arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் நாற்பத்து நான்கு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 44 / 64

அத்தியாயம் நாற்பத்து நான்கு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மஹா வெளியேறிய போது அவனை ஆழமாக, இல்லை இறுக்கமாக, அதுவும் இல்லை, வெறித்து பார்த்தாளா? அதுவும் இல்லை… ஆனால் அந்த பார்வையில் இருந்த ஏதோவொன்று அவனை கொன்றது. அது என்ன வகையான பார்வை என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. அவளது கண்களை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் என்ன உணர்வில் வெளியேறினாள் என்பதை சத்தியமாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஏன் வெளியேற வேண்டும்? அப்போது வரைக்குமே தன்னுடையவன் என்பதில் அத்தனை அழுத்தமாக இருந்தவள் ஏன் வெளியேற வேண்டும்? அதையும் சௌஜன்யாவின் முகத்துக்கு நேராகவே கூற வேண்டியதுதானே? தன்னவன் இவன் என்று!

மகாவையே பார்த்துக் கொண்டிருந்தவன், திரும்பி சௌஜன்யாவை பார்த்தான். ஒருவகையான விடுதலைப் பார்வை பார்த்தபடி பெருமூச்சு விட்டாள். மஹா வெளியேறியதாலா?

ஷ்யாமின் மனம் திடுக்கிட்டது!

சௌஜன்யா எப்போதுமே தன்னை காதலிப்பதாக கூறியதில்லை. கொஞ்சமான ஈர்ப்பு மட்டுமே. அதிலும் கடந்த காலத்திலும் கூட தான் அவளுக்கு இடம் கொடுத்ததில்லை. ஆனால் இப்போது ஆத்மார்த்தமான காதலியை போல பேசுவதும் நடந்து கொள்வதும் எதற்கு?

அவள் செய்வது அதிகபட்சமாக தோன்றியது. இருக்கலாம்… காதலித்து இருக்கலாம்… ஆனால் தான் அதற்கு எப்போதுமே ஒப்புதல் கொடுத்ததில்லையே. பின் எந்த தைரியத்தில் மகாவிடம் இவள் சவால் விட்டாள்? இப்போது எந்த தைரியத்தில் குட் பை ஹக் கேட்கிறாள். அதையும் கேட்டுக் கொண்டு இந்த அரைவேக்காடு அறையை விட்டு வெளியேறுகிறது என்றால் இவர்கள் எல்லாம் என்ன தன்னை உருட்டி விளையாடும் பொம்மை என்று நினைத்து விட்டார்களா?

கோபத்தில் பல்லைக் கடித்தபடி அருவருப்பாக சௌஜன்யாவை பார்க்க, அவளது கண்கள் தாழ்ந்தது. உண்மை இல்லை அந்த கண்களில்.

“என்ன விளையாடுறியா? என்னை பத்தி தெரிஞ்சுகிட்டே இந்தளவு போறன்னா பேக் அப் இல்லாம இருக்காது…” என்று கூர்மையாக அவளை பார்த்தபடி கூறியவன், இடைவெளி விட்டு, “தொலைச்சுடுவேன்… நாளைக்கு நீ இல்லாத மாதிரி பண்ணிடுவேன்… ஜாக்கிரதை…” என்று படு இறுக்கமாக கூறியவனை படபடத்துப் போய் பார்த்தாள் சௌஜன்யா.

“இல்… இல்ல… ஷ்… ஷ்யாம்… சர்…” என்று திக்க, அவளது தடுமாற்றத்தையும், விஜியின் வார்த்தைகளையும் வேகமாக கணக்கிட்டான், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றது அவனது அறிவு!

“யாரை நம்பி இப்படி இறங்கினயோ அவனையே நான் காலி பண்ண நேரமாகாது… இன்னொரு தடவை நான் சொல்லிட்டு இருக்க மாட்டேன்…” என்றவன், அதே கோபத்தோடு சடாரென வெளியேற, படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தவளுக்கு பகீரென்றது!

கண்டுகொண்டானே என்று சற்று பயமாக இருந்தது. நடந்த விஷயத்தில் ஒரே ஒரு உண்மை என்னவென்றால், இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள் என்ற விஜியின் போதனை ஒன்று தான்.

“இல்…” என்பதற்குள்ளாக வெளியேறி இருந்தான்.

கொதித்துக்கொண்டிருந்தது அவனுக்கு.

சௌஜன்யா இருந்த அறையிலிருந்து வெளியேறியவன், அவசரமாக சிகரெட்டை துளாவினான். டென்ஷன் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. விஜியின் கைகள் இன்னும் எங்கெல்லாம் நீண்டு இருக்கக் கூடும் என்ற கோபம். தன்னிடம் வேலை செய்தவன் முதுகில் குத்திவிட்ட கோபம், எவளோ ஒருத்தியின் தற்கொலை முயற்சியை உண்மையென்று நம்பி வந்த கோபம். அவளையும் நம்பி தன்னை அவளிடம் விட்டு சென்ற மஹாவின் மேல் கோபம்.

சிகரெட் பாக்கெட்டை காரிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வந்தது.

ச்சே… எரிச்சலாக சுவற்றை குத்தினான்.

மகாவை பார்த்தான்… அமைதியாக தலையை இரு கையால் தாங்கியபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவளை பார்த்தான். அவளது மனம் படும் பாட்டை அவன் அறிந்து இருந்தான்.

அருகில் சென்றான். அவனது கால்களை பார்த்தும் அவள் நிமிரவில்லை. தலையை தாங்கியபடியே குனிந்து இருந்தாள்.

கண்களை மூடியபடி தன்னை தானே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பார்த்து, மூச்சை இழுத்து விட்டான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டான்.

அவளை நிர்கதியான பார்வை பார்த்தவன், அருகிலிருந்த சுவரை வெறும் கையால் குத்தினான். அத்தனை கோபம்… கொதித்தது அவனுக்கு! அவனது அந்த வேகத்துக்கு, கை எதுவும் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று பதறியது அவளுக்கு!

“ஷ்யாம்…” அடிபட்டு விட்டதோ என்று பயந்தபடி அவனது கையை பிடிக்க வர, கைகாட்டி அவளை நிறுத்தினான்.

“வேண்டாம்…”

“ஏன் வேண்டாம்?” அவனை வெறித்தவள், கேள்வி கேட்க,

“வேண்டாம்னா வேண்டாம்…” என்றவன், “இப்ப எதுக்காக நீ வெளிய வந்த?” என்று கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கண்கள் கலங்கியது.

“அவ ஹக் பண்ண கேக்கும் போது நான் எப்படி இருக்கறது? எனக்கு அவ்வளவு பரந்த மனசு இல்லடா…” என்று வெடித்தவள், “அதையும் வேற நான் இருந்து பாக்கணுமா?” என்று கடுகடுப்பான குரலில் கண்களில் நீர் சூழ கேட்க,

கோபத்தில் கண்களை இறுக்கமாக மூடித் திறந்தான். வார்த்தைகளால் கசை வீசிக்கொண்டிருக்கிறாள். அத்தனையும் தாங்கித் தானாக வேண்டும் என்று மூளை சொல்கின்றது ஆனால் மனமோ அவளது வார்த்தைகளின் வேகத்தை தாங்கவியலாமல் அடிபட்டு தவித்தது.

மெளனமாக முன்னே சென்றவனை பின்தொடர்ந்தாள். அவளால் வெடிக்காமல் இருக்க முடியவில்லை. இப்போது வெடிக்காமல் விட்டால் வேறொரு சமயத்தில் மொத்தமாக வெடித்துவிடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவே!

யாரையும் பார்க்காமல் காரில் ஏறி அமர்ந்தவன் கதவை அறைந்து சாத்தினான்.

எதுவும் பேசாமல் அவளும் அமர்ந்தாள். அத்தனை கோபத்தை அவள் கண்டதில்லை. ஷ்யாமின் கோபம் அவளுக்குள் பயத்தையும் பதட்டத்தையும் விதைத்தது. அந்த கோபத்துக்கு தூபம் போட்டதே தான் தான் என்பதை வசதியாக மறந்து போனாள் மஹா.

ட்ராபிக்கில் காரை பறக்க விட்டான்!

எப்போதும் அவனது கோபத்திலும் ஒரு வித தாளம் தப்பாத நிதானமிருக்கும். எடுத்து வைக்கும் அடியைக் கூட அளந்து வைத்துத்தான் பார்த்திருக்கிறாள்.

ஆனால் இன்று, இது முற்றிலும் நிதானம் தவறிய ஆக்ரோஷம்.

அவனை சொல்லியும் குற்றமில்லை.

முதுகில் குத்தப்பட்ட வலி, அதோடு தானும் காயப்படுத்திக் கொண்டிருக்கும் வலி!

அந்த தீவிரம் இருக்கும் தான். ஆனால் இத்தனை கோபம்…!!அவன் ஓட்டிய ஓட்டலை பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.

பேய் வேகம்… சாலைகளில் ட்ராபிக்கில் காத்திருந்த போது காட்டிய உச்சபட்ச எரிச்சல்… வாகனங்களை மோதிவிடுவது போன்று அவன் காட்டிய வன்மை… அத்தனையும் அவளுக்கு புதிது தான்.

அதிர்ந்து போனாலும் கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்தாள்.

“அவன் கிடைச்சுட்டானா சந்த்ரா?” வந்த அழைப்பை அட்டென்ட் செய்தவன், நேரடியாக கேட்க,

“இன்னும் இல்ல பாஸ்…” என்று அவன் சற்று சுனங்கியதை ப்ளூடூத்தின் வழியாக இவளும் கேட்டாள்.

“இல்லைன்னு சொல்லவா கால் பண்ண?” சீற்றமாக இவன் கேட்க,

“விஜியோட லைனை இன்னும் டேப் பண்ண முடியல பாஸ்… அவரோட போனை ஆப் பண்ணி வெச்சு இருக்கார்…”

“வேற எந்த மெத்தட்சும் யூஸ் பண்ண முடியலையா?”

“இல்ல பாஸ்…” என்றவனின் குரலில் சுருதி குறைந்து இருந்தது.

“ஓகே… உன்னோட ஆளுங்க எத்தனை பேரை வேண்ணா அனுப்பிக்க… என்ன வேண்ணா பண்ணிக்க… ஆனா அவன் கிட்ட இருக்க ப்ரூப் அன்ட் டாக்குமெண்ட்ஸ் அத்தனையும் என் கைக்கு வந்தாகனும்…” என்று கடுமையான குரலில் கூற, மறுப்பக்கத்தில் அதனை கேட்டுக் கொண்டிருந்த சிவச்சந்திரன் உண்மையில் பீதியடைந்தான்.

ஷ்யாமின் இந்த கோபம் சந்த்ராவுக்கே புதிது.

அவனுடைய பாஸ் எப்போதுமே நிதானம் தவறியதில்லை.

கோபம் இருந்தாலும் அதை பெரிதாக காட்டிக் கொண்டதில்லை. அத்தனை கோபத்தையும் இவர்களிடம் விட்டுட்டு அவன் ரிலாக்ஸ்டாக அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவனது வேலையாக இருக்கும்.

அவனது கோபத்தின் அளவை அவனை சார்ந்தவர்கள் அனைவருமே நன்கு புரிந்து வைத்திருந்தனர். அந்த அளவை அவனும் கோடிட்டு காட்டியும் விடுவான். விஷ்ணுவிடம் ஒரு காரியத்தை ஒப்புவித்தால் அவர்களுக்கு அடி நிச்சயம், இளங்கவி என்றால் சற்று மென்மையாக கையாள வேண்டியவர்கள், சிவச்சந்திரன் என்றால் கண்டிப்பாக கடுமையோ கடுமைதான். சிவச்சந்திரன் ஷ்யாமின் கீழ் வேலை பார்ப்பவன் இல்லை. அவனது தொழில் தனியார் துப்பறியும் நிறுவனம் தான். ஆனால் முற்றிலுமாக வேலை பார்ப்பதென்னவோ ஷ்யாமுக்காக மட்டும் தான்.

வேலையை கூறிவிட்டு, பவுன்சர்களையும் உடன் அனுப்பி வைப்பான்.

யாரை வெளுக்க வேண்டுமோ, வெளுத்து வாங்கி விடுவார்கள்.

அது போன்ற வேலைகளுக்கு விஷ்ணுவையோ, இளங்கவியையோ உபயோகிக்க மாட்டான்.

முன்னர் என்றால் இவை அத்தனையும் விஜியின் மேற்பார்வையில் இருந்தது. ஆனால் எப்போது விஜி ஒதுக்கப்பட ஆரம்பித்தானோ, அப்போதிருந்தே ஷ்யாமின் நேரடி கண்காணிப்பில் வந்துவிட்டது இவர்களின் செயல்பாடுகள்!

அப்படியிருக்கும் போது ‘என்ன வேண்ணா பண்ணிக்க’ என்ற அவனது வார்த்தை சிவச்சந்திரனுக்கே சற்று பதற்றத்தை உண்டு செய்து விட்டது.

“பாஸ்… இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள, அவர் எங்கன்னு ட்ராக் பண்ணிடறேன்… ரொம்ப டென்ஷனாகாதீங்க…” எனவும்,

“ஓகே சந்திரா…” என்று பேசியை அணைத்தான்.

ஏன் இத்தனை கோபம். சற்று நிதானமாக செயல்பட கூடாதா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்தவன், கிட்டத்தட்ட ஒரு இரு சக்கர வாகனத்தை தூக்கியிருப்பான்.

கடைசி நிமிடத்தில் ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பினான் ஷ்யாம்.

“பார்த்து ஓட்டு ஷ்யாம்…” என்று கூறிக்கொண்டே அவனது முகத்தைப் பார்க்க, அவன் இன்னமும் சாதாரண நிலைக்கு வரவில்லை.

முகத்தின் இறுக்கமும் குறைந்தபாடில்லை.

எத்தனை தான் புரிதல் இருக்கும் தம்பதியராக இருந்தாலும் கூட சமயத்தில் அவள் கூறியது போன்ற குத்தல் வார்த்தைகளை எதிர்கொண்டே தான் தீர வேண்டும் என்பது இவனுக்கும் புரியவில்லை.

இது போல குத்திப் பேசி தன்னுடைய கோபத்தை ஆற்றிக் கொள்வது தவறு என்பதையும், ஒரு வழி பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு, அதை மீண்டும் தணிக்கை செய்ய முற்படுவது முட்டாள்தனம் என்பது அவளுக்கும் புரியவில்லை.

வெளியே அவனை கிஞ்சிற்றும் விட்டுக் கொடுத்துவிட மாட்டாள். ஆனால் வெடிப்பதெல்லாம் அவனிடம் மட்டும் தான் என்ற நிலையில், அதுவும் அவன் இப்போதுள்ள மனநிலையில், ஷ்யாமால் அதை ஜீரணிக்க முடியவில்லை. காரை ஓட்டியபடியே வெடிக்க துவங்கியிருந்தான்.

“அவளை இழுத்து ரெண்டு அரை வெச்சு இருந்தா கூட நான் கோபப்பட மாட்டேன்… ஆனா எப்படிடி அப்படி வந்த? நான் உன்னோட…” என்றவனுக்கு குரல் கம்மியது… எப்படி இவள் விட்டுக் கொடுக்கலாம் என்ற கோபம்!

“அதை நீ அவ கிட்ட சொல்லணும் ஷ்யாம்…” என்றவள் எங்கோ பார்த்திருந்தாள். ஆனமட்டும் அவள் கண்ணீரை கட்டுப் படுத்த முயன்று கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் அவளுக்கு துரோகம் புரிந்து கொண்டுதானிருந்தது.

அவன் மெளனமாக பார்க்க,

“என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு பாட சொல்றியா? அந்த கேவலத்தை என்னால பண்ண முடியாது…”

“என்னை புருஷன்னு சொல்லிக்க உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கா மஹா?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க,

“உனக்கு முன்னாடியே உன் வருங்கால புருஷனை பத்தி எனக்கு அத்தனையும் அத்துபடி… எனக்கு அப்புறம் தான் நீன்னு அவ சொல்லிட்டா எனக்கு கேவலமில்லையா ஷ்யாம்?”

திரும்பி அவளை அவன் பார்த்த பார்வையில் என்ன உணர்விருந்தது?

ஆற்றாமையா? கோபமா? அவமானமா? வெறுமையா?

என்னவென தெரியவில்லை.

காரை இன்னுமே பறக்க விட்டான். கோபத்தையெல்லாம் ஆக்சிலேட்டரில் காட்டினான்.

சட்டென அப்படி சொல்லி விட்டாள். ஆனால் மனம் உணர்ந்து அதை சொல்லவில்லை. கோபத்தில் நிதானமிழந்து கூறிய வார்த்தைகள் அவை!

“நீ என்ன சொல்ல வர்ற?” அவள் சுதாரிப்பதற்குள் அவன் கேட்டு விட்டான்.

அவள் கண்கள் கலங்கி மெளனமாக இருக்க,

“குத்தி காட்ற மஹா…” என்று அவன் சீற, அவளுக்கும் எரிச்சலாக இருந்தது.

“நான் எதுக்கு குத்திக் காட்டனும்? இருக்கறதை தானே சொன்னேன்? உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வரணும்?” அவசர கதியில் இவளும் வாயி விட,

“எதுவா இருந்தாலும் நேரா பேசு…” கடும் கோபத்தோடு கூற, என்ன தவறாக பேசி விட்டோம் என்று யோசித்தாள்.

“எதையுமே நான் மறைச்சு வெச்சு பேசனும்ன்னு அவசியமில்ல…” எங்கோ பார்த்துக் கொண்டு இவள் கூற,

“அப்படீன்னா என்ன சொல்ல வர்ற?” கோபத்தையும் தாண்டி அவன் இறுக்கமாக கேட்கவும் தான், பேச்சு திசை மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். மனதுக்குள் ‘ஐயோவென்று’ இருந்தது.

“ப்ளீஸ் ஷ்யாம்… நான் எதையும் எந்த இன்டென்ஷனோடவும் சொல்லலை… மனசுல இருக்கறதை சொன்னேன்…” சட்டென சரணடைந்து விட்டாலும், அவனது கோபம் தீர்கிற ஒன்றாக இல்லை.

“உனக்கு எந்த இன்டென்ஷனும் இருக்காது மஹா. ஏன்னா உன்னை பைத்தியம் மாதிரி லவ் பண்ணிட்டு இருக்கற நான் உனக்கு பெருசா தெரியல… அவன் சொன்னான்னு கல்யாணத்தை நிறுத்த சொல்ற… அவன் பேசினதையும் என்கிட்டே சொல்லலை… இவ கிட்ட என்னை விட்டுக் கொடுத்துட்டு போற… இப்ப தப்பு தப்பா பேசற… ‘எனக்கு அப்புறம் தான் நீன்னு’… ச்சே என்ன மாதிரியான வோர்ட்ஸ்… நானும் மனுஷன் தான்டி… எனக்கும் சாச்சுரேஷன் பாயின்ட்ன்னு ஒன்னு இருக்கு…” கோபத்தை எல்லாம் ஆக்சிலரேட்டரில் காட்டிக் கொண்டிருந்தான்.

“அவன் சொன்னான்னு நான் கல்யாணத்தை நிறுத்த சொன்னேனா?” அதிர்ந்தாள். அவள் செய்ததற்கு அதுதான் அர்த்தம் என்றாலும், அவளது கவனம் முழுக்க இவன் மேலல்லவா இருந்தது. அதுவும் இல்லாமல் அவள் திருமணத்தை நிறுத்த முயன்ற காரணமே வேறல்லவா… அந்த படங்கள்… வீடியோ… என்று மனதுக்குள் ஓட,

“ஆமா… அவன் தான் கேட்டானே… கல்யாணத்தை நிறுத்திட்டியா மஹான்னு… அந்தளவு தான் என்னை நீ வெச்சு இருக்க… இல்லையா?”

“அவன் சொன்னதை எல்லாம் நான் கன்சிடர் பண்ணவே இல்லடா… என்னால அந்த விஷயத்தை ஜீரணம் பண்ண முடியல… இப்பக் கூட அதை என்னால மறக்க முடியுமான்னு தெரியல…” வேதனையை மனதில் வைத்துக் கொண்டு அவள் கூற, நடந்தவொன்றை மாற்ற முடியாத இயலாமையும், தான் ஏமாற்றப்பட்ட, முதுகில் குத்தப்பட்ட, தன்னோடு இருந்தவனே இந்தளவு குழி பறித்து இருக்கிறானே என்ற ஆத்திரத்தையும், இந்த சூழ்நிலையில் யாரை நம்புவது என்ற அவனது கோபத்தையும், மகாவிடம் காட்ட முடியாமல், ஆக்சிலரேட்டரில் காட்ட, கார் தாறுமாறாக பறந்தது.

“கொஞ்சம் பார்த்து ஓட்டு ஷ்யா…” என்று கூறும் போதே, அவன் திரும்பி அவளை முறைத்த முறைப்பில், அவளுடைய தேகம் நடுங்கியது. எத்தகைய பார்வை அது?

லாவாவின் சூட்டோடும் கொதிப்போடும்… கோபாக்னி கொழுந்து விட்டெறிய, அவன் பார்த்த பார்வையை ஆயுளுக்கும் மறக்க முடியுமோ? உள்ளே தடதடத்தது.

“நான் டிரைவ் பண்றேன்… யூ ஆர் நாட் நார்மல்…” என்று மெல்ல தயங்கியபடி அவள் கூற,

“அந்த ஆணிய நான் புடுங்கிக்கறேன்… நீ வாயை மூடிட்டு இரு…” என்றவனின் வார்த்தைகளில் மனம் இன்னுமே அச்சமடைந்தது.

மஹா பேசிய வார்த்தைகளுக்கான பிரதிபலிப்பு!

அவள் வெடித்த வெடிப்புக்கான பதில் வெடிப்பு!

அதே சீற்றத்தோடு தான் சிவச்சந்திரனிடமும் அவன் பேசினான்.

சிவச்சந்திரனிடம் பேசிய உடனே விஷ்ணுவை அழைத்தவன்,

“விஷ்ணு… ஒரு பத்து பேரை கூட்டிட்டு விஜி வீட்டுக்கு போ… அங்க அவன்கிட்ட இருக்க டாக்குமெண்ட்ஸ், பென் டிரைவ்ஸ், சிடி, லேப்டாப், ஹார்ட் டிஸ்க்ன்னு எது இருந்தாலும் அள்ளிப் போட்டுட்டு வா… ஒரு இடத்தையும் பாக்கி வைக்காத…” என்று அவனை ஏவ,

“அவர் தடுத்தா என்ன பாஸ் பண்ண?” என்றதும்,

“அவன் இருந்தான்னா அவனை அப்படியே தூக்கிட்டு போயஸ் கார்டன் ஆஃபீஸுக்கு வந்துடு… அவனை அங்க வெச்சு…” என்று பல்லைக் கடித்தவன், “பார்த்துக்கலாம்…” என்று முடிக்க,

“பாஸ், டாகுமென்ட்ஸ் முக்கியமா அவர் முக்கியமா? ஃபிக்ஸ் த ப்ரையாரிட்டி…” என்றவனின் குரலில் அத்தனை தீவிரம் சேர்ந்து இருந்தது.

“ரெண்டுமே… நாம பேசற நேரத்துல கூட எதையாவது அவன் அப்லோட் பண்ணிட சான்ஸ் இருக்கு விஷ்ணு… சோ அவனும் முக்கியம், அவன் கிட்ட இருக்க விஷயமும் முக்கியம்…” எனவும்,

“ஓகே பாஸ்… அப்படீன்னா அவரோட வீட்டை மட்டும் டார்கெட் பண்ணா அவரை பிடிக்க முடியாது… மோஸ்ட்லி அவர் போற ப்ளேசஸ் அத்தனையும் எனக்கு தெரியும்… எல்லா இடத்துக்கும் ஆளை அனுப்பிடறேன்… கூடவே அவரோட வீட்டையும் செர்ச் பண்ணிடலாம்…” என்று அவன் யோசனை கூற,

“ஓகே… முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு…” என்று முடிக்கும் போதே, இளங்கவி ஷ்யாமை அழைத்தான்.

“சொல்லு இளங்கவி…”

“பாஸ்… டெலிகம்யுனிகேஷன் டிபார்ட்மெண்ட்ல பேசிட்டேன்… ட்விட்டர் மேனேஜ்மெண்ட்டுக்கு அவங்க வழியா ப்ரெஷர் போட்டுட்டே இருக்கு… கூகுள் அண்ட் அதர் செர்ச் இஞ்சின் மேனேஜ்மெண்ட்ஸ்க்கும் பிரஷர் பண்ணிட்டு இருக்காங்க… இன்னும் ஒரு ஒன் ஹவர்ல அந்த பிக்ஸ் எல்லாம் டெலீட் பண்ண வெச்சுடலாம்… பியுச்சர்ல அந்த பிக்ஸ் எங்கயுமே இல்லாம பண்ணிடலாம் பாஸ்…” என்று கூற,

“அந்த ஐடிய ஹேக் பண்ண சொன்னேனே கவி…”

“ப்ராசஸ் போயிட்டே இருக்கு பாஸ்… இன்னொரு அரை மணி நேரத்துல அதுவும் முடிஞ்சுடும்…” என்று கூற,

“அந்த ஐடி எந்த ஐபில இருந்து ஆக்டிவேட் ஆகிருக்கு… என்ன கோ ஆர்டினேட்ஸ்ல இருக்குன்னு முதல்ல பார்க்க சொல்லு கவி…”

“ஒரே ஐபில லாக் இன் ஆகி இருந்தா ப்ராப்ளம் இல்ல பாஸ்… வேணும்னே வோர்ல்ட்வைட் அங்கங்க லாக் இன் பண்ணி இருந்தா தான் ப்ராப்ளம்… ஆத்தண்டிகேடட் ஐபிய கண்டுபிடிக்கறது கஷ்டம்…” எனவும்,

“மத்த ஐபி எல்லாத்தையும் விட்டுடு கவி… சென்னை ஐபி மட்டும் தான் நமக்கு முக்கியம்… ரைட்?” என்று முடிக்க,

“ஓகே பாஸ்…” என்று வைக்க, அவனது முகம் யோசனையாகவே இருந்தது.

இந்த பிரச்சனைகளுக்கு நடுவே தான் வேறு அவனை டென்ஷன் செய்ய வேண்டுமா என்ற எண்ணமே அப்போதுதான் மகாவுக்கு வந்தது. அவனது செயல்பாடுகளை முன்னமே கண்டிருக்கிறாள் தான். ஆனால் இந்த அவதாரம் அவளுக்கு மிகவும் புதிது.

அத்தனை பேரையும் வைத்து, அத்தனை நுட்பத்தையும் பயன்படுத்தி, ஒரே இடத்தில் குவிய செய்து கொண்டிருந்தவனை சற்று பயத்தோடு தான் பார்த்தாள்.

இத்தனை விஷயங்களுக்கு இடையில் அவன் கையில் கார் கன்னாபின்னாவென பறந்து கொண்டிருக்கவும் தான் அவளே ஓட்டுவதாக கூறியது.

அவளை முறைத்து கடித்து குதற, கியரிலிருந்த அவனது இடது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவனது விரல்களோடு அவளுடையதையும் கோர்த்துக் கொள்ள, அவனையும் அறியாமல் மெல்ல ஆசுவாசமானான்.

கோபம் மெல்ல குறைவது போல இருந்தாலும், பழி உணர்ச்சி அவனை பந்தாடிக் கொண்டிருந்தது.

“சாரி ஷ்யாம்… ஐ டிட்டின் மீன் இட்… ஜஸ்ட் டக்குன்னு வந்துடுச்சு…” என்றவளை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. தனது உணர்ச்சிகளை பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்பதை அவனது தோற்றத்தைக் கொண்டு ஊகிக்க முடிந்தது.

அவள் எத்தனை கோபத்தில் இருந்தாலும், அவனது அணுகுமுறை இதுவரை நிதானமாகத்தான் இருந்திருக்கிறது. கோபமாகவே இருந்தாலும் கூட அதையும் நிதானமாக காட்டிய ஷ்யாமைத்தான் அவள் அதுவரை அறிந்திருந்தாள்.

ஆனால் அவனது நிதானத்தை செயலிழக்க செய்யும் சக்தி அவளது ஒற்றை சொல்லுக்கும் பார்வைக்கும் உண்டு என்பதை அவளே உணரவில்லை.

“ஷ்யாம்…” என்று மீண்டும் அவனது விரல்களை அழுத்தியபடி அவனை அழைக்க,

“நீ சொன்ன நரகத்துக்கு டீசர் காட்ற மஹா…” கோபத்தை கைவிட்டாலும், அவனது குரல் அத்தனை வேதனையாக ஒலித்தது.

“ஷ்யாம்…” மறுத்து கூற வந்தவளை,

“நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்ன்னு என்னை நானே தயார் பண்ணிட்டு இருக்கேன்… வேண்டாம்… எந்த எக்ஸ்ப்ளனேஷனும் வேண்டாம்…” என்று புருவம் நெறிபட, இறுக்கமாக கையை காட்டி அவளை நிறுத்தினான்.

அவனது கையை விட்டவள், தலை குனிந்து கொண்டு கைகளை கோர்த்தபடி அமர்ந்து கொண்டாள். கண்கள் கலங்கும் போல இருந்தது. அவனது கோபத்தை தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் வேதனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவனது செல்பேசி அழைத்தது. சிவச்சந்திரன் தான் அழைத்தான்.

“சொல்லு சந்த்ரா…” என்றான் அதே இறுக்கத்தோடு!

“பாஸ்… அவர் இருக்க இடத்தை ஃபிக்ஸ் பண்ணியாச்சு…” என்றவனின் குரலில் அத்தனை ஆர்வம்!

“ஆர் யூ சியூர்?” பரபரப்பானான் ஷ்யாம்.

“எஸ் பாஸ்… கோஆர்டினேட்ஸ யார் கிட்ட ஷேர் பண்றதுன்னு சொன்னா நான் பண்ணிடறேன்… ஆனா அவர் மூவிங்ல இருக்கார்…” என்று கூறவும்,

“லொக்காலிட்டிய விஷ்ணு அன்ட் இளங்கவி கிட்ட சொல்லிடு… எங்க மூவிங்ல இருந்தாலும் ஆளுங்களை கூட்டிட்டு போய் ரவுன்ட் அப் பண்ணு… அவன் இன்னும் அரை மணி நேரத்துல என் கண் முன்னாடி இருக்கணும்…” என்று அழுத்தமாக கூறினான்.

“சியூர் பாஸ்…” என்றபடி அவன் வைத்து விட, முன்னைக் காட்டிலும் வேகமெடுத்தவன், அவளை வீட்டில் இறக்கி விட,

“உள்ள வந்துட்டு போ ஷ்யாம்…” என்று முடிப்பதற்குள்ளாக, உச்சபட்ச வேகத்தில் காரை கிளப்பியிருந்தான்.

புழுதி அடங்க வெகு நேரமானது.

இந்த புழுதி அடங்கி விடலாம். மனதுக்குள் இருந்த புழுக்கம்?

அவன் போன திசையை பார்த்தபடியே நின்று விட்டிருந்தாள்.

இத்தனை கோபமும், ரவுத்திரமும், ஆங்காரமும், சீற்றமும், பழியுணர்ச்சியும் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. அவனது வலியும், அவமானமும் புரிந்தது தான். ஆனால் இத்தனை கோபத்தை அவள் தனது வாழ்நாளில் யாரிடமும் பார்த்ததே இல்லை. தன் முன் நீண்டு காத்திருந்த எதிர்காலம் சூனியமாக தெரிந்தது. பயமாக இருந்தது. அவளது இயல்பை அவளுடைய காதல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருந்ததை உணர்ந்து இருந்தாள்.

அவளுடைய சுயம் பறிபோனால் அவளால் அந்த வாழ்க்கையில் ஜீவிக்க முடியுமா?

சுயத்தை இழந்து பெற்ற வாழ்க்கை இனிக்குமா?

ஆனால் அவளது அத்தனை குழப்பங்களையும் தாண்டி விஜியை இவன் என்ன செய்வானோ என்ற கவலையும் பயமும் மனதை அழுத்தியது. குறைந்தபட்சம் ஷ்யாம் மனிதனாக இருப்பதை மட்டுமே விரும்பினாள் மஹா. அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு, அது ‘ராட்சசன்’ என்பதை அவள் பெரிதாக அறிந்ததில்லை.

****

போயஸ் கார்டன் வீட்டில் ஷ்யாமுக்கு முன் அமர்ந்திருந்தான் விஜி.

சுற்றிலும் விஷ்ணு, இளங்கவி, சிவச்சந்திரன்.

மூன்று நான்கு பவுன்சர்கள் வேறு, ஒப்புக்கு சப்பாணியாக!

சற்று தள்ளி கார்த்திக் அமைதியாக நின்றிருந்தான்.

அவனை பொறுத்தவரை விஜய் செய்தது தவறு தான். ஆனாலும் ஷ்யாமின் அந்த புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. வீட்டில் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல முடியும்? அவனாக திருமணத்தை நிறுத்தி விடலாம் என்றாலும் தங்கை அவ்வளவு உறுதியாக நிருபர்களிடம் திருமணத்தை உறுதிப்படுத்தி விட்டு வந்திருந்தாளே!

எதற்காக இந்த காதல் என்று புரியவில்லை.

கார்த்திக்கை பொறுத்தவரை திருமணம் என்பது மட்டுமே இன்னபிற சிலவற்றுக்கான சாவி… அந்த திருமணம் இல்லாமல் பிருந்தாவை ஏறெடுத்து பார்க்கக் கூட யோசித்தவன் அவன். தான் இன்னொரு பெண்ணை தவறாக பார்த்தால் இன்னொருவன் தன்னுடைய தங்கையை தவறாக பார்க்க எத்தனை நேரமாகி விட போகிறது? அதற்காகவே பிருந்தாவை பிடித்திருந்த போதும் அவளிடமிருந்து விலகி நின்றிருந்தான். மிக மோசமாக தோள் தேவைப்பட்ட போதில் தான் அவனது மனதை அவளிடம் வெளிகாட்டியது. அதற்கு பின்னும் கூட அவளிடம் பெரிய நெருக்கத்தை எல்லாம் காட்டியதில்லை.

காரணம் மஹா!

அவளுக்கு தானொரு தவறான முன்னுதாரணமாகி விட கூடாது என்ற அச்சம்!

அந்த அச்சமே அவனை அத்தனை இடத்திலும் கட்டுப்பாடாக இருக்க வைத்தது.

ஆனால் அந்த கட்டுப்பாடே இல்லாமல் வாழ்ந்து விட்டு, எதன் அடிப்படையில் இவன் காதலிக்கிறான் என்பது கார்த்திக்கு புரியவில்லை. எதை தன் மனைவிக்காக சேமித்து வைத்திருக்கிறான் என்பதும் தெரியவில்லை.

அவனை பற்றி முன்னமே அறிந்தது தான். ஆனாலும் கண்ணால் கண்ட உண்மை கசந்தது.

வெறும் படங்களை பார்த்தே கசந்து போனான்.

ஆனால் காதல் என்பது உடல் சார்ந்ததும் அல்ல… மனம் சார்ந்ததும் அல்ல… அது ஆன்மாவின் ஆத்மார்த்த பந்தம் என்பதை கார்த்திக் உணரும் நாள் வரும் என்பதை இப்போது அவன் அறிய மாட்டான். அதை அறியுங்காலம் நிலைமை அத்தனை பேரின் கையை விட்டு போய்விடும் என்றோ, தாள முடியாத உயிர்வலியை விட்டுச் செல்லும் என்றோ அவனுக்கு யார் கூற கூடும்?

அமைதியாக விஜியை பார்த்தான் கார்த்திக். ஒருவகையில் அவனை நினைத்தால் சற்று பாவமாக கூட இருந்தது. மகாவை ஷ்யாம் கஸ்டடி எடுத்தபோது அவனோடு இருந்தவன் விஜி ஒருவனே. அவனது கண்களில் உண்மையான வேதனையை பார்த்திருந்தான். ஷ்யாமிடம் போராடி இருந்தான். அதற்கு பின்னும் கூட கார்த்திக்கு ஆதரவாக நின்றவன் அவன். அவன் மட்டும் தவறான வழிகளில் போகவில்லை என்றால் கண்டிப்பாக ஷ்யாமை தான் ஆதரித்து இருக்க போவதில்லை. அவனது அந்த குணத்தால் வெறுப்பை சம்பாதித்து கொண்டவனை வெறித்துப் பார்த்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஷ்யாம் அவனிடம் பேசியிருந்தான். அவனிடம் இருக்கும் ஆதாரங்களை கொடுக்கும் படி.

பத்து பேரை அழைத்துக் கொண்டு போன விஷ்ணு, விஜியின் வீட்டை செங்கல் செங்கல்லாக பிரித்து விட்டிருந்தான். அதையும் அவன் கண் முன்னே!

முன்னதாக அவன் சென்று கொண்டிருந்த காரை நான்கு புறமிருந்தும் கார்னர் செய்து தான் அவனை நீலாங்கரைக்கு அழைத்து சென்றார்கள்.

அவன் கண் முன்னாலேயே வீட்டை பிரித்து போட்டு தேடியும் எதுவும் கிடைக்காததால் அந்த எரிச்சலில் அங்கேயே விஜியை அடிக்கும் ஆத்திரம் வந்து விட்டது விஷ்ணுவுக்கு!

“ண்ணா சொல்லிருங்க… இப்ப தேவையில்லாம அடி வாங்காதீங்க…” என்று கையை ஓங்கியவனை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் விஜி. தான் பார்த்து இங்கு வளர்ந்தவன். தன்னையே அடிக்க கை ஓங்குவதை பார்த்துக் கொண்டும் இருந்தான்.

வாயே திறக்காமல் இருந்தவனை எப்படி பேச வைப்பது என்று விஷ்ணுவுக்கு தெரியவில்லை.

அதை ஷ்யாமிடம் கூற, அவனை அழைத்துக் கொண்டு போயஸ் கார்டன் வீட்டுக்கு வர சொல்லியிருந்தான்.

“ஏன் விஜி இப்படி பண்ண?” என்று ஷ்யாம் இறுக்கமாக கேட்க,

விஜய் மௌனமாகவே அமர்ந்திருந்தான். இவ்வளவு நடந்தும் கொஞ்சம் கூட அசராமல் அமர்ந்திருப்பதை பார்க்கையில்,

“நீ பிறப்பிலேயே திருடன் டா… நான் தான் உன்னை ரொம்ப நம்பிட்டேன்…” என்று ஷ்யாம் கூற,

“மகாவை எனக்கு நீங்க விட்டுத் தந்திருந்தா இப்படி ஆகி இருக்காது பாஸ்…” என்று முதன் முறையாக வாயை திறக்க, அவன் கோபத்தில் இறுக்கமாக கண்களை மூடித் திறந்தான்.

“முட்டாள்… இன்னொரு தடவை மஹா பேரை சொன்ன, இப்பவே சுட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்…” பல்லைக் கடித்தபடி, ஷர்ட்டை முழங்கை வரை மேலே இழுத்து விட்டபடி அவன் எழ, அவன் வெறித்துப் பார்த்தான்.

“நீங்க என்ன சொன்னாலும் அவங்க என்னோட மஹாவா இருந்திருக்க வேண்டியவங்க. நடுவுல நீங்க வந்துருக்காம இருந்திருந்தா, அன்னைக்கு அந்த லைட் மியுசிக் ப்ரோக்ராமுக்கு மட்டும் உங்களை கூட்டிட்டு போகாம இருந்திருந்தா, இன்னைக்கு அவங்க மகாவேங்கடலக்ஷ்மி விஜய்….” என்று அசராமல் கூறினான்.

மீண்டும் அவன் அப்படியே கூற, கோபம் கொந்தளித்தது அவனுக்கு. “நான் உன்கிட்ட கேட்டேனே… நீ அவளை லவ் பண்றியான்னு? அதுக்கு என்ன சொன்ன?”

“அதுதான் நான் பண்ண முட்டாள்தனம் பாஸ்…”

“நீ எப்பவுமே முட்டாள் தான் டா…” என்றவன், “மஹா விஷயம் இப்பதான் ஆறு மாசமா இருக்கு… ஆனா நீ நாலு வருஷமா பணத்துல கை வெச்சு இருக்க… என்னோட பெர்சனலை நீ படமெடுத்து இருக்க… இதுக்கெல்லாம் பேர் என்ன? இப்ப நீ மகாவோட பேரை யூஸ் பண்ணி தப்பிக்க பார்க்கற…”

“ஏன் பாஸ் இல்லைன்னா மட்டும் நீ ரொம்ப நல்லவங்களா? உங்க ஆக்டிவிட்டியை தானே எக்ஸ்போஸ் பண்ணேன்?”

“என்னோட ஆக்டிவிட்டியை பத்தி நீ எதுக்குடா கவலைப் படற? அது என்னோட பர்சனல்… பியூர் பர்சனல். நான் யாருக்கும் பதில் சொல்லவும் தேவையில்ல… விளக்கம் கொடுக்கவும் தேவையில்ல… ஆனா என்னோட பேரை எந்தளவு யூஸ் பண்ண, மிஸ்யூஸ் பண்ண, அத்தனையும் எனக்கும் தெரியும். ஆனா உன்னை நான் விட்டு வெச்சது எதுக்கு? நம்பிக்கையான ஒருத்தன் வேணும்ன்னு தான்… ஆனா அடிமடிலையே கை வெச்சுருக்க நீ…”

“ஆமா பாஸ்… தேனெடுக்கறவன் புறங்கையை நக்காம இருப்பானா? நான் நக்கினேன்… அதை நீங்க கேக்கும் போது உங்களை கார்னர் பண்றதுக்காக அப்பப்ப இப்படி பண்ணி வெச்சு இருக்கேன். அதை நீங்க கண்டுபிடிக்க முடியாது. என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க… உங்களால அதை மட்டும் செய்யவே முடியாது…” அவ்வளவு உறுதியாக கூறியவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.

“சரி… அதுக்கு விலை என்ன?” தடாலடியாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான் விஜய்.

“மத்தவங்களை உங்க பணத்தால ஏமாத்தற மாதிரி என்னை ஏமாற்ற முடியாது பாஸ்…” என்று சிரித்தான்.

கைகளை கோர்த்து நெட்டி முறித்த ஷ்யாம், இரண்டு ஷர்ட் கையையும் மேலே இழுத்து விட்டுக் கொண்டு, “டென் சி…” என்று கேட்டான்.

விஷம் தோய்ந்த புன்னகையோடு, இடம் வலமாக தலையாட்டினான் விஜய்.

“ட்வென்டி…”

கார்த்திக் அதிர்ந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான். விஷ்ணுவுக்கும் இளங்கவிக்கும் கூட அதிர்ச்சிதான். இந்தளவுக்கு விஜி இருப்பான் என்று அவர்கள் கனவிலும் எண்ணியதில்லை. தேவைக்கு மேலேயே கொடுக்கும் முதலாளிக்கு குறைந்தபட்ச விசுவாசத்தைக் கூட காட்டாமல் எத்தகைய துரோகத்தை செய்திருக்கிறான் விஜி என்று கசப்பு அவர்கள் முகத்தில்.

ஷ்யாம் கண் காட்டிவிட்டால் அவனை அடித்து துவம்சம் செய்ய தயாராக இருந்தார்கள்!

விஜி தொடர்ந்து மறுக்க,

“ஃபிப்டி…” என்றான்.

அதற்கும் மறுக்கவே, விஷ்ணுவை அழைத்து,

“இவன் அந்த டாக்குமென்ட்சை கொடுக்கற வரைக்கும் விடாத… என்ன வேண்ணா பண்ணு… ஐ நீட் தோஸ் ப்ரூஃப்ஸ்…” எனவும், விஷ்ணு கையிலிருந்த காப்பை இழுத்து விட்டுக் கொண்டு தயாரானான், தன்னுடைய பவுன்சர்களுக்கும் கண்ணை காட்டினான்.

“ஆனா… இப்படியே இல்ல விஷ்ணு…” என்று விஜய்யை ஆழ்ந்து பார்த்தவன், ஓரகண்ணால் கார்த்திக்கை பார்த்தான். என்னவென்று விஷ்ணு கேள்வியாக பார்க்க,

“உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம விட்டு அடி… சாகற வரைக்கும் இவன் அந்த அடியை மறக்கக் கூடாது…” என்றவனின் முகத்தில் அத்தனை ரவுத்திரம்.

விஜய் அதிர்ச்சியின் விளிம்பில் நின்று ஷ்யாமை பார்த்தான். கார்த்திக்கு அதிர்ச்சியின் அளவைக் கூட உரைக்க முடியவில்லை. இது போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளை அவன் எந்த காலத்திலும் எதிர்கொண்டதும் இல்லை.

ஆனால் விஜி அறிவான். அந்த டாக்குமென்ட்டையும் பென் டிரைவ்களையும் கொடுத்தாலும் கூட ஷ்யாம் இதை தான் செய்வான் என்பது புரிந்தது.

“வேண்டாம் பாஸ்…” அதிர்ந்து கூறியவனை பார்த்தவன்,

“ஏன்டா உனக்கு மட்டும் தான் வெக்கம் வேலாயுதமெல்லாம் இருக்கா? மத்தவனுக்கெல்லாம் இல்ல? ஊருக்கே போஸ்டர் அடிச்சு ஒட்டுனியே, அப்ப இது தோணலை?” என்று வெடுக்கென்று கேட்க,

பவுன்சர்கள் அவனை நோக்கி வந்தனர்.

“பாஸ்… வேண்டாம் பாஸ்…” என்றவனின் கண்களில் முதன் முதலாக கலக்கம் தோன்றியது.

“மஹாங்கற பேரைக் கூட நீ நினைச்சு பார்த்து இருக்கக்கூடாது. ஆனா அவ கிட்டவே பேசி, மிரட்டி, அதையும் மீறி வீடியோ வரைக்கும் எடுத்து பார்க்கனும்ன்னு தைரியம் வந்துடுச்சோ, அப்ப இதையும் நீ ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்…” என்றவன், கடைசி முறையாக ஆழ்ந்து பார்த்தபடி கிளம்பினான்.

கார்த்திக் கலக்கமாக விஜியை பார்த்தான். விஜியின் பார்வையில் எப்படியாவது என்னை காப்பாற்றேன் என்ற செய்தி இருக்க, ஒரு முறை ஷ்யாமிடம் பேசிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

“மச்சான்… இந்தளவு தேவையா?” என்று தயங்கியபடி கேட்க, அவனை உறுத்துப் பார்த்தான் ஷ்யாம்.

“கண்டிப்பா தேவைதான்… நாளைக்கு உன் தங்கச்சி அந்த பிக்சர்ல இருந்து இருந்தா உனக்கு எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்க, கார்த்திக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது.

உண்மைதானே!

நக்குகிற நாய்க்கு செக்கு என்று தெரியுமா? சிவலிங்கம் என்று தெரியுமா? இரண்டையும் ஒன்றாகத்தானே பார்க்கும்?

அன்று இரவு சன் செய்திகளில்…

“முக்கிய செய்திகள்… மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணா சாலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, அமெரிக்க தூதரகம், எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி வரை நிர்வாணமாக ஓடிய வாலிபரை துரத்திய கும்பல். ஓடியவரை செல்பேசியில் படமெடுத்த இளைஞர்கள்… எங்கே போகிறது இந்த உலகம்?”

செய்தியாளர் செய்தியை படிக்க, கேட்டுக் கொண்டிருந்த மஹாவுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் நாற்பத்து ஐந்து

சுஷ்ருதாவின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த அவனது பர்சனல் அறையிலிருந்து மாநகரத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ஷ்யாம். அது ஒரு சிறிய அறைதான். ஆனால் அத்தனை வசதிகளையும் கொண்டது. அவன் மட்டுமே உபயோகிப்பான். குட்டி பிரிஜ், ஓய்வெடுக்க சிறு கட்டில், எல்ஈடி என…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்