அத்தியாயம் ஐந்து
கௌரவம்!
இந்த ஐந்தெழுத்து வார்த்தைக்காகப் புதைக்கப்படும் உண்மைகள் எத்தனை? மறக்கப்படும் நியாயங்கள் எத்தனை? பஞ்ச மகா பாதகத்தைக் கூட நியாயப்படுத்திப் பேசுவது எதற்காக?
வெறும் இந்த ஐந்தெழுத்து வார்த்தைக்காக!
காதலித்துத் திருமணம் செய்தவர்களைக் கொலை செய்துவிட்டால் இவர்களது கௌரவம் மீண்டுவிடுமா? நடந்ததுதான் மறைந்துவிடுமா? அப்படி அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றி மட்டும் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இறந்த பின் எடுத்துச் செல்ல முடியுமா? கைப்பிடி சாம்பலில் முடிகிற வாழ்க்கைக்கு இவர்கள் பூசும் வண்ணங்கள் தான் எத்தனை?
சக்திவேலுக்கு மனம் கொதித்தது. நடந்தது அநியாயம் என்று தெரிந்தும் பேச முடியாத சூழ்நிலையில் என்னை நிறுத்தி விட்டாயே ஆண்டவா என்று கடவுளை நொந்து கொண்டிருந்தான். இப்போதும் அவர்களது சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியும் தான், ஆனால் எந்த அடிப்படையில் கேட்பது? எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு கேட்பது?
சொல்லி வைத்தது போல அனைவரும் ஒன்றை போலவே பேசி நடந்த அநியாயத்தை மூடி மறைப்பவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? இரண்டு கொலைக்குச் சமூகமே துணை போகிறது என்றால், அவர்களது மனதில் சாதி எந்த அளவிற்குப் புரையோடிப் போயிருக்க வேண்டும்?
ஒரு நாள் கூடத் திருமணம் முடிந்து வாழாமல் இறந்து போன அந்த காதல் உள்ளங்களை நினைத்து மனம் கலங்கினான். திருமணம் முடித்தவுடன் எங்காவது சென்றிருந்தாலாவது தப்பித்திருக்கக் கூடுமோ? பெற்றவர்களின் ஆசி வேண்டும் என்று அவர்களுக்காக வந்த தவறின் விலை… இன்று இரு உயிர்கள்!
கனமான மனதுடனே கல்லூரி டிரிப்புக்காகப் போக, சித்ரா, நந்தினியோடு வளர்மதியும் வரவில்லை. என்ன காரணமோ? ஒரு வேளை இறப்பு வீட்டில் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டான். சித்ராவின் வீட்டைத் தாண்டும் போது மனம் கனக்க, ஒரு நிமிடம் வேனை மெதுவாகச் செலுத்தினான்.
முன் வாசலில் அமர்ந்து சித்ராவின் தந்தை முத்துவேல் அழுது கொண்டிருக்க, வீட்டினுள் இருந்து பெண்கள் கதறுவது காதில் விழுந்தது. ச்சே, என்ன மனிதர்கள் இவர்கள்? செய்வதையும் செய்துவிட்டு, இப்படியும் நடிக்க முடியுமா?
அடுத்த ஒரு வாரம் அது போலவே கழிய, அன்று வேலுச்சாமியின் தோப்புக்குத் தேங்காய் லோடு ஏற்றச் சென்றிருந்தான். அவருக்குப் பதிலாக நந்தினி காய் கணக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, சக்திவேலுடைய மினி லாரி தோப்புக்குள் நுழைவதை வெறுமையான பார்வையோடு பார்த்தாள்.
அவனது வாகனம் நிற்பதைக் கண்டவுடனேயே காய் அடுக்குபவர்கள் மினி லாரியில் தேங்காய்களை ஏற்ற ஆரம்பித்து இருந்தனர். வேலுச்சாமி இல்லாததால் நந்தினியிடம்,
“எந்த குடோனுக்கு?”
“திருச்சி காந்தி மார்க்கெட்டாம்…” என்று கூறி முகவரியைச் சீட்டில் எழுதிக் கொடுத்து விட்டு, “படிக்கத் தெரியும் தானே?” என்று கேட்க, அவளுக்குப் பதிலை கூறாமல் கைபேசியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
“அண்ணா… சக்திவேல் பேசறேன்… கரூருக்கு எதாச்சும் லோடு இருக்கா?” அந்தப் புறத்தில் சாதகமாகப் பதில் வர,
“திருச்சி வர்றதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகிடும்ண்ணா…”
“…”
“சரிங்கண்ணா…” என்று பேசிவிட்டு வைத்தான். திரும்பி நந்தினியைப் பார்த்தவன்,
“ஆமா… என்ன கேட்ட நீ?” அவளைத் திரும்பக் கேட்கச் சொல்ல.
“ம்ம்ம்… படிக்கத் தெரியுமான்னு கேட்டேன்…” அதே போலவே கேட்க, அவளைக் கடுப்பாகப் பார்த்தவன்,
“இல்லம்மா மகாராணி… நாங்கல்லாம் படிக்கத் தெரியாத காட்டானுங்கதான். நீங்க படிச்ச அறிவாளிங்களை வெச்சே வேலை வாங்கிக்கங்க…” என்று அவளிடம் கொதித்து விட்டு,
“டேய் சின்னா… ஏத்துன காயை இறக்கு, எனக்கு வேற வேலை இருக்கு…” என்று கூறிவிட்டு நடையைக் கட்டினான்! அவன் போவதைப் பார்த்தவுடன் நந்தினிக்கு பதற்றம் சூழ்ந்தது. தந்தைக்குத் தெரிந்தால் தன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவாரே என்று பயந்து கொண்டு,
“சின்னா இறக்காத, நான் பேசிக்கறேன்…” அவசரமாகக் கூறிவிட்டுச் சக்திவேலை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.
“சக்தி… ப்ளீஸ் நில்லு…” அவனுடைய உயரத்திற்கு வேக நடையிட்டவனைப் பிடிக்கவே முடியாமல் நந்தினி சற்றுச் சப்தமாகக் கத்த, திரும்பி வந்தவன்,
“ஏன்? உனக்கெல்லாம் மரியாதையா பேசவே தெரியாதா? எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டியா?”
“எனக்குச் சட்டுன்னு வர மாட்டேங்குது… சாரி… நான் ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்…”
“என்னைக்குத் தான்மா நீ ஒழுங்கா பேசியிருக்க?”
“சரி… ஒரு தடவை சாரி கேட்டேன்னு ஓவரா அட்வைஸ் பண்ண ஆரம்பிக்காத…” என்று மீண்டும் கடுப்படித்தவளை முறைத்தான்.
“நான் ஒன்னு சொல்லட்டா? நீங்கல்லாம் மனசளவுல பெரிய ஜமீன்ங்கற நினைப்புலையே இருக்கீங்க. அதான் எங்களை மாதிரி ஆளுங்களைக் கண்டா அந்த கேப்பிடலிஸ்ட் புத்தி தானா வந்துடுதும்மா. இந்தப் பூஷ்வாத்தனம் உங்க ரத்தத்துல ஊறின விஷயம், அது மாறாது…” அவனது கருத்தைக் கேட்ட நந்தினி புருவத்தை உயர்த்தி,
“என்ன கம்யூனிசம் பேசறீங்களா? நீங்க என்ன கம்யூனிஸ்டா?” ஆச்சரியமாகக் கேட்க,
“உண்மையை எடுத்துச் சொல்ல கம்யூனிஸ்டாகத் தான் இருக்கணும்னு அவசியம் இல்ல…” ஆணித்தரமாகச் சொல்வதைக் கேட்டவளுக்கு அவனை வியப்பாக மட்டுமே பார்க்க முடிந்தது. மௌனமாக அவள் இருக்க,
“சரி சரி அதை விடும்மா… என்ன, மூணு பேரோட படிப்பும் அவ்வளவுதானா? அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பேசியாச்சாமே?”
சக்தி ஒரு மாதிரியான குரலில் அவளிடம் கேட்க, சட்டென்று அவளது கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. எவ்வளவு கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்திருந்தாலும் அதற்கான மரியாதை இவ்வளவுதானா என்கிற நினைவு அவளது சுயமரியாதையைப் பதம் பார்க்க,
“அது சம்பந்தமா உன் கிட்ட… சாரி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…” மெலிதான குரலில் அவனிடம் கேட்க,
“ம்ம்ம்… சொல்லும்மா… ஏன்? உன் கல்யாணம் இன்னும் முடிவாகலையா?” அவன் கேட்டவுடன் கோபமாக நிமிர்ந்தாள்.
“அந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்டே நடக்காது. அந்தப் பேச்சை விடுங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும், தப்பா நினைக்கக் கூடாது…” பலமான பீடிகையுடன் ஆரம்பித்தவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“அது நீ சொல்ற விஷயத்தைப் பொறுத்ததும்மா…”
“சித்ரா உங்களை லவ் பண்றா…” நேரடியாகக் கூறிவிட்டு அவனது கண்களைப் பார்க்க, ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமலிருந்தவன் அடுத்த நிமிடம் ‘லூசாப்பா நீயி’ என்பதைப் போல ஒரு லுக்கை விட்டான்.
“அதுக்கென்ன?”
“என்ன சக்தி… நான் கதையா சொல்றேன். அவ உங்களை லவ் பண்றா. இந்த கல்யாணத்துல இருந்து எப்படியாவது அவளைக் காப்பாத்துங்க, நீங்களே கல்யாணம் பண்ணிக்கங்க…”
“ஏம்மா… அந்தப் பொண்ணும் விஷத்தை குடிக்கவா?” உள்ளே கனன்று கொண்டு கோபத்தை ரொம்பவும் வெளிகாட்டிக் கொள்ளவில்லையென்றாலும், அவனால் ஒன்றும் தெரியாதது போலக் காட்டிக் கொள்ள முடியவில்லை.
அவன் இப்படிக் கேட்கவும் அவளால் மனதின் ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. இயலாமையும் ஆற்றாமையும் கண்களில் நீரை வரவழைக்க, சட்டென்று கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு விழுந்தது. கண்களில் நீரைப் பார்த்தவுடன் அவனுக்கும் ஏதோ தவறு செய்கிறார் போலத் தோன்ற,
“இங்க நின்னு பேசாதம்மா, நல்லா இருக்காது… நான் கிளம்பறேன்…” என்று கூறிவிட்டு அங்கு நிற்காமல் தேங்காய் லோடு ஏற்றிய மினி லாரியைக் கிளப்பிக் கொண்டு போனான். சக்தியின் வார்த்தைகள் அவளது இதயத்தைத் தைத்து இருந்தன.
***
“எனக்கு கல்யாணம் வேணாம் வேணாம் வேணாம்…” தலைவிரி கோலமாகக் கத்திக் கொண்டிருந்தாள் நந்தினி, தன் தாயிடம்!
“சொன்னா புரிஞ்சுக்கோ கண்ணு… அப்பாரு முடிவு பண்ணிட்டாங்க. இன்னைக்கு சாயங்காலம் மாப்பிள்ளை வீட்ல வராங்க, இன்னைக்கு காலேஜுக்குப் போக வேண்டாம்…” வேணி பாசத்தோடு கூறினாலும், குரலில் இருந்த உறுதி மீறிப் பேசி விடாதே என்றது. ஏதாவது அசம்பாவிதமாகி விட்டால் தனக்கு இருப்பது ஒரே பெண்ணல்லவா என்ற கவலை அவள் அன்னைக்கு!
“அம்மா… எத்தனை முறை உன்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்குப் படிச்சு ஐஏஎஸ் பாஸ் பண்ணணும்மா, கலெக்டராகணும். ப்ளீஸ் மா… என்னோட லட்சியத்தை இப்படி குழி தோண்டிப் புதைக்காதீங்கம்மா…” கண்ணில் நீர் வழிய கெஞ்சினாள்.
“பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்டி… புள்ளையை இப்படியா வளர்த்து வைப்பாங்க? எங்க காலத்துல எல்லாம் இப்படி எதிர்த்துப் பேசுனா வாயைக் கோணூசியால தச்சுப் போடுவாங்க… தச்சு…” நந்தினியின் அப்பத்தா இதுதான் சாக்கென்று மருமகளையும் சேர்த்துத் திட்ட.
“ஏய் கிழவி… இப்போ நீ உன் வாயை மூடப் போறியா இல்லையா? நானே நொந்து போயிருக்கேன், இதுல நீ வேற…” அப்பத்தாவைக் கடிகடியென்று கடித்து வைக்க.
“ஆமான்டி… இப்போ உங்க அப்பன் வருவான், அவன் கிட்டவும் இதே மாதிரி பேசு…” அப்பத்தா தனது மகனை இழுக்க,
“இது ஒன்னு தான் உங்களுக்கெல்லாம் தெரியும்…” அப்பத்தாவைப் பார்த்து கோபமாகக் கூறிவிட்டு தனது அன்னையிடம் திரும்பி,
“சரிம்மா… மாப்பிள்ளை வீட்ல இருந்து ஈவினிங் தானே வருவாங்க. அதுக்குள்ளே நான் வந்துடுறேன். டிசி சர்டிபிகேட்காச்சும் எழுதி கொடுத்துட்டு வர்றேன்ம்மா… ப்ளீஸ்…” அவள் கெஞ்சுவதைப் பார்த்த செல்விக்கு மனம் கனத்தது. அவரும் இது போன்ற அடக்குமுறைகளைத் தாண்டி வந்தவர் தானே.
“சரிம்மா… அன்னைக்கு மாதிரி லேட் பண்ணிடாம காலேஜ் விட்டவுடனே வந்துடு. எதாச்சும் தப்பாச்சுன்னா உங்க அப்பா என்னை வெட்டிப் போட்டுருவாங்க நந்தினி…” பயத்தோடு வழியனுப்பி வைத்த தாயை வெறுமையாகப் பார்த்தாள் நந்தினி.
ஒன்றும் பேசாமல் வேனில் ஏறியவள், தனது தோழிகளும் இல்லாததால் வானத்தை வெறித்துக் கொண்டு வந்தாள். தன் கண் முன் தனது எதிர்காலம் மிரட்டியது.
தனது வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சிறு வயது முதல் மனதில் பதிந்து போன தனது லட்சியம்…? வாழ்வது ஒரு முறைதானே? அதையும் மற்றவர்களுக்காக, அவர்களது ஆசைகளுக்காக, அவர்களது கௌரவத்திற்காக என்றே வாழ்ந்தாக வேண்டுமா என்று மனம் வெதும்பியது.
இன்னும் வேறு யாரும் வேனில் ஏறாமல் செந்திலும் இல்லாததால் தன்னை கவனிக்க யாருமில்லை என்கிற நினைவில் தனது நிலையை நினைத்து, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க, கைகள் துடைத்துக் கொண்டேயிருக்க, ஏதாவது அதிசயம் நடந்து விடாதா என்று மனம் ஏங்கியது!
கண்ணாடி வழியாக நந்தினியைப் பார்த்த சக்திவேலுக்கு மனம் பிசைந்தது. அவள் இந்தளவு கலங்கி அவன் பார்த்ததில்லை. தைரியம் மிகுந்தவள், அவள் இந்தளவுக்குக் கலங்கிப் போயிருக்கிறாள் என்றால்…?
ஐந்து நிமிடம் தாமதமானாலும் பரவாயில்லை என்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓரமாக நிறுத்தினான். நிறுத்திவிட்டானே தவிர நந்தினியிடம் பேசத் தயக்கமாக இருந்தது. அன்று அவளே பேசியபோது முகத்தில் அறைந்தாற்போலக் கூறிவிட்டு, மறுபடியும் எப்படிப் பேச்சைத் துவக்குவது என்று யோசித்தான்.
டிரைவர் சீட்டிலிருந்து எழுந்து அவளை நோக்கி வந்தான். அவன் வருவதைப் பார்த்தவள் அவசரமாகக் கண்களைத் துடைத்தாள். அவளைப் பார்த்துப் பேசும் விதமாக அமர்ந்து கொண்டு,
“என்னம்மா பிரச்சனை?” என்று நேரடியாகக் கேட்க,
“ஒண்ணுமில்ல…” உள்ளே சென்ற குரலிலேயே பதிலளித்தாள்.
“அப்புறம் ஏன் இந்த அழுகை…”
சக்திவேல் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் உதடுகள் அழுகையில் துடிக்க அவனைப் பார்த்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் கட்டுப்படுத்த முடியாமல் போக, முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவனுக்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை. இது போன்ற சூழ்நிலைகள் அவனுக்குப் பழக்கமில்லாதது.
“ஏன்மா என்னாச்சு?” சற்று ஆதரவாக அவன் கேட்க, கேவிக்கொண்டே அவனைப் பார்த்து,
“எனக்குப் படிக்கணும்… ஐஏஎஸ் படிச்சு கலெக்டராகணும்…”
“ஏன்… கல்யாணம் பேசிட்டாங்களா…” அவன் புரிந்து கொண்டு கேட்க, அவள் கேவிக்கொண்டே தலையாட்டினாள்.
“ஆமா…”
அந்தப் பெண்ணைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது சக்திவேலுக்கு. காலேஜ் டிரிப் அடிக்க ஆரம்பித்த எட்டு வருடங்களில் எத்தனை மாணவிகளைப் பார்த்திருப்பான்! படிக்கும்போது லட்சியக் கனவுகளைச் சுமந்து கொண்டு படிக்க, அவர்களது வீட்டில் அந்த லட்சியங்களை அங்கீகரித்து அதற்குத் துணையாக இருப்பவர்கள் வெகு சொற்பம் என்று அவன் அறியாததா? திருமணமாகும் வரை இந்த வலி இருக்கும், காலம் போகப் போக மறைந்து விடும் என்று எண்ணிக் கொண்டான். அதையே அவளுக்கும் கூறினான்.
“இதெல்லாம் சகஜம் தான்… கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியா போயிடும். பெத்தவங்க பிள்ளைங்களுக்குக் கெடுதல் நினைக்க மாட்டாங்க…” என்று பொறுமையாக எடுத்துக் கூற,
“அப்போ புனிதாக்கா? அவங்க ஏன் விஷத்தைக் குடிச்சாங்க?” சக்திவேலைப் பார்த்து அவள் கேட்க, புனிதாவையும் அவளது கணவனையும் நினைக்கும்போது சக்திவேலின் ரத்தம் கொதித்தது! கைகள் இறுக,
“அது அவங்க கௌரவத்தைக் காப்பாத்திக்கம்மா…” அவனுக்கே ஒப்புதல் இல்லாத பதிலை அவளுக்கு அவன் தர,
“அப்போ கௌரவம்ன்னு வந்தா பெத்த பாசம் கண்ணுக்குத் தெரியாது… அப்படிப்பட்டவங்க சொல்றதை நம்பி ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டணுமா?”
அவள் கேட்ட கேள்வி வெகு நியாயமாக இருக்க, அவனால் அதற்குப் பதில் கூற முடியவில்லை. மௌனமாக இருந்தவனுக்கு அவனுடைய ஐந்து வயதில், தான் எரிவதைப் பற்றிக் கவலைப்படாமல் ‘என் பிள்ளையைக் காப்பாத்துங்க’ என்று தீயிலிருந்து மகனை எறிந்த தன் தாயின் நிழல் பிம்பம் அவன் கண் முன்னே வந்து போனது. இதில் யார் பாவப்பட்டவர்கள்?
“எது நடந்தாலும் நன்மைக்கேன்னு எடுத்துக்கம்மா… நீ கலெக்டராகணும்னு விதி இருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. எதை நினைச்சும் கவலைப்படாத…”
அவளுக்கு ஆதரவாகக் கூறிவிட்டு வேனைக் கிளப்பச் சென்றான். நந்தினிக்கு மனதின் பாரம் பெருமளவில் குறைந்தது போல இருந்தது!





