arrow_back
En Ragasiya Kanavu Nee அத்தியாயம் 02
En Ragasiya Kanavu Nee chevron_right பகுதி 2 / 3

அத்தியாயம் 02

star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 02

ஒரு மாதம் கடந்து போயிருக்கும். மாதவன் எஸ்டேட் வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்தி இருந்தான். எப்போது வீடு வந்தாலும் இது போல நீண்ட நாட்கள் தங்கியதில்லை. இரண்டு வாரங்களுக்கு மேல் அம்மாவின் கையால் உண்பதற்கு அவனுக்கு வாய்ப்புகள் அமைந்ததில்லை. எதாவது ஓர் படிப்பு, பயிற்சி, அல்லாவிட்டால் பரீட்சை அவனை அழைத்துக் கொள்ளும்.

அந்த வாரம் முழுவதும் அடை மழை பெய்து கொண்டிருந்தது. வரலாறு காணாத தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. மண்சரிவு அபாயங்கள் அதிகம் இருப்பதனால் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உரிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்கள்.

“இப்பிடித் தொடர்ந்து மழை பேஞ்சா மக்கள் என்னதான் பண்ணுவாங்க? சரணுக்கு கால் எடுத்துப் பார்த்தியா மாதவா? அவன் எப்பிடி இருக்கானாம்?”

“கொழும்புலயும் நல்ல மழை பெய்யுதாம்மா, சில இடங்கள்ல வெள்ளம் போட்டிருக்காம், சரண் இருக்கிற ஏரியால ஒன்னும் பிரச்சினை இல்லைன்னு சொன்னான்.”

“ஓ… கவனமா இருக்கச் சொல்லுப்பா.” செல்லம்மாவின் குரலில் அவ்வளவு கவலைத் தெரிந்தது. எஸ்டேட் பகுதிகளில் வெள்ளம் வரும் வாய்ப்புகள் குறைவு. உயரமான இடம் என்பதால் நீர் சட்டென்று வடிந்துலிடும். ஆனால் மண்சரிவு அபாயங்கள் அதிகம் இருக்கும்.

“இன்னும் ரெண்டு நாள் தொடர்ந்து மழை பேஞ்சுதுன்னா நிலைமை மோசமாகிடும், இப்பவே இந்த ஜனங்களை ஸ்கூல், ஹாஸ்பிடல்ல கொண்டுவந்து தங்க வெக்கிறதுதான் நல்லதுன்னு சொல்றாங்க, தேவைப்பட்டா நம்ம ஃபேக்டரியைக் கூட அதுக்காக ஒதுக்கவேண்டி வந்தாலும் வரும்.” அந்தப் பிரதேசத்தின் பெரிய மனிதராக வெற்றிவேலும் அதிகாரிகளுடன் தொடர்பில்தான் இருந்தார். எந்த உயிரிழப்பும் நடந்துவிடக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தார்கள்.

எல்லோரும் பயந்தது போலவே அடுத்து வந்த இரண்டு நாட்களும் தொடர்ந்து மழை பெய்யவே நிலைமை இன்னும் மோசமானது. நுவரெலியாவை அண்மித்த பகுதியில் மண்சரிவு ஏற்படவே உடனடியாக இராணுவம் அங்கு அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது. மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் திண்டாட ஆரம்பித்தார்கள். அங்கு வசிப்பவர்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்குள் போதும் போதுமென்றானது.

“எதுக்குடீ சுமி இவ இப்போ கண்ணைக் கசக்கிறா? இவளுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா?”

“உஷ்!” அடிக்குரலில் உறுமிய அம்மாவை அடக்கினாள் பெரியவள்.

“இவ கன்னத்துலயே ஒன்னு வெச்சேன்னா அப்போ அம்மா யாருன்னு இவளுக்குத் தெரியும், ஊரைப் பாதுகாக்கிறேன்னு உங்கப்பாவும் கிளம்பிட்டாரு, இவ என்னடான்னா என்னோட உயிரை வாங்குறா!” மீண்டும் மணிமேகலை பொரிய ஆரம்பித்துவிட்டார். சுமித்ராவின் வீடு இருந்த பகுதியில் மண்சரிவு அபாயம் இல்லை என்றாலும் மக்களைக் காக்க வேண்டிய கடமை காரணமாக அதிகாரிகள் அனைவரையும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

‘மழையாவது மண்ணாங்கட்டியாவது! எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் பரீட்சை இருக்கிறது!’ இது சுமதியின் கவலை.

“அக்கா! என்னக்கா இது? நம்ம வீட்டுல எப்போ வெள்ளம் வந்திருக்கு இப்போ வர்றதுக்கு?! இவங்க தேவையில்லாம ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க, என்னோட டைம் எவ்வளவு வேஸ்ட் ஆகுதுன்னு இவங்களுக்குப் புரியமாட்டேங்குது.”

“சுமதி, உன்னோட கஷ்டம் எனக்குப் புரியுது, ஆனா நம்மளால என்னப் பண்ண முடியும் சொல்லு? போன தடவையும் அஜாக்கிரதையா இருந்ததால நாம இழந்த உயிர்கள் அதிகம், அதனாலதான் கவர்மென்ட் இப்போ முன்னெச்சரிக்கையா இதெல்லாம் பண்ணுது, கொஞ்சம் பொறுத்துக்க.”

“என்னக்கா நீயும் புரியாம பேசுறே? எத்தனை நாளைக்கு இங்க உட்கார வேண்டி வருமோ! இவங்க பண்ணின கூத்துல நான் கைல எந்தப் புத்தகத்தையும் கொண்டு வரலை.”

“அதுக்கு ஏதாவது வழி பண்ணலாம், கொஞ்சம் அமைதியா இரு.” அக்காவின் அறிவுரையைத் தங்கை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வளவு பொறுமையும் அவளுக்கு இல்லை. ஒருவேளை அவர்கள் அப்பா வந்தால் ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் வழிமேல் விழி வைத்த வண்ணம் காத்திருந்தாள்.

மாதவனின் மனம் கடந்த ஒருவாரமாக மிகவும் கவலைக்குள்ளாகி இருந்தது. திடீரென ஏற்பட்ட இந்தக் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியது மாத்திரமல்லாது தொழிற்சாலையும் ஸ்தம்பித்துப் போனது. ஒரு முதலாளியாக தொழிலில் பெரும் சரிவு ஏற்பட்டாலும் அதைவிட முக்கியமாக மக்களைப் பாதுகாப்பது பெரும் பொறுப்பாக இருந்தது.

அண்மையில் ஏற்பட்ட பெரும் புயலின் காரணமாக ஏற்கனவே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னுமொரு அழிவை அவர்கள் தாங்கும் மனநிலையில் இல்லை. பொருட்சேதத்தை நிவர்த்தி செய்யலாம். ஆனால் எந்தவொரு உயிர்சேதமும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவன் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

“எக்ஸ்கியூஸ்மீ சார்.” தன்னை ஓர் இளங்குரல் அழைக்கவும் சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் நின்றிருந்தாள். படிக்கும் பிள்ளை போல தெரிந்தாள். பாதிக்கப்பட்ட மக்களைப் பாடசாலைக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கவனிப்பதில் ப்ளூ மௌன்டெயின் எஸ்டேட் முழுமூச்சுடன் வேலை செய்து கொண்டிருந்தது.

“என்னம்மா, ஏதாவது தேவையா?”

“இல்லை… எங்க அப்பா எங்க இருக்காங்கன்னு தெரியலை, அவங்களை உங்களால கொஞ்சம் கூட்டிட்டு வர முடியுமா?”

“உங்கப்பா பெயரென்ன? நம்ம எஸ்டேட்ல வேலை பார்க்கிறாங்களா?”

“இல்லையில்லை, பக்கத்து எஸ்டேட்ல வேலை பார்க்கிறாங்க, பெயர் ராஜசேகர்.”

“ஓ… விசாரிச்சு வரச்சொல்றேன், ரொம்ப அவசரமா என்ன?” அத்தனை சுலபத்தில் அந்த ராஜசேகரைக் கண்டுபிடித்து இந்தப் பெண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்குத் தலைமேல் ஆயிரம் வேலைகள் இருந்தன.

“இல்லை…” சுமதி வெகுவாகத் தயங்கவும் மாதவன் கூர்மையாகப் பார்த்தான்.

“எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்க, என்னால ஏதாவது ஹெல்ப் பண்ண முடிஞ்சா பண்ணுறேன்..”

“அது வந்து… என்னோட புக்ஸ்…” ஆரம்பத்தில் தயங்கியவள் அதன் பிற்பாடு ஒரு முடிவுக்கு வந்தவள் போல பேச ஆரம்பித்தாள்.

“எக்ஸாமுக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு, இன்னும் ரெண்டு நாள்ல மழை நின்னு போயிடுச்சுன்னா எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க, கவர்மென்ட்டும் எக்ஸாமுக்கு டேட் குறிச்சிடுவாங்க, இப்பிடிப் படிக்காம நாள் கணக்குல உட்கார்ந்தா யாரு எக்ஸாம் எழுதுறது?”

“ஓ…” மாதவன் இப்படியொரு பிரச்சனையை இப்போது எதிர்பார்க்கவில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை என்பது இதுதான் போலும். ஆனாலும் அந்தப் பெண்ணுக்குப் படிப்பின் மீது இருந்த அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது.

“சரிம்மா…”

“எம் பேரு சுமதி.”

“சரி சுமதி, இப்ப என்ன பண்ணுறதா உத்தேசம்? இதுல உங்கப்பாவால என்ன பண்ண முடியும்னு அவரைத் தேடுறீங்க?”

“வீட்டுக்குப் போய் கொஞ்சம் புக்ஸை எடுத்துட்டு வந்துட்டா நானுண்டு என்னோட படிப்புண்டுன்னு உட்கார்ந்திடுவேன்.”

“உங்களை மாதிரி இன்னும் நிறைய பசங்க இப்பிடிக் கவலைப்படுவாங்க இல்லை சுமதி?”

“கண்டிப்பா சார்.”

“எம் பேரு மாதவன், நீங்க என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடலாம்.”

“ஐயையோ! எங்க அக்காவை விட நீங்க பெரியவங்களா இருப்பீங்க, உங்களைப் போய் பெயர் சொல்லி யாராவது கூப்பிடுவாங்களா? புக்ஸை எடுக்க ஏதாவது ஹெல்ப் பண்ணினீங்கன்னா…”

“கண்டிப்பா, மானேஜர்கிட்ட சொல்றேன், அவங்க ஏதாவது ஏற்பாடு பண்ணுவாங்க, அதுக்கப்புறமா உங்களுக்குத் தகவல் சொல்றேன்.” சுலபமாகத் தீர்வு சொன்னவன் போய்விட்டான். ஆனால் அவன் பேச்சை சுமதி நம்பவில்லை. அவளது எண்ணம் தவறு என்பது போல சில மணி நேரங்களில் இரண்டு பேர் அவளைத் தேடிக்கொண்டு வந்தார்கள்.

“உங்க வீட்டோட சாவியை எடுத்துக்கிட்டு எங்கக்கூட வாங்க.” அவர்கள் அழைக்கவும் மணிமேகலை வேப்பிலை எடுக்காத குறையாக ஆடத்தொடங்கிவிட்டார்.

“பார்த்தியா சுமி இவளோட கொழுப்பை! எதுக்கு இப்போ இவளுக்குப் புத்தகமும் படிப்பும்? அவனவன் உசிரு பொழைச்சா போதும்னு இங்க வந்து உட்கார்ந்திருக்கான், இவளுக்கு இப்பவும் படிப்பு கேட்குது!”

“அம்மா, கொஞ்ச நேரம் சும்மா இருங்கம்மா.”

“என்னத்தைச் சும்மா இருக்க! இந்தத் தடியனுங்க யாருன்னே தெரியாது, அவனுங்களோட எப்பிடி இவளைத் தனியா வீடுவரை அனுப்புறது?” அம்மா சொல்வதும் சரியென்றுதான் தோன்றியது.

“சுமதி கூட நானும் போறேம்மா”

“நான் அவளையே போக வேணாம்னு சொல்றேன், இதுல நீ வேற போகணும்னு சொல்றே!” அம்மா நெற்றிக்கண்ணைத் திறக்கவும் சுமித்ரா வாயைக் கப்பென்று முடிக்கொண்டாள். நல்லவேளையாக ராஜசேகரைக் கையோடு மாதவன் அழைத்து வந்துவிட பிரச்சனை சுலபமாகத் தீர்ந்தது.

“என்ன சுமதி? இப்போ ஹாப்பியா?” உரிய பாதுகாப்போடு அப்பாவையும் மகளையும் அவர்கள் வீடுவரை அனுப்பி பாடப்புத்தகங்களைத் தருவித்துக் கொடுத்தவன் இன்னும் பல மாணவர்களுக்கும் அதே வசதியைச் செய்து கொடுத்திருந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்.” இது சுமதி. ராஜசேகரும் நன்றியோடு மாதவனைப் பார்த்தார்.

“தேங்ஸை இப்பிடிச் சொல்லக்கூடாது, நல்ல ரிசல்ட் எடுத்து எங்க எஸ்டேட் பொண்ணு டாக்டர் ஆகிட்டான்னு நாங்கெல்லாம் பெருமையா சொல்ற மாதிரி பாஸ் பண்ணணும்.”

“கண்டிப்பா மாதவன் சார்.” அத்தோடு உனக்கும் எனக்குமான பேச்சு முடிந்தது என்பதுபோல சுமதி படிக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் மாதவன் அப்படி இருக்கவில்லை. இத்தனைக் கூட்டத்திற்கு மத்தியில் இந்தப் பிள்ளைகளால் எப்படிப் படிக்க முடியும் என்று நினைத்தவன் அந்த வருடம் பரீட்சை எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கென அவர்கள் எஸ்டேட்டில் தனியாக ஓரிடத்தை ஏற்பாடு பண்ணி அதைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.

“எதுக்காக இப்போ பொம்பிளைப் பிள்ளையைத் தனியா அனுப்புறீங்க?”

“மணி, நான் எல்லாத்தையும் போய் பார்த்துட்டுத்தான் வந்திருக்கேன், எல்லாம் பாதுகாப்பாத்தான் இருக்கு, கவலைப்பட எதுவுமில்லை.” அதற்குமேல் யாரும் பேச வேண்டாம் என்பது போல வீட்டின் தலைவன் சொல்லிவிட அந்தப் பேச்சு அத்தோடு முடிந்து போனது. ஆனால் அம்மா தன்னிடம் புலம்ப ஆரம்பித்த போது சுமித்ராவுக்கு அதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

மாதவன் அந்த எஸ்டேட்டின் இளைய முதலாளி என்பதை இந்த ஒருமாத காலத்தில் இளையவள் அறிந்து கொண்டாள். என்னதான் முதலாளி என்றாலும் ஓர் இளம்வயது வாலிபன், முன் பின் அறியாத ஓர் மனிதனை நம்பி எப்படித் தங்கையை ஒப்படைப்பது? கல்வி மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும் அப்பாவும் தங்கையும் சற்று அதிகப்படியாகத்தான் நடந்து கொள்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றியது.

“அம்மா, மழை கொஞ்சம் குறைஞ்சிருக்கு, நான் ஒரு நடை சுமதியைப் போய் பார்த்துட்டு வர்றேன்.”

“போய் பார்த்துட்டு வா சுமி, உங்கப்பாவும் எதுக்காக இந்தச் சின்னவளோட சேர்ந்து ஆடுறார்னு எனக்குப் புரியலை.” அம்மாவைச் சமாதானம் செய்தவள் எஸ்டேட்டை நோக்கி நடந்தாள். பக்கத்து எஸ்டேட்டில்தான் இவள் அப்பா வேலை செய்கிறார் என்றாலும் கமலியின் தந்தை இங்கே வேலை பார்ப்பதால் ஓரிரு முறை இங்கே வந்திருக்கிறாள்.

“யாரும்மா வேணும்?”

“இங்க… பசங்க கொஞ்சப் பேரு படிக்கிறாங்க…”

“ஓ… அவங்களா? அவங்களை நம்ம சின்ன முதலாளி பெரிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்களே.”

“பெரிய வீட்டுக்கா?! எப்போ?”

“நேத்தே போயிட்டாங்க, பசங்க மட்டும்னா பரவாயில்லை, பொண்ணுங்களும் இருக்கிறதால இங்க வசதி பத்தாதுன்னு சின்ன முதலாளி அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.” இந்தத் தகவல் சுமித்ராவுக்குப் புதிது. இது அப்பாவுக்குத் தெரியுமா? தெரிந்தும் சொல்லாமல் மறைத்தாரா?!

பெரிய வீடு என்றால் வெற்றிவேலின் மூதாதையர்கள் வாழ்ந்த வீடு. ஆங்கிலேயர் பாணியில் கருங்கல்லால் கட்டப்பட்ட கட்டிடம். கறுப்புப் சாம்பலுமாக அந்த வீடு பார்க்க அத்தனை அழகாக இருக்கும். வீதியிலிருந்து சற்று உள்ளே போக வேண்டும். அப்படியே போனாலும் அந்த வீட்டைச் சுலபத்தில் பார்த்துவிட முடியாது. சுற்றிவர நிறைய மரங்கள் உண்டு. சுமித்ரா சிறுவயதுப் பெண்ணாக இருக்கும் போது எட்டி எட்டிப் பார்த்திருக்கிறாள். வளர்ந்த பிற்பாடு பார்க்க ஆசைப்பட்டாலும் நாகரிகம் கருதி பார்த்ததில்லை.

வாசலில் நின்றிருந்த கூர்க்காவிடம் தன்னை அறிமுகப்படுத்தும் போது சற்றே சங்கடப்பட்டாள். விறைப்பாக நின்ற அந்த வயதானவர் எங்கே தன்னை விரட்டிவிடுவாரோ என்ற அச்சம் கூட ஏற்பட்டது. ஆனால் எந்த மறுப்பும் சொல்லாமல் அவர் உள்ளே அனுமதித்த போது இவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“உள்ள படிக்கிற பசங்களோட சொந்தக்காரங்க வந்தா சட்டுன்னு அனுமதி குடுக்கணும்னு தம்பி சொல்லியிருக்காங்கம்மா.”

“ஓ…” இது அவளது ஆச்சரியமான பார்வைக்குக் கிடைத்த விளக்கம்.

“உள்ள இருக்கிறது யாரும்மா? உங்க தம்பியா, தங்கச்சா?”

“தங்கச்சி, பேரு சுமதி.”

“ஓ! சுமதிப் பொண்ணா? அந்தப் பொண்ணுதான் எல்லாருக்கும் பாடம் சொல்லிக் குடுக்குது, ரொம்பக் கெட்டிக்காரப் பொண்ணுன்னு தம்பி சொல்லிச்சு.”

“ம்…” சுமித்ரா மையமாகப் புன்னகைத்து வைத்தாள். கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. வந்து இரண்டு நாட்களிலேயே தங்கை நல்ல பெயர் வாங்கியிருக்கிறாள். அவளது திறமையைக் கண்டுகொண்ட மாதவன் மேலும் மதிப்பு உருவானது.

“வாம்மா, யாரைப் பார்க்கணும்?” தயங்கியபடி உள்ளே வந்தவளை வரவேற்றது அந்தக் குரல்.

“சுமதி, நான் சுமதியோட அக்கா.”

“அப்பிடியா? உள்ள வாம்மா.”

“பரவாயில்லை, சுமதியை ஒரு தடவைப் பார்க்கணும்.”

“சரிம்மா.” இவள் தயக்கம் பார்த்து அந்தப் பெண்மணி வற்புறுத்தவில்லை. சிரித்தபடி உள்ளே போய்விட்டார். இவளுக்குத்தான் மலைப்புத் தாங்கவில்லை. தூரத்தில் பார்த்ததை விட அந்த வீடு பக்கத்தில் பார்க்கும்போது இன்னும் பிரமாண்டமாக இருந்தது. கருங்கற்களை அடுக்கி வைத்தாற் போலவிருந்தது. இப்போது வரவேற்றதுதான் மாதவனின் அம்மாவாக இருக்க வேண்டும். வெற்றிவேலின் மனைவி, இந்த இடத்திற்குச் சொந்தக்காரி. அவரைப் பற்றி இவள் அதிகம் கேள்விப்பட்டதில்லை என்றாலும் அவரைப் பார்த்த போது ஏனோ பிடித்துப் போனது.

“அக்கா!”

“சுமதி! எப்பிடியிருக்கே? எஸ்டேட்ல இருக்கேன்னு நானும் அம்மாவும் நினைச்சுக்கிட்டு இருக்கோம், நீ என்னடான்னா இங்க வந்து உட்கார்ந்திருக்கே!”

“அப்பாவுக்கு எல்லாம் தெரியும், நாந்தான் அம்மாக்கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம்னு சொல்லியிருக்கேன்.”

“ம்… கூட வேற யாரெல்லாம் இருக்காங்க? நீங்க இங்க இருக்கிறது இவங்களுக்குக் கஷ்டமில்லையா?”

“மாதவன் சாரோட அம்மாவைப் பார்த்தியா? என்னைக் கேட்டா இந்த ஊர் இவ்வளவு பசுமையா இருக்கிறதுக்குக் காரணம் இவங்களை மாதிரி ஆளுங்கன்னுதான் சொல்லுவேன்.”

“ம்… பார்த்தப்போவே புரிஞ்சுது, ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரிஞ்சாங்க.”

“என்ன ரெண்டு பேரும் அங்கேயே நின்னுட்டீங்க? உள்ள வாங்க.” அந்தக் குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கையில் தேநீரோடு நின்றிருந்தார் செல்லம்மா.

“ஐயையோ! எதுக்கும்மா இதெல்லாம்?!” இளம்பெண்கள் இருவரும் பதறிப்போனார்கள். செல்லம்மாளின் உயரத்திற்கு இவர்களோடு நின்று பேசுவதே பெரிய விஷயம். இவரானால் கையில் தேநீரோடு வந்து நிற்கிறார்! சுமதி ஓடிப்போய் அவர் கையிலிருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டாள்.

“அக்காவோட பேரென்ன சுமதி?”

“சுமித்ரா.”

“என்னம்மா பண்ணுறே?”

“டிகிரி முடிச்சுட்டு நம்ம ஸ்கூல்லதான் வாலன்டியரா போறேம்மா.”

“வேலை பார்க்கிற ஐடியா இல்லையா?”

“அப்ளை பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன், நம்ம ஊர் பக்கம் ஏதாவது வேலை கிடைச்சா நல்லா இருக்கும்.”

“அதுவும் சரிதான், எப்பிடியும் சுமதி முதல் தடவையே டாக்டர் ஆகிடுவா, அவளும் யூனிவர்ஸிட்டி போயிட்டா அப்பா, அம்மா தனியா இருப்பாங்கல்லை?”

“உங்க வாய்ச்சொல் பலிக்கணும்மா, சுமதி ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிக்கிறா, அவ கஷ்டத்துக்குப் பலன் கிடைக்கணும்.”

“கண்டிப்பா கிடைக்கும், இந்தப் பொண்ணோட கெட்டித்தனத்துக்கு கொழும்பு யூனிவர்ஸிட்டி கிடைக்கும்மான்னு தம்பி சொல்லிச்சு.” மருத்துவபீடத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களில் முதல் இருநூறு பேருக்கு கொழும்புப் பல்கலைக்கழகம் வழங்கப்படும். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி!

“நேரத்தை வீணடிக்காம நீ போய் படி சுமதி, நான் அக்காவோட பேசிக்கிட்டு இருக்கேன்.” செல்லம்மா சொல்லவும் சுமதி சட்டென்று உள்ளே போய்விட்டாள்.‌ இவள் தேநீரைக் குடித்து முடித்திருக்கப் பணிப்பெண் ஒருத்தி வந்து காலிக்கோப்பைகளை வாங்கிக் கொண்டார்.

“அப்பா பக்கத்து எஸ்டேட்டுல வேலை பார்க்கிறாங்களாமில்லை?” செல்லம்மா தொடர்ந்து பேசவும் தங்கள் குடும்பத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னாள் இளையவள்.

“எங்க மாதவனுக்கும் சீக்கிரமே ஒரு கல்யாணத்தைப் பண்ணிடோணும்னு எனக்கும் ஆசைதான், ரேவதியும் மும்முரமா பொண்ணு தேடுறா, எல்லாம் நல்லபடியா நடக்கணும் ஆண்டவா.” அந்தப் பெரிய வீட்டுப் பெண்மணி அவர் குடும்ப விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இவள் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.

“சின்னவனைக் கேட்கவும் வேணாம், அவனாவே யாரையாவது கூட்டிக்கிட்டு வந்து இவதான் உங்க சின்ன மருமகள்னு சொன்னாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன், அந்தக் கொழும்பை விட்டு நகர மாட்டான், இதெல்லாம் ஒரு ஊரா? இந்தக் காட்டுக்குள்ள யாரு வாழுவான்னு எங்கிட்டயே கேட்பான், அநேகமா இந்த வீட்டோட சின்ன மருமகள் யாராவது சிங்களப் பொண்ணாத்தான் இருக்கும்.” அவர் சொன்ன விதத்தில் சுமித்ராவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“ஆனா என்னோட மாதவன் அப்பிடியில்லைம்மா, நீங்க எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் நான் கட்டிக்கிறேம்மான்னு சொல்லிட்டான், இந்த ஊரு, மண்ணு, அம்மா எல்லாத்து மேலயும் பாசம் அதிகம், நான் கிழிச்ச கோட்டை எம் புள்ளை தாண்டினதே இல்லை.” ஆனால் செல்லம்மாவின் நம்பிக்கையை மாதவன் பொய்ப்பித்து அம்மா பார்க்கும் பெண்ணை இளைய மகன் சரண்தான் கட்டிக்கொள்ளப் போகிறான் என்று செல்லம்மாவுக்கு அப்போது தெரியவில்லை!

“அடிக்கடி இப்பிடி வந்து போம்மா, நீங்கெல்லாம் எப்போ உங்க வீட்டுக்குப் போக முடியுமாம்?”

“அது சரியா தெரியலைம்மா, மழை நின்னாலும் தண்ணி முழுசா வடியணுமில்லை, இல்லைன்னா ஆபத்துன்னு பேசிக்கிறாங்க.”

“அதுவும் சரிதான், அவசரப்படாம ஆறுதலா போங்க, என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளும்மா.” பெரிய வீட்டு அம்மாவின் பரந்த மனதை வியந்தபடி விடைபெற்றுக் கொண்டாள் சுமித்ரா. தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவள் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லாமல் சுமதியின் நலத்தை மட்டும் விளக்கிச் சொன்னாள். ஒருசில விடயங்களை அப்பாவே சொல்லாமல் தவிர்க்கும் போது எதற்காகத் தான் இடையில் புகுந்து குழப்ப வேண்டும் என்று அமைதியாகிவிட்டாள்.

இன்னும் இரண்டு நாட்கள் கடந்த போதிலும் மழை நின்றபாடில்லை. மெல்லிய தூறலாக நாள் முழுவதும் பெய்த வண்ணமே இருந்தது. அரசாங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டாலும் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். எஸ்டேட் முதலாளிகள் தங்களாலான உதவிகளையும் வசதிகளையும் செய்த வண்ணம் இருந்தார்கள்.

அன்றைக்கு சுமித்ராவும் அவள் அம்மாவும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அடிக்கடி அவள் அப்பா வந்து வீட்டின் நிலைமையை அறிந்து செல்வது வழக்கம். இன்றைக்கு அவருக்கு எஸ்டேட்டில் வேலை இருந்ததால் அம்மாவும் மகளும் வந்திருந்தார்கள். மழை மெல்லிய தூறலாகப் பெய்து கொண்டிருந்தது.

“அம்மா, ரொம்ப எதுவும் எடுக்காதீங்க, அங்க கொண்டு போய் வெக்கவும் இடமில்லை.”

“சுமி, சுமதிக்கு ஏதாவது தேவைப்படுமா? அவளுக்கும் ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்துக்கிட்டுப் போகலாமா?”

“ம்…” பெரிய வீட்டில் தங்கை இருக்கிறாள். அங்கே அடிக்கடி செல்லவும் முடியாது. அதேநேரம் இந்த விடயத்தை அம்மாவிடம் சொல்லவும் முடியாது. சுமித்ரா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“என்னதான் இருந்தாலும் பொம்பிளைப் பிள்ளை இத்தனை நாள் எஸ்டேட்ல போய் தங்கிறது நல்லாவா இருக்கு! உங்கப்பாக்கு அறிவே இல்லை, நாளைக்கு இதையே எத்தனைப் பேர் எத்தனை விதமா பேசுவாங்களோ!”

“சரி விடுங்கம்மா, மழை விட்டதும் வீட்டுக்கு வந்திடுவா.” பக்கத்து வீட்டிலும் ஆட்களின் அரவம் கேட்டதால் அம்மா அங்கே போய்விட்டார். சுமித்ரா தேவையான பொருட்களோடு வெளியே வந்தவள் வீட்டைப் பூட்டினாள். சட்டென்று ஒரு வாலிபன் அவர்களின் வீட்டருகே மழைக்கு ஒதுங்கவும் இவள் திரும்பிப் பார்த்தாள். இலேசாக நனைந்திருந்தான். அவள் பார்வை அவனுக்குப் புரிந்திருக்கும் போலும்.

“மழை லேசா விட்டதாலதான் வீட்டுல இருந்து கிளம்பினேன், ஆனா அப்புறம் புடிச்சிருச்சு.”

“உங்க வீடு எங்க இருக்கு? உங்களை நான் இங்க பார்த்ததே இல்லையே!”

“ஊருக்குப் புதுசா நீங்க? வெளியூரா?” பெரிய வீட்டுப் பையன் போல ஜம்மென்று நின்றிருந்தவனின் கேள்வியில் இவள் திகைத்துப் போனாள்.

“நான்… இந்த ஊர்தான், நீங்க…”

“பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவுமில்லை, நானும் இந்த ஊர்தான், பேரு சரண்.”

“அப்பிடியா, சாரி தம்பி, உங்களை நான் இங்கப் பார்த்ததில்லை, அதாலதான் சட்டுன்னு அடையாளம் தெரியலை, குடை வேணுமா?”

“கிடைச்சா நல்லா இருக்கும், ரொம்ப நனைஞ்சா அம்மா திட்டுவாங்க.” அவனது நீல டெனிமும் சிவப்பு டீஷர்ட்டும் ஏற்கனவே நனைந்திருந்தது. தன் கையிலிருந்த குடையை அவனிடம் நீட்டினாள் சுமித்ரா.

“அப்ப உங்களுக்கு?”

“அம்மாக்கிட்ட இருக்கு.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களைக் கடந்து சென்ற ப்ளாக் ஆடி சட்டென்று நின்றது.

“டேய் சரண்! உன்னை எங்கெல்லாம் தேடுறது? எதுக்கு இப்போ வீட்டைவிட்டுக் கிளம்பினே? அம்மா சத்தம் போடுறாங்க.” மழை பெய்ததினால் மஹிந்திரா ஜீப் இப்போது காணாமல் போயிருந்தது. அந்த ப்ளாக் ஆடியின் கண்ணாடி இலேசாக இறங்க அதன் விழியே மாதவனின் முகம் தெரிந்தது.

“இதோ வர்றேண்ணா.” என்றவன் இவளிடம் குடையை நீட்டினான். அப்போதுதான் தன்னருகே நிற்பது யாரென்று சுமித்ராவுக்குப் புரிந்தது.

“ரொம்ப தேங்க்ஸ், அண்ணா வந்துட்டான், நான் கிளம்புறேன்.” என்றுவிட்டு சட்டென்று அந்த ப்ளாக் ஆடியை நோக்கிப் போய்விட்டான். பெரிய வீட்டின் கடைக்குட்டியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.

“யாரு சுமி அது?” இது அம்மா.

“வெற்றிவேல் ஐயாவோட ரெண்டாவது பையனாம்.”

“அட! அந்தப் பையனா இது?! ரொம்ப வளர்ந்துட்டானே! கொழும்புல படிக்கிறானாம், எதுக்கு இந்த அடை மழைல ஊருக்கு வந்திருக்கானாம்?”

“அது தெரியலை, மழைக்கு ஒதுங்கினான்.”

“சரிசரி, நீ வா நாம போகலாம்.” வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் கிளம்பினாலும் சுமித்ராவின் மனதுக்குள் சரண்தான் வந்து நின்றான். மாதவனும் அந்த வீட்டில்தான் இருக்கிறான் என்றாலும் வயதில் பெரியவன், பொறுப்பான பிள்ளையாகத் தெரிகிறான். ஆனால் சரண்? பார்த்தாலே உல்லாசி போலத் தெரிகிறான். இவனும் சுமதி இருக்கும் அதே வீட்டில்தான் இருக்கிறான் என்பதை அவளால் கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை.

“அம்மா, சுமதியோட ட்ரெஸ்ஸைக் குடுங்க, நான் கொண்டு போய் குடுத்துட்டு வர்றேன்.” அன்று மாலையே தங்கையைப் பார்க்கவேண்டும் என்று அக்காள் கிளம்பிவிட்டாள்.

“சுமி, நானும் உங்கூட வர்றேன்.”

“வேணாம்மா, ரொம்ப நேரமெல்லாம் அங்க நின்னு பேச முடியாது, சுமதியைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? நாம பேசினாலும் அவளுக்கு அத்தனை நேரம் நம்மக்கூட செலவழிக்க முடியாது, படிக்கணும்னு சொல்லுவா, உங்களுக்குக் கோபம் வரும், எதுக்கு வீண் வம்பு?”

“அதுவும் சரிதான், ரொம்ப லேட் பண்ணிடாம சீக்கிரமா வா சுமி, இல்லைன்னா அப்பாக்கிட்டக் குடுத்து விடலாமே?”

“வேணாம்மா, நானே ஒரு நடை போய் பார்த்துட்டு வந்தர்றேன்.” என்றவள் அவசரமாகக் கிளம்பிவிட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே வீட்டின் ஹாலில் சரண்தான் நின்றிருந்தான். இவளைக் கண்டதும் கூர்க்கா எதுவும் கேட்காமல் கேட்டை திறந்துவிட்டார். உள்ளே வந்தவளை வரவேற்றது காதில் அலைபேசியோடு நின்றிருந்த இளையவன்தான். இவளைப் பார்த்ததும் அவன் கண்கள் கூர்மையாகின.

“நீங்க…”

“அம்மா இல்லையா? என்னோட தங்கச்சியைப் பார்க்க வந்தேன்.” சொல்வதற்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் சொன்னாள்.

“தங்கச்சின்னா?”

“அம்மாக்குத் தெரியும், கொஞ்சம் அவங்களைக் கூப்பிடுறீங்களா?”

“அம்மா உள்ளே பிஸியா இருக்காங்க, உங்க தங்கச்சி பெயரென்ன?”

“சுமதி.”

“ஓ… அந்தப் படிப்பாளியா?” என்றவன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பை இவள் ரசிக்கவில்லை. என் தங்கை நன்றாகப் படிக்கிறாள். இதில் இவன் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?!

“படிப்பைத் தவிர அவங்களுக்கு வேற ஒன்னும் தெரியாதா? எப்பப் பார்த்தாலும் கெமிஸ்ட்ரி, பயாலஜின்னு ஏதாவது அதைப்பத்தித்தான் பேசுறாங்க, அதென்ன கைல?”

“கொஞ்சம் சுமதியைக் கூப்பிடுறீங்களா?” இவளுக்குப் பதைபதைத்தது. தான் நினைத்ததை விட இவன் உல்லாசியாக இருப்பானோ?!

“யாரு சரண் அது?” செல்லம்மாவின் குரல் கேட்கவும்தான் இவளுக்கு நிம்மதியாக இருந்தது. சட்டென்று அவரிடம் போனவள் தான் வந்த காரணத்தைச் சொன்னாள்.

“உள்ள வாம்மா, நீயே வந்து சுமதிக்கிட்டக் குடு.” அவர் உள்ளே அழைத்துச் செல்ல இவள் பார்வை சரணைத் துளைத்தது. ஆனால் அந்த ஆராய்ச்சியான பார்வையை உணராமல் அலைபேசியைக் குடைந்து கொண்டிருந்தான் அந்த வீட்டின் இளைய ஆண் வாரிசு.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 03

அத்தியாயம் 03வீட்டுக்குள் நுழைந்த சுமித்ரா சில நொடிகள் மலைத்துப் போய் நின்றுவிட்டாள். அம்மா, அப்பாவுக்கென ஓர் அறை, அவளுக்கும் சுமதிக்குமாக ஓர் அறை. சின்னதாக ஓர் ஹால், கிச்சன், பாத்ரூம். இதுதான் அவள் வீடு. வீட்டைச் சுற்றியிருக்கும் சிறிய நிலத்தில் அம்மா…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்