அத்தியாயம் ஆறு
சில்லென்ற காற்று வீசியது… ஆட்டோ ஒரே சீராக போய் கொண்டிருந்தது. மழை வருவதற்கான சாத்தியகூற்றை மண் வாசனையோடு கிளம்பிய அந்த குளிர் காற்று உணர்த்தியது… உடலை துளைத்த அந்த குளிர், அந்த நேரத்தில் அஞ்சலிக்கு சுகமாக இருந்தது… எப்போதும் இந்த மழைக்கு முன் வரும் இந்த வாசத்தை மிகவும் ரசிப்பவள்… இப்போதும் ரசிக்க தோன்றிய மனதை தூண்டி விட்டது அர்ஜுனின் அருகாமை! மனதிற்கு பிடித்தவனுடன் இருந்தால் வலியும் கூட சுகம்தானோ? அவளுக்கு தலையில் பட்ட காயம் ஏனோ வலிக்கவே இல்லை!
“எங்கிருந்து வந்தாயடா எனை பாடுபடுத்த நீ எனை பாடுபடுத்த” என்று பாடல் பாட தோன்ற ஓரக்கண்ணில் அவனை பார்த்து கொண்டே வந்தவள் சட்டென்று அவன் திரும்பி அவளை பார்க்கவும் முகத்தை திரும்பி கொண்டாள்! என்னவென்று புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்டவனது செய்கையை பார்த்ததும் உள்ளுக்குள் எதுவோ ஜிவ்வென்று எழும்ப… தடம் புரண்டது மனம்!
காதல் அறிவித்துவிட்டு வருவதில்லை… அழையா விருந்தாளியாக திடீரென்று தாக்கும்… வருவதும் தெரியாமல் போவதும் புரியாமல் வந்து போகும் இவ்வாழ்க்கை பயணத்தின் சுவாரசியமான துன்பம் காதல்… கடவுளும் காதலும் ஒன்றுதானோ? ஏனென்றால் இந்த இரண்டு விஷயமுமே யாருக்கும் புரியாத புதிராக மட்டுமே இருந்து வந்திருக்கிறது… கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்! அந்த சுகமான சுமையை தன் மனதில் சிறை பிடித்து கொண்டு குழம்பி போய் இருந்தாள் அஞ்சலி! நேற்று வரை நீ காதலிக்க போகிறாய் என்று சொன்னால் வயிற்றை பிடித்து கொண்டு சிரிப்பவள் இப்போது அர்ஜுன் பக்கம் சென்று கொண்டிருந்த மனதை அடக்க வழி தெரியாது விழித்து கொண்டிருந்தாள்!
சிறு வயதில் பழக்கம் என்று இவர்கள் இருவரும் சொல்லித்தான் தெரிந்தது! ஆனால் எத்தனையோ ஜென்மங்களாய் தொடரும் பந்தம் போன்ற உணர்வு வருவது எதனால்? நான் உனக்காக மட்டுமே இந்த பிறவியில் காத்திருந்தேன்… இப்போதாவது உனக்கு எனை சந்திக்க தோன்றியதே என்ற உணர்வே வெகுவாக ஆக்ரமித்து இருந்தது… ஏன்? புரியவில்லை… அவனது புத்திசாலிதனமா? தைரியமா? அறிவா? எது தன்னை இந்த அளவு கவர்ந்து விட்டதென்று இந்த பாழும் மனது கிடந்து துடிக்கிறது? அதுவும் பார்த்து இருபத்துநான்கு மணி நேரம் கழியாத நட்பில்! இத்தனை நாட்கள் நீ இல்லாமல் எப்படி கழிந்தது அர்ஜுன்?
இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா இப்பயணம் என்று ஏக்கமாக அஞ்சலி நினைத்து கொண்டிருக்கும் போதே அவளது எண்ண ஓட்டத்தை தடை செய்யவே ஹாஸ்பிடல் வந்து தொலைத்து விட்டது! அண்ணன் வேறு வந்து விடுவானே… அப்புறம் அர்ஜுனுடன் தனியாக எப்படி? இந்த அழகான தனிமையை விட மனமில்லாமல் இருந்தாள் அஞ்சலி! அந்த தனிமையின் இனிமையான இதமான காற்றை உள்ளிழுத்து சுவைத்தாள்! இனித்தது!
“ஏய் எலிக்குட்டி… ஹாஸ்பிடல் வந்துடுச்சு இறங்கு!” மிகவும் சாதாரணமாக அவளை அழைக்க அவனை பார்த்து முறைத்து கொண்டே ஹாஸ்பிடலை பார்த்தாள்!
“அரசு மகப்பேறு மருத்துவமனை” ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் இருந்தது! ‘ஆஹா ஐடியா… ’துள்ளியது மனம்!
“ஐயோ அர்ஜுன்… ஜிஹச்சா இது?” முகத்தை சுளித்து கொண்டு அவள் கேட்க
“ஆமாம் அதுக்கென்ன அஞ்சு… சீக்கிரம் இறங்கு” அவசரப்படுத்தினான்!
“ஐயோ… நான் கவர்மென்ட் ஹாஸ்பிடல் எல்லாம் வர மாட்டேன்…” அவசரமாக மறுப்பை தெரிவிக்க அவன் முறைத்தான்!
“இதென்ன அஞ்சலி லூசுத்தனமா பேசுற… இங்க பர்ஸ்ட் ஐட்க்கு தானே வந்து இருக்கோம்… இதுல என்ன இருக்கு? ஒழுங்கா இறங்கு…”
“நோ அர்ஜுன்… ப்ளீஸ் எனக்கு கவர்மென்ட் ஹாஸ்பிடல்னாலே பிடிக்காது… ஏதாவது நல்ல ப்ரைவேட் ஹாஸ்பிடல் போலாம் அர்ஜுன்… பணம் கூட நீங்க குடுக்க வேண்டாம்… நானே குடுத்துக்கறேன்… ஆனா இங்க வேண்டாம்”
“அஞ்சு விளையாடாதம்மா… தலைல வேற அடிபட்டு இருக்கு… மொதல்ல பர்ஸ்ட் ஐட் செஞ்சுகிட்டு அப்புறம் மத்தத பேசலாம்… இறங்கும்மா!” பொறுமையை இழுத்து வைத்து கொண்டு பேசினான்!
“ஹய்யோ… இங்கெல்லாம் நான் வந்ததே கிடையாது… வர்றவங்க கூட சுத்தமா இருக்க மாட்டாங்க! உங்களுக்கு பணம் தானே பிரச்சனை! எங்க அண்ணாவ கூப்பிடுங்க… ஆனா நான் ஜிஹச் வர மாட்டேன்”
“அடிச்சு பல்ல கழட்டிடுவேன் ராஸ்கல்… இப்போ இறங்க போறியா இல்லையா? பணம் பணம் பணம்… எப்போ பாரு பணம் தான்… இந்த பொம்பளைங்களுக்கு வேற நினைப்பே கிடையாது!” என்று பொறுமை பறந்து போய் அடிக்குரலில் சீற
ஆட்டோவை விட்டு இறங்கியவள் பொறுமையாக
“எதுக்கு பொம்பளைங்கன்னு பொதுவா சொல்றீங்க அர்ஜுன்… சொல்றத தெளிவா சொல்லுங்க…”
“தெளிவாவே சொல்றேன்!… இப்படி பண பைத்தியமா இருக்காத அஞ்சலி! மனுஷனுக்கு பணத்த தாண்டி பார்க்க எத்தனையோ விஷயம் இருக்கு… ஒரு நாள் எல்லா விஷயமும் அலுத்து போய்டும் அப்போ நம்ம கிட்ட இருக்கற பணமே நம்ம சந்தோஷத்துக்கு வில்லனா மாறிடும்… பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல…”
அவனை கூர்ந்து பார்த்தவள் ஒன்றும் பேசாமல் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்!
அர்ஜுன் தனது செல்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து கொண்டிருந்தான்! என்ன வார்த்தை கூறி விட்டான்? பணபேயாகவா நான் இவன் கண்களுக்கு தெரிகிறேன்? இவனுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கவல்லவா ஆசைப்பட்டேன்… இவனுக்கு அது புரியவில்லையா?
தலையில் பட்ட காயம் வலிக்கவில்லை – எனது
நெஞ்சில் பட்ட காயம் வலிக்குதடா கண்ணாளா
கனத்த மௌன திரை இருவருக்கும் இடையில் விழுந்தது!
***
டியூட்டியில் இருந்த பெண் மருத்துவரை கொண்டு அவசரமாக முதல் உதவிக்கு அவளை அழைத்து சென்றவன் மருத்துவர் கூறிய எக்ஸ் ரே மற்றும் தேவையான டெஸ்ட் களை அதே வேகத்தில் செய்து முடித்தான்! டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்து ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை என்று சான்றுரைக்கவும் தான் அர்ஜுனால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது! ரத்தம் கட்டி கொள்ளாமல் இருக்கவும் வலி தெரியாமல் இருக்கவும் ஒரு ஊசி போட்டு அவளை சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லி விட்டு சென்றார் மருத்துவர்! அந்த ஊசியின் விளைவால் சிறிது நேரம் உறங்கினாள்!
எழும் போதே பேச்சு குரல்கள் கேட்டன.
“பிளைட் எத்தனை மணிக்கு அர்ஜுன்?” இது கௌதம் அண்ணா குரலாயிற்றே! வந்து விட்டானா?
“ஆறு பத்துக்கு பெங்களூர்ல இருந்து கௌதம்! ஹாஸ்பிடல் வரதுக்கு முன்னாடியே அனந்தபூர்ல இருந்து நம்ம பிராஞ்ச் கார எடுத்துட்டு வர சொல்லிட்டேன்! இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும்… இங்க இருந்து பெங்களூர் நாலு மணி நேரம்… இப்போ மணி ஒன்னு… பெங்களூர் போய் சேர்ந்து பிளைட் பிடிக்க கரெக்டா இருக்கும்!”
கௌதம் கையை தட்டினான்!
“வாவ் வாவ்… சூப்பர்! என்னம்மா பிளான் பண்ற!”
இவர்கள் இருவரும் என்ன பேசி கொள்கிறார்கள்? அர்ஜுன் மட்டும் ஊருக்கு செல்கிறானா? அஞ்சலி மனதில் ஏமாற்றம் சூழ்ந்தது! ஆனாலும் அர்ஜுன் ஓசோனில் பெரிய அதிகாரிதான் போல… இல்லையென்றால் அலுவலக காரை இவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடியுமா?
“அவன பத்தி தெரிஞ்சும் அந்த பொண்ண அவன் கிட்டயே விட்டுட்டு வந்திருக்கியே… இது எனக்கு சரியா படல கௌதம்! நீ அந்த பொண்னை கூட்டிட்டு வந்திருக்கனும்!”
“அவனோட ஒரு நடவடிக்கைய தான் நான் பார்த்தேன்! ஆனா ரெண்டு பேரோட காதல் எவ்வளவு ஆழமானதுன்னு எனக்கு தெரியாதே அர்ஜுன்! ரெண்டு பேர பத்தி கூட பேச வேண்டாம்! அந்த பொண்ணு மேகாவோடது சின்சியர் லவ்…” என்று வேதனையோடு கூறினான்.
“ஆனா அதுக்கான தகுதி அந்த சசி கிட்ட இல்லையேடா மச்சான்!
யாரை பற்றி பேசிகொள்கிறார்கள்? குழப்பமாக முகத்தை சுருக்க.
“ஹேய் எலி முழிச்சுடுச்சு…” என்று கௌதம் சந்தோஷமாக கூறி கொண்டே அவளருகில் வந்தான்!
“டேய் எலிக்குட்டி… எப்படிடா இருக்கு…” என்று கௌதம் ஆதரவாக கேட்க
“நல்லா இருக்கு கௌதம் அண்ணா… மேகா எங்க?” என்று கேட்க
“இதென்ன கேள்வி… அவங்க லவ்வர் கூட தானே இருப்பாங்க…” அர்ஜுன் இப்படி கூறவும் அஞ்சலிக்கு கடுப்பு ஏறியது!
“நான் உங்க கிட்ட கேக்கவே இல்லையே…” முகத்தை திருப்பி கொண்டு கூற
“நானும் ஒன்னும் உன்கிட்ட சொல்றதுக்கு துடிக்கலயே…” அவன் பொடி வைத்து பேசுவது புரிய
“அண்ணா… நான் யார்கிட்டயும் பேச விரும்பல… என்னை கொண்டு போய் மும்பைல விடு…”
“அதுக்கு தான் குட்டி…” என்று கௌதம் கூற முயல… அவனை கையமர்த்தி
“ஏன் நீ தான் தைரியசாலி ஆச்சே… உன்கிட்ட நிறைய பணம் வேற இருக்கு… நீயே போய்க்க வேண்டியதுதானே…” என்றான் அர்ஜுன்!
“அண்ணாஆஆஆஆ… இப்போ நீ என்னை இங்க இருந்து கூட்டிட்டு போக போறியா இல்லையா?” என்று கௌதமை பார்த்து கத்த.
“போலாம்டா எலி… அர்ஜு…” சொல்லவந்தவனை நடுவிலேயே மறித்து.
“ஆமா… கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல இருந்தா இவ ஸ்டேட்ஸ் குறைஞ்சு போய்டுமாம்… கூட்டிட்டு போ கௌதம்… ஏதாவது ஒட்டிக்க போகுது…”
“இந்த அவ இவங்கற பேச்செல்லாம் என்கிட்டே வேணாம்ன்னு சொல்லுண்ணா!”
“ஆமா… இவ என்னோட ஆசை காதலி பாரு… அவ இவன்னு ஆசையா கூப்பிடறதுக்கு…” என்று கூறி அவளது ஈகோவை கிளப்பி விட
“காதலியா… உலகத்துல யார லவ் பண்ணாலும் பண்ணுவேன் ஆனா தப்பி தவறி கூட உன்னை பண்ணிட மாட்டேன்…” சூளுரைத்தாள்!
“காளியாத்தா… நானும் அதையே தான் சொல்றேன்… ஒரு பணபேய லவ் பண்ண நான் என்ன அடி முட்டாளா…”
“ஆமா… நான் பணபேய் தான்… நான் தான் சொல்லிட்டேன்ல… பணக்காரனா பாத்து தான் லவ் பண்ண போறேன்னு… தெளிவா? அப்புறமும் என்ன பேசிட்டு இருக்க…”
“உன் புத்தி தான் தெரிஞ்சதாச்சே… புதுசா வேற சொல்றியா…”
இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட… இருவருக்கும் என்ன ஆனது என்று புரியாமல் நடுவில் மாட்டி கொண்ட கௌதம் மண்டையை பியைத்து கொண்டான்!
“டேய் அர்ஜுன் என்னடா இது…” என்று பரிதாபமாக கேட்க அதை பற்றி சிறிதும் கவலை படாத இருவரும் சண்டை போடுவதிலேயே குறியாய் இருக்க
“தெரிஞ்சு போச்சுல்ல என் புத்தி… அதுக்கு இப்போ என்னன்னு சொல்ற? விட்டா பேசிட்டே இருக்க… ஒரு லிமிட் தான் அர்ஜுன்…”
“டேய் எலிக்குட்டி… ஸ்டாப் தி சண்டைடா…” பரிதாபமாக கௌதம் கூற அதை கேட்க இருவரும் தயாராக இருந்தால் தானே
“ஏய் விட்டா மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேப்ப போல இருக்கு… என்ன நினைச்சுட்டு இருக்க…” என்றான் அர்ஜுன் கடுப்பாகி
“போதும் போதும் என்னை நீ மரியாதையா கூப்பிட்டு ரொம்ப மதிப்பு குடுத்துட்ட… உனக்கு மட்டும் நான் மரியாதை குடுக்கனுமா? டேய் அண்ணா… இப்போ என்னை கூட்டிட்டு போக போறியா இல்லையா? இவன் முகத்துலயே முழிக்க விரும்பல…” வெறுப்பாக முகத்தை திருப்பி கொண்டு!
“அவன் இவன்னா பல்ல தட்டிடுவேன் ராஸ்கல்… நான் மட்டும் உன் முகத்துல முழிக்க தான் காத்துட்டு இருக்கேனா… இவ பெரிய ரதி தேவின்னு நினைப்பு…” அவனது பங்குக்கு!
“உனக்கு பெரிய மன்மதன்னு நினைப்பு… போடா”
“போடி…”
இருவருக்கும் நடுவில் தலையில் கையை வைத்து கொண்டு பரிதாபமாக உட்கார்ந்து இருந்தான் கௌதம்!
“டேய்… நீ ஏன்டா இப்படி உக்கார்ந்து இருக்க?” என்று அர்ஜுன் அதே கடுப்போடு கேட்க
“சொல்லுவடா சொல்லுவ… மாத்தி மாத்தி ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு என்னை கேக்குறியா?”
“சரிடா மச்சான்… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! சரி அந்த பிசாச கிளம்ப சொல்லு… டைம் ஆகுது…” என்று சொல்வதற்கும் செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது! எடுத்து கொண்டு வெளியே சென்றான்
“இல்லப்பா… ஐம் பைன்… சேப் தான்ப்பா… ம்ம்ம் என்னப்பா… நாளைக்கு எட்டு மணிக்கு நான் மும்பைல இருப்பேன்ப்பா… பரவால்ல நான் பார்த்துக்கறேன்…” என்று கூறி கொண்டே வெளியே சென்றான்!
அர்ஜுன் செல்வதை பார்த்து கொண்டிருந்தவன் அஞ்சலியிடம் திரும்பி
“சீக்கிரம் கிளம்புடா… காலைல ஆறு பத்துக்கு பிளைட் பெங்களூர்ல இருந்து… கார் வந்துடுச்சு…”
“லோக்கல் கேப்பா அண்ணா? இந்த டைம்ல எப்பிடி?”
“எல்லாம் அர்ஜுன் ஏற்பாடுதான் குட்டி… நான் மேகாவ சசி கிட்ட விட்டுட்டு வரதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டான்… செம ஷார்ப் கண்ணா நம்ம அர்ஜுன்!”
“அவன நீயே மெச்சிக்கோ…” என்று முனகி விட்டு கிளம்ப ஆரம்பித்தாள்! பேசிக்கொண்டே அர்ஜுனும் உள்ளே வந்தான்!
“கன்பார்ம் பண்ணிடு கௌஷிக்… அபிதகுஜலாம்பாள் சிவதானுமங்களம் அண்ட் கௌதம் நாராயணன் வித் மீ… ம்ம்ம்… பிசினெஸ் கிளாஸ் தான்…”
அந்த பெயரை கேட்டவுடன் பேயறைந்தார் போல பார்த்தாள் அஞ்சலி.
“அண்ணா… ஏன் ண்ணா இப்படி என் மானத்த வாங்குறான் இவன்?” என்று கௌதமிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே
“ஏய் அபிதகுஜலாம்பா… இன்னும் கிளம்பாம என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க?” என்று அர்ஜுன் சீண்டவும்.
“அண்ணாஆஆஆஆஆஆ… இவன் கிட்ட சொல்லி வை… நான் மனுஷியா இருக்க மாட்டேன்…” மீண்டும் ஒரு பூகம்பம் வரும் சாயல் தெரிய.
“நீங்க ரெண்டு பேரும் அடுத்த இன்னிங்க்ஸ் சண்டைக்கு ரெடி ஆய்ட்டு என்னை ஊறுகாயாக்க பாக்குறீங்களா? ஆசை தோசை… சண்டை போட்டு முடிச்சுட்டே வாங்க… நான் முதல்ல எஸ்கேப் ஆய்டறேன் என் தங்கமே… ஆளை விடு…” என்று சொல்லி விட்டு கௌதம் எஸ்கேப் ஆக… அவனையும் முறைத்து அர்ஜுனையும் எரிக்கும் பார்வை பார்த்தாள்! பின்னே ரகசியத்தை எல்லாம் அம்பலமாக்கினால் என்ன தான் செய்வாள் பாவம்! அபிதகுஜலாம்பாள் என்று அழகான அவளது பாட்டியின் பெயரை அஞ்சலிக்கு வைத்தது யார் குற்றம்? விதியின் குற்றமா? இல்லை விதியின் பெயரால் மங்களம் செய்த குற்றமா? இப்போது மட்டும் மங்களம் கையில் கிடைத்தால் பஸ்பமாகி இருப்பார்… தன் மகளின் நெற்றி கண் திறப்பு விழாவின் போது.
“இப்போ மட்டும் மனுஷின்னு யாரு ஒத்துகிட்டது அபிதகுஜலாம்பா? குரங்குக்கு பேர் அபிதகுஜலாம்பான்னு வெச்சுகிட்டா மனுஷியா? இதுல ஸ்டைலா அஞ்சலியாம்… தாங்க முடிலப்பா…” அர்ஜுன் சலித்து கொள்ள.
“மங்களம்ம்ம்ம்ம்ம்ம்ம்… என் மானத்த வாங்கிட்டீயே மங்களம்ம்ம்ம்… இங்க பாரு அர்ஜுன் அது எங்க பாட்டி பேர்… அதுவும் இல்லாம அது சாமி பேரு… இப்படி கிண்டல் பண்ணா சாமி கோவுச்சுக்கும்…”
“அது பாட்டுக்கு கோவிச்சுட்டு போகுது அபிதகுஜலாம்பா… உன் அதிகபடியான வாய்க்கு இதான் தண்டனை… எல்லார் முன்னாடியும் அபிதகுஜலாம்பான்னு தான் கூப்பிட போறேன்… ஹஹா எப்படி என் ஐடியா…” என்று வில்ல சிரிப்பு சிரிக்கவும் அவன் மேல் தலையணையை எறிந்துவிட்டு வெளியே சென்றவள்… திரும்பி வந்து அர்ஜுனிடம்
“இங்க பாரு… பிசினெஸ் கிளாஸ்ன்னு சொன்னியே… என்கிட்டயெல்லாம் எங்கப்பா அவ்ளோ பணம் குடுத்து விடல… நான் எகானமி கிளாஸ்லையே வரேன்…”
“அத விடு அபிதகுஜலாம்பா… அந்த கவலை உனக்கு தேவை இல்ல… பாவம் அந்த பிளைட்தான்… ஆனா அங்க மும்பை வந்து எல்லார் முன்னாடியும் இப்படி மரியாதை இல்லாம பேசுனா உன் வாய தைச்சு வெச்சுருவேன்… ஜாக்கிரதை…” ஒற்றை விரலை காட்டி அவளை மிரட்டியவனை முறைத்தவாரே
“ஆமா இவன் பெரிய லார்ட் லபக்கு தாஸு… இவன ரொம்ப மரியாதையா கூப்பிடனுமாம்…” என்று முனகி விட்டு.
“நீ என்னை அபிதகுஜலாம்பான்னு கூப்பிட்டா நான் உன்னை வாடா போடான்னு தான் கூப்பிடுவேன்… போடா போடா போடா லூசு… எங்க வாய தைச்சுடு பாக்கலாம்…” என்று பழிப்பு காட்டி விட்டு வெளியே செல்ல முயல
அந்த நேரத்தில் சிறுபிள்ளை போன்ற அவள் செய்கையில் முழுதாய் மனதை தொலைத்தான்! மனதில் சாரல் அடித்தது… அவளை பணபேய் என்று தானே திட்டியது எல்லாம் மறந்து போனது அர்ஜுனுக்கு… அறைக்கு வெளியே சுற்றிலும் பார்த்தவன் யாருமில்லாதை உறுதி படுத்தி கொண்டு அஞ்சலியை ஒரு மார்கமாக பார்த்து கொண்டே மெலிதான புன்னகையோடு இடது கையால் கதவை மூடினான்!
“ஏய்… எதுக்கு நீ இப்போ கதவை மூடற?” என்றாள் கோபமாக
“சும்மா… உனக்கு ஒரு பனிஷ்மென்ட் குடுக்க வேணாமா?” என்றான் புன்னகைத்து கொண்டே
“இங்க பாரு அர்ஜுன்… ஒழுங்கா கதவை திற… நான் போகணும்…” சொல்லி கொண்டே பின்னடைந்தாள் கண்களில் பயத்தோடு!
“போலாம்… ஆனா வாய தைக்க சொன்னியே… இப்போ அத செஞ்சு தானே அனுப்பனும்… எப்படி வசதி…” கேட்டுக்கொண்டே அர்ஜுன் நெருங்கி வர அஞ்சலியின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது… அந்த குளிரிலும் வியர்த்தது!
“அர்ஜுன்… சொன்னா கேளு… நீ பேசுறதே சரி இல்ல… இவ்ளோ நேரம் ஒழுங்கா தானே இருந்த… இப்போ என்ன… திடீர்ன்னு கிறுக்கு பிடிச்சுருச்சா…” வார்த்தைகள் தந்தி அடிக்க…
“ஆமா… கிறுக்கு தான் பிடிச்சுருக்கு… நீ தானே ஏத்தி விட்ட… அதோட அவுட்புட் இதுதான்…” சொல்லி கொண்டே மிக நெருங்கினான்!
“வேணாம் அர்ஜுன்… அண்ணாவ கூப்பிடுவேன்… ஒழுங்கா போ…” குரல் உள்ளே செல்ல அவள் பேசியது அவளுக்கே கேட்கவில்லை… அவனது மூச்சு காற்று அவள் மேல் பட… அவனது வாசனை ஒரு வித கிறக்கத்தை குடுத்தது!
“கூப்பிடு… உன் அண்ணன…” என்று கிசுகிசுப்பாக சொல்லி விட்டு… அவளது இரு புறமும் கை ஊன்றி அவளை முழுதாக விழுங்குவது போல் பார்க்க… அவனது பார்வை அஞ்சலியை என்னன்னவோ செய்ய.
“வேணாம் அர்ஜுன் விட்ருங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்…” ஹீனமாக அவள் சொல்ல முயல… காற்று தான் வந்தது! உடல் நடுங்கியது
அவளது கன்னத்தை வருடி ஞ்உதட்டை வருடி கொண்டே கண்களை பார்க்க… அந்த பார்வையின் வீச்சு தாங்காமல் கண்கள் தானாக சொருகியது அஞ்சலிக்கு… உதடுகள் அவனை அழைத்தன… மிக பக்கத்தில் போனவன்.
“இதையே மெயின்டைன் பண்ணு… அத விட்டுட்டு வாடா போடான்னு சொன்ன… அப்புறம் அங்கேயே இந்த மாதிரி தான் வாய தைப்பேன்… என்ன ஓகே வா…” என்று சொல்லி சிரித்து கொண்டே விலக
முகம் சிவந்து போய் திரும்பியவளுக்கு அப்போதுதான் சுய உணர்வு வந்தது… இதிலுமா இவனுக்கு விளையாட்டு… இது புரியாமல் தானும் மயங்கி போய்… ச்சே… அவமானத்தில் முகம் கன்றி போய் கண்கள் கலங்கி ஒன்றும் பேசாமல் கதவை திறந்து கொண்டு விறுவிறுவென்று வெளியே சென்றாள்! இனி அவன் முகத்தை பார்க்கவே கூடாது என்ற முடிவோடு!
***
காலை நேர பரபரப்பில் இருந்தது பிருந்தாவனம்!
சென்னை திநகரில் மிக மிக பெரிய கடைகளில் ஒன்றான கணபதி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கணபதியின் வீடு… ஏழு மணி அளவிலேயே காலை உணவை முடித்து கொண்டு கடைகளுக்கு சென்று விடுவார்… ஒவ்வொரு கடையிலும் பொறுப்பாளரிடம் கல்லா பெட்டி சாவியை தந்துவிட்டு ஸ்டாக் எவ்வளவு தேவையென்பதை கேட்டு கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தானே சென்று பார்வையிட்டு வருவது அவரது தினசரி வேளைகளில் ஒன்று… தந்தையின் துணையோ மற்ற உறவினர்களின் துணையோ இல்லாமல் தானே வளர்ந்த சுயம்பு! எந்த நேரத்திலும் தன்னை விழுங்க காத்திருக்கும் வியாபார திமிங்கலங்களை எதிர்த்து போராடியாக வேண்டிய கட்டாயம்… செய்தார்… திறம்படவே!
பதினாலு வயதில் திருசெந்தூரில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்தவருக்கு ஆரம்பத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது ஹோட்டல்களில் டேபிள் துடைப்பது போன்ற வேலைகளே கிடைத்தன… அதன் பின்னர் சிறிது காலம் துணி கடையில் வேலை பார்த்தார்… அந்த வேலையும் நிலைக்காமல் போய் விடவே இனி இன்னொருவரிடம் வேலை பார்க்க கூடாது என்று முடிவு செய்து பதினேழு வயதில் தெரு தெருவாக தள்ளு வண்டியில் வைத்து பாத்திரமும் சேலைகளும் விற்க ஆரம்பித்த கணபதிக்கு அதிர்ஷ்டம் கை குடுத்தது… அப்போது தான் எவர்சில்வர் பாத்திரம் புழக்கத்திற்கு வந்த புதிது… துணிந்து மும்பை சென்று மொத்தமாக கொள்முதல் செய்து விற்க ஆரம்பித்தார் கணபதி… மக்களின் எவர்சில்வர் பாத்திர மோகம் அவரை வியாபார காந்தம் ஆக்கியது!
துணிகள் மொத்த விற்பனை கடை நடத்தி வந்த சின்னசாமி, கணபதியின் வியாபார திறமையை பார்த்து தனது ஒரே பெண்ணான பிருந்தாவை அவருக்கே திருமணம் செய்து வைத்து தன் வியாபாரம் மற்றும் திநகர் கடை எல்லாவற்றையும் கணபதிக்கே கொடுத்தார்… ஒன்றுமில்லாமல் வெறும் கையிலே முழம் போடும் திறமை கொண்ட கணபதி, இந்த மிக பெரிய வாய்ப்பு வந்தால் விட்டு விடுவாரா என்ன? அதன் பின்னர் அவர் பார்த்ததெல்லாம் முன்னேற்றம் தான்! திநகரில் ஒரு காலத்தில் பிளாட்பார்மில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கணபதி இன்று அதே தி நகரில் இருபதுக்கும் மேற்பட்ட கட்டிடங்களின் சொந்தகாரர்… பாத்திரங்கள் துணிமணிகள் வீட்டு உபயோக பொருட்களோடு பல்வேறு தொழில்களுக்கு கடனுதவியும் செய்து வந்தார்… அவர் பேசும் கட்டபஞ்சாயத்துகளும் எதிரிகளை பூண்டோடு அழிக்கும் முறைகளும் பிரசித்தி பெற்றவை!… ஆனால் தனது வியாபாரத்தை பெருக்க தெரிந்த அவருக்கு தன் குடும்பத்தை பேணி காக்க தெரியவில்லை!
சிறு வயது முதலே வசதியில் ஊறி வளர்ந்த பிருந்தா, மேகா பிறக்கும் வரை தான் சிறிதளவு வீடடங்கி இருந்ததே… குழந்தை பிறந்த பின் மேகாவை வேலையாட்களிடம் விட்டு விட்டு ஊர் சுற்றுவதே வேலையாகி போனது… சேவை என்று ஏழை பிள்ளைகளை குளிக்க வைத்து படம் எடுத்து கொள்ளும் பிருந்தா ஒரு நாள் கூட தன் கையால் மேகாவை குளிக்க வைத்தது இல்லை… அந்த குழந்தை சாப்பிட்டதா இல்லையா என்று கூட பார்க்க தோன்றாத ஓட்டம்… சமுதாயத்தில் தான் முக்கிய பிறவி என்பதை காட்ட! தன் மனைவியை தட்டி கேட்க கூட நேரமில்லாமல் உழைத்து கொண்டிருந்தார் கணபதி! சிறு வயதில் தன்னிடம் போக்கு காட்டி அதன் பின்னால் அலைய வைத்த பணத்தை இன்று தன் பின்னால் அலைய விடும் வெறி!
வியாபாரம் என்று காலையில் தான் விழிக்கும் முன்னர் ஓடி உறங்கிய பின் வரும் தந்தை… வீட்டில் இருந்தால் கூட இன்டர்காமில் மட்டுமே உத்தரவிடும் தாய்… பாசமே அறியாமல் வளர்ந்தாள் மேகா! பாசத்தை காட்ட சசிதரன் கிடைத்த போது பற்றுகோடாய் பற்றிக்கொண்டாள்… அவனுடன் மும்பை செல்ல துணிந்தும் விட்டாள்! ஹாலின் நடுமையத்தில் உள்ள வீட்டு தொலைபேசி அழைத்தது! கணபதிதான் எடுத்தார்!
“ஹலோ… யாருங்க…”
“யார்ன்னு சொன்னா உங்க பொண்ணு உங்க கிட்ட வந்துடுவாங்களா மிஸ்டர் கணபதி?”
“ஹலோ… யார் சார் பேசுறீங்க… விளையாடாதீங்க…” யாரோ வேலையில்லாமல் லூசு தனமாய் மிரட்டுவதாய் நினைத்து கொண்டு பேச.
“மிஸ்டர் கணபதி… மொதல்ல உங்க பொண்ணு உங்க வீட்ல இருக்காங்ளான்னு பாருங்க…” அந்த குரலின் நிதானம் கணபதிக்கு பயத்தை அளிக்க.
“பிருந்தா… பிருந்தா… பொண்ணு எங்க?” என்று பதற்றத்தோடு தன் மனைவியை பார்த்து கேட்க…
“ஐயோ தெரியலையே… லதா… ஏய் லதா… மேகா எங்க?” என்று வேலையாளை பார்த்து பதறியபடியே கேட்க.
“தெரியலைங்களே… நேத்து காலைல வெளிய போகும் போது பார்த்தது தான்ம்மா… இன்னும் சின்னம்மாவ நான் பார்க்கலைங்களே…” என்று கூற
“பொண்ணு வீட்ல இல்லாதது கூட தெரியல… ம்ம்ம்… நல்ல அப்பா சார் நீங்க…”
“ஏய், … யார் நீ… இந்த மிரட்டி பார்க்குற வேலையெல்லாம் வேணாம்… வைடா போனை…” என்று கூறி விட்டு டக்கென்று போனை வைத்தார்!
உடனே மகளை எல்லோரையும் விட்டு தேட சொன்னவர் எல்லோரும் வந்து காணோமென்று சொல்ல இடிந்து போய் உட்கார்ந்தார்! அனைவர் முகத்திலும் பயம் தெரிந்தது… திடீரென்று தோன்ற மேகாவின் செல்பேசிக்கு அழைத்தார்!
“ஹலோ…” அழைத்த கணபதியின் குரலில் பதட்டம் தெரிந்தது!
“என்ன சார்… வீட்ல பொண்ண தேடி சலிச்சுட்டீங்க போலிருக்கு…” அவனே தான் பேசினான்!
“ஏய் யார் நீ?”
“ம்ம்ம்… அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவேனா? நீங்க பண்ண பாவம் எல்லாம் கொஞ்சமா நஞ்சமா மிஸ்டர் கணபதி…”
“சரி… எங்க என் பொண்ணு சொல்லு…”
“ம்ம்ம் அதையும் அவ்வளவு சீக்கிரம் சொல்லிடுவேனா? உங்களை அலைய விட்டு திரிய விட்டு பதற வெச்சு உங்க பாவ கணக்க டேலி பண்ண வேணாம்? ம்ம்ம்ம் உங்க ஸ்டைல் தான் மிஸ்டர் கணபதி…”
“சரிப்பா… உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு…” இறங்கி வந்து கேட்டார் கணபதி!
“இப்போ உங்க சொத்த கேட்டா எழுதி குடுப்பீங்களா மிஸ்டர் கணபதி… மாட்டீங்கள்ள… அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?”
“ஏய் இங்க பாருப்பா எனக்கு என் பொண்ணு வேணும்…” கெஞ்ச ஆரம்பிக்க
“உங்களுக்கு இது ஒன்னு தான் பொண்ணா… இல்ல உங்க வீட்ல இருக்கவங்க மட்டும் தான் மனைவியா? இந்த பொண்ண மறந்துடுங்க மிஸ்டர் கணபதி…”
தான் எங்கேயோ சொன்னது போல தோன்றியது இந்த வார்த்தைகள்! அப்படி என்றால்.
“தயவு செஞ்சு என் பொண்ண அனுப்பிடுப்பா… கெஞ்சி கேக்குறேன்… என் பொண்ண அனுப்பிடு…” கணபதி கதற ஆரம்பித்தார்!
“ம்ம்ம்… இவ்வளவு நீங்க கெஞ்சறதுனால உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன்… ஆப்ஷன் நம்பர் ஒன்னு முழுசா அனுப்பட்டா இல்ல ஆப்ஷன் நம்பர் ரெண்டு பாக் பண்ணி அனுப்பட்டா?”
“ஐயோ…” என்று கணபதி அலற
“இப்படி ஒரு ஆப்ஷனே நான் குடுக்கல மிஸ்டர் கணபதி… ஆனா முழுசா அனுப்பறதுன்னா ஒரு வேலை முடிச்சுட்டு தான் அனுப்ப முடியும்… என் பிரெண்ட் ஒருத்தன் உங்க பொண்ண பார்த்து ரொம்ப ஆசைபடுறான்… ஆனா என்ன அவனுக்கு எய்ட்ஸ் இருக்கு… இப்போ ஒரு ஆப்ஷன சூஸ் பண்ணுங்க மிஸ்டர் கணபதி!





