அத்தியாயம் ஐந்து
நெருப்பு மிக வேகமாக பரவி கொண்டு இருந்தது! ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாமல் நின்ற அர்ஜுனும் கௌதமும் அடுத்த நிமிடம் பறந்து இருந்தனர்!
“அர்ஜுன் நீ போய் எல்லோரையும் எழுப்பு… நான் எமெர்ஜென்சி செயின் இழுத்துட்டு வந்துடறேன்!” என்று கத்தி கொண்டே கௌதம் ஓட
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அர்ஜுன் ஒவ்வொரு பகுதிக்கும் ஓடி அனைவரையும் எழுப்பினான்! அலறி அடித்து கொண்டு எழுந்தவர்கள் மிக வேகமாக தங்கள் உடைமைகளை எடுக்கவும் மறந்து கதவு பக்கம் ஓடினர்! சில நிமிடங்களில் அங்கே பரபரப்பு தொற்றி கொண்டது!
பெட்டியில் இருந்து எட்டி பார்த்த கௌதம் தீ ஜ்வாலைகள் சமீபத்து விட்டதை உணர்ந்தான்! அப்போது ரயில் கொஞ்சம் வேகம் குறைவாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்தவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை!
பெட்டிக்குள் எல்லோரையும் அவசரமாக எழுப்பி விட்ட அர்ஜுன், தன் பேக்பாக்கை எடுத்து கொண்டு அவசரமாக மேகாவையும் அஞ்சலியையும் எழுப்பினான்! மேகா சட்டென எழுந்தவள் பேந்த பேந்த விழித்தாள்!
“ஏய் அஞ்சலி… அஞ்சலி… சீக்கிரம் எழுந்திரு…”
நிதானமாக எழுந்தவள்
“என்ன அர்ஜுன்? தூக்கம் வருது… சீக்கிரம் சொல்லுங்க… தூங்கணும்!”
“ஏய் லூசு… எழுந்திரு… இல்லைன்னா நிரந்தரமா தூங்க வேண்டியது தான்… ட்ரெயின்ல தீ பிடிச்சுருச்சு…”
“என்ன டீ குடிக்கணுமா? போங்க… நீங்க போய் குடிங்க…” என்று கூறி விட்டு மறுபடியும் படுக்க போனவள் அர்ஜுனிடம் இருந்து பலமாக ஒரு அரை வாங்கி கொண்டு எழுத்து உடகார்ந்தாள்!
தீ பிடித்து விட்டது என்பதை கேட்டவுடன் விறைத்த மேகா அவசரமாக சசிதரனை துழாவினாள்!
“சசி… சசி…” என்று பெருங்குரலில் கத்த அவள் கத்துவதை கேட்ட அஞ்சலி… அதிர்ச்சியுடன் அர்ஜுனை பார்த்தவளுக்கு அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது!
“அர்ஜுன்ன்ன்…” என்றாள் அஞ்சலி அதிர்ச்சியுடன் அவனை பார்த்து! மேகாவோ சசியை தேடுவதில் முனைப்பாக இருந்தாள்!
“இப்போ பேசிட்டு இருக்க நேரமில்ல மேகா… ப்ளீஸ்… புரிஞ்சுகோங்க… முக்கியமான எதாச்சும் இருந்தா எடுத்துட்டு வாங்க மேகா!” அர்ஜுன் அவசரபடுத்த
“நோ… நான் மாட்டேன்… சசிய காணோம்… அவர் இங்க தான் இருப்பார்… நான் அந்த சைட்ல பார்க்குறேன்… நீங்க அஞ்சலிய கூட்டிட்டு போங்க…” கண்களில் ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது!
“மேகா அவர் எப்படியும் வந்துடுவார்… நீங்க சொன்னா கேளுங்க… முதல்ல நீங்க வாங்க…” என்று அஞ்சலி கையை இழுக்க
“இல்லை… முடியாது… சசி இல்லாம நான் வர மாட்டேன்… சசி! என்று கதற ஆரம்பித்தாள்! அவள் கண்களில் தெரிந்த பயமும் தேடுதல் வேட்டையும் அர்ஜுனை நகர விடாமல் செய்ய அவசரமாக வந்த கௌதம்.
“இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அர்ஜுன்… நம்ம கம்பார்ட்மென்ட் வரைக்கும் பரவிடுச்சு… இந்த பக்கம் போக முடியாது… அந்த பக்கம் ஒடுங்க…”
என்று பரபரக்க, வெப்பம் அவர்கள் இருந்த இடம் வரை உணரப்பட்டது!
அர்ஜுன்” கௌதம்… அந்த பக்கம் சசி போனாரா… சசி இல்லாம மேகா வர மாட்டேங்கறாங்க?”
“இல்லையே… நான் பார்க்கல… இதெல்லாம் பேசற நேரமா இது? இருந்தவங்களை எல்லாம் ட்ரெயின்ல இருந்து குதிக்க சொல்லிட்டு வரேன்… ட்ரெயின் ஸ்லோ ஆகிடுச்சு… அர்ஜுன் நீ அஞ்சுவையும் மேகாவையும் கூட்டிட்டு போய்டு… நான் கடைசியா ஒரு தடவை சசியை தேடிட்டு வரேன்…”
“அண்ணா… ரிஸ்க் வேணாம்னா… நீயும் வா…” என்று அஞ்சலி பயத்தில் உலர்ந்த தன் நாவை கொண்டு தந்தியடிக்க.
“இல்லடா கண்ணா… பாவம் மேகா… நீங்க மூணு பேரும் போங்க… நான் வந்துடறேன்… சீக்கிரம்… ஐயோ தீ பக்கத்துல வருது…” காற்று இன்னும் வேகமாக தீயை பரவ வைத்தது!
“இல்ல… நானும் உங்க கூடவே வரேன்… சசியை கூட்டிட்டு போலாம்…” என்று அழுது கொண்டே மேகா சொல்ல.
அவளை ஒரு நொடி கூர்ந்து நோக்கியவன் அந்த நேரத்திலும்
“இப்படிப்பட்ட பெண் கிடைக்க அந்த சசி என்ன புண்ணியம் செய்தானோ” என்று எண்ணினான்!
“ஏம்மா… சசி என்ன சின்ன குழந்தையா? கண்டிப்பா இறங்கி இருப்பார்ம்மா!” கொஞ்சம் கடுப்படித்தவாறே பெட்டியை துழாவினான்! நேரம் காலம் தெரியாமல் இந்த பெண் நடந்து கொள்கிறாளே என்றும் இருந்தது! ஆனாலும் அவளை தனியாக விட்டு விட்டு போக மனமும் இல்லை கௌதமுக்கு! அவனுக்கு பதில் கூறாமல் அழுது கொண்டே
“சசி… சசி… என்று நாலா பக்கமும் பார்த்து வாயை கையால் மூடி கொண்டு அரற்றி கொண்டிருந்தாள் மேகா! அவள் கண்களில் அதீத பயம் தெரிய கௌதமுக்கோ அவளை அணைத்து அழதே கண்மணி என்று கூறி தேற்ற தோன்றியது!
***
மிக மெதுவாக ஓடி கொண்டு இருந்த ரயிலில் இருந்து அனைவரும் ஒவ்வொருவராக குதித்து கொண்டு இருக்க, அஞ்சலியை இழுத்து கொண்டு போன அர்ஜுன் முதலில் தான் அந்த படிக்கட்டில் இறங்கி கொண்டு அஞ்சலியை இறுக்கமாக பிடித்து கொண்டான்! காற்று மிக வேகமாக முகத்தில் அறைந்தது… பரவி வந்த தீ தங்கள் பெட்டியின் ஆரம்ப இடங்களை விழுங்கி கொண்டிருப்பது தெரிந்தது… வெப்பம் மிக வேகமாக தாக்கியது!
“அஞ்சலி… நல்லா இறுக்கமா கட்டிக்கோ… இப்போ குதிக்க போறேன்…”
அஞ்சலி அவனை இன்னும் இறுக்கிகொண்டு அவன் முதுகோடு வளைத்து பிடித்து கொண்டாள்! அர்ஜுன் குதிக்கவும் அவனோடு சேர்ந்து கீழே விழுந்தாள்! உலகம் தட்டாமாலை சுற்றியது அஞ்சலிக்கு!
விழுந்தவன் கையை தட்டி கொண்டு எழுந்து… பக்கத்தில் கிடந்த அஞ்சலியை எழுப்ப முயல… அவளோ முடியாமல் முனகினாள்! அப்போதுதான் கவனித்தான் அவள் தலை கல்லில் பட்டு ரத்தம் வருவதை! அந்த பெட்டியில் இருந்த அனைவரும் குதித்தும் இன்னும் கௌதம் குதிக்காமல் இருந்ததை பார்த்தவன் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்! இங்கே அஞ்சலி விழுந்ததில் அடிபட்டு முனக.
“அஞ்சலி… ஏய் அஞ்சலி… எழுந்திரு… உனக்கு என்ன பண்ணுது அஞ்சலி?”
“ஒன்னும் பண்ணல… தலை தான் கொஞ்சம் சுத்துது!”
அவர்கள் இருந்த பெட்டி கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டு செல்ல… தூரத்தில் தெரிந்தது ரயில்! பக்கத்தில் குதித்த இருந்தவருக்கும் காயம் பட்டிருக்க… முனகி கொண்டே
“ஹய்யோ… அம்மா…” என்று ஹீனமாக புலம்பினார்கள்!
எழுந்து நின்றவன் அஞ்சுவை எழுப்ப கை குடுத்தான்… ஆனால் அஞ்சலியால் எழ முடியாமல் தலை சுற்றி உட்கார்ந்தாள்!
“ஹேய் அஞ்சு! என்னாச்சு? தலையை ரொம்பவும் சுத்துதா?” தலையை பிடித்து கொண்டு இருந்தவளை பார்த்து கேட்க
“ம்ம்ம்…”
அவள் மிக மெதுவாக தலையை ஆட்டியபடி கூறவும் கை குடுத்து எழுப்பியவன்
“நிற்க முடியுதா அஞ்சு?” என்று கேட்டான்
“மேனேஜ் பண்ணிக்கறேன்…” என்று சொல்லி கொண்டே கீழே விழ போனாள்! விழ போனவளை இடையோடு சேர்ந்து அணைத்து கொண்டு அவள் கையை தன் கழுத்தோடு சேர்த்து கொண்டான்! சங்கோஜமாக விலக போனவளை இழுத்து அணைத்து கொண்டு
“ஏய் லூசு! ஒழுங்கா என்னை பிடிச்சுக்கோ!” என்று கூறி நடத்தி கொண்டு போய் மேடான பகுதியில் உட்கார வைத்தான்! எங்கும் இருள் பரவி இருந்தது! கொஞ்சம் தூரம் தள்ளி குதித்து இருந்தவர்கள் கொஞ்சமாக எழுந்து நடக்க தொடங்கி இருந்தார்கள்! அந்த கம்பார்ட்மென்டில் இருந்து குதித்தவர்கள் ஒரு இருபது பேர் சிறிது தூரத்தில் முயன்று நடந்து வந்து கொண்டிருந்தார்கள்!
தனது செல்பேசியை எடுத்து ஆராய்ந்தவன்,
“குண்டக்கல் ஜங்ஷனுக்கு இன்னும் ரெண்டு கிலோமீட்டர் இருக்கு… இப்போ இந்த இடத்து பேரு கூட்டி ரோடு அஞ்சலி! திம்மனசேர்லா தாண்டி இருக்கோம்! இன்னும் கொஞ்சம் போய் லெப்ட்ல போனா மார்கண்டேயர் கோயில் ஒன்னு இருக்கு அங்க போனா ஆட்டோ கிடைக்கும்னு நினைக்கிறேன்! கொஞ்சம் நடந்து வர முடியுமாம்மா?”
வியந்து போய் அர்ஜுனை பார்த்தவள்
“எப்படி அர்ஜுன் இப்படி? முதல்லயே குண்டக்கல் வந்து இருக்கீங்களா? இவ்ளோ விஷயம் சொல்றீங்க? ’
“ம்ம்ம்… ஜிபிஆர்எஸ் எதுக்கு இருக்கு? அத வெச்சு பார்க்க வேண்டியதுதான்! நீ இங்க தனியா உக்கார்ந்துட்டு இருக்கனுமேன்னு பார்க்கறேன் இல்லைன்னா நானே போய் ஆட்டோ கூட்டிட்டு வந்துடுவேன்… உன்னால நடக்க முடியுதான்னு பாரு?”
விந்தி விந்தி ஒருவாறு நடந்தவளுக்கு அவ்வப்போது கை குடுத்து அழைத்து சென்றவன் கௌதமை அழைக்க செல்பேசியை எடுத்தான்!
***
“மேகா சொன்னா கேளுங்க… சசி எப்படியும் இங்க இல்ல… தயவு செஞ்சு வாங்க…” நிற்க துவங்கி இருந்த ரயிலில், நெருப்பு அந்த பெட்டியை கபளீகரம் செய்து கொண்டிருக்க, மேகா கௌதம் சொல்வதை கேட்காமல் கதறி கொண்டிருந்தாள்!
“சசி இல்லாம வர மாட்டேங்க! நீங்க இறங்குங்க!” பிடிவாதமாக கூறினாள் மேகா!
“என்ன மேகா உலறுறீங்க? இவ்ளோ நேரம் பார்த்துட்டோம்! அவர் இங்க இல்லைன்னா கண்டிப்பா முதல்லயே இறங்கி இருக்கணும்! இல்லைன்னா வேற இடத்தில பத்தரமா இருப்பார் மேகா! அவர் போனுக்கு ட்ரை பண்ணி பார்க்கலாம் இறங்குங்க…”
அழுது கொண்டே ரயிலில் இருந்து இறங்கினாள். அவசரமாக மேகாவை இறக்கி விட்டவன் தானும் இறங்கினான். பக்கத்து பெட்டிகளில் இருந்து இறங்கி சூழ்ந்து கொண்டனர் மக்கள். எவ்வளவு பெரிய விபத்து பாதியில் தடுக்கப்பட்டு உள்ளது! அதை நினைக்கும் போது கௌதம் நெஞ்சில் குளிர் பரவியது! இவை அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடந்து இருந்தன!
அவசர உதவி குழுவும் ரயில்வே போலீசும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட மேகாவோ அந்த கூட்டத்தில் சசியின் முகத்தை தேடி அலைந்தாள். அவளது ஆற்றாமையும் கண்ணீரும் கௌதமை மிகவும் பாதிக்க அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு பெட்டியாக தேடினான்!
“சசி நம்பர் குடுங்க மேகா… போன் பண்ணி பாக்கலாம்…”
மேகா அவனது நம்பரை கூற அதை செல்பேசியில் ஒற்றியவன்… தன் காதுக்கு குடுத்தான்! ஒரு முறை முழுவதுமாக ரிங் போய் கால் முடிய பதட்டமாக இன்னொரு முறை அழுத்தினான்! மூன்று ரிங் போகவும் போனை எடுத்த சசி மிகவும் சாவதானமாக
“ஹலோ… யாருங்க?” என்று கேட்டான்! கூடவே ஒரு பெண் குரல்
“யார் சசி! இந்த நேரத்துல?” என்று ஒரு மாதிரியான குரலில் ஹஸ்கியாக கேட்பது கௌதமுக்கு கேட்டது! அந்த குரலை கேட்கும் போதே கௌதம் முகம் மாறியது! பதில் பேசாமல்
“பேசுங்க மேகா…” என்று மேகாவிடம் போனை குடுத்தான்! பதட்டமாக செல்பேசியை வாங்கியவள்
“எங்க சசி இருக்கீங்க?” என்று பதட்டமாக மேகா கேட்டாள்!
“ஹேய் மேகா… நீயா? என்னடா தூக்கம் வரலியா? என்னப்பா? ’ என்று கேட்க
“மண்ணாங்கட்டி… எங்க போயிட்டீங்க? எப்போ இறங்குனீங்க? அத சொல்லுங்க சசி!” என்று மிகவும் கோபமாக கேட்டாள்!
“தூக்கம் வரல… என் பிரெண்ட் பர்ஸ்ட் கிளாஸ் கூபேல வர்றது தெரிஞ்சுது… அதான் திம்மனசெர்லா கிராசிங்ல இறங்கிட்டேன் மேகா! இப்போ கூபேல தான் இருக்கேன்! ஏன் கேக்குற?”
“சொல்லிட்டு போக மாட்டீங்களா சசி? இவ்ளோ கூலா சொல்றீங்க? இங்க நடந்தது ஒண்ணுமே தெரியலியா?” என்று அவனிடம் படபடத்தாள்!
“என்னடா ஆச்சு? மாமன காணோம்னு போலிஸ் கம்ப்ளைன்ட் குடுத்துட்டியா?” என்று கேலியாக கேட்க
“போதும் சசி… உங்க விளையாட்டும் நீங்களும்… ட்ரெயின்ல தீ பிடிச்சுருச்சு! அது தெரியாம பிரெண்ட் கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? நான் உங்களை காணோம்ன்னு தவிச்சு போயிட்டேன் சசி!” என்று அழுதவள் பின்னால் இருந்த முதல் வகுப்பு கூபே நோக்கி ஓடினாள்!
“வாட்… தீ பிடிச்சுருச்சா? நீ போனை வை… நான் வரேன்…!” என்று கூறி விட்டு அவசரமாக எழுந்து வெளியே வந்தான்!
அவனை பார்க்க ஓடி வந்த மேகா அனைத்தையும் மறந்தாள்… அக்கம் பக்கம் மறந்தாள்… உடன் வந்த கௌதமையும் மறந்தாள்… ஓடி வந்தவள் சசியின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்! உடல் நடுங்கியது… வார்த்தைகள் தந்தியடித்தன!
“ஏன் சசி… என்கிட்டே சொல்லாம வந்தீங்க? நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? நம்ம கம்பார்ட்மென்டுக்கு பக்கத்துல தான் தீ பிடிச்சுருச்சு! தெரியுமா? உங்களையும் வேற காணோம்னு நான் பதறி போயிட்டேன்… உயிரே போய்டுச்சு சசி…” என்று மூச்சு விடாமல் கதறி தீர்த்தவளை பார்த்து சசி வியந்தானோ இல்லையோ கௌதம்,
“இந்த பொண்ணுக்கு இவ்வளவு பேச தெரியுமா?” என்று நினைத்தான்!
“ஹேய் ஈஸி பேபி… ஈஸி… சாரிடா நீ அசந்து தூங்கிகிட்டு இருந்த… அதான் நான் உன்கிட்ட சொல்லல… சரி பேசிட்டு வந்துரலாம்னு நினச்சேன்! ஆனா இப்படி ஆகும்னு நினைக்கில… சாரிமா!” என்று முதுகை தடவி கொடுத்தவாறே கண்களால் சைகை செய்தான்! அவன் கண்போன பக்கம் இருந்தது,
மிக அழகான இளம்பெண்! அவனது கண்ணசைவை புரிந்து கொண்டவள் தலையை ஆட்டிவிட்டு அந்த இடத்தில் இருந்து அகன்றாள்!
சட்டென்று இதை பார்த்து விட்ட கௌதம் ஒரு நொடியில் அனைத்தையும் புரிந்து கொண்டான்! இது மாதிரி ஆட்களுடன் தினம் பழகுபவன் ஆயிற்றே ஆனால் அவனுடையது வெறும் பழக்கம் மட்டும் தான் ஆனால் இது அப்படி தெரியவில்லையே!
செல்பேசி அழைத்தது! அர்ஜுன்! எடுத்தவன்,
“சேப் டா இங்க… நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க அர்ஜுன்?” என்று கேட்டான்!
ராமாயணத்தில் சீதையை பார்க்க போன ஹனுமான் ராமனுக்கு செய்தி கொண்டு வந்து வந்தாராம்! வந்தவர் ராமன் மனம் அலைப்புற கூடாதென்று” கண்டேன் சீதையை!” என்று கூறினாராம்! சீதையை கண்டேன் என்று கூறினால் கண்டேன் என்று கூறும் வரை தன் தலைவனின் மனம் அலைப்புறும் அல்லவா! அதனால் அந்த தெய்வதிருமகன் முதலில் கண்டேன் என்று கூறியதாக கம்பர் அழகாக வர்ணித்து இருப்பார்! அவர் இன்று இருந்திருந்தால் இவ்விருவருக்கும் அங்ஙனமே ஒரு வாழ்த்துப்பா பாடி இருப்பாரோ!
“நான் ஒழுங்கா குதிச்சிடேன் கௌதம் ஆனா உன் தங்கச்சி தான் அவளோட வானர தனத்த இங்கயும் காட்டி கொஞ்சம் அடிய வாங்கிகிட்டா!” என்று சிரித்து கொண்டே சொல்ல
“அச்சச்சோ செல்லத்துக்கு அடி பலமாடா? ஏன்டா உன்னை நம்பி அனுப்புனா இப்படி தான் இருப்பியா?” என்று அர்ஜுனை கடிக்க
“சொல்லுவடா சொல்லுவ! ஒரு அரிசி மூட்டைய முதுகுல கட்டிட்டு நான் குதிச்சு இருந்தா கூட எனக்கு அவ்ளோ வலிச்சு இருக்காது! உன் தங்கச்சிய மெனக்கெட்டு முதுகுல சுமந்துகிட்டு குதிச்ச தியாகிடா நான்! ஆனா அந்த லூசு எப்படி போய் தனியா விழுந்துச்சுன்னே தெரியல! எனக்கு இருக்கற முதுகு வலிக்கு நான் ஒத்தமாந்துறை தான் போகணும் போல! என்னை போய் இப்படி நீ சொல்றியா?” என்று சிரித்து கொண்டே கூற
“வேணாம் அர்ஜுன்… இங்க சித்தூர் பக்கத்துல தான் இருக்கு…” என்று அஞ்சலி கூறுவது கேட்டு கௌதம் சிரித்தான்!
“அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னை பார்த்தா எப்பிடி இருக்குன்னே தெரியல ஆண்டவா” என்று அர்ஜுன் புலம்ப
“சரி சரி எங்க இருக்கீங்க இப்போ?” என்று கௌதம் கேட்க
“இப்போ கூட்டி ரோடுல ஆட்டோல போயிட்டு இருக்கோம் மச்சான்! உன் தங்கச்சிக்கு ஹாஸ்பிட்டல்ல பார்க்க… நீ எங்க இருக்க கௌதம்?”
“ஜங்ஷனுக்கு முன்னாடியே ட்ரெயின நிறுத்திட்டாங்கப்பா… சரி ஹாஸ்பிடலுக்கு போனவுடனே சொல்லுடா… நான் எப்படியாவது ஆட்டோ பிடிக்க பார்க்குறேன்!”
“சரி சொல்றேன்… அந்த சசி இருக்கானாடா?”
“ம்ம்ம்… வந்து சொல்றேன் அர்ஜுன்! ’
என்று கூறி விட்டு செல்பேசியை வைத்து விட்டு இருவரையும் பார்த்தான்! இருவரும் உலகத்தை மறந்து பேசி கொண்டு இருந்தனர்! இது வரைக்கும் வெறுப்போ விருப்போ இல்லாமல் சசியை பார்த்து கொண்டிருந்தவன் இப்போது சந்தேக கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தான்! யார் அந்த பெண்? இவனுக்கும் அவளுக்கும் என்ன உறவு? இந்த நேரத்தில் மேகாவை விட்டுவிட்டு வருமளவு என்ன காரணம்? காதல் கண் கொண்டு பார்க்கும் மேகாவுக்கு வேண்டுமானால் இவையெல்லாம் ஒன்றுமில்லாதவையாக இருக்கும் ஆனால் தனக்கு?
நன்றியோடு கௌதமை பார்த்தாள் மேகா!
“ரொம்ப தேங்க்ஸ் கௌதம் சார்… நீங்க இல்லைன்னா ரொம்ப தவிச்சு போயிருப்பேன்…”
“அதெல்லாம் பரவால்லை மேகா… நீங்க எப்பிடி போவீங்க… ட்ரெயின் கிளம்ப ரொம்ப நேரம் ஆகும் போல தெரியுது…” பொதுவாக இருவரையும் பார்த்து கேட்டான்!
“பரவால்லை சார்… இதிலேயே வெயிட் பண்ணி தான் போகணும்… எப்படியும் அரேஞ்ச் பண்ணுவாங்க இல்லையா…” சசி தான் பதில் கூறியது!
“ஐயோ கௌதம் சார்… இந்த குழப்பத்துல அஞ்சலிய மறந்துட்டேன்… அவங்க ரெண்டு பேரும் சேப்பா?” அப்போதுதான் அவர்கள் இருவரை பற்றிய நினைவு வந்து பதறினாள்!
“தே ஆர் சேப் மேகா… கொஞ்சம் அடிபட்டு இருக்காம்… அதான் ஹாஸ்பிடல் போயிருக்காங்க…”
“அச்சோ… பெரிய அடியா சார்… கடவுளே…” மேகா அதிர்ந்து கேட்க அதை கூர்மையாக கவனித்து கொண்டே இருந்தான் சசி!
“இல்ல மேகா… ஏதோ சின்ன அடிதான் போல இருக்கு… அதான் அவசரமா போறேன்… இல்லைன்னா கூட உங்களை ட்ரெயின் ஏற்றி விட்டுட்டு தான் போவேன்…” என்று உணர்ந்து கூற அதை மறித்த சசி.
“ரொம்ப நன்றி கௌதம்… அப்போ நீங்க கிளம்புங்க… வெள்ளிகிழமை ரெஜிஸ்டர் மேரேஜ் வெச்சுக்கலாம்ன்னு நினைக்கிறோம்… நீங்க கண்டிப்பா வரணும்…” என்று கூறி கை கொடுக்க… கௌதம் இதயத்தில் ஓர் யுத்தமே நடந்தது!
மாற்றான் காதலி!
எவ்வளவு முயன்றாலும் இதை மறக்க முடியவில்லையே… கடவுளே என்ன செய்வேன்?
சக்தி கொடு!
“ஓகே சசி… மேகா… ஏதுவா இருந்தாலும் எங்களுக்கு ஒரு போன் பண்ணுங்க… நாங்க இருக்கோம்… ஓகே வா!” என்று கூறி விட்டு விடை பெற்றான்… மனதிலே ஆற்ற முடியாத வலி!





