arrow_back
En Ragasiya Kanavu Nee அத்தியாயம் 03
En Ragasiya Kanavu Nee chevron_right பகுதி 3 / 3

அத்தியாயம் 03

star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 03

வீட்டுக்குள் நுழைந்த சுமித்ரா சில நொடிகள் மலைத்துப் போய் நின்றுவிட்டாள். அம்மா, அப்பாவுக்கென ஓர் அறை, அவளுக்கும் சுமதிக்குமாக ஓர் அறை. சின்னதாக ஓர் ஹால், கிச்சன், பாத்ரூம். இதுதான் அவள் வீடு. வீட்டைச் சுற்றியிருக்கும் சிறிய நிலத்தில் அம்மா பூந்தோட்டம், காய்கறிகள் என எல்லாம் நட்டிருப்பார். ஆனால் இப்போது அவள் பார்ப்பது வீடா? அல்லது மாளிகையா?!

“உள்ள வாம்மா.” செல்லம்மா அழைக்கவும் மேய்ப்பனைத் தொடரும் ஆட்டுக்குட்டி போல பின்னோடு போனாள். பென்னம்பெரிய வரவேற்பறை. அதில் விலையுயர்ந்த தளவாடங்களும் கலைநயம் மிக்க பொருட்களும் அழகுற அடுக்கப்பட்டிருந்தன. அதை அடுத்தாற்போல ஆறேழு படுக்கை அறைகள். அடுத்து சமையலறை. அதற்கும் அடுத்து வீட்டின் கடைசிப் பகுதியாக பெரிய ஹால் போல ஓரிடம் இருந்தது. வீட்டில் ஏதாவது சுபகாரியங்கள் நடைபெற்றால் பந்தி பரிமாற மிகவும் சிறந்த இடம். அங்கேதான் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சுமதி, யாரு வந்திருக்கா பாரு.” செல்லம்மா அழைக்கவும் பக்கத்திலிருந்த நண்பிக்கு எதற்கோ விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த சுமதி நிமிர்ந்து பார்த்தாள்.

“அக்கா, என்ன இந்த நேரத்துல?” படிக்கும் போது அடிக்கடி தொல்லை செய்தால் அவளுக்குப் பிடிக்காது. அது தெரிந்த விடயம்தானே!

“அம்மா இதை உங்கிட்டக் குடுக்கச் சொன்னாங்க.” யாரின் பெயரை உச்சரித்தால் தங்கையை மடக்கலாம் என்று பெரியவளுக்குத் தெரியும்.

“சுமதி, உங்கூடக் கொஞ்சம் தனியா பேசணும்.”

“என்னக்கா? ஏதாவது பிரச்சினையா?” அக்காவும் தங்கையும் சற்றே அப்பாலிருந்த இடத்திற்கு வந்தார்கள்.

“நாம நம்ம வீட்டுக்கே போயிடலாம் சுமதி, அதான் மழை நல்லாவே குறைஞ்சிடுச்சே, இதுக்கு முன்னாடி நம்ம வீட்டுல எப்பவும் வெள்ளம் வந்ததே இல்லை, நாம சும்மா பயப்பிடத் தேவையில்லை.”

“இதைத்தான் நான் ஆரம்பத்துல இருந்தே சொல்றேன், நீங்க யாரும் என்னோட பேச்சைக் கேட்கலை.”

“சரிசரி, போனது போகட்டும், நாம வீட்டுக்குப் போகலாம், நீ கிளம்பு.”

“அக்கா! இப்பவேவா?”

“ஆமா, நீ இங்க இருந்து என்ன பண்ணப்போறே?”

“இப்பிடி எல்லார் கூடவும் இருந்து படிக்கிறது நல்லா இருக்குக்கா, டிஸ்கஸ் பண்ண முடியுது, மத்தவங்களுக்குச் சொல்லிக் குடுக்கும் போது நமக்கும் இன்னும் நல்லா மனசுல பதியுது.”

“அதுக்காக இங்கயே இருக்க முடியுமா?”

“நான் தனியா இல்லையேக்கா, எல்லாரும் இருக்கிற வரை நானும் இருக்கிறேன், அவங்க கிளம்பும்போது நானும் வீட்டுக்கு வந்தர்றேன்.”

“இங்க… வீட்டுல ஆளுங்க அதிகமா இருக்கிற மாதிரி இருக்கேடீ.”

“யாரைச் சொல்றே? ஓ… மாதவன் சாரோட தம்பி வந்ததைச் சொல்றியா? அவங்களுக்கு இங்க என்னக்கா வேலை, அவங்க ரூம்ல இருக்கப் போறாங்க, நாங்க இங்க உட்கார்ந்து படிக்கப் போறோம்.” இப்படிச் சொல்பவளிடம் என்ன பேசுவது? சமித்ரா எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டாள். இவள் வெளி வாசலை நெருங்கும் போது கூர்க்கா கேட்டை திறந்துவிட அந்த ப்ளாக் ஆடி உள்ளே நுழைந்தது.

வருவது யாரென்று தெரிந்ததால் சுமித்ரா நிமிர்ந்து பார்க்கவில்லை. குனிந்த தலையாகவே வெளியே நடந்துவிட்டாள். ஆனால் மாதவனின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது. அவனைப் பார்க்கும் அனைவரும் ஒன்று முகமன் கூறுவார்கள், இல்லாவிட்டால் ஓர் புன்னகையாவது சிந்துவார்கள். அப்படியிருக்க இந்தப் பெண் ஏன் என்னைத் தவிர்க்கிறாள்?!

இத்தனைக்கும் அவன், அவளுக்கு நல்லதுதானே செய்திருக்கிறான்?! அவள் தங்கை படிக்கவேண்டும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக இத்தனை மாணவர்களுக்கு அவன் வீட்டிலேயே வசதி செய்து கொடுத்திருக்கிறான். அதற்கு நன்றி சொல்ல வேண்டாம், குறைந்தபட்சம் மரியாதைக்காக ஓர் புன்னகை செய்யலாமே! மாதவனுக்கு சுமதியின் அக்கா ஓர் புதிராகவே தெரிந்தாள்.

ஆனால் வீட்டினுள் நிலைமை வேறாக இருந்தது. அக்காவோடு பேசிவிட்டு சுமதி உள்ளே வந்தபோது மற்றவர்கள் அனைவரும் சாப்பிடுவதற்காகச் சென்றிருந்தார்கள். இவளது பாடப்புத்தகங்கள் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் சரண் நின்றிருந்தான். இதை சுமதி எதிர்பார்க்கவில்லை.

“உங்க வீட்டுக்கு இன்னைக்கு நான் போயிருந்தேன்.”

“எங்க வீட்டுக்கா?! நீங்க போனீங்களா?! எதுக்கு சரண் சார்?” அவனை அங்கிருந்த அனைவரும் அப்படித்தான் அழைத்தார்கள்.

“உங்கக்காவை அங்க மீட் பண்ணினேன், எதுக்காக அவங்க இப்போ இங்க வந்தாங்களாம்?”

“எனக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வந்தாங்க.” அக்காவின் வருகைக்கான காரணம் தங்கைக்கு இப்போது பிடிபட்டது. இவன் ஏடாகூடமாக ஏதாவது அக்காவிடம் பேசியிருப்பானோ?!

“கொழும்பு யூனிவர்ஸிட்டிக்குத்தான் போறதுன்னு ஒரு முடிவோட படிக்கிறியா சுமதி?”

“அப்பிடியெல்லாம் இல்லை சார், மெடிசின் கிடைச்சாலே போதும், கொழும்பு கிடைச்சா இன்னும் சந்தோஷம்.”

“கொழும்பு பார்த்திருக்கியா?” அந்தக் கேள்வியில் ஆர்வம் இருந்ததா, இல்லை ஏளனம் இருந்ததா என்று அவளுக்குப் புரியவில்லை. உன் வசதிக்கு நீயெல்லாம் இப்படி உல்லாசமாகத் திரிய முடியாது என்று சொல்லிக் காட்டுகிறானா?

“சின்ன வயசுல போயிருக்கேன்.”

“எங்கூட வா, நான் சுத்திக் காட்டுறேன்.” அவன் சுலபமாகச் சொல்ல இவளுக்கு பக்கென்றது. அவளது பயந்த பார்வையில் இளையவனுக்குச் சுவாரஸ்யம் கூடியது.

“கொழும்பு தெரியாமலே அங்க போகப்போறியா? நாங்கெல்லாம் அங்கதான் இருக்கோம்மா, கவலைப்படாம வா.” அந்த அழைப்பு அவளுக்குள் கிலியை மூட்ட அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் சுமதி. தங்கள் வீட்டுக்கே போய்விட்டால் நல்லது என்று இப்போது அவளுக்கே தோன்றத் தொடங்கியிருந்தது.

அன்றைக்கு இரவு வெற்றிவேலின் பங்களா இரண்டு பட்டுக்கொண்டிருந்தது. காரணம் அவரின் இரண்டு வயதுப் பேரன் ரஞ்சன் வீடு வந்திருந்தான். தாத்தா பாட்டி இருவருக்கும் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான். அவர்களும் தங்கள் வயதை மறந்து அவனோடு ஆடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு வயதுதான் என்றாலும் ரஞ்சனுக்கு நன்றாகப் பேச்சு வந்திருந்தது. வயதுக்கு மீறி அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பித்திருந்தான்.

“அப்புறம் மாதவா, ரேவதி என்ன சொல்லுறா?” அத்தான் மோகன்தான் பேச்சை ஆரம்பித்தார். இராப்போஜனம் முடிந்திருக்க வெற்றிவேல் பொடி நடையாக வெளியே போயிருந்தார். சரண் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான். மழை சற்றே ஓய்ந்திருந்தது.

“அக்கா எங்கிட்ட என்னத்தான் சொல்லப்போறா? சொல்றதுன்னா உங்கக்கிட்டத்தான் ஏதாவது சொல்லணும்.”

“அடப்போப்பா!” என்றவர் மனைவியைப் பார்க்க உள்ளே எழுந்து சென்றவள் வரும்போது கையில் ஓர் கவரோடு வந்தாள்.

“இதைப்பாரு மாதவா, உனக்குப் புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.”

“என்னக்கா இது?” என்றவன் அந்த கவரைப் பிரித்துப் பார்த்தான். உள்ளே மூன்று ஃபோட்டோக்கள் இருந்தன. ஒரே பெண், பல ஆடைகளில் தன்னைப் படம் பிடித்திருந்தாள். பார்க்க அழகாக இருந்தாள். பெரிய வீட்டுப் பெண் என்று அணிந்திருந்த நகைகள் கூறின. சட்டென்று இவன் அம்மாவைப் பார்த்தான். செல்லம்மாவின் முகத்தில் அத்தனை ஆர்வம். மகன் என்ன பதில் சொல்லப் போகிறானோ என்ற படபடப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“உங்களுக்குப் புடிச்சிருக்காம்மா?” இப்போது மோகனும் ரேவதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“எனக்குப் புடிச்சு என்னப்பா பண்ண, நீதான் கட்டிக்கப்போறவன், உனக்குப் புடிச்சிருக்கான்னு நீதான் சொல்லணும்.”

“அக்கா, உங்களுக்கெல்லாம் புடிச்சிருந்தா எனக்கும் சம்மதம், ஆனா ஒரேயொரு கண்டிஷன்தான், என்னை எதுக்கும் அவசரப்படுத்தக் கூடாது, திடுதிடுப்புன்னு என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, இந்தப் பொண்ணு பார்க்க அழகா இருக்கா, ஆனா எனக்குப் பொருத்தமா இருப்பாளான்னு எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, அதுக்கு எனக்கு நீங்க டைம் குடுக்கணும்.”

“அதொன்னும் பிரச்சினை இல்லைப்பா, அப்போ அவங்களை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லட்டுமா?”

“தாராளமா.” என்றவன் புன்னகை முகமாக தனது அறைக்குப் போய்விட்டான். அம்மாவுக்கும் மகளுக்கும் சந்தோஷமாகிப் போனது. ஆனால் மோகன் அந்தளவு சந்தோஷப்படவில்லை! மாதவனை அத்தனை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியும் என்று தோன்றவுமில்லை!
***
அன்றைக்கு சுமதிக்குப் பரீட்சை ஆரம்பிக்கிறது. மழையின் கோரத்தாண்டவம் நிறைவுக்கு வந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்திருந்தார்கள். ஆங்காங்கே தேங்கியிருந்த வெள்ளம் முற்றாக வடிந்து இனி மண்சரிவு அபாயம் இல்லை என உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்தார்கள்.

பெரிய வீட்டில் தங்கியிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மாதவனுக்கும் அவன் அம்மாவுக்கும் உரிய முறையில் நன்றி தெரிவித்துவிட்டுத் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வெற்றிவேலுக்கு அதில் அவ்வளவு பெருமை. தன் மகனை ஊர் மக்கள் போற்றிப் பேசியதில் மகிழ்ந்து போனார்.

மாதவனின் திருமணப் பேச்சும் ஆரம்பித்த வேகத்தில் அப்படியே நின்றிருந்தது. பெண்வீட்டைச் சேர்ந்தவர்கள் ஒரு முறை மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து போயிருந்தார்கள். ஆனால் மாப்பிள்ளையும் பெண்ணும் இன்னும் சந்திக்கவில்லை. தொழிலில் ஏற்பட்ட சரிவைச் சீராக்குவதில் மகன் மும்முரமாக ஈடுபட்டதால் வெற்றிவேல் தன் மனைவியிடம் திருமணப் பேச்சைச் சற்று ஆறப்போடுமாறு சொல்லியிருந்தார்.

“சுமதி! நீ ரெடியா?” வெளியே இருந்தபடி குரல் கொடுத்தாள் சுமித்ரா.

“என்ன சுமி? சுமதிக்கு இன்னைக்குப் பரீட்சை ஆரம்பிக்குது போல?” இவள் குரல் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்தவர்கள் எல்லோரும் வெளியே வந்துவிட்டார்கள்.

“ஆமாக்கா, அடுத்தவாரம் வெள்ளிக்கிழமைதான் முடியுது, எல்லாரும் சுமதிக்காகப் பிரார்த்தனைப் பண்ணுங்கக்கா.”

“கண்டிப்பா, இதென்ன பேச்சுன்னு நீ பேசுறே! எங்கப் பிரார்த்தனை எப்பவும் சுமதிக்கு இருக்கு, நல்லா பண்ணி டாக்டர் ஆகணும் சுமதி.” அனைவரும் சேர்ந்து தங்கையை வாழ்த்த மணிமேகலையும் கண்ணீர் மல்க மகளை வழியனுப்பி வைத்தார். எஸ்டேட்டில் அதிகம் வேலை இருந்ததால் காலையிலேயே மகளை வாழ்த்திவிட்டு ராஜசேகர் சென்றுவிட்டார்.

தங்கையைப் பின்னால் ஏற்றிக்கொண்டு அந்த சைக்கிள் பெரியவீட்டின் முன்பாகப் போய் நின்றது. இவர்களைக் கண்டதும் கூர்க்கா வாயெல்லாம் பல்லாக கேட்டைத் திறந்துவிட்டார். இவர்கள் இங்கே இருந்து படித்தபோது செல்லம்மா மிகவும் அருமையாகக் கவனித்ததால் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு பரீட்சைக்குச் செல்லவேண்டும் என்று சுமதி மிகவும் ஆசைப்பட்டாள்.

“சுமதிப் பொண்ணுக்கு இன்னைக்குப் பரீட்சை ஆரம்பிக்குதோ?” இது கூர்க்கா.

“ஆமா தாத்தா, அம்மா இருக்காங்களா?”

“உள்ள இருக்காங்க தாயீ, நீங்க போங்க.” தலையை ஆட்டிவிட்டு இவர்கள் செல்ல வாசலிலேயே நின்றிருந்தார் செல்லம்மா.

“கண்டிப்பா இன்னைக்கு சுமதி இங்க வருவான்னு நான் நினைச்சேன்.”

“மாதவன் சாரும் இருக்காங்களாம்மா?”

“மாதவா! சுமதி வந்திருக்கா பாரு.” அந்த வீட்டுப் பெண்போல தன் தங்கை அவர்களோடு பழகுவதை ஒரு புன்சிரிப்போடு பார்த்திருந்தாள் சுமித்ரா. இயல்பாக அவள் கை பரீட்சை அனுமதி கார்டை செல்லம்மாவிடம் நீட்டியது. யாராவது பெரியவரிடம் அதைக் கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு பரீட்சைக்குச் செல்வது அவர்களது வழக்கம்.

“அடடே! நம்ம டாக்டர் வந்திருக்காங்களா?” ஆர்ப்பாட்டமாக வெளியே வந்தான் மாதவன். அவனைப் பார்த்ததும் சுமித்ராவின் முகத்திலிருந்த புன்னகையை யாரோ துடைத்துத் தூரப்போட்டிருந்தார்கள். அதை மாதவனும் கவனிக்கத் தவறவில்லை. எதற்காக இந்தப் பெண் என்னைத் தவிர்க்கிறாள் என்ற எண்ணம் மீண்டும் தோன்றியபோதும் அதை ஆராயும் நேரம் இதுவல்ல என்று விட்டுவிட்டான்.

“மாதவன் சார், கேலி பண்ணாதீங்க, எல்லா பேப்பரும் ஈஸியா வரணும்னு எனக்காகப் பிரார்த்தனைப் பண்ணுங்க ப்ளீஸ்.”

“இங்கப்பாரு சுமதி, என்னைப் பொறுத்தவரை நீ டாக்டராகப் போறது உறுதி, எனக்கு இப்போ தேவை என்னன்னா நீ ஐலன்ட் ரேங்க் வாங்கணும், வாங்கி கொழும்பு யூனிவர்ஸிட்டி போகணும், அதை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு எக்ஸாம் எழுது, சரியா.”

“சரி சார்.” என்றவள் செல்லம்மாவிடம் சென்று அவர் கையிலிருந்த பரீட்சை அனுமதி அட்டையை வாங்கிக் கொண்டாள். செல்லம்மாவும் அவள் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தவர்,

“உனக்காக நான் ஆண்டவன்கிட்டப் பிரார்த்தனைப் பண்ணிக்கிட்டே இருப்பேன், தைரியமா பண்ணு.” என்றவர் அவள் கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்க்ளைத் திணித்தார்.

“ஐயையோ! என்னம்மா இதெல்லாம்? எனக்கு உஙக்ளோட ஆசீர்வாதம் மட்டும் போதும்.”

“பரவாயில்லை சுமதி, நீ எங்க வீட்டுப் பொண்ணு, உனக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறேன்!”

“சும்மா வாங்கு சுமதி.” மாதவனும் வற்புறுத்தவும் அதற்குமேல் எதுவும் பேசாமல் சுமதி வாங்கிக் கொண்டாள். முதல் பாடம் பயாலஜி. சுமதிக்கு அத்தனை நாட்டமில்லாத பாடம். ஆனாலும் நன்றாகத்தான் செய்திருந்தாள்.

“என்ன சுமதி, A வருமில்லை?”

“நல்லாத்தான் எழுதியிருக்கேன்கா, கண்டிப்பா வரும்.” தங்கையின் பதிலில் சந்தோஷப்பட்டவள் அதே மனநிலையோடு அன்று பிற்பகல் அந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டாள். கூடப்படித்த பெண்ணுக்குத் திருமணம். ஒன்றாகப் பள்ளியில் படித்தவள். பல்கலைக்கழகம் சென்ற பிற்பாடு அத்தனை உறவு இல்லை என்றாலும் மெனக்கெட்டு வந்து அழைத்தபோது ஒன்றும் சொல்ல இயலவில்லை.

“இங்கப்பாரு சுமி, இப்பிடியே யாரோடவும் பழகாம இருக்கப்படாது, நாலு இடத்துக்குப் போய் வந்தாத்தானே உன்னையும் எல்லாருக்கும் தெரியும், பொண்ணு வீடு அத்தனைத் தூரமும் இல்லை, போயிட்டு வா.” அம்மாவே சொன்னபோது இவளால் மறுக்க முடியவில்லை. ஏனென்றால் மணிமேகலை அத்தனைச் சுலபத்தில் தன் பெண்களை வெளியே அனுப்பமாட்டார்.

அடர் ஊதா வண்ணத்தில் தங்க நிற பார்டர் வைத்த பட்டுப்புடவை. அதே ஊதா நிறத்தில் ப்ளவுஸ். தாமரைப்பூ வடிவில் முத்துக்கள் பதித்த டாலரை கனமான சங்கிலியில் கோர்த்து அணிந்திருந்தாள். தங்கத்தில் அணியும் அளவுக்கு அவர்களிடம் வசதியில்லை. காதில் முத்துக்கள் பதித்த குடை ஜிமிக்கி. கையில் கொஞ்சம் முத்து வளையல்கள். தங்கம் இல்லை என்றாலும் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வண்ணம் ஆபரணங்களைத் தேர்வு செய்வார் மணிமேகலை.

“அம்மா நான் கிளம்புறேன்.”

“கொஞ்சம் பொறு சுமி.” சொன்னபடி வந்தவர் மகளின் தலையில் பூவை வைத்துவிட்டார். கூந்தலை ஒற்றைப் பின்னலாக்கித் தோளில் போட்டிருந்தாள். மகளைப் பார்த்தபோது அம்மாவின் கண்கள் கலங்கின. இவளுக்கு நல்லதாக ஓர் வாழ்க்கை அமைய வேண்டும். கணவர் நல்ல தொழிலில் இருந்தாலும் சேமிக்கும் அளவுக்கு அவர்கள் நிதி நிலைமை இருந்ததில்லை. எந்தக் குறையும் இல்லாமல் நல்லதொரு வாழ்க்கையை மனைவி, மக்களுக்கு ராஜசேகர் வழங்கியிருந்தார். ஆனால் அது ஒரு பெண்பிள்ளைக்குத் திருமணம் செய்து பார்க்கப் போதாதே!

“நான் வர்றேம்மா.” சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்த மகளையே பார்த்திருந்தார் அம்மா. அழகாக இருக்கிறாள். நல்ல உழைப்பாளி. தான் ஆசைப்பட்ட படிப்பைத் தேர்ந்து படித்து இன்றைக்கு அதில் பட்டமும் வாங்கியிருக்கிறாள். நல்லதொரு வேலையில் அமரவேண்டும் என்பது அவளது கனவு. தினமும் பத்திரிகையை வைத்துக்கொண்டு வேலைகளுக்கு விண்ணப்பிப்பாள். சோர்ந்து உட்கார்ந்துவிடக் கூடாது என்றுதான் பள்ளிக்கும் போகிறாள்.

“என்ன மணி? அப்பிடியென்ன யோசனை?” கணவரின் குரல் கேட்கவும் சட்டென்று திரும்பினார் மணிமேகலை.‌ வேலையிலிருந்து வீடு திரும்பியிருந்தார் ராஜசேகர்.

“சுமியோட ஃப்ரெண்ட்டுக்கு இன்னைக்குக் கல்யாணம், அவ இப்பதான் கிளம்பிப் போனா, அதான் பார்த்துக்கிட்டு நிற்கிறேன்.”

“ம்…” அடுத்து என்ன வரும் என்று தெரிந்ததால் ராஜசேகர் எதுவும் பேசாமல் உள்ளே போனவர் முகம் கழுவினார்.

“மூத்தவ படிப்பை முடிச்சுட்டா…”

“தெரியும், அடுத்ததா அவளுக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்கணும்.” மனைவி நீட்டிய டீயை வாங்கிக் கொண்டார் மனிதர்.

“நீங்க இப்போ வேணும்னு பேசுறீங்க.”

“மணி, நீ எப்பவும் ஆரம்பிக்கிறதை இப்பவுய் ஆரம்பிக்க வேணாம், என்னோட வசதிக்கு உட்பட்டு எம் பொண்ணுங்களை நான் நல்லா வளர்த்திருக்கேன், அவங்களுக்கு எந்தக் குறையும் வெக்கலை, நல்லா படிக்கிறாங்க, அவங்களுக்குக் காசை மட்டுந்தான் நான் சேர்த்து வெக்கலை, மத்தப்படி அவங்க நல்லாத்தான் இருக்காங்க.”

“நாளைக்கு அவங்களுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப்பார்க்கக் காசு வேணுங்க.”

“என்னோட சக்திக்கு உட்பட்டு அவங்களுக்கு நான் கல்யாணமும் பண்ணி வெப்பேன், ஆனா நீ நினைக்கிற மாதிரி ரொக்கமும் குடுத்து, தங்கமும் குடுக்க நான் தயாரில்லை, அதுக்கு எங்கிட்ட வசதியும் இல்லை, நான் சம்பாரிச்சது எல்லாத்தையும் எம் பொண்ணுங்க படிப்புக்காகச் செல்வழிச்சிருக்கேன், அவங்களோட அருமைத் தெரிஞ்சவன் இந்த உலகத்துல இல்லாமலா போயிடுவான்! நிச்சயம் இருப்பான், அந்த மாதிரி ஆளுங்களுக்கு நான் என்னோட பொண்ணுங்களைக் குடுக்கிறேன், நீ கவலப்படாதே.”

இந்த வாக்குவாதம் கணவன் மனைவிக்குள் எப்போதும் நடக்கும். சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் சேமிக்கலாம் என்பது மணிமேகலையின் கருத்து. நமக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.‌ அவர்களுக்கு நாளைக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது அவரது எண்ணம். ஆனால் ராஜசேகரின் கொள்கை வேறு. தன் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க வேண்டும். சுய சம்பாத்தியம் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியம் என்று நினைப்பவர். கல்யாணத்தை விட ஒரு பெண்ணுக்குப் படிப்பும் உத்தியோகமும் மிகவும் அவசியம் என்று அடிக்கடி சொல்லுவார். அதனாலேயே தன் பெண்களைப் படிக்க வைப்பதில் உறுதியாக நின்றார்.

இந்தப் படிப்பு உயர்வானது, இது தாழ்ந்தது என்ற பாகுபாடு அவருக்குக் கிடையாது. உனக்கு எதில் ஈடுபாடு அதிகம் இருக்கிறதோ அதைத் தேர்வு செய்து படி. அதில் உன்னால் முடிந்த அளவு உயரத்திற்குப் போ என்று வலியுறுத்துவார். சுமித்ரா விவசாயத் துறையைத் தேர்வுசெய்த போதும் அப்படித்தான். மகளை ஊக்கப்படுத்தினார். இளையவள் மருத்துவம் என்று சொன்னபோதும் பணத்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களுக்குச் செலவீனங்கள் அதிகம் என்றும் அவருக்குத் தெரியும்.

இருந்தாலும் மனிதர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகளுக்கு ஆதரவு வழங்கினார். அதில் மணிமேகலைக்கு வருத்தம் இருந்தது. அதை அவர் வெளிக்காட்டவும் தயங்கவில்லை. பெண்பிள்ளைக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி வாதம் செய்வார். ஆனால் அவை எதையும் ராஜசேகர் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்!

கல்யாணத்தை அங்கிருந்த கோவிலில்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். வாசலில் பெரிய அரிசிமாவு கோலம் போடப்பட்டிருந்தது. மாவிலைத் தோரணங்களுக்கு நடுவே பூக்களாலும் அலங்காரம் பண்ணியிருந்தார்கள். மலைக்குன்றுகளுக்கு நடுவே அமைந்த கோவில். சுற்றிவர மரங்கள் பெரிதாக வளர்ந்திருந்தன. அன்றைக்கு மழை வரும் அறிகுறியும் இலேசாகக் காணப்பட்டது.

மாதவனும் அன்றைக்கு வேட்டி சட்டையில்தான் வந்திருந்தான். அந்த ப்ளாக் ஆடியைக் கோவிலின் முன்பாக நிறுத்தியவன் உள்ளே வந்தான். ஊரில் எந்தத் திருமணம் நடந்தாலும் இவர்கள் வீட்டிற்கு அழைப்பு வந்துவிடும். இன்றைக்கு வெற்றிவேலுக்கு வேறு வேலைகள் இருந்ததால் பெரிய வீட்டின் சார்பாக இவன் வந்திருந்தான்.

“வணக்கம் சாமி!” சின்னைய்யாதான் முதல் ஆளாக ஓடிவந்து வரவேற்றார்.

“அடடே! சின்னைய்யா, எப்பிடி இருக்கே? என்ன இந்தப் பக்கம்? சொந்தக்காரங்க வீடா?”

“இல்லை சாமி, மாப்பிள்ளைத் தம்பி நம்ம நிமலனோட கூடப்படிச்சவங்களாம், நிமலனும் கல்யாணத்துக்கு வந்திருக்கான்.”

“அப்பிடியா?! நிமலனோட படிச்ச பையன்னா அப்ப எனக்கும் மாப்பிள்ளையைத் தெரிஞ்சிருக்கணுமே!”

“கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், உள்ள வாங்க சாமி.” மாதவனை மனிதர் உள்ளே அழைத்துச் செல்ல மாப்பிள்ளையின் பெற்றோரும் முறையாக வந்து வரவேற்றார்கள்.

“தம்பீ நிமலா!” சின்னைய்யா குரல் கொடுக்கவும் ஓடி வந்தான் மகன்.

“யாரு வந்திருக்கான்னு பாரு ராசா.”

“மாதவன்! வாங்க வாங்க.” நல்ல நண்பர்கள் என்றாலும் பெரியவீட்டுப் பிள்ளை என்பதால் நிமலன் எப்போதும் மரியாதையாகவே நண்பனை அழைப்பான்.

“நிமலா! எப்பிடியிருக்கே? வேலையெல்லாம் எப்பிடிப் போகுது? பையன் சம்பாரிக்க ஆரம்பிச்சதும் சின்னைய்யாவைக் கைல புடிக்க முடியலை, அன்னைக்கு என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரிப் போறாரு.” மாதவன் வேண்டுமென்றே பொய் சொன்னான்.

“யாரு? உங்க சின்னைய்யாவா? இதைச் சொன்னா பச்சைப் புள்ளை கூட நம்பாது மாதவா.”

“ஹா… ஹா…”

“நீங்களாவது கொஞ்சம் அப்பாக்கிட்டச் சொல்லலாமில்லை? எதுக்கு இந்த வயசுல இன்னும் எஸ்டேட் வேலைக்குப் போகணும்? அதான் இப்போ நான் கை நிறையச் சம்பாதிக்கிறேனில்லை?”

“இதை அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் உங்கப்பா கேட்கப்போறதில்லை, ஆளை விடுப்பா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தப் பெண் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். மாதவன் சற்று நேரம் அப்படியே நின்றுவிட்டான். சுமதியின் அக்காதான் அவள் என்று அவன் கண்டு கொண்டான். ஆனால் அந்தப் பெண் இத்தனை அழகா?! சேலையும் சூடியிருந்த மல்லிகையும் மிதமான ஒப்பனையும் இளவலின் கண்களுக்கு அவளைத் தேவலோக மங்கையாகக் காட்டியிருந்தன.

“சீனியர், உங்களை உள்ள கூப்பிடுறாங்க.”

“இதோ வர்றேன் சுமி.” நிமலன் சொல்லவும் அந்தப் பெண் போய்விட்டாள்.

“நிமலா, யாரது? உன்னை சீனியர்னு கூப்பிடுது?”

“சுமித்ராவை உங்களுக்கு ஞாபகமில்லையா மாதவா? நம்ம ஸ்கூல்லதான் படிச்சா.”

“அப்பிடியா? எனக்கு ஞாபகமில்லையே? மாப்பிள்ளையும் உன்னோட கூட்டாளியாம்? சின்னைய்யா சொன்னான், எனக்குத்தான் யாரையும் தெரியமாட்டேங்குது!” இப்போது நிமலன் புன்னகைத்துக் கொண்டான். மாதவன் பெரியவீட்டுப் பிள்ளை என்பதால் அவனோடு சட்டென்று யாரும் பழகிவிடமாட்டார்கள். ஆனால் நிமலன் அப்படியல்லவே! கீழ்த்தட்டு வர்க்கம். அவனோடு எல்லோரும் சகஜமாகப் பழகுவார்கள். இயல்பாகப் பேசுவார்கள்.

சற்று நேரத்தில் திருமண நிகழ்வுகள் ஆரம்பித்துவிட்டன. பிரதம விருந்தினரான மாதவனை முன்வரிசையில் நாற்காலி போட்டு அமர வைத்தார்கள். பெண்கள் அழகழகாக ஆடைகள் அணிந்து ஆபரணங்கள் சூடி என்று அந்த இடமே பார்க்க ரம்மியமாக இருந்தது. பட்டுவேட்டி சட்டைகள் கண்களால் பெண்களைத் தொடர்ந்த வண்ணம் இருக்க சந்தனமும் பூ வாசமும் நிறைந்த அந்த இடத்தை மாதவன் வெகுவாக ரசித்தான்.

“என்ன நிமலா! கண்ணுக்கு இன்னைக்கு நல்ல விருந்து போல இருக்கு?!”

“கண்ணுக்கு மட்டுமில்லை, தாலி கட்டின கையோட விருந்தும் பரிமாறுவாங்க, சாப்பிட்டுட்டுத்தான் போகணும்.” நண்பனது செல்லக் கட்டளையில் மாதவனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலவிருந்தது. நான் என்ன கேட்டால் இவன் அதற்கு என்ன பதில் சொல்கிறான்?! ஆனால் நிமலன் எப்போதும் மாதவனோடு அப்படித்தான் பழகுவான். நல்ல நண்பர்கள் என்றாலும் நாகரீகமான இடைவெளியைப் பின்பற்றுவான். மாதவன் பெரிய மனதோடு இவனுடன் கை கோர்த்தாலும் தன் எல்லை தெரிந்து நடக்க நிமலனுக்குத் தெரியும்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்!” அந்தக் குரல் ஓங்கி ஒலிக்க தாலி கட்டும் படலம் நடந்தேறியது. அட்சதையை எல்லோரும் தூவ மாதவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு திருமணத்தைக் கண்ணாரப் பார்த்து மகிழ்கிறான். தலைமேல் வீழ்ந்த அட்சதையைத் தட்டிவிடும்போது மீண்டும் அந்தப் பெண் கண்ணில்பட்டாள். அவள் மீதும் பூக்கள் வீழ்ந்திருக்கும் போலும். ஒரு புன்னகையோடு அந்தப் பூக்களைத் தட்டிவிட்டாள்.

மாலை நேரத்து மங்கிய ஒளிக்கும் அவள் அணிந்திருந்த பட்டுப்புடவைக்கும்… மாதவனது மனது இலேசாக அசைந்தது. பார்வையைச் சட்டென்று அகற்றியவன் அப்பால் போய்விட்டான். ஏதோ குற்றம் செய்த உணர்வொன்று மனதைக் கவ்விக் கொண்டது!

forum 3 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்