்தேன்… பெயில் அப்ஜெக்ட் பண்ண வேணாம்னு… ஆனா ஏன்… இப்படி… அவன் இந்த அளவு கோழையா… முடியல திவ்யா…” என்னதான் இருந்தாலும் நண்பனாயிற்றே… அந்த வேதனை இருக்குமல்லவா!
சட்டென தோன்ற…
“கார்த்திக்… அந்த பாண்டியன்… என்ன ஆனான்?” என்று கேட்க இறுகிய அவனது முகம் இன்னமும் இறுகியது!
“ஏதோ கோஷ்டி தகராறு திவ்யா… நேரு ஸ்ட்ரீட்ல வெச்சு வெட்டிட்டாங்க… பத்து நாள் முன்னாடி…” குரலில் கடுமை சேர்ந்து இருந்தது!
“நம்ப முடியல கார்த்திக்…”
“நிஜமாடா…”
“இல்ல… அவன் கண்டிப்பா கோஷ்டி பூசல்ல செத்து இருக்க மாட்டான்…”
“பின்ன என்ன சொல்ல வரீங்க மேடம்…”
“அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கும்… கண்டிப்பா…”
“ம்ஹூம் இல்ல… நான் அந்த வேலைய பண்ண சொல்லலை… நம்ம பசங்களும் அந்த வேலை செய்யல… கோஇன்சிடன்ஸ் திவ்யா…” மறுத்தான் கார்த்திகேயன்!
“அதோட…”
“அதோட…”
“ஏன் அரவிந்த் சூசைட் மேட்டலையும் நீங்க சம்பந்த பட்டு இருக்க கூடாது?” தெளிவாக குற்றம் சாட்டினாள்!
“ம்ம்ம்… உன்னோட துப்பறியும் சாம்பு வேலைய ஸ்டார்ட் பண்ணு…” நக்கலாக அவன் கூறவும்…
“கார்த்திக்… உங்களுக்கு உயிரோட விளையாடறது ஈசியா போச்சா?” அவளது குரலில் கோபம் தெரிந்தது!
“திவ்யா… நிஜமாவே எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல… பாண்டியன் மேட்டர்ல அவனோட ஆப்போசிட் பார்ட்டிக்கு ஒரு ஹின்ட் மட்டும் தான் நம்ம ஆள விட்டு கொடுக்க சொன்னேன்… அவன் எங்க பதுங்கி இருக்கான்னு மட்டும் தான்… அவனோட பர்சனல் ப்ராப்ளம்ல வெட்டிட்டாங்க… ஆனா அரவிந்த் சூசைட் உன்னை மாதிரியே எனக்கும் ஷாக் தான்டா… ப்ளீஸ் புரிஞ்சுக்கோ…” அவன் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறினான் கார்த்திகேயன்!
அவள் மௌனமாகவே இருக்க…
“ஹய்யோ… இத்தனை நாளாச்சு… இந்த திருவாரூர் தேரை நிலைக்கு கொண்டு வர… இப்போ மறுபடியுமா? மறுபடி முதல் அத்தியாயத்துல இருந்து என்னால முடியாது காளியாத்தா…” தலையில் கைவைத்து கொண்டு சோபாவில் அமர… திவ்யா முறைத்தாள்!
“ஆத்தா… கருத்துபரிமாற்றம் தேவை தான்… ஆனா நான் சொல்றதையும் கொஞ்சம் நம்பனும்… கார்த்திகேயா… உனக்கு தேவையா… பெரிய உண்மை விளம்பி… விளம்பி இப்படி இந்த பிசாசுகிட்ட மாட்டிகிட்டயே…” தனது ஆள்காட்டி விரலை தன் முன்னே காட்டி கேட்பது போல கேட்க…
“என்னது பிசாசா?” என்றாள் கடுப்பாக…
“ஆமாம் பிசாசுதான்… கொள்ளிவாய் பிசாசு… ப்ரீயா கொடுத்தா கூட வேணாம்னு சொன்னானே ஸ்ரீராம்… தெரியாத்தனமா மாட்டிகிட்டேனே… ஆண்டவா… என்னை மட்டும் காப்பாத்து…” மேலே பார்த்து ஆண்டவனை வேண்டுவது போல பாவனை செய்ய… திவ்யாவுக்கு உள்ளே எழுந்த சிரிப்போடு கோபமும் சேர்ந்து கொள்ள… சோபாவில் இருந்த சேர்பேடை எடுத்து சரமாரியாக கார்த்திகேயனை அடிக்க ஆரம்பித்தாள்!
“ஏன்டா பாவி… இந்நேரம் வரைக்கும் லவ் டயலாக் எல்லாம் அள்ளி விட்டுட்டு இப்போ பிசாசு… கொள்ளி வாய் பிசாசா? எவ்வளவு லொள்ளு இருக்கணும் உனக்கு… ப்ரீயா கொடுத்தா கூட வேணாமா?”
“கடவுளே… என்னை மட்டும் காப்பத்த சொன்னேனே… உனக்கு காதே கேக்கலையா?” என்றவனின் தலையில் சேர்பேட் லேண்ட் ஆக… சட்டென்று அவளது கைகளை பிடித்து பின்னோடு அணைத்தான்!
“ஒழுங்கா விட்டுடு… உனக்கு எதுக்கு இந்த பிசாசும் கொள்ளிவாய் பிசாசும்…” சிணுங்கினாள் அவனது மனைவி!
“என்ன பண்றது எனக்கு இந்த கொள்ளி வாய் பிசாசத்தானே பிடிச்சு இருக்கு…” என்று கூறியவாறே காது மடல்களை மெலிதாக கடிக்க…
“ஸ்ஸ்ஸ்… ஷப்பா… விடு… உன்னோட எனக்கு பேச்சு இல்ல…” கார்த்தியை தள்ளி விட முயல…
“வேணாம்… பேசவே வேணாம்…” என்று கூறி கண்ணடித்து விட்டு காதில் ரகசியம் பேச… அவளது முகம் செங்கொழுந்தாகி போனது!
“ச்சீ… போடா…” என்று அவனை தள்ளி விட்டு போனவளை குறுஞ்சிரிப்போடு பார்த்து…
“ப்ச்… நீ என்னத்தான் வெட்கபட்டாலும் நோ யூஸ்… இன்னும் ஒன் மன்த் நீ கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணுமே திவி… சோ… சோ…”
“என்ன சோ…” முகத்தை இடித்து கொண்டு திருப்பி கொண்டு போக…
“அது வரைக்கும் உன்னை எவ்ளோ வேணும்னாலும் வம்பிழுத்துக்கலாம் பிசாசு…” என்று கூறிவிட்டு காதல் பிசாசே என்று பாட ஆரம்பிக்க…
“யூ… யூ…” என்று அவனை நோக்கி வந்தவளை அணைத்து தட்டாமாலை சுற்றினான்!
அவள் அறியாத ஒன்றும் இருந்தது! பாண்டியனை முடித்தது இவன் ஆட்கள் இல்லை என்றாலும் காரணம் கார்த்திகேயனே! அதன் காரணம்… திவ்யா! அவள் சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது அவனுக்கு சொல்லப்பட்ட தகவல்… அந்த விபத்துக்கு காரணம் பாண்டியன் என்பதும் காரணகர்த்தா அரவிந்த் என்பதும்! நேரடியாக இறங்க அப்போது கார்த்திகேயன் விரும்பவில்லை என்பதால் அந்த பாண்டியனுக்கு எதிரியை தூண்டி விட்டு அந்த வேலையை முடித்தான்!
அந்த தகவல் அரவிந்துக்கு செல்லும்படியும் பார்த்து கொண்டான்! இயற்கையில் அரவிந்த் ஒரு கோழை… அதனால் தான் தவறுகளை ஒளிந்து மறைந்து செய்தான்… துன்பம் என்று வந்த போது விட்டு விட்டு ஓடினான்! மாசிலாமணி இருந்தவரை அவரது பெயரால் தப்பித்தான்! ஆனால் பாண்டியனை பற்றி கூறி அவனை பயத்தில் மட்டுமே ஆழ்த்த வேண்டும் என்பதே கார்த்திகேயனின் குறிக்கோளாக இருந்தது… ஆனால் அந்த பயமே அரவிந்தனை அப்படி ஒரு முடிவு எடுக்க வைக்க காரணமாகி விட்டது!
“அரவிந்த போய் பார்க்கனும் திவ்யா… புவர் பாய்…”
“ம்ம்ம்… டெட் பாடிய நாமளே வாங்கி சாங்கியத்தை செய்துடலாமா…”
“ம்ம்ம்… அம்மாவ கேக்கலாம்டா… என்ன பண்றதுன்னு…” என்று கூறி இருவருமாக மங்கையை பார்க்க விரைந்தனர்!
வாழ்க்கை இவ்வளவுதான்! ஒரு நிமிடம் முன்பு அரவிந்தனாக இருந்தவன் அடுத்த நிமிடம் அவன் பிணம் என்றாகி விட்டான்! நீர் குமிழி போன்ற நிலை இல்லாத இந்த வாழ்க்கையை நிலையென கருதி மனிதன் ஆடும் ஆட்டம் தான் எத்தனை… போடும் வேஷம் தான் எத்தனை!
ஐம்புலன்களும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் பொதுவானவை… மனிதன் அந்த ஐம்புலன்களையும் பயன்படுத்தி பகுத்தறிந்து உபயோகிப்பதால் அவன் உயர்வானவனாக கருதப்படுகிறான்! ஆனால் அந்த ஐம்புலன்களின் தேவைகள் நிபந்தனைக்கு உட்பட்டவை…
அதாவது கண்களால் பார்க்க முடியும் ஆனால் இருளில் பார்க்க வெளிச்சம் அவசியம்… அந்த நிபந்தனைகள் தேவைகளை உருவாக்குகின்றன… தேவைகள் ஆசைகளை வளர்க்கின்றன… ஆசைகளும் பேராசைகளுமே மனிதனின் அத்தனை துன்பத்திற்கும் காரணமாக அமைகின்றன என்பது எவ்வளவு உண்மை!
கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் –காலன் தச்சன்…
வெட்டி முறிக்கும் மரம் போல சரீரத்தை வீழ்த்தி விட்டால்…
கொட்டி முழங்கி அழுவார் –மயானம் குறுகி அப்பால்…
எட்டி அடிவைப் பாரோ? இறை வா! கச்சி ஏகாம்பனே!
-பட்டினத்தார்

Very nice