arrow_back
ஸ்தம்பித்தேனடி உன் கண்களால் அத்தியாயம் – 06

அத்தியாயம் – 06

visibility 34
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

06

கௌதம் தன்னை சந்தித்து விட்டுச் சென்றான் என்கிற செய்தியைக் கேட்டதுமே நந்தினி தன்னை மறந்து சத்தம் போட்டிருக்க, அவள் போட்ட சத்தத்தில் யாரும் அங்கே வந்துவிடுவார்களோ என்று பயம் கொண்ட கயல்விழி அவசரமாக அவளது வாயை மூடி இருந்தாள்.

 

“ஏன்டீ நீயே சத்தம் போட்டு என்னைக் காட்டிக் கொடுத்துடுவ போல இருக்கே, அவங்க இங்கே வந்து போனது யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நான் இருக்கேன், நீ வேற. 

கௌதம் இங்கே வந்து போனது அப்பாவுக்கு தெரிந்தால் எதுவும் சொல்ல மாட்டாங்க, ஆனா பாட்டி? அவங்க வாயை அடைக்க அப்புறம் என்ன பண்ணாலும் சரி வராது, அப்புறம் அப்பாவை அவங்க தேவையில்லாமல் பேச, அப்பா அவங்களைப் பேச இப்படி ஒரு சின்ன விஷயம் பெரிய பிரச்சினையில் போய் முடியும், அதனாலதான் சொல்லுறேன் தயவுசெய்து நீ என்ன ஷாக் ரியாக்ஷன் கொடுக்குறதாக இருந்தாலும் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி கொடு, சரியா?” என்று கேட்க, 

 

அவளைப் பார்த்து சரியென்று தலையசைத்த நந்தினி, “அதெல்லாம் இருக்கட்டும், இப்போ என்ன அவசரம் வந்ததுன்னு அவங்க உன்னைப் பார்க்க வந்தாங்க? நேற்று சபையில் வைத்து எதுவாக இருந்தாலும் நிச்சயதார்த்தத்திற்கு அப்புறம் பேசிக்கிறேன்னு அவங்க தானே சொன்னாங்க, அப்புறம் என்னவாம்?” என்று கேட்க, அவளது கேள்வியில் சிறு தயக்கத்துடன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துக் கொண்டவள் கௌதம் தன்னை எதற்காக சந்திக்க வந்திருந்தான் என்கிற காரணத்தை சொல்லியிருக்க, அவள் சொன்ன விடயத்தைக் கேட்டு நந்தினி மீண்டும் தன்னை மறந்து சத்தமிடப் பார்க்க, அதற்குள் கயல்விழியோ அவளது வாயை மூடி அவளை சத்தம் போட விடாமல் செய்திருந்தாள்.

 

“ஏய்! உன் கிட்ட இப்போ தானேடி சொன்னேன் சத்தம் போடாதேன்னு”

 

“சரி, சரி சாரி. ஆனா நீ சொல்லுற விஷயத்தை எல்லாம் கேட்கும் போது எப்படிக்கா ஷாக் ஆகாமல் இருக்க முடியும். நீ ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லும் போது அப்படியே தவுசண்ட் வாட் கரெண்ட் அடிச்ச மாதிரி இல்லையா தூக்கி தூக்கி போடுது. அது சரி, அப்போ இந்த கௌதம் தான் உன்னோட லைஃபில் வந்த அந்த கௌதமா? அதுதான் இத்தனை வருஷமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சவ இந்த சம்பந்தம் வந்ததும் உடனே சரின்னு சொன்னியா? சரியான கேடி அக்கா நீ”

 

“ஏய்! ஏன்டீ இப்படி எல்லாம் சொல்லுற?”

 

“பின்ன என்னவாம்? இவ்வளவு பெரிய விஷயத்தை இந்த நந்தினி கிட்ட இருந்து இல்லையா நீ மறைக்கப் பார்த்து இருக்க? அதெல்லாம் இருக்கட்டும், கௌதம் மாமா உன் கிட்ட வந்து எல்லாம் சொன்ன பிறகு நீ அவங்ககிட்ட மித்ராவும் நீதான், கயல்விழியும் நீதான்னு சொல்லிட்டியா?” நந்தினி சிறு தயக்கத்துடன் கயல்விழியைப் பார்த்து வினவ, அவளோ சங்கடம் மேலோங்க அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்து விட்டு சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

 

“என்ன நீ அவர்கிட்ட அப்போ எதுவும் சொல்லலையா?”

 

“இல்லை நந்தினி, என்னால அவங்ககிட்ட எதையும் சொல்ல முடியல. அவங்க அந்தப் பழைய விடயங்களைப் பற்றி பேசும் போது என்னோட மனசு அந்த அழகான நாட்களை நோக்கி என்னைக் கொண்டு போயிடுச்சு, அப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன், என்னோட வாழ்க்கையில் என்ன என்ன எல்லாம் இருந்ததுன்னு யோசிச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது,

ஆனா திடீர்னு ஒரு கார் ஹார்ன் சத்தம் கேட்டதும் எனக்கு அந்த ஆக்சிடென்ட் நினைவுக்கு வந்துடுச்சு, அந்த நாள் நினைவு வந்ததுமே சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு அடிக்கடி வர்றமாதிரி பழையபடி கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சு, தலை எல்லாம் சுற்ற ஆரம்பிச்சுடுச்சு. அதுமட்டுமல்லாமல் அவங்க மேலே பேசப் பேச எனக்கு எதுவுமே மனதில் பதியல, மாறாக மூச்சு திணறுவது போலவே இருந்தது. ஒருவேளை என்னோட இந்த பிரச்சனை தெரிந்து அவரும் என்னை விட்டுப் போயிடுவாரோன்னு எனக்குப் பயமாக இருந்தது, அதுதான் அவங்க கிட்ட எதையும் சொல்லல. 

ஏற்கனவே ஒரு தடவை அவரை நான் இழுந்துட்டு, அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், இப்போ மறுபடியும் எனக்குப் பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது நான் அதை விட்டுக் கொடுக்க விரும்பல, அவங்க என் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு எந்தவொரு யோசனையும், பிரச்சினையும் நினைவுக்கு வரல. ஆனா நான் இவ்வளவு பெரிய விஷயத்தை அவங்க கிட்ட சொல்லாமல் விட்டதை நினைத்து அவங்க என் மேலே கோபப்பட்டால் என்ன பண்ணுறதுன்னு யோசிக்கும் போது தான் எனக்கு மறுபடியும் கை, கால்கள் எல்லாம் நடுங்கி மயக்கம் வர்றது மாதிரி இருக்கு”

 

“ஐயோ அக்கா! நீ என்ன சொல்லுற? நீ, நீ முதல்ல ரிலாக்ஸ் ஆகு, இப்போ இதைப்பற்றி எல்லாம் பேச வேண்டாம், நம்ம அப்புறம் பேசிக்கலாம். நீ எதுவும் யோசிக்காதே, சரியா? ப்ளீஸ், ப்ளீஸ் எதுவும் யோசிக்காதே”

 

“இல்லை நந்தினி, எனக்கு எதுவும் இல்லை, அந்த யோசனை வரும் போது மட்டும் எனக்கு என்ன மாதிரி இருந்ததுன்னு தான் சொன்னேன். இப்போ அதெல்லாம் சரி ஆகிடுச்சு, நீ கவலைப்படாதே. நான் இத்தனை வருஷமா இந்த பேனிக் அட்டாக்கை (Panic attack) கட்டுப்படுத்த மனசை திசை திருப்ப பழகுன விஷயங்களை எல்லாம் இன்னும் மறக்கல, ஏதாவது பிரச்சினை வந்தால் அதை ஞாபகப்படுத்திப்பேன், ஆனா எதற்காகவும் கௌதமை இழக்க கூடாதுன்னு மட்டும் உறுதியாக இருக்கேன். அவரோடு இருக்கும் போது அந்தப் பழைய நினைவுகள் மறுபடியும் எனக்கு நினைவுக்கு வந்தாலும் அதை நான் நிச்சயமாக கட்டுப்படுத்திப்பேன்னு எனக்குள்ளே ஒரு நம்பிக்கை இருக்கு”

 

“அக்கா, நீ சொல்லுறதை எல்லாம் கேட்கும் போது எனக்கு மனசு படபடன்னு அடிச்சிக்கிது. நீ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கஷ்டப்படணுமோ தெரியலை, உன்னோட நிலைமையை யோசிக்கும் போது எனக்கு அந்தக் கடவுள் மேலே அவ்வளவு கோபம் வருது, எதற்காக அவரு உன்னை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்துறாரோ தெரியலை.

ஆனா அக்கா இப்போ நீ அவங்க கிட்ட எதையும் சொல்லாமல் விட்டிருக்கலாம், ஆனா என்னைக்காவது ஒரு நாள் அவங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிய வந்து தானே ஆகணும்.

அதுமட்டுமில்லாமல் அவங்க உன்னைத் தேடி வந்து இவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு போய் இருக்காங்கன்னா, அதே போல நீயும் உன்னோட வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு சொல்லித் தானே ஆகணும். ஏன்னா இனி நீ காலம் முழுவதும் அவரோட தான் வாழப் போற, அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய குற்றவுணர்வை சுமந்துகிட்டு உன்னால நிம்மதியாக இருக்க முடியுமா சொல்லு?

அதோடு இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து வைத்து ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கிறது எனக்கு என்னவோ சரின்னு தோணல தான், அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்த விஷயத்தை கௌதம் மாமா கிட்ட சொல்லிடணும், உன்னால இந்த விஷயத்தை எல்லாம் அவங்க கிட்ட சொல்ல முடியலேன்னா நான் அவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லுறேன் க்கா, நிச்சயமாக அவங்க எதுவும் தப்பாக நினைக்க மாட்டாங்க, உன்னை கண்டிப்பாக புரிஞ்சுப்பாங்க, என்ன சரியா?” என்றவாறே நந்தினி கயல்விழியின் புறம் திரும்பிப் பார்க்க, அங்கே அவள் தன் கண்கள் இரண்டும் மேலே சொருக, கை கால்கள் எல்லாம் நடுநடுங்கிப் போக, மூச்சு விடவே சிரமப்பட்டு போனவள் போல மயங்கி சரிய ஆரம்பித்திருந்தாள்.

 

கயல்விழியின் அந்த நிலையைப் பார்த்ததும் நந்தினிக்கு வார்த்தைகள் மறந்து போக, உதவிக்கு யாரையும் அழைக்க வேண்டும் என்பதைக் கூட மறந்து போனவளாக திகைத்துப் போய் நிற்க, மறுபுறம் வெகு நேரமாக தன் மகள்கள் இருவரையும் வீட்டிற்குள் காணாமல் அவர்களை வெளியே தோட்டத்தில் தேடி வந்து கொண்டிருந்த முருகன் கயல்விழியின் அந்த நிலையைப் பார்த்து தன்னைச் சுற்றி இருக்கும் சகலமும் மறந்து போனவராக அவளை நோக்கி மூச்சிறைக்க ஓடி வந்திருந்தார்.

 

“ஐயோ கயல்! உனக்கு என்னம்மா ஆச்சு? ஐயோ கடவுளே! என் பொண்ணுக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலையே, நந்தினி கயலுக்கு என்னம்மா ஆச்சு?” கயல்விழியின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றபடியே முருகன் நந்தினியைப் பார்த்து வினவ, அவளுக்கோ அது எதுவும் காதில் விழவே இல்லை, மாறாக கயல்விழியின் அந்த நிலைக்கு தான் தான் காரணமாகி விட்டோம் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது.

 

பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்த தன் மகளைக் கைகளில் ஏந்திக் கொண்ட முருகன் அவசர அவசரமாக அவளை அருகில் இருந்த மருத்துவமனை நோக்கி அழைத்துச் சென்றிருக்க, மறுபுறம் நந்தினி தன் குற்றவுணர்வு எண்ணத்தைக் கை விட்டு விட்டு தன் அன்னை வசந்தியையும், தன் பாட்டியையும் அழைத்துக் கொண்டு வேகமாக அவரைப் பின் தொடர்ந்து சென்றிருந்தாள்.

 

கயல்விழியை மருத்துவமனையில் அனுமதித்திருந்த மறுகணமே அவளுக்குரிய சிகிச்சைகளை ஆரம்பித்திருக்க, அந்த இடைப்பட்ட நேரத்திற்குள் கயல்விழியின் வீட்டினர் அங்கே ஒன்று சேர்ந்திருந்தனர்.

 

அவளின் நிலையை எண்ணி மனம் உடைந்து போக, கண்கள் இரண்டும் கலங்கிய நிலையில் அமர்ந்திருந்த தன் தந்தையின் எதிரே முழங்காலிட்டு அமர்ந்து கொண்ட நந்தினி, “அப்பா, என்னை மன்னிச்சுடுங்க ப்பா, என்னால தான் அக்காவுக்கு இந்த நிலைமை. நான் மட்டும் அவங்களை ஒழுங்காக கவனித்து இருந்தால் அவங்களுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது, என்னை மன்னிச்சுடுங்க ப்பா” என்றவாறே அவர் மடியில் சாய்ந்து கண்ணீர் விட ஆரம்பிக்க,

 

கயல்விழி மயங்கி விழுந்ததைக் கூட கவனிக்காமல் தான் நின்று கொண்டிருந்ததைப் பற்றித் தான் அவள் பேசுகிறாள் என்று எண்ணிய முருகனோ, “சேச்சே! நீ எதற்காக ம்மா மன்னிப்பு எல்லாம் கேட்குற? யாராவது தெரிந்தே இப்படி பண்ணுவாங்களா? அதிலும் கயல்விழி மேலே உயிரே வைத்திருக்கும் நீ வேணும்னே இப்படி பண்ணுவியா என்ன? ஏதோ நம்ம கெட்ட நேரம் இப்படி நடந்துடுச்சு, நீ ஒண்ணும் கவலைப்படாதே ம்மா, நம்ம கயலுக்கு எதுவும் ஆகாது” என்றவாறே அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுக்க ஆரம்பிக்க, சரியாக அந்த நேரத்தில் கயல்விழிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த அறையில் இருந்து வைத்தியர் ஒருவர் வெளியேறி வந்து அவர்கள் எதிரில் வந்து நின்றிருந்தார்.

 

வைத்தியர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததுமே அவசரமாக எழுந்து நின்று கொண்ட முருகன், “டாக்டர், என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? அவ நல்லா இருக்கா தானே?” என்று வினவ,

 

அந்த வைத்தியரோ, “என்ன முருகன் நீங்க, உங்க பொண்ணோட நிலைமை தெரிந்தும் நீங்க இப்படி கவனக்குறைவாக இருக்கலாமா? அவங்களை ரொம்ப நல்லாப் பார்த்துப்பேன்னு நீங்க சொன்னதை இப்படி மீறலாமா?” என சற்றுக் கோபமாக அவரிடம் வினவியிருந்தார்.

 

வைத்தியரின் அந்தக் கோபமான கேள்வியில் பதட்டம் மேலோங்க, “என்னாச்சு டாக்டர், என் பொண்ணுக்கு ஏதாவது ஆபத்தா?” என முருகன் அவரைப் பார்த்து வினவ,

 

அவரோ ஆமோதிப்பாக தலையசைத்தவாறே, “கிட்டத்தட்ட அப்படித்தான், அவங்களுக்கு மறுபடியும் பேனிக் அட்டாக் வந்திருக்கு” என்று கூறியிருந்தார்.

 

“என்ன?” வைத்தியர் சொன்ன அந்த விடயத்தைக் கேட்டு அங்கே நின்றிருந்த அனைவரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்க, 

 

முதலில் தன்னை சுதாரித்துக் கொண்ட முருகன், “நீங்க என்ன டாக்டர் சொல்லுறீங்க? கயலுக்கு தான் கடந்த மூணு வருஷமா அந்தப் பிரச்சினை எதுவுமே இல்லாமல் இருந்ததே, நாங்க கூட அவளுக்கு அந்தப் பிரச்சினை மொத்தமாக இல்லாமல் போயிடுச்சுன்னு எவ்வளவு நிம்மதியாக இருந்தோம் தெரியுமா? இப்போ மறுபடியும் அந்த பிரச்சினை எப்படி திடீர்னு வர முடியும்?” என்று வினவ,

 

அவரது தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்த வைத்தியர், “இந்த பேனிக் அட்டாக் மொத்தமாக ஒருத்தரை விட்டுப் போகும்ன்னு சொல்ல முடியாது முருகன், அது மறுபடியும் மறுபடியும் நமக்கு வராமல் வேணும்னா கட்டுப்படுத்தலாம். நீங்க சொன்ன மாதிரி கடந்த மூணு வருஷமா இந்தப் பிரச்சினை கயல்விழிக்கு இல்லாமல் இருந்தது தான், ஆனா இப்போ அது திடீர்னு வர என்ன காரணம்? அவங்களோட பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவது மாதிரி, இல்லைன்னா அந்த குறிப்பிட்ட ஆக்சிடென்ட் நாளை ஞாபகப்படுத்துவது மாதிரி யாராவது ஏதாவது சொன்னீங்களா?”என்று கேட்க, அவரோ சிறு தயக்கத்துடன் மறுப்பாக தலையசைத்திருந்தார்.

 

“ஓஹ்! ஆனா திடீர்னு அவங்களுக்கு இந்த அட்டாக் வர்ற ஏதாவது ஒரு காரணம் இருக்கும், அது என்னன்னு முதல்ல பாருங்க. அப்புறம் உங்களுக்கு நல்லாவே தெரியும், கயல்விழியோட தலையில் அந்த ஆக்சிடென்டில் அடிபட்ட அடியோட தாக்கம் இன்னமும் இருக்கு, அதனால அவங்க ரொம்ப யோசிக்கிறதோ, ரொம்ப கவலைப்படுறதோ ஏன் ரொம்ப சந்தோஷப்படுவது கூட அவங்களுக்கு பிரச்சினை தான். இனிமேலாவது இதையெல்லாம் மறக்காமல் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க, அப்புறம் ஒரு பத்து, பதினைந்து நிமிடத்தில் கயல்விழிக்கு மயக்கம் தெளிந்துடும், அதற்கு அப்புறமாக போய் நீங்க அவளைப் பாருங்க. சீஃப் டாக்டர் ஒரு தடவை வந்து அவங்களைப் பார்த்துட்டு போனதும் நீங்க அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம், சரியா?” என்று விட்டு அந்த வைத்தியர் அங்கிருந்து சென்றிருக்க, 

 

கயல்விழிக்கு மறுபடியும் இந்தப் பிரச்சினை வரும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்கிற யோசனையில் நின்று கொண்டிருந்த முருகன் சிறிது நேரத்திற்கு முன்னர் நந்தினி தன்னிடம் மன்னிப்புக் கேட்டதை நினைவு கூர்ந்தவராக அவளெதிரே சென்று, “நீ கயல்விழி கூட எதைப்பற்றி பேசிட்டு இருந்த நந்தினி” என சற்றே அதட்டலாக வினவ,

 

அவரது அதட்டலில் தூக்கி வாரிப்போட அவரை நிமிர்ந்து பார்த்தவள், “அது வந்து… அது வந்து…” என தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள்.

 

“பதில் சொல்லு நந்தினி, காலையில் கோவிலுக்கு போய் பூஜை எல்லாம் பண்ணிட்டு வரும் போதெல்லாம் கயல் ரொம்ப நல்லாத்தான் பேசிட்டு இருந்தா, அப்படி இருந்தவ திடீர்னு இப்படி ஆக என்ன காரணம்? நீ ஏதாவது பழைய விஷயங்களை பற்றி அவகிட்ட பேசுனியா?” தன் தந்தையின் கேள்விக்கு சிறு தயக்கத்துடன் அவள் ஆமோதிப்பாக தலையசைக்க,

 

சிறு சலிப்போடு தன் முகத்தை திருப்பிக் கொண்டவர், “ஏன் நந்தினி ம்மா இப்படி பண்ண? உனக்குத்தான் கயலோட பிரச்சினை தெரியும் இல்லையா, அப்படி இருந்தும் எதற்காக அதை எல்லாம் மறுபடியும் அவகிட்ட பேசுன? அவளோட பழைய நினைவுகள் எதுவும் அவளுக்கு மறுபடியும் வரக்கூடாதுன்னு தானே அவளோட ஒட்டுமொத்த அடையாளத்தையும் மாற்றி அதைக் கஷ்டப்பட்டு ஏற்றுக்கிட்டு அவ வாழ்ந்துட்டு இருக்கா, இது எல்லாம் எங்களை விட உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும், ஏன்னா எங்க எல்லோரையும் விட அவளோட அதிகமாக இருக்கிறது நீதான், அப்படி இருந்தும் நீயே இப்படி பண்ணலாமா?” என்று வினவ, அவளோ பதில் எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்றிருந்தாள்.

 

‘தான் பழைய விடயங்களைப் பற்றி பேசியதாக சொன்னதற்கே தன் மீது தன் தந்தை இவ்வளவு கோபம் கொள்கிறார் என்றால் கயல்விழி மறக்க நினைக்கும் அவளது கடந்த கால நிகழ்வுகளின் மிக முக்கியமான ஒரு அங்கமான கௌதம் தான் அவளது எதிர்கால வாழ்க்கையாக அமையப் போகிறான் என்று தெரிந்தால் அவர் என்ன எல்லாம் செய்வாரோ? ஒருவேளை இந்த திருமணத்தையே நிறுத்தி விட்டால் என்ன செய்வது? இந்த திருமணம் நின்று போனால் மீண்டும் ஒரு பாரிய கஷ்டத்தைக் கடந்து வர தன் அக்காவால் நிச்சயமாக முடியாது’ என்கிற நிதர்சனத்தைப் புரிந்து கொண்ட நந்தினி நடந்த விடயங்கள் எல்லாம் தன்னோடு மட்டும் போகட்டும் என்று உறுதியான ஒரு முடிவை எடுத்துக் கொண்டு, 

 

“என்னை மன்னிச்சுடுங்க ப்பா, இனிமேல் இப்படி எதுவும் நடக்காமல் நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியிருக்க, 

 

பெருமூச்சு விட்டபடியே அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர், “சரிம்மா, நடந்தது நடந்து போச்சு, ஆனால் இனிமேல் கவனமாக இருக்கணும், சரியா?” என்று கேட்டு விட்டு கயல்விழி வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கிச் செல்லப் பார்க்க, சரியாக அந்த நேரத்தில் அவரது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

 

இந்த சமயத்தில் தன்னை அழைப்பது யார் என்கிற யோசனையுடன் தனது தொலைபேசியை எடுத்துப் பார்த்தவர் அதில் தெரிந்த ‘ஈஸ்வர்’ என்கிற பெயரைப் பார்த்ததுமே, அவர் மனது பதட்டத்தை தத்தெடுத்துக் கொண்டிருக்க, அவரது கண்களோ கயல்விழியின் இந்த நிலைமையை அவரிடம் சொல்வதா? வேண்டாமா? என்கிற யோசனையுடன் அந்த தொலைபேசியின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன…….

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்