arrow_back
தித்திக்குதே அத்தியாயம் பத்தொன்பது
தித்திக்குதே chevron_right பகுதி 19 / 26

அத்தியாயம் பத்தொன்பது

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

சித்ராவை அந்த நேரத்தில், அதுவும் பித்து பிடித்தார் போன்ற மனநிலையில் சக்திவேல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதையோ நினைத்துக் கொண்டு, எங்கோ பார்த்துக் கொண்டு சாலையைக் கடக்க முயற்சித்தவளின் தோற்றம் அவன் சிறிதும் எதிர்பாராதது. ஏன் இப்படி இருக்கிறாள் பெரிதாக எதையோ தொலைத்தது போல என்று எண்ணிக் கொண்டிருந்தவனின் சிந்தனையைக் கலைத்தது டேங்கர் லாரி ஓட்டுநரின் வசவு.

“ஏம்மே சாவு கிராக்கி! உழுந்து சாவ என் வண்டி தான் உனக்கு கெடைச்சுதா? சனியனே… வூட்டாண்ட சொல்லிட்டு வந்துட்டியா?” கூவம் மணந்தது அவனது வசவுகளில்.

“அண்ணே… விடுங்க விடுங்க. தெரியாம வந்திருப்பாங்க. நீங்க கிளம்புங்கண்ணா. உங்களுக்கு லேட் ஆகிடப் போகுது” அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டுச் சித்ராவின் புறம் திரும்பியவனின் பார்வையில் விழுந்தது, இன்னமும் மாறாத அவளது ஓய்ந்த தோற்றம்!

“சித்ரா…” சற்று மெதுவாக அழைக்க, அதற்கு அவளிடம் பிரதிபலிப்பு இல்லை.

“சித்ரா!” சற்று கடுமையாக அழைக்க, கனவிலுருந்து விழித்தது போல திருதிருவென விழித்தாள். சுற்றும் பார்த்தவள் தன்னருகில் நின்ற சக்தியைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்தாள். அவனைப் பார்த்த அதிர்வில் அவளது வார்த்தைகள் வெளிவராமல் தட்டுத் தடுமாறின.

“என்னம்மா? இங்க என்ன பண்ற?” சகோதர வாஞ்சையுடன் அவன் கேட்ட கேள்வியில் அவளது கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. அவள் முன் நின்ற சக்தி அவளது பழைய எண்ணங்களைக் கிளறி விட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அவனே அறியவில்லை.

ஆனாலும் அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட அவளால் முடியவில்லை. அவள் முன் தெரிந்த அவளது இருள் சூழ்ந்த எதிர்காலம் அவளை மிரட்டியது. நிகழ்காலமோ விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தது.

“சித்ரா பதில் பேசும்மா. ஏன் இப்படியே நிற்கிற? ஏன் அப்படி ஒன்னும் தெரியாத மாதிரி லாரி முன்னாடி போய் விழுந்த?” உள்ளூர அந்தப் பெண்ணின் செய்கையில் கோபம் கொந்தளித்தாலும், அவளிருந்த நிலையில் அதற்கு மேல் அவளை மிரட்ட மனம் இடம் கொடுக்கவில்லை.

நிமிர்ந்து பார்த்த சித்ராவின் கண்களில் தெரிந்த வலி அவனை ஏதோ செய்ய,

“என்னம்மா? என்ன சொல்லு. என்ன பண்ணுது? ஹாஸ்பிட்டல் போகணுமா?” சகோதரனைப் போலப் பாசத்துடன் வினவியவனின் தொனியில் மீண்டும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“நீங்க எங்க இங்க சென்னைல?” அவனுக்குப் பதில் கூறாமல் அவனிடமிருந்து தெரிந்து கொள்ள நினைத்தாள் சித்ரா.

“நாங்க சென்னை வந்து ஒரு மாசம் ஆகப் போகுது. நந்துவுக்காக அங்க இருந்து இங்க ஷிப்ட் பண்ணியாச்சு. எங்களை கேட்கறது அப்புறம் இருக்கட்டும். உனக்கு என்னாச்சும்மா?” விடாமல் அவளைத் துளைத்து எடுத்தாலும், விரக்தியான பார்வையைத் தவிர வேறொன்றுமில்லை அவளிடமிருந்து!

‘நந்துவுக்காக’ என்று அவன் அன்யோன்யமாகக் கூறும் தொனியும் பொருளும் அவர்கள் இருவருக்கிடையேயான அன்பைக் கூற, மனதில் இனம் புரியாத வெறுமை உணர்வு அதிகமாவதை அவளால் உணர முடிந்தது. ஆனாலும் மாண்டு போன தன் காதலை மீட்க வழியே இல்லையே! அதுவும் அவளது சூழ்நிலையே நகைப்புக்குரியதாக அவளுக்குத் தோன்றியது. பதில் பேசாமல் எங்கோ வெறித்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து,

“என்னம்மா? என்னாச்சு? உன் அண்ணன்கிட்ட சொல்லமாட்டியா? சரி வீட்டுக்கு வா. நந்து உன்னைப் பார்த்தா ரொம்பச் சந்தோஷப்படுவா” சக்தி அவளை அழைக்க, உள்ளுக்குள் விரக்திச் சிரிப்பு தோன்றியது சித்ராவுக்கு. நந்தினி என்னை கண்டால் மகிழ்வாளா?

“ஒன்னும் இல்லண்ணா. வீட்ல கொஞ்சம் சண்டை. அதை நினைச்சுட்டே க்ராஸ் பண்ணிட்டேன். அவ்வளவுதான்” என்று அவள் முடிக்கப் பார்க்க, சக்திவேலால் அதை நம்ப முடியவில்லை. அவள் எதையோ மறைக்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்தவன்,

“அப்படியா?” அவன் கேட்ட தொனியிலேயே அவன் நம்பவில்லை என்பது அவளுக்குமே தெரிந்தது. ஆனால் அதை கவனிக்கும் நிலையில் தான் அவளில்லை.

“சரிம்மா. வீட்டுக்கு வா. மீதியை அங்க பேசிக்கலாம்” ஏனோ அவளது நிலை அவனது மனதைப் பிசைந்தது. அவளைத் தனியாக அனுப்பவும் ஒப்பவில்லை; அதுவும் அந்த இரவு நேரத்தில்!

“இல்லைங்கண்ணா. கிளம்பறேன். வீட்ல அவங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” அவளது குரலில் பரபரப்பு தெரிய,

“சரிம்மா. வா உன்னை வீடு வரைக்கும் விட்டுட்டு வரேன்” என்று அவனது வண்டியை எடுக்கப் போக,

“ஐயோ வேணாங்கண்ணா! வீடு பக்கத்துல தான் இருக்கு. நடந்தே போயிடுவேன்” அவள் மறுத்த விதத்தில் கண்டிப்பாக ஏதோ இருந்தது போலிருந்தது சக்திவேலுக்கு.

“சரி… வாம்மா நடக்கலாம். வீட்ல உன்னை விட்டுட்டு மாப்பிள்ளையைப் பார்த்துட்டு வரேன்” அவன் விடாப்பிடியாகக் கிளம்ப, அவளால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

வாழ்க்கை அதன் கோலத்தை எப்படியெல்லாமோ வரைந்து விடுகிறது என்று நினைத்துக்கொண்டாள். இவனது கை பிடித்து வாழ்க்கை துணையாகக் கடைசி வரை பயணிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவளுக்கு, வழித்துணையாக வீடு வரை வருகிறேன் என்கிறானே என்ற கசப்பான முறுவலொன்று மலர்ந்தது.

சொல்லாத காதலுக்கு அர்த்தம் ஏதுமில்லையே!

***

சக்திவேலின் குடோன் இருப்பதே புறநகர் பகுதி என்றாலும் சந்தடிகளுக்குக் குறைவிருக்காது. சித்ராவின் வீடு அருகில் தான் என்றாலும் பரபரப்புக்கள் இல்லாத பகுதி; உயர்மட்ட குடியினர் வசிக்கும் போஷ் ஏரியா. மிகவும் பிரம்மாண்டமும் இல்லாமல், அதே சமயத்தில் எளிமையும் இல்லாமல் அழகாக இருந்தது அந்தச் சிறு பங்களா. தெரு கூர்க்கா விசிலடித்துக் கொண்டு நடந்து போக, வீடு இருள் சூழ்ந்து கிடக்க, கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் சித்ரா.

“உள்ள வாங்கண்ணா”

“யாரும் இல்ல போல இருக்கேம்மா”

“இல்ல… அவங்க உள்ள தான் இருப்பாங்க”

“சரிம்மா நாளைக்கு வர்றேன். இன்னைக்கு ரொம்ப லேட்டாகிடுச்சு” என்று கூறியவன் சிறிது இடைவெளி விட்டு, “என்னோட நம்பரை நோட் பண்ணிக்கம்மா. என்ன ஹெல்ப்னாலும் கூப்பிடு. நாளைக்குக் காலைல கட்டாயம் வருவேன். என்னம்மா சரியா?” என்று கேட்க, அவளும் ஒப்புதலாகத் தலையாட்டினாள்.

அவளது எண்ணையும் வாங்கி அவனது கைப்பேசியில் சேமித்து கொண்டு விடைபெற, சித்ராவுக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது. கண்களிலிலுருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

சப்தமில்லாமல் ஹாலைக் கடந்து படுக்கையறையை நோக்கிப் போக முயன்றவளை நிறுத்தியது ஒரு குரல்.

“எவன் கூடப் போயிட்டு இவ்வளவு நேரம் கழிச்சு வர்ற?” கொடூரமாக ஒலித்த குரலின் தாக்கத்தில் விக்கித்துப் போய் நின்றாள் சித்ரா. அதிர்ச்சியாக இருந்தாலும் நான்கு மாதமாகப் பழக்கப்பட்ட குரலும் அதன் பொருளும் அவளுள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த வீடே அவளுக்குச் சுடுகாடாகக் காட்சியளித்தது; அங்கு நின்று கொண்டிருந்த அவன் அவளது பிணத்தை எரிக்கும் வெட்டியானாக மட்டுமே அவளுக்குக் காட்சியளித்தான்.

“நான் எவன் கூடவும் போகலை… உங்களை மாதிரி” பேசவே கூசினாலும் அதுதான் உண்மை எனும் போது உரக்கச் சொல்வதில் என்ன தவறு?

“அப்போ உன் கூட வெளிய கொஞ்சிட்டு இருந்தானே அவன் யாரு பொம்பளையா?” எகத்தாளமாக அவன் கேட்க, அவளுக்குள் இருந்த கோபம் தீவிரமாக விழித்துக் கொண்டது.

“அவர் பொம்பளையா இருந்தா அவரையும் விட்டு வைக்க மாட்டீங்களே” அதே எகத்தாளத்தோடு அவள் கூற, அவனது ஈகோ பயங்கரமாகக் காயப்பட்டது. வேகநடையோடு முன்னே வந்தவன் அவளுடைய கழுத்தைப் பிடித்தான்.

“என்னடி இன்னைக்கு வாய் ஓவரா நீளுது? அவன் சொல்லிக் கொடுத்து அனுப்பினானா? எத்தனை நாள் பழக்கம் இது? சொல்லுடி” அவளது கழுத்தை வன்மையாக நெரிக்க, மூச்சுக்குத் திண்டாடிய சித்ரா அவனிடமிருந்து விடுபடப் போராடினாள். போராட்டத்தில் வேகமூச்சோடு இருமலும் வர, திண்டாடி அவன் கையிலுருந்து விலகி சுவாசித்தாள்.

அவனது கண்களில் குரூர திருப்தி.

“அவர் எங்க ஊர்க்காரர். அந்த அண்ணனோட வேன்ல தான் காலேஜ் போனேன். வாக்கிங் போகும் போது எதேச்சையா அவரைப் பார்த்தேன். வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டார்” தடுமாறிக் கொண்டே சித்ரா கூறி முடிக்க,

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே சித்து குட்டி. பாரு கழுத்தெல்லாம் சிவந்து போய்” என்று கூறி இடைவெளி விட்டவன், “கவர்ச்சியா இருக்கு” கண்களைச் சிமிட்டினான்.

அந்த நிலையில் அவனைக் கொன்று விட்டால் தான் என்னவென்று தோன்றியது. மனைவியை இம்சிப்பதே கொடுமை எனும் போது அதையும் அவன் ரசிப்பது அவனை மனித வகையறாவென்றே வரையறுக்க முடியவில்லையே! அவளுக்கு அவளையும் மீறி கண்களில் கண்ணீர் சூழப் பார்க்க, அவசரமாகத் தன்னை மீட்டாள். இந்த மிருகத்தின் முன் அழுவதா? கூடாது; அழுது விட்டால் தோற்று விடுவேனே. இவன் முன் தோற்கக் கூடாதே.

தோற்பது என்றால் எப்போதோ தோற்று விட்டேனே; இதுதானா தோல்வி? இல்லையே; மனம் இறந்து போய் நான்கு மாதங்களாகி விட்டதே. இப்போதிருப்பது வெறும் உடல் அல்லவா? அதுவும் எப்படியாவது இறந்து போய் விடாதா என்று இவன் தினம் உணர வைக்கிறானே.

சித்ராவுக்கு ஏனோ அவளது முதலிரவு நினைவுக்கு வந்தது.

“சித்ரா… மாப்பிள்ளை எப்படி இருந்தாலும் அனுசரிச்சுப் போகணும்மா”

தன்னை பெற்றவள் அறிவுரையாகக் கூற, அன்றிருந்த நிலையில் ஒட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அப்போது புரிந்துதானிருந்தது சக்திவேலின் நினைவு கானல் நீர் என்பது. இனி அவரை நினைப்பதும் தவறு என்பது அன்று காலையில் தன்னைச் சரிபாதியாக்கிக் கொண்டவனின் நிழலே இனி நிஜம் என்பதையும் அவளது மனம் மறுக்கவில்லை. அவளுடைய பழைய நினைவுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துப் புது வாழ்வுக்குத் தயாராகி கொண்டிருந்தாள்.

“பதிலுக்குப் பதில் உங்க வீட்டாளுங்களோட பேசிடாத கண்ணு. அப்புறம் அம்மாவோட வளர்ப்பு சரியில்லைன்னு சொல்லிடுவாங்க. என்ன நடந்தாலும் அதைச் சமாளிச்சு இருக்கப் பழகு” காலம் காலமாகப் பெண்களுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை அடிமை சாசனத்தில் கையெழுத்திடுவது போன்ற பிரம்மை அவளுள்!

“சரிம்மா” மென்மையாகப் பதில் கூறிய சித்ராவுக்கு உள்ளுக்குள் ஏனோ பயம் கவ்வியது. புதுப் பெண்கள் அனைவரும் இதே போலத்தான் உணர்வார்களா? புரியாமலே அறைக்குள் நுழைந்தவளை வரவேற்றது அவனின் குரல்.

“வெல்கம் மை ஏஞ்சல்… வெல்கம்” பட்டுச் சேலை சரசரக்க, முகத்தில் பயத்தோடும் நாணத்தோடும் உள்ளே வந்தவளை வரவேற்ற அவன் கீர்த்திவாசன். சித்ராவின் கணவனாகக் காலையில் அறிவிக்கப்பட்டவன்.

தலை நிமிர முடியாமல் நடந்து வந்தவளுக்குக் கால்கள் பின்னியது. மௌனமாகப் பால் சொம்பை அவனிடம் கொடுக்க, அதை அவன் வாங்காமலிருக்க, என்னவென்று மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.

அதிர்ந்து பின்வாங்கினாள்.

கீர்த்திவாசன் கையில் கேமராவோடு முன்னே நின்று கொண்டு அவளைப் படமெடுத்துக் கொண்டிருக்க, அவளுடைய இதயம் தடதடவெனத் துடித்தது.

“எ… எதுக்கு கேமரால ப… படமெடுக்கறீங்க?” நடுக்கத்தில் நாக்கு குழற ஒருவாறாகக் கேட்டாள் சித்ரா.

“ஹேய் பட்டிக்காடு! நான் வீடியோ ஷூட் பண்ணிட்டு இருக்கேன்” அவன் கவர்ச்சியாகச் சிரிக்க, அவளுக்கு அந்தச் சூழ்நிலை ஏனோ நடுக்கத்தைக் கொடுத்தது. என்னதான் இருந்தாலும் கணவன் தானே; அவன் பார்த்து ரசிக்கப் படமெடுக்கிறான் போலும் என்றெண்ணிக் கொண்டவள்,

“அதுக்காக இப்படியா கேமராவ காட்டிப் பயமுறுத்துவீங்க?” ஒருவாறாக ரிலாக்ஸ் ஆகியவள் சற்றுத் தெளிவாகக் கேட்க,

“காலைல இருந்து எல்லா பங்க்ஷனையும் ஷூட் பண்ணாங்க. அப்போ இதையும் தானே ஷூட் பண்ணனும். என்ன நான் சொல்றது?” என்று அவன் ஹாஸ்யமாகக் கூறியபோது ஏதோ இடறியது அவளுக்கு. அவனோ விடாமல் அவளை வீடியோவில் சுருட்டிக் கொண்டிருந்தான்.

“சரிங்க… அதை ஆப் பண்ணுங்க ப்ளீஸ். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” அவள் கெஞ்சத் துவங்க,

“வாட்? ஆப் பண்ணி வெச்சுக்கவா இவ்வளவு காஸ்ட்லி கேமராவ வாங்கினேன்? திஸ் இஸ் பஸ்ட் நைட் ஸ்பெஷல் பர்சேஸ் டியர்” என்று அவன் கண்ணடிக்க, அவளுள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.

“அதுக்காக நைட் முழுக்க ஷூட் பண்ணப் போறீங்களா?” கேலியாகக் கேட்பது போல அவளது நடுக்கத்தைக் குறைத்துக்கொள்ள முயன்றாள் சித்ரா.

“பின்ன… அதுதானே பிளானே” மிகவும் இயல்பாக அவன் கூற, அவன் விளையாடுவதாக எண்ணிக்கொண்டு,

“ச்சீ போங்க… விளையாடாதீங்க. ப்ளீஸ் அதை ஆப் பண்ணுங்க ப்ளீஸ்” சித்ரா கெஞ்ச ஆரம்பிக்க, அவனது முகம் கல்லென மாறியது.

“நோ சித்ரா. ஐம் நாட் ப்ளேயிங்” அவனது தொனியில் பயந்து போனாலும், உண்மையாகத்தான் கூறுகிறான் என்று அப்போதும் நினைக்கவில்லை.

“போதுங்க என்னை பயப்படுத்தினது. ப்ளீஸ்”

“நோ… ஐ மீன் இட். பர்ஸ்ட் யூ ஹேவ் டு ஷோ மீ தி ஸ்ட்ரிப்டீஸ்… ஓகே” எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அவன் கூறிய விதத்தில் அவளுக்குச் சிறிதும் புரியவில்லை. புரியாமல் அவள் விழிக்கவும்,

“பட்டிக்காடு… பட்டிக்காடு! ஒன்னொன்னா கழட்டுன்னு சொல்றேன். ரிமம்பர் சித்ரா, இட் ஷுட் பி ஸ்டைலிஷ்… ஓகே” மிகவும் இயல்பாக அவன் கூற, அவளோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவனைப் பார்க்க, கீர்த்திவாசன் சுதாரித்தான். புது மாடு அதான் மிரளுது என்றெண்ணிக்கொண்டு புன்னகையை ஒட்டவைத்துக் கொண்டான்.

“என்ன சித்து குட்டி இப்படி என்னையே முழுங்கற மாதிரிப் பார்க்கற? யுவர் ஐஸ் ஆர் வெரி அட்ராக்டிவ் யூ நோ” கேமராவை ஓரமாக வைத்தவன் அவளுக்கு மிகவும் அருகில் சென்று கண்ணோடு கண் கலக்க விட்டுக்கூற, அவனது அடாவடி விளையாட்டெல்லாம் மறந்து போனது அந்தப் பேதைக்கு. ஆம் அவ்வாறு தான் நினைத்திருந்தாள்.

இரண்டு நாட்கள் கழித்துச் சென்னையில் அந்த வீடியோவை அவளிடம் காட்டிச் சிலாகிக்கும் வரை. அது அவர்களது முதலிரவு வீடியோ.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் இருபது

இரவு படுப்பதற்கு வெகு நேரமாகிவிட்டதால் சக்தி விழிக்க நேரமாகிவிட, அதற்கு முன்னரே எழுந்துவிட்ட நந்தினி அவனை விழியகலாமல் ரசித்துக் கொண்டு படுத்திருந்ததையோ, குளித்துவிட்டு வந்த பின்னரும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்ததையோ அவன் உணரவில்லை.என்றைக்கும் இல்லாத திருநாளாக விடிந்த பின்னரும் உறங்கும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்