அத்தியாயம் ஏழு
சத்ரபதி சிவாஜி விமான நிலையம்
பெங்களூரில் இருந்து பயணிகளுடன் எட்டு மணிக்கு தரை இறங்கியது விமானம்! விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர் மூவரும்! பார்க்கும் முகம் அனைத்திலும் அவசரம்! ஒரு தேடல்!… ஏதாவது ஒரு வேலை… எதை துரத்தி கொண்டு ஓடுகின்றனர்? பஸ் நிலையம்… ரயில் நிலையம்… என்று பார்க்கும் இடம் அனைத்திலும் மக்களுக்கு ஏதோ வேலை இருந்து கொண்டே இருக்கின்றது! எதற்காக இந்த ஓட்டம் என்றே புரியாமல்… யாரை துரத்துகிறோம் என்பதும் தெரியாமல் ஓடி கொண்டே இருக்கின்றனர்! டார்வின் தத்துவம் தெரியுமா?
“suக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ யீவீttமீst”
தனித்தன்மையோடு இல்லாத, முழுவதுமாக தகுதி இல்லாத இனங்களை தூக்கி எறிய இந்த பூமி தயங்குவது இல்லை! பூகம்பம், சுனாமி, வெள்ளம், இன்னும் எல்நினோ, லானினா என்று எத்தனையோ சொல்லலாம்! இவை அனைத்தும் தகுதி இல்லாத இனங்களை அழிக்க இயற்கை கையாளும் முறைகள்!
அதே போல தான் வாழ்கையும்… தகுதி இல்லாத மனிதர்களை காவு குடுக்க அதுவும் தயங்குவதில்லை! அந்த தகுதிக்கு தங்களை தகுதி படுத்தி கொள்ள வேண்டுமல்லவா? அந்த திக்கை நோக்கி மனிதர்கள் ஓடும் ஓட்டம் தான் இது!… ஆனால் இயற்கை சில விஷயங்களை ரகசியமாகவே வைத்து இருக்கிறது! அந்த ரகசியங்களை படிக்கும் மந்திர சாவி மட்டும் யாருக்கும் கிடைப்பதில்லை! சிலர் அதை ஆன்மீக ரீதியில் துரத்தி போய் தேடுகின்றனர்! சிலர் அறிவியலின் துணையோடு அந்த மந்திர சாவியை கைபற்ற துடிக்கின்றனர்! ஆனால் இயற்கை தெளிவாகத்தான் இருக்கின்றது! அந்த மந்திர சாவியை ரகசியமாகவே வைப்பதில்… அதனாலேயே இயற்கையை மனிதன் கட்டுபடுத்த முயலும் போதெல்லாம் மனிதன் பேரழிவை சந்திக்கின்றான்! வேறு வழி இல்லாத மனிதனும் தனது ஓட்டத்தை தொடர்கிறான்! இதில் உயர்வு இல்லை தாழ்வு இல்லை… பசி இல்லை தூக்கம் இல்லை… ஓய்வு இல்லை உறக்கம் இல்லை… தன்னை முந்துவதற்கு ஒருவன் இருக்கிறான் எனும்போது இன்னும் வேகமாக ஓடவேண்டிய கட்டாயம்! வெற்றிகளை நோக்கி!
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜுன், கௌதமையும், அஞ்சலியையும் உட்கார சொல்லிவிட்டு தான் வெளியே சென்று தனது ஓட்டுனர் கொண்டு வந்து குடுத்த காரை தனது கட்டுபாட்டில் எடுத்து கொண்டு ஏர்போர்ட் லாபி பக்கம் இருக்கும் அவுட்லெட்க்கு விரைந்தான்! இருவரையும் அழைக்க.
கௌதமின் செல்பேசி அழைத்தது! சிவதாணு மங்களம்! ரயில் விபத்தை பற்றி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தவர்கள் பதறி போய் தொடர்பு கொள்ள முயற்சிக்க அஞ்சலியின் செல்பேசி விபத்து நடந்த இடத்திலேயே தொலைந்து விட்டதால் கௌதமின் செல்பேசிக்கு அழைத்து இருந்தார்! வெறும் கைப்பையை மட்டுமே எடுக்க முடிந்தது அவளால்! இருவரும் பேசி தங்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அவரும் மனம் சமாதானமடைந்தார்! பெண்ணை இப்படி அனுப்பி விட்டீர்களே என்று அதுவரை வீட்டில் அதிகப்படியான டோஸ் வாங்கியவர் அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டார்! சாதாரண நேரங்களில் அஞ்சலியே போன் செய்து ஒவ்வொரு விஷயத்தையும் பெற்றோரிடம் சொல்பவள் இன்று மனதின் குழப்பத்தில் அதை மறந்தது அவளுக்கே பெரும் உறுத்தலாக போய்விட்டது!
மனம் குழம்பி தவித்தது! இந்த ஒரு நாளைய பயணம் தன் வாழ்க்கையையே திசை மாற்ற போவதை அறியாமல் மனதில் அழுது கொண்டு இருந்தாள் அஞ்சலி! காரணம் அவன் தன்னை பேசிய வார்த்தைகள்! எப்படி நீ என்னை அப்படி நினைக்கலாம் என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க நினைத்த மனதை முயன்று அடக்கினாள்! யாரோ ஒருவர் பேசி இருந்தால் இந்நேரம் அதை பற்றி சிறிது கூட கவலை படாமல் வேலையை பார்க்க போய்விடுவாள்! ஆனால் அர்ஜுன் தன்னை இந்த அளவு கீழ்த்தரமாக நினைத்தது அவள் மனதை வெகுவாக காயப்படுத்தியது… அந்த அளவு தன்னை பணபேய் என்று நினைத்ததால் தானோ இரவு மருத்துவமனையில் அப்படி நடந்து கொண்டான்? விழியோரம் நீர் துளிர்த்தது!
துடைத்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள்! மனதில் காயம் இருந்தாலும் அவனை காதலிக்க தொடங்கி விட்ட மனது எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அவன் பின்னால் மட்டுமே சென்றது, ஆட்டுகுட்டியாக! இப்போது ஹாஸ்டலுக்கு போய் விடுவோம்… அதன் பின்னர்… சாதாரணமாக காலையில் எழுந்து கிளம்பி அலுவலகம் சென்று வேலை பார்த்து பின்னர் ஹாஸ்டலுக்கு திரும்பவது வழக்கமாகி விடும்… எப்படி பார்ப்பது அர்ஜுனை? அவனும் ஓசோனில் தான் வேலை பார்க்கிறான் என்றாலும் எங்கே? என்னவாக இருக்கிறான் என்று கூட தெரியாதே!
முதலில் இந்த காதலின் எதிர்காலம் தான் என்ன? தன்னை நம்பி, தன் பெண் உலக அனுபவம் பெற்று வரட்டும் என்று அனுப்பிய தந்தையின் நம்பிக்கையை குலைக்கலாமா? தனது நண்பன் தானே என்று தன்னை கள்ளமில்லாமல் பழக விட்ட அண்ணனின் எண்ணத்தை பொய்யாக்கலாமா? ஒரே நாளில் அவனை பற்றி என்ன தெரிந்து கொண்டிருப்போம்? அவன் பெயரை தவிர? தனக்கு இந்த எதிர்காலம் தெரியாத காதல் தேவையா? மாற்றி மாற்றி தன் மனம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் அர்ஜுன் மேல் கொண்ட காதலை மாற்றி கொள்ளவும் தெரியாமல் குழம்பி மௌனமாகவே வந்தாள்!
கார் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேக்குள் நுழைந்து போய் கொண்டிருந்தது! அர்ஜுன் மனதிலும் அலை அலையாய் குழப்பங்கள்! கௌதமிடம் தன் காதலை சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டு இரவு மருத்துமனையில் தான் அஞ்சலியிடம் நடந்து கொண்ட முறையை எண்ணி! ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன்? பெண்களை இது வரை தவறாக பார்த்தது கூட கிடையாதே! அதுவும் தன்னை முதல் முதலாக வேரோடு பிடுங்கி அதில் காதல் ஊற்று சுரக்க செய்த ஒரு தேவதை பெண்ணிடம்! என்னதான் தனக்கு அவள் தேவதையாக தெரிந்தாலும் அவளும் மனித பிறவி தானே! குறை இல்லாத மனிதர்கள் எவர்? காதலென்றால் என்ன? இருக்கும் குறையோடு சேர்ந்து ஏற்று கொள்வதுதானே! அவளது இயல்பு தெரிந்தது தவறில்லையே! அந்த குறையை எப்படியாவது நிவர்த்தி செய்வேன் என்று நினைத்தாலும் அவளது சில வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்ததை ஒதுக்கவும் முடியவில்லை! பின்னர் வாழ்க்கையில் அதுவே நெருஞ்சி முள்ளாக உறுத்தாதா? எப்படியாகிலும்… அவள் தான் என் வாழ்க்கை.
ஒருவாராக தெளிவாகி கௌதமை பார்த்து கேட்டான்…
“நீ எங்க மச்சான் போகணும்?”
கௌதமின் மனமோ இங்கில்லாமல் எங்கோ தடுமாறி கொண்டு இருந்தது! ஏன் அவளை பார்த்தேன்? எத்தகைய பெண் அவள்! அன்பே உருவாக காதலின் மொத்த உருவத்தையும் தன்னகத்தே கொண்டு அந்த சசியை விரும்புகிறாள்! ஏன் மேகா முதலில் என்னை சந்திக்கவில்லை? தான் செய்யும் தொழிலில் அழகான பெண்களை பார்க்காதவன் இல்லையே… தினம் அது தானே வேலையே! இவளை பார்த்து தடுமாறியது போல் வேறு யாரை பார்த்தும் தடுமாறியது இல்லையே… மேகா சசியை தான் விரும்புகிறாள் என்பது தெரிந்தும் தான் இவ்வாறு நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்? முதலில் அந்த சசி நல்லவன் தானா? நடு இரவில் தன்னை நம்பி வந்த பெண்ணை விட்டுவிட்டு இன்னொருத்தியிடம் போனவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்? அவனை போய் நம்பி கொண்டிருக்கிறாயே மேகா? அர்ஜுன் அழைப்பது கூட காதில் விழாதவனாக தன்னை மறந்து மேகாவை பற்றியே நினைத்து கொண்டிருந்தான்!
“கௌதம்…” என்று இன்னொரு முறை அழைக்கவுமே சுயஉணர்வு அடைந்து
“என்னடா மச்சான்…”
“கிழிஞ்சுது போ… ஏன்டா… கூப்பிடுட்டே இருக்கேன்… என்னடா கண்ண திறந்து வெச்சுட்டே தூங்கறையா நீ? எங்க போகறன்னு கேட்டேன்…”
“கல்பாதேவி அர்ஜுன்… அதுக்கு முன்னால இந்த அம்மணிய ஹாஸ்டல்ல இறக்கி விட்டுடலாம்… எந்த ஹாஸ்டல்டா குட்டி?”
“சாவித்ரி பாய் புலே ஹாஸ்டல் அண்ணா… சாண்டா க்ரூஸ்…”
இதை கேட்டதும் மிக பெரிய நகைச்சுவையை கேட்டது போல சிரித்தான் அர்ஜுன்.
“ஏன் சிரிக்கற… றீங்க…” என்று தடுமாறி கொண்டே கேட்கவும் அர்ஜுன் கண்களில் மின்னல்…
“உன் வொர்க் சைட் நரிமன் பாய்ன்ட் தானே…”
“அதெல்லாம் தெரியாது… மேடம் காமா ரோடுன்னு போட்டு இருந்தது…”
“அட கூமுட்டை… அந்த மேடம் காமா ரோடு நரிமன் பாய்ன்ட் தான்…”
“ஹலோ… இந்த கூமுட்டைன்னு சொல்லறது எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்…” சண்டைகோழியாக சிலிர்த்து எழுந்தாள்!
“அப்படியா… சரி அபிதகுஜலாம்பா… அந்த நரிமன் பாய்ன்ட்க்கு இருபது கிலோமீட்டர் தாண்டி சாண்டா க்ரூஸ்ல ஹாஸ்டல் பிடிச்சது நீயாத்தான் இருப்ப… அதத்தான் சொன்னேன்…”
அவன் அபிதகுஜலாம்பா என்று கூறிய போது முறைத்த அஞ்சலி, அவன் ஹாஸ்டலை பற்றி கூறிய போது ஐயோ என்றிருந்தது!
“ஹய்யோ, … அப்பாதானே வந்து பார்த்து பணம் கட்டிட்டு போனாங்க…” விட்டால் அழுகை வரும் போல இருந்தது!
“ம்ம்ம்… ரொம்ப நல்ல அப்பா…” என்று கிண்டலடிக்கவும்
“ஹலோ… என் அப்பாவ சொல்றதெல்லாம் வேணாம்…”
“சரி அபிதகுஜலாம்பா…” என்று கிண்டலடிக்கவும்.
“அண்ணாஆஆஆ… இங்க பாரு…” கௌதமை துணைக்கு அழைக்க
“டேய் ஏன்டா என் தங்கச்சிய கிண்டல் பண்ற… நீ விடுறா செல்லம்… சரி உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த சாண்டா க்ரூஸ் தாண்டியே வந்துட்டோம் கவலை படாத…” என்று அவன் பங்குக்கு வார
“என்னண்ணா சொல்ற… ஐயோ கார திருப்ப சொல்லு…”
“ஏய் லூசு… இது மும்பை எக்ஸ்பிரஸ்வே… அத ஞாபகம் வெச்சுக்கோ… இப்போ போயிட்டு இருக்கற இடத்துக்கு பேரு கேர்வாடி… ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்து கொஞ்ச தூரத்துல லெப்ட்ல டர்ன் பண்ணா தான் சாண்டா க்ரூஸ்… புரியுதா மரமண்டை…”
“இந்த மரமண்டைன்னு சொல்றதெல்லாம் வேணாம்ம்ம்ம்ம்ம்ம்…”
“மரமண்டைய மரமண்டைன்னு சொல்லாம வேற என்ன சொல்றது அபிதகுஜலாம்பா…” என்று மறுபடி வாரவும்
“உன்னை…” என்று ஆரம்பித்தவள், அவன் தன்னை கண்ணாடி வழியே பார்ப்பதை உணர்ந்தவள் அப்படியே நிறுத்தி கொள்ள, அவள் நிறுத்தியதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள்ளே ஜிவ்வென்று டேக் ஆப் ஆனான்!
“மருந்து கரக்டா வேலை செய்யுதுடா டோய்…” என்று அவன் மனதில் ஆனந்தம்.
“என்ன அபிதகுஜலாம்பா நிறுத்திட்ட…?”
“டேய்… அர்ஜுன்… ரொம்ப ஓவரா சீண்டிகிட்டே இருக்காத… கண்டிப்பா ஒரு நாள் இல்ல ஒரு நாள் அஞ்சு குட்டி உன் தலைல கல்ல தூக்கி போட்டுடுவா!” கௌதம் சீரியசாக சொல்வது போல வார.
“இப்போ ரெண்டு பேரும் நிறுத்தறீங்களா… இப்போ நான் ஹாஸ்டல் போகணும்…”
“ஒன்னு பண்ணலாம் எலிக்குட்டி… நீ என்னோட கல்பாதேவிக்கு வா… என் பிரெண்ட் வீடு இருக்கு… அங்க இரு… சாயந்தரம் வரை வேலை இருக்கு… அப்புறமா நாம நரிமன் பாய்ன்ட்லையே எதாச்சும் ஹாஸ்டல் இருக்கான்னு பார்க்கலாம்… ஓகே வா?” என்று கௌதம் கேட்க
“வேணாம்டா… நம்ம வீட்டு பொண்ணு… இன்னொரு வீட்ல போய் இருக்க வேணாம்… நம்ம அப்பார்ட்மென்டும் சரி வராது… அப்பாவோட ஆயிரம் கேள்விய சமாளிக்கணும்… வெயிட்… வெயிட்…” என்று சொல்லி செல்பேசியை எடுத்தவனை ஒரு நொடி பெருமை பொங்க பார்த்தாள் அஞ்சலி!
“கௌஷிக்… சீகீசிகி, மேடம் காமா ரோட்ல தானே இருக்கு…”
“…”
“அங்க வேகன்சி இருக்குதான்னு பாரு… இருந்தா பேசி முடிச்சுடு… ம்ம்ம்… ஒருத்தர் தான்… பேர் அஞ்சலி”
அடுத்த ஐந்தாவது நிமிடம் ரூம் பேசி முடித்தாகி விட்டது என்ற போன் வர
“தேங்க்ஸ்டா மச்சான்… அதுக்கு தான் நீ வேணுங்கறது… பார்த்தியா எலிக்குட்டி… என் பிரெண்ட… ஒரே நிமிஷத்துல பேசியே முடிச்சுட்டான்…”
என்று பெருமை பீற்ற.
“போதும் போதும்… ரொம்ப பீத்தாத…” என்று முனகினாள். ஆனால் அவனது வேகத்தை பார்த்து பிரமித்து தான் போனாள்! இதற்காக அப்பா ஒரு நாள் முழுக்க அலைந்தது நினைவுக்கு வந்தது… ஸ்மார்ட் தான்!
கௌதம் அவனுடைய அட்வைஸ்களை ஆரம்பித்தான்!
“பாருடா எலிக்குட்டி… நானோ அர்ஜுனோ உன் கூட இருந்துட்டே இருக்க முடியாது… நீ உன் வால எல்லாம் சுருட்டிகிட்டு இங்க வேலை பார்க்க முடியும்னா பாரு இல்லைனா இப்போ நான் வேலைய முடிச்சுட்டு கிளம்பறப்போவே என்னோடவே வந்துடு தாயே… என்ன சொல்ற?”
“ம்ம்ம்… சரி…”
“எதுக்கு சரின்னு சொல்ற அபிதகுஜலாம்பா… கிளம்பறதுக்கா… அதானே… பார்த்தேன்… நீயாவது ஒரு இடத்துல அடங்கி வேலை செய்றதாவது!” அர்ஜுன் மறுபடியும் வம்பிழுக்க, அவனை பார்த்து முறைத்தவள்
“நான் எந்த வம்பையும் இழுக்க மாட்டேன்னு சொன்னேன்…” என்று கடுப்படித்துக்கொண்டே சொல்ல
கார் கல்பாதேவியை நெருங்கி கொண்டிருக்க அர்ஜுனிடம்
“சரி உன் சண்டைய அப்புறம் பார்க்கலாம்… கௌதம்… ஐயா சாமி… நீயாவது சொல்லு… கல்பாதேவில இறங்கறியா இல்ல… நரிமன் வரியா… அப்புறம் கார திருப்புன்னு கத்த கூடாது…”
இதை கேட்டு சிரித்த கௌதம்… திரும்பி அஞ்சலியை பார்க்க அவளோ உலகத்தை மறந்து எங்கோ வெறித்து கொண்டிருந்தாள்! இது அவளது இயல்பில்லையே.
“டேய் எலிக்குட்டி… என்னடா ஆச்சு உனக்கு இன்னைக்கு… அர்ஜுன் உன்னை வாரிக்கிட்டே இருக்கான்… நீ சும்மாவே வர… இந்நேரம் கதாகாலட்ஷேபமே பண்ணி இருப்பியே… என்னாச்சு? ஏன் இப்படி வர? வாய தைச்சு வச்ச மாதிரி…” என்று கேட்கவும்… சிரித்த அர்ஜுன்.
“இன்னொரு முறை சொல்லுங்க…” ராகமாய் பாடினான்!
“எதடா…”
“இல்ல… வாய தைச்சு வச்சதா சொன்னியே… அத தான் மச்சி… ஏன் அபிதகுஜலாம்பா அப்படியா?” என்று கண்களில் சிரிப்போடு அவளை பார்த்து கேட்க,
அவனை பார்த்து முறைத்த முறைப்பில் அந்த கண்ணகி தோற்று விடுவாள், அவள் பார்வைக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்தால்… ஆனால் என்ன செய்வது? கடுப்பேற்றி கொண்டே இருக்கிறானே.
“கன்பார்ம்ட்… என்னடா ஆச்சு? தனியா இருக்க போறோம்னு பயமா இருக்கா என்ன? சொல்லுடா குட்டி…” கௌதம் மெய்யான வருத்தத்தில் கேட்க,
“இல்லண்ணா… அதெல்லாம் இல்ல… அதான் நீ எப்படியும் அடிக்கடி வருவியில்ல… சும்மா டையர்ட் தான்… ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்… நாளைக்கு வேற வேலைல ஜாயின் பண்ணனும்… எப்படி இடமோ? அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு…”
“அடடடா… எலி… இத பத்தி கூட கவலை படுவியா… அதான் அங்க ஒரு சூப்பர் பிகர் இருக்கே… அந்த சேர்மன்… பேசாம அவர கைக்குள்ள போட்டுக்கோ…” என்று அர்ஜுன் சொல்லி சிரிக்கவும்.
“அண்ணாஆஆஆஆ… என் பொறுமை பறந்துட்டு போகுது… உன் பிரெண்ட வாய மூட சொல்றியா…” கௌதமை பார்த்து பல்லை கடித்து கொண்டு சீறினாள்!
“ஓகே ஓகே பொறுமை…” என்று கௌதம் கூறவும் சமாதானமடைந்த அஞ்சலி அவனுக்கு மட்டுமே கேட்குமாறு
“அண்ணா… பிளைட் டிக்கெட் பணத்த எப்படி குடுக்கறது?”
“அதெல்லாம் நான் வேற வழில டேலி பண்ணிடுவேன் குட்டி… நீ கவலைபடாத… பணமா குடுத்தா வாங்க மாட்டான்டா… நான் பார்த்துக்கறேன்…” என்று கூறி விட்டு அவளை தட்டி குடுத்து விட்டு,
“சரிடா… நீங்க ரெண்டு பேரும் சண்டைய கண்டினியு பண்ணுங்க… நான் இங்க கல்பாதேவில இறங்கிக்கறேன்… குட்டி… உன் கிட்ட போன் இல்லையில்ல… அர்ஜுன் உன் கிட்ட ஏதாவது ஸ்பேர் சிம் இருக்கா… நான் என் போன்ல போட்டு குடுத்துடறேன்… அவசரத்துக்கு வேணும்ல?”
“ஸ்பேர் போனும் இருக்கு…” என்று தனது செல்பேசிகளில் ஒன்றை எடுக்க…
“ஏன் அண்ணா… உன் பிரெண்ட் என்ன செல் விக்கறாப்லையா? இத்தன செல்போன் வெச்சு இருக்காரு? அநியாயத்துக்கு ஒரு ஆளுக்கு நாலு போனா? ஏன் ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு ஒடறாரா?” என்று கேட்கவும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“ம்ம்ம் அதை அவன் கிட்டேயே கேட்டுக்கோ…” சிரித்தவாறே சொல்லி விட்டு” சரிடா… அஞ்சுவ பத்தரமா ஹாஸ்டல்ல விட்ரு… இந்த பஸ் ஸ்டாப்ல இறங்கிக்கறேன்டா” என்று இறங்கி விட்டு
“அர்ஜுன் ஒரு நிமிஷம் இங்க வா…” என்று அழைக்கவும்
அர்ஜுன் இறங்கி பஸ் ஸ்டாப்பில் கொஞ்சம் தள்ளி சென்றான்.
“சொல்லுடா… என்ன சொல்லணும்…” என்று கேட்கவும்
“ஏன் அர்ஜுன்… என்னடா பிரச்சனை?” என்று நேரடியாக கேட்கவும் பதில் கூற முடியாமல் தடுமாறினான் அர்ஜுன்!
“தெரியலடா… சின்ன சண்டை வந்தது… அதான் இப்படி உர்ர்ன்னு இருக்கா…”
“மச்சான் ஒன்ன மட்டும் புரிஞ்சுக்கோ… நீ நினைக்கிற மாதிரி ஈசியா என் தங்கச்சி விளையாட்டு பிள்ளை மாதிரி இருந்தா கூட அவ கொஞ்சம் கறாரான ஆள் அர்ஜுன்… சப்போஸ் நீ சீரியஸா இல்லாட்டி இதோட விட்ரு மச்சி… அப்படி அவளுக்கும் பிடிச்சு இருந்தா வேணும்னா நான் சப்போர்ட் பண்ணுவேன்… ஆனா எங்க குடும்பத்தை பத்தி உனக்கு தெரியும்… அதுக்கு ஒரு தலைகுனிவ ஏற்படுத்தி விட்டுறாத அர்ஜுன்…” தெளிவாக கௌதம் சொல்லவும் சிறிது யோசித்த அர்ஜுன்.
“கௌதம்… நீயும் ஒன்ன புரிஞ்சுக்கணும்… என்னை பத்தி என்னை விட உனக்கு நல்லா தெரியும்… அந்த நம்பிக்கை இன்னும் இருக்குன்னு தான் நினைக்கிறேன்… இப்போவும் நான் மாறல… நான் பார்த்து ஆசைப்பட்ட முதல் பொண்ணு அஞ்சலி தான்… மனசுக்குள்ள நிறைய உறுத்தல் இருக்கு தான்… ஆனா அதையெல்லாம் நானே க்ளியர் பண்ணிடுவேன்… சின்ன பொண்ணு தான… ஆனா என்னைக்கும் யாருக்கும் தலைகுனிவ ஏற்படுத்த மாட்டேன்டா… நீ நம்பலாம்… உன் குடும்பம் வேற என் குடும்பம் வேற இல்ல கௌதம்… ஐ மீன் இட்…” என்று சொல்லவும் கௌதம் அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்!
“ஓகே… உன் கிட்ட தான் வேலைக்கு வர போறா… ரொம்ப போட்டு வறுத்துடாதடாதீங்க மாப்ள சார்…” என்று அவனை வாரவும்
“டேய்… ச்சீ… போடா…” என்று அவனது வயிற்றில் குத்தி வெட்கமாக சிரித்தான்.
“ஹய்யோ… வெட்கபடுறியா… ஹையோ… ச்சே ஆம்பிளைங்க வெட்கபட்டா கூட அழகா தாண்டா இருக்கு… பட்டுகிட்டே இரு… நான் கிளம்பறேன்…” என்றவனுக்கு ஒரு அடி குடுத்து விட்டு காரை நோக்கி வந்தான்!
அஞ்சலி காரின் பின் பக்கத்திலேயே அமர்ந்து இருப்பதை பார்த்தவன்
“ஹலோ… நான் என்ன டிரைவரா… ஒழுங்கா முன்னால வந்து உட்கார தெரியாதோ?” என்று அஞ்சலியை கடிக்க
“ம்ம்ம்… இந்த அண்ணன் எதுக்கு தான் இந்த பிசாசு கிட்ட விட்டுட்டு போனானோ? ச்சே…” என்று முனகி கொண்டே முன்னர் வந்தாலும் அவள் மனதின் ஒரு புறம் பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்ததென்னவோ உண்மை!
அர்ஜுனின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டே வந்தவளை பார்த்து கொண்டே வந்தவன்,
“இப்போ ஒரு நாலு செட் போதுமா அஞ்சலி?” என்று கேட்க
“என்னது?” என்று புரியாமல் கேட்டாள்.
“அதான் ட்ரெயின்லையே டிரஸ் எல்லாத்தையும் விட்டுட்டியே… அதான் கேட்டேன்…”
ச்சே… அதை பற்றி நினைக்கவே இல்லையே… நாளைக்கு வேலையில் சேர வேண்டுமே… என்று நினைத்தவள்
“ம்ம்ம்… போதும்…” என்று சொல்லி விட்டு தலையை குனிந்து கொண்டாள்!
ஓரமாக துணி கடையில் நிறுத்தியவன்… பார்த்து பார்த்து நான்கு செட் துணிகளும் அதற்கு தேவையான உள்ளாடைகளையும் வாங்க கூறி விட்டு செல்பேசியை எடுத்து அதில் நகாசு வேலை பார்த்து குடுத்தான்.
“ரொம்ப காஸ்ட்லி போன் மாதிரி தெரியுது அர்ஜுன் எனக்கு வேண்டாம்… என் கிட்ட கார்ட் இருக்கு… செல்போன் கடைல நிறுத்துங்க நான் வாங்கிக்கறேன்… ஸ்பேர் சிம் மட்டும் போதும்…”
அவளை பார்த்து முறைத்த அர்ஜுன்.
“வாய மூடிகிட்டு ஒழுங்கா செல்போன எடுத்துட்டு போ… தேவையில்லாம பேசி என்னை டென்ஷன் பண்ணிட்டு அப்புறம் அத பண்ணேன் இத பண்ணேன்னு முகத்த தூக்கி வெச்சுட்டு இருப்ப…” என்று அவன் கூறவும் அவள் முகம் சட்டென சிவக்க தலை குனிந்து கொண்டாள்!
துணியை வாங்க தானே கார்ட் குடுக்கிறேன் என்று அவள் பிடிவாதம் பிடிக்க… ஆனால் அவனது பிடிவாதமே வெற்றி பெற்றது!
என்ன இருந்தாலும் அவனிடம் எல்லாவற்றையும் சும்மாவே பெற்று கொண்டிருப்பது அவளுக்கு பெரிய இழுக்காக இருந்தது! போகும் போது கொஞ்சம் பேசி பணத்தை வாங்கி கொள்ள சொல்ல வேண்டும்… இவையெல்லாம் உரிமையாக தான் வாங்கி கொள்ளும் காலம் வரும் போது தான் வாங்கி கொள்வதாக கூற வேண்டும்… அஞ்சலிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய.
“அர்ஜுன்… மொத்த செலவு எவ்வளவு… சொல்லுங்க…” அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்
“ஏன் எதுக்கு கேக்கற?”
“ம்ம்ம்… கொடுக்கத்தான்… சும்மாவே எல்லாத்தையும் வாங்கி அடுக்கிக்குவாங்களா?”
“ஓ… ஆமாம்ல… உன் கிட்ட தான் நிறைய பணம் இருக்கே… அதானே… அதையெல்லாம் நீயே வெச்சுக்கோ எலி…”
“ஏன் தேவை இல்லாம பேசறீங்க… எவ்வளவுன்னு சொல்லுங்க?” என்று கறாராக கேட்கவும்…
“சொல்லலைன்னா என்ன பண்ணுவ? ஏன் நான் வாங்கி தர கூடாதா?”
அஞ்சலியின் அவசர புத்தி அப்போதும் வேலை செய்ய, என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் அவன் கேட்டதிற்கு பதில் குடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே அவள் அப்போது வாயை விட்டாள்!
“உங்களுக்கு வாங்கி தர என்ன உரிமை இருக்கு அர்ஜுன்? ஏன் என் கிட்ட பணம் இல்லையா? கண்டவங்க கிட்ட எல்லாம் நான் எல்லாத்தையும் வாங்க முடியாது…”
அர்ஜுனின் கோபம் தலைக்கேறியது… கண்டவன் என்று ஒரு சொல்லில் அவனது பொறுமை எல்லாம் பறந்து போனது… காரை ஆள் அரவமில்லாத இடத்தில் நிறுத்தினான்… மிக மிக கோபத்தோடு இருந்தவன், அவளை பார்த்து
“என்ன சொன்ன… கண்டவனா? யாரு… நானா? எங்க… உன் மனசுல கைய்ய வெச்சு சொல்லு…”
அவள் அவனின் கோபத்தை பார்த்து உள்ளுக்குள் குளிரெடுக்க
“அர்ஜுன்… எனக்கு லேட் ஆச்சு… ஹாஸ்டல் போகணும்… நீங்க கொண்டு போய் விடறிங்களா… இல்ல நானே போய்க்கவா?” என்று திக்கி திணறி கேட்க
“இதுக்கு முதல்ல பதில சொல்லு அஞ்சலி… நான் கண்டவனா?”
“அர்ஜுன்… நடு ரோடுல நின்னுகிட்டு என்ன பேச்சு இது… நான் இங்க வேலை செய்ய வந்து இருக்கேன்… எங்க அப்பா என்னை நம்பி அனுப்பி வெச்சு இருக்காங்க… அதை மட்டும் தான் பார்க்க போறேன்… நான் யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்ல…”
அஞ்சலி, தான் நினைத்ததற்கு மாறாக பேச்சு வந்து விழ… அர்ஜுனுக்கு கோபம் தலைக்கேறி அதை முழுக்க ஆக்சிலேட்டரில் காட்டினான்… கார் பறந்தது… ஹாஸ்டலில் கொண்டு போய் விட்டவன்… அவளை சேர்ப்பதற்காக லோக்கல் கார்டியனாக அவனே கையெழுத்திட்டு அவளை சேர்த்து விட்டு திரும்பி கூட பார்க்காமல் அவனது அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தான்!
***
“சசி… என் செல்போன் இங்க வெச்சு இருந்தேன்… பார்த்தீங்களா?” என்று மேகா கேட்க
“இல்லடா… தேடிப்பாரு…” என்றான் சசி
“காணோம்ப்பா…” என்று தேடி கொண்டிருக்கும் அவளை பார்த்து உள்ளுக்குள் பரிதாபம் தோன்றியது… ஆனாலும் அந்த கணபதியை நினைக்கும் போது அந்த பரிதாபம் எல்லாம் மாறி பழிவாங்குவது ஒன்றே குறியாக பட்டது!
மாற்று ட்ரெயின் வந்து அதில் மாறி ஏறி மும்பை வந்து சேர்வதற்கு மாலை ஆகி விட்டது! டாக்ஸி பிடித்து கொண்டு சிறிய சந்தில் ஒரு சிறு வீட்டை ஒரு மாடியில் காட்டியவனை பார்த்து மேகாவுக்கு பயபந்து உருண்டது.
கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ?
“இது உங்க வீடா சசி?” உள்ளுக்குள் கலக்கத்தோடு கேட்க
“இல்ல… இது என் பிரெண்ட் வீடு…”
“அம்மா அப்பா இருப்பாங்கன்னு சொன்னீங்களே சசி!” தடுமாறி கொண்டு கேட்க
“இல்ல… கொஞ்சம் ப்ராப்ளம்… நீ போய் ரெஸ்ட் எடு… சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வரேன்…” என்று போனவன் கையில் இரு டம்ளர்கள்… அதில் பால் இருந்தது.
“முதல் முதல்ல என் கூட மும்பை வந்து இருக்க… பால் சாப்பிடு மேகி…” என்று அவளுக்கு ஒன்றை குடுத்து விட்டு அவனும் ஒன்று குடித்தான்.
“பால் நல்லா இருக்கா? சாப்பிட என்னடா வேணும்?” என்று ஆதரவாய் கேட்டான்… ஆனால் அவன் குரலில் இருந்த ஆதரவு மேகாவை தட்டி குடுக்கவில்லை… அவளது பயம் தான் அதிகமானது.
“ஒரு நிமிஷம் சசி சாப்பிடறது அப்புறம் இருக்கட்டும்… உங்க அம்மா அப்பா கூப்பிடதுனாலதான் நானே தைரியமா வந்தேன்ப்பா…” என்றாள் குரல் இடற
அவள் குடித்து முடிக்கும் வரை பார்த்து விட்டு பின்னர் அவளை பார்த்து முறைத்து கொண்டே
“இப்போதைக்கு சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடு மேகா… அப்புறமா பேசலாம்…”
அவன் கூறுவது எங்கேயோ இடிப்பது போல இருக்கவே.
“சசி… எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க சசி… எனக்கு என்னமோ பயமா இருக்கு…” குரல் கமற கூறினாள்
அவளிடம் ஒன்றும் பேசாமல் செல்பேசியை எடுத்தான்.
அது அவளது செல்பேசி.
“சசி… போன காணோம்னு சொன்னீங்க…” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே நம்பரை அழுத்தி பேச தொடங்கினான்
“ஹலோ… என்ன மிஸ்டர் கணபதி… முடிவு பண்ணீட்டீங்களா? உங்க பொண்ண முழுசா அனுப்பட்டா இல்ல… பாக் பண்ணி அனுப்பட்டா?”
“தயவு செஞ்சு என் பொண்ண விட்டுடுப்பா… உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்…” அந்த பக்கம் கணபதி நடுங்கும் குரலில் கதறினார்!
“உங்க பணம் என் அக்காவ திருப்பி தந்திடுமா கணபதி? இல்ல… செத்து போன எங்க அப்பா அம்மா தான் திரும்ப வந்திடுவாங்களா? அவங்களை திருப்பி தாங்க… உங்க பொண்ணை அலுங்காம திருப்பி தரேன்…”
இதை அவன் பேசி கொண்டிருக்கும் போதே மேகாவுக்கு இருட்டி கொண்டு வந்தது… கால்கள் தரையில் படாமல் தள்ளாடியது… பூமி அவளை விழுங்கி விட கூடாதா? என்று நினைத்து கொண்டே மயங்கி சரிந்தாள்!
விதியின் கைகளில் சிக்கிய பறவை!
என்ன நடக்கும்?





