அத்தியாயம் ஐம்பத்து ஐந்து
சோர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள் மஹா. மருத்துவமனையிலிருந்து நேராக பைரவியை பார்க்க வந்திருந்தாள், பிருந்தாவுடன்.
அதீத சோர்வு… உடலிலும் மனதிலும்!
உறக்கமற்ற இரவாக கழிந்த முந்தைய இரவு, வெகுவாக கசப்பை விதைத்திருந்தது. அதிகாலையிலேயே ஷ்யாம் கிளம்பியிருந்தான், உத்தண்டிக்கு!
பெரிதாக சொல்லவுமில்லை. மகேந்திரன் வருவதற்கு நேரமிருந்ததால் அவனுக்கு காலை உணவை தான் தயாரிப்பதாக இவள் கூற, அவளது முகத்தையும் பார்க்காமல் மறுத்திருந்தான்.
“வேணாம் மஹா… அங்க வாட்ச்மேனை விட்டு வாங்கிட்டு வர சொல்லிக்கறேன்…” என்று கிளம்ப பார்த்தவனும் தான் இரவு உறங்கவில்லை என்பது தெரியும்.
“சரி… அட்லீஸ்ட் காபியாவது… ப்ளீஸ்…” என்று கெஞ்சியவளை மேலும் கெஞ்ச வைக்க அவன் விரும்பவில்லை. மனம் காயப்பட்டு இருக்கிறது தான். ஆனால் அதன் காரணம் என்ன? அவன் தானே? அவனை போலவே அவனது மனைவியும் காயப்படுகிறாள். வலிக்க வலிக்க காயப்படுகிறாள். அத்தனை காதலை அவன் மேல் வைத்ததை தவிர மஹா செய்த தவறு என்ன?
திருமணமானவுடன் அவள் அத்தனையும் மறந்து விட்டு தன்னோடு ஒன்றி விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அது அவனுக்கும் தெரியும்… திருமணத்திற்கு முன்பே ஒரு மாதிரியாக தன்னுடைய மனதை தயார்படுத்தியும் வைத்திருந்தான்.
ஆனால் அவையெல்லாம் அவனது மனைவியை தன்னருகில் காணும் வரை தான்… அருகில் அவளை காணும் போதே, அவள் வேண்டும் என்று தவிக்கும் மனதை என்ன செய்து அடக்குவது என்று தெரியவில்லை. அவனது கட்டுபாட்டை பற்றி அவன் அறிவான். வேண்டும் என்றால் வேண்டும்… வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அப்படிதான் அனைத்தையும் ஒதுக்கினான். வேண்டாமென்று தீர்க்கமான முடிவோடு இருக்கிறான். அது அவளுக்கு தான் செய்யும் மரியாதை அல்ல… இருவரது உறவுக்கும் தான் கொடுக்கும் செய்து கொடுத்திருக்கும் சத்தியம்.
அந்த உறுதியை அவன் கடைசி வரை பற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீர்க்கத்தோடு தான் அவளது கழுத்தில் பொன் தாலியை அவன் அணிவித்ததும். ஆனால் அவளை தவிர்த்து, வெளியில் அவனது அணுகுமுறையை அவனால் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள முடியாது… மாற்றவே முடியாது… கொட்டினால் தான் குளவி… வெட்டினால் தான் வீச்சரிவாள்…
சரி தவறு என்பதற்கான அவனது கோட்பாடுகள் வேறு… அது சமூக விழுமியங்களிலிருந்து மாறுபட்டது. அதன் சாட்சி, அவனது அறிவு மட்டுமே… வேறு எதற்கும் கட்டுப்படாதது அந்த கோட்பாடுகள்.
இப்போது மகாவை அருகிலிருந்து பார்க்கும் போது அறிவு கண்டிப்பாக வேலை நிறுத்தம் செய்து விடுகிறது. அவளோடு முழுவதுமாக ஆழ்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் அவனது மனதுக்கும், நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவனது மனையாளின் மனதுக்குமான போராட்டம், என்ன சொல்வது? காயம் இருவருக்கும் பொதுவானது அல்லவா!
அவசரமாக காபியை கலந்து கொண்டு வந்தாள் மஹா. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. நிறைய அழுதிருப்பாள் போல… அவளால் அழ முடிகிறது… பெண்களுக்கு அழுவதற்கான லக்ஸுரி இருக்கிறது… ஏனென்றால் அவர்கள் பெண்கள்… ஆண்களுக்கு அந்த லக்ஸுரி இல்லை… மறுக்கப்படுகிறது… நீ ஆண் அழக்கூடாது என்று சிறு வயது முதல் போதித்து வளர்க்கப்படுகிறான். ஏன்? காயம் இருவருக்கும் ஒன்று என்றால் வலியும் ஒன்றுதானே? அந்த வலி தரும் கண்ணீர்? அது மட்டும் எப்படி வேறாக முடியும்?
ஆண் என்பவன், தன்னுடைய வேதனைகளை வெளிக்காட்டக் கூடாது, உணர்வுகளை வெளிக்காட்டக் கூடாது, வலிகளை பற்றி பேசக்கூடாது, முக்கியமாக அழவே கூடாது என்றெல்லாம் சமூகத்தின் மூளையில் பதிந்து வைத்தது யார்?
அழ தோன்றினால் அழ வேண்டும்… இப்போது அவனுக்கு அழ தோன்றியது… மஹாவின் வேதனைகளை பார்க்கும் போது அழ தோன்றியது. ஆனால் அழ முடியாது.
கடந்து வந்த அவமானங்கள் அது போல அல்லவா!
வெளிப்படையாக யாரிடமும் பேச முடியாத அவமானங்கள்… உயிராக நினைத்தவளிடமே தள்ளி நிற்க செய்த அவமானங்கள்… சற்று அவகாசம் கேட்டவளை, வற்புறுத்தி தன்னுடைய சுயநலத்துக்காக, அவமானங்களை மறப்பதற்காக திருமணம் செய்து கொண்டு, அவளையும் காயப்படுத்துவதின் வேதனையையும் உள்ளுக்குள் அவன் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறிவாளா?
கண்டிப்பாக மாட்டாள்… ஆனால் அத்தனை வேதனையும் உண்மை… அவளது கண்களில் கண்ணீரை கண்ட போது அதற்கு காரணமானவனை அழித்து விட வேண்டும் என்ற கோபம் வந்தது… ஆனால் இப்போது அதன் காரணமே தானாகி போனதின் வேதனையை யாரிடமுரைக்க?
அவனையும் அறியாத பெருமூச்சு… காபியை வாங்கிக் கொண்டவன், அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான்… முகம் வீங்கி சிறுத்து இருந்தது. மனைவியின் முகத்தில் கவலைக் கோடுகள் தென்படுமானால், அது கணவனால் மட்டுமே அல்லவா!
தான் கையாலாகாதவன் என்று உரைக்கிறதா அந்த கவலைக் கோடுகள்?
இன்னமும் முக்கால் பேண்ட்டில் தான் இருந்தாள்.
தலகுப்பாவில் அவன் கண்ட மகா இப்போது நினைவுக்கு வந்தாள். அப்போதும் இதுபோலத்தான் தான் வாங்கிக் கொடுத்த த்ரீ போர்த், டிஷர்ட்டில், தலை குளித்து அப்படியே முடியை வழிய விட்டு வந்தவளை பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. கண்கள் திரும்ப திரும்ப அவளையே சரணடைந்து இருந்தது.
அப்போது அவள் முகத்தில் இருந்த அப்பாவித்தனமும், தெளிவும், தைரியமும், துணிச்சலும் நிச்சயமாக இப்போது இல்லை. அத்தனை தெளிவானவளை தன்னுடைய காதல் இந்தளவுக்கு காயப்படுத்த வேண்டுமா?
வலது கையில் காபி கோப்பையை வைத்துக் கொண்டு, இடது கையை அவளை நோக்கி நீட்டினான், வாவென்று கண்களால் அழைத்தபடி!
மூக்கு சிவந்து விடைக்க, அவனது முகத்தை நேராக பார்க்காமல், தலை குனிந்தபடி, அவனது கையை பிடித்தவள், அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
“இன்னைக்கு வேலை இருக்கு மஹா… நைட் வர நேரமாகிடும்… வேணும்னா நீ பெசன்ட் நகர் போயேன்! நானும் கார்த்திக்கும் வேலை முடிச்சுட்டு அங்க வந்துடறோம்… அங்க இருந்து உன்னை பிக் அப் பண்ணிக்கறேன்…” என்றவனுக்கு பதில் கொடுக்கும் மனநிலை அவளுக்கு இல்லை.
“ம்ம்ம்… ஆஸ் யூ விஷ்…” என்று கூற,
“நாளைக்கு ஈவினிங் மோஸ்ட் ப்ராபப்லி நான் ப்ரீயாத்தான் இருப்பேன்… வெளிய எங்கயாவது போலாமா?” என்று கேட்க, என்ன வேலையென்று கேட்கவில்லை அவள்.
“ம்ம்ம்ம்… ஆஸ் யூ விஷ்…” என்று மெல்லிய குரலில் கூற,
“எங்க போலாம் சொல்லு…” என்றான், காபியை சிப்பியபடியே!
“ஆஸ் யூ விஷ்…” என்றவளை திரும்பிப் பார்த்தான்.
“உனக்கு எங்க போகணும்?” என்று கேட்க,
“ஆஸ் யூ விஷ்…” என்றாள். அவள் தன்னுடைய நினைவிலேயே இல்லை என்பது புரிந்தது.
“என்னோட விஷ் படி தான் எல்லாம் நடக்குதா மஹா?” என்று சற்று புன்னகையோடு கூறியவன், “அதை பற்றியெல்லாம் நான் நினைக்கக் கூட இல்லடா… சியர் அப்… நார்மலாகு…” என்று அவளை சமாதானப்படுத்த முயல, நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்களில் கண்ணீர்!
“உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா ஷ்யாம்?” என்று கேட்க, அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
உள்ளுக்குள் டன் டன் னாக ஏமாற்றம் இருக்கிறது தான். ஆனால் அவளது கண்ணீரின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையை அவனால் வரவேற்க முடியவில்லை.
“ப்ச்… அதை விடு… லைஃப்ல நமக்கு இன்னமும் எவ்வளவோ காலம் இருக்கு… நமக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கு… அதை பார்க்கலாம் மஹா… ஒரு நாள் உன்னால என்னை ஏத்துக்க முடியும்ங்கற நம்பிக்கை இருக்கு…” அவளது கழுத்தில் கையை போட்டு, தன்னோடு சேர்த்து அணைத்தபடி அவன் கூற, அவளது முகம் இன்னமும் குழப்பத்தை சுமக்க ஆரம்பித்தது.
“எனக்கு அந்த நம்பிக்கையே வர மாட்டேங்குதே…” என்றவளின் குரலில் அத்தனை நிராசை!
“வரும்… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…”
“எனக்கு இல்லையே…” என்றவளின் கண்களில் அத்தனை வலி. அவளது மனதின் வலி!
“சரி… அதனால என்னடா? இதெல்லாம் ஜஸ்ட் பார்ட் ஆப் லைப் தானே தவிர, இதுவே லைப் கிடையாது…” என்று முடிந்தவரையில் தன்னைத்தானே சமாதானமும் செய்து கொண்டு, அவளுக்குமாக கூற, அவளது கண்களில் கலக்கம்!
இன்னும் என்ன என்று ஷ்யாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தலை குனிந்தவள், தயங்க,
“என்ன மஹா?” என்று இவன் கேட்க,
“இல்ல… அதாவது…” என்று இழுக்க,
“சொல்லு…” என்றான் ஷ்யாம்.
“ம்ம்ம்… அதாவது… பழைய லைஃப்க்கு போக எவ்வளவு நேரமாகிட போகுதுன்னு கேட்டியே… நான் இப்படியே… இருந்தா… அப்படி…” என்று தயங்கியபடி கூறியவள், சற்று நிறுத்தி, முகத்தை மூடிக் கொண்டாள். கையால் முகத்தை தாங்கியபடி! அவளையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ஷ்யாம். அதன் பின், சற்று நிதானமானவள், “விட்டுட்டு போயிடுவியா?” என்றவளின் கண்களில் கண்ணீர்.
அந்த நொடியில் என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. தன்னுடைய காதலை இப்படிக் கூட சந்தேகப்பட இடமுண்டா என்று தான் தோன்றியது. தான் அவளிடம் வெளிப்படுத்திய முறையில் தவறு நேர்ந்து விட்டதா? நோக்கமில்லாமல் கோபத்தில் சொன்ன வார்த்தைகளின் பிரதிபலிப்பு.
மனதை வாள் கொண்டு அறுப்பது போல தோன்றியது…
அதற்கு மேலும் அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை. விளக்கம் கொடுத்து தன்னை நிலை நிறுத்தவும் பிடிக்கவில்லை. மெளனமாக எழுந்தவன், அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டான்.
அவளிடம் இன்னமும் ஒரு வார்த்தை பேசினாலும் வெடித்து விடும் மனநிலையில் இருந்தான்.
“ஷ்யாம்…” என்று அழைக்க காதிலேயே வாங்காமல் வெளியேறியவன், அதே வேகத்தில் காரை ஸ்டார்ட் செய்து சீறினான். அவனது கோபமெல்லாம் வேகமானது.
கண்ணீரோடு அவன் போன திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா.
****
பிருந்தா பைரவியுடன் சமையலறையில் பேசிக்கொண்டே ஏதோ செய்து கொண்டிருந்தாள் போல… திருமண வேலைகள் எல்லாம் முடிந்த பின் அவளும் இப்போதுதான் அங்கு வந்திருந்தாள். பைரவிக்கும் அவளுக்கும் நன்றாகவே ஒத்துப் போனது. கார்த்திக்கின் காதல் தெரியும் முன்னர் அவளிடம் சற்று ஒதுங்கியே இருப்பார் பைரவி. வீட்டில் கார்த்திக் இருப்பதால் வயது பெண்கள் வருவதை ஊக்குவிக்க கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவர் அவர்.
இப்போது இருவரும், இப்படியும் இருக்க முடியுமா என்ற அளவில் ஈஷிக் கொண்டிருந்தனர். அதை முருகானந்தம் அவ்வப்போது கிண்டலடிப்பதும் உண்டு.
இப்போதும், “மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டாங்கப்பா… இனிமே நமக்கு வேலை இல்ல…” என்று கிண்டலாக கூறியவர், சோபாவில் அமர்ந்திருந்த மகளின் அருகில் அமர்ந்து கொண்டார்.
“என்னடா கண்ணா… ஒரு மாதிரியா இருக்க?” அவளது தலையை தடவிக் கொண்டே அவர் கேட்க,
“காலைல இருந்தே அப்படித்தான் இருக்கா மாமா… தலைவலியாம்…” சமையலறையிலிருந்து பிருந்தா குரல் கொடுக்க,
“அப்படியாடா லட்டு? ஒத்தை தலைவலி ஆரம்பமாகிடுச்சா?” என்று கேட்க, மெளனமாக அவரை பார்த்துக் கொண்டிருந்தவள், தலையாட்டி,
“ஆமாப்பா… மாத்திரை போட்டும் கேக்கலை…” என்றாள்.
பைரவி கொண்டு வந்த காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது. காலை, மதியம் என்று இரண்டு நேரமும் பட்டினி கிடந்தது வேறு… வெகுவாக சோர்ந்து போயிருந்தாள். கிருஷ்ணம்மாள் இருந்து இருந்தால் கூட சற்று ஆறுதலாக இருந்திருக்கும். அவள் தவறே செய்தால் கூட தன்னை விட்டுக் கொடுக்காதவர் தன்னுடைய பாட்டி மட்டும் தானே. அவர் தன்னை தலை சாய்த்து கோதி விட்டு, “என்னடா ராசாத்தி?” என்று கேட்கும் போது சோர்வெல்லாம் பறந்திருக்கும். அவரும் மகளை பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டிருந்தார்.
அப்போது வரை ஷ்யாம் ஒருமுறை கூட அழைக்கவில்லை. வேலை அதிகமாக இருக்கலாம்… கார்த்திக்குடன் சேர்ந்து தயாரிப்பாளர் சங்க தேர்தல் விஷயமாக அலைந்து கொண்டிருக்கிறான் என்று பிருந்தா சொல்லித்தான் தெரிந்தது. இன்று கார்த்திக்கின் குழு மனுத் தாக்கல் செய்ய போவதாக அவள் தெரிவித்து இருந்தாள். கார்த்திக்கின் பின்னால் இருப்பவன் ஷ்யாம். கார்த்திக்கை கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றியேயாக வேண்டும் என்று கூறினானாம். பிருந்தா பூரிப்பாக சொன்னதை உணர்வே இல்லாமல் கேட்டுக் கொண்டாள். அதையும் கூட அவன் சொல்லவில்லை. ஆனால் சொல்வதற்கு இவளும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
கேட்ட கேள்வியிலிருந்த தவறு அவன் போன பின் தான் உரைத்தது. அது போல நேரடியாக கேட்டிருக்கக் கூடாதுதான். ஆனால் மனதை அழுத்திக் கொண்டிருப்பதை யாரிடம் கொட்டுவது? யாரிடமும் வெளிப்படையாக கணவனை பற்றி பேசிவிட முடியாது. அதிலும் இவனை போன்றவனை எப்படி பேசுவது? தானே விட்டுக்கொடுப்பது போல ஆகிவிடாதா? யாரிடமும் பேச முடியாது என்ற நிலையில் அவனிடம் தானே கொட்ட முடியும்?
அவனது கோபமும் இன்னமும் மனதை அழுத்த, தலையை பிடித்துக் கொண்டாள்.
தந்தையின் முகத்தை பார்க்கும் போதே மனதுக்குள் எழுந்த கேவலை மென்று விழுங்கினாள்.
அவரே உடல்நிலை சரியில்லாதவர். அவரிடம் அழுது, அவர் என்னவோ ஏதோவென்று நினைத்துக் கொண்டு கவலையில் ஆழ வேண்டுமா என்று அவளது மனது கேள்வி கேட்டது.
பைரவி அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டுதானிருந்தார். புதிதாக திருமணமான பெண்ணுக்கான லக்ஷணம் அவளுடைய முகத்திலேயே இல்லை. வெறுமையாக, இறுக்கமாக, உணர்வுகளை வெளிப்படுத்திவிட கூடாது என்பதில் வெகு ஜாக்கிரதையாக அவள் இருப்பது அவருக்கு புரிந்தது.
“ஏதாவது பிரச்சனைன்னு உன்கிட்ட ஏதாவது சொன்னாளா பிருந்தா?” சமையல் மேடையில் அமர்ந்து கொண்டு பைரவி கொடுத்த காபியை சிப்பியபடி அவரிடம் வளவளத்துக் கொண்டிருந்தவளிடம் அவர் கேட்க,
“இல்ல த்தை… அப்படியொண்ணும் அவ சொல்லலை… ஆனா ஒரு மாதிரியேத்தான் இருக்கா… ஹனிமூன் போகலையாடின்னு கேட்டேன்… அது ஒண்ணுதான் குறைச்சலான்னு என்கிட்டயே கேக்கறா… ஏன்டின்னு கேட்டா தலைவலின்னு மழுப்பறா… அவங்க கிட்ட என்னன்னு கேட்டேன்… நான் பார்த்துக்கறேன் விடுங்கறாங்க… ஆனா மாமா கிட்ட எதுவும் சொல்லாதீங்க…” என்று முழுவதுமாக கொட்டி தீர்த்தவளை சற்று கவலையாக பார்த்தார் பைரவி.
“என்ன பிருந்தா இப்படி சொல்ற? ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனையா? ஆனா ஷ்யாம் தம்பியை பார்த்தாலும் அப்படியொண்ணும் தெரியலையே…” என்று கேட்க,
“அண்ணன் கேஷுவலா இருக்க மாதிரி தான் தெரியுது… இந்த மேடம் தான் என்னவோ மாதிரி இருக்கா… விடுங்க தானா சரியாகி விடுவா… இல்லைன்னா அண்ணன் பார்த்துக்குவார்…” என்று கூற, தாய் மனதுக்கு புரிந்தது. இது தானாக சரியாகக் கூடியது அல்ல என்று.
கண்டிப்பாக கார்த்திக்கிடம் பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவர், மஹாவை நோக்கி போனார்.
“மதியம் சாப்பிட்டியா மஹா?” என்று பைரவி கேட்டார். அவளது ஒய்ந்து போன தோற்றம் அவரை என்னவோ செய்தது.
“ம்ம்ம்…” என்று மட்டும் கூற, பிருந்தா சமையலறையில் இருந்து சப்தமாக கூறினாள்.
“இல்லத்த… என்னவோ விரதம்ன்னு அவ சாப்பிடவே இல்ல…” எனவும், பைரவி மஹாவை ஒரு மாதிரியாக பார்த்தார்.
“என்ன மஹா இது? புதுசா விரதமெல்லாம்? உன்னால பசி தாங்க முடியாதே?” என்று கேட்க,
“நீங்க வேற… நானும் அதை தான் நெனச்சேன்… ஆனா தில்லா சாப்பிடாம இருக்கா… இவ சாப்பிடாம எனக்கும் சாப்பிடவே மூட் இல்லாம, இப்ப வந்து தான் காபி குடிச்சேன்…” எனவும்,
“லூசாடி நீ? உன்னை யார் சாப்பிட வேண்டாம்ன்னு சொன்னது?” என்று பிருந்தாவை திட்டவும்,
“மஹா… பிருந்தா உனக்கு அண்ணியாக போறா… இந்த வாடி போடி எல்லாம் விட்டுடு…” என்று சற்று கறாராக கூறவும், மஹா தன் தாயை வெறித்து பார்த்தாள்.
எப்படி இருந்தாலும் இது அவர்களுடைய வீடு. பிருந்தா தான் அவர்களுடைய மருமகளாக போகிறவள். தன் தாயும் கூட இப்போது அன்னியமாக தோன்ற ஆரம்பித்து இருந்தது மஹாவுக்கு.
ஆனால் இந்த மனநிலை ஒவ்வொரு பெண்ணும் சந்திப்பது தான். போன வீட்டிலும் ஒன்ற முடியாமல், பிறந்த வீட்டிலும் அந்நியப்படும் அந்த நேரத்தை எல்லோராலும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. இருக்கும் குழப்பத்தோடு இந்த குழப்பமும் சேர்ந்து கொள்ள, மஹாவின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் கோர்த்தது.
“ஏய்… என்னடி? ஏன் அழற?” ஒன்று போல பதறிக் கொண்டு வந்தார்கள் பைரவியும் பிருந்தாவும்.
“உனக்கு இப்ப பிருந்தா தானே முக்கியமா போய்ட்டா… நான் இப்ப யாரோதானே… போ.. உன் மருமகளையே கொஞ்சு… கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே இப்படி பண்ற… ஆகிட்டா என்னையெல்லாம் கண்டுக்கக் கூட மாட்ட…” என்று சிறு பிள்ளையாக அழவும், பிருந்தாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஏய் லூசு… என்ன இப்படி சின்ன பிள்ளை மாதிரி? மம்மி என்ன சொன்னாங்க? அண்ணின்னு தானே? ஏன்டி என்னை அண்ணின்னு சொல்ல மாட்டியா?” என்று கிண்டலாக கேட்க, அவளை முறைத்தாள்.
“ஏன் பாப்பா… கல்யாணத்துக்கு அப்புறமும் நீ இப்படியே கூப்பிட்டா அண்ணன் கோவுச்சுக்க மாட்டானா? பார்க்கறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா? இப்ப நீ பொறுப்பான நிலைல இருக்க… அதனால தான்டா சொன்னேன்…” என்று பைரவி கூறவும், சற்றாக சமாதானமடைந்தவள், தந்தையை நெருங்கி அமர்ந்து கொள்ள, அவள் முறுக்கிக் கொண்டதை பார்த்தவர் புன்னகைத்தார்.
“ஏய்… மாமியாரும் மருமகளும் சேர்ந்துகிட்டு என் புள்ளைய கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களா? நான் இருக்கேனாக்கும்…” என்று அவளை அணைத்துக் கொள்ள,
“ப்பா… எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் குடுமிய பிடிச்சுக்குவாங்க… அப்ப நாம பார்த்துக்கலாம்…” என்று கண்ணை துடைத்தபடி மஹா சிரிக்க,
“ஆமா… எப்படி இருந்தாலும் மாமியார் மாமியார் தான்… மருமக மருமக தான்..” என்று இவரும் சிரிக்க, பைரவியும் பிருந்தாவும் மேல் பார்வையாக பார்த்துக் கொண்டனர்.
“நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குமாம்…” என்று முருகானந்தத்தின் தலையில் நங்கென்று கொட்டு வைத்தவர், உள்ளே போக, மற்ற இருவருக்கும் அடக்க முடியாத சிரிப்பு.
இருவரையும் பார்த்து, “ஏன்… நல்லாதானே போயிட்டு இருந்துது… ஏன் இப்படி?” என்று பாவமாக கேட்க,
“அப்பா மண்டைல கொண்டை…” என்று கிண்டலாக சிரித்தாள் மஹா. வாயை மூடிக்கொண்டு சிரித்தாள் பிருந்தா. என்ன இருந்தாலும் மாமனாராகிற்றே!
“எல்லாம் நேரம் தான்…” என்று சிரித்தார்.
அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை மாற, பைரவி உணவு ஊட்ட, பிருந்தாவுடன் கேலி பேசிக்கொண்டு, தந்தையை கலாய்த்துக் கொண்டு கழிந்தது நேரம்.
“சரி மஹா… நான் கிளம்பறேன்…” என்றாள் பிருந்தா. மணி ஏழாகி இருந்தது. தந்தை வர எப்படி இருந்தாலும் பத்து மணியை தாண்டி விடும். வீட்டில் இருந்தால் தனியாக இருக்க நேரிடும் என்பதால் இப்போதெல்லாம் இங்கு தான் நேரத்தை கழித்துக் கொண்டிருந்தாள். அதனாலேயே பைரவிக்கு அவசரம், கார்த்திக் திருமணத்தையும் விரைவில் முடித்து விட வேண்டுமென்று.
ஆனால் அவனோ, ‘லவ் பண்றேன் ஆனா இப்ப கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்று முரண்டிக் கொண்டிருந்தான்.
“அடேய் பையா… இதென்னடா இப்படியொரு ஸ்டேட்மென்ட்” என்றும் கூட இருவருமாக கேட்டு விட்டனர்.
“பிருந்தா படிச்சு முடிக்கட்டும்…” என்று பிடிவாதமாக கூற,
“படிக்கறதுன்னா இன்னும் எம்டி அப்புறம் என்னன்னவோ படிக்கலாம்… ஆனா கல்யாணம் இப்பத்தான பண்ண முடியும்?” என்று வேறு பிருந்தாவின் தந்தையே கேட்டு விட்டாலும், அவனுக்கு என்னவோ அதில் ஒப்ப முடியவில்லை. எம்பிபிஎஸ் ஆவது முடிக்கட்டும் என்பது அவனது பிடிவாதம்.
முதலில் முகம் கொடுக்காமல் இருந்த பிருந்தாவும், இப்போது ஒருவாறாக சமாதானம் ஆகிக் கொண்டாள்.
“என் வண்டியை நீ எடுத்துட்டு போய்டு பிருந்தா… காலைல நான் அவங்க கூட வந்துக்கறேன்…” என்று கூறினாள் மஹா.
“ம்ம்ம்… ஓகே டி…” என்ற பிருந்தா, எதேச்சையாக தொலைக்காட்சியை பார்க்க, அதில் அப்போதுதான் தயாரிப்பாளர் சங்க தேர்தலைப் பற்றி கூறிக்கொண்டிருக்க,
“ஏய்… உங்க அண்ணாவ பாரேன்…” புன்னகையோடு பரபரப்பானாள் பிருந்தா.
அவசரமாக தொலைகாட்சியை பார்த்தாள் மஹா. கார்த்திக் மனுதாக்கல் செய்யும் காட்சி.
“ஏய்… ஷ்யாம் அண்ணாவும் இருக்காங்க…” உடன் நின்றிருந்தான் ஷ்யாம். கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக! மற்ற அத்தனை பேரும் மனுதாக்கலில் பரபரப்பாக இருந்தனர்.
பெருமையாக பார்த்தாள் மஹா.
“அத்தை இங்க வாங்க…” உள்ளிருந்தவரை அவசரமாக அழைத்தாள். பதறியபடி வந்தவர், கார்த்திக்கையும் ஷ்யாமையும் சந்தோஷமாக பார்க்க,
“மாப்பிள்ளையால தான் கார்த்திக் இந்தளவு இருக்கான் மஹா… இல்லன்னா இந்த பீல்டே வேண்டாம்ன்னு ஓடின பையன் அவன்…” என்று பூரிப்பாக கூறிக் கொண்டே தொலைகாட்சியை பார்த்தார். அது என்னவோ உண்மைதான் என்றாலும் ஷ்யாமுடைய நோக்கம் என்னவென்று யாருக்கு தெரியுமென்று தான் தோன்றியது. ஆனால் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.
“ஓடினதே உன் மாப்பிள்ளையால தான…” சிரித்துக் கொண்டே சொன்ன மஹாவை கடுமையாக பார்த்தார் பைரவி.
“பழசை பேசி இப்ப என்னவாக போகுது மஹா? இப்படித்தான் அங்கயும் பேசறியா?” என்றார் கோபமாக. ஒரு தாயாக அது அவரது தவிப்பு. எப்போதும் போல இந்த பெண் வாயை விட்டுவிட கூடாதே என்று இருந்தது அவருக்கு. ஆனால் வாயை விட்டு தானும் புண்ணாகி, அவனையும் புண்ணாக்கிக் கொண்டுதானிருக்கிறாள் என்பதை யார் சொல்ல?
“என்ன வந்த புள்ளைக்கிட்ட உன் கோபத்தை காட்ற பைரவி?” என்று மஹாவை தன்னோடு அணைத்துக் கொண்டார் முருகானந்தம்.
“ம்ம்ம்… நல்லா கொஞ்சுங்க… அங்க என்ன புள்ளைய வளர்த்து வெச்சு இருக்காங்கன்னு நம்மளை பாட்டு பாடினா நல்லா இருக்கும்…”
“எதுக்கு பாடப்போறாங்க? என் பொண்ணு கிடைக்க அவங்க கொடுத்து வெச்சு இருக்கனும்ல…” எப்போதும் போல பெண்ணை பற்றி பெருமை பேச, பைரவி முறைத்தார்.
“பொண்ணு மேல பாசம் இருக்க வேண்டியதுதான்… ஆனா அது வெறியாகிட கூடாது மாமா…” நிதர்சனத்தை பைரவி எடுத்துக் கூற,
“அப்படி கிடையாது பைரவி… புள்ளை வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கு… அதுகிட்டப் போய் இப்ப நியாயம் பேசிட்டு இருக்க? இன்னொரு வீட்டுக்கு போய்ட்ட பிள்ளை… அதை நாம தான கொண்டாடனும்?” என்று சிறிய குரலில் கேட்க, பைரவி எந்த பதிலும் கூறவில்லை.
தொலைகாட்சியில் காட்சி மாறியிருந்தது. தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அனைவருமாக பேசிக் கொண்டிருப்பதை போல காட்ட, கார்த்திக் ஷ்யாமுக்கு அருகில் சௌஜன்யா!
ஷ்யாம் எதையோ கூற, அவனது இடையை வளைத்துப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்தாள் சௌஜன்யா. அதை கேமராவும் ஜூம் செய்து கொண்டிருந்தது.
பார்த்துக் கொண்டிருந்த பைரவி திடுக்கிட, பிருந்தாவும் அதிர்ந்து மகாவை பார்க்க, அவள் தொலைகாட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இவ என்னடி வெட்கம் கெட்டவளா இருக்கா? ஒரு ஆம்பிளை இடுப்பைப் புடிச்சுக்கிட்டுத்தான் சிரிப்பாளாமாம்?” என்று கடுகடுத்தவர், “இந்த மாப்பிளை தம்பிதான் தள்ளி நின்னா என்ன?” என்று கேட்க, அருகில் நிற்பதை பார்த்தற்கே இப்படியா என்று நகைக்க தோன்றியது மஹாவுக்கு.
“இந்த கார்த்திக் பக்கத்துல நின்னுட்டு என்ன பண்றான்?” எரிச்சலாக கேட்ட பைரவியை ஒரு மார்க்கமாக பார்த்தார் முருகானந்தம். ஷ்யாமை பற்றி ஓரளவு அறிந்தவர் அவர். இந்த விஷயத்தில் தான் ஏதாவது பேசினால் மஹாவின் மனது காயப்பட்டு விடும் என்பதனால் அமைதி காக்க,
“ஏய் மஹா… உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி வை… இந்த மாதிரி பொம்பிளைங்களை எல்லாம் பக்கத்துல சேர்க்கக் கூடாதுன்னு…” என்று பட்டாசாக பொறிந்தவரை பிருந்தா, “அத்தை…” என்றழைத்து மகாவை கண்களால் காட்டி அடக்கினாள்.
தொலைகாட்சியை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மஹா, உணர்வற்று இருந்தது அவளது பார்வை!





