arrow_back
தித்திக்குதே அத்தியாயம் நான்கு
தித்திக்குதே chevron_right பகுதி 4 / 26

அத்தியாயம் நான்கு

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மதிய நேரமாகையால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது… டிக்கெட்டை நந்தினி எடுக்க, மற்ற இருவரும் பதற்றத்திலேயே இருந்தனர். வீட்டிற்குத் தெரியாமல் இதுபோல தியேட்டருக்கு வருவது முதல் முறை என்பதால், வியர்த்துக் கொட்டியது சித்ராவுக்கும் வளர்மதிக்கும்! நந்தினிக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

“ஏய்… பயமா இருக்குடி…” நந்தினியின் கையைப் பிடித்துக் கொண்டு சித்ரா புலம்ப.

“ஆமா நந்து… எப்போ யார் கண்ல விழுவோம்ன்னு திக்கு திக்குன்னு இருக்கு…” வளர்மதி அவளது பங்கிற்குப் புலம்ப, இருவரையும் பார்த்து முறைத்தாள் நந்தினி!

“அம்மா பரதேவதை… கேஷுவலாக இருந்தா கூட யாரும் பார்க்க மாட்டாங்க. இப்படி ரெண்டு பேரும் நடுங்கிட்டு இருந்தா, இது விவகாரம்ன்னு முடிவு பண்ணிடுவாங்கடி லூசுங்களா… சித்த நேரம் வாயை வெச்சுட்டு சும்மா இருங்கடி… டிக்கெட் எடுத்துட்டு உள்ள இருட்டுல போய் உட்கார்ந்துட்டா யாருக்கும் ஒன்னும் தெரியாது…” மெலிதான குரலில் இருவரையும் வறுத்து எடுத்தாள்!

ஒருவழியாக டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே ஓரமாகச் சென்று அமர… எந்தெந்த நாற்றமோ கலந்து கட்டி அடிக்க, எப்படியோ சமாளித்தார்கள். படம் ஆரம்பித்தது, அனைத்தையும் மறந்துவிட்டு ரசிக்க ஆரம்பித்தார்கள்! சிறிது நேரம் போக, வளர்மதிக்கு பின்னே ஏதோ ஊர்வது போலத் தெரிய, அவஸ்தையாக நெளிய ஆரம்பித்தாள்.

“ஏய்… சித்ரா… ஒரு சீட் தள்ளி உட்காரேன்…” நந்தினி நடுவில் அமர்ந்திருக்க, சித்ராவிடம் கிசுகிசுப்பாகக் கூறினாள்!

“ஏய்… ஏன்டி…” நந்தினி கேட்க, இவளிடம் கூறினால் ரசாபாசமாகிவிடுமெனப் பயந்து,

“ஒன்னுமில்லடி… எனக்கு மறைக்குது, அதான்…” வேறு ஒன்றும் சொல்லாமல் ஒரு சீட் மூவரும் மாற்றி அமர்ந்தனர். இப்போது சித்ராவுக்குப் பின்னால் எதுவோ நெளிய, அவஸ்தையாக வளர்மதியைப் பார்த்தாள். அவளும் என்னவென்று சைகையால் கேட்க, சித்ரா மீண்டும் அவஸ்தையாக நெளிய, பேசாமல் இன்னொரு சீட் மாற்றி அமர்ந்தனர்.

“ஏன்டி படுத்தறீங்க…” இருவரையும் திட்டிவிட்டு சீட் மாறி அமர்ந்த நந்தினி, சிறிது நேரம் தடங்கலில்லாமல் படத்தைப் பார்க்க, பின் அவளுக்கும் பின்னே ஊர்வது போல இருந்தது. என்னவென்று குனிந்து ஆராய, பின்னால் அமர்ந்திருந்த நபர்களில் யாரோ ஒருவனது கால் சீட்டின் பின் வழியாக வந்து அவளது பின்பக்கத்தைத் தடவிக் கொண்டிருப்பது தெரிய, நந்தினியின் முகம் கோபத்தில் சிவந்தது. ஒன்றும் பேசாமல் தன் தோழிகள் இருவரையும் பார்க்க, அவர்களும் சங்கடமாக ‘ஆமென்றனர்’.

அதே கோபத்தோடு பின்னால் திரும்பிய நந்தினி,

“ஹலோ… உங்களுக்குக் கால் வைக்க இடமில்லைன்னா வாங்க, இப்போவே தியேட்டர் மேனேஜர்கிட்ட சொல்லி தனி சீட் வாங்கித் தர்றேன். இன்னொரு தடவை கால் இந்தப் பக்கம் வந்ததுன்னா மரியாதை இல்ல, சொல்லிட்டேன்…” அவள் கடுப்பாகக் கூறியதைக் கேட்ட அவன், பதில் பேசாமல் காலை எடுத்துவிட, பின்னர் அந்தத் தொல்லையின்றி மூவரும் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது மணி ஐந்தே காலாகி இருந்தது.

அவசரம் அவசரமாகப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேக நடையிட்டவர்களுக்கு, பேருந்து கிடைக்க வேண்டுமே என்ற பயம் இருந்தது.

“ஏய்… நந்து… உனக்கு எந்த பஸ்ல ஏறணும்ன்னு தெரியுமாடி?” வளர்மதி அப்பாவியாகக் கேட்க,

“தெரியும் வளரு, வா…” அசால்ட்டாகக் கூறிவிட்டு நடையைத் துரிதப்படுத்தினாள். அந்த நிறுத்தத்தில் போய் மூவருமாக நிற்கும் போதே இன்னும் சிலர் பேருந்துக்குக் காத்திருந்தனர்.

“மணி வேற ஆகிட்டே இருக்குடி… பயமா இருக்கு. இவ்வளவு நேரமாகி நாம போனதே இல்ல…” சித்ரா பயந்து கொண்டே கூறினாள்.

“ஏய்… புலம்பிட்டே இருக்காதடி…” நந்தினி கடித்தாள். அவர்கள் நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்திற்குப் பின்னே தான் அந்த மொத்த மளிகை விற்பனை கடை இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு லோடு இறக்க வந்திருந்த சக்திவேலின் பார்வையில் பட்டனர் இந்த மூன்று பேரும். அவர்களுக்கு இருந்த பதற்றத்தில் யாரையும் கவனிக்காமல் பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, சக்திவேல் யோசனையில் முகத்தைச் சுருக்கினான்!

“இந்த பொடுசுங்க மூணும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு காலைல சொல்லுச்சே… இங்க என்ன பண்ணிட்டு இருக்குதுங்க…” அவன் ஏற்றி வந்த லோட்டைக் கடையாட்கள் இறக்கிக் கொண்டிருக்க, கடை ஓனரிடம் கணக்கைக் கூறிவிட்டு வெளியே வந்தவனின் பார்வையில் மூவரும் பட்டிருந்தனர்!

அவர்களை யோசனையாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஓனர் கேட்டார்,

“என்ன சக்தி… பார்வை எல்லாம் எங்கயோ இருக்கு போல…” இடக்காகக் கேட்டவரைப் பார்த்துச் சிரித்தான்.

“இல்லண்ணே… தெரிஞ்ச பசங்க… நம்ம வேன்ல தான் வருதுங்க. இப்போ போய் இங்க என்ன பண்ணிட்டு இருக்குங்கன்னு தெரியல, அதுவும் காலேஜ் யூனிஃபார்ம்ல…”

“இப்போல்லாம் இது காலேஜ் புள்ளைங்களுக்குச் சகஜம் சக்தி. இப்போ மணி என்ன?… அஞ்சே கால்… பக்கத்து தியேட்டர்ல மேட்னி பார்த்துட்டு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணுதுங்க, அதான் மேட்டரு…” சுலபமாக அவர் கூற,

“இல்லண்ணே… எனக்கு நல்லா தெரியும்… மூணு பேருமே நல்ல பிள்ளைங்க…” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, நான்கு பேர் கொண்ட குழு மூவரின் பக்கத்தில் போய் நின்றது. நால்வருமே பார்க்க நல்ல அபிப்பிராயம் வரும்படி இருக்கவில்லை. அவர்களில் ஒருவன் வேண்டுமென்றே நந்தினியை இடித்துவிட்டு அந்தப் புறமாகப் போக, நந்தினி கோபமாக அவர்களை முறைப்பது தெரிந்தது.

அவசரமாக அவர்களை நோக்கிப் போவதற்குள், இன்னொருவனும் நந்தினியை இடித்துவிட்டு,

“தியேட்டர்ல பெரிய இவளாட்டம் சவுண்டு கொடுத்த… இப்போ கொடு பார்க்கலாம்…” என்று கூறிக்கொண்டிருந்தான்.

நந்தினி மிகவும் ரௌத்திரமாக கையை ஓங்க, அவசரமாகச் சென்று அவளது கையை இறுகப் பற்றினான் சக்திவேல்.

யார் தன் கையை இவ்வளவு இறுக்கமாகப் பிடித்திருப்பது என்று கோபம் மாறாத முகத்தோடு திரும்பிப் பார்க்க, பின்னால் நின்று கொண்டிருந்தது சக்திவேல்! ஒரே நிமிடத்தில் கோபம் அனைத்தும் வடிந்து அந்த இடத்தில் பயம் சூழ்ந்து கொண்டாலும், அந்தச் சூழ்நிலையில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் நந்தினி. பதற்றத்தோடு நின்று கொண்டிருந்த மற்ற இருவரின் நிலையும் அதே!

பற்றிய கையை விடாமல்,

“என்னம்மா பிரச்சனை…” என்று மூவரையும் பார்த்துக் கேட்கவும், வளர்மதி அவசரமாகக் கூறினாள்.

“அண்ணா… நாங்க மூணு பேரும் படம் பார்க்கலாம்ன்னு வந்தோம். இவனுங்க அங்கேயே பிரச்சனை பண்ணானுங்க, நந்தினி திட்டிவிட்டுட்டா. இப்போ இங்கவும் பிரச்சனை பண்றானுங்கண்ணா…”

சக்திவேலிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று வளர்மதி கடகடவென உண்மைகளை ஒப்புவிக்க, ‘இதுதான் உங்க ஸ்பெஷல் கிளாஸ் லட்சணமா’ என்று ஒரு கோபப்பார்வை அவர்களைப் பார்த்தவன், “உங்களை பிறகு கவனிக்கிறேன்” என்று முறைத்துவிட்டு அந்த நால்வரிடம் திரும்பினான்.

“என்ன விஷயம்… என்னடா இங்க பண்ணிட்டு இருக்கீங்க?” கோபமாக அவர்கள் நால்வரையும் பார்த்து கேட்க.

“என்ன சாமி… நீ தான் வக்காலத்தா இவளுங்களுக்கு?” நந்தினியை இடித்தவன் நக்கலாகக் கேட்க, சக்தி பளாரென அறைந்தான் அவனது கன்னத்தில்!

“எங்க வீட்டுப் பொண்ணுங்களை இடிச்சது மட்டுமில்லாம நக்கல் மயிறு வேற கேக்குதாடா உனக்கு… நாயே… ஒழுங்கா திரும்பிப் பார்க்காம ஓடிடு… இன்னும் ஒரு நிமிஷம் கண்ணு முன்னால நின்னுட்டு இருந்தா தொலைச்சுடுவேன் தொலைச்சு…” இடித்ததும் இல்லாமல் மரியாதை இல்லாமல் பேசியவனிடம் சக்திவேல் காட்டிய ரௌத்திரத்தில் நால்வருமே அதிர்ந்தனர்.

“சாரி சார்… உங்க வீட்டுப் பொண்ணுங்களா?… தெரியாம இடிச்சுட்டோம்…” அவர்களில் இன்னொருவன் மன்னிப்புக் கோர,

“என்கிட்டே இல்ல… இவங்ககிட்டக் கேளு…” நந்தினியைக் காட்டினான். அதுவரையுமே அவளது கையை விடவில்லை, அந்த இறுக்கத்தை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“இவனுங்களை நானே நாலு சாத்து சாத்தியிருப்பேன்… அதுக்கு விடாம…” முகச் சுளிப்போடு கையை அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டு அவனுக்கும் கேட்பது போல முணுமுணுத்தவளைப் பார்த்துக் கனல் பறக்க முறைத்தான்.

“சாரிக்கா… சாரி…” மூவரிடமும் மன்னிப்புக் கேட்டவர்கள் ஓட்டமும் நடையுமாக ஓடினர். அதற்குப் பின்னரே அவளுக்கு விடுதலை கிடைத்தது. நந்தினி சிவந்து கன்றிப் போன தனது கையை ஆராய்ந்து கொண்டிருக்க, சக்திவேல் கைபேசியை எடுத்துச் செந்திலை அழைத்திருந்தான்.

“டேய்… காலேஜ் டிரிப்பெல்லாம் முடிச்சுட்டியாடா?” சக்திக்கு லோடு இறக்கும் வேலை இருக்கும் போது, காலேஜ் டிரிப்புகளைச் செந்தில் தான் பார்த்துக் கொள்வான்!

“முடிஞ்சிடுச்சுண்ணா… ஏன்ண்ணா கேட்கறீங்க?”

“இப்போ எங்க இருக்க?”

“டவுன்ல தான்னா இருக்கேன்… சிடி வாங்கிட்டுப் போயிடலாம்ன்னு வந்தேன்…”

“டேய்… கூமுட்டை… சிடி வாங்க உனக்கு பெரிய வண்டி கேட்குதா?” அந்த நிலையிலும் செந்திலைக் கடிக்க.

“இல்லண்ணா புதுப் பாட்டு எதுவுமே இல்ல, அதான்…” செந்தில் இழுக்க.

“சரி… அப்படியே பஸ் ஸ்டாண்ட் வந்துடு… ராஜா ஸ்டோர்ஸ் பக்கத்துல…”

“சரிண்ணா… இன்னும் ரெண்டே நிமிஷத்துல வந்துடுறேன்…”

கைபேசியை வைத்துவிட்டு மூவரையும் முறைத்தான்.

“இதுதான் உங்க ஸ்பெஷல் கிளாஸ் லட்சணமா?” அவன் சரியாகக் கேட்டாலே பதில் கூறுவது கடினம் எனும் போது, இப்படிக் கோபமாகக் கேட்டவனை நடுங்கிக் கொண்டு பார்த்தனர் மூவரும்.

“இல்ல… லாஸ்ட் செம்… ஒரே ஒரு படம் மட்டும் பார்க்கலாம்ன்னு…” வார்த்தைகள் தந்தியடிக்கச் சித்ரா கூற.

“ஏம்மா அதுக்குன்னு இப்படித்தான் வம்புல மாட்டிக்கறதா? இதுக்கு யாரு ஹெட்? இந்தா இங்க நிக்கறாங்களே… இந்த அதிகப்ரசங்கியா?” நந்தினியைக் காட்டி அவன் கேட்க.

“நான் அதிகப்ரசங்கியா?” கடுப்படித்தாள் நந்தினி.

“பின்ன… ஒழுங்கா இருக்கிற புள்ளைங்களையும் கெடுக்கறதே நீதானே? வேன்லதான் உன் வேலையைக் காட்டிக்கிட்டு இருந்த, இப்போ தியேட்டர் வரைக்குமா? ஒழுங்கா காலேஜ் போக முடியலைன்னா வீட்ல இருந்துக்க வேண்டியதுதானே… ஏன்மா மத்தவங்களையும் கெடுக்கற?”

“வேணாம்… உனக்கு இதுக்கு மேல மரியாதை இல்ல. இதோட நிறுத்திக்க… நீ ஒன்னும் எனக்கு அட்வைஸ் பண்ணத் தேவையில்லை…” நந்தினி கடுப்பில் எண்ணெயிலிட்ட கடுகாகப் பொரிய,

“நீ இப்படியே பேசு பொண்ணு… உங்க அப்பாகிட்ட சொல்லிடறேன். ‘உங்க பொண்ணு ஒழுங்கா காலேஜ் போகுதா வருதான்னு நீங்களே பார்த்துக்கங்க, என்னைக் கேட்காதீங்க’ன்னு சொல்லிடறேன்…” நந்தினியின் வீக் பாயிண்டில் சரியாக அடிக்க, அதற்கு மேல் பேச முடியாமல் வேறு புறத்தை நோக்கினாள்!

“சரி, இங்க நிற்காதீங்க… வேன் வர்ற வரைக்கும் அங்க கடைல உட்காருங்க. யாராச்சும் பார்த்தா நல்லா இருக்காது…” கூறிவிட்டு முன்னே செல்ல, மூவருமாக அந்த மளிகைக் கடைக்குச் சென்றனர், சுற்றியும் பார்த்துக் கொண்டே.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் செந்தில் வேனை ஓட்டி வர, மினி லாரியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவன் வேனை எடுத்துக் கொண்டான்.

“அந்த இரும்புக் கடை லோடை முடிச்சுட்டு ஊர் வந்து சேருடா… ஒழுங்கா பார்த்து ஓட்டிட்டு வா…” என்று கூறிவிட்டு வேனை ஸ்டார்ட் செய்ய, நிம்மதிப் பெருமூச்சுடன் மூவரும் வேனில் ஏறினர்!

***

வளர்மதியை இறக்கிவிட்டு சித்ராவின் வீட்டிற்கு வர, அவளின் வீட்டின் முன் கணிசமான கூட்டம் கூடியிருந்தது! கூடியிருந்தவர்களின் முகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்க, இந்தக் கூட்டம் தன்னால் தானோ என்று ஒரு நிமிடம் அரண்டு போய் நந்தினியைப் பார்த்தாள். வேன் நின்றும் இறங்காமல் பயத்தில் வெளிறிப் போயிருக்கும் சித்ராவைப் பார்த்த சக்திவேல், தான் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி, என்ன பிரச்சினையென்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்க,

“இந்தப் புனிதா பொண்ணு கீழத் தெரு பையனைக் கல்யாணம் முடிச்சுட்டு வந்திருச்சு தம்பி. அநியாயத்தைப் பாரு, ரெண்டும் எப்படிச் சட்டமா நிக்குதுங்க…”

புனிதா சித்ராவின் தமக்கை. படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தவளுக்கு அவர்களது சமூகத்திலேயே திருமணம் பேசி வைத்திருக்க, புனிதாவோ தான் ஆசைப்பட்ட தங்கவேலைத் திருமணம் செய்து முடித்துவிட்டு ஆசி வாங்க வீட்டிற்கு வந்திருந்தாள். இந்தப் பெண் இதை வீட்டுக் கூறிப் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றே செய்திருக்கலாமே என்று அவரிடம் அவன் கேட்க, அதற்கு அவர் ஒரு கேவலமான லுக்கை விட, தான் என்ன தவறாகக் கேட்டுவிட்டோம் என்று புரியாமல் அவரிடமே கேட்டான் சக்திவேல்!

“ஏங்க? நான் கேட்டதுல என்ன தப்பு?”

“என்ன தப்பா? அதுக காலனி சனம் தம்பி. அதுக்கு எப்படி ஒப்புக்க முடியும்? நாளப்பின்ன நம்ம தெருவுலையே இவுங்க பொண்ணைக் கட்டியிருக்கேன்னு மிதப்பா ஷோ காட்டிகிட்டு வருவானுங்க. இது தேவையா?” என்று அவனிடம் கடுப்படித்த அந்தப் பெரியவர் அதையே சபையிலும் கொட்ட, அவருக்கு ஆதரவாகவே பெரும்பாலான அவர்களது உறவினர்கள் கூறினர்.

சப்தமில்லாமல் உள்ளே வந்த சித்ராவைப் பார்த்துப் பெரியவர் ஒருவர்,

“எப்பா வேலுச்சாமி, இன்னைக்கு ரவைக்கு சித்ரா புள்ளைய உன் வூட்டுல வெச்சுக்க. மிச்சமீதியை நாளைக்கு பார்க்கலாம்…”

ஓரமாக அமர்ந்து சித்ராவின் தாய் வேணி அழுது கொண்டிருக்க, வேலுச்சாமி சித்ராவைப் பார்த்துக் கேட்டார்.

“ஏன் கண்ணு, வேன் இன்னும் நிற்குதா? நம்ம பாப்பா உன் கூடத்தானே வந்திருக்கும்…”

“ஆமாங்க மாமா, நந்து வேன்ல இருக்கா. ஸ்பெஷல் கிளாஸ் அதான் லேட் ஆகிருச்சு…” கீழ்பார்வையாகவே அவள் கூற,

“சரி கண்ணு, நீ பாப்பா கூட நம்ம வீட்டுக்குப் போய்டு. சக்தியை கூப்பிடு…”

அவளது தாயின் முகத்தைப் பார்த்துப் போவதற்குத் தயங்கிக் கொண்டு அவரைப் பார்க்க, வேலுச்சாமியோ கறாராகக் கூறினார்.

“போ கண்ணு, சக்தியை கூப்பிடு…”

“சரிங்க மாமா…” தயங்கியபடியே போனவள் சக்திவேலை அனுப்ப,

“சக்தி, நீ நம்ம பாப்பாவோட சித்ரா பாப்பாவையும் நம்ம வீட்லயே இறக்கி விட்டுடு. அப்புறம் ஒரு வாரத்துக்குச் சித்ரா பாப்பா காலேஜ் வராது சக்தி…”

ஏனென்று கேட்காமல் சரியென்று தலையசைத்து விட்டுச் சென்றான் சக்தி. நடப்பவைகளைப் பார்த்தால் நல்லதுக்கென்று அவனால் நினைக்க முடியவில்லை. மனதைப் பிசைய இருவரையும் நந்தினியின் வீட்டில் இறக்கிவிட்டு அவனது வேலைகளைக் கவனிக்கச் சென்றான், அதை மறந்தும் போனான்.

அடுத்த நாள் அதிகாலையில் சந்தைக்குக் காய்கறி லோடு ஏற்றச் செல்லும் போது, மாரப்பன் தோட்டத்தில் மூட்டைகளை ஏற்றிவிட்ட அவரது மகன் சக்திவேலிடம் கேட்டான்.

“சக்தி உனக்குத் தெரியுமா? அந்தப் புனிதா… அதான்ப்பா முத்துவேல் பொண்ணு, விஷம் குடிச்சிருச்சாம்…” மிகச் சாதாரணமாகச் செய்தியாக அவனிடம் கூறப்பட்ட போது அதிர்ந்தான்.

“கடவுளே! எப்படி குமாரு?”

“ஏதோ ரொம்ப வயித்து வலியாம் சக்தி. நைட் அதைத் தாங்க முடியாம விஷத்தைக் குடிச்சிருச்சாம்…”

“என்ன குமாரு சொல்ற? நேத்து சாயங்காலம் பார்த்தேனே, பஞ்சாயத்து பேசிட்டு இருந்தாங்களே…”

“அதெல்லாம் இல்லப்பா… அந்தப் பையன் இந்தப் பொண்ணைச் சுத்திச் சுத்தி வந்துருப்பான் போல இருக்கு. இது முடியாதுன்னு கறாரா சொல்லிருச்சாம். அதனால நேத்து நைட்டு ஃபுல்லா தண்ணியைப் போட்டுட்டு காவேரியில குதிச்சுட்டான் சக்தி. இந்தப் புள்ளை செத்தது வயித்து வலியாம்…” கட் அண்ட் ரைட்டாக இதுதான் உண்மையென எழுதி வைத்ததைப் படிப்பது போல அவனிடம் கூறிய குமாரை வெறித்தான் சக்திவேல்.

நெஞ்சு பொறுக்குதில்லையே!

இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஐந்து

கௌரவம்!இந்த ஐந்தெழுத்து வார்த்தைக்காகப் புதைக்கப்படும் உண்மைகள் எத்தனை? மறக்கப்படும் நியாயங்கள் எத்தனை? பஞ்ச மகா பாதகத்தைக் கூட நியாயப்படுத்திப் பேசுவது எதற்காக?வெறும் இந்த ஐந்தெழுத்து வார்த்தைக்காக!காதலித்துத் திருமணம் செய்தவர்களைக் கொலை செய்துவிட்டால் இவர்களது கௌரவம் மீண்டுவிடுமா? நடந்ததுதான் மறைந்துவிடுமா? அப்படி அந்தக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்