arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் நாற்பத்து ஐந்து
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 45 / 64

அத்தியாயம் நாற்பத்து ஐந்து

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

சுஷ்ருதாவின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த அவனது பர்சனல் அறையிலிருந்து மாநகரத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ஷ்யாம். அது ஒரு சிறிய அறைதான். ஆனால் அத்தனை வசதிகளையும் கொண்டது. அவன் மட்டுமே உபயோகிப்பான். குட்டி பிரிஜ், ஓய்வெடுக்க சிறு கட்டில், எல்ஈடி என அவசரத்தேவைக்கான அறை.

வெளிச்சப் புள்ளிகளாய் வாகனங்கள். இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. ஏசியின் சில்லிப்பை மீறிய வெம்மை மனமெங்கும்!

ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு ஒய்ந்து நின்று கொண்டிருந்தான். அவனது கோபம் அதிகபட்சம் தான். ஆனால் அதை அவனால் தவறென்று கருத முடியவில்லை. இன்னமும் அவனது தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோவை காட்டி மஹா கேள்வி கேட்ட அவமானத்திலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. அதை நினைக்கும் போது விஜியின் மேல் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதோடு சௌஜன்யாவின் சந்தர்ப்பவாதம்.

அவளுக்கும் படங்கள் டிவிட்டரில் லீக் ஆனதற்கும் சம்பந்தமில்லை தான். ஆனால் தன்னோடு அவளிருந்த புகைப்படத்தை காரணம் காட்டி சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள முயன்றவளை என்ன செய்வது?

தலைவலி தாங்க முடியாமல் நெற்றியை பிடித்துக் கொண்டான்.

விஜியை ஓட ஓட விரட்டி அடித்தாயிற்று. ஆனால் அந்த கோபம் போய்விட்டதா? அந்த அவமானம் களையப்பட்டு விட்டதா? அவனது கரும்புள்ளி அழிக்கப்பட்டு விட்டதா? கோணலான பாதை நேராக்கப்பட்டு விட்டதா?

மனதுக்குள் இருந்த கசப்பை தூக்கி ஏறிய முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் முடியவில்லை. எத்தனை முயற்சி செய்தாலும் அது முடியாது என தெரிந்தது.

ஃப்ரிஜ்ஜிலிருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து ஷாட் க்ளாசில் ஊற்றினான். அவனுக்கு அப்போது அது மிகவுமே தேவைப்பட்டது. ஏதேனும் ஒரு போதை, தன்னை மறந்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கொஞ்சமான அவமானமில்லை. கூடவே இருந்தவன் குழிப் பறித்ததோடு இல்லாமல், இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் செய்து விட்ட ஆத்திரம் அடங்கவில்லை.

அவனறிந்து அவனை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் இதை விட மோசமான வாழ்க்கை முறையை கொண்டவர்கள் தான். ஆனால் வாழ்க்கை அவர்களை எல்லாம் வஞ்சிக்கவில்லையே!

கையிலிருந்த க்ளாசை உறுத்துப் பார்த்தான். தூக்கி அடிக்க வேண்டும் போல இருந்தது.

மகாவிடம் பேசலாம்… ஆறுதல் தேடலாம்… அவள் குத்திக் காட்டிய பிறகு, அவளிடம் பேச தயக்கமாக இருந்தது. மிகவும் சங்கடமான சூழ்நிலை… எதிர்கொண்டு தானாக வேண்டும்… ஆனால் எப்படி எனதான் தெரியவில்லை அவனுக்கு.

அப்படியும் மகாவுக்கு போனில் பேச முயற்சித்தான். முடியவில்லை. அவள் பேச மறுத்ததாக கார்த்திக் கூறியபோது வாழ்க்கை வெறுத்துத் தான் போனது. அவள் புரிந்து கொள்ளாதவள் அல்ல. ஆனால் மிகத் தீவிரமான ஷாக்கில் இருக்கிறாள் என்பதும் இவனுக்கு புரிந்தது. காதால், தான் கூற கேட்பது என்பது வேறு… அதை படமாகவும் வீடியோவாகவும் பார்ப்பது என்பது வேறு. கண்டிப்பாக அவளால் தன்னை மீட்டுக் கொள்வது கடினம் தான். ஆனால் அத்தனையும் மீறி கண்டிப்பாக காதல் இருக்கிறது. அது உறுதி… ஆனால் அவள் இவற்றையெல்லாம் மறந்து விட்டு தன்னோடு ஒன்றுவது என்பது? அதுதான் இப்போதைய மிகப் பெரிய கேள்வி அவன் முன்!

ஆனால் அவளால் எதை காட்டிலும் விஜியை ஷ்யாம் அடித்த முறையை மன்னிக்கவே முடியவில்லை என்பதை இவன் அறிய மாட்டான். இவனது இயல்பு இது, தனக்கு துரோகம் செய்தவர்களை எழவே விடாமல் அடித்து வீழ்த்துவதென்பது! ஆனால் அவள் இந்த ராட்சசனின் இன்னொரு சொரூபத்தை அறிய மாட்டாள் அல்லவா!

பழகிய வரை அவன் நல்லவன் இல்லையென்றாலும் மோசமானவன் இல்லை என்பதும், நேர்மையாளன், உண்மை விளம்பி, நம்பியவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சிறந்த மனிதன், ஆனால் பணம் திருப்பி தராவிட்டால் மிக மோசமான கறார் வட்டிக் கடைக்காரன் என்பது வரைதான் அறிந்து இருந்தாள். அதுவும் உண்மைதான். ஆனால் அவனுக்கும் இன்னொரு பக்கமும் உண்டு, அந்த பக்கத்தை ஜீரணித்துக் கொள்ளக் கூட முடியாது என்பதை இந்த மூன்று நாட்களாக தான் தெரிந்து கொண்டிருந்தாள். அவன் வாயிலாக தெரிந்து கொண்டவை போக, விஜியை அவன் கையாண்ட முறை வரைக்கும்.

அதிர்ந்து போயிருந்தாள். உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள் என்பதை அவன் அறியவில்லை. இத்தனை ஆக்ரோஷமும், ஆத்திரமும், வேகமும், வஞ்சமும் அமைதியான வாழ்க்கைக்கு எப்படி வழி கோலும்? அதுவுமில்லாமல் ஒரு ஆண்மகனை, அவன் எத்தகைய தவறு செய்திருப்பினும் நடு வீதியில் நிர்வாணமாக துரத்தி அடிப்பது என்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய காரியமா என்ற அவளின் ஆதங்கத்தை அவன் அறியமாட்டான். ஷ்யாம் ஒரு மனிதனே அல்ல என்று அவனது காதலி முடிவு செய்திருந்ததை அவன் எப்படி அறிவான்?

ஷ்யாம் அவனது குழப்பங்களில் உழன்று கொண்டிருந்தான்.

ஷ்யாமால் கார்த்திக்கிடம் கூட இயல்பாக பேச முடியவில்லை. மௌனமாகவே கூட இருந்து விட்டு மௌனமாகவே சென்று விட்டவனின் சங்கடமும் புரிந்தது. ஆனால் யாரிடமாவது மனம் விட்டு பேச முடியாதா என்று தோன்றியது.

ஆனால் யாரிடம் பேச?

ஆனால் எதுவும் பேசவும் முடியாது என்றும் தோன்றியது. ஒரே நேரத்தில் தனிமையை வெறுக்கவும் விரும்பவும் முடியுமா? அதுதான் நடந்து கொண்டிருந்தது அவனுக்கு…

அப்போது இருந்த மனநிலையில் யாரையும் நம்பவும் முடியவில்லை. அத்தனை பேரும் துரோகிகளாகவும் ஏமாற்று பேர்வழிகளாகவும் தோன்ற ஆரம்பித்து இருந்தது.

அவனுக்கும் புரிந்தது. அத்தனை பேரும் அப்படியல்ல என்று! ஆனால் அவனையும் அறியாமல், மனம் அந்த பாதையில் பயணிப்பதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒன்று… இரண்டு… மூன்று… வரிசையாக ஷாட்கள் உள்ளே போக ஆரம்பிக்க, சற்று கண்கள் சொருகியது. மிதமான போதை… தள்ளாடவெல்லாம் இல்லை. தன்னையுமறியாமல் மனம் லேசாக இருப்பதை போல உணர்ந்தான் ஷ்யாம். சிகரெட்டை தேடினான். அங்கிருந்த டீபாய் மேல் தான் வைத்த நினைவு.

தேடினான். கிடைக்கவில்லை. கதவு திறக்கும் சப்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான்.

கார்த்திக் தான் நின்றிருந்தான்!

“வா மச்சான்…” ஷ்யாம் புன்னகைக்க முயன்று தோற்றான்.

“என்ன மச்சான்… தனியா என்ன பண்ற?” சாதாரணம் போல கேட்டவாறு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் கார்த்திக். அவனுக்கும் புரிந்து இருந்தது அவனது நிலை.

தங்கை ஷ்யாமின் முகத்தை கூட பார்க்க முடியாது என்று அழுது கரைய, வீட்டில் இருந்த ஜோதியும் நாதனும் கூட அவளை சமாதானம் செய்ய முயன்று தோற்று இருந்தனர்.

பெரியவர்கள் அனைவருக்கும் விஜியை அடித்தது மட்டுமே தெரியும். அதன் பின்னணியை அவர்கள் அறியவில்லை. சொல்ல வேண்டாம் என்று கார்த்திக் கறாராக தெரிவித்து இருந்தான். அதற்கே ரொம்பவும் அதிர்ந்து இருந்தனர். நாதனுக்கும் ஜோதிக்கும் தங்கள் மகனின் இயல்பு தெரியும் என்பதால் அவர்கள் சற்று நிதானமாக இருந்தனர். ஆனால் முருகானந்தத்திற்க்கும் பைரவிக்கும் இது மிகப் பெரிய அதிர்ச்சிதான்.

காலை எழுந்த பிரச்சனை முதலே வீட்டில் தான் இருந்தனர் பெரியவர்கள் அனைவரும். இரவு செய்திகளில் நடந்த பிரச்னையை பார்த்தவருக்கு தூக்கி வாரிப்போட்டது. காலையில் பேசியில் அத்தனை கோபமாக பேசியவன், இரவு இந்தளவுக்கு அவனை அடித்திருக்கிறான் என்றால் என்ன பிரச்சனை என்பதுதான் அவர்களுக்கு முன் இருந்த மிகப்பெரிய கேள்வி.

“பயமா இருக்கு மச்சான்… மாப்பிள்ளைக்கு இந்தளவு கோபமா? என்ன பிரச்சனைன்னு தெரியலயே…” என்று முருகானந்தம் நாதனிடம் புலம்ப,

“கவலைப்படாத மாப்ள… எந்த பிரச்சனையா இருந்தாலும் அவன் சமாளிப்பான்ய்யா… ரெண்டு ஸ்டேட் அரசியல்வாதிங்க கண்லயும் விரலை விட்டு ஆட்றவன் அவன்… அவன் பேச்சை மீறி அவங்க காலை கூட எடுத்துக் வைக்க மாட்டாங்க… மஹா பிரச்சனையப்ப ஹைதராபாத்ல போலீஸ் டிஜிபி ட்ட சொல்லி உன் மாப்பிள்ளை இருக்க இடத்தை கொஞ்சம் பார்த்து கொடுய்யான்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆசாமியே பயந்துகிட்டு, இவன் எதாவது சொல்லிடுவான்னு என்கிட்ட இருந்து தப்பிச்சுகிட்டான்… அவன் பிரச்னையை தானா இழுத்துப் போட்டுக்கிட்டு மேல வர்றவன் மாப்ள… இப்ப என்ன பிரச்சனைன்னு தெரியல… ஆனா காரணம் இல்லாம அவன் எதுவும் பண்ண மாட்டான்யா…” நாதன் சமாதானமாக கூறிய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டாலும் அவருக்கு உள்ளுக்குள் உறுத்திக் கொண்டு தானிருந்தது.

“இருந்தாலும் மனசு என்னமோ பண்ணுது மச்சான்… மஹா முகமே சரியில்லை… எதுக்குமே அலட்டிக்காத புள்ளை அது… வானமே இடிஞ்சு பக்கத்துல விழுந்தாலும், அப்படியான்னு போகும்… கொஞ்சம் கோபம் வரும்… ஆனா அடுத்த நிமிஷம் அதுவே நம்மளை சமாதானம் பண்ணும்… அப்படிப்பட்ட என் பிள்ளை மூணு நாளா எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்துது… எதுவுமே பேசலை… இன்னைக்கு இப்படியொரு பிரச்சனை… என்னன்னே புரியல மச்சான்… எப்படியிருந்தாலும் பிள்ளைங்க நல்லா இருந்தா போதும்ன்னு நினைக்கறோம்… ஆனா மஹா மாப்பிள்ளை முகத்தை கூட பார்க்க மாட்டேன்னு அழுது…” என்றவருக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.

காலை முதல் பிரச்சனைகளை பேசியதிலும் தற்போது இந்த பிரச்சனையிலும் அவரது முகம் மாறிய விதத்தில் பயந்து போன நாதன், பைரவியை அழைத்தார்.

“பைரவி, கொஞ்சம் தண்ணீ கொண்டு வாம்மா…” முருகானந்தத்தின் நெஞ்சை நீவியபடியே சப்தமாக அழைக்க, ஹாலின் மூலையிலிருந்த கவுச்சில் முடங்கியபடி கண்களில் நீரோடு எல்ஈடியில் பார்வை இருந்தாலும் நினைவுகள் போக்கில் பயணித்தபடியிருந்த மஹா திடுக்கிட்டு பார்த்தாள்.

தந்தையின் உடல்நிலையை பற்றி சற்றும் நினைக்காமலிருந்த தன்னுடைய நினைவுகளை என்ன சொல்வது? தன்னுடைய பிரச்சனைகள் என்று அதில் ஆழ்ந்திருந்துவிட்டு தந்தையை மறந்த தன்னைத் தானே திட்டிக் கொண்டு அவரை நோக்கி போனாள்.

“ப்பா… என்னப்பா பண்ணுது?” என்றபடி அவரது நெஞ்சை நீவி விட்டபடி அவரது நாடியை ஆராய்ந்தவள், “கார்த்திண்ணா மாத்திரை பேகை எடுத்துட்டு வா…” என்று கேட்டவளுக்கு அவசரமாக எடுத்துக் கொடுத்தவன், தந்தை ஆசுவாசமாகும் வரை இருந்து பார்த்தான்.

நேரத்தை பார்த்தான். எட்டரையை கடந்து இருந்தது. தன்னை வீட்டில் டிராப் செய்துவிட்டு ஷ்யாம் மருத்துவமனைக்கு சென்றது அவனுக்கு தெரியும். அவனை இப்போது பார்த்தேயாக வேண்டும் என்று தோன்றியது. வீட்டிலிருக்கும் பிரச்சனைகள் ஒரு புறம் என்றால், அவன் ஏன் தன்னை இப்படி தனிமைப் படுத்திக் கொள்கிறான் என்றும் தோன்றியது.

இப்போதுள்ள அவனது மனநிலைக்கு குடும்பத்துடன் சேர்ந்து இருந்தால் சற்று அவனது உணர்ச்சி வேகங்கள் குறையும் என்று எண்ணியவன், அதை செயல்படுத்தவென அவன் முன் அமர்ந்தும் இருந்தான்.

ஷ்யாம் எதுவும் பேசாமல் ஜன்னலின் வழியே தெரிந்த இருண்ட வானத்தை வெறித்தபடி இருந்தான்.

அவனது கையில் மது!

இந்த இருளுக்கு ஏதோவொரு வசீகரம் இருக்கிறது. மனம் எத்தனை கனமாக இருந்தாலும், சற்று நேரம் இந்த இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தால் ஏதோவொரு நிம்மதி. அத்தனை துன்பங்களையும் அந்த கருமை உள்ளிழுத்துக் கொள்வது போன்ற பிரமை. அது உண்மையாகவும் இருக்கலாம். அந்த கருமையின் ஆர்ப்பரிக்கும் மௌனத்திற்கு சொல்ல முடியாத ஒரு ஆகர்ஷன சக்தி இருக்கத்தான் செய்கிறது. கனமான கணங்களை கரைக்க!

கார்த்திக் புறம் திரும்பியவன், இன்னொரு க்ளாஸில் விஸ்கியை பாதி மட்டும் நிறைத்து,

“சோடா?” என்று கேட்க, சற்று தயங்கிய கார்த்திக்,

“ம்ம்ம்… வித் ஐஸ்…” என்றவன், விஸ்கி க்ளாசை கையில் எடுத்துக் கொண்டான்.

வெகு நிதானமாக அருந்தினான் கார்த்திக்.

“அத்தை மாமால்லாம் வீட்ல தான் இருக்காங்க ஷ்யாம்…” என்ற கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் வெறுமை!

நம்பியவன் முதுகில் குத்த, காதலித்தவள் புரிந்து கொள்ள மறுக்க, அந்தரங்கம் ஊருக்கே வெளிச்சமிட்டு காட்டபட்டிருக்க, அதையும் சந்தர்ப்பவாதிகள் உபயோகிக்க நினைக்க என இவனது நிலையை எண்ணினால் கார்த்திக்கே பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. ஆனாலும் ஷ்யாம் அதையெல்லாம் சமாளித்து நிற்கிறானே என்று தான் தோன்றியது.

விஜி செய்த துரோகம் ஜீரணிக்க முடியாதது. ஷ்யாம் போன்ற ஒருவனிடம் இதை தானே எதிர்பார்க்க முடியும்?

ஆரம்பத்தில் அதிர்ந்தாலும், மனம் இப்போது ஷ்யாம் புறம் சாய்ந்தது.

இவனது இயல்பை அறிந்த விஜிக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று தான் புரியவில்லை. ஷ்யாம் சொல்வதை போல, அவன் செய்த தவறுகளை மகாவின் பெயரை சொல்லி தப்பிக்க பார்த்திருக்கிறான் என்று தான் தோன்றியது.

அதே உணர்வோடு அவனைப் பார்க்க, ஷ்யாம் இருளை வெறித்தபடி,

“ம்ம்ம்ம்…” என்றான்.

“தனியா இருக்காத மச்சான்… வா வீட்டுக்கு…” என்றவனை வெறுமையாக பார்த்தவன்,

“எந்த பக்கமிருந்து என்னை ஷூட் பண்ணிருப்பானே தெரியல கார்த்திக்… என்னன்னெமோ எனக்கு தோணுது…” கண்கள் எங்கோ பார்த்திருக்க, அவனது அந்த வார்த்தைகள் கார்த்திக்கை அதிர செய்தது.

“ப்ச்… அதெல்லாம் நினைக்காத ஷ்யாம்… கிளம்பி வா… இன்னைக்கு நம்ம வீட்ல ஸ்டே பண்ணிக்கலாம்…” என்று அழைத்தவனை உணர்வில்லாமல் பார்த்தவன்,

“யாரை கார்த்திக் நம்பறது?” என்று வேதனையாக கேட்க, கார்த்திக்கு அந்த கேள்வி வெகு வேதனையாக இருந்தது.

“நான் இல்லையா? மஹா இல்லையா? உனக்காக உன்னோட குடும்பம் மொத்தமும் இல்லையா? ஏன் இந்தளவு பீல் பண்ற ஷ்யாம்… நாங்க எல்லாருமே இருக்கமே…”

“மஹா…” என்றவன் கசப்பாக புன்னகைத்தான். “ஷீ டிசர்வ்ஸ் பெட்டர் இல்லையா?” கசப்பாகவே கேட்டவன் நிமிர்ந்து அவனது கண்களை ஆழ்ந்து பார்த்தான்.

கார்த்திக் மெளனமாக கீழே வெறித்தபடி அமர்ந்திருந்தான். ஷ்யாமுடைய கேள்விக்கு அவனது பதில் ஆமென்று தான் இருந்திருக்கும். ஆனால் அதை சொல்லவும் மனம் வரவில்லை. அவனது தங்கையின் மேல் ஷ்யாமுக்கு இருக்கும் நேசத்தின் அளவை புரிந்தவனால் அது போன்றதொதொரு பதிலை சொல்லவும் முடியாது. ஆனாலும் கூறினான்.

“நினைச்சிருக்கேன் ஷ்யாம்…” அதே ஆழ்ந்த பார்வை ஷ்யாமிடத்தில், மெலிதான கசந்த புன்னகையோடு!

“ம்ம்ம்…”

“மூர்த்தி இருக்கார்ல…” என்றவனுக்கு அதை கூற சற்று தயக்கமாக இருந்தது.

“ப்ரொடியுசர் விநாயகமூர்த்தியா?”

“ம்ம்ம்ம்… நம்ம பண பிரச்சனை இருந்தப்ப, அவர்கிட்ட என்ன பண்றதுன்னு ஒரு தடவை கேட்டேன்…”

“ம்ம்ம்ம்”

“ஷ்யாம் லேடீஸ் மேட்டர்ல செம வீக்… எவளாவது நடிகை இருந்தா அனுப்பி விடு… கொஞ்ச நாளைக்கு உன்னை விட்டுடுவான்ன்னு சொன்னார்… இன்னும் எத்தனையோ பேரும் இந்த வார்த்தையை கொஞ்சம் கூட மாத்தாம சொல்லி இருக்காங்க… உன்னை பார்க்க முடியுமான்னு கேட்டதுக்கு, நடிகையா இருந்தா பார்க்கலாம்ன்னு சொன்னவங்க எத்தனையோ பேர் ஷ்யாம்… சாரி டூ சே திஸ்… உன் மேல இருந்த இம்ப்ரஷன் இதுதான்…” விஸ்கியை பருகியபடி கார்த்திக் கூறியதை கேட்டவன், உணர்வுகளற்ற பார்வையை அவன் மேல் பதித்திருந்தான்.

“ம்ம்ம்… வெளிய எப்படி வேணும்னாலும் இம்ப்ரஷன் இருக்கலாம் கார்த்திக்… ஐ ம் லீஸ்ட் பாதர்ட்… பாஸ்ட்ல என்னோட லைஃப்ஸ்டைல் வேற… ஆனா எல்லாரும் சொல்ற அளவுக்கெல்லாம் இல்ல… தட்ஸ் எ கைண்ட் ஆப் லக்ஸுரி… நான் மிஸ் பண்ணலை… அவ்வளவுதான்… அதை தப்புன்னு நான் சொல்லவும் மாட்டேன்… நான் என்ன பண்ணேன், பண்றேன்னு எனக்கு தெரியும்… நான் தப்பு பண்ணிட்டேன், இப்ப திருந்திட்டேன்ன்னு சொல்றதெல்லாம் ஹம்பக்… போலித்தனம்… பியுச்சர்லயும் இதே மாதிரி இன்னொரு தடவை சொல்ல சந்தர்ப்பம் அமையாதா? யாரும் யாரையும் திருத்த முடியாது…” என்றவன் சற்று இடைவெளி விட்டு, கால் மேல் காலிட்டு, கைகளை கட்டியபடி கண்களை மூடிக் கொண்டவன்,

“மஹாவோட ரிலேஷன்ஷிப்ப சின்சியர் கமிட்மென்ட்டா பார்க்கறேன்… அவளுக்கு நேர்மையா இருக்கனும்ன்னு நினைக்கறேன்… இருக்க முடியாதுன்னு எனக்கு தோணி இருந்தா கண்டிப்பா ப்ரொபோஸ் பண்ணியிருக்க மாட்டேன்…” என்று நிறுத்தியவன், கண்களில் கனவோடு,

“அதுவும் ஒரு சிங்கிள் மொமென்ட்ல தோனுச்சு… மஹா இல்லாம என்னோட லைஃப் கம்ப்ளீட் ஆகாதுன்னு… ஐ லவ் தட் மொமென்ட்… அந்த மாதிரி மொமென்ட்ஸ் எனக்கு லைஃப் முழுக்க வேணும் கார்த்திக்…” என்றவனுக்கு அவன் இப்போதிருந்த சூழ்நிலையும் மீறி அன்று முதன்முதலாக அருவிக்கரையில் பரிமாறிக் கொண்ட முத்தம் அவனது நினைவுக்கு வந்தது.

அப்போதைய மயக்கம் அவன் கண்களில், கிறக்கம் குரலில்!

அதன் பின் அவளை முத்தமிட்ட ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு தேவ கணங்களே! எத்தனையோ பார்த்துவிட்டவனுக்கு, இது வெறும் முத்தம் தானே என்று தோன்றாத அளவு, உயிருக்குள் புகுந்து அவனுள் மாயம் செய்த முத்தங்கள்!

இனி அவளது கண்களில் தனக்கான தேடலை காண முடியுமா? அதே காதலோடு அவளால் அணுக முடியுமா?

அதிலும் அவள் கள்ளத்தனமாக கண்களால் அவனை தழுவிக் கொண்டே பாடிய அந்த ‘நீதானே…’ பாடலையும், அவளது கண்களின் பாவங்களையும், பாடலுக்கு பின் அவளோடு மயங்கிய அந்த நேரத்தையும் மறக்க முடியுமா?

முதல் முத்தம் மயங்க வைக்க, இரண்டாவது கிறங்க வைக்க, மூன்றாவது உடலை சிவக்க வைக்க என கூடிக் கொண்டே போன அந்த தேவ நிமிடங்கள்… கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு அவளை எடுத்துக் கொள்ள பரபரத்த கைகளை முயன்று அடக்கி வைத்தாலும் அன்று அவள் கண்களில் கண்ட காதல்… காதலோடு கூடிய தாகம்… தன் சுயம் தொலைந்த அந்த கணம்! மறக்க முடியுமா?!

மூச்சுக்காற்றின் வெப்பம் அவள் தோளுரச, இருவருக்குள்ளும் உணர்வு தீயை பற்ற வைக்க, காதோரம் குறுகுறுத்த மீசையின் உராய்வில் அவள் மயங்கி கண்களை மூடிய அந்த தருணம்… கல்வெட்டாக அவனது மனதில் பதிந்து தான் போயிருந்தது.

அவளது மயக்கம் அவனை பித்தம் கொள்ள வைத்து கட்டுக்களை உடைக்க முயல, மெலிதாக நடுங்கியவளை அணைத்துக் கொண்டவன் மனம் மகிழ்ச்சியில் ததும்பி வழிய, கடற்காற்றை அனுபவித்தபடி அந்த பிரெஞ்ச் விண்டோவிலேயே தலை சாய்த்தபடி அமர்ந்து விட்டிருந்தான். அவளும் அவனது நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டு கடலை பார்த்துக் கொண்டிருந்தது எத்தனை நேரம் என்று தெரியவில்லை.

அந்த நிறைவான நிமிடங்கள் இனி வாய்க்குமா?

முயன்று தன்னை மீட்டுக் கொண்டு விஸ்கி க்ளாஸை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

ஷ்யாமுடைய பட்டவர்த்தனமான, எதையும் ஒளிக்காத வார்த்தைகளை கேட்டவனுக்கு அவ்வளவு பிடித்தது.

“புரியுது மச்சான்… ஆனா நான் சொல்ல வந்தது என்னன்னா, அவங்க சொன்னதையெல்லாம் கேட்டுட்டு உன் கூட பேசவே கூடாதுன்னு சொன்னப்ப கூட என் தங்கச்சி எல்லாரையும் எதிர்த்துட்டு நின்னா… ஷ்யாமை பத்தி எனக்கு தெரியும்… அவன் உண்மையானவன்னு என்கிட்ட வாதம் பண்ணா…” என்று கார்த்தி கூறியதை கேட்டவனுக்கு மெல்லிய புன்னகை… கசப்புக்களை ஜீரணம் செய்துவிட்டு இனிப்பை அருந்திய புன்னகை… தனக்காக வாதம் செய்தவளை எண்ணி மனம் விகசித்தது. அவளை, அவளது அந்த நம்பிக்கையை இழந்து விட்டோமா என்ற பயமும் தன்னையும் அறியாமல் உள்ளுக்குள் பாம்பென சுருண்டதை அவனால் மறுக்க முடியவில்லை.

“அந்த மஹா எனக்கு வேணும் கார்த்திக்…” இருக்கையில் பின்னந்தலையை சாய்த்து கண்களை மூடியபடி சற்று சிறிய குரலில் கூறியவனின் குரலிலிருந்த வேதனை கார்த்திக்கை அசைத்தது.

“எனக்கு என்னவோ இந்த சிச்சுவேஷன்ல மேரேஜ் அந்த அளவு வொர்க் அவுட் ஆகும்ன்னு தோணலை மச்சான்… கொஞ்சம் தள்ளிப் போடலாமே?” என்று கூற, நிமிர்ந்து அவனை பார்த்தான்.

“முடியாது மச்சான்… இந்த சிச்சுவேஷன்ல தான் கண்டிப்பா மேரேஜ் நடந்தே ஆகனும்…” அவ்வளவு தீவிரமான குரலில் கூறியவனை புரியாமல் பார்த்தான்.

“ஏன்? கொஞ்சம் ஸ்பேஸ் கொடேன்… அவளும் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ணிடுவா ஷ்யாம்…”

“மீடியா என்னை டைஜஸ்ட் பண்ணிடும்… இதே விஷயத்தை பத்தி பேசி எழுதி… உப்ப்ப்…” என்று பெருமூச்சு விட்டவன், “இப்போதைக்கு அந்த லீக்ஸ்ல சம்பந்தப்பட்டது நான்னு வெளிய அவ்வளவா பரவலை… ஆனா இப்படியே இருக்காது… ஒன்ஸ் வெளிய பரவ ஆரம்பிச்சுடுச்சுன்னா கஷ்டம் கார்த்திக்… அதுக்குள்ளே அவங்க வாயை அடைக்கணும்… சோ மேரேஜ் இஸ் தி ஒன்லி சொல்யுஷன்… அதுவும் இல்லாம அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்க நான் விரும்பலை… இப்பவே என்னை விட்டு ரொம்ப தள்ளி போய்ட்டா…” வலியோடு கூறியவனை ஆதூரமாக பார்த்தவன்,

“இல்ல மச்சான்… இதெல்லாம் இனிஷியல் ஹிக்அப்ஸ் தான்… உன்னை ரொம்ப லவ் பண்றா… ஆனா ஓவர் பொசெசிவ்… அதனால தான் நான் உன்ட்ட சொன்னேன்… அவளோட டெம்பர் உனக்கு ஒத்து போகாதுன்னு… இப்பவும் ஒன்னும் தப்பில்ல… யோசி… கொள்ளிகட்டையால தலைய சொறியாதன்னு எங்கம்மா தான் சொல்லும்… இந்த மேரேஜ் உனக்கு ரொம்ப ரிஸ்க் ஷ்யாம்…” என்று தீவிர குரலில் கூறியவனை பார்த்து சிரித்தான்.

“பரவால்ல நான் சொறுஞ்சுக்கறேன்…” என்று சிரித்தவன், “எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணிக்கலாம் கார்த்திக்… ஆனா விட முடியாதுன்னா முடியாதுதான்…” என்று அழுத்தம்திருத்தமாக கூறியவனை பார்த்து சிரித்த கார்த்திக்,

“உன்னோட இந்த ஆட்டிடியுட் தான் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ற விஷயம் மச்சான்… இவ்வளவு தெளிவா இருக்க… விஜி விஷயத்துல கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கலாமே…”

நேரடியாக கேட்டான் கார்த்திக். விஸ்கி க்ளாசை ஒற்றைக் கையில் உருட்டியபடி யோசித்தான் ஷ்யாம். இது தனிப்பட்ட பிரச்சனையாக இருந்து இருந்தால் தான் இந்தளவுக்கு இறங்கி இருக்க போவதில்லை என்று தோன்றியது. கெமிக்கல் ரியாக்ஷன்களில் கேட்டலிஸ்ட் என்று சொல்வார்களே… அது போல… இங்கு மஹா!

அவளது கண்ணீர்… அவளது கோபம்… அவள் முன் தான் பட்ட அவமானம்… அவளது கேள்விகளுக்கு தன்னிடம் பதில் இல்லாமல் போன கணங்கள்… அவளை தன்னிடமிருந்து பிரிக்க நினைத்த விஜியின் நடவடிக்கை… அவள் தனக்கு மட்டும் தான் என்ற தன்னுடைய உள்மன வெறி… இப்படி அனைத்தும் அவளால்… அவளுக்காக… அவளே!

இதை எப்படி சொல்வது? அவளை காரணம் காட்டி தான் செய்தவற்றை நியாயப்படுத்துவது போல ஆகி விடாதா? தான் செய்த அனைத்துக்கும் தான் மட்டுமே பொறுப்பு. அது நல்லதோ கெட்டதோ… எதுவாக இருந்தாலும்… அவளால் செய்தேன் என்று சொல்வது எஸ்கேபிசம்… அது உண்மையாகவே இருந்தாலும் அதை தான் சொல்ல முடியாது. அந்த காரணங்கள் எல்லாம் தன்னுடைய உள்மனவெளிக்கு மட்டுமே சொந்தமானவை!

மெளனமாக இருப்பவனை பார்த்து, “கொஞ்சம் நிதானமா இருந்து இருக்கலாம்ன்னு இப்ப தோணுதா ஷ்யாம்?” என்று கேட்க,

மறுத்து தலையசைத்தான்.

“ஐ டேக் தி கம்ப்ளீட் ஓனர்ஷிப் ஃபார் வாட் ஹேப்பன்ட் கார்த்திக்… நிதானமா செஞ்சு இருக்கலாமோன்னு ரீஎக்சாமைன் பண்ணவும் மாட்டேன்… வேற மாதிரி இருக்கலாமோன்னு நினைக்கவும் மாட்டேன்… நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும்… தெரியாம பண்ணிட்டேன்னு சொன்னா அது…” என்றவன், சற்று நிறுத்தி, “இட்ஸ் எ கைன்ட் ஆப் டிஸ்ஹானஸ்டி… ஏமாற்றுவேலை… வஞ்சகம்… நான் அப்படி பண்ண மாட்டேன்… என்ன பண்ணாலும் அதை நான் பண்ணா, நான் அது என்னோட சுய உணர்வுல பண்ற வேலை தான்… நோ அதர் செகன்ட் தாட்…”

மிகத் தெளிவாக கூறியவனை ஆச்சரியமாக பார்த்தான். தவறு செய்துவிட்டால் அந்த பழியை மற்றவர்கள் மேல் திணித்து தான் தப்பித்துக் கொள்வதைத்தான் பார்த்து இருக்கிறான். ஆனால் ஷ்யாம்? அவனை பார்க்கும் போதே வியப்பாக இருந்தது.

“ஆனா அந்த வீடியோவும் போட்டோவும் எடுத்தப்ப எனக்கு சுயநினைவு இல்ல…” என்றவனை அதிர்ந்து பார்த்தான் கார்த்திக்.

“என்ன சொல்ற மச்சான்?”

“ம்ம்ம்… அன்னைக்கு கஞ்சான்னு ஏதோ ஒன்னு தந்தா அவ… நானும் ட்ரை பண்ணேன்…” எந்தவிதமான அசூயையும் இல்லாமல் வெளிப்படையாக அவன் கூற, கார்த்திக் இன்னமும் அதிர்ந்தான்.

“வாட்… க… கஞ்சாவா?” அதிர்ந்ததில் திக்கியது அவனுக்கு!

“ம்ம்ம்… ஒன்ஸ் ட்ரை பண்ணேன்… அதுக்கப்புறம் ட்ரை பண்ணலை…”

“எததான்டா விட்டு வெச்ச?” அதிர்வின் உச்சத்தில் கார்த்திக் கேட்க,

“எதையும் இல்ல… ஆனா அத்தனையும் அண்டர் கண்ட்ரோல்…” என்றவனுக்கு சிறு புன்னகை மலர்ந்தது.

“ம்ம்ம்… அப்புறம்?” கதை கேட்பவனின் பாவனையில் அவன் கேட்க,

“அப்புறம் என்ன? அப்படியொரு போதைய நான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணதே இல்ல… என்னென்னமோ பண்ணுச்சு… அப்புறம் கான்ஷியஸ் போய்டுச்சு… நெக்ஸ்ட் டே மார்னிங் தான் முழிச்சேன்… இந்த கேப்ல தான் விளையாடி இருக்கான்…” எனவும்,

“யோவ்… நீ விளையாடி இருக்கன்னு சொல்லு…” என்று கிண்டலாக கூறிய கார்த்திக், சற்று தீவிர பாவனையில், “அப்படீன்னா அந்த ஸ்டப்பை அவன் தான் சௌஜன்யா மூலமா கொடுக்க வெச்சு இருக்கணும்…” என்று நினைத்தவன், அதை சொல்லவும் செய்தான்.

“அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு கார்த்திக்…” என்று ஷ்யாமும் ஒப்புக் கொள்ள, அவனை ஆழமாக பார்த்தான் கார்த்திக்.

இவனுக்கு எத்தனை முகங்கள்?

“சரி… விஜிக்கு என்னாச்சு?”

“ம்ம்ம்… அவனை இங்க தான் அட்மிட் பண்ணிருக்காங்க… மூணு மாசத்துக்கு எழுந்து நடக்க முடியாது… அன்கான்ஷியஸா இருக்கான்…”

“இது கொஞ்சம் அதிகமில்லையா?” கவலையாக கேட்டவனை ஆழ்ந்து பார்த்தவன்,

“நம்ம கிட்ட இப்படி பண்ணிட்டு தப்பிச்சுடலாம்ன்னு இன்னொருத்தன் நினைச்சுட கூடாது… எப்பவுமே…” என்றவனின் முகம் அத்தனை இறுகி இருந்தது.

“சரி… விடு… நீ சாப்பிட்டியா?” என்று கார்த்திக் கேட்க,

மெளனமாக கையிலிருந்த விஸ்கியை பார்த்தான்.

“பசியில்ல கார்த்திக்… மஹா பேசுன பேச்சுல இன்னும் பத்து நாளைக்கு எனக்கு பசிக்காது…” என்று கசப்பாக சிரிக்க,

“ஏன் அப்படியென்ன பேசினா?”

“ப்ச்… வெளிய சொல்ல முடியாது மச்சான்…”

“இன்னும் வேற கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்ற… அப்படீன்னா நீ தினம் பட்டினி தான் கிடக்கணும்… ஒழுங்கா வா மச்சான்… எல்லாரும் வெய்ட் பண்றாங்க… அப்பாவுக்கு வேற மறுபடியும் கொஞ்சம் உடம்பு சரியில்ல…” எனவும், சட்டென பரபரத்தது ஷ்யாமுடைய விழிகள்.

“ஏன்? என்னாச்சு?” என்றவனை பார்த்தவன்,

“விஜியை நீ இப்படி ஓட விட்டு அடிச்சது மட்டும் தான்யா தெரியும்… அதுக்கே டென்ஷன் ஆகிட்டாங்க… மாமா தான் கூடவே இருக்காங்க… மஹா பார்த்துட்டு இருக்கா… உன்னை கூட்டிட்டு போனா எல்லாருமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க…” என்று அழைக்க, அதற்கும் மேல் மறுக்காமல் கிளம்பினான்.

“போனையே எடுக்க மாட்டேங்கறா… உன் தங்கச்சி கிட்ட அடி வாங்கி வைக்க ப்ளான் பண்ணி என்னை இழுத்துட்டு போறியா மச்சான்?” என்று சற்று வேடிக்கையாக கேட்டபடியே கிளம்ப,

“ரொம்ப பயந்துக்கறவன் தான் நீ…” என்று சிரித்தான் கார்த்திக்.

*****

வீட்டுக்குள்ளே நுழையும் போதே வெகு அமைதியாக இருந்தது. முருகானந்தம் கண்களை மூடியபடி சோபாவில் அமர்ந்திருக்க, உடன் அமர்ந்திருந்தார் ஆத்மநாதன்.

ஜோதியும், பைரவியும் டைனிங் டேபிளில் அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்க கிருஷ்ணம்மாள் ருத்ராக்ஷ மாலையை உருட்டியபடி சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தார்.

உடன் அமர்ந்திருந்த மஹா இருவரும் வருவதை பார்த்து, முகம் இறுக குனிந்து கொண்டாள்.

“மஹா… மச்சானுக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வாடா…” தமையன் ஷ்யாம் சார்பாக கேட்க, முறைத்தபடியே சொம்பில் நீரை நிறைத்துக் கொண்டு போனாள்.

ஆத்மநாதனின் அருகில் அமர்ந்து முருகானந்தத்திடம் பேசிக் கொண்டிருந்த ஷ்யாம் முன்பு நீட்டினாள்.

உள்ளுக்குள் கோபம் கொந்தளித்தபடி இருந்தது.

ஒன்றை ஜீரணிக்கும் முன்பே இன்னொன்று, அதை ஜீரணிக்கும் முன்பே இன்னொன்று என்று வரிசையாக கொடுத்துக் கொண்டிருப்பவனை என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆனால் எல்லோர் முன்பும் காட்டிக் கொள்ளவும் முடியாது.

ஆனால் ரவுடித்தனத்தின் உச்சமாக, மனிதத் தன்மையில்லாமல் ஷ்யாம் செய்ததை கொஞ்சமும் அவளால் ஏற்க முடியவில்லை.

“தண்ணி ரொம்ப சூடா இருக்கே மச்சான்… கொஞ்சம் சில்லுன்னு கொடுக்க சொல்லேன்…” நேரடியாக அவளிடம் கேட்காமல், மச்சானை தூது அனுப்பியவனை இன்னமுமே முறைத்தாள். அவன் புறம் குனிந்தவள்,

“வேண்ணா உன் ஆள் கிட்ட கேளு… நல்லா சில்லுன்னு கொடுப்பா…” என்று கடுகடுத்துவிட்டு நிமிர பார்க்க,

“என் ஆள் நீ தான்டி… உன் கிட்ட தான் கேக்க முடியும்…” சிரிக்காமல் கூற,

“நானெல்லாம் நத்திங்ன்னு சொன்னவனாச்சே நீ… உலக அழகிங்க எல்லாம் உன் காலடில கிடக்கறாங்கல்ல… நான் எம்மாத்திரம்…” பல்லைக் கடித்துக் கொண்டு கிசுகிசுப்பாக கூறியவளை இப்போது முறைத்தான் ஷ்யாம்.

இருவருக்குள்ளும் மீண்டும் ஏதோ ரசாபாசம் என்று உணர்ந்த கார்த்திக்,

“மஹா… மச்சானுக்கு டிபன் எடுத்து வை… இன்னைக்கு ஃபுல்லா சாப்பிடலை…” எனவும் அவள் ஆற்றாமையோடு அவனைப் பார்த்தாள்.

“அவங்க அவங்களுக்கா அக்கறை வேணும்…” என்று லேசாக முனுமுனுத்துவிட்டு போக, ஆத்மநாதன் மகனை உறுத்துப் பார்த்தார்.

“என்ன ஷ்யாம் பிரச்சனை?” என்று இறுக்கமாக கேட்க, மெளனமாக இருந்தான் ஷ்யாம்.

“உன்னைத்தான் கேக்கறேன்… ஏன் விஜியை அப்படி அடிச்சு இருக்க?” மீண்டும் கோபமாக கேட்க, தலையை குனிந்து கொண்டு கைகளை கட்டியபடி கால் மேல் காலிட்டபடி அமர்ந்து இருந்தான். அவனது தோரணை எப்போதுமே அப்படித்தான்.

“எப்பதான் அப்பன்னு என்னை மதிப்ப? நானெல்லாம் உனக்கு ஒப்புக்கு சப்பாணியா?” என்று கோபமாக கேட்க, மஹா பரிதவிப்பாக ஜோதியை பார்த்தாள்.

தன் வீட்டினர் முன் மாமனார் ஷ்யாமை இப்படி கடிய வேண்டுமா என்று தான் தோன்றியது. நாதனை கவனித்தபடி டைனிங் டேபிளிலில் உணவை அவசரமாக எடுத்து வைத்தாள்.

அவளது தவிப்பை கண்ட ஜோதி, “பாவா… பையன் காலைல இருந்து சாப்பிடலை… வந்தவுடனே பிடிச்சுக்காதீங்க…” என்று குரல் கொடுக்க, அவர் ஷ்யாமை முறைத்தார்.

“கண்டிக்க வேண்டிய நேரத்துல எல்லாம் உங்கம்மா இப்படியே காப்பாத்தித்தான் நீ இப்படி இருக்க ஷ்யாம்… உனக்கொரு பையன் பொறந்து இப்படி ராட்சசனா உன்னை கொடுமை பண்ணாத்தான்டா நீயெல்லாம் திருந்துவ…” என்று கடுப்பாக கூற,

“டோன்ட் ஒர்ரி நானா… உங்க மருமக பேரனை நல்லா வளர்த்துடுவா…” என்று புன்னகைத்தான். அதை டைனிங் ஹாலிலிருந்து கேட்டபடியிருந்தவளுக்கு சுருக்கென்றது. இவனது மகனா? அவனும் இவனை போலவே இருந்து விட்டால்? அடி வயிறு கலங்கியது. கலக்கம் கண்களுக்கும் எட்ட, கண்ணீர் சூழ பார்த்தது.

“அப்பவும் நீ திருந்த மாட்ட… இல்லையா?” நாதன் சூடாகவே கேட்க,

“திருந்த என்ன நானா இருக்கு? கொலை பண்ணேனா கொள்ளையடிச்சேனா?”

“அதை விட மோசம் டா நீ பண்றது… அந்த பயலை ஏன்டா அப்படி அடிச்ச?” என்று படு டென்ஷனாக அவர் கேட்க,

“அவன் தப்பு பண்ணான் நானா…” மொட்டையாக கூறிமுடிக்க பார்க்க, அவரது டென்ஷன் இன்னுமே எகிறியது.

“என்ன பண்ணா என்ன? நாலு செவுத்துக்குள்ள வெச்சு கூட வெளுத்து இருக்கலாம்ல… இப்படியுமா பண்ணுவ?” உண்மையிலேயே அவரால் மட்டுமல்ல, அங்கு யாராலும் ஜீரணிக்கத்தான் முடியவில்லை.

“அவன் பண்ணது ரொம்ப பெரிய தப்பு நானா…” அமைதியாகவே அவன் கூற,

“ஷ்யாம்… அதை முடிவு பண்ண உனக்கென்ன உரிமை இருக்கு? அவன் பண்ணது தப்புன்னா போலீஸ் இருக்கு, கோர்ட் இருக்கு… அதை விட்டுட்டு நடு ரோட்டுல அவனை நீ…” என்று கூற வந்தவர், சுற்றிலும் இருந்த பெண்களை கணக்கில் கொண்டு அமைதியாக முடிக்க, இவன் மௌனமாகினான். எதையும் தந்தையிடம் சொல்லக் கூடாது என்றில்லை. சொல்லி அவர் மனதை இன்னுமே காயப்படுத்த வேண்டுமா என்ற ஆற்றாமை தான்.

“மாமா… விடுங்க… ஷ்யாம் சாப்பிடட்டும்…” கார்த்திக் தயவாக நாதனிடம் கூற,

“ஆமா மச்சான்… இங்க வெச்சு பேசினா மாப்பிள்ளை சங்கடமா நினைக்க போறாரு…” என்று கூற,

“என்ன சங்கடம் வேண்டி கிடக்கு? நாளைக்கு அவன் உன்னோட மருமகன்… ரெண்டு வீட்டோட நல்லது கெட்டதுக்கும் அவன் தான் முன்னாடி நிக்கணும்… இப்படியெல்லாம் இன்னும் ரவுடித்தனம் செஞ்சா யார் மதிப்பா?”

“நானா… மத்தவங்களுக்காக நாம வாழ முடியாது…” என்றவனை முறைத்தவர்,

“இப்படியே பேசி என் வாயை அடைச்சு பழகிட்ட ஷ்யாம்…” என்று கம்மிய குரலில் கூற, அதற்கும் மேல் அவரிடம் மறைக்க முயலவில்லை. அருகில் சென்று அமர்ந்தவன், அவரது கையை பிடித்துக் கொண்டான்.

“நானா… நான் சொல்றதை பொறுமையா கேக்கணும்… டென்ஷனாக கூடாது…” என்றவன் கார்த்திக்கு கண்ணைக் காட்ட, அவன்,

“ப்பா… கொஞ்சம் வாங்கப்பா…” என்று தந்தையை அழைத்தான். இதையெல்லாம் கேட்டு இவர் வேறு இன்னும் டென்ஷனாக வேண்டுமா என்ற எண்ணம் தான் ஷ்யாமுக்கு! டைனிங் ஹாலில் இருந்த மகாவை அழைத்து தன்னோடு அமர வைத்துக் கொண்டான்.

முருகானந்தமும் இருவருக்கும் தனிமை கொடுத்து எழுந்து விட, சிறிய குரலில் நடந்தவற்றை, ஆங்காங்கே சிலவற்றை மறைத்து, கொஞ்சம் பூசி மொழுகி கூறினான்.

அத்தனையும் அப்படியே கூறிவிடலாம், ஆனால் அவரது மனம் புண் படும். உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று போனால் இவரது நிம்மதியும் தான் அழியும் அல்லவா!

ஆனால் தனிப்பட்ட தனது புகைப்படங்களை விஜி பகிர்ந்து விட்டான் எனும் போதே அவருக்கு ரத்தம் கொதித்தது. ஷ்யாமுடைய தந்தையல்லவா… என் மகனின் அந்தரங்கத்தை பகிர இவன் யார் என்ற கோபம்.

ஆனால் இன்னொரு மனமோ மகாவை நினைத்து கலங்கியது.

அத்தனை கலக்கமாக கண்களில் நீர் சூழ அமர்ந்திருந்த அந்த பெண்ணை பார்க்கையில் அவருக்கு மனம் கசிந்தது.

இத்தனையும் சகித்துக் கொண்டேயாக வேண்டிய கட்டாயம் இந்த பெண்ணுக்கு இருக்கிறதா என்ன?

தன் மகனை பற்றி நன்றாகவே அறிந்த அவருக்கு, அவன் செய்தது சரிதான் என்று தோன்றியது. ஆனால் மஹா?

சொல்லி முடித்தவன், கைகளை கோர்த்துக் கொண்டு முகத்தை தாங்கியபடி வேதனையோடு அமர்ந்து விட, அருகில் இருந்த மஹாவுக்கு மனம் கசிந்தது. அவனது கோபத்தை தாங்கிக் கொள்வாள். ஆனால் வேதனையை தாள முடியவே இல்லையே! ஆனாலும் அவன் செய்தது தவறுதான். அதை மறக்க முடியாதே!

“நான் யார நானா நம்பறது? இனிமே இவ பக்கத்துல உக்கார கூட கேமரா இருக்கான்னு ஆராயனுமா?” குனிந்தபடியே ஷ்யாம் கேட்க, மஹாவுக்கு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல இருந்தது.

நாதன் அவனது கைகளை பிடித்துக் கொண்டார்.

“நீ எதுக்குடா மத்தவனை நம்பனும்? உன் அப்பன் மலை மாதிரி இருக்கேன்… அந்த விஜிக்கு நீ கொடுத்த ட்ரீட்மென்ட் தப்பு தான்… ஆனா அவனை உள்ள வெச்சு வெளுத்து வாங்கியிருக்கணும்… ஆனா இன்னொரு விஷயம்… உனக்கும் மஹாக்கும்… கல்யாணம்… இப்ப தேவையா?” என்று கேட்க,

“ஏன் நானா?” ஒரு மாதிரியான குரலில் கேட்க, மகாவும் அதிர்ந்து பார்த்தாள்.

“இல்ல… அந்த புள்ளை மனசையும் பார்க்கனும்ல…” என்று தயங்க,

அவன் மறுப்பை தெரிவிக்க முயல்வதற்குள் மஹா முந்திக் கொண்டாள்.

“மாமா… இவங்க ஆயிரம் பேர் கூட பழகி இருக்கலாம்… இன்னும் சொல்வாங்க, உலக அழகிங்க எல்லாம் என்னோட காலடிலன்னு…” என்று அவள் கூறும் போதே இடையிட்டவன்,

“ஏய் விளையாட்டா சொன்னதையெல்லாம், ஏன்டி இப்படி சொல்லி மானத்தை வாங்கற?”

“உனக்கும் எனக்கும் பேச்சு இல்லை… என்கிட்டே பேசாத…” என்று கைகாட்டி அவனை நிறுத்தியவள், “நான் லவ் பண்ணது, பண்ணிட்டு இருக்கறது, இனிமே பண்ண போறது எல்லாம் இவங்க ஒருத்தங்களை மட்டும் தான்… என் தலைவிதி விழுந்து தொலைஞ்சுட்டேன்…” கடுப்பாக கூறினாலும், அதிலும் அவள் காதல் தெரிய, சிறு புன்னகையோடு அவளை பார்த்தான் ஷ்யாம்.

“இல்லம்மா… இப்ப உனக்கு ஈசியா தெரியலாம்… ஆனா பின்னாடி வாழ்க்கைல எந்த பிரச்னையும் வர கூடாது…” என்று கூறிய நாதனை பார்த்து,

“பின்னாடி வாழ்க்கையோ முன்னாடி வாழ்க்கையோ… எதுவா இருந்தாலும்… நான் மிசஸ் ஷ்யாம் மட்டும் தான் மாமா… நானே வேண்டாம்ன்னு நினைச்சாலும் என்னால இந்த பரதேசிய விட்டுட்டு இருக்க முடியும்ன்னு தோணலை… ஆனா எனக்கு இருக்க கோபத்துக்கு அப்படியே இவனை…” என்று பல்லைக் கடிக்க, அவள் ஒருமைக்கு மாறியதை கண்டுக் கொள்ளாமல் நாதன் சிரித்தார்.

அவள் கூறுகையில் கொஞ்சமும் விடாமல் அவளது முகத்தையும், அதில் தெரிந்த நவரசத்தையும், அவளது காதில் தொங்கிக் கொண்டிருந்த தொங்கட்டானின் அழகையும், அவளது உதடுகளையும், அது அழகாக வளைவதையும், அவளது கோபத்தையும், முக சிவப்பையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பெரியவர்கள் வந்திருப்பதால் சேலையில் இருந்தவளை குறும்பாக பார்த்தபடி இருந்தான்.

“டேய் தம்பி… உனக்குன்னு எப்படிடா இப்படி ஒரு ஏமாளி புள்ளை வாச்சுருக்கு?” என்று கேட்க,

“இவளை பார்த்தா உங்களுக்கு ஏமாளி மாதிரி தோணுதா?” என்று சலித்துக் கொண்டவன், “இந்த பிசாசோட ஒவ்வொரு கேள்வியும் புல்லட் மாதிரி… ஒன்னும் முடியல நானா…”

“அடேய் மகனே… உனக்கு இப்படியொரு பொண்ணு தான்டா வேணும்… இல்லைன்னா நீயல்லாம் அடங்கற கேஸா?”

“ஹும்ம்ம்… புலிய புல்லை திங்க வைக்க பாக்கறீங்க…” என்று சலிக்க,

“ஆமா… இவுங்க பெரிய புலியாக்கும்?” என்று உதட்டை சுளித்தவள், கடுப்போடு எழுந்து செல்ல, இவனும் புன்னகைத்துக் கொண்டான்.

மனம் சற்று லேசானதை போல இருந்தது.

அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்து விஜியை பற்றியும், அவன் எப்படி இருக்கிறான் என்பதையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

இளங்கவி, விஷ்ணு மற்றும் சிவச்சந்திரன் என்று அனைவருமாக விஜியிடம் இருந்த டாக்குமெண்ட்சை தேடிக் கொண்டு தான் இருந்தனர். ஆனாலும் இன்னமும் அவை சிக்கியபாடில்லை.

“அந்த புள்ளை பெருந்தன்மையா சொல்லலாம் ஷ்யாம்… ஆனா அது மனசுல எவ்வளவு கஷ்டமிருக்கும்? அதை புரிஞ்சுக்கணும் நீ…” என்று நாதன் சிறு குரலில் கூற,

“கண்டிப்பா நானா… எனக்கு புரியுது. ஆனா உங்க மருமக கிட்ட சொல்லி என்னை கண்கலங்காம பார்த்துக்க சொல்லுங்க…” என்று கிண்டலாக கூறியவனை, கார்த்திக்,

“சாப்பிட வா ஷ்யாம்…” என்றழைக்க,

“கொஞ்சம் ப்ரெஷ் அப் ஆகணுமே கார்த்திக்…” எனவும், கார்த்திக் மஹா புறம் திரும்பி,

“டேய் லட்டு… மச்சானை உன் ரூமுக்கு அழைச்சுட்டு போ…” என்று கூற, தமையனை முறைத்தாள். ‘ஏன் உன் ரூமுக்கு கூட்டிட்டு போயேன்…’ என்ற செய்தி அதனுள் ஒளிந்திருக்க, அதை அவளது உடன்பிறப்பு கண்டு கொண்டால் தானே!

முனுமுனுவென முணுமுணுத்துக் கொண்டே ஷ்யாமை பார்க்க, அவனோ கார்த்திக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். இருவருக்குமிடையே சங்கேத பாஷை போல… ‘திருடன்கள்’ என்று பல்லைக் கடித்தாள்.

“வர்றதுக்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா?” என்று சுருக்கென்று கேட்க, அவள் பக்கம் திரும்பிய ஷ்யாம்,

“ஏன் ஊதுபத்தியை விட்டுட்ட லட்டு? அதையும் வெச்சா ஒரு மார்க்கமா இருக்கும்ல…” கண்ணடித்தவனை முறைத்தாள்.

“என்ன மிஸஸ் ஷ்யாம்? ஒன்னும் சொல்லாம முறைக்கறீங்க? இதுல உங்க கருத்தை பதிவு செய்ய மாட்டீங்களா?” என்று கலாய்க்க,

“நீ பண்ண வேலைக்கெல்லாம் அது ஒன்னு தான் குறைச்சல்…” என்றபடி அவளது அறைக்குள் சென்றவள், ஒரு துண்டை எடுத்து அவன் முன் நீட்டி,

“ப்ரெஷ் ஆகிட்டு வா…” என்று வெளியேற முயல, அவளது கையைப் பிடித்து இழுத்து சுவரோடு ஒட்டியபடி நிற்க வைத்தான்.

அவள் அதிர்ந்து கதவை பார்க்க, ஆட்டோமேடிக் லாக் செவ்வனே தன் பணியை செய்திருந்தது.

“ஏய் என்ன பண்ற?” என்று கோபமாக கூறியபடி அவனை தள்ளி நிறுத்த முயல,

“என்ன பண்றேன்னு உனக்கு விளக்கம் வேற கொடுக்கனுமா?” என்று அவன் குறும்பாக புன்னகைக்க,

“வேண்டாம்…” என்று அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளி நிறுத்த அவள் முயல,

“ஹேய்… ரொம்ப சீன் காட்டாத…” என்றவன், “இன்னைக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கு… அதனால…” என்று இழுக்க,

“அதனால…” அதிர்ந்து பார்த்தாள்.

“நீ வேற இன்னைக்கு ரொம்ப பேசிட்ட குல்ஃபி…” என்று கவலையாக கூற,

“நீ என்ன ஊமையாவா இருந்த? நீயும்தான்டா பேசின…” எனவும்,

“சரி ரெண்டு பேருக்குமே டென்ஷனா இருக்குல்ல…” என்று சிரித்தபடி கேட்க,

“ம்ம்ம்… ஒன்னும் இல்ல… தள்ளி நில்லு…” என்று கடுப்பாக கூறினாள்.

“ம்ம்ம்… அப்படியா?” என்றவன், அவளது வெற்றிடையில் கைவைக்க, திக்கென்றது அவளுக்கு.

உருக முடியவில்லை… குழையவில்லை. அவளது அந்த இறுக்கம் அவனுக்கும் தெரிந்தது. அதுபோலத்தான் அவனுக்கும்.

முடியவில்லை. ஏதோவொரு உணர்ச்சி மனதை அழுத்தியது. அவளிடம் முன்பு போல நெருக்கத்தை காட்ட முடியவில்லை. இதுவே முன்னர் என்றால் அவளை பார்த்தவுடனே மனம் ஜிவ்வென்று பறக்கும். அணைக்க துடிக்கும். முத்தமிட தவிக்கும். ஆனாலும் வெகுவாக தன் மனதை அடக்கிக் கொண்டு புன்னகைப்பான்.

ஆனால் இப்போது அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழவில்லை. முதலில் தோன்றவில்லை. குற்ற உணர்ச்சி மனதை அழுத்தியது.

இந்த உணர்ச்சியோடு அவளை வாழ்நாள் முழுவதும் எதிர்நோக்க முடியுமா என்று தான் தோன்றியது.

அந்த உணர்வுகளை தள்ளி நிறுத்தியவன், அவளை புன்னகையோடு பார்த்தான். இப்போது இந்த உணர்வுகளை வளர விட்டால், அது சரி வராது என்று எண்ணிக் கொண்டான்.

“தள்ளி நில்லு ஷ்யாம்…” என்று அவள் தள்ளி நிறுத்த முயல,

“ம்ம்ம்… ஓகே மிசஸ் ஷ்யாம்…” என்றவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “இது மிசஸ் ஷ்யாம்ன்னு நீ சொன்னதுக்கு…” என்று கூற, அவள் ஒரு கன்னத்தை பற்றிக் கொண்டு அவனைப் பார்த்து முறைக்க, அவனோ, அவள் புறம் மீண்டும் குனிந்தவன்,

“இது காலைலருந்து என்னை திட்டினதுக்கு…” என்று இன்னொரு கன்னத்தை நறுக்கென்று கடித்து வைக்க, அவள் கத்த முயன்று அடக்கிக் கொண்டாள்.

கடித்த இடத்தை பற்றியபடியிருந்த அவளது கையை விலக்கி, மீண்டும் அதே இடத்தில் முத்தமிட்டு, “இது, எவ்வளவு கோபமா இருந்தாலும் எனக்காக பார்க்கற என்னோட ஸ்வீட்டிக்கு…” என்று கூற, அவனை முறைத்தாள்.

“போதும்… இதுக்கெல்லாம் மயங்கற ஆள் நானில்லை…” என்று இறுக்கமாக கூறிவிட்டு போக முயல,

“வேறேதுக்குடி மயங்குவ?” என்று சிரித்தான் ஷ்யாம்.

“ம்ம்ம்ம்…” என்று கடுப்பாக அவனிடம் துண்டைக் கொடுத்தவள், “நீ வா… நான் போறேன்…” என்றவள், கார்த்திக்கின் இரவு உடை ஒன்றையும் கொடுக்க,

“சொல்ல மாட்ட?” என்று அவன் கேட்க,

“நீ என்னடா கேட்டகரி?` ஒருத்தனை அப்படி போட்டு அடிச்சுட்டு, இப்ப என்னை கிஸ் பண்ணிட்டு இருக்க? உன்னால எப்படி இப்படி மாற முடியுது?” என்று ஆற்றாமையோடு கேட்க, அவளை மொத்தமாக தன்னுடைய கைகளுக்குள் கொண்டு வந்து, அவளது முகத்தைப் பற்றி, உதட்டோரத்தில் மென்மையாக முத்தமிட்டவன்,

“எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் நீ கூட இருந்தா அப்படியே காணாம போய்டறேன் மஹா…” என்றவனை ஆழமாக பார்த்தாள்.

அவனது மனநிலை புரிந்தது. அவன் இப்போது அவளிடம் அடைக்கலம் தேடும் பிள்ளை. அவளிடம் மட்டுமே அந்த அடைக்கலம் கிடைக்கும் என இவளுக்கும் தெரிந்தது தான். ஆனாலும் அவனிடம் ஒன்ற முடியவில்லை.

அவனுக்கு தான் ஆறுதலாக இருக்கலாம். ஆனால் அவனது நெருக்கம் அவளுக்கு முள்ளாக உறுத்தியது. விட்டு விலக சொன்னது.

“சரி… சீக்கிரமா சாப்பிட வா…” என்றபடி அவனை விலக்கிவிட்டு வெளியேறினாள்.

டிபனை உண்ணும் போது கூட வார்த்தைகள் அதிகமாக இல்லை. எல்லாரும் இரவு உணவை முன்னரே முடித்திருக்க, இவன் தான் கடைசி. ஜோதிதான் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். திருமணம் நிச்சயமானதிற்கு பின் பெண் வீட்டில் தங்குவதை எல்லாம் இரண்டு வீட்டிலுமே பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை.

முன்னமே பழக்கம் என்பதோடு, இப்போதைக்கு ஷ்யாமை தனியாக விட வேண்டாம் என்று கார்த்திக் கறாராக கூறியிருந்தான்.

அதோடு கூடவே அமர்ந்துகொண்டு தங்கையை ஏவிக் கொண்டே இருக்க, அவள் தமையனை முறைத்தபடியே செய்ய, ஷ்யாம் சிரித்தபடியே உண்டான்.

உணவை முடித்தவன், “கார்த்திக் கொஞ்ச நேரம் மொட்டை மாடில இருக்கேன்… எனக்கு பெட்ஷீட் தலைகாணி மட்டும் தாயேன்… அங்கேயே படுத்துக்கறேன்…” எனவும்,

“ஏன்? ரூம்ல படுக்கலாமே?”

“இல்ல மச்சான்… எனக்கு பிடிக்கும்…” என்றவன், மஹாவை பார்த்து புருவத்தை உயர்த்தி சிரித்தான்.

“நைட் முழுக்க ஆந்தையாட்டம் முழிச்சுட்டு இருக்கவன் எங்க படுத்தா என்ன கார்த்திண்ணா?” என்று இடித்தாள் மஹா.

சிரித்த கார்த்திக், “ஓகே… நானும் அங்கேயே படுத்துக்கறேன்… கொஞ்சம் வெய்ட் பண்ணு ஷ்யாம்… அங்க ஷிப்ட் பண்றேன்…” என்றவன் அவனறை நோக்கி போக, ஷ்யாம் மொட்டை மாடியை தஞ்சமடைந்தான்.

கார்த்திக் வலுகட்டாயமாக ஷ்யாமின் தனிமையை தவிர்ப்பது புரிந்தது. தனித்து விடக் கூடாது என்று அவன் எண்ணுவது புரிந்தது.

சிலுசிலுவென வீசிய காற்று அவனது மனதை குளிர வைக்கவில்லை. காய்ந்த நிலவும் அவனை குளிர வைக்கவில்லை. கடற்காற்று குளிர்ந்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில் படுப்பது அவனுக்கு பிடித்த ஒன்று!

அவன் முன்பு பாலை நீட்டினாள் மஹா.

புன்னகைத்தான்!

வாங்கியவன், அந்த தனிமையை அனுபவித்துக் கொண்டு, பாலை அருந்தியபடி, “கேக்க வந்ததை கேளு…” என்று கூற,

“நீ நிஜமா மனுஷன் தானா?” அவனை பார்த்தபடி கேட்க, அவன் யோசித்தான்.

“ஏன்?” என்று கேட்க,

“ஒரு மனுஷன் செய்யக் கூடிய காரியத்தையா அந்த விஜிக்கு நீ செஞ்சிருக்க?”

அவனது மனதை கேட்டுப் பார்த்தான். தவறே இல்லை என்றது.

“விஜி செஞ்ச காரியத்துக்கு அவனுக்கான தண்டனை…” என்று அவன் முடிக்க பார்க்க,

“நீ யார் அவனுக்கு தண்டனை கொடுக்க?”

“நான் கொடுக்காம வேற யார் கொடுப்பாங்க?”

“அதை பார்த்துக்க சட்டமும், போலீசும் இருக்கு… நீ இப்படி பண்ணலாமா?

“என்ன அப்படி பண்ணிட்டேன்?” என்று ஒன்றுமே இல்லாதது போல கேட்டு வைக்க,

“நீ பண்ணது ஒண்ணுமே இல்லையா ஷ்யாம்?” அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இல்லை… அவன் பண்ண காரியத்துக்கு முன்னாடி நான் பண்ணினது ஒண்ணுமே இல்லை…” என்று அழுத்தமாக கூறினான்.

“இவ்வளவு மிருகத்தனம் ஊறிப் போய் இருக்க மனுஷனையா நான் காதலிச்சேன்?” என்றவள், தலையைப் பிடித்துக் கொண்டாள்.

காற்று பலமாக வீசியது.

“ஆமா… நான் இப்படித்தான்…” என்றவன், “வேற வழி இல்ல… நீ இந்த மிருகத்தை நீ சகிச்சு தான் ஆகணும்…” என்றவனின் குரலில் கடுமை ஏறியிருந்தது. அவளது மனதுக்குள் அதிர்வு.

“இது கோழைத்தனம்… அவனை அப்படி ரோட்டுல அடிச்சு இருக்காங்க… எப்படி ஷ்யாம் இப்படி பண்ண?”

அவள் கேட்டாலும் அவன் ஏதும் பதில் கூறவில்லை. மௌனமாகவே சுவரின் மேல் சாய்ந்து இருந்தான்.

“சொல்லுடா…”

“அவன் என்னை அசிங்கப்படுத்தினது உனக்கு தப்பா தெரியல… அவனை அடிச்சது தப்பா தெரியுது?” என்று கேட்க,

“நாம அசிங்கப்பட்டுடோம்ன்னு நாமளா நினைச்சா தான் அது அசிங்கம்… யாராவது கேட்டாங்கன்னா மார்பிங்ன்னு சொல்லிட்டு தூக்கி போட்டுட்டு போயிட்டே இரு… அவனை வீட்ல வெச்சுக் கூட அடிச்சு இருக்கலாம்… ஆனா இப்படி பண்ணி, அவனுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்?” என்று கேட்க,

“வித்தியாசமே இல்ல… சொல்லப் போனா அவனை விட நான் இன்னும் ரொம்ப மோசம் தான்… அந்த பயம் அவனுக்கு இல்லாம போச்சு… காரணம் நீ…” என்று கோபமாக கூற,

“நானா? என்ன சொல்ற நீ?” என்று கேட்டாள்.

“உன்னை தான் அவன் ட்ரம்ப் கார்டா யூஸ் பண்ணான்… எனக்கு மஹாவ விட்டுக் கொடுத்து இருந்தா இப்படி பண்ணிருக்க மாட்டேன்னு சொல்றான்… அவனுக்கு உன்னை தூக்கி கொடுக்க சொல்றியா?” என்று கேட்க,

“லூசா நீ?”

“நீங்க விட்டுக் கொடுத்து இருந்தா அவங்க இன்னைக்கு மகாவேங்கட லக்ஷ்மி விஜய் யாம்… எனக்கு அப்படியே கொன்னு போட்றனும் போல இருந்துது…” என்று பல்லைக் கடிக்க, அவளுக்கு ஷாக்கடித்தது போலிருந்தது.

வெறித்துப் பார்த்தாள்.

ஆக அடிப்படை அவள் தானா?

விஜய் ஏதோ உளறுகிறான் என்று நினைத்துக் கொண்டு பெரிதாக அதை எடுக்கவில்லை. அதோடு ஷ்யாமின் கோபத்திற்கும் காரணம் அவள்! ஆக அத்தனைக்கும் அடிப்படை அவள்!

“கடவுளே…” தன்னையும் அறியாமல் கூறிவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

“சரி… அந்த விஜி எங்க?”

“நம்ம ஹாஸ்பிட்டல் தான் அட்மிட் பண்ணிருக்காங்க…” என்றவுடன் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“ஏன்?”

“ம்ம்ம்… நம்ம ஆளுங்க அடிச்சாங்க… நம்ம ஆம்புலன்ஸ்லையே அள்ளியும் போட்டுட்டு வந்துட்டாங்க…” என்று நிறுத்தியவனை நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அதிர்ந்து பார்த்தாள்.

“ஷ்யாம்ம்ம்ம்…” அவளது அதிர்வு எவ்வளவு என்றெல்லாம் கூறவே முடியாது.

“இப்ப ஐசியு ல இருக்கான்… அடி கொஞ்சம் அதிகம்… அவனை அப்படியே வெஜிடபிள் ஆக்கிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றவனை கைகள் நடுங்க உச்சபட்ச அதிர்ச்சியில் பார்த்தாள்.

“இது தப்பு ஷ்யாம்…” அவளது குரல் பிசிறடித்தது.

“தப்பை தப்பா செய்யாம சரியா செஞ்சா அது தப்பே கிடையாது ஸ்வீட் ஹார்ட்…” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.

“இது கோழைத்தனம்… மனுஷத் தன்மையே இல்லாத ஒரு வேலை… பேசாம கொன்னுட்டு போயிடலாமே…” என்று கொதிக்க,

“கொன்னுட்டா ஒரு நிமிஷ வேதனை மட்டும் தான்…”

“வேண்டாம் ஷ்யாம்… இது ரொம்ப தப்பு… தயவு செஞ்சு வேண்டாம்… நம்ம சந்ததி இந்த பாவத்தை சுமக்க வேண்டாம்…” என்றவளை,

“பாவம் பரிதாபம்ன்னு பார்க்கற மூட்ல நான் இல்லடி… சர்வைவல் ஆப் தி ஃபிட்டஸ்ட்… சர்வைவ் ஆகணும்ன்னா ஃபிட்டா இருக்கணும்…” என்றவனை அதிர்வோடு பார்த்தாள்.

“இது பிட்னஸ் இல்ல… பயம்…”

சிரித்தான் அவன்.

“ஆஹான்… அப்படியா?”

அந்த சிரிப்பு உண்மையில் வஞ்சத்தின் வெளிப்பாடாய்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் நாற்பத்து ஆறு

கைகளை கட்டியபடி இறுக்கமாக ஆபரேஷன் தியேட்டர் முன்பு காத்திருந்தாள் மஹா. உடன் ஷ்யாம். அவளது பிடிவாதத்துக்காக வந்திருந்தான். வருவதில் அவனுக்கு உடன்பாடில்லை. பிடிக்கவும் இல்லை. அத்தனை பெரிய துரோகத்தை செய்தவன் விஜி. அவன் திட்டமிட்டு செய்தான் என்றோ, நான் ஏமாந்து விட்டேன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்