arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் நாற்பத்து ஏழு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 47 / 64

அத்தியாயம் நாற்பத்து ஏழு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

விஜியின் இந்த நிலைக்கு காரணம் அவனாக இருக்குமோ என்ற மகாவின் எண்ணம் ஒரு நொடிக்கும் குறைவாகத்தான். ஆனால் அதை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஷ்யாம், அவளது பார்வை மாற்றத்தைக் கொண்டு!

‘ஷ்யாமை அவள் நினைத்தாலும், அவன் அவளிடம் உறுதி கொடுத்து இருக்கிறான். இனியும் விஜி விஷயமாக அவளது மனம் நோகும் படி செய்வதில்லை என்று. அதை நினைவுப் படுத்திக் கொண்டாள்.

அவன் பொய்யாக அவளிடம் கூற மாட்டான். ஒன்றை கூறினால் அது அது மட்டும் தான். அதற்கு வேறு ஏதும் அர்த்தமில்லை. அதை தாண்டி செய்வான் என்று தோன்றவில்லை. செய்யவும் முடியாது.

இவளது எண்ணபோக்கு எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் போது மெளனமாக அவன் முன் வந்து நின்றான்.

“என்னை யார்ன்னு தெரியலையா விஜி?” என்று இறுக்கமாக கேட்டவனை கேள்வியாக பார்த்தான். முகத்தில் குழப்பம்.

இல்லையென்று இடம் வலமாக தலையாட்டினான்.

“நடிச்சன்னா கொன்றுவேன் ராஸ்கல்… என்னடா விளையாடுறியா?” என்றவனுக்கு கண் மண் தெரியாத கோபம் வந்தது. ஆனால் விஜியின் முகத்தில் இன்னமும் குழப்பம் போகவில்லை.

“பாஸ்… கொஞ்சம் பொறுமையா இருங்க… என்னன்னு நாங்க பார்க்கறோம்…”

“இல்ல சாரதி… இவனை பத்தி உங்களுக்கு தெரியாது… இத்தனை வருஷமா என்னையே ஏமாத்திட்டு இருந்த ராஸ்கல் இவன்…”

“பாஸ்… அதெல்லாம் ஓகே… ஆனா இப்ப இவர் இங்க பேஷன்ட்… சோ ப்ளீஸ் எங்களை பார்க்க விடுங்க…” என்று அந்த சாரதி தயவாக கேட்க,

“பாருங்க… ஆனா இவன் மட்டும் இன்னும் நடிச்சான்னா, சமாதி கட்டிடுவேன்…” அத்தனை கோபமாக கூற,

“ஒருத்தன் செயல்பட முடியாத நிலைல இருக்கும் போது அவன் கிட்ட காட்டப்படற வீரம், வீரமே கிடையாது ஷ்யாம்… அது பயந்தாங்கொள்ளித்தனம்… கோழைத்தனம்… வடிகட்டின முட்டாள்தனம்…” கொதித்துக் கொண்டிருந்தவனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மஹா, அவனுக்கு மட்டும் கேட்குமாறு நிதானமாக மிகச்சிறிய குரலில் கூற,

“ஆமா… நான் பயந்தாங்கொள்ளி, கோழை, முட்டாள்… இன்னும் என்னென்ன சொல்லணும்? அவன் நடிக்கற நடிப்பை நம்பற… நான் சொல்றது உனக்கு முட்டாள்தனமா இருக்குல்ல…” அடிக்குரலில் அவள் மட்டும் கேட்குமாறு கூறினாலும் அது மருத்துவமனை என்பதும், அவசர சிகிச்சை பிரிவு என்பதும் ஒரு நொடி மறந்தவன், அடுத்த நொடி சுதாரித்தான்.

அங்கிருந்த மருத்துவர்களை பார்த்து, தன்னை மீட்டுக் கொண்டவன்,

“இங்க ஆர்கியுமென்ட் வேண்டாம் மஹா…” என்று முடிக்க,

“நான் யாரையும் நம்பலை… என்னால ஆரம்பிச்ச பிரச்சனை… என்னையும் அறியாம அந்த பிரச்சனைல நான் இருந்து இருக்கேன்…”

“அதனால?” இறுக்கமாக அவன் கேட்க,

“இந்தளவு பிரச்சனை போக நானும் காரணம்ன்னு நினைக்கும் போது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு ஷ்யாம்…”

“நீ காரணம் கிடையாது… ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க… அவன் பண்ண தப்பை உன் பேரை வெச்சு மறைக்க பார்க்கறான்…”

“சரி இருக்கட்டும்… ஆனா இப்ப அவன் பேஷன்ட்… அதுவும் உன்னால இப்படியான ஒரு பேஷன்ட்…”

“உன் அளவுக்கு எனக்கு பெரிய மனசில்ல… அப்பவே அவனை முழுசா முடிக்க சொல்லி இருக்கணும்… பாவம் பார்த்தது தப்புன்னு நீயே நினைக்க வெச்சுடாத…இப்ப நீ பண்றது அரைவேக்காட்டுத்தனம்… அவ்வளவுதான் சொல்ல முடியும்…”

இருவரும் சிறு குரலில் விவாதம் செய்து கொண்டிருக்க, மருத்துவர்கள் விஜியை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

மகாவுக்கு முழுவதுமாக விஷயம் எதுவும் தெரியவில்லை. ஷ்யாமும் சரி, கார்த்தியும் எதுவும் சொல்லவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் திருமணத்தை நிறுத்த விஜி முயன்றான். அதற்காக அந்த படங்களையும் வீடியோக்களையும் உபயோகித்து, மகாவை டார்கட் செய்தான். அதனால் அவனை ஷ்யாம் கிட்டத்தட்ட சிதைத்து படுக்க வைத்திருக்கிறான். அந்த சம்பவத்திற்கு பின் மகாவிடம் பேசியபோதும் கூட ஷ்யாமோ கார்த்திக்கோ மகாவிடம் எதையும் விளக்கவில்லை. விஜி திட்டமிட்டு போதை மருந்தை கொடுத்திருக்கக் கூடும் என்ற அவர்களது சந்தேகத்தையும் கூட சொல்லவில்லை.

இப்போதுள்ள சூழ்நிலையில், அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவளுக்காக ஆசைப்பட்டவன் விஜி. அவள் பொருட்டு நடந்தது இந்த கலவரம்.

இதை மட்டுமே அறிந்த நிலையில் விஜி மேல் பரிதாபம் ஏற்படுவது இயற்கை. அந்த பரிதாபத்தில் தான் அவள் மன்னிப்பு கேட்க நினைத்தது. அவளால் யாரும் காயப்பட கூடாதே என்ற சிறிய மனிதாபிமானம் மட்டுமே அவளது நிலையில்!

ஆனால் விஜி, ஷ்யாமுக்கு புரிந்த துரோகத்தின் முழு அளவும் அவள் அறியாதது. அவள் அறிந்த வரையில் தான் அவளது மனநிலை இருக்கும் அல்லவா. அவள் அறியாத ஒன்றை வைத்து எங்கனம் வாதாடுவது?

மகாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த நிலையிலும் எகிறுகிறானே என்ற எரிச்சலில்,

“ஷ்யாம்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சிறிய குரலில் அழுத்தமாக அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்தவன்,

“இவன் நடிக்கறான்டி…” என்றான், முகத்தில் அத்தனை எரிச்சலை காட்டி!

“இருக்கட்டும்… அவன் நடிக்கறதாவே இருக்கட்டும்… ஆனா உன்னோட கோபத்தை காண்பிக்கற இடம் இது இல்ல… நீ கிளம்பறதுன்னா கிளம்பு… நான் இருந்து பார்த்துட்டு வரேன்…” என்றவளை விஜி புரியாத பார்வை பார்த்தான். அவனுக்கு நடப்பவை எதுவுமே புரியவில்லை. மயக்கத்திலிருந்து எழும் போது எதுவுமே நினைவில்லை என்பது எத்தனை கொடுமையானது?

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் மாயமானதை போல இருந்தது. அதோடு எதிரில் இருப்பவனின் கோபம், அதோடு அவன் அறிந்த ஒரே பெயரான ‘மஹா’ வருத்தம் சூழ்ந்த முகம். அந்த முகம் எதிரில் இருந்தவனை சமாதானம் செய்து கொண்டிருந்தது.

“நீ எதையும்…” என்று பல்லைக் கடித்தவன், “ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்… நான் எப்ப கிளம்பறேனோ, அப்ப நீயும் கிளம்பியாகனும்… சேவையும் ஆத்த வேண்டாம்… சேமியாவும் ஆத்த வேண்டாம்… இவ பெரிய புடுங்கி… இவ புடுங்குனா தான்…” என்று கோபத்தில் சிறு குரலில் அவளுக்கு மட்டுமாக கேட்குமாறு கன்னாபின்னாவென நல்ல நல்ல வார்த்தைகளாக விட, அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அவன் இப்படித்தான் பேசுவான் என்பது தெரியும் தான். ஆனால் பொதுவிடம் என்றாவது பார்க்க வேண்டாமா என்ற எண்ணம் தோன்றினாலும், அவனது கோபம் இன்னும் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாயை மூடிக் கொண்டாள்.

“டாக்டர் நீங்க பேஷண்ட்டை எக்சாமைன் பண்ணுங்க…” என்று ஷ்யாம் மருத்துவரிடம் திரும்பிக் கூற,

“விஜய்… உங்களால எந்தளவுக்கு ரீகலெக்ட் பண்ண முடியுது?” என்று அந்த சாரதி கேட்டார்.

“தெரியல…” என்றான் பாவமாக!

“ஓகே… ஒவ்வொரு பேரா சொல்றேன்… உங்களுக்கு நினைவு வருதா பாருங்க… அதோட என்ன பீல் பண்றீங்கன்னு சொல்லுங்க…” என்ற மருத்துவர், ஷ்யாம் எழுதி தந்த அவனது தாய் தந்தை பெயரில் இருந்து ஆரம்பித்தார்.

“மரகதம்…” என்று அவனது முகத்தை பார்க்க,

“ம்ம்ம்… அம்மா…” என்றான் கண்களை மூடிக் கொண்டு!

“அவங்க சமந்தப்பட்ட ஏதாவது நினைவுக்கு வருதா?”

“ம்ஹூம்… அம்மாங்க்றது தெரியுது… ஆனா அதுக்கு மேல…” என்றவன், அவனது தலையை பிடித்துக் கொண்டான்.

“ஓகே ஓகே ரிலாக்ஸ்… ரொம்ப யோசிக்காதீங்க… தெரிஞ்சதை மட்டும் சொல்லுங்க…” என்றவர், “சுவாமிநாதன்?”

“அப்பா…” என்றவன், “அவரை நினைச்சா ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு…” என்றவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.

“அவருக்கு ஹார்ட் அட்டாக்… ரெக்கவராகி வீட்ல ரெஸ்ட்ல இருக்கார்…” என்று மருத்துவரிடம் சிறிய குரலில் கூற, அவர் கேட்டுக் கொண்டார்.

“ஓகே விஜய்… நல்ல ப்ராக்ரஸ்…” என்றவர், “பத்ரி…” என்று கேட்க,

“ம்ம்ம்ம்…” என்று யோசித்தவன், “தம்பி…” என்றான்.

“வெரி குட்…” என்றவர்,

“ஷ்யாம் சாரை ஞாபகம் இருக்கா பாருங்க… கொஞ்சம் ட்ரை பண்ணுங்க…” எனவும், விஜி முகத்தை கசக்கினான். சற்று நேரம் யோசித்து விட்டு,

“அந்த பேரை நினைக்கும் போது கோபம் வருது… என்னவோ என்னையும் மீறின ஒரு உணர்வு… என்னால எக்ஸ்ப்ளைன் பண்ண முடியல…” என்றவனை மெளனமாக பார்த்தாள். அவளுக்கு புரிந்தது. ஒரு மருத்துவ மாணவியாக அவனை புரிந்து கொள்ள முடிந்தது.

“மகாவேங்கடலக்ஷ்மி?” என்று மருத்துவர் கேட்க,

“ம்ம்ம்… இவங்களை தெரியுது… ஆனா மைன்ட் ப்ளான்க்கா இருக்கு… பழகி இருக்கேனான்னு தெரியல… ஆனா ஏதோ ஒரு நல்ல பீல்… என்னன்னு சொல்ல தெரியல…” என்றவனை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.

இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. அவன் நடிக்கிறானா அல்லது உண்மையைத்தான் கூறுகிறானா என்பதும் தெரியவில்லை. அவன் ஒவ்வொரு முறை மகாவை சொந்தத்தோடு பார்க்கும் போதும் அவனது கோபம் எல்லை மீறியது.

“போதும் டாக்டர்…” என்றவன், “மஹா… நீ வெளிய வா…” என்றான், பல்லைக் கடித்துக் கொண்டு!

விஜியின் முகத்தில் சட்டென ஏமாற்றம் பரவியது. அந்த ஏமாற்றம் ஏனென்று அவனுக்கே புரியவில்லை.

“கொஞ்சம் வெய்ட் பண்ணேன் ஷ்யாம்… இந்த கைன்ட் ஆப் மெமரி லாஸ் கொஞ்ச நேரத்துக்கு தான் இருக்கும்ன்னு படிச்சு இருக்கேன்… அதை நேரடியா ட்ரீட் பண்றதை பார்க்க எனக்கொரு சான்ஸ் கிடைச்சு இருக்கு… கொஞ்சம் பொறுத்துக்க, ப்ளீஸ்…” எனவும், முகத்தை கல்லைப் போல வைத்துக் கொண்டு,

“சரி இரு…” என்றவன், செல்பேசியில் கார்த்திக்கை அழைத்தபடி வெளியே சென்றான். அவளது படிப்பை காரணம் காட்டும் போது அவனால் மறுத்துப் பேச முடியவில்லை. ஆனால் இது எங்கு சென்று முடியுமென்று தெரியவில்லை. அவன் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் பிரச்சனை. அந்த டாக்குமெண்ட்ஸ் இருக்குமிடத்தை அறியாமல், அதை தான் கைபற்றாமல் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது. அவன் நடிக்கிறான் என்றாலும் பிரச்சனை. மகாவுக்கு அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் வந்தாகிவிட்டது. தன்னால் தான் இந்த பிரச்சனை என்று நினைக்குமளவு ஆகி விட்டது. அந்த சாப்ட் கார்னரை அவன் எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்துவான்.

என்ன செய்வது என்று குழப்பமாக இருக்க, அவனது அழுத்தங்களையும் கொதித்துக் கொண்டிருந்த மன வெப்பத்தையும் வெளிவிட அவனுக்கு ஒரு துளை தேவைப்பட்டது. அதனால் தான் வெளியேறினான்.

அவன் வெளியே செல்ல, விஜி, அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டான். அவனிருந்த வரை இனம் புரியாத இறுக்கம் சூழ்ந்து இருந்தது போல இருந்தது. ஆனால் அவனால் அதை என்னவென்று வரையறுத்து கூற முடியவில்லை. பிடித்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்… பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? பிடிக்கவில்லை… அவ்வளவு மட்டுமே!

ஷ்யாம் இருந்தவரை இயல்பாக இருந்தவள், அவன் வெளியேறிய பின் இறுக்கமான முகபாவத்திற்கு மாறினாள்.

“நிஜமாவே உங்களுக்கு எதுவும் ஞாபகம் இல்லையா?” என்று அழுத்தமாக கேட்க, அவன் மெளனமாக அவளை பார்த்திருந்தான்.

“மெமரி லாஸாக சான்ஸ் இருக்கு மேம்…” என்றார் ஆர்த்தோ ஐசியூ சீப். அவள் அவரை விட மிக மிக குறைவான வயது என்றாலும், அவள் இப்போதுதான் மருத்துவம் பயிலும் மாணவி என்றாலும் அவர்கள் அனைவருக்குமே மரியாதைக்குரிய மேம் ஆகியிருந்தாள். ஷ்யாமின் பியான்சே. வருங்கால சேர்மன். அவள் எவ்வளவு இளையவளாக இருந்தாலும் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறாள். ஆனால் அவள் அதை உபயோகப்படுத்த எண்ணுவதுமில்லை என்பதும் அவர்களுக்கு தெரியும். யாரிடம் பேசினாலும் அவள் ஜூனியர் என்பதையும் ஹவுஸ் சர்ஜன் செய்து கொண்டிருப்பவள் என்பதையும் மறப்பதுமில்லை.

அவள் தான் எதிர்காலத்தில் மருத்துவமனைக்கு பொறுப்பு என்று ஷ்யாம் கோடிட்டு காட்டி இருந்தான். அதோடு முக்கிய முடிவுகள் ஒவ்வொன்றிலும், அவள் யோசனை சொல்கிறாளோ இல்லையோ, அவளை அமர வைத்தான்.

பயிற்சியை ஆரம்பித்து விட்டிருந்தான். மிசஸ் ஷ்யாமுக்கு அனைத்தையும் சமாளிக்கும் திறன் வேண்டுமே. அந்த அனுபவத்தில் மருத்துவமனையோ, மருத்துவ கல்லூரியோ, அத்தனை பேருக்கும் பரிச்சயமாகி விட்டிருந்தாள் மஹா.

“இருக்கலாம் டாக்டர்… ஆனா இவர் கேஸ்ல எல்லாத்தையுமே டவுட்டாவே பார்க்க வேண்டியிருக்கு…” என்று கூற,

“ம்ம்ம்… ஓகே மேம்… ஏ டூ இசட் எல்லா டெஸ்டும் முடிச்சிடலாம்… எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது…” என்று முடிக்க,

“ஓகே…” என்றவள், விஜியை கேள்வியாய் பார்க்க,

“என்னை உங்களுக்கு பிடிக்காதோ?” வீங்கியிருந்த முகத்தோடு, கை கால்களில் ஆபரேஷன் செய்த கட்டுக்களோடு ஐசியு படுக்கையில் படுத்திருந்த விஜி, மகாவிடம் கேள்வி எழுப்ப,

மெளனமாக அவனை பார்த்தாள். பேசியில் அவளை மிரட்டிய விஜியை மட்டுமே அவள் அறிவாள். ஷ்யாமுடன் இருந்த விஜி அவளது நினைவு பெட்டகத்தில் மெல்லிய புகைப்படலமாய் மாத்திரமே! அப்படி இருக்கும் போது எந்த தைரியத்தில் தன்னை காதலித்ததாக கூறி இவ்வளவு பெரிய வேலைகளை எல்லாம் செய்திருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. மலைப்பாக இருந்தது.

ஷ்யாம் தன்னை சென்னைக்கு அழைத்து வந்தபோது கூட இவனுடனும் இளங்கவியுடனும் தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அப்போதும் கூட ஒரு வார்த்தை பேசவில்லையே!

இவன் தன்னை காதலித்தான் என்று கூறுவது எப்படி என்றே அவளுக்கு புரியவில்லை.

ஆனால் கார்த்திக் கூறியிருந்தான். ஷ்யாம் தன்னை கஸ்டடி எடுத்தபோது, ரொம்பவுமே தவித்து எப்படியாவது மீட்க வேண்டும் என்று துடித்தது விஜி தான் என்று! தனக்குமே தெரியுமே… தலகுப்பாவிலிருந்த போது ஷ்யாமிடம் தனக்காக போராடினான் என்று. அப்படி துடித்தவன், பின் ஏன் தன்னிடம் பேசவே இல்லை?

அத்தனை வருடமாக வேலை செய்த முதலாளிக்கு எதிராக திரும்பி, நெஞ்சை பதற வைக்கும் செயல்களை எல்லாம் செய்து பழி தீர்க்க வேண்டும் என்ற நினைப்பு எதனால் வந்தது?

தான் காதலித்தவளை அவன் எடுத்துக் கொண்டானே என்ற நிலை இப்படி மிருகத்தனமாக செயல்பட வைக்குமா என்ன?

அவளுக்கு என்னவோ அது மட்டும் காரணமில்லை என்று தோன்றியது. இவனுக்கு ஷ்யாமிடம் மிகப்பெரிய வஞ்சமோ, கோபமோ எந்த வகையிலாவது தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் அவனை பழி தீர்க்க முயன்று இருக்க வேண்டும்.

மனம் என்னன்னெவோ எண்ணிக் கொண்டிருக்க, “சொல்லுங்க மஹா…” என்றான் விஜி.

அவன் அப்போது அறிந்திருந்த ஒரே பெண் அவள் தான் என்ற நிலையில், அவளது இந்த தவிர்ப்பு அவனை தவிக்க செய்தது. அவள் தன்னை தவிர்க்கக் கூடாது என்று பரிதவிக்க தோன்றியது. சூனியமாக தோன்றிய தோன்றிய உலகத்தை நினைத்தால் அவனுக்கு பயமாக இருந்தது.

தனக்கு எந்த நினைவும் வராமல் போய்விடுமோ என்று மனதுக்குள் ஒரு திண்டாட்டம். அப்படி வராமல் போய்விட்டால் தன் நிலை என்ன என்பதை குறித்த திடுக்கிடல். தெரிந்த ஒரே பெண்ணை பற்றுக் கோடாக பற்றிக் கொண்டு அவனது கடந்த காலத்தை அறிந்து கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழி இல்லையே!

“நான் உங்க கிட்ட நேர்ல பேசினதே இல்லையே…” என்றவளை, புருவத்தை நெரித்துப் பார்த்தான். நேரில் பேசியே இல்லாத பெண் மேல் தனக்கு ஏன் இந்த பிடித்தம் இருக்க வேண்டும்? என்ன வகையான பந்தம் இது?

“நேர்ல பேசினதே இல்லையா?” என்று யோசித்தான். ஆனால் அவளுடைய முகம் அவனது மனது வெகு பிரியமாக இருந்திருக்க வேண்டும். அவளது கவி பேசும் கண்களை அவ்வளவு பிடித்தது.

“ம்ம்ம்… போன்ல மட்டும் தான் பேசி இருக்கீங்க…” என்றவள், அவனுக்கு இஞ்சக்ஷன் கொடுக்க வந்த நர்சிடமிருந்து மருந்தை வாங்கி, அவனது தோளில் வலிக்காமல் போட்டாள்.

“நீங்க டாக்டரா?” என்று அவன் கேட்க,

“ம்ம்ம்… ஹவுஸ் சர்ஜன் பண்ணிட்டு இருக்கேன்…” என்றவள், அவனது வைட்டல்களை செக் செய்தாள்.

“எப்படி எனக்கு உங்களை தெரியும்?” என்று கேட்டான், காலில் இருந்த வலியை சகித்தபடி! சுரீர் சுரீர் என்று வலித்தது. எலும்பு முறிவல்லவா!

“ஷ்யாம் கிட்ட நீங்க வேலை பார்த்தீங்க…” என்று வெகு இயல்பாக கூறிவிட்டு, அவனது ப்ரெஷரை செக் செய்தாள்.

அவளருகில் வந்த ஆர்த்தோ ஐசியு மருத்துவர், “மேம்… டெஸ்ட்க்கு எழுதிட்டேன்… ரேடியேஷன் டிப்பார்மென்ட்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சொல்லி இருந்தேன்… இன்னும் பத்து நிமிஷத்துல அங்க ஷிப்ட் பண்ணனும்… ஈஈஜி, சிடி, எம்ஆர்ஐ. பிரைன் ஆக்டிவிட்டியை டெஸ்ட் பண்ணிடலாம்… அப்புறம் நம்ம சைக்கியாட்ரிஸ்ட் மோகன் சார் அப்பாயின்மென்ட் கேட்க சொல்லிருக்கேன்… அவரும் ஒரு ஒபினியன் கொடுக்கட்டும்… தென் ஆஸ் யூஸ்வல் ஆர்த்தோ சீப் ஷிக்கர் பாண்டே டேக் ஓவர் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கார்…” என்று ஒப்பித்தார்.

“ஓகே டாக்டர்…” என்றவளுக்கு சற்று சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவள் இன்னமும் பட்டம் பெறவில்லை. ஜூனியர் எனும் போது, அத்தனை பெரிய மருத்துவர் தன்னிடம் ரிப்போர்ட் செய்வது போல சொல்வதை நெளிந்து கொண்டே கேட்டுக் கொண்டாள். ஆனால் வேறு வழியில்லை. பழகித்தானாக வேண்டும்.

அந்த மருத்துவர் சென்று விட, “என்னவா வேலை பார்த்தேங்க?” என்று கேட்டான் விஜி. மஹா நிமிர்ந்து பார்த்தாள்.

“அவருக்கு எல்லாமே நீங்களாத்தான் இருந்தீங்க… சென்னைல அவரோட ரெப்ரசெண்டேடிவ் நீங்க தான்…” எனவும்,

“ஓஓ…” என்று கேட்டுக் கொண்டான். அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. “அப்படீன்னா அவர் இப்ப வருத்தப்படறதுல அர்த்தம் இருக்கு…” என்றவனை விசித்திரமாக பார்த்தாள். அவன் வருத்தப்படுகிறான் தான், இவனை விட்டு வைத்ததற்கு என்று நினைத்துக் கொண்டாள்.

“ஓகே… நீங்க ரெஸ்ட் எடுங்க… டெஸ்ட் எடுக்க ஷிப்ட் பண்ணுவாங்க… கண்டிப்பா உங்களுக்கு குணமாகிடும்…” என்று லேசாக புன்னகைத்தவளை ஆழமாக பார்த்தான்.

அவளது புன்னகை புதிதாக பூத்த மலரை போல இருந்தது, அத்தனை மலர்ச்சியாக, குளிர்ச்சியாக இருந்தது. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல!

“மறுபடியும் எப்ப வருவீங்க?” என்று கேட்ட விஜியை பார்க்க தயக்கமாக இருந்தது.

“நாளைக்கு உங்க வீட்ல இருந்து வந்துடுவாங்க… உங்களை அவங்க டேக் கேர் பண்ணிக்குவாங்க விஜி…” என்று பதில் கூறியவளை நேரிட்டு பார்த்தான்.

“நீங்க மறுபடியும் எப்ப வருவீங்க?”

“எனக்கு ஹாஸ்பிடல் போகணும்… வர்றது கஷ்டம்…”

“எனக்கு பழசு நினைவுக்கு வந்துட்டா வருவீங்களா?” என்று கேட்டவனை பராவிருத்தமாய் பார்த்தாள். அவனுக்கு நினைவு வந்துவிட்டால் இங்கே நிற்பானா என்ன? கற்பனைக்கும் ஆகவில்லை.

“நீங்க மெமரி கெய்ன் பண்ணிட்டா இங்க இருக்க மாட்டீங்க…” என்றவளுக்கு கசப்பான முறுவலொன்று மலர்ந்தது.

அவளது வார்த்தைகளில் மெல்ல புன்னகைத்தான் விஜி.

பேசியில் பேசியபடியே உள்ளே நுழைந்தான் ஷ்யாம்.

“முடிஞ்சாச்சா?” என்று கேட்க, அண்ணாந்து பார்த்தாள் மஹா!

“ம்ம்ம்…” என்றவள், அங்கிருந்த மற்ற மருத்துவர்களிடம் கூறிக் கொண்டு, அவனோடு கிளம்ப எத்தனிக்க,

“ஐ வில் பி வெய்டிங் மஹா…” என்றான் விஜி.

முகம் இறுக, திகைத்தான் ஷ்யாம்.

அன்றொருநாள் மகாவிடம் தான் கூறிய அதே வார்த்தை. அவளது சம்மதம் வேண்டி காத்துக் கொண்டிருப்பதை அவளுக்கு உரைத்த வார்த்தைகள்.

கைகளை இறுக்கமாக பிணைத்துக் கொண்டான் அவளோடு. அவனது இறுக்கம் மஹாவுக்கு வலியை கொடுக்க, அவனிடமிருந்து கையை விடுவிக்க முயன்றாள். முடியவில்லை. அது முடியவும் முடியாது.

அவளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. இந்த விஜி இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் அந்த வாக்கை காற்றில் பறக்க விட வருமாய் இருக்கலாம். ஆனால் அதுவும் முடியாது. தான் முதன் முதலாக அவளிடம் கொடுத்த வாக்கு. பொறுமை காக்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

முகங்கோன மகாவை பார்த்தான்.

“கிளம்பு… எனக்கும் கார்த்திக்கும் ப்ரொடியுசர் கவுன்சில்ல மீட்டிங் இருக்கு… உன்னை விட்டுட்டு மச்சானை கூட்டிட்டு போறதா சொல்லிருக்கேன்…” என்று உறுதியாக கூற, திரும்பி விஜியை பார்த்துக் கூறிக் கொள்ள முனைந்தாள்.

விடாப்பிடியாக இழுத்துப் பிடித்தவன், அதே இறுக்கத்தோடு அவளை அழைத்து சென்று விட்டான்.

விஜியை என்னவென்று பார்க்கவில்லை. எதுவும் கேட்கவில்லை. அவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தார் போலக் கூட நினைக்கவில்லை. மஹா பார்க்க நினைத்தாள் அது மட்டுமே அவனது எண்ணமாக இருந்தது.

மஹா போன திசையை விஜய் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் இழுத்ததில் கை வலித்தது.

“ஏன் ஷ்யாம் இப்படி பிஹேவ் பண்ற?” அவனிடமிருந்து கையை பிடிவாதமாக விடுவித்துக் கொண்டு சினந்தாள்.

மெளனமாக அவளைப் பார்த்தவன், “ஏன்… அங்கேயே இருந்துக்கலாம் போல இருக்கா?” விசாரமாக கேட்டவனை பார்வையால் எரித்தாள்.

“அங்கேயே இருந்து என்ன பண்ண போறேன்?”

“பார்த்தா பார்த்துட்டு வந்துட்டே இருக்கணும்… அதை விட்டுட்டு…” என்று ஆரம்பித்தவன் முடிக்காமல், கார் கதவை திறக்க, ஏறாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

“ஏன் உனக்கு இவ்வளவு கோபம் வருது? அவனை தான் ஊருக்கே ஒண்ணுமில்லாம காட்டிட்டியே… இன்னுமா உன் ஆத்திரம் அடங்கலை?”

அவளது கோபத்தை கண்டுக் கொள்ளாமல்,

“கமான் கெட் இன் மஹா… லேட்டாகுது…” என்று கூற, அவள் பேசாமலேயே நின்றிருந்தாள்.

கண்களை மூடித் திறந்தவன், “எனக்கு பிடிக்கல… நீ அவனை பார்க்க வந்தது பிடிக்கல… பேசறது பிடிக்கல… நான் அவனை அந்த அளவு பனிஷ் பண்ணது தப்பு தான் எனக்கு தெரியும்… ஆனா இதுதான் நான்… இவ்வளவுதான்… எல்லாம் உனக்கும் தெரியும்… என்னோட வே ஆப் அப்ரோச்ச என்னால மாத்திக்கவே முடியாது… அதை மாற்ற நீ ட்ரை பண்ற…

நானும் உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்… அவ்வளவுதான் மேட்டர் ஓவர்… பார்த்துட்டு வந்துட்டே இரு… அதை விட்டுட்டு அவன் கூட ஓவரா டைம் ஸ்பென்ட் பண்றது… அவனுக்காக என்கிட்டே பரிஞ்சு பேசறது எல்லாம் வேண்டாம்…” வெகு நிதானமாக, அழுத்தமாக, ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தவனின் தொனி அத்தனை கடுமையாக இருந்தது.

நான் உன்னை காதலிக்கலாம்… நீ என்னுடைய சரி பாதியாக இருக்கலாம்… ஆனால் என்னுடைய வழக்கத்தை மாற்ற யாராலும் முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினான்.

“ஐ வில் பி வெய்டிங் மஹாவாம்… ஹவ் டேர்… எனக்கு வந்த கோபத்துக்கு அவனுக்கு பல்லு பேந்துருக்கும்… கை காலை உடைச்சு படுக்க வெச்சாச்சேன்னு பார்க்கறேன்… இன்னொரு தடவை உன் பேரை சொல்லி மட்டும் அவன் கூப்பிட்டான்… தொலைச்சுருவேன் தொலைச்சு…” அத்தனை வன்மம்… அத்தனை குரோதம்… அவனையும் மீறிய எரிச்சல்!

“உனக்கு பொசெசிவ்னஸ் ஓவரா போய்டுச்சு ஷ்யாம்…” கைகளை கட்டிக் கொண்டு சஞ்சலமாக அவனை பார்க்க,

“ஆமா… அப்படித்தான்… உன்னை விட்டு கொடுத்துட்டு போக நான் என்ன சொம்பையா? ஆம்பளைடி…” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.

“உன் ஆம்பிளைத்தனத்தை முடியாதவன் கிட்ட காட்ட கூடாது ஷ்யாம்… இதுக்கு பேர் ஆம்பிளைத்தனம் இல்ல…” என்றவள், அதற்கும் மேல் விவாதத்தை தொடராமல் காரில் ஏறி அமர்ந்து கொள்ள, பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தவன், தலையை அழுத்தமாக கோதியவாறு தூரத்தில் தெரிந்த மேகங்களை பார்த்தான்.

மேகம் கருக்கொண்டு அழ காத்திருந்தது. கோடை மழை. வெளியிலும் வெம்மை… அதை காட்டிலும் மனதிலும்!

மெளனமாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனை அவள் பார்க்கவே இல்லை. மனம் முழுக்க ஏதோவொரு வலி. அவனை காயப்படுத்தக் கூடாது என்று நினைத்தாலும் அவளையும் மீறி வந்து விழும் வார்த்தைகள்.

“ஏய் மகா… வார்த்தைய அடக்கி பேசு… ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்…” என்று பைரவி அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.

“இன்னும் என்னென்ன சொல்ல போற மஹா? நான் கோழை, ஆம்பிளை இல்ல… ம்ம்ம்… இன்னும் வேறன்ன?”

அவள் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

“எனக்கு வாச்சுருக்க வாழ்க்கை இவ்வளவுதான்னு ஆகிடுச்சு… ஜீரணிக்க ட்ரை பண்றேன்… முடியல…” கனமாக கூறியவனை வேதனையோடு பார்த்தவள்,

“அதை நான் சொல்லணும் ஷ்யாம்…”

குனிந்துக் கொண்டவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. மூக்கு சிவந்து விடைக்க, வயிற்றிலிருந்து கிளம்பிய உருண்டையை தொண்டைக்குள் விழுங்கினாள்.

தன்னை காதல் பலவீனமாக்குகிறது என்பதை உணர்ந்தாள். அவளது பலமும் அவளது காதல் தான் என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறாள்?

*****

அடுத்த நாள், ஆர்த்தோ ஐசியூவின் சீப் டாக்டர் ஷ்யாமிடம் பேசினார், அவனது அறையில்! உடன் மஹா, கார்த்திக்!

“பாஸ்… அவர் நடிக்கற மாதிரி எங்களுக்கு தோணலை… இது ஒரு விதமான அம்னீசியா, போஸ்ட் ட்றாமடிக் அம்னீசியா. அதாவது ரொம்ப பிரச்சனையோ, அவமானமோ, அதீதமான மாற்றங்கள் வரும் போது மனசு அதையும் அறியாம ஒரு மாஸ்க் போட்டுக்கும்… எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நாம பொய் சொல்வோம் இல்லையா… அது மாதிரி… அந்த சிச்சுவேஷனை கடக்க முடியாம இருக்க மனதோட ஒரு அதீதமான வெளிப்பாடு தான் இந்த மாதிரியான அம்னீஷியா…” என்று அவர் கூற, ஷ்யாம் தீவிரமாக அவரை பார்த்தான்.

“இது எவ்வளவு நாளைக்கு இருக்கும்?” கார்த்திக் கேள்வி எழுப்ப,

“அதை சொல்ல முடியாது சர்… ஒரே நாள்ல குணமாகலாம்… இல்லைன்னா ஒரு வாரம்… ஒரு மாசம்… ஒரு வருஷம்… டைம் சொல்ல முடியாது… பழைய நினைவுகளை கொண்டு வரணும்…” என்று கூறினார், அதை மகாவும் ஒப்புக் கொண்டாள்.

“ம்ம்ம்… ஆமா…” என்றவளுக்கு யோசனையாகவே இருந்தது.

“பழைய வாழ்கையை ஞாபகப்படுத்திட்டே இருந்தா பேஷண்டுக்கு சீக்கிரம் மெமரி ரீகெய்யின் ஆக வாய்ப்பு இருக்கா டாக்டர்?” என்று மஹா கேட்க, இவள் ஏன் இந்த ஆணியை பிடுங்குகிறாள் என்று பார்த்தான் ஷ்யாம்.

“இது ரொம்ப அவசியமா மஹா…” கேட்டது ஷ்யாம் அல்ல… கார்த்திக்!

ஏனென்றால் ப்ரொடியுசர் கவுன்சில் மீட்டிங் போகும் போதே மகாவின் இத்தகைய நடவடிக்கைகளை பற்றி இருவருமாக பேசிக் கொண்டு தான் இருந்தனர்.

அதனால் தான் அவனுக்கு மஹா இப்படி கேட்டதும் கோபம் வந்தது.

ஷ்யாமை பற்றி தெரிந்து தானே, அவனுடைய காதலை ஒப்புக் கொண்டாள். திருமணமும் நிச்சயம் செய்தாயிற்று!

இப்போது ஏன் குழப்புகிறாள் என்பது புரியவில்லை. ஆனால் இருவருமே புரிந்து கொள்ளாத ஒன்று என்னவென்றால் திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டால் அவனது தவறுகள் அனைத்தையும் அங்கீகரித்து விட்டதாக ஆகிவிடாது. தன்னுடைய குணத்துக்கு சற்றும் பொருந்தாத நிலை வரும் போதெல்லாம் அவள் குரல் கொடுக்கத்தான் செய்வாள் என்பதையும் இருவருமே உணரவில்லை.

அதை உணராதது அவர்களுடைய தவறும் அல்ல. ஒரு விஷயத்தை பொறுத்தவரை பெண்ணின் பார்வை என்பது வேறு. ஆணின் பார்வை என்பது வேறு. பெண்ணின் பார்வையில் சரியாக தெரியும் ஒன்று ஆணுக்கு தவறாக தெரியக்கூடும்.

வேடிக்கையாக ஒரு மொழி சொல்வதுண்டு. ஆணுக்கு தெரிந்த நிறங்கள் வெறும் பச்சை, மஞ்சள், சிவப்பு மட்டுமே என்பார்கள். அதாவது ஒரு விஷயத்தை நுணுக்கி ஆராய்வது பெண்ணின் குணம். ஆண் மேலோட்டமாக போய்விடுவான்.

“ண்ணா… ப்ளீஸ்… என்னோட ஸ்டடீஸ்காக கேக்கறேன்…” எனவும், அந்த மருத்துவர் தலையாட்டினார்.

“எஸ் மேம்… யூ வார் ரைட்…” என்றார் அவர்!

ஷ்யாம் சிரித்தபடி கார்த்திக்கை பார்த்து,

“மச்சான்… உன் தங்கச்சியை பாரேன்… விளக்கை தூக்கிட்டு நான் தான் அடுத்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்ன்னு கிளம்புவா…” என்றான் சிரித்துக் கொண்டே!

“கூட நீயும் கிளம்பிடு மாப்ள…” என்றான் கார்த்திக்!

இருவரும் கலாய்க்க, முறைத்தாள் மஹா!

இவர்கள் இருவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருக்க, விஜி மஹாவுக்காக வாசலைப் பார்த்தபடி காத்திருந்தான்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் நாற்பத்து எட்டு

காஞ்சிபுரத்தில் இருக்கும் அந்த பட்டு ஜவுளி மாளிகையை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர் இரு வீட்டாரும். முகூர்த்த பட்டுப் புடவை மற்றும் அனைத்து வைபவங்களுக்குமான பட்டுப் புடவைகளையும், மற்ற அனைவருக்கும் எடுக்க வேண்டிய புடவைகளையும் எடுப்பதற்காக வந்திருந்தனர்.பாரம்பரியமான பட்டு மாளிகை அது. புடவைகளை அவர்களே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்