arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் நாற்பத்து ஆறு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 46 / 64

அத்தியாயம் நாற்பத்து ஆறு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கைகளை கட்டியபடி இறுக்கமாக ஆபரேஷன் தியேட்டர் முன்பு காத்திருந்தாள் மஹா. உடன் ஷ்யாம். அவளது பிடிவாதத்துக்காக வந்திருந்தான். வருவதில் அவனுக்கு உடன்பாடில்லை. பிடிக்கவும் இல்லை. அத்தனை பெரிய துரோகத்தை செய்தவன் விஜி. அவன் திட்டமிட்டு செய்தான் என்றோ, நான் ஏமாந்து விட்டேன் என்றோ சொல்ல முடியுமா? அது தனக்கு அசிங்கம் இல்லையா? ஏமாறும் அளவுக்கு இடம் கொடுத்த தன்னுடைய முட்டாள் தனத்தை அல்லவா சொல்ல வேண்டும்?

அன்று கஞ்சாவை கொடுத்தது வேண்டுமானால் சௌஜன்யாவாக இருக்கலாம். ஆனால் புகைத்தது? தானல்லவா! தனக்கெங்கே அறிவு போயிற்று என்று அவனது மனம் கேள்வியாக எழுப்பிக் கொண்டிருக்க, அந்த எரிச்சலை எல்லாம் காட்டி சுவற்றை எட்டி உதைத்தான்.

இப்படி தன்னை ஏமாற்றியவனை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவளை என்ன செய்வது?

அவனது கோபத்தையும் எரிச்சலையும் கண்டவள், ஒன்றும் பேசாமல் மெளனமாக இருக்க, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் வருகைக்காக காத்திருந்தாள்.

காலில் இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருக்க, அதை சரி செய்யும் பொருட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விஜய் அட்மிட் செய்யப்பட்டது முதலே மயக்கத்தில் தான் இருந்தான். சிகிச்சை ஒரு பக்கம் போய் கொண்டிருந்தது. இரவு பத்து மணி வாக்கில் அவனுக்கு லேசாக நினைவு திரும்ப, ஷ்யாமுக்கு அழைத்திருந்தார் சீப் டாக்டர்.

மொட்டை மாடியில் ஷ்யாமோடு, கார்த்தியும் இருக்க, உடன் மஹா!

“பாஸ்… அவருக்கு லேசா கான்ஷியஸ் திரும்புது…” எனவும், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகாவை பார்த்தான் ஷ்யாம்.

“அப்படியா? அந்த டாக்குமெண்ட்ஸ் எங்க இருக்குன்னு கேட்க முடியுமா?” என்று இவன் கேட்க, நிமிர்ந்து பார்த்த மஹா,

“போனை கொடு…” இறுக்கமான முகத்தோடு, பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள் மஹா.

“என்ன மஹா?”

“நீ கொடுன்னு சொல்றேன்…” அத்தனை கோபமாக கேட்டாள்.

அவளது கோபத்தை அவன் சற்று எதிர்பார்க்கவில்லை. அவனை வெஜிடபிள் ஆக்கலாமா என்ற யோசனையை அவள் முன்னிலையில் வைத்ததிலிருந்து மூட் அவுட் ஆகி அமர்ந்தவள் தான், என்னவென்று நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. கோபத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

அவனுக்கு அந்த டாக்குமெண்ட்ஸ் மிகவும் முக்கியம்… அது அவனது மரியாதை… அவனது வாழ்க்கை… அவனது எல்லாமும் அதுதான்… இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருந்துவிட போகிறது என்று புரியவில்லை. அத்தனை பேரும் அவனிடம் பயந்து இருக்க, அந்த டாகுமென்ட்ஸ் வெளியே வந்தால் அவனது மரியாதையை நினைத்துக் கூட பார்க்க முடியாதே! ஒன்றுக்கே புயலடித்து ஓய்ந்து இருப்பதை போல உணர்ந்தான். எத்தனை அவனிடம் இருக்கிறது என்பது புரியாத நிலையில் என்னவென்று நினைப்பது?

அதனால் தான் அந்த மருத்துவரிடம் அவன் அப்படி கேட்டதும்!

ரௌத்திரமாக அவன் முன்னே எழுந்து நின்றவளை கேள்வியாக பார்த்தான்.

“பேஷன்ட் எப்படி இருக்கார் டாக்டர்?” என்று கேட்டாள்.

கார்த்திக்கு அவளது செய்கை மிகவும் வித்தியாசமாக தெரிந்தது. ஷ்யாமின் இக்கட்டான நிலை அவனுக்கு தெரியும். கொஞ்சம் இந்த நேரத்தில் சறுக்கி விட்டால் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குரியதாக, கேலிக்குரியதாக, இன்னும் கேள்விக்குறியாகவும் மாறிவிட நிறைய வாய்ப்பிருப்பதை அவன் அறிவான்.

அதை புரிந்து கொள்ளாமல், அவனுக்காக பரிதாபப்படுகிறாளே இந்த பெண் என்று எரிச்சலாக அவளை பார்த்தான்.

ஆனால் அவள் போராடுவது விஜய்க்காக இல்லை. ஒரு மருத்துவ மாணவியாக, எதிர்கால மருத்துவராக மட்டும் இல்லாமல், எதிர்கால வாழ்க்கையிலாவது ஷ்யாமுடைய பாவத்தின் சுவடுகள் தன்னுடைய வாரிசுகளை அணுகாமல் இருக்க வேண்டுமே என்ற ஆற்றாமையிலும் தான்!

“ஃபைன் மேடம்… ப்ளட் லாஸ் கொஞ்சம் இருக்கு… கால் கைல கொஞ்சம் ப்ராக்ச்சர் ஆகியிருக்கு… டிவைடர் மோதி கீழ விழுந்ததில கொஞ்சம் ஹெட் இஞ்சுரி இருக்கு…” என்று அவர் பட்டியலிட,

“அவரோட மெண்டல் ஹெல்த் எப்படி இருக்கு டாக்டர்?” இறுகிய முகத்தோடு அவள் கேட்க,

“இன்னும் செக் பண்ணி முடிக்கல… முழுசா கான்ஷியஸ் ரீகைன் பண்ணாத்தான் அதை பற்றி சொல்ல முடியும்…” என்றவரிடம்,

“அப்புறம் எப்படி அந்த பேஷன்ட் மெண்டலி இன்ஸ்டேபிள்ன்னு போலீஸ்க்கு ரிப்போட் கொடுத்தீங்க டாக்டர்?” கோபமாக கேட்க, அந்த பக்கத்தில் அந்த மருத்துவர் மௌனமாகினார்.

சற்று நேரத்துக்கு முன் தான் போலீஸிலிருந்து இளங்கவிக்கு கால் செய்திருந்ததாக அவன் கூறியிருந்தான். அதற்கு அவன் விஜி மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனாலேயே அப்படி நடு ரோட்டில் நிதானமிழந்து ஓடியதாகவும் கூறியதாக தெரிவித்திருந்தான்.

“சொல்லுங்க டாக்டர்…” அதீத கோபம் இருந்தாலும், நிதானமாக கேட்டாள் மஹா.

“இல்ல… பாஸ் தான் கொடுக்க சொன்னார்ன்னு இளங்கவி…” என்று இழுக்க,

“இளங்கவி சொன்னா கொடுத்துடுவீங்களா? இல்ல பாஸ் சொன்னா உங்க மனசாட்சியை கழட்டி வெச்சுடுவீங்களா?” வார்த்தையால் விளாசிக் கொண்டிருந்தவளை தன்னையும் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

“பாஸ் கொடுக்க சொல்லும் போது எப்படி அதை மறுக்க முடியும் மேடம்?” சங்கடமாக அவர் கேட்க,

“சர்… நீங்க டாக்டரா இல்ல அடியாளா? இவர் கொடுக்க சொன்னா, ஒரு டாக்டரா நான் அப்படி செய்ய முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?” அவரை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தாள் மஹா.

“புரியுது மேடம்… ஆனா அவர் சொல்லி…” என்று இழுக்க,

“அவர் சொன்னாலும் நமக்குன்னு மனசாட்சி வேணும் டாக்டர்… பேஷன்ட் யாரா வேண்ணா இருக்கட்டுமே… அவருக்கும் உங்களுக்கும் எந்தவிதமான பகையும் கிடையாது. அப்படி இருக்கும் போது உங்களை நம்பி தானே இருக்காங்க… உங்களை தான் தெய்வம்ன்னு நம்பி அவங்க உடம்பை உங்க கிட்ட ஒப்படைக்கறாங்க… அப்படி இருக்கும் போது அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லாதீங்க டாக்டர்… நமக்கு நம்ம மனசாட்சி தான் முக்கியம்…” என்றவளை மிகவும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஓகே மேடம்…” என்று சுரத்தே இல்லாமல் அவர் கூற,

“அந்த பேஷன்ட்டுக்கு இவர் வேற ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தாரா?” என்று கேட்க,

“டாக்குமெண்ட்ஸ் பத்தி மட்டும் கேக்க சொன்னார் மேடம்…” என்று சரணடைந்து விட,

“வேண்டாம் டாக்டர்… போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ்ல இருப்பாங்க… தயவு செய்து இப்ப எதுவும் கேக்க வேண்டாம்…” என்று கறாராக கூற, அவர் விழித்தார்.

“என்ன டாக்டர்?” என்று இவள் கேட்க,

“பாஸ் கேட்க சொல்லிருக்காறே…” என்று அவர் தயங்க,

“நோ வே… பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்… முதல்ல குணமாகட்டும்…” என்று முடிக்க,

“அவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமா மேடம்?” என்று தயங்கினார் அந்த மருத்துவர். போனை அவனிடம் கொடுத்தாள் மஹா.

மெலிதான புன்னகையோடு வாங்கினான் ஷ்யாம். மஹா அந்த மருத்துவரிடம் பேசிய தொனியையும் அவளது ஆட்டிடியுடை கண்டதால் மட்டுமே வந்த புன்னகை அது. எதிர்காலத்தில் அந்த மருத்துவமனையையும் மருத்துவ கல்லூரியையும் நிர்வகிக்க வேண்டியவளுக்கு இந்த ஆட்டிடியுட் கூட இல்லையென்றால் என்னாவது என்ற கேள்வி எழுந்தாலும் இவளென்ன அவனுக்காக பேசுகிறாள் என்ற எரிச்சலும் மண்டிக் கொண்டிருந்தது.

“சொல்லுங்க டாக்டர்…” என்றவனை,

“பாஸ்… இப்ப நான் என்ன செய்றது?” சங்கடமாக கேட்க,

“மேடம் என்ன சொல்றாங்களோ அதை செய்ங்க டாக்டர்… அவங்க சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்…” என்று முடித்து விட, அந்த மருத்துவர், ‘உப்ப்ப்’ என்று பெருமூச்சை வெளியேற்றி விட்டு வைத்தார்.

போனையே வெறித்துப் பார்த்தவனை முறைத்தவள், கீழே போக எழ,

“இப்ப எதுக்காக அவனுக்கு சப்போர்ட் பண்ற மஹா?” அவனது குரலில் எரிச்சல்.

அவனை முறைத்துப் பார்த்தவள், பதில் கூறாமல் போக,

“பதில் சொல்லிட்டு போ…” என்றான் அதே எரிச்சலோடு.

“நான் என்ன பேசணும், பேசக்கூடாதுன்னு லிஸ்ட் போட்டு கொடுத்துடு ஷ்யாம்… அதை பாலோ பண்ணிக்கறேன்… ஏன்னா நீயும் அதை தான் பண்ற இல்லையா?” பதிலுக்கு கத்தியை போல கிழித்தவள், வெளியே போக முயல,

“மஹா…” பல்லைக் கடித்தான்.

“உனக்கு மட்டும் கோபம்ன்னு வந்தா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது. இஷ்டத்துக்கும் பேசற… இஷ்டத்துக்கும் பண்ற… அதை மத்தவங்க பண்ணா மட்டும் உனக்கு பதில் சொல்லனுமா? நான் யாருக்குமே விளக்கம் கொடுக்க மாட்டேன்னு சொல்வ? நான் மட்டும் எதுக்கு கொடுக்கணும்?

“நீ கேட்டு நான் எதுக்காவது விளக்கம் கொடுக்காம இருந்து இருக்கேனா?”

“போதுமே… விளக்கம் கொடுக்கறேன்னு நீ கொடுத்த விளக்கமெல்லாம்…”

விடாமல் இருவரும் தர்க்கம் செய்ய, பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கு தலை சுற்றும் போல இருந்தது.

“மஹா… என்ன இது? கொஞ்சம் பொறுமையா பேசுடா…” தங்கையை அடக்க பார்க்க,

“உனக்கு ஒன்னும் தெரியாது கார்த்திண்ணா… இவனை லவ் பண்ணி தொலைச்சுட்டு… நான் எவ்வளவு…” என்றவளுக்கு குரல் அடைத்தது. அதற்கும் மேல் சொல்ல முடியவில்லை. தேய்ந்தது.

“எவ்வளவு?” என்று புருவத்தை உயர்த்தியவன், “பினிஷ் பண்ணுடி…” இறுக்கமாக முடிக்க, அவனது கண்களை பார்த்தாள். அவனும் சளைக்காமல் பார்க்க, அவள் தான் கண்களில் நீரோடு பார்வையை திருப்ப வேண்டியதாக இருந்தது.

அவள் மெளனமாக, அழுகையில் துடித்த உதடுகளை அடக்கியபடி அவனுக்கு முன்பாக மூங்கில் நாற்காலியில் கால்களை கட்டியபடி அமர்ந்திருக்க,

“பினிஷ் பண்ணு மஹா… ரொம்ப அசிங்கப்பட்டு போய்ட்ட… அதானே நீ சொல்ல வர்ற?” கல்லைப் போன்ற குரலில் அவன் கேட்க,

“நான் அப்படி சொல்லலை…” எங்கோ பார்த்தபடி இதழ்கள் துடிக்க அவள் கூற,

“இல்ல… அப்படித்தான் சொல்ல வர்ற…”

“இல்ல… நான் சொல்லலை…”

“நோ… அப்படித்தான் சொன்ன…”

“ஆமா… அப்படித்தான் சொன்னேன்… அதுக்கென்ன சொல்ற?”

“உனக்கு அவ்வளவு அசிங்கமா இருந்தா விட்ரு மஹா… அவ்வளவு கஷ்டப்பட்டு சகிச்சுட்டு இருக்க வேண்டாம்…” என்றவன், சட்டென எழுந்து நின்று கொண்டான். உள்ளுக்குளே எதுவோ ஒன்று உடைந்து கொண்டிருந்தது.

அவளோ கண்களில் நீரோடு, “இந்த வார்த்தையை ரெண்டாவது தடவை சொல்ற…” என்று ஷ்யாமை பார்க்காமல் கூறினாள்.

“எதை?” ஷ்யாம் மெளனமாக இருக்க, கார்த்திக் கேட்டான்.

“சகிச்சுட்டு இருக்க வேண்டாம்ன்னு…”

“இதுக்கெல்லாம் அர்த்தம் எடுப்பாங்களா குட்டிம்மா… ஷ்யாம் அதை உணர்ந்தெல்லாம் சொல்லலை…” சமாதானம் செய்ய,

“உனக்கு தெரியாது கார்த்திண்ணா… அவனுக்கு அவன் என்ன பண்றான், என்ன பேசறான்னு நல்லாவே தெரியும்… நான் ஹர்ட் ஆவேன்னு தெரிஞ்சே தான் அவன் பேசறான்…” என்று கூற, ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.

இது அப்படியே ஷ்யாம் சொன்னது அல்லவா!

‘நான் என்ன செய்கிறேன் என்பதை நானறிவேன்’ என்ற அவனது அணுகுமுறை!

எளிமையான புரிதல் தான்… ஆனாலும் கார்த்திக்கு சற்று தைரியம் வந்திருந்தது. இருவரும் வேறுபாடுகளை களைந்து விடுவார்களோ இல்லையோ, அந்த வேறுபாடுகளை புரிந்து கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டுக் கொண்ட ஷ்யாம், அவளுக்கு முன் வந்து அமர்ந்தான். அவளது கைகளை தன்னதில் எடுத்துக் கொண்டான். மெளனமாக அமர்ந்திருக்க,

“விட்டுடு விட்டுடுன்னே சொல்றியே… வேண்ணா நீ விட்டுடேன்…” மகாவின் கண்கள் சிவந்து போயிருக்க, வார்த்தைகளில் வெப்பம்!

“அது என்னால முடியாதுன்னு உனக்கே தெரியும்…” இறுக்கமாக அவன் கூறினான்.

“எனக்கு மட்டும் முடியுமா? விடறதுன்னா எப்பவோ விட்டு இருக்கணும்… விட்டுத் தொலைக்க முடியாமத்தான கஷ்டபட்டுட்டு இருக்கேன்…” சுறுசுறுவென சூடான சொற்கள். ஆனால் தாங்கியேயாக வேண்டுமாயிற்றே!

“சாரிடி… கோபம் தான்… அத்தனை கோபம்… நானும் மனுஷன் தானே? என்னோட சாச்சுறேஷன் பாயின்ட் தாண்டிப் போகுது… கண்ட்ரோல் பண்ண முடியல…” என்று அவளது கையை பிடித்துக் கொண்டு கூற, அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டாள்.

கார்த்திக் முன்பு இன்னும் ரசாபாசமாக வேண்டாமென அவன் மௌனமாகினான்.

“மஹா… நீ பேசறது தப்பு… நாங்க எல்லாரும் வேண்டாம்ன்னு சொன்னப்ப, மச்சானுக்கு நீ முழுசா சப்போர்ட் பண்ண… ஆனா இப்ப என்ன பாப்பா பண்ற? அப்ப இருந்த மாதிரி தான் இப்பவும் இருக்காப்ல… எவனோ ஒருத்தன் ஏதாவது பண்ணா, அதுக்கு மச்சான் என்ன பண்ணுவாரு?” என்றவன்,

“ஒரு அண்ணனா இதை நான் உன்கிட்ட பேசக் கூடாது… ஆனா உன்னோட நல்லதுக்காக சொல்றேன்… ஆம்பிளைங்கள்ல முக்கால்வாசி பேர் வீட்டுக்கு தெரியாம தப்பு பண்றவங்க தான்… ஆனா அதையெல்லாம் வெளிப்படையா ஒத்துக்க மாட்டாங்க… அதெல்லாம் சூப்பர் சீக்ரட், அவங்களை பொறுத்தவரைக்கும். ஆனா ஷ்யாம் உன்கிட்ட எவ்வளவு உண்மையா இருக்கார் ன்னு எனக்கு தெரியும்டா… மச்சான்கிட்ட அந்த உண்மை இல்லாட்டின்னா நீ என்ன பண்ணிருந்தாலும் நான் மேரேஜுக்கு அக்செப்ட் பண்ணிருக்க மாட்டேன்… இந்த நேரத்துல நாங்க இருக்கமோ இல்லையோ, நீ இருக்க வேண்டாமா?” என்று கேட்க, அவள் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

அத்தனையும் அவளும் அறிவாள். ஆனால் வார்த்தைகள் வாய் தாண்டி குதிப்பதை அவளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. முயலவில்லை. காயம் கொண்ட புலியாக, தன் காயத்தை தானே ருசித்து, அவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். அவனுக்கு கில்டி கான்ஷியஸ்…”

“கில்டி கான்ஷியஸ்… எனக்கெதுக்கு?” எழுந்து கொண்டவன், நிமிர்ந்து நின்று கேட்க, அவனுக்கு முன்பாக அவனது ஆண் என்ற ஈகோ எழுந்து நின்று கொண்டது. உண்மையில் அவனுக்கு குற்ற உணர்வு தான். ஆனால் ஒப்புக்கொள்ள ஈகோ இடம் கொடுக்கவில்லை.

அவனை உறுத்துப் பார்த்தவள், “அதெல்லாம் உனக்கெதுக்கு ஷ்யாம்? அது மனுஷங்களுக்கு இருக்க ஒரு விஷயம்…” என்று கூற,

“ஆமா நான் மனுஷனே இல்ல… மிருகம் தான்… ஆனா உன்னோட லைப் முழுக்க இந்த மிருகத்தோட தான் குப்பை கொட்டியாகனும்…”

அத்தனை ரவுத்திரமாக அவன் கூற, அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள். அவன் கோப எல்லைகளை தாண்டுகிறான் என்றதும் சற்று மௌனமாகினாள்.

“மச்சான்… வேண்டாம்… வார்த்தையை ரொம்ப விடாத… ரெண்டு பேருக்குமே தான் கஷ்டம்…” கார்த்திக் நடுநிலையோடு பேச, கைகளை கட்டிக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து விட்டான் ஷ்யாம்.

அவன் எப்போதும் அவன் தான். தன்னுடைய செயல்களை எப்போதும் நியாயப்படுத்தவும் முயல மாட்டான், அதே சமயத்தில் குற்ற உணர்வும் கொண்டதில்லை. தொழிலில், வாழ்க்கையில், உறவு வகைகளில் அவன் எடுக்கும் முடிவுகளுக்கும், அவனது செயல்பாடுகளுக்கும் அவனே பொறுப்பு என்பது போலத்தான் அவனது செய்கை இருக்கும்.

மகாவுடைய விஷயத்தில் கூட அவனது செயல்பாடு மாறியதில்லை. நான் உன்னை காதலிக்கிறேன் என்று மட்டுமே தெரிவித்தான். அவளை காதலி என்று வற்புறுத்தவில்லை. ஆனால் அனைத்தும் தானாக நடந்தது. சூழ்நிலைகளை அவனுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டான்.

அவன் நிதானம் தவறிவிட்ட ஒன்று உண்டென்றால் அது விஜியின் விஷயம் மட்டும் தான்.

“சரி… இப்ப என்ன சொல்ல வர்ற?”

“விஜய்ய போய் பார்க்கணும்…” என்று கூறியவளை வெறித்துப் பார்த்தான்.

“ஏன் பாக்கணும்?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க,

“பாக்கணும்… அவ்வளவுதான்…”

“அவன் உன்னோட பேரை யூஸ் பண்றான்னு நான் சொல்லியும் என்னை நீ பைபாஸ் பண்றல்ல…”

“உன்னை நான் பைபாஸ் பண்ணலை… எனக்குன்னு தனிப்பட்ட கருத்து இருக்கு… எனக்கு அவனை போய் பார்க்கனும்ன்னு மனசுக்கு படுது… ஆனா நீ வேண்டாம்னு சொல்ற… உனக்காக பேசி, உனக்காக வாழ்ந்து, உனக்காக சாப்ட்டு, உன்னோட வார்த்தைகளை நான் பேச எனக்கெதுக்கு தனியா ஒரு முகம்? என்னோட சுயம் எங்க?”

கைகளை கட்டிக் கொண்டு அவள் கேட்க, ஷ்யாமுக்கு மனதுக்குள் ஏதோவொரு வலி.

காதலென்றால் சுயம் தொலைவது தான். இருவரும் ஒரு புள்ளியில் கரைந்து போவதுதான். ஆனால் அது மனமுவந்து, ஆத்மார்த்தமாக அல்லவா இருக்க வேண்டும்?

தன்னுடைய சுயம் தொலைகிறதே என்று யோசிக்கும் போதே காதலின் அடித்தளம் ஆட்டம் கண்டு விடாதா?

“அவனை போய் பார்க்கனும்ன்னா பாரு மஹா… பேசணும்னா பேசு… உனக்கு என்ன தோணுதோ அதை செய்… நான் எதுவும் சொல்ல மாட்டேன்…” என்று தெளிவாக தீர்மானமாக கூற, அவள் ஆச்சரிய பார்வை பார்த்தாள்.

“நிஜமா? இதுல எதுவும் ஹிட்டன் அஜெண்டா இல்லையே?” என்று நம்ப முடியாமல் கேட்க,

“இல்ல… இனிமே உனக்கு பிடிக்காத, கஷ்டத்தை தர்ற எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்… விஜி விஷயத்துல… ஆனா எல்லா இடத்திலுமே அப்படி இருப்பேன்னு தப்பு கணக்கு போட்டுடாத மஹா… என்னோட இயல்பை நான் மாத்திக்க முடியாது… அது என்னோட சுயம்… நீ சொன்ன மாதிரி…” என்று முடித்து விட்டவனை, சிறு புன்னகையோடு பார்த்தாள்.

இருவருக்குமே ஒன்று புரியவில்லை. சுயம் இருந்தும் சுயமற்று போவதின் வலியும், அதன் வேதனையும்!

*****

திரும்பவும் அதே ப்ரைவேட் ஐசியூவுக்குள் ஷ்யாமோடு உள்ளே நுழைந்தாள் மஹா. அவனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து இருந்தது.

விஜியை சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள்!

விதம் விதமான வயர்களால் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தான்.

அருகே டியூட்டி டாக்டரும் இரண்டு நர்ஸ்களும் இடைவிடாமல் அவனது கன்டிஷனை கண்காணித்தபடி இருக்க, அவ்வப்போது மருத்துவர்கள் அவர்களுக்குள்ளாக விவாதித்துக் கொண்டிருந்தனர். ஷ்யாம் வருவதை பார்த்தவுடன் ஒரு மயான அமைதி நிலவியது.

அறைக்குள் மஹா மட்டும் தான் போனாள்.

ஷ்யாம் வெளியே நின்று கொண்டான். அவனுக்கு விஜியை பார்ப்பதில் பிரியம் இல்லை. அவளது பிடிவாதத்திற்காக வந்தான். வெளியே நின்று கொண்டான்.

உள்ளே சென்றவள், அவளுக்கு தேவையான விபரங்களை எல்லாம் ஒன்று விடாமல் அலசினாள். என்ன வேண்டுமென கேட்டு வாங்கிக் படித்துப் பார்த்தாள். அது விஜியின் மனநிலை சரியில்லை என சுஷ்ருதா கொடுத்த ரிப்போர்ட். அதுதான் போலீசுக்கு போயிருந்தது.

“எப்ப கான்ஷியஸ் வந்தது டாக்டர்?” அங்கிருந்த டியூட்டி டாக்டரிடம் கேட்டாள்.

“ஒரு அரை மணி நேரம் முன்னாடி மேடம்…” என்று வெகு மரியாதையாக கூறினான் அந்த மருத்துவன்.

“திரும்ப எப்ப ரீகையின் ஆகும்ன்னு ஏதாவது ஐடியா இருக்கா?”

“வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் மேம்…” என்றுக் கூறிக்கொண்டிருக்கும் போதே விஜியின் கண்மணிகள் இங்கும் அங்கும் உருண்டது.

“ஐ திங்க், ஹீ இஸ் கெய்னிங் கான்ஷியஸ்…” என்றவளுக்கு பரபரப்பானது.

இன்னும் இரண்டு டாக்டர்கள் அவசரமாக உள்ளே வர, விஜி விழித்தான், மருண்டு பார்த்தபடி!

“ஹலோ மிஸ்டர் விஜய்… ஹவ் டூ யூ பீல் நவ்?” என்றபடி அவனை செக் செய்தார் அவர்.

அவனது முகத்தில் சொல்ல முடியாத குழப்பம். தலை வின்வின் என்று வலித்தது. அந்த வலி முகத்திலும் பிரதிபலிக்க, தலையை பிடித்துக் கொள்ள முயன்றான். முடியவில்லை. கைகளில் வலி உயிர் போனது. நரக வேதனையாக இருக்க,

“வலி தாங்க முடியல…” என்றான் மருத்துவரிடம்.

“செடேட்டிவஸ் கொடுத்து இருக்கோம் விஜய்… ஆப்பரேட் பண்ணிருக்கு… அப்படிதான் இருக்கும்…” என்றார் அவர்.

“விஜய்?” என்று தனக்கு தானே கூறியவன், வலியில் முகம் சுருங்கி, கண்களை மூடிக் கொண்டான்.

“வலி தாங்க முடியல…” திரும்பவும் அதே பாட்டு.

“விஜய்… விஜய்…” உலுக்கினார் அந்த மருத்துவர்.

சோர்வாக மீண்டும் விழித்தவனை பார்த்து, “ஆர் யூ ஓகே?” என்று கேட்க,

“ம்ம்ம்…” என்றவன், “என் பேர் விஜய்யா?” என்று கேட்க, அங்கிருந்த அனைவரும் ஒரு செக்கன்ட் ஜெர்க்கானார்கள். சற்று உஷாரான பார்ட்டிகள்,

“உங்க பேர் என்ன?”

“பேரா?” என்று யோசித்தான்.

“உங்க வீடு எங்க இருக்கு?” என்று கேட்க,

“வீடா?” என்று யோசித்தான், வெகுவாக!

“ஷ்யாம் சர் வெளிய இருக்கார்… வர சொல்லட்டா விஜய்?” என்றபடி அவனது ரியாக்ஷனை கவனித்தார்.

“ஷ்யாமா? அது யார்?” என்று கேட்டான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஓரமாக நின்றபடி இதை பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா.

“சரி விஜய்… இது யார்ன்னு தெரியுதா?” என்று மகாவை காட்டிக் கேட்டார் ஒரு மருத்துவர்.

மகாவை கண்டத்தில் அவனது கண்கள் சட்டென ஒளிர்ந்தது! அவனையும் மீறிய ஒரு சந்தோசம் அவனது கண்களில்!

“ம்ம்ம்…”

அவளது முகத்தில் குழப்ப ரேகைகள்.

“இவங்களை எனக்கு தெரியும். ஆனா எப்படின்னு தெரியல டாக்டர்…” என்று கூற, அவரது முகம் சுருங்கியது.

எப்படி இப்படியானது என்று யோசித்தார். தலையில் பட்ட அடி ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது இல்லை.

மஹா எதுவும் பேசாமல் ஷ்யாமை பார்த்தாள். அவனுக்குமே மிகப் பெரிய அதிர்ச்சி தான் அது.

இதற்கு காரணம் ஷ்யாமாக இருக்ககூடுமோ? மெலிதாக சந்தேக இலை துளிர் விட்டது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் நாற்பத்து ஏழு

விஜியின் இந்த நிலைக்கு காரணம் அவனாக இருக்குமோ என்ற மகாவின் எண்ணம் ஒரு நொடிக்கும் குறைவாகத்தான். ஆனால் அதை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஷ்யாம், அவளது பார்வை மாற்றத்தைக் கொண்டு!‘ஷ்யாமை அவள் நினைத்தாலும், அவன் அவளிடம் உறுதி கொடுத்து இருக்கிறான். இனியும் விஜி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்