arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 26

அத்தியாயம் 26

visibility 792
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

ஜிப்மர் மருத்துவமனை…

மருத்துவர்கள் அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருக்க தலையை கையால் தாங்கி உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டி கொண்டிருந்தான் கார்த்திகேயன்! உள்ளே இருப்பது அவனது உயிரல்லவா! வந்துவிடு திவி… என்னிடம் வந்துவிடு… மனதில் ஓராயிரம் முறை ஜெபித்து கொண்டிருந்தான்! விதி வலியதுதான் ஆனால் இவ்வளவு வலியது என்று அவனுமே நம்பவில்லையே! அந்த காட்சி மறுபடி மறுபடி அவனது கண் முன் வந்து அவனை சின்னாபின்னபடுத்தியது… மறக்கவும் கூடுமோ?

மேட்டுபாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் அவனுக்குமே அவள் மேல் வருத்தம் மிகுந்து இருந்தது… மனிதன் ஒரு முறை தவறினால் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து கொடுமை செய்ய வேண்டுமா என்கிற ஆற்றாமை… இனி அவளாக அவனிடம் வந்தாலொழிய அவளிடம் பேசவே கூடாது என்கிற உறுதியோடு தான் அவன் பிரான்ஸ் கிளம்பி போனதே… அதோடு அவளுக்கு தனிமையில் சிந்திக்க நேரம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் உறுதியாகவே இருந்தான்!

அவளை அணுகியதும் கூட அவள் கண்களில் தென்பட்ட இளக்கத்தை வைத்து தான்… ஆனால் அவள் இன்னமும் தன்னுடன் ஒன்றவில்லை என்னும் உண்மை அவனது கன்னத்தில் பலமாக அறைய அதற்கு மேல் போக அவனுக்கு விருப்பமும் இல்லை! ஏனென்றால் அவன் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை… ஆனால் ஒன்றை முழுவதுமாக மறந்து இருந்தான்… இது வரை அவளிடம் தன் காதலை சொன்னதே இல்லையென்பதை… மனம் விட்டு வார்த்தைகளால் பேசப்படாத காதல் என்பது செவிடன் கேட்கும் இசையல்லவா… என்ன பயன்? அந்த அதீத நம்பிக்கை சில சமயங்களில் அகம்பாவமாக மாறியது தான் அவனிடம் இருந்த மிகப்பெரிய தவறு!

மனசாட்சி அவனை பார்த்து கேள்வி எழுப்பியது… அவள் ஒன்றவில்லை என்று அவளை குற்றம் சாட்டி கொண்டிருக்கிறாயே… நீயென்ன செய்தாய் அவள் உன்னுடன் மனம் ஒத்து வாழ்வதற்கு? என்று எப்போதும் போல கடிந்தது… செய்த தவறுக்கு தான் நான் பிரத்யுபகாரம் செய்து விட்டேனே என்றும் மனம் வாதிட… அது அவளை பொறுத்தவரை தண்டனையாக அல்லவா ஆயிற்று என்று மனசாட்சி உண்மையை கூற அந்த நிலையில் அவனது அந்த ஒரு நாளின் தவறு பூதாகரமாகவே அவனுக்கு தெரிந்தது!

இதே தவறை உன் தங்கையிடம் எவராவது செய்து இருந்தால் அவர்களை சும்மா விட்டு இருப்பாயா? உனக்கொரு நியாயம் அவளுக்கொரு நியாயமா என்று மனசாட்சி அவனை குதறியது! அந்த தவறை செய்ய துணிந்த நீ அதன் விளைவுகளை பொறுமையாக அல்லவா கையாண்டிருக்க வேண்டும்… அதை விடுத்து கடுமையாக நடந்து கொண்டதும் இல்லாமல் அவள் உன்னை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேறு சொல்வது எந்த ஊர் நியாயம் கார்த்திகேயா? மனசாட்சி அவனிடம் நியாயம் கேட்க… அதை முழுவதுமாக உணர்ந்த கார்த்தி… பிரான்ஸில் இருந்த போது அவளிடம் பேசவே தயங்கினான்! அதே தயக்கத்தோடு அவன் இந்தியா வர… அதே நேரத்தில் கடலோரங்களை புயல் தாக்க… அந்த பணியில் தனது ஊழியர்களை முடுக்கி விட்டு தானும் இறங்கினான்!

அவளது முகத்தை பார்க்க முடியாததே அவன் தன்னை வேறு வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ள காரணம் என்று அவனுக்கும் புரியவில்லை! ஆனால் அதற்கு பின் நிகழ்ந்தது…

“கடவுளே… நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் எனக்கு கொடு… அவளை விட்டு விடு… ஒன்றுமறியாத ஆன்மா அவள்… அவளை காப்பாற்று…” மனதில் உருகி மெய் வருந்தி வேண்டி கொண்டிருந்தான்!

“சார்…” அவனது நிலைமை உணர்ந்து தயங்கி பொது மேலாளர் பிரகாஷ் அழைக்க… அதீத மனதடுமாற்றத்தில் ஆப்ரேஷன் தியேட்டர் முன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்த கார்த்திகேயன் விழி உயர்த்தி என்னவென்று பார்த்தான்!

“சார் கடலூர்ல ஓரளவு நிலைமை சீராகி விட்டதாம்… பசங்கள அடுத்து என்ன பண்ண சொல்றது?” அருகில் மாரியப்பன்… மணி மற்றும் சிலர் நின்று கொண்டிருந்தனர்! தொழிற்சங்கம் உருவாக்க முனைந்தபோது கார்திகேயனால் பல்வேறு இடங்களுக்கு தூக்கியடிக்க பட்டவர்கள்!

“நீ மாரியப்பன் தான…”

“ஆமா சார்… நம்ம மாரியப்பன் தான்… இங்க அவசர வேலைக்காக எல்லா கிளைல இருந்தும் ஆட்களை கொண்டு வர சொன்னீங்க சார்…” என்று பிரகாஷ் நினைவுபடுத்த… தலையாட்டி கொண்டு அங்கீகரித்தான்!

“இப்போ எங்கப்பா இருக்க…” மாரியப்பன் மணி ஆகிய இருவரிடமும் பொதுவாக கேட்டான்…

“நான் கொச்சில இருக்கேன் அய்யா… மணி ஷிமோகால…” பணிவாக பதில் கூறினான் அந்த மாரியப்பன்.

சிறிது யோசித்த கார்த்திகேயன்…

“சரி கடலூர் முடிஞ்சதுன்னா நீங்க வீட்டுக்கு போங்க… தேவைன்னா கூப்பிடறோம்…” என்று அவர்களை அனுப்பி விட்டு பிரகாஷை தனியே அழைத்தான்!

“பிரகாஷ் சார்… அந்த பசங்களை இங்கயே ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க…” என்று கூறவும் பிரகாஷ் ஆச்சரியமாக பார்த்து…

“சார்…”

“ஆமா பிரகாஷ் சார்… அவங்க அவங்க குடும்பத்தோட இருக்கட்டும்… இன்னும் யாரெல்லாம் இந்த மாதிரி குடும்பத்தை பிரிஞ்சு இருக்காங்களோ அவங்களை எல்லாம் ஒரு கவுன்சிலிங் மாதிரி வர சொல்லி வேணும்ன்னு கேக்கற இடத்தை கொடுங்க… முடியாத பட்சத்துல குடும்பத்தை அங்க ஷிப்ட் பண்ணிக்க சொல்லுங்க…” உணர்வே இல்லாமல் சொன்ன கார்த்தியை பார்த்து…

“ஓகே சார்…” தலையாட்டினார்… உள்ளுர இருந்த மகிழ்ச்சி வெளிப்பட்டது… ஆனாலும்…

“ஆனா… ஏன் திடீர்ன்னு…” கேட்க தயங்கினார் பிரகாஷ்!

“ஹும்ம்… அப்போவாவது என் திவ்யாவுக்கு…” சொல்ல வந்தவன் சொல்ல முடியாமல் திக்கினான்… தன் தொழிலுக்காக மற்றவர் குடும்பங்களை பிரித்து வைத்து பாவம் செய்து இருக்கிறோமோ என்று தோன்றிவிட்டது கார்த்திக்கு! கண்களில் கலக்கம் சூழ… தலையில் வைத்த கை அங்கேயே இருக்க… அந்த கார்த்திகேயனை சத்தியமாக பிரகாஷ் எதிர்பார்க்கவில்லை! அந்த நேரத்தில் என்ன சொல்லி அவனுக்கு ஆறுதல் கூறுவது என்பதையும் அவர் அறியவில்லை… எல்லோரையும் பொறுத்தவரை கார்த்திகேயன் இரும்பு மனிதன்! யாராலும் அணுக முடியாத இரும்பு மனிதன்… அவனுக்கு ஆலோசனை சொல்வதே சாத்தியப்படாத போது ஆறுதல் கூறுவது என்பது?

“சார்… ப்ளீஸ் கண்ட்ரோல்… மேடமுக்கு எதுவும் ஆகாது… ஷி வில் பீ சேப்…” என்று கூறத்தான் முடிந்தது! இருவரும் பேசி கொண்டிருக்கும் போதே மங்கை ஸ்ரீராமுடன் பதட்டமாக வந்தார்! ஸ்ரீராமின் கண்களில் முதலில் பட்டது உடைந்து போய் அமர்ந்திருந்த கார்த்திகேயன் தான்!

“அண்ணா…” ஸ்ரீராம் அழைக்க…

“தம்பி…” மங்கை அழைக்க விழி உயர்த்தி இருவரையும் பார்த்தான்! இருவரின் கைகளையும் இறுக பற்றியவனின் கைகள் சில்லிட்டு நடுங்கி கொண்டிருந்தது! உணர்ச்சிகளை வெகுவாக அவன் அடக்கி கொண்டு இருப்பது தெரிந்தது!

“அம்மா…” குரலில் நடுக்கம்…

“தம்பி… இ… இங்க பாரு… எ… என்ன கண்ணா? தி… திவ்… திவ்யாவுக்கு என்ன ஆச்சு…” பதட்டத்தில் மங்கைக்கு பேச்சு தடை பட… ஸ்ரீராம் நிலையோ சொல்ல முடியவில்லை… தோழியை பற்றி வாய் திறந்து கேட்க கூட பயந்து அதிர்ந்து கார்த்திகேயனின் வாய் மொழியை கண்களில் உயிரை தேக்கி கொண்டு எதிர்பார்த்தான்!

“தி… திவ்யாவுக்கு… ஆ… ஆக்சிடென்ட் ஆகிட்டதும்மா…” சொன்னவன் இன்னும் உடைந்தான்! குரல் நடுங்கி கொண்டு தான் வெளிவந்தது… கார்த்திகேயனை இந்த மாதிரி பார்த்தே இராத பிரகாஷ், ஸ்ரீராமை கண்களால் சைகை காட்டி அழைத்து கொண்டு மறுபுறம் நகர… ஸ்ரீராம் உள்ளுக்குள் நடுங்கி கொண்டே அவருடன் சென்றான்… அவனது தோழியை மீண்டும் எப்போது பார்ப்போம் என்றிருந்தது… ஆனாலும் இந்த நிலையில் தானாவது தைர்யமாக இருக்க வேண்டுமே…

அதே நேரத்தில் வந்த திவ்யாவின் பெற்றோருக்கும், சஞ்சய் வைஷ்ணவிக்கும் பெரும் அதிர்ச்சியே காத்து இருந்தது! அனைவருக்கும் ஒரே மாதிரி தகவல் மட்டுமே சென்று இருந்தது! திவ்யாவுக்கு உடல்நிலை சரி இல்லை… உடனே புறப்பட்டு வரவும் என்பதே அது! அதுவும் கார்த்தி இருந்த நிலையில் எதை பற்றியும் யோசிக்க இயலாதவனாய் இருக்க… அவனுக்காக பிரகாஷ் தான் அனைவருக்கும் தகவல் கொடுத்ததே! இங்கு வந்தவர்களை வரவேற்றது… தலையில் இடி விழுந்தது போன்ற செய்தியும்… உலகத்தையே மறந்து தலையில் கைவைத்தபடி அமர்ந்து இருந்த கார்த்திகேயனும் தான்!

ஒருவரும் அவனை நெருங்கி பேச தைர்யம் இல்லாமல் அறுவை சிகிச்சை முடிவதற்காக காத்துகொண்டிருந்தனர்! பிரகாஷ் நடந்தவற்றை ஸ்ரீராமிடம் விவரித்து கொண்டிருந்தார்…

புயல் மழையில் புதுவை, கடலூர், விழுப்புரம் என்று அந்த பகுதி முழுவதும் ஸ்தம்பித்து போயிருக்க, சுஷ்ருதா மேற்கொண்ட மீட்பு பணிகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன! கடலூருக்கு நேரடியாக கார்த்திகேயன் வந்ததால் தானும் உடன் வந்ததாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து செய்ய வைத்தது கார்த்திகேயன் தான் எனவும் கூறிய பிரகாஷ்… அந்த கணங்களை விவரித்தார்!

***

“ஹலோ… ஹலோ…” திவ்யாவிடம் இருந்து கால் வர எடுத்து பேச முயன்றான் கார்த்திகேயன்… எப்போதும் போல மழை சதி செய்ய கால் துண்டிக்கப்பட்டது!

“ஷிட்…” எரிச்சலாக செல்பேசியை வைத்தான் கார்த்தி!

“என்ன சார்… என்ன ஆச்சு?” விசாரித்தார் பிரகாஷ்!

“வீட்ல போன் பண்றாங்க… சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது…” எரிச்சலாக கூறி விட்டு வேலைகளை பார்க்க, இப்போது பிரகாஷ் செல்பேசி அழைத்தது!

“ஹலோ… சொல்லுங்க மேடம்…” என்று மரியாதையாக அழைத்தபோதே கார்த்திகேயன் கண்டு கொண்டான்… தனக்கு அழைத்து சலித்து அவரை அழைத்து இருக்கிறாள் என்று! மனம் சிறகு விரித்து பறந்தது… திவ்யாவை அப்போதே காணும் ஆவல் ஏற்பட, செல்பேசியை வாங்க கை நீட்டினான்!

“இருக்கார் மேடம்… இதோ குடுக்கறேன்…” என்று அவனிடம் குடுக்க…

“சொல்லு திவ்யா…”

“…”

“ம்ம்ம் சொல்லு…” என்ற போதே மறுபடியும் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எரிச்சலாக வைத்து விட்டு நாமாவது ட்ரை செய்யலாமே என்று நினைத்து திரையை தடவியபோது மறுபடி கால் வந்தது! என்ன அவசரம்… என்ன ஆயிற்று இந்த அளவு பதட்டமாக மறுபடி மறுபடி அவள் முயற்சிப்பது இயல்பான ஒன்று இல்லையே என்று எண்ணியவாறே செல்பேசியை காதுக்கு கொடுக்க…

“கார்த்திக் எங்க இருக்கீங்க?” பதட்டமாக அவள் கேட்டது அவனிடமும் பதட்டத்தை உருவாக்க…

“ஏன் திவ்யா… என்னாச்சு…”

“ஹய்யோ கார்த்திக்… எங்க நீங்க இருக்கீங்க… அதை முதல்ல சொல்லுங்க…” பொறுமை இல்லாமல்… பதட்டம் மிகுதியாக தொற்றி கொண்டது கார்த்திகேயனுக்கு… யாருக்கு என்னவாயிற்றோ?

“கடலூர்ல காக்கா தோப்பு திவ்யா… ஏன் என்னாச்சு?”

“நான் வெளிய தான் இருக்கேன்… கொஞ்சம் வாங்களேன்… ப்ளீஸ்…” அழுதுவிடுபவள் போல அவனை அழைக்க, பேசி கொண்டே வெளியே விரைந்தான்! அவனை பார்த்த போது எதோ ஒரு நிம்மதி தெரிந்தது அவளது முகத்தில்! இனி பார்க்கவே தேவை இல்லை போன்ற அந்த திருப்தி… திவ்யா ஆவலாக அவனை நோக்கி வர… அதே சமயத்தில் இரு புறம் இருந்தும் வாகனங்கள் மழையில் கண் மண் தெரியாமல் வர…

“கார்த்திக்க்க்க்க்க்க்…” கத்தி கொண்டு மயங்கினாள்! பதறி அனிச்சை செயலாக அவளை தாங்க ஓடிய போதே அசுர வேகத்தில் வந்த லாரி தன்னை கடப்பது தெரிந்தது! ஒரு கணம் அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்த போதே இன்னொரு புறம் இருந்து வந்த வாகனம் சாலை வளைவில் அவள் விழுந்த நேரத்தில் அவளை மோதி தூக்கி எறிந்தது!

சகலமும் உறைந்தது கார்த்திகேயனுக்கு!

“திவ்யாஆஆஆஆ…” அதிர்ச்சியில் குரல் வெளியே வரவே இல்லை… வேறெதுவும் நினைக்க கூட தோன்றவில்லை! கண்களை இருட்டி கொண்டு வந்தது கார்த்திகேயனுக்கு…

***

“பேஷன்ட்ட ஐசி ஸ்பெஷல் வார்டுக்கு ஷிப்ட் பண்ணியாச்சு கார்த்திக்… ஒருத்தர் வேணும்னா கூட இருக்கலாம்… மற்றவங்க டிஸ்டர்ப் பண்ண வேணாம்…” என்று மருத்துவர் சொல்லி விட்டு போக கார்த்திகேயன் உடலெல்லாம் சில்லிட அந்த ஐசி வார்டுக்குள் நுழைந்தான்! ஐசி வார்டுக்குள் தனியாக இருந்தது அந்த ஸ்பெஷல் வார்ட்!

தலை முழுவதும் கட்டு போடப்பட்டு இருக்க… கையில் சலைனும் ரத்தமும் உள்ளே சென்று கொண்டிருந்தது… வாழ்வாதார கருவிகள் அவளது இயக்கத்தை கூறி கொண்டிருந்தன… அவனுமே இதே துறையில் இருப்பதால் கணக்கீடுகளை பதட்டத்தோடு ஒப்பிட்டு கொண்டிருந்தான்! தலை பக்கத்தில் அருகில் இருந்த சேரில் அமர்ந்து கைகளை பற்றியவன்… நிமிர கூட இல்லை! அவனது உதடுகள் முனுமுனுத்து கொண்டே இருந்தது!

அவ்வப்போது ஒவ்வொருவராக உள்ளே வந்து பார்த்து விட்டு போக… அந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தான் கார்த்தி! யாரையும் கவனிக்கும் மனநிலையோ பேசும் சக்தியோ அவனுக்கு இல்லை… திவ்யாவின் பெற்றோரும் அதே நிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு தைர்யம் அவர்களுக்கு இருந்தது… அனைவரும் வந்து போனபின் கடைசியாக வந்த ஸ்ரீராம், கார்த்தியின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டான்…

“அண்ணா…” அழைத்த போதும் அதற்கு ஒரு எதிரொலியும் அவனிடம் இருந்து கிடைக்கவில்லை…

“அண்ணா… கொஞ்ச நேரம் அத்தை, திவி கூட இருக்கட்டும்… நீங்க சாப்பிட்டுட்டு வாங்க…” அதற்கும் சிறு எதிரொலி கூட இல்லாமல் அவளருகே அமர்ந்திருந்தவன் ஸ்ரீராமின் கைகளை மட்டும் இறுக பற்றி கொண்டான்…

“அண்ணா… ப்ளீஸ்…” ஸ்ரீராம் கட்டாயப்படுத்தியதும் வேலைக்கு ஆகவில்லை! அவனது கவனம் அனைத்தும் திவ்யா மேல் மட்டுமே இருந்தது… கண்களில் அவள் விபத்துக்குள்ளான காட்சி மீண்டும் மீண்டும் வந்து கலக்கத்தை ஏற்படுத்தியது! அதற்கு மேல் ஸ்ரீராமாலும் ஒன்றும் பேச இயலாமல் திவ்யாவை பெருமூச்சோடு பார்த்து விட்டு வெளியே சென்றான்! கார்த்திகேயன் தன்னை மறந்து அவளை மட்டுமே நினைத்து ஜெபித்து கொண்டிருந்தான்…

“திவ்யா… ஐ லவ் யூ டா… என்னை விட்டு போயிடாதடா… ப்ளீஸ்… நீ எனக்கு வேணும் திவ்யா… என் கூட சண்டை போடவாச்சும் வேணும்… வா திவ்யா… நீ இல்லாத இந்த உலகத்துல நான் இருப்பேன்னு நினைச்சியா… கண்டிப்பா மாட்டேன்… எழுந்துக்கோடா… ப்ளீஸ்” கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க இதே ஜெபத்தை தலைகுனிந்தவாறு காதருகில் சொல்லி கொண்டே இருந்தான் பசி தூக்கம் அனைத்தையும் மறந்து…

சிறு அசைவுடன் கண் விழித்தாள் திவ்யா!

“கார்த்திக்க்க்க்க்க்…” ஹீனமாக கேட்டது அவளது குரல். உடல் முழுவதும் ஒரு முறை புல்லரிக்க நிமிர்ந்தான் கார்த்திகேயன்!

“திவி…” கண்கள் கலங்கி இருக்க உயிரே நீ தானென்று சொல்லாமல் சொல்லியவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்…

“உங்களுக்கு ஒன்னும் ஆகலியே…” அவனை முழுக்க நோக்கி ஆராய்ந்து கொண்டு கேட்க… என்ன மாதிரியான பெண் இவள்? அவனிடம் மிச்சமிருந்த தான் என்ற அகம்பாவம் அனைத்தும் மனதுக்குள் சுக்கல் சுக்கலாக உடைந்தது!

“திவிக்குட்டி…” உதட்டை கடித்து அழுகையை கட்டுபடுத்தியவனை மீறி வெடித்தது அவனது உணர்வுகள்! தான் ஆண் என்பதை மறந்தான்… சுற்றுபுறம் மறந்தான்… தன் படிப்பை மறந்தான்… செல்வம் செல்வாக்கு என்ற அனைத்தையும் மறந்தான்!

“திவி… ஐ லவ் யூ டா… ஐ லவ் யூ… என்னடா… நீ…” வார்த்தைகள் தவிப்பாய் திக்கின… நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதை கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கூறியது! அவள் உணர்ச்சி வசப்பட கூடாதே என்று கட்டுபடுத்த முயன்றான் தன்னை! அவனது நிலை புரிந்தது திவ்யாவுக்கு…

“ஹேய்… நான் இன்னும் இருக்கேனா?” ஹீனமாக அந்த நிலையிலும் கிண்டலாக கேட்டவளை உணர்ச்சி பொங்க பார்த்தவன்…

“நான் செத்துட்டேன்டா…” என்று அவளது கைகளை மென்மையாக பற்றி கொண்டவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க… இருவருக்கும் பேச தோன்றாமல் அங்கே மௌனமே ஆட்சி செய்தது!

ஆண்களின் கண்ணீர் இரு வகை… ஒன்று பெண்களை ஏமாற்ற இன்னொன்று பெண்ணிடம் ஏமாற என்று நகைச்சுவையாக கூறுவார்கள்! ஆனால் கார்த்திக்கின் கண்ணீரில் அவனது உணர்வுகள் கரைந்து இருந்தன… அவனால் வார்த்தைகளில் தெரிவிக்க முடியாத இயலாத அவனது கணக்கிலடங்கா காதலை அவனது கண்ணீர் உரைத்தது! பொய்யாக அணிந்திருந்த ஈகோ என்ற முகமுடி கழண்டு விழுந்தது! இதுவரை ஒன்ற விடாமல் செய்திருந்த ஏதோ ஒன்று காணாமல் போக முழுமையாக… ஆத்மார்த்தமாக… அந்த கண்ணீர் மூலமாக… தன் உயிரை அவளது கண்களில் தேடினான் கார்த்திகேயன்!

அகந்தை எழுந்தால் சகலமும் எழும். அது ஒடுங்கினால் அனைத்தும் ஒடுங்கும். அதை கண்டறிவதே வெற்றிக்கு வழியாம். நான் யார்? என்று விசாரித்து இதயத்துள் நுழைய, அகந்தை வேரோடு சாயும். பின் வேறொன்று ‘நான்-நான்’ என்று இடைவிடாது ஸ்புரிக்கும். அது அகந்தை அன்று…

… முழுமையான ஆத்மாவாம்!

-பகவான் ரமணர்…

மருத்துவர் வந்து சோதித்து திருப்தியாக கூற அப்போதுதான் நிம்மதி மூச்சு விட்டான்! அடுத்த இரண்டு நாட்களில் சிறிது சிறிதாக தேற ஐசி யூனிட்டில் இருந்து தனி அறைக்கு மாற்றினார்கள்… அவளது பெற்றோரும் மங்கையும் வைஷ்ணவியும் உடனிருப்பதாக கூறியும் தான் மட்டுமே தனது மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என்று அனைவரையும் விரட்டி விட்டு அவளை கண்ணில் வைத்து தாங்கினான் கார்த்தி! பத்து நாட்களில் ஓரளவு நன்றாக தேறி அவனுடன் வாயடிக்கும் அளவு முன்னேறினாள்! இருபது நாட்களில் உடல் நன்றாக தேற இருவருமாக சேர்ந்து மருத்துவமனையை சுற்றும் அளவு முன்னேறினாள்… பழரசத்தை அவளுக்கு கொடுக்க க்ளாசில் ஊற்றி கொண்டிருந்தவனிடம்…

“கார்த்திக்… வலிக்குது…” சிறுபிள்ளையாக அவனிடம் செல்லம் கொஞ்சினாள் அவன் மனைவி! அவ்வப்போது அவனிடம் இப்படி செல்லம் கொஞ்சுவது தான் வாடிக்கை ஆகி இருந்ததே… அதை கேட்டு கணவன் பதறி என்னவென்று கேட்பதை பார்க்கும் சுகமே அலாதியானதுதானே!

“ஒரே நிமிஷம் இருடா செல்லம்… டாக்டர கூப்பிடறேன்…” என்று பரபரப்பாக எழ போனவனை கையமர்த்தி…

“ச்சும்மா…” சிரித்து கொண்டே அவனது கையை பிடித்து எழுந்து எப்போதும் போல நடை பயிற்சியை ஆரம்பித்தாள்! மருத்துவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து பழக வேண்டும் என்று அறிவுறுத்த கார்த்திகேயன் அவளை சோர்வை உணராதது போல நடந்து பழக்கி கொண்டிருந்தான்… மனம் விட்டு பேசியபடி நடந்து கொண்டிருந்த போது பேச்சு மாசிலாமணியை நோக்கி திரும்பியது…

“கார்த்திக்… கேட்கவே மறந்துட்டேன்… மாசிலாமணி அங்கிள் எப்படி இருக்காங்க…” அவள் கேட்டபோது அவனுக்கு சட்டென்று என்ன சொல்வதென்று புரியவில்லை… ஏனென்றால் அவர் இறந்து பத்து நாட்கள் ஆகி இருந்ததே… திவ்யாவுக்கு விபத்து ஏற்பட்ட அன்று அவருக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக் அவரது உயிரை பறித்து இருந்தது…

“ஹீ இஸ் நோ மோர் திவ்யா…” என்று அமைதியாக அவன் கூறவும்… ஒரு கணம் அதிர்ச்சியில் தடுமாறி நின்றாள் திவ்யா!

“எப்போ?”

“உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு…”

“கடவுளே…” கண்களை மூடி கொண்டாள் திவ்யா… இறந்த அந்த ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்வதை தவிர வேறென்ன செய்வது? அதுவும் கார்த்திகேயன் மீது அவ்வளவு பற்று கொண்ட ஆன்மா அல்லவா… நடந்தவற்றை அவனிடம் கூறிய போது சலனமில்லாமல் கேட்டுக்கொண்டான்! அரவிந்தன் மேல் கோபம் வருவதற்கு பதிலாக இப்போது பரிதாபம் மட்டுமே அவனுக்கு… பெருமூச்சு ஒன்றை விட்டான்!

“மாசி அங்கிள் இல்லைன்னாலும்… அவருக்காக பார்க்க வேண்டி இருக்கு… அரவிந்த் என்னமோ ஸ்பாயில்ட் சைல்ட்டா தான் எனக்கு இப்போ தோணுது திவி…”

“ம்ம்ம் ஆமாம் கார்த்திக்… சரியான வழிகாட்டுதல் அவருக்கு கிடைக்கலை… இன்னமும் ஜெயில்ல தான் இருக்காரா?”

“ம்ம்ம்… ஆமா…” உணர்வில்லாமல் அவன் கூற…

“வேணாமே கார்த்திக்… ஒருத்தர் மாத்தி ஒருத்தர்… பழிவாங்கி… லாஸ் ரெண்டு பக்கமும் தான்… ப்ளீஸ் கார்த்திக் புரிஞ்சுக்கோங்க…” கண்களாலும் வார்த்தைகளாலும் திவ்யா கெஞ்ச…

“ம்ம்ம்… புரியுதுடா… ஓகே ரூமுக்கு போலாமா…” சட்டென்று பேச்சை மாற்றி அறைக்கு அழைத்தான்! யோசனையாக நடந்து கொண்டிருந்தவளை ஆழமாக பார்த்தபடியே அவனும் நடந்தான்! திரும்பி அறைக்குள் நுழையும் போது அவன் கையை பற்றி… நிறுத்தி… தயங்கி… கண்களில் கண்ணீர் தேங்க…

“அது வந்து… வந்து… நம்ம குழந்தை… ஒ… ஒன்னும் ஆகலையே கார்த்திக்…”

ஒன்றும் ஆகி இருக்க கூடாது என்று ஐசி யூனிட்டில் விழித்தது முதல் வேண்டி கொண்டே இருந்த விஷயத்தை அவனிடம் கேட்டாள்… அவளது அந்த நம்ம குழந்தை என்ற வார்த்தையில் உருகியது கார்த்திக்கின் நெஞ்சம்… அவளை படுக்கையில் அமர வைத்து…

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்டா தர்பூஸ்… என் செல்லம்ல… இப்போ பேசாம ரெஸ்ட் எடுப்பீங்களாம்…” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

“அப்படீன்னா…” கண்கள் மீண்டும் கலங்க துவங்க… பதறியவன்…

“அச்சசோ… அதெல்லாம் சின்ன குட்டி அவ அம்மா தொப்பைக்குள்ள பத்திரமா இருக்காளாம்… டோன்ட் வொர்ரி டா…” அவளது கைகளை பற்றி முத்தமிட்டு கூறியவனின் நெஞ்சம் துடித்தது… ஏனென்றால் இந்த விபத்தில் கலைந்து போனது அவனது முதல் வாரிசும் கூடத்தானே… தன்னை பார்க்க விருப்பமில்லாமல் போன அந்த உயிரை நினைத்து துடித்தாலும் திவ்யா இந்த அளவாவது பிழைத்தாளே என்ற உணர்வில் அந்த இழப்பை ஏற்று கொண்டிருந்தான்!

“எனக்கு தொப்பையெல்லாம் இல்ல…” மெலிதாக புன்னகைத்து கொண்டு வம்பு பேச…

“இப்போ இல்ல… என் பொண்ணு வளர்ந்தா… தொப்பை பெருசாகிடும் இல்லையா…” சிரித்து கொண்டே சொன்னவனை முறைத்தாள்.

“அதென்ன பொண்ணு… பையன் தான்…” அந்த நிலையிலும் அவனிடம் வம்பு வளர்க்க… வாய் விட்டு சிரித்தான் கார்த்திகேயன்!

“ம்ஹூம்… பொண்ணு தான்…” உள்ளுக்குள் மனம் கனத்தாலும் வெளியே அவளிடம் சிரித்து கொண்டு குறும்பாக மொழிந்தான்!

“நோ… பையன் தான்…” பிடிவாதமாக கூறியவளின் சிறுபிள்ளைத்தனத்தை பார்த்து மீண்டும் சிரித்தவன்… குரலை தழைத்து அவளது கைகளை பற்றி முத்தமிட்டு…

“வேணும்னா அடுத்தது பையன பெற்றுக்கோ… நான் ரெடிப்பா…” கண்ணடித்து சிரித்தான்! திவ்யா வெட்க புன்னகை விரிய…

“ச்சீ போடா… இன்னொரு தடவை ரே…” என்று மெல்லிய குரலில் ஆரம்பித்து சட்டென்று தோன்ற நாக்கை கடித்து கொண்டு சொல்ல வந்ததை முடிக்காமல் விட்டாள்! அவளது உணர்வு புரிந்தது… எல்லாவற்றையும் தான் கடந்து விட்டானே… ஒரு கணம் முகத்தில் தோன்றிய இறுக்கம் தளர்ந்து மென்மை படர்ந்தது!

“ஐம் சாரி கண்ணம்மா… ஐம் வெரி சாரி… சாரி கேட்டுட்டா மட்டும் தப்பு கரெக்டாக போறதில்ல… வாழ்நாள் முழுக்க அந்த தப்புக்காக என் செல்லம் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்… ப்ளீஸ் குட்டிம்மா…” சிறுகுழந்தையாக மன்னிப்பு கேட்ட கணவனை பார்த்து புன்னகைத்தாள் திவ்யா!

“ச்சே… என்னப்பா இப்படி நீ கவுத்தீட்ட… இதையே சாக்கா வெச்சு இன்னும் கொஞ்ச நாள் சண்டை போடலாம்ன்னு பார்த்தா டக்குன்னு சாரி கேட்டுட்ட… போப்பா சுவாரசியமே போச்சு…” என்று நொந்து கொண்டவளை பார்த்து சிரித்து…

“அடப்பாவி சுவாரசியம் போச்சா? சொல்லுவடி… நல்லாவே சொல்லுவ… மனுஷன போட்டு டார்ச்சர் பண்ணிட்டு… இப்போ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி சுவாரசியம் போச்சா?” படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த அவளின் மூக்கை திருக…

“பின்ன என்ன… இப்போ எனக்குத்தான் கிக்கே போச்சு…” அலுத்து கொண்ட மனைவியை ஒரு மார்கமாக பார்த்தவன்…

“ஓகே… கிக்கா சாரி சொல்லட்டா…” கண்ணடித்து கேட்க…

“சாரி கேக்கறதுல என்ன கிக்?” குழம்பினாள் ஆசை காதலி!

கையை மென்மையாக பற்றியவன் ஒவ்வொரு விரலிலும் முத்தமிட்டு…

“s-o-r-r-y” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு முத்தமாக கொடுக்க… ஒன்றுமே நிகழாதது போல அமர்ந்திருந்த அவன் மனைவி…

“இவ்வளவு தானா… ப்ச்… சாரி நாட் அக்செப்டட்…” என்று வேறு புறமாக திரும்பி குறும்பாக புன்னகைத்தாள்! அவளது குறும்புத்தனத்தை ரசித்தவன், சுற்றிலும் பார்த்து… மென்மையாக அவளது முகத்தை பற்றி நெற்றியில் முத்தமிட்டு…

“ம்ம்ம் சாரி…” என்று புன்னகைத்துக்கொண்டே கூற…

“ப்ச்… இவ்வளவுதானா… இப்போவும் நாட் அக்செப்டட்…” என்று குறும்பாகவே கூற, அவனும் புன்னகைத்து கொண்டே அவளது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு…

“சாரி… இப்போ ஓகே வா?”

“ம்ஹூம்… நாட் அக்செப்டட்… நாட் அக்செப்டட்…” தீர்மானமாக அவனது மனைவி கூற… அவளது முகத்தை வலித்து விடுமோ என்று மென்மையாக பற்றியவன்… அவளது காய்ந்த உதட்டை ஈரப்படுத்தி தன் வசப்படுத்தினான்! நேரம் காலம் எவ்வளவு கடந்ததென இருவருமே அறியார்… சிறிது நேரம் கழித்து அவளை மென்மையிலும் மென்மையாக விடுவித்தவனின் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள் திவி! இது வரை கிடைக்காத நிம்மதியும் அமைதியும் இருவருக்குள்ளும் வந்தமர்ந்தது!

“கார்த்திக்க்க்க்க்…”

“ம்ம்ம்…”

“கல்யாணத்துக்கு முன்னால அப்படி நடக்கலைன்ன ஷாலினிய தானே கல்யாணம் பண்ணி இருப்பீங்க…?” முகத்தை உயர்த்தி தனக்கு அவனது பதில் தெரியுமென்றாலும் அவனை பார்த்து கேட்க… மெல்ல அவளது முகத்தை பற்றி…

“எப்படி நடக்கலைன்னா…” புன்னகையோடு!

“ம்ம்ம்… கொழுப்பு தான்…”

“ஆமா தினம் நீ எனக்கு ஊட்டி ஊட்டி விட்டதுல வந்த கொழுப்புத்தான்…” என்று சிரித்தவன் அவனே தொடர்ந்தான்!

“இல்லடா… உன்னை பார்த்த முதல் மீட்டிங்லையே என் மனசை நீ கொள்ளையடிச்சுட்டன்னு சொன்னா நம்பவா போற…” கேள்வியாக கேட்ட தனது கணவனை இதழோர புன்னகையோடு பார்த்தாள்!

“ம்ஹூம் நம்ப மாட்டேன்… அப்போ என் கூட சண்டைதானே போட்டீங்க…”

“ம்ம்ம்… ஆனா அந்த அளவு ஒரு பொண்ணு கிட்ட பேசுனதும் அதுதான் முதல் முறை கண்ணம்மா… பொதுவா எனக்கு பொண்ணுங்க ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி இருக்கறது பிடிக்காது…” வார்த்தைகளில் அழுத்தம்!

“ம்ஹூம் சும்மா… இப்போவுமே என்னை நீங்க அப்படித்தான் இருக்க வைக்க நினைக்கிறீங்க…” அவளது எண்ணத்தை சொல்லவும்…

“இல்லடா… நான் உன்கிட்ட பேசுன மெத்தட்ஸ் வேணும்னா கொஞ்சம் கடினமா இருக்கலாம்… ஆனா எனக்கும் தலையாட்டிகிட்டு போறது பிடிக்காது… என்கிட்டே சும்மா தலையாட்டிகிட்டே இருந்தாலும் பிடிக்காது… இப்போ நீ வெளிப்படையா கருத்து சொல்ற பாரு… இது பிடிச்சிருக்கு… இதனால நமக்குள்ள கிளாஷ் வந்தாலும் இது தான் பிடிக்கும்…”

“நிஜமாவா… அப்புறம் எல்லாத்துக்கும் சண்டை பிடிப்பேன்… அப்புறம் என்னை சொல்லி குத்தமில்லை சொல்லிட்டேன்…” என்று அவனது மனைவி சிரிக்க…

“நல்லா… அதை ஏன் சண்டைன்னு நினைக்கிற திவிக்குட்டி… கருத்துபரிமாற்றம்… அது நல்லதுதானே…” என்று அவன் கூற அவனது முகத்தை அள்ளி பருகுவது போல் பார்த்தாள் திவ்யா!

“ம்ம்ம்…”

“அதனாலேயே ஷாலினி மேல எனக்கு அபிப்ராயம் எல்லாம் இல்ல… உன்னை பார்க்கற வரைல… பார்த்தபின்னாடியோ ஏன் பார்த்தோம்ன்னு ஆய்டுச்சு…”

“ஏன்…” புரியாமல் திவ்யா கேட்க…

“பின்ன… நீ அன்னைக்கு போகும் போது ஒரு பார்வை பார்த்தாயே… என்னால மறக்கவே முடியலடா… ஆனா அது எனக்கு அப்போ புரியலை… அப்போ தான் மாசிலாமணி அங்கிள் உன்னை பெண் கேட்கலாமான்னு கேட்டாங்க… உள்ளுக்குள்ள ஏதோ உறுத்துச்சு… அப்போவும் உன்னை பார்க்க ஒரு வாய்ப்பா தான் என் மனசு நினைச்சுருக்கு… அப்புறம் உன்னை பிரெண்ட் ஆக்கிகிட்டது… எல்லாமே என் மனசு போட்டுகிட்ட வெளி வேஷம் தான் திவிகுட்டி…” என்று கூறிவிட்டு நிறுத்தவும்…

“ம்ம்ம்ம்… அப்புறம்…” என்று கேட்டவளை தன் கைகளுக்குள் இறுக்கி கொண்டே…

“அன்னைக்கு அர்விந்தோட டின்னர் போனோம் இல்லையா… அன்னைக்குத்தான்…” என்று கூறிவிட்டு இடைவெளி விட…

“ம்ம்ம்… அன்னைக்குத்தான்…” எதிர்பார்ப்பாக கேட்டாள்!

“முழுசா நான் புரிஞ்சுகிட்டேன்…”

“என்னன்னு…” மெல்லிய குரலில் திவ்யா கேட்க…

“உன்னை என்னால யாருக்கும் விட்டு தர முடியாதுன்னு… என்னாலும் வேற யாரையும் உயிரா நினைக்க முடியாதுன்னு…” என்று அவள் காதில் மயக்கத்தோடு கூறி அவளை இறுக்கி கொள்ள…

“ஹேய்… இது ஹாஸ்பிடல்…” அவசரமாக அவள் விலக பார்க்க…

“ம்ம்ம்… தெரியுது திவி… கதவை லாக் பண்ணி இருக்கேன்… யாராச்சும் வரதுன்னா கதவை தட்டுவாங்க… அது வரைக்கும்… ப்ளீஸ்…” என்று மீண்டும் அவளை இறுக்கி கொள்ள உலகம் மறந்தது இருவருக்கும்…

“அன்னைக்கு தான் நானும்…” என்று ஆரம்பித்த திவ்யாவை சட்டென விலக்கி அவளது கண்களை ஆர்வமாக நோக்கினான்… அவளது கண்கள் தாழ்ந்தது… வெட்கத்தினால் முகம் சிவக்க…

“ஹேய்… என்ன சொல்ற… யூ மீன்…” சந்தோஷத்தில் வார்ர்தைகள் தடுமாறியது கார்த்திகேயனுக்கு!

“ம்ம்ம்… தடுமாறினேன்… ஆனா ஷாலினிய நினைச்சு கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்…” என்று கூறியவளை சந்தோஷம் கொப்பளிக்க இறுக்கமாக அணைத்து கொண்டான்!

“ஆனா அப்போ எனக்கு கடமை தான் பெருசா தெரிஞ்சது… என்னோட லட்சியம்… எல்லாம்…” என்று கூறி அவள் இடைவெளி விட…

“புரிஞ்சுகிட்டேன்டா செல்லம்… ஆனா ஒரு உண்மைய சொல்லட்டா… அந்த விஷயம்… நான் நடந்துகிட்ட முறை தப்பு தான்… ரொம்ப தப்பு தான்… அன்னைக்கு நடந்ததுக்கு உன் கிட்ட நான் சாரி கேக்கலாம்… ஆனா…” என்று…

“ம்ம்ம்… ஆனா…” கண்களில் குறும்பு புன்னகையோடு…

“என்னால என்னைக்குமே மறக்கவே முடியாத இனிப்பான சம்பவம்… என்னோட திவிய முழுசா என்னோட திவி ஆக்கிகிட்டேன் இல்லையா…” என்று அவளது காது மடல்களை உதடால் வருடி கொண்டே கிசுகிசுத்து விட்டு மெலிதாக முத்தமிட… திவ்யா உடல் சிலிர்த்தாள்! படுக்கையில் அவனும் அமர்ந்திருந்து அவனது நெஞ்சில் சாய்ந்து இருந்தவளின் கைகள் கார்த்தி வசம் இருக்க… அவனது அணைப்பு இறுகியது… இருவருமே அந்த மயக்கத்தில்… கிறக்கத்தில்… தங்களை மறந்து இருந்தனர்!

“அந்த மாலை பொழுதை நிஜமா என்னால மறக்கவே முடியாது திவி… ஹேய் உன்னை நினைச்சு கவிதையெல்லாம் கூட எழுதி இருக்கேன் தெரியுமா?” என்று வெட்கமாக கூறி கழுத்தில் முத்தமிட…

“அது எனக்கு தெரியுமே…” புன்னகையோடு குறும்பாக அவள் கூறினாள்!

“தெரியுமா… எப்படி…?” புரியாமல் கேட்டான்!

“ம்ம்ம்… இப்படித்தான்…” என்று அவனது செல்பேசியை காட்ட…

“ஹஹா… உடான்சு…” சிரித்தான்!

“ம்ம்ம்… இதுல ஸ்க்ரீன் சேவர்ல என் படத்தை பார்த்தேனா…” இழுத்தாள்!

“ம்ம்ம்… பார்த்து…” வேண்டுமென்றே குறும்பாக அவளை போலவே நடிக்க…

“அப்புறம் வேற என்னத்தான் வேலை பண்ணி வெச்சு இருக்கீங்கன்னு உங்க செல்ப்ப ஆராய்ச்சி பண்ணினேனா…”

“ம்ம்ம்… பண்ணி…” மீண்டும் அவளை போலவே கூற…

“அங்க தான் உங்க டைரி கிடைச்சுதா…” என்று கூறி விட்டு அவள் சிரிக்க…

“ஹேய்… அடிப்பாவி… எப்போ இந்த வேலை…” அவளை இறுக்கி கட்டி கொண்டு கேட்க…

“ஹா… ஹய்யோ… அதெல்லாம் எப்போவோ…” என்று கூறி விட்டு மீண்டும் சிரித்தாள்!

“உன்னோட துப்பறியர வேலைய இங்கயும் காட்டிட்டீயா?” என்று கூறி விட்டு…

“திவி…” கிறக்கமாக அழைத்தவனின் முகத்தை பார்க்காமல்…

“ம்ம்ம்…”

“உனக்கு இன்னமும் வருத்தம் ஏதாவது இருக்கா…” எதிர்பார்ப்புடன் அவளிடம் கேட்க…

“ம்ம்ம்ம்… இன்னமும் என்னை ஹாஸ்பிடல்ல வெச்சுட்டு இருக்கீங்களே… அதான்…” என்று மிகவும் சீரியசாக சொல்வது போல சொல்லவும்… ஒரு கணம் தாமதித்தவன்…

“ஹேய்… வாலு…” என்று மீண்டும் அணைத்து கொண்டான்! அவளும் புன்னகை சிந்த…

“கார்த்திக்…” மென்மையாக அவனை அழைத்தாள்… …

“என்னடா…”

“லவ் யூ டா…” கிசுகிசுப்பாக சொல்லி விட்டு மறுபுறம் திரும்பி கொள்ள…

“ம்ம்ம்… என்ன… என்ன சொல்ற? கேக்கவே இல்ல…” வேண்டுமென்றே சீண்டினான்!

“ச்சீ… போடா…” என்று வெட்கமாக அவனை தள்ளி விட்டு நகர்ந்து உட்கார்ந்தாள்!

“யாரோ வெட்கபடறது எல்லாம் ஓல்ட் பேஷன்ன்னு எப்போவோ சொன்னாங்கப்பா…” சரியான நேரத்தில் அவளை வாரினான் சிரித்து கொண்டே…

“அப்படியா… அது யாரு கார்த்திக்… எனக்கு தெரியலையே…” ஒன்றும் அறியாதது போல முகத்தை வைத்து கொண்டு அவள் கேட்க…

“ஆஹா… அப்படி போடு…” என்று சிரிக்க…

“கார்த்திக்… நீங்க சொன்னதுதான்… ஆத்மார்த்தமான காதல்ல வேற எதுவுமே தோணாது… இல்லையா…”

“ஆமாம்டா திவிகுட்டி… எதுவுமே தோணாது… அவங்களுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்க தோணும்… உயிரையும் கூட…” என்று ஆழ்ந்த குரலில் அவன் கூறவும்… அவனது வாயை கை வைத்து மூடினாள்!

“நோ… கார்த்திக்… ப்ளீஸ்…” என்றவளின் கைக்கு முத்தமிட்டான்!

அதற்கு மேல் பேசுவதற்கு வார்த்தைகளில்லாமல் அவளை தன் தோளில் சாய்த்து கொண்டு கண்களை மூடி அமர்ந்து இருந்தவனின் மனம் சலனமற்ற நதியாக பயணம் செய்து கொண்டிருந்தது. திவ்யாவுமே அந்த மோன நிலையில் ஏதுமற்ற பரவெளியில் வியாபித்து கொண்டிருந்தாள்! மனம் அனைத்தையும் தாண்டிய உணர்வுகளற்ற ஏதோ ஒரு உணர்வில் லயித்து இருந்தது! அந்த பொதுவான பிரபஞ்ச மொழியில் மனங்கள் இரண்டும் ஒட்டி உறவாட வார்த்தைகள் மௌனித்து இருந்தன!

காதல் பெரியதா காமம் பெரியதா…

தேக சாலையில் நடந்து போகையில் காமம் பெரியது…

தேகம் என்பதை கடந்து போகையில் காதல் பெரியது…

காமம் இல்லா காதல் –அது கதவே இல்லா வீடு…

காதல் இல்லா காமம் –அது வீடே இல்லை காடு…

காமம் என்பது உடலில் நுழைந்ததும் உன்னை மிருகமாக்கும்…

உயிர்க்காதல் என்பது உயிரில் கலந்ததும் உன்னை புனிதமாக்கும்…

உடல் காமம் கடந்து போகும்!

உயிர் காதல் என்றும் வாழும்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 27

மொத்தமாக இருபத்தி ஐந்து நாள் கழித்து திவ்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட... டாக்டர் ஜானகியும் அவளை முழு பரிசோதனை செய்ய ஜிப்மர் வந்திருந்தாள்! திவ்யா குடும்பத்திலும் சரி கார்த்திகேயன் குடும்பத்திலும் சரி ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்து கொண்டே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்