arrow_back
ஸ்தம்பித்தேனடி உன் கண்களால் அத்தியாயம் – 05

அத்தியாயம் – 05

visibility 33
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

05

தன் வீட்டை வந்து சேர்ந்திருந்ததைக் கூட அறிய முடியாதவனாக தன் கண்களை மூடி பலத்த சிந்தனையில் மூழ்கிப் போயிருந்த கௌதமைப் பார்க்கையில் மாதவனிற்கு வெகு கவலையாக இருந்தாலும் அவனை இப்படியே சோகத்தில் மூழ்கிப் போகச் செய்து விடுவது சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், “கௌதம், வீட்டுக்கு வந்தாச்சு டா, எழுந்திரு” என அவனது தோளில் தட்டி எழுப்ப, கௌதமோ வெகு சிரமப்பட்டு தன் கண்களைத் திறந்து கொண்டு ஒருவித சலிப்பான மனநிலையுடன் அந்தக் காரில் இருந்து இறங்கி நின்றான்.

காலையில் அவன் தங்கள் வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது அவனுக்குள் இருந்த மனநிலையும், இப்போது வீட்டிற்கு திரும்பி வரும் போது அவனுக்குள் இருக்கும் மனநிலையும் மலையும் மடுவும் போலவே இருந்தது.

என்னதான் அவன் மனது கயல்விழி தான் அவனது வாழ்க்கைத்துணை என்று அவனுக்கு பல்வேறு விதங்களிலும் அறிவுறுத்தி இருந்தாலும் அவனது மூளை அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனைத் தவியாய் தவிக்கச் செய்திருந்தது.

தன் காரில் இருந்து இறங்கி நின்ற பின்னரும் கௌதமின் முகத்தில் படிந்திருந்த சிந்தனையின் சாயல் விலகவில்லை என்பதை உணர்ந்து கொண்ட மாதவன் அவனது தோளில் ஆதரவாக தன் கரத்தை அழுத்திக் கொடுத்து விட்டு, “இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே இருக்கப் போற கௌதம்? அதுதான் அந்தப் பொண்ணு மித்ரா கிடையாதுன்னு உறுதி ஆகிடுச்சுல்ல, அப்புறமும் எதற்காக நீ உன்னையே இப்படி போட்டு வறுத்திக்கிற? நீ ஒரு விஷயத்தை மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ, மித்ரா இனி உன்னோட வாழ்க்கையில் வரப்போறது கிடையாது, இன்னும் சொல்லப்போனால் மித்ரா என்கிற ஒருத்தங்க இந்த உலகத்திலேயே கிடையாது, அப்படி இருக்கும் போது இல்லாத ஒருத்தரை பற்றி யோசித்து நீ உன் வாழ்க்கையை மட்டுமில்லாமல் அந்தப் பொண்ணு கயல்விழியோட வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்கிற, இது கொஞ்சம் கூட சரியில்லை, பார்த்துக்கோ. உன்னால மித்ராவோட நினைவுகளை விட்டு ஒருபோதும் வெளிவரவே முடியாதுன்னா தயவுசெய்து இந்தக் கல்யாணப் பேச்சை இத்தோடு நிறுத்திட சொல்லு, அதுதான் உனக்கும் நல்லது, கயல்விழிக்கும் நல்லது, இன்னும் சொல்லப்போனால் எல்லோருக்குமே நல்லது” என்று கூற,

அவனைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டவன், “நீ கூட என்னைச் சரியாகப் புரிஞ்சுக்கலையேடா மாதவா, நான் என்னதான் மித்ராவைப் பற்றி யோசிக்கக் கூடாதுன்னு என்னை கட்டுப்படுத்தி வைத்தாலும் என் மனசு அதைக் கேட்க மாட்டேங்குதேடா, அவளைப் பற்றி யோசிக்கக் கூடாதுன்னு நினைக்கும் போதெல்லாம் அவ ஞாபகம் இன்னும் இன்னும் அதிகமாகிட்டே போகுதுடா. அதுமட்டுமல்லாமல் அவ என்னோட முதல் காதல், நம்ம வாழ்க்கையில் வர்ற முதல் காதலை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிட முடியாது டா, நான் எவ்வளவு முயற்சி பண்ணாலும் என்னால அதை மட்டும் மாற்ற முடியாது டா, அவளோட நினைவுகள் என்னோட மனதில் ஒரு ஓரத்தில் எப்போதும் இருந்துட்டே தான் இருக்கும்” என்று கூறியிருக்க,

அவன் கூறியதைக் கேட்டு தன் தலையில் அடித்துக் கொண்டவன், “அதற்காக உன் வாழ்நாள் முழுவதும் இப்படியே அவ நினைவுகளை பற்றி யோசிச்சுட்டே கயல்விழியோடு வாழப் போறியா?” என்று கேட்க, கௌதம் அவசரமாக மறுப்பாக தலையசைத்திருந்தான்.

“சேச்சே! நான் அப்படி எல்லாம் ஒருகாலத்திலும் பண்ண மாட்டேன், எப்போ மித்ரா வேறு கயல்விழி வேறுன்னு எனக்குத் தெரிந்ததோ அப்போவே அவகிட்ட என்னோட முதல் காதலைப் பற்றி சொல்லிட்டேன், அதுமட்டுமல்லாமல் நான் எதற்காக அவளை இவ்வளவு அவசரமாக சந்திக்க வந்தேன்னும் சொல்லிட்டேன். எல்லோரோட வாழ்க்கையிலும் முதல் காதல் ஒரு அங்கமாக தான் இருக்கும், அதையும் நான் கயல்விழி கிட்ட சொல்லிட்டேன், ஆனா அந்த நினைவுகள் கயல்விழியை ஒரு காலத்திலும் பாதிக்காது, அது உறுதி. ஆனா அவ நான் சொன்னதை எல்லாம் கேட்டு அதற்குப் பதிலாக எதுவுமே சொல்லல, எனக்கு என்னவோ அவ மௌனத்தை பார்க்கும் போது இந்தக் கல்யாணப் பேச்சை இத்தோடு நிறுத்திக்கலாம்ன்னு தான் அவ யோசித்து இருப்பா போலன்னு தோணுது, இனி முடிவு எடுக்கப் போறது கயல்விழி தான். எப்படியும் இந்நேரத்திற்கு ஏதாவது தகவல் என் வீட்டுக்கு கிடைச்சிருக்கும், முதல்ல அது என்னன்னு உள்ளே போய் பார்க்கலாம், வா” என்ற கௌதம் மாதவனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்திருக்க,

அங்கே அந்த வீட்டின் விசாலமான ஹாலில் அவர்கள் இருவரும் உள்ளே நுழைவதை பெரும் கோபத்தோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஈஸ்வர், “கௌதம், அங்கேயே நில்லுடா” என அதட்டலாக சத்தமிட்டிருந்தார்.

அவரின் அதட்டலான குரல் கேட்டு தூக்கி வாரிப்போட நின்று கொண்டிருந்த மாதவன் கௌதமின் காதருகில் குனிந்து, “போச்சு, போச்சு. நீ கயல்விழி கிட்ட போய் பேசியதை எல்லாம் அந்தப் பொண்ணு உங்க அப்பாகிட்ட சொல்லிட்டாங்க போல. அதுதான் உன் அப்பா இப்படி கோபமாக சத்தம் போடுறாங்க. அதுமட்டுமல்லாமல் நீ அவங்களுக்கு தெரியாமல் அந்தப் பொண்ணு ஊருக்கு போனதும் இப்போ அவங்களுக்கு தெரிய வந்திருக்கும். இன்னைக்கு உன் அப்பா உன்னை மட்டுமில்லாம, உன் கூட துணைக்கு வந்ததற்கு என்னையும் திட்டப் போறாரு, பாரு” என்று கூறி விட்டு, தங்களை நோக்கி கோபமாக நடந்து வந்து கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்த்து சட்டென்று தலை குனிந்து அமைதியாக நின்று விட, மறுபுறம் கௌதம் தன் தந்தையின் கோபத்தை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் குழப்பமும், தயக்கமும் மேலோங்க அவரைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

*************
சுற்றிலும் பல வண்ண ரோஜாப்பூக்கள் பூத்துக் குலுங்கும் அந்த அழகிய தோட்டத்தின் நடுவே போடப்பட்டிருந்த மரத்தாலான ஊஞ்சலில் அமர்ந்திருந்த கயல்விழி சிறிது நேரத்திற்கு முன்னர் கௌதம் தன்னை சந்தித்து விட்டுச் சென்ற அந்த நொடிப் பொழுதினைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருக்க, மறுபுறம் அவளது தங்கை தன் அக்காவை தங்கள் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டு நின்றாள்.

“இந்த கயல்விழிக்கா எங்கே போயிடுச்சு? காலையில் கோவிலில் இருந்து வந்ததிலிருந்து அவளோட முகமே சரியில்லை, அங்கே ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கு, அது என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா, அவளை இப்படியே விட்டால் அப்புறம் பிரச்சினை வேறு மாதிரி போயிடும். அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவகிட்ட பேசி ஆகணும், ஆனா கயல்விழிக்காவை வீட்டிலேயே காணோமே, எங்கே போய் இருப்பா? ஒருவேளை தோட்டத்தில் இருப்பாளா?” என்ற சிந்தனையுடனேயே தங்கள் வீட்டின் பின்புறமாக நடந்து சென்றவள் அங்கே ரோஜாப்பூக்கள் நிறைந்திருந்த தோட்டப் பகுதியில் கயல்விழி தன்னந்தனியாக அமர்ந்திருப்பதை பார்த்ததுமே நிம்மதியாக பெருமூச்சு விட்டபடி ஓட்டமும், நடையுமாக அவளருகில் வந்து சேர்ந்திருந்தாள்.

“ஏய் கயலு புள்ள! இங்கே நீ தனியாக என்ன பண்ணிக்கிட்டு இருக்க? நான் உன்னை வீட்டில் எங்கே எல்லாம் தேடினேன் தெரியுமா?” அவளின் கேள்விக்கு கயல்விழியிடமிருந்து எந்தவொரு பதிலுமே இல்லாமல் இருக்கவே,

அவளை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டவள், “என்னாச்சு கயலு புள்ள, அப்பா மிட்டாய் வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டாரா, இல்லை அம்மா உனக்கு காலையில் பண்ண லட்டுவைத் தராமல் எடுத்து வைச்சிட்டாங்களா? உன்னை யாரு என்ன பண்ணாங்கன்னு சொல்லு கயலு புள்ள, அவங்களை இந்த நந்தினி உண்டு, இல்லைன்னு பண்ணிடுவா” என்றவாறே அவளது தோளில் இடித்துக் கொள்வது போல அமர்ந்து கொள்ள,

அவளது அந்த செய்கையில் கோபமாக அவளைத் திரும்பிப் பார்த்த கயல்விழி, “ஏய் மலர், என்னை கயலு புள்ளன்னு சொல்லாதேன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன், ஒண்ணு அக்கான்னு கூப்பிடு, இல்லை கயல்விழின்னு கூப்பிடு, அதை விட்டுட்டு என்னை வெறுப்பத்தவே இப்படி எல்லாம் பண்ணுற இல்லையா?” என்று வினவ,

அவளோ மறுப்பாக தலையசைத்தபடியே, “ஆமா கயலு புள்ள, உன்னை வெறுப்பத்த இதை விட்டால் எனக்கு வேறு வழி இல்லையே” என்று கூறி விட்டு அவளைப் பார்த்து வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.

“போதும், போதும் ரொம்ப சிரிக்காதே! பல்லு சுளிக்குக்க போகுது” என்று கூறிக் கொண்டிருந்த கயல்விழி சிறிது நேரம் கழித்து ஏதோ நினைவு வந்தவளாக,

“ஆமா, நீ எதற்காக இப்போ இங்கே வந்த? கோவிலில் இருந்து வந்ததிலிருந்து நீ கேள்வியாக கேட்டு என்னை டார்ச்சர் பண்ணுறேன்னு தானே நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்கணும்னு இங்கே வந்தேன், இங்கேயும் நீ வந்துட்ட இல்லையா?” என்று வினவ,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்த நந்தினி, “பின்ன அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை என் பிடியில் இருந்து தப்பிச்சுப் போக விட்டுடுவேனா சொல்லு? விடாது கருப்புன்னு சொல்லுற மாதிரி என் கேள்விக்கு பதில் கிடைக்கும் வரைக்கும் இந்த நந்தினி உன்னைப் பின் தொடர்ந்து வந்துட்டே இருப்பா” என்று கூறியிருந்தாள்.

“அப்படியா? ஆனா இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் மேடம், அப்புறம் நான் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டேன்னா நீ நினைச்ச நேரத்திற்கு எல்லாம் இப்படி என்னைத் தேடி வரமுடியாது பார்த்துக்கோ”

“ஐயோ என் செல்ல கயலு புள்ள! அதற்கும் என் கிட்ட ஒரு வழி இருக்கு தெரியுமா? உனக்கு நிச்சயம் பண்ணி இருக்கும் கௌதம் மாமாவுக்கு கிருஷ்ணான்னு ஒரு தம்பி இருக்காங்களாம், சிவில் எஞ்சினியராம். நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போற நேரம் நானும் அந்த சிவில் எஞ்சினியரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேன்னு வை அப்போவும் நான் இதே மாதிரி உன்னைத் தேடி வரலாம் இல்லையா? எப்படி என்னோட மாஸ்டர் பிளான்?” என்று கேட்டவாறே நந்தினி தன் சுடிதாரின் காலரை தூக்கி விட்டுக் கொள்ள,

அவள் சொன்ன விடயத்தை கேட்டு அதிர்ச்சியாக தன் வாயில் கையை வைத்துக் கொண்ட கயல்விழி, “அடிப்பாவி, நான் என்னவோ நீ சின்னப் பொண்ணுன்னு நினைச்சுட்டு இருந்தால், நீ இப்படி எல்லாம் பிளான் போடுற. இரு, இரு உன்னை அப்பாகிட்ட போட்டுக் கொடுக்கிறேன்” என்று கூற,

அவளோ வெட்கப்படுவது போல பாவனை செய்து கொண்டே, “ஐயோ! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கயலு புள்ள. நானே இந்த விஷயத்தை எப்படி அப்பா காதுக்கு கொண்டு போறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன், நல்லவேளை நீ எனக்கு உதவி பண்ண வந்துட்ட. சரி, சரி முதல்ல அப்பாகிட்ட போய் இதை சொல்லு, அப்புறம் மற்ற எல்லாவற்றையும் பேசிக்கலாம்” என்று கூறியிருக்க, கயல்விழியோ அவளது குறும்புத்தனத்தைப் பார்த்து வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.

தன் அக்காவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியைப் பார்த்துமே சட்டென்று தாவி அணைத்து அவளை விடுவித்த நந்தினி, “இதோ பாரு, இதோ பாரு, உன்னோட முகத்தில் வர்ற இந்த ஒரு சின்ன சிரிப்புக்காகத்தான் நான் இப்படி எல்லாம் பண்ண வேண்டியிருக்கு. இப்படி நீ சிரிச்ச முகமாக இருக்கும் போது எவ்வளவு அழகாக இருக்க தெரியுமா? அதை விட்டுட்டு எதற்காக நீ உம்முன்னு இருக்க கயல் க்கா? இப்படி கவலையாக எல்லாம் நீ இருக்க வேண்டாம் க்கா, நீ அப்படி இருக்கிறதைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கு” என்று கூற,

அவளது கூற்றில் சிறு தயக்கத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவள், “காலையில் கௌதம் கோவிலுக்கு வந்திருந்தாங்க” என்று நேரடியாகவே தன் மனதிற்குள் இருந்த விடயத்தை கூறியிருக்க,

நந்தினியோ, “என்ன? கௌதம் மாமா கோவிலுக்கு வந்திருந்தாங்களா? இது எப்போ?” என தன்னை மறந்து சத்தம் போட்டுக் கேட்டிருந்தாள்.

*****************
ஈஸ்வரின் கோபமான பார்வையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கௌதம் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள, சிறிதும் தாமதிக்காமல் அவனது தாடையைப் பற்றி அவனது முகத்தை நிமிர்த்தியவர், “இவ்வளவு நேரம் நீ எங்கே போய் இருந்த கௌதம்?” என்று வினவ,

அவனோ அவரது கேள்விக்கு பொய் சொல்ல துணிவின்றி, “அது அப்பா, நான் கோவிலுக்கு, அது அந்த பொண்ணு, அது மாதவனும் நானும்” என பேச வார்த்தைகள் அற்றவன் போல தடுமாற்றத்துடன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போதே,

சமையலறையில் இருந்து வெளியேறி வந்த வள்ளி, “இப்போ எதற்காக அவனை இப்படி போட்டு அதட்டுறீங்க? ஏதோ வேலையில் இருந்ததனால் ஸ்டேசனுக்கு போய் எங்க அண்ணாவையும், அண்ணியையும் அழைச்சிட்டு வர மறந்து போயிட்டான், அதற்காக வீட்டுக்குள்ள வந்த பிள்ளையை வாசலிலேயே வைத்து இப்படி கேள்வியாக கேட்கணுமா?” என்று வினவ,

அவரது கேள்வியில் மாதவனும், கௌதமும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்து, “இதுதான் விஷயமா?” என்று கேட்டவாறே நிம்மதியாக பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

“நான் கூட கயல்விழி தான் ஏதோ சொல்லிட்டான்னு நினைச்சு பயந்து போயிட்டேன், நல்லவேளை அவ எதுவுமே சொல்லல போல” என்ற கௌதமின் தோளில் இடித்த மாதவன்,

“இப்போ புரியுதா, அந்தப் பொண்ணுக்கும் உன்னை ரொம்ப பிடித்து இருக்குன்னு? இனிமேலாவது உன்னோட பழைய நினைவுகளை மூட்டை கட்டி வைச்சுட்டு வெளியே வா. கொஞ்ச நேரத்தில் நீயும் குழம்பி, என்னையும் பயப்பட வைச்சுட்டியேடா?” என்று விட்டு,

தங்களையே உன்னிப்பாக பார்த்துக் கொண்ட நின்ற ஈஸ்வரின் அருகில் சென்று, “ஏன்ப்பா இந்த சின்ன விஷயத்துக்காகவா அவ்வளவு கோபப்பட்டீங்க? நாங்க கூட ஏதோ பெரிய பிரச்சினைன்னு பயந்து போயிட்டோம் தெரியுமா? நீங்க போட்ட சத்தத்தைப் பார்த்து ஏதோ மூன்றாம் உலகப்போரே வந்துடுச்சோன்னு நினைச்சோம்” என்று கூறியிருந்தான்.

அவனது பேச்சில் தன் கோபத்தை மறந்து அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனது தோளில் அடித்தவர், “போடா கிறுக்குப் பையா! நான் சத்தம் போட்டால் மூன்றாம் உலகப்போர் வந்துடுமா? ஏன்டா சொல்ல மாட்ட. காலையில் நீங்க இரண்டு பேரும் இங்கே இருந்து கிளம்பிப் போகும் போதே இன்னைக்கு அவனோட மாமாவும், அத்தையும் ஊரில் இருந்து வர்றாங்க அவங்களை அழைச்சிட்டு வாங்கன்னு சொல்லித்தானே அனுப்பினேன்? அப்போ எல்லாத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டிட்டு இப்போ எதுவுமே நடக்காத மாதிரி நிற்குறீங்களா? ” என்று வினவ,

கௌதமோ பலத்த யோசனைக்கு பிறகு, “அப்படியா சொன்னீங்க? எனக்கு எதுவுமே கேட்கலையேப்பா” என்று கூறியிருக்க,

அவரோ, “நல்ல பையன் போ, இந்த சின்ன விஷயத்தைக் கூட சரியாக காதில் வாங்கிக் கொள்ளாத அளவுக்கு அப்படி என்ன யோசனையோ? நாளைக்கு நீ கல்யாணம் பண்ணின பிறகு உன் பொண்டாட்டி ஏதாவது முக்கியமான விஷயம் சொல்லும் போதும் இப்படி பண்ணிடாதேடா, அப்புறம் உன்பாடு பெரும்பாடு ஆகிடும், என்னோட சொந்த அனுபவத்தில் சொல்லுறேன்” என சிரித்துக் கொண்டே கூறி விட்டு,

“அது மட்டுமில்லாமல் கயல்விழி அம்மா, அப்பாவை இழந்த பொண்ணுடா, அவளுக்கு நீதான் துணையாக இருந்து அவளை சந்தோஷமாக பார்த்துக்கணும். அவளுக்கு அவ அம்மா, அப்பாவோட நினைவுகள் வரும் நேரமெல்லாம் நீ அவளோட அந்த கவலையான நினைவுகளை சந்தோஷமான நினைவுகளாக மாற்றி அவளோட தேவைகளை எல்லாம் அவ வாய் விட்டு சொல்ல முன்னாடியே உணர்ந்து பூர்த்தி செய்தாளே அவ ரொம்ப சந்தோஷப்படுவா” என்று கூறியிருக்க,

அவனோ, ‘கயல்விழி பெற்றோரை இழந்தவள்’ என்கிற விடயத்தைக் கேட்டு,

‘இது என்ன புதுக்கதை?’ என்பது போல அதிர்ச்சியாக தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான்……….

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 06

06கௌதம் தன்னை சந்தித்து விட்டுச் சென்றான் என்கிற செய்தியைக் கேட்டதுமே நந்தினி தன்னை மறந்து சத்தம் போட்டிருக்க, அவள் போட்ட சத்தத்தில் யாரும் அங்கே வந்துவிடுவார்களோ என்று பயம் கொண்ட கயல்விழி அவசரமாக அவளது வாயை மூடி இருந்தாள். "ஏன்டீ நீயே சத்தம்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்