அத்தியாயம் அறுபத்து நான்கு
பிடிவாதமாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். அழுத்தமான உதடுகளில் நிரந்தரமாக உறைந்திருந்தது சிறு புன்னகை. ஏசி காற்று ரொம்பவும் குளிர, ரிமோட்டை தேடியெடுத்து ஆஃப் செய்தாள்.
அவளது கையிலிருந்த ‘sm’ என்று பெயர் பொறிக்கப்பட்ட அந்த மோதிரத்தை திருகிக்கொண்டே அவனைப் பார்த்தாள். ஷ்யாமும் மஹாவுமாம்! இரண்டும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து இருந்தது. அதெப்படி அவனுக்கும் இதே யோசனை வந்தது என்று தெரியவில்லை அவளுக்கு. வெகு ஆச்சரியம் தான். மஹா வாங்கி வைத்திருந்த பரிசும் கிட்டத்தட்ட இதுவே தான்.
அது அவளுக்கு அவனது நூறாவது நாள் பரிசு. நூற்றிஓராவது நாளில், காதலெனும் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பின், மஹாவை அணைத்தபடி அவன் அணிவித்து விட்டது இது.
அதே போல அவனுக்கு அவளது பரிசை கொடுத்தபோது நிச்சயமாக அவனும் எதிர்பார்க்கவில்லை. இரண்டும் ஒன்று போலவே இருக்கும் என்று!
அதை நினைத்துக் கொண்டே, இன்ப பரபரப்பில் இருந்தவள், அவன் புறம் திரும்பி அவனது மீசையை திருகினாள்.
“எத்தனை சேட்டை பண்ணுது இது…” என்று மீசையின் இருபுறமும் திருகி இழுக்க,
“ஸ்ஸ்ஸ்… என்னடி பண்ற?” உறக்கத்திலேயே அவளை இன்னமும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“ம்ம்ம்… நீ தூங்கும் போது இந்த மீசைய ஷேவ் பண்ணி விட்ரலாமான்னு யோசிக்கறேன்…” என்று மீண்டும் அதே போல மீசையை இழுத்து வைக்க,
“மூஞ்சில கொஞ்சம் ஒழுங்கா இருக்கறதே அதுதான். அது மேல உனக்கு என்னடி இவ்வளவு காண்டு?” என்றவன், அவளது கழுத்து வளைவில் மீசையால் தேய்க்க, துள்ளினாள் மஹா.
“இதுக்கு தான் சொல்றேன்… அந்த மீசைய காலி பண்ண போறேன்…” என்று நறுக்கென்று கடித்து வைக்க,
‘ஆஆ…’ என்று விழித்துக் கொண்டு அலறியவன், “ஏய் ரத்த காட்டேரி…” என்று, அவளது இரண்டு கைகளையும் இறுக்கமாக பற்றி அவனுக்குள் சிறை செய்தான்.
“ஏய் வேணா… விட்ரு…” அவனிடமிருந்து தப்பிக்க முயன்றாலும் அவளால் முடிந்தால் தானே?
“முடியாதுடி… நீ தான கடிச்ச… நீயே மசாஜ் பண்ணி விடு…” கொஞ்சமும் இரக்கமில்லாத குரலில் கூற, மஹா குறும்பாக சிரித்தபடி,
“வேண்ணா பதிலுக்கு பதில் நீயும் பண்ணிக்க… என்னால மசாஜ் பண்ண முடியாதுப்பா…” என்று வம்பிழுக்க,
“உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லடி பொண்டாட்டி… எப்படி நீ ஹாஸ்பிடல் போறன்னு பாக்கறேன்…” என்றவன், அவள் மேல் புரண்டபடியே ஏசி ரிமோட்டை எடுத்து ஏசி ஆன் செய்தான்.
“அடப்பாவி… ஏசியை ஆஃப் பண்ணுடா…” அவனது வில்லங்கம் புரிந்து அவனை தள்ளிவிட முயல,
“முடியாது… இப்ப எனக்கு நீ ஒத்தடம் கொடுக்க போறியா? இல்லை…?” என்று இழுக்க, பாவமாக பார்த்தாள் மஹா!
“ப்ளீஸ்… ப்ளீஸ்… என் செல்லம்ல…”
“இல்ல…” என்றவனது குரலில் சற்றும் இரக்கமில்லை. வெடித்து கிளம்ப வேண்டிய சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினான்.
“ப்ளீஸ்… விட்டுடேன்… பிராடுத்தனம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு அலும்பு பண்ணாதடா. அதுவும் இன்னைக்கு லாஸ்ட் டே… இன்னைக்கு முக்கியமா போகணும்…” அவனது தாடையை பிடித்துக் கொஞ்சியவளை அதே இரக்கமற்ற பார்வையோடு,
“ஒத்தடம் குடு… இல்லைன்னா போக முடியாது…” என்றவனை கெஞ்சுதலாக பார்த்தவள்,
“மாமா…” என்று சிணுங்க,
“ம்ஹூம்…”
“மா… மா…”
“ம்ம்ம்ஹூம்…”
“மாமா… ப்ளீஸ் மாமா…” என்று கெஞ்ச,
“ஏன்டி… நீ கடிச்சதுக்கு நீயே ஒத்தடம் போடுன்னு சொல்றேன்… இல்லைன்னா…” என்றவன் மீண்டும் ஒரு மார்க்கமாய் இழுக்க,
“பாவ்வ்வ்வவ்வா…” கிறக்கமாய் இழுக்க, சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன், மயங்கினான், மொத்தமாக!
விக்கெட் கிளீன் போல்ட் மச்சி என்று அசரீரி ஒலித்தது!
“சரியான வில்லிடி நீ… ஹஸ்கியா பேசி ஏத்தியும் விடற… ஒண்ணுமே தெரியாதுங்கற மாதிரி சீனும் போட்டுக்கற…” என்றவன், விடாப்பிடியாக அவளிடமிருந்து வசூல் செய்துவிட்டு தான் விட்டான்.
“ச்சே… நான் ரொம்ப அப்பாவிப்பா… எனக்கு ஒண்ணுமே தெரியாது…” சில்மிஷமாக கூறியவளை பார்த்து சிரித்தபடி,
“ஆமா சொன்னாங்க… ஹிந்துல ஹெட்லைன்ஸ் இதுதானாம்…” கேலியாக கூற,
“அவங்களுக்கும் தெரிஞ்சு இருக்கு பாரேன்… ஒரு அப்பாவி பொண்ண கெடுத்து…” என்று ஆரம்பிக்க,
“ம்ம்ம்… கெடுத்து?” என்றவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தான். எப்போதுமே அவனது மனைவியின் தோரணை இப்படித்தான் இருக்கும். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் அதை இரண்டே நொடியில் மாற்றி விடுவாள்.
அவனுக்கு நரகத்தை காட்டியவளும் அவள் தான்… இப்போது சொர்க்கத்தை காட்டிக் கொண்டிருப்பவளும் அவளே தான்!
வெளியில் அவனது செயல்பாடுகள் எப்போதுமே மாறியதில்லை. ஆனால் வீட்டினுள் அவளை சுற்றி மட்டுமே அவனது உலகம் இயங்க ஆரம்பித்து இருந்தது.
“ரொம்ப விவகாரமான சுவாமிஜிடா நீ… உன்ட்ட ஒரு பேச்சு ஒரே மீனிங்ல பேச முடியுதா? அத்தனையும் க்ரீனிஷா மாத்திடற…”
“கோ கிரீன்னு (go green) சொன்னாங்கடி பொண்டாட்டி…” என்று ஷ்யாம் சிரிக்க,
“அடப்பாவி… பச்சை பசுமையா இருக்கனும்ன்னு கோ கிரீன்னு சொன்னா, அதை நீ எப்படி மாத்துற?” என்று மஹா சிரிக்க,
“ஆமா… பசுமையா தான் இருக்கு…” என்றவனது பார்வை போன திக்கை பார்த்து சிவந்து போனாள் அவனது மனைவி.
“ச்சீ… உன்னோட பிரைனே கரப்டட் பிரைன் டா பிசாசே…” என்று வெட்கமாக அவனை தள்ளி விட முயன்றாள். விட்டு விடுவானா அவன்!
“என்னடி பண்றது? மப்பும் மந்தாரமுமா பாத்துட்டு நார்மலா இருக்க முடியலையே…” என்றவன், அவளது கன்னத்தில் கோலமிட துவங்கியிருந்தான் உதடுகளால்!
அவனை வலுகட்டாயமாக தன்னிலிருந்து பிரித்து எடுத்தவள்,
“உன்னை விட்டா மார்னிங் ஷோ, மேட்னி ஷோன்னு மாத்தி மாத்தி பாப்படா… ஆளை விடு…” அவனது உதட்டை சுண்டி இழுத்தபடி மஹா கூற,
“ஒன்னு மீசைய பிடிச்சு இழுக்கணும், இல்லைன்னா உதட்டை பிடிச்சு இழுக்கணும்… ஏன்டி இப்படி பண்ற?” என்றவன் அவளது கன்னத்தை வலிக்காமல் கடிக்க,
“ஸ்ஸ்ஸ்… வலிக்குதுடா…” என்று சிணுங்க,
“பொய் சொல்லாத…” என்றபடியே, கடித்த இடத்தில் முத்தமிட்டான் அவளது கணவன்!
“எப்பா சாமி… உன்கூட பேசிட்டே இருந்தன்னா, ஹாஸ்பிடல்ல என்னோட மானம் கப்பலேறிடும்… இப்பவே பகல்ல தூங்கி வழியறேன்னு ஆளாளுக்கு கிண்டல் பண்றாளுங்க…” என்றபடி செல்பேசியை எடுத்து மணியை பார்க்க, எட்டாக பத்து நிமிடங்கள் என காட்டியது.
“ஐயோ மணி எட்டு பத்து…” என்று அலறினாள்!
“அதனால என்னடி பொண்டாட்டி?” என்றவன், அவளிடம் இன்னும் சில்மிஷங்களை தொடர்ந்து கொண்டிருக்க,
“காஞ்சிபுரம் தாண்டி போகணும் ஷ்யாம்… கண்டிப்பா லேட் ஆகிடும்…” என்று புலம்ப,
அவளது பயிற்சியில் இருக்கும் ரூரல் ஹெல்த் கேர் சென்டர் காஞ்சியை தாண்டி இருந்தது. மகாவுக்கும் பிருந்தாவுக்கும் ஒரு சென்டர், மற்ற இருவருக்கும் இன்னொரு சென்டர் என்று பிரித்து போட்டிருந்தனர். முதல் மாதம் அங்கேயே தங்கி பார்ப்பதாக இருந்ததை ஷ்யாமின் பிடிவாதத்தால் உத்தண்டியிலிருந்து வருவதாக மாற்றியிருந்தாள். ஆனால் அடுத்த மாதம் தங்கிதானாக வேண்டும் என்ற போது வேறு வழியில்லாமல் விட்டாலும், அவ்வப்போது இது போன்ற செல்ல விதிமீறல்களை செய்து விடுவான். அது வாரத்துக்கு இரண்டு முறை கூட நடக்கும் போதுதான் தோழிகளின் கேலியில் முகம் சிவந்து விடும் இவளுக்கு. ஆனாலும் எப்படியோ சமாளிப்பாள்.
“இதுக்கு பேசாம வீட்லயே இருந்துருக்கலாம்…” என்று மஹா ஷ்யாமை கடிந்து கொள்ள நேரும் போதெல்லாம்,
“ஏய் சும்மா இருந்தவனை சீண்டி ஏதேதோ பண்ண வெச்சுட்டு, இப்ப சலிச்சுக்கற…” என்று அவளை சீண்டுவது ஷ்யாமின் வழக்கமாகியிருந்தது.
அன்று தான் பயிற்சியின் கடைசி தினம் வேறு!
“நான் தான டிராப் பண்ணுவேன்… டோன்ட் வொர்ரி டார்லிங்…” என்று அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டவன், எழுந்து கொண்டான்!
“ஓவர் ஸ்பீட்ல போவ… அதுலயே எனக்கு கலங்கிரும் ஜிலேபி…”
“இந்த ஜிலேபிய விடவே மாட்டியா?”
“நீ மொதல்ல தமிழ் படிக்க கத்துக்க… அப்புறமா விட்டுடறேன்…” சிரித்தாள்.
“நல்லா தான பேசறேன்? அப்புறம் என்னடி பிரச்சனை?” அவளது மூக்கை பிடித்து ஆட்ட,
“ரொம்ம்ம்ம்ம்ப நல்லாத்தான் பேசற… க்ரீனிஷா…” என்று சிரித்தாள் மஹா.
“சரி… நீ எப்ப தெலுங்கு பேச கத்துக்க போற?”
“நீ கத்துக் கொடுத்தா கத்துக்க போறேன்…” சிரித்தவளை குறும்பாக பார்த்தான்.
“அப்ப வெவகாரமா கத்துக் கொடுக்க வேண்டியதுதான்…” என்று கள்ளத்தனமாக சிரித்தவனை பத்திரம் காட்டினாள்.
இவனில்லாவிட்டால் வாழ்க்கை இத்தனை வண்ணமயமாக இருந்திருக்குமா? தெரியவில்லை அவளுக்கு… அவளுக்காகவே யோசித்து, அவளுக்காகவே பேசி, அவளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அவளவனை கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தாள் மஹா!
“என்ன மகாலக்ஷ்மி… ஒரே சைட் சீயிங்?” ஷேவ் செய்து கொண்டே கேட்டவனையே காதலோடு பார்த்தாள்.
தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை கண்ணாடி வழியே பார்த்து கண்ணடிக்க, வெட்கமாக புன்னகைத்தாள்.
“உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து சாகத்தோன்றுதே…”
தலையணையை நெஞ்சோடு அணைத்ததுக் கொண்டு அதில் தலை சாய்த்தபடி அவனையே பார்த்தவாறு மஹா பாட, ஷ்யாமின் முகத்தில் புன்னகை!
“காலைல இப்படியெல்லாம் பாடி மூட ஏத்தி விட்டுட்டு அப்புறம் என்னை குறை சொல்லக் கூடாது…” என்று கூறியவன், ஆப்டர்ஷேவ் லோஷனை கன்னத்தில் தடவியபடி அவளருகே வந்தான்.
“இன்னும் முப்பது வருஷம் கழிச்சு, பேரன் பேத்தி எடுத்துட்டு உனக்கும் எனக்கும் நரைச்சதுக்கு அப்புறமும் இதையெல்லாம் பாடனும்டி என் செல்ல பொண்டாட்டி…” என்று அவள் முகத்தருகே குனிந்து அவளது கன்னத்தில் கையிலிருந்த ஆப்டர்ஷேவ் லோஷனை அவளது கன்னத்தில் தடவினான். அந்த வாடை எப்போதுமே அவளுக்கு அலர்ஜி என்பதால் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க இதை செய்வான்.
“உவ்வே… எரும… இந்த கர்மத்தை நீயே அப்பிக்க… நாறுது…” என்று முகத்தை சுளிக்க,
“யாரோ எப்பவோ எட்டு பத்துன்னு அலறினாங்கப்பா…” என்று சிரித்தபடி பாத்ரூமை நோக்கி போக,
“அய்யய்யோ…” என்றபடி அவனை முந்தினாள்.
“ஒய்… என்ன ஓடற?” என்றபடி அவளை மறிக்க,
“ஹய்யோ… விடுடா… டைமாகுது…” என்று குதிக்க ஆரம்பிக்க,
“ஆமா… டைமாகுது…” என்றான் குறும்பு கண்ணனாக!
“இப்ப வழிய விடப் போறியா இல்லையா?” முயன்று கடுமையைக் கொண்டு வந்தாள் மஹா. அடுத்து அவன் என்ன செய்வான் என்பதுதான் தெரிந்ததாயிற்றே!
“மஹா… டைமை சேவ் பண்ணனும்ல…” பொறுப்பாக கேட்டவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்,
“அதனால?” என்று கேட்க,
“தண்ணியையும் சேவ் பண்ணனும் குல்பி… இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைல ரொம்ப தண்ணி பஞ்சம் வந்துடுமாம்…” என்றான் அதே குறும்போடு!
“டேய்… அடுத்தது நீ என்ன சொல்ல வர்றன்னு தெரியும்… போதும் உன்னோட சமூக சேவை… நீ இந்த பாத்ரூம் யூஸ் பண்ணிக்க, நான் கெஸ்ட் ரூம் போறேன்…” என்று போனவளை வலுகட்டாயமாக இழுத்துக் கொண்டு போய், அடித்து பிடித்து ஒரு வழியாக கிளம்பி, பத்து மணிக்கு அவளது மருத்துவமனையில் விட்டான் ஷ்யாம்.
****
“சௌபாக்கியவதி ஸ்ரீபிருந்தாவுக்கும், திருநிறைச்செல்வன் கார்த்திகேயனுக்கும் நிகழும் விளம்பி வருடம் ஐப்பசி மாதம் இருபத்தி மூன்றாம் தேதி கன்யா லக்னத்தில் திருமணம் செய்வதாக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு நிச்சயிக்கப் படுகிறது.”
சமூக பெரியவர் லக்ன பத்திரிக்கை வாசிக்க, கார்த்திக் புன்னகைத்தபடி வெட்கத்தோடு நின்ற பிருந்தாவின் கைப்பற்றி மோதிரத்தை அணிவித்தான்.
“ஹேய்ய்ய்ய்ய்…” இளசுகளின் ஆர்ப்பாட்டம்!
பிருந்தா இளநிலை மருத்துவத்தை முடித்த பிறகுதான் திருமணம் என்பதில் பிடிவாதமாக இருந்த கார்த்திக், அதுபோலவே தான் அவள் படித்து முடித்தப் பின் தான் ஒப்புக் கொண்டான்.
நடுவே பல்லைக் கடித்த பிருந்தாவிடம், “ஷ்யாமை பாரு பிருந்தாகுட்டி… அங்கயும் இங்கயுமா அல்லாடுறான்… மஹாவை விட்டுட்டும் இருக்க முடியல… கூடவே வெச்சுக்கவும் முடியல… இந்த நிலைமை நமக்கும் தேவையா சொல்லு?” என்று கோக்குமாக்காக கேட்டு வைக்க, அவள் இன்னமும் பல்லைக் கடித்தாள்.
“நான் வந்தாதான் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் போவேன்னு உங்க தங்கச்சி அடம் பிடிக்கறா… அப்ப என்ன பண்ணுவீங்க ஆஃபீசர்?” என்று கடுப்பாக கேட்க,
“அது எப்படியும் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான்னு ஷ்யாமே முடிவு பண்ணிட்டது உனக்கு தெரியாதா செல்லக் குட்டி?” என்று கார்த்திக் சிரிக்க,
“என்ன சொல்றீங்க?” என்று கண்களை விரித்தாள் பிருந்தா!
“ஆமா… ஆமா… இப்போதைக்கு இங்க டிப்ளமா ஜாயின் பண்ணிக்கறதாம்… டிஜிஓ இல்லைன்னா வேற எதாச்சும்… ரெண்டு வருஷம் கழிச்சு எம்டி எம்பிஏ க்கு அனுப்பிக்கலாமாம்… அப்பவும் உங்க ரெண்டு பேர் கூட அம்மாவையும் அத்தையையும் பேக் பண்ணிருவானாம்… மாசத்துல பாதி நாள் அங்கேயே இருந்துக்குவானாம்… நான் வேணும்னா வந்துக்கறதாம்…” என்று சிரித்தான் கார்த்திக், பெருமையாக!
தங்கைக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் யோசிக்கும் ஷ்யாமின் மேல் அளவு கடந்த அன்பு, தோழமை அவனுக்கு!
மச்சான்களின் பெருமை பீதாம்பரம் எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும் என்பதை பிருந்தா அறிவாள் என்றாலும், உண்மையிலேயே ஷ்யாமின் இந்த பொறுப்பையும் அன்பையும் நினைத்து உவகையில் ஆழ்ந்தாள். இது தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த மஹாவை நினைக்கையில் சிரிப்பு வந்தது. கணவனை பிரியவும் முடியாமல், படித்தேயாக வேண்டும் என்ற அவனது பிடிவாதத்தை மீறவும் முடியாமல், தினம் புலம்புவதுதான் வாடிக்கையாக இருந்தது.
“இதையே நீ படிக்கறதால தான் படிக்கறேன்… இல்லைன்னா நான் எதுக்குடி அண்ணி இங்க வர்றேன்?” என்று புலம்பியவள், “இதுல இன்னும் அஞ்சு வருஷம், ஏழு வருஷம்… ம்ஹூம்… நான் வாங்கி வந்த வரம் அப்படி…” என்று விடாமல் புலம்பியிருந்தாள் முந்தைய தினம்!
“விடு மஹா… இப்பதான் படிக்க முடியும்… கிழவியானதுக்கு அப்புறம் உன்ன யாராச்சும் சேர்ப்பாங்களா?” என்று சமாதானம் செய்ய முயன்றாலும்,
“ம்ஹூம்… அவங்களை விட்டுட்டு என்னால அவ்ளோலாம் இருக்க முடியாது பிருந்தா…” என்றவள், அழுதே விட, பிருந்தா அணைத்து ஆறுதல்படுத்தி இருந்தாள்.
“மத்த ப்ரொபஷன் மாதிரி கிடையாது மஹா இந்த டாக்டர் ப்ரொபஷன். ரொம்ப அர்ப்பணிப்பு வேணும்ன்னு உனக்கே தெரியும். நிறைய விஷயத்தை தியாகம் பண்ணித்தான் ஆகணும். அதுவும் நீ வெறும் டாக்டர் இல்ல… சுஷ்ருதாவோட எதிர்கால எம்டி… நிறைய விஷயத்தை தெரிஞ்சுக்கணும். எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கற சாமர்த்தியம் இன்னும் நிறைய வரணும். நீ தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. ஹாஸ்பிடல், காலேஜ் எல்லாமே உன்னோட கண்ட்ரோல்லங்கும் போது இப்படியா படிக்க மாட்டேன்னு புலம்புவ?” என்று ஷ்யாம் வேறு கொட்டு வைத்திருந்தானாம்.
அதை சொல்லி வேறு இன்னும் புலம்பினாள் மஹா. அதையும் ஒருவாறாக சமாளித்து சமாதானம் செய்திருந்தாள் பிருந்தா. அதை நினைத்து தான் சிரித்தாள். ஷ்யாம் இப்படி திட்டமிட்டு இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியில் குதிப்பாள் என்பது திண்ணம்!
“எங்க அண்ணன் எவ்ளோ ப்ளான் பண்றாங்க… நீங்க என்னதான் பண்றீங்க?” என்று கார்த்திக்கை முறைத்தாள்.
“அதான் எனக்கும் சேர்த்து அவனே ப்ளான் பண்றான்ல செல்லம்…” என்று சிரித்தான் கார்த்திக்.
“ப்ச்… என்னங்க இது எப்ப பார்த்தாலும் வீட்டு மாப்பிள்ளைய அவன் இவன்னே சொல்லிட்டு இருக்கீங்க? மரியாதையாவா இருக்கு?” என்று பிருந்தா கடிய,
“வாங்க போங்கன்னு சொன்னா ஷ்யாமே ஓடிடுவான் பிருந்தாகுட்டி…” என்று அதற்கும் கார்த்திக் சிரிக்க,
“ம்ம்ம்ம்…” என்று அவனை முறைத்தவள், “அதுக்காக மத்த எல்லார் கிட்ட பேசும் போதும் அவன் இவன்னே சொல்வீங்களா? இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது மஹாவுக்கு கோபம் வராதா? அவளுக்கு கோபம் வரலைன்னாலும் இதே பழக்கம் தான எல்லா இடத்திலும் வரும்? அது தப்பில்லையா?” கொஞ்சம் தீவிரமான குரலிலேயே பிருந்தா கூற, சற்று சிந்தனை வயப்பட்ட கார்த்திக்,
“ம்ம்ம்… ஆமா பிருந்தா… இதை தான் நினைக்கவே இல்ல… அவனை நல்ல ப்ரெண்டா பார்த்தே பழகிட்டேனா, எனக்கு அப்படியே பழகிடுச்சு… இனிமே மத்தவங்க கிட்டயாவது மரியாதையா சொல்லணும்…” என்று கூற,
“இதுக்குதான் ஒரு ஆல் இன் ஆல் அழகுராணி வேணுங்கறது…” என்று கலாய்த்தா பிருந்தாவின் குறும்பை எண்ணியவாறு தான் அவளுடைய கைப்பிடித்து மோதிரம் போட்டு விட்டான் கார்த்திக்.
“என்ன பட்டர்ஹாஃப்…ரெடியா?” என்று அவள்புறம் குனிந்து கிசுகிசுப்பாக கேட்க, அவள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலைகுனிந்தவாறே உதட்டை கடித்தபடி நின்றாள்.
“டேய்… இன்னும் பத்து நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இப்பவே காத கடிக்கிறியே மச்சான்…” அருகில் நின்று கொண்டு ஒவ்வொன்றுக்கும் கார்த்திக்கை வாரிக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவனுக்கு ஆதரவாக ஒரு தொண்டர் படை வேறு!
“ஹலோ… நீங்க செய்யாததையா எங்க அண்ணன் செஞ்சுட்டாங்க? பாருங்க உங்க தங்கச்சி தான் ஊமை குசும்பி… மத்த நாள்ல அப்படி பேசுவாங்க… இப்ப என்னமா சீன் போடறாங்களாமாம்… வெட்கம்ம்ம்ம்…” ஷ்யாமுக்கு எதிராக நின்று கொண்டு கார்த்திக்கு ஆதரவாக, பெண்கள் கூட்டத்தோடு களமிறங்கி இருந்தாள் மஹா.
“மேடம்ஜி… உங்களுக்கு தான் அந்த ஐட்டத்துக்கு அர்த்தமே தெரியாதே… ஏதோ என் தங்கச்சிக்கு தெரிஞ்சு இருக்கு. கொஞ்சம் கத்துக்கங்க மேடம்ஜி…” என்று வகைதொகையில்லாமல் ஓட்ட, மற்ற இளசுகளுக்கும் உற்சாகம் பீறிட்டது.
அலங்கார பொம்மையாக பவனி வந்து கொண்டிருந்தாள் மஹா. அவளது திருமணத்தின் போது கூட எத்தனையோ குழப்பங்கள், மன வருத்தங்கள். அதில் அழகையும் மீறி பயம் அப்பியிருக்கும் அவளது முகத்தில், வாழ்க்கையை நினைத்து. ஆனால் இப்போது மனம் நிறைந்த இல்லறத்தின் பலனாக அவளது மணிவயிற்றில் சூல் கொண்டிருந்த புது வரவால் குடும்பமே குதூகலத்தில் இருந்தது.
ஷ்யாமை கேட்கவும் வேண்டுமோ?
மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். சொர்க்கம் என்பது இதுதான் என்பதை அவனும் உணர்ந்து அவளுக்கும் உணர்த்திக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து இரண்டு பக்கமும் அவளை தாங்க, அம்மணி கொஞ்சம் அதிகமாகத்தான் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
அதே சந்தோஷத்தோடு தமையனின் திருமண நிச்சயத்தில் தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தவளையே தொடர்ந்து கொண்டிருந்தது ஷ்யாமின் பார்வை!
அனைவரின் நண்பர் குழாமும் வந்திருக்க, அதில் ஸ்ரீராம் மட்டும் ஷ்யாமிடம் சற்று தள்ளியே நின்றிருந்தான்.
“டேய்… என்னடா பக்கத்துலையே வர மாட்டேங்கற?” என்று உரிமையாய் அவனது தோளில் கைபோட்டு தன்னோடு இழுத்துக் கொள்ள, அவன் நெளிந்தான்.
“சாரி மாமா… உங்க கிட்ட சாரி கேக்கக் கூட உங்க முன்னாடி வர ரொம்ப சங்கடமா இருந்துது… அதான் வரல…” திக்கித் திணறி கூறிவிட்டாலும்,
“பிரச்சனை எதுவா இருந்தாலும், அதுல ஒரு வாய்ப்பை இருக்கும் ஸ்ரீராம்…” என்று சிரித்த ஷ்யாமை ஆச்சரியமாக பார்த்தான் ஸ்ரீராம்.
“என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா மாமா?” என்று கேட்க,
“நீ அப்படி பண்ணதால தான, மஹா எந்தளவு என்னை லவ் பண்றான்னு அவளுக்கும் புரிஞ்சுது… அவ இல்லைன்னா நானே இல்லைன்னு எனக்கும் புரிஞ்சுது ஸ்ரீராம். இன்பாக்ட் நான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்…” என்று கூறியவனை உண்மையில் வியந்து பார்த்தான்.
“யு வார் சான்ஸ்லெஸ் மாமா…” என்றவனை, அணைத்துக் கொண்டான்.
“அடுத்த டார்கட் ஸ்ரீராமா? கலக்கு ஜிலேபி கலக்கு…” என்று கிண்டல் செய்துவிட்டுப் போன மனைவியை பார்த்து சிரித்தான் ஷ்யாம்.
“ஏய் பாத்துப் போ…” எப்போதும் போல துள்ளிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து அவ்வப்போது இப்படி அடக்குவது வாடிக்கையாகி இருந்தது அவனுக்கு!
நிச்சயத்திற்கு வந்திருந்த விஜய் முழுமையாக குணமாகி இருந்தான். பழைய தோற்றப் பொலிவு அவனிடம் வந்திருந்தது. ஷ்யாம் அருகிலேயே இருந்து அவன் சொல்லும் வேலைகளை முன்பை போலவே செய்து கொண்டிருந்தான். நடுவில் நடந்த கசப்புகளை எல்லாம் மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அதே போலத்தான் ஷ்யாமும்… ஆனால் திரும்ப வேலைக்கு எல்லாம் வரவில்லை. ஆனால் பார்க்கும் போதெல்லாம் அதே பழைய விஜி தான்!
ஷ்யாமும் தான்!
அவனுக்கு எப்போதும், ‘டேய் விஜி’ தான். விஜிக்கு எப்போதுமே ஷ்யாம், ‘பாஸ்’ தான்.
முன்பு சொன்னதை போல தனியாக தொழில் தொடங்கிருந்தான். ஷ்யாமே ஊக்கப்படுத்தினான். ஆனால் எதையும் விட்டுக் கொடுத்துவிட மாட்டான். விஜியும் எதிர்பார்க்க மாட்டான். இந்த பீல்ட் வெகு பழக்கமானது என்பதால் விஜிக்கு சற்று சுளுவாக இருந்தது. ஆனாலும் அத்தனை போட்டிகளையும் சமாளிக்கத்தான் வேண்டியிருந்தது. யாருக்குமே ரோஜா பாதை கிடைப்பதில்லையே! ஷ்யாமாக இருந்தாலுமே, அவனும் கடந்த வந்த பாதை என்பது முட்கள் சூழ்ந்தது தான் என்பதை விஜி உணர்ந்து இருந்தான்.
எப்போதாவது விஜியின் திருமணம் பற்றி வீட்டில் பேச்சு வரும் போதெல்லாம், மஹாவின் முகம் லேசாக நிழலாடும். ஆனால் அடுத்த நிமிடமே மனதை மாற்றிக் கொண்டு விடுவான்.
திருமண நிச்சயத்துக்கு வந்திருந்த விகாஷினி விஜியை திரும்பிப் பார்த்தபடி இருந்தாள். அதை அவ்வப்போது சிறு புன்னகையோடு மஹா கவனித்தும் கொண்டிருந்தாள். அதை விஜி அறியவில்லை.
பார்க்கலாம்… விதி என்ன வைத்திருக்கிறது என்று!
பிருந்தாவுக்கு தாய் இல்லையென்பதால் முழுக்க அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொண்டது ஜோதி தான். மனமுவந்து அத்தனை சடங்குகளையும் செய்து, தன் பெண்ணாகவே வரித்துக் கொண்டார் அவர். மகள் இல்லாததற்கு பிருந்தாவுக்கு அத்தனையும் செய்து அழகு பார்த்தார். ஜோதியின் ஒவ்வொரு செயலையும் நாதனும் சரி, ஷ்யாமும் சரி ரசித்து பார்த்து ஊக்கமும் படுத்தினர்.
ஷ்யாமுக்கும் மஹாவுக்கும் செய்த அனைத்தையும் பிருந்தாவுக்கும் கார்த்திக்கும் ஒரு குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் பைரவி வெகு தீர்மானமாக இருந்தார்.
இதில் ரொம்பவும் நெகிழ்ந்து போனது பிருந்தாவின் தந்தை சுப்பிரமணியம் தான்.
பணம் எவ்வளவுதான் இருந்தாலும், சிறு வயதிலேயே தாயை இழந்து விட்ட பிருந்தாவை தனிமையை உணர வைக்காமல் இருந்தது மஹா மட்டும் தான் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதிலும் பெரும்பாலும் அவர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய கட்டாயங்களின் போதெல்லாம் மஹா தான் பிருந்தாவுடன் நேரங்களை கழித்தது என்பதால் அவள் மேல் மிகுந்த பற்றுண்டு!
பிருந்தா மஹாவுடன் இருக்கிறாள் என்றாலே நிம்மதி பெருமூச்சு விடுபவர், இன்று அந்த மஹாவின் அண்ணனே தன்னுடைய மகளுக்கு மணவாளனாக போகிறான் என்பதில் வெகுவான நிம்மதி அவருக்கு!
அதோடு பைரவி, ஜோதி என்று ஒவ்வொருவரின் மேலும் அவ்வளவு மரியாதை வேறு!
அவர் தான் அவ்வளவு சந்தோஷாமாக அன்று வளைய வந்ததும்!
அதே சந்தோஷத்தோடு அடுத்த பத்தாவது நாளில் பிருந்தாவின் கழுத்தில் பொன் தாலியை அணிவித்தான் கார்த்திக். ஷ்யாம் புன்னகையோடு மஹாவை பார்க்க, அவளும் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் அத்தனை நிறைவு… அந்த நிறைவை பார்த்த ஷ்யாமின் முகம் விகசித்தது!
கண்ணே கனியே உன்னை கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே!
மாலை சூடிய காலைக் கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே!
ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது…
****
“ஹேய் டார்லிங்ங்ங்ங்…” என்றபடி வீட்டுக்குள் பெரிய புன்னகையோடு உள்ளே நுழைந்தான் ஷ்யாம்.
அவனது குரலை கேட்டு வேகமாக தவழ்ந்து வந்தது குட்டி பூந்தோட்டம், தான்யலக்ஷ்மி, ஷ்யாமின் செல்ல மகள்.
சுருக்கமாக தான்யா.
ஏழு மாதங்கள் மட்டுமேயான அழகி! தந்தையை நோக்கி அத்தனை ஆர்வமாக கைநீட்டிய மகளை வாரி அள்ளியணைத்துக் கொண்டான் ஷ்யாம்!
அவனது குரலுக்கு மஹாவும் ஆர்வமாக திரும்பிப் பார்க்க,
“ஏய் பொண்டாட்டி… நீ எதுக்குடி பார்க்கற? டார்லிங்னா என் செல்லக்குட்டி, பூக்குட்டி, பட்டுக் குட்டி மட்டும் தான்…” என்று முகத்துக்கு நேராக அந்த சின்னக்குட்டியை தூக்கி அதன் வயிற்றில் உதட்டை வைத்து குறுகுறுப்பூட்ட, கிளுகிளுத்து பொக்கை வாய் திறந்து சத்தமாக சிரித்தாள், அவன் மகள்!
“உன் டார்லிங்க நீயே வெச்சுக்க… இனிமே ரெண்டு பேருமே என் கிட்ட வராதீங்க…” என்று புன்னகையோடு கூறிவிட்டு மகளுக்கு இரவுணவு தயார் செய்ய போனாள் மஹா.
“டேய் பூனைக்குட்டி… நமக்கு அந்த டர்ட்டி அம்மா வேணா… அப்பா மட்டும் போதும் தான…” என்று அந்த பெரிய மனுஷியிடம் கேட்க, அது என்ன புரிந்ததோ சத்தமாக சிரித்தது. அவளுக்கு தந்தையை கண்டால் மட்டும் போதும், குஷியாகி விடுவாள். தந்தையின் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்கும். அவன் ஏதாவது வேலையாக இருந்து தூக்கவில்லை என்றால் கண்டிப்பாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடும்.
அவனது முகத்தை சப்பி வைத்து, கன்னத்தை கடித்து வைத்து, வாயில் கைவிட்டு உலப்பி விளையாண்டு என்று அத்தனையும் செய்து முடித்தாலும் தந்தையிடமிருந்து கீழே இறங்க மனம் வராது அந்த மகாராணிக்கு!
“ஏய் உன்னை வேணான்னு என் மக சொல்லிட்டா…” என்று அதற்கும் அவனது மனைவியையே அழைத்தான்.
“உன் மக வேறென்ன சொல்லுவா? உன்னை மாதிரிதான இருப்பா…” கேழ்வரகு கஞ்சியை கிண்டியபடியே வேண்டுமென்றே கணவனை சீண்டினாள் மஹா. இரவுணவின் போது மகேந்திரன் அருகில் வருவதில்லை. அது தங்களது குடும்பத்துக்கான நேரம் என்பதில் மஹா தெளிவாக இருந்தாள். சிரமமாக இருந்தாலும் அவள் மட்டும் தான் சமைப்பாள். குழந்தை பிறப்பதற்கு நான்கைந்து மாதங்கள் முன்பிருந்தே ஜோதியும் உடன் சேர்ந்து கொண்டார்.
“ஆமா… அவளுக்கும் போரடிக்காதா?” மகளின் மூக்கோடு மூக்கை உரசி விளையாடியபடியே மஹாவுக்கு பதில் கொடுத்தவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டார் ஜோதி.
“உங்க ரெண்டு பேரையும் எந்த கேடகரில சேர்க்கறதுன்னே தெரியல…” என்று சிரித்தவரை பார்த்து,
“ஆமா… அப்படியே உங்க மகன் ஒரு கேடகரில அடங்கிடற ஆள் பாருங்க…” என்று சிரிக்க,
“ஏன்? என் பையனுக்கு என்ன? அவனை மாதிரி ஒரு நல்ல பையனை இந்த ஊர் பாத்து இருக்குமா?” சிரித்தபடி கூறிய ஜோதியை பார்த்து குறும்பாக கையை காட்டி ஹைஃபை கொடுத்தான் ஷ்யாம்.
“பாத்து இருக்குமாவா? சான்ஸே இல்லத்த… உங்க பையனை மாதிரி ஒரு நல்லவன, இந்த ஊர் என்ன உலகமே பாத்து இருக்காது…” கிண்டலாக கூறிய மகாவை ஓரக்கண்ணால் பார்த்தவன், மகளிடம்,
“அவளுக்கு பொறாமைடா குட்டி… நம்ம அளவு அவ இல்லல்ல… அதான்…” என்று சத்தமாக மகளிடம் ரகசியம் பேச, அந்த பூக்குட்டி கிளுகிளுத்து சிரித்தது. அந்த சிரிப்பில் மயங்கியவன், குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டான்.
“ஆஹா… அப்பனையும் பொண்ணையும் பாத்து எனக்கு பொறாமையா? சொல்லுவீங்க சொல்லுவீங்க… ரெண்டு பேருக்கும் ரெண்டு வேளை சாப்பாட்டை கட் பண்ண வேண்டியதுதான்…” என்று சமையலறையிலிருந்து மஹா குரல் கொடுக்க,
“போடீ… நீயென்ன சாப்பாட்டை கட் பண்றது? என் மக இருக்கால்ல… எனக்கு இனிமே அவ சாப்பாடு போடுவா…” என்று குட்டியின் கால் பாதங்களை தன் முகத்தில் வைத்தபடி மனைவியை வம்பிழுத்தான்.
“டேய் மகனே… ஏழு மாச குட்டி உனக்கு சாப்பாடு போடுவாளா? இவளை நம்பி நீ உன் பொண்டாட்டியை பகைச்சுக்கற…” என்று நாதன் சிரிக்க,
“என் மக எனக்கு சாப்பாடு போடுவா நானா… என் மக தான் என்னை பாத்துக்குவா… என் கிட்ட அவ அம்மா சண்டை போட்டான்னா என் செல்லம் அவகிட்ட போய் டிஷ்யூம் டிஷ்யூம்ன்னு சண்டை போட்டு என்னை காப்பாத்துவா…” குட்டியின் தலையில் முட்டிக் கொண்டே அதனிடம் கூறுவதை போலவே சொல்லிக் கொண்டு, அதை செய்முறையிலும் செய்து காட்ட, அந்த வாண்டும், அவனை பின்பற்ற முனைந்து,
“டிசூம்… டிசூம்…” என்று சப்தம் எழுப்பி, அவனை போலவே செய்ய முயல,
“அச்சோ… எங்க பூனைக்குட்டி சூப்பரா சண்ட போடுதே… ஏய் பொண்டாட்டி ஜாக்கிரதைடி… எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்குதாக்கும்…” என்று குட்டியை அள்ளிக்கொள்ள, அதற்கு சிரிப்பு தாளவில்லை.
“ரொம்ப ஓவரா போகாத… வேணா…” என்று அங்கிருந்தே மஹா எச்சரிக்க, ஜோதி நாதன் என்று இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“நீ வாடா பூனைக்குட்டி… இங்க நம்மளை பாத்து எல்லாருமே பொறாமைப் படறாங்க… நாம கார்ல ஒரு ரவுன்ட் போயிட்டு வரலாம்… அந்த டர்ட்டி மம்மியும் நமக்கு வேணா… இந்த டர்ட்டி அவ்வாவும் வேணா… டர்ட்டி தாத்தாவும் வேணா…” என்று குட்டியை தூக்கிக் கொண்டு போனான் ஷ்யாம்.
“ஆமா இவுங்க மட்டும் தான் குட் அப்பா…” என்று மஹா சிரிக்க,
“ஆமா… என் பொண்ணுக்கு நான் மட்டும் தான் குட்… மத்த எல்லாரும் பேட், டர்ட்டி…” என்று மகளிடமே கூறிக் கொண்டிருக்க, அந்த சின்னக்குட்டி தகப்பனின் கூற்றை தலையாட்டி ஆமோதித்தது.
உலகத்தையே மறந்து விட்டு மகளிடம் ஆழ்ந்திருந்த மகனை சிரித்தபடி பார்த்திருந்தார் நாதன்.
ஜோதி இப்போது மகனுடனே தங்கியிருந்தார், குழந்தையையும் மருமகளையும் பார்த்துக் கொள்ளவென. நாதன் தான் அவ்வப்போது ஹைதராபாத் போய் அங்குள்ள நிலவரங்களை பார்த்துக் கொண்டிருந்தார். ஷ்யாம் இரண்டு தேவதைகளையும் விட்டு அவ்வளவாக போவதில்லை. எப்போதாவது என்ற நிலைதான்.
மஹா டிஎன்பியும் (கார்டியாலஜி), பிருந்தா டிஜிஓவும் படித்துக் கொண்டிருந்தனர். பிருந்தா கார்த்தியின் குழந்தை வரலக்ஷ்மிக்கு மூன்று மாதங்களே ஆகிருந்ததால் பைரவி பிருந்தாவை பார்த்துக் கொண்டார். முடிந்தளவு ஜோதியிடமே இருப்பாள் மஹா… வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை என்று பெசன்ட் நகர் போவது வழக்கமாகி இருந்தது.
பிருந்தாவின் தந்தை கூட, “பொண்ணுக்கு எப்படி லைப் அமையுமோ, அம்மா இல்லாத பொண்ணை நான் எப்படி பார்ப்பேன்னு ரொம்ப கவலைல இருந்தேன் க்கா… பணம் என்னக்கா பணம்… இப்படி மனுஷங்க எங்க கிடைப்பாங்க? உங்களால தான் இப்ப நான் நிம்மதியா இருக்கேன்…” என்று பைரவி ஜோதியின் கையை பிடித்து இருந்தார்.
தந்தையாக அவ்வளவு நிறைவு அவருக்குள்!
காலையில் மகளுக்கான தேவைகளை முடித்து விட்டு ஜோதியிடம் ஒப்படைத்து விட்டு கல்லூரிக்கு கிளம்பிவிடுவாள்.
இப்போதெல்லாம் படிப்பில் சற்று தீவிரம் வந்திருந்தது மஹாவுக்கு. டிஎன்பி முடிந்தவுடன் யூஎஸ் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.
மகளை அழைத்துக் கொண்டு போனவன், கொஞ்ச நேரம் மடியில் அமர வைத்து அவனது மகளே காரை ஓட்டியதாக பேர் பண்ணிவிட்டு, தோளில் சுமந்து கொண்டு வந்தான் ஷ்யாம்.
“நாம எப்படி கார் டிரைவ் பண்ணோம்னு அவ்வா கிட்ட சொல்லுங்க செல்லகுட்டி…” என்று டைனிங் டேபிள் மேல் மகளை அமர வைக்க, அவன் சொன்னதை புரிந்து கொண்டதோ இல்லையோ, வாயில் ‘டர்ர்ர்ர்’ என்று ஓட்டி தும்பிளி பறத்தியது!
“டேய்… இந்த குட்டி பொண்ணு கார் ஓட்டினாளா?” என்று அவனது முதுகிலேயே ஒன்று போட்டார் ஜோதி.
“ஏன் மீ… என் மக நாலு வயசுல எல்லாம் ப்ளைட்டே ஓட்டுவாளாக்கும்… என் பொண்ணு ஓட்ற ப்ளைட்ல உக்கார்ந்து தான் நான் போவேன்…” என்று சிரிக்க,
“அத்தை… அது ஒரு மக பைத்தியம்… அந்த பைத்தியம் முத்திப் போய் இப்படித்தான் உளரும்… கண்டுக்காதீங்க…”
இருவரும் அவனை கிண்டல் செய்வார்களே தவிர அவனது மகள் பைத்தியத்தில் அவர்களும் தான் ஆழ்ந்து போயிருந்தனர்.
இந்த மகள் பிறந்த போது அவன் செய்த அழுச்சாட்டியங்களை நினைத்துப் பார்த்தாள் மஹா.
பிரசவ வலியில் அவள் துடித்துக் கொண்டிருக்க, தானும் உடனிருந்தேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான் ஷ்யாம். உள்ளுக்குள் ஏக நடுக்கம் தான். ஆனாலும் அந்த நேரத்தில் மனைவியை தனியாக விட்டுவிட அவனால் முடியவில்லை. தலைவலிக்கே துடித்து போய்விடுவாளே என்று பயந்தவனால், இவள் எப்படி பிள்ளை பெறுவாள் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதோடு அவன் கண்ட பிரசவம் வேறு அவனை பயமுறுத்த, அவளை தனியே விடவே முடியாது என்று பிடிவாதமாக உடனிருந்தான்.
சொல்லிவிட்டானே தவிர, மனைவியின் வேதனையை தாள முடியாமல் அழுது விடுவான் போல, பொறுத்துப் பார்த்தவள், பிரசவம் பார்த்த மருத்துவரிடம்,
“இவரை முதல்ல வெளிய அனுப்புங்க டாக்டர்…” என்று கூறிவிட,
“இல்ல… நான் இமோஷனாக மாட்டேன் மஹா… ப்ளீஸ் இங்கயே இருக்கேன்…” என்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
ஆனால் நேரமாக ஆக அவனது கட்டுப்பாடு குறைந்து, கடைசியில் கண்களில் கண்ணீர் குளம் கட்டி விட்டது அவனுக்கு!
ஐயோ அடுத்த குழந்தை வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்தது. பிரசவ வைராக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் கூடத்தான்!
ஆனால் அவை யாவும் அந்த பூக்குவியலை கையிலேந்தும் வரை தான்.
மேனி சிலிர்க்க தன் மகளை கையிலேந்தியவாறு பிரசவ மயக்கத்தோடு புன்னகைத்த மனைவியை பார்த்து காதலாக, ஆசையாக, பெருமிதமாக புன்னகைத்த கணவனின் முகத்தை ஆயுளுக்கும் மறக்க முடியுமா?
முடியாது… முடியவே முடியாது!
தான்யாவை பெற்றதோடு மஹாவின் வேலை முடிந்து விட்டது. ஆனால் அதற்கு பின் ஒவ்வொரு நொடியும் மகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தான் ஷ்யாம். கூடவே மனைவியையும்!
****
மகளை தூங்க செய்து விட்டு படுக்க வந்தாள் மஹா!
“ஷப்பா… எவ்வளவு தாண்டி வந்திருக்கோம்… நினைச்சு பார்க்கும் போது மலைப்பா இருக்கு ஷ்யாம்…” என்றவளை பார்த்து புன்னகைத்தான்!
“தாண்டி வந்து இருக்கோம்னா என்ன குல்பி?”
“புரியலடா…” புரியாத பார்வை பார்த்தாள்!
“வாழ்க்கைல டெஸ்டினேஷன் அதாவது முடிவிடம்ன்னு ஒன்னு கிடையாது மஹா… கண்டினியஸ் ப்ராசஸ்… வந்து இருக்கோம்ன்னு சொல்ல எதுவும் நிரந்தரம் இல்ல… அது ஒரு நாவலும் இல்ல. க்ளைமாக்ஸ் முடியும் போது தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்ன்னு சொல்றதுக்கு… போயிட்டே இருக்கணும்… இல்லையா?” என்று கேட்க, மஹா சிரித்தாள்.
“சுவாமிஜி… ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று இன்னமும் சிரிக்க, தள்ளி அமர்ந்து கொண்டிருந்த அவளை தன்னோடு இழுத்து வைத்துப் பிணைத்துக் கொண்டான்.
“நீ இல்லைன்னா நான் என்னவாகி இருப்பேன் மஹா?” அவளது முகத்தை கையிலேந்தி கண்களை நேராக பார்த்து கேட்க, அவனது கைகளில் முத்தமிட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமாகி இருக்காது ஷ்யாம். இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிருப்ப…” என்று சாதரணமாக கூற, அவன் மறுத்து தலையசைத்தான்!
“கண்டிப்பா இருக்காது… என்னோட கேரக்டருக்கு அது செட் ஆகி இருக்காது… ஏதோ ஒன்னு தேடிகிட்டே இருந்தேன்… அது கிடைக்கற வரைக்கும் தேடிக்கிட்டே இருந்து இருக்கேன் மஹா…”
“அது இப்பவாவது கிடைச்சுதா?” என்று குறும்பாக கேட்டவளின் கண்களில் முத்தமிட்டவன்,
“ம்ம்ம்… கொப்பும் கொலையுமா மப்பும் மந்தாரமுமா…” என்றவனின் முகத்தில் அத்தனை சில்மிஷம்!
“அடப்பாவி…” என்றவள், அவனை அடிக்க கையோங்க, அவளது கையை பிடித்து தன்னோடு பிணைத்துக் கொண்டவன்,
“அம்மா மாதிரியே பொண்டாட்டி வேணும்ன்னு விநாயகர் ஆசைப்பட்டாராம்… அது தெரியுமா குல்பி?” என்றவன், அவளை அவனது மார்பின் மேல் சாய்த்துக் கொண்டு காதை மெலிதாக கடித்தான்.
“ம்ம்ம்… தெரியுமே…” என்றாள் மயங்க துவங்கியவாறு!
“நான் யார் கிட்ட என் அம்மா கிடைப்பாங்கன்னு தேடிட்டேன் போல…” என்று அவளது கழுத்து வளைவில் முகத்தை பதித்து முத்தமிட,
“ஆஹான்…” என்றாள், அவனைப் போல!
“விஜி லவ் பண்றான்னு தெரிஞ்சும் உன்னை அவன் கிட்ட இருந்து பிடுங்கியே ஆகணும்ன்னு ஏன் எனக்கு வெறி வரணும் மஹா?” கழுத்திலிருந்து கன்னத்துக்கு தன் பயணத்தை தொடர்ந்திருந்தான் ஷ்யாம்.
“ஆஹான்…” அவளது கண்கள் சொருகியது!
“பொண்ணுங்களை கஸ்டடிக்கு எடுத்ததுன்னு பார்த்தா, பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் நீ தான…” என்றவன், கன்னத்தில் உதட்டால் கோலமிட,
“ஆஹான்…” மயக்கத்தில் இருந்தாள் அவள்!
“அவ்வளவு பிரச்சனை வந்தப்பவும் எனக்கு நீ வேணும்ங்கறதுல பிடிவாதமா இருந்தேன்…”
“ஆஹான்…”
“இதுல இருந்து என்ன தெரியுது?” என்று கேள்வி கேட்க,
“என்ன தெரியுது?” என்று பதில் கேள்வி கேட்டாள்!
“நானாத்தான் ஆப்புல தேடிப் போய் உக்காந்துருக்கேன்னு தெரியுதுடி…” என்று கள்ளத்தனமாக சிரிக்க, அதுவரை மயங்கியிருந்தவள், நறுக்கென்று அவனது கன்னத்தை கடித்து வைத்தாள்!
“இதான்டா ஆப்பு…” என்று சிரிக்க,
“ஸ்ஸ்ஸ்ஆஆ…” என்று கத்த துவங்கியவன், மகள் விழித்துக் கொள்வாளோ என்று பயந்து சப்தத்தை குறைத்து, ‘ஆஆ’ வென, மஹா சிரித்தாள்.
“பூனைக்குட்டியும் இப்படியேதான்டி கடிச்சு வைக்கறா… அவளுக்கும் சொல்லிக் கொடுத்து தான் பெத்தியோ?”
“அதை உன் பூனைக்குட்டியைவே எழுப்பி கேக்கட்டா?” என்று கல்மிஷ புன்னகையோடு எழப் போக,
“ஏய்… விட்டா பண்ணுவ…” என்றவன் அவனது வேலையில் மும்முரமானான்.
“மாமா…” என்று சிணுங்கலாக அழைத்தாள் மகா. அவள் மாமாவென அழைத்தாலே அவனிடமிருந்து ஏதாவது காரியமாக வேண்டியிருக்குமே. இப்போது என்னவென அவளை குறும்பாக பார்த்தான்.
“சேஷா பையனை பாத்தியா?” என்று கேட்டாள். சேஷாவுக்கும் செந்திலுக்கும் அப்போதுதான் மகன் பிறந்து இருந்தான்.
“ஆமா… செம கியூட்டா இருக்கான்…”
“எனக்கும் பையன் வேணும்…” என்று அவன் புறம் திரும்பி ஆவலாக கேட்க, அவளை முறைத்தான்.
“ஏய் பூனைக்குட்டிகே ஒன்னரை வயசுதான்டி ஆகுது…”
“பெத்துக்கறதுன்னா இப்பவே இல்ல மாமா…” இன்னமும் சினுங்கியவளை பார்த்து சிரிக்க,
“எப்பவும் கிடையாது… மூச்… ஒரு தடவை நீ பட்ட வலியே போதுன்டா…” பிடிவாதமாக அவன் கூற, அன்று அவன் கொண்ட தவிப்பை இன்றும் உணர்ந்தாள்.
“நோ… எனக்கு இன்னும் நிறைய வேணும்…” அதே பிடிவாதத்தோடு கூறியவளை பார்த்து சிரித்தான்.
“ஏன்டி ஏதாவது ஸ்கூல் ஆரம்பிக்கற ஐடியா இருக்கா?” என்று கிண்டலாக கேட்க, குறும்பாக முறைத்தாள்.
“எனக்கு வேணும். டாட்…” என்றவள் தள்ளி அமர்ந்து கொள்ள, அவளது சில்மிஷப் பார்வை அவள் மேல் படர்ந்தது.
“வேணும்ன்னு சொல்லிட்டு தள்ளி இருந்துட்டா, கடைல கிடைக்குமாடி குல்பி?” என்று சிரித்தான் ஷ்யாம்.
“ஏய்…” என்றவள், அவனை வெட்கத்தோடு அடிக்க ஆரம்பிக்க, அவளை அணைத்துக் கொண்டு சிரித்தான்!
அடுத்த இரண்டாவது நாள் தான்யாவை ஜோதியிடமும் பைரவியிடமும் விட்டுவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தலகுப்பா கிளம்பியிருந்தான். ஓய்வு தேவைப்படும் போதெல்லாம் மனைவியையும் குழந்தையையும், உடன் கார்த்திக் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தலகுப்பா செல்வது வாடிக்கை தான்.
ஆனால் இந்த நாள் மட்டும் விதிவிலக்கு!
அவர்களது தனிமைக்குள் வேறு யாரையும் அன்று அனுமதிப்பதில்லை.
அந்த தனிமை, அந்த நாள் இருவருக்குமே மட்டுமே சொந்தம்!
அதன் காரணம் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம்!
முதன் முதலாக அந்த அருவிக்கரையில் மஹாவை முத்தமிட்டு காதலை அவன் சொன்னது அந்த நாளில் தான்!
இருவருக்குமே அந்த நாளும் அந்த அருவிக்கரையும் மிகவும் ஸ்பெஷல்.
அன்றும் பௌர்ணமி…
முழு நிலவு வானில் காய்ந்து கொண்டிருந்தது!
ஏரிக்கரையில் சிறு குடில் போன்ற அந்த டெண்ட்டுக்கு வெளியே அவனது முழங்கையோடு தன் கையை பிணைத்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தாள் மஹா!
அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர அவன் பேசவில்லை. ஆனால் பார்வை மொத்தமும் அவள் மேல்!
அங்கு இருக்கும் போதெல்லாம் அவன் இப்படிதான். பகலில் அவளை வெகுவாக சீண்டியபடி விளையாடிக் கொண்டிருப்பான். நீந்துவான். ஆனால் மாலையாகும் போதெல்லாம் அனைத்தையும் மறந்து விட்டு அவளை பார்த்தபடி மட்டும் தான் இருப்பான். பார்வையில் தாபம் கொட்டிக் கிடக்கும். இருவருக்குமே வெளியுலகம் மறந்து போயிருக்கும்!
“ஐ வான்ட் டூ கிஸ் யூ டார்லிங்…” அன்று முதன் முதலாக கூறியதை போலவே அவளது கண்களைப் பார்த்து கூற,
அவனது கண்களில் தெரிந்த காதலையும் ஆசையையும் தாபத்தையும் பார்த்து மெளனமாக உறைந்தாள். எப்போதுமே அவனுடையது அதீதக் காதல் என்றாலும் அந்த நாள் மிக மிக ஸ்பெஷல்!
அந்த இடைவெளியில் அவளது இடையைத் தன்னோடு சேர்த்தவன், அவளது இதழ்களை அணைத்திருந்தான்.
அழுத்தமாக… ஆழமாக… வன்மையாக… வன்மையில் மென்மையாக அவளது இதழில் கதை எழுதிக் கொண்டிருந்தான், நிதானமாக!
மஹா, தன்னை மறந்து, சுயம் தொலைத்து, ஏதுமற்ற பரவெளியில் படர்ந்து மீள முடியாமல் வியாபிக்க தொடங்கியிருந்தாள். அந்த முடிவிலா பரவெளியில் அவளோடு ஐக்கியமாகி ஒன்றிக் கலந்து தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான், ஷ்யாம்!
வீணையடி நீ எனக்கு… மேவும் விரல் நானுக்கு!
சுபம்





