அத்தியாயம் பதினெட்டு
இரவு பத்து மணிக்கும் கோயம்பேடு மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கடைகளுக்குச் சரக்கிறக்கும் நேரமாதலால் ஒவ்வொருவருக்கும் வேலையிருக்க, அந்த இடமே தூக்கத்தைத் தள்ளி வைத்து உழைத்துக் கொண்டிருந்தது. கோயம்பேடு உழைப்பாளர்களின் கோட்டை! உழைப்பிருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பி வருபவர்களின் சொர்க்க பூமி! ஒவ்வொருவருக்கும் வேலை தயாராக இருக்கும் எந்த வகையிலாவது! அதிர்ஷ்டத்தை நம்பாமல் தன்னை நம்பி இறங்கினால் எவராக இருந்தாலும் பிழைத்துக் கொள்ளக் கூடிய இடம்!
“டேய் வீரா… பாசி பயிறு மூட்டையை உள்ள அடுக்குடா. இங்கே வெச்சா உள்ள தனியா உங்க அப்பனா எடுத்துட்டுப் போவான்?” அந்த மளிகை மொத்த வியாபாரி வீராசாமி என்பவனைத் திட்டுவதோடும் இல்லாமல் அவனது தந்தையையும் இழுத்து வைத்துத் திட்ட, அந்த வீராசாமி அவரை முறைத்துவிட்டு உள்ளே எடுத்துப் போக, அவர் அலுத்துக்கொண்டார்.
“இவனுங்களுக்குப் பார்வைக்கொன்னும் குறைச்சல் இல்ல. ஒரு வேலையை ரெட்டையா செஞ்சா அமர்த்திக் கொஞ்சுவாங்களாடே” சுருதி குறையாமல் அவரது வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருக்க, சக்திவேல் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான்.
அவரிடம் எப்படித்தான் ஓடி ஓடி வேலை செய்தாலும் முழு மனதாகப் பாராட்டி விடக் கூடியவரில்லை. கவனமாக இறக்கிக் கொண்டிருந்த மூடைகளை எண்ணிக்கொண்டிருந்தவன், அவரது அர்ச்சனை ஆரம்பமாகியதை உணர்ந்து மற்ற இறக்கு கூலிகளைக் கண்களால் எச்சரிக்கை செய்துவிட்டு,
“விடுங்க அண்ணாச்சி. பாவம் பசங்க. நாள் முழுக்க மூட்டையை இறக்கி முதுகு உடைஞ்சிருக்கும்” அவரைச் சமாதானப்படுத்த,
“நீ என்ன சக்தி இந்த பயலுகளுக்குச் சமாதானம் வாசிக்கிற? இவனுங்களை உருட்டாம வேலை பார்த்துடுவானுவளா? சரி கணக்கு என்னாச்சு?” அவரது காரியத்தில் கண்ணாக இருக்க,
“பாசிபயறு ஐம்பது மூட்டை, கடலை பருப்பு ஐம்பது, மிளகாய் மூட்டை எழுபது அண்ணாச்சி”
“சரி சக்தி. நாளைக்கு வந்து பணத்தை வாங்கிக்கயேன்” எப்போதும் போல நழுவப் பார்க்க, அவரிடம் பணத்தை விட்டுவைத்தால் திரும்ப வாங்குவதென்பது குதிரைக்குக் கொம்பு முளைக்க வைப்பது போல என்பதை உணர்ந்தவன் சக்திவேல்!
“இல்ல அண்ணாச்சி. ஆளுங்களுக்குக் கூலி கொடுக்கணும். டிரைவர் சம்பளம் பேட்டா எல்லாம் நீங்க கொடுக்கறதை வெச்சுத்தான் கொடுக்கணும். இல்லைன்னா நாளைக்கு பசங்க வேலைக்கு வர மாட்டானுவ” விடாப்பிடியாகப் பேசிப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தவனைப் பார்த்துச் சிரித்தான் செந்தில்.
“அண்ணே காளை மாட்டுல பாலைக் கறந்துட்டீங்க போல இருக்கே”
“என்னடா பண்றது? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரித்தான் இருப்பாங்க. இவர் இப்படி இருக்காருன்னு விட்டுட முடியுமா? எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான்” அருப்புக்கோட்டை, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பருப்பு வகைகளையும் அரிசி முதலானவற்றையும் வாங்கி வியாபாரிகளுக்கு மொத்தமாகச் சப்ளை செய்துகொண்டு, அதோடு பொள்ளாச்சியில் மொத்தமாகத் தோப்பில் குத்தகை அடிப்படையில் தேங்காய்களைச் சென்னையில் மொத்த வியாபாரிகளுக்குச் சப்ளை செய்வது என அதிலும் கால் பதித்து இருந்தான்.
கரூரை விட்டு வர முடிவெடுத்தவுடன் ஆரம்பித்தது. கல்லூரி கல்வியாண்டு முடியும் வரை அங்குச் செந்திலை விட்டு வைத்திருந்தான். அவனைத் தற்போது லாரிக்கு முழு நேர டிரைவராக்கிவிட்டு, வேனை விற்ற பணத்தை வியாபாரத்தில் போட்டிருந்தான்.
செந்திலிடம் அவனது சம்பளப்பணத்தைக் கொடுத்துவிட்டு,
“நாளைக்கு பொள்ளாச்சி கிளம்பணும்டா. மீதி இருக்க மூட்டையை வீராச்சாமியை வெச்சு நம்ம குடோன்ல இறக்கிடு. சரி கிளம்பு!” என்று தேங்காய் லோடு ஏற்ற வேண்டி இருப்பதை கூறி அனுப்பினான்.
“சரிங்கண்ணா” என்று அவன் விடைபெற, சக்தி அவனது ஸ்ப்ளண்டரில் ஏறி அமர்ந்த போது உடல் ஓய்வுக்காகக் கெஞ்சியது. காலை முதல் கூடவே இருந்து சரக்கு இறக்கி, ஒவ்வொரு இடமாக அலைந்ததில் உடம்பு விண்டு விடும் போல வலித்தது. ஆனாலும் மனதில் சந்தோஷம்; தன் வீட்டில் தனக்காக ஒரு ஜீவன் காத்துக் கொண்டிருக்கும் சந்தோஷம்!
வீட்டை அடைந்து காலிங் பெல்லை சக்தி அழுத்த, தூக்கம் சுமந்த விழிகளோடு நந்தினி கதவைத் திறந்தாள். அந்தத் தூக்க கலக்கத்தில் நலுங்கிய சேலையில் அவள் மிகவும் அழகாக இருப்பது போலத் தோன்றியது. மாலையில் தான் தலைக்குக் குளித்திருப்பாள் போல; அலட்சியமாக விரித்து விட்டிருந்த அடர்ந்த முடி முழங்காலைத் தொட்டுக் கொண்டிருக்க, ஆளைக் கவிழ்த்து விடும் அவளது அழகு அவனை என்னவோ செய்ய, அதற்கும் மேல் பார்க்காமல் நேராகக் குளிக்கச் சென்றான்.
உடல் கசகசப்பு தீரக் குளித்து வந்தவனுக்குக் கபகபவெனப் பசிக்க,
“நந்தினி டிபன் ரெடியா?” சப்தமாக குரல் கொடுத்தான்.
“இதோ வந்துட்டேன்” அவசரமாகத் தட்டில் இட்லியை வைத்துக் கொண்டு வந்தாள்.
“ஹேய் என்ன சிக்கன் வாசம் வருது?” ஆச்சரியமாக அவன் கேட்க,
“சிக்கன் குழம்பு வெச்சா மீன் குழம்பு வாசமா வரும்?” சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.
“உனக்கு இதெல்லாம் செய்யத் தெரியுமா?” வியந்து போய்க் கேட்க,
“செஞ்சு பழகலைன்னா எங்க அப்பாயி என்னைய வெந்நி அடுப்புல வேக வெச்சுடும். அதுக்குப் பயந்துகிட்டே நான் செஞ்சுடுவேன்” சாதாரணமாக அவள் கூறினாள்.
“உனக்கும் சிக்கன் பிடிக்குமா நந்தினி?” சிக்கன் குழம்பின் சுவையில் தன்னை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், அவளை அறிந்து கொள்வதற்காக முதலடி எடுத்து வைக்கும் ஆர்வத்தில் கேட்க,
“ச்சே ச்சே… நான் சுத்த சைவம். எங்கம்மா வீட்ல நான்-வெஜ் செஞ்சா எனக்கு ரசம் கூடத் தனியாத்தான் வைப்பாங்க” பெருமையாகக் கூறுவதை போலத் தன் பிரதாபத்தை எடுத்துவிட,
“அப்போ ஏன் சிக்கன் செஞ்ச?” கேள்வியாக அவளைப் பார்த்துக் கேட்க, அப்போதே அவளுடைய கைமணத்தில் அவன் எப்போதும் உண்பதை விட இரு மடங்கு உண்டிருந்தான்.
“ம்ம்ம்… போன ஜென்மத்துல வெச்ச வேண்டுதல். இப்படி ஒரு சிடுமூஞ்சியக் கல்யாணம் பண்ணா வாரத்துல ரெண்டு நாள் சிக்கனும் மட்டனும் அபிஷேகம் பண்றேன்னு ஊர்ல கருப்பனுக்கு வேண்டிக்கிட்டேன். அதான்” இயல்பாகக் கூறுவது போலக் கூறி நக்கலடிக்க, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை!
“ஏய் யாருடி சிடுமூஞ்சி?”
“வேற யாரு இங்க இருக்கா மாமா? சாட்சாத் நீங்களே தான்” அவனை விடாமல் வம்பிழுக்க, அவளை மேலிருந்து கீழாகப் பார்த்து விட்டு,
“உனக்கு உடம்புல மொத்தமும் கொழுப்புத்தான்” அவனும் சற்று இறங்கிய குரலில் கூறினான்.
“என்னமோ பார்த்த மாதிரி தான் சொல்றது” எப்போதும் போல விளையாட்டாக இயல்பாகக் கூறிவிட, ஒரு நொடி கழித்தே அதன் அர்த்தம் அவளுக்குப் புரிபட, முகம் சிவக்க நாக்கைக் கடித்துக் கொண்டாள். அவனுக்கு அவளது சிவந்த முகம் காந்தமென ஈர்க்க, அவள் கடித்த சிவந்த உதட்டைத் தானும் சுவைத்துப் பார்த்தால் என்னவெனத் தோன்ற, பார்வை முகத்தை விட்டு கீழே இறங்க, அந்தப் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் சமையலறைக்கு விரைந்தாள்.
அந்த நாணமும் முகச்சிவப்பும் சக்திக்குப் புதியது. உணவை உண்டு முடித்தவன் தட்டை வாஷ்பேசினில் வைத்துவிட்டு கையை அங்கேயே கழுவினான். நந்தினியோ பாலைச் சுட வைப்பதாகப் பாவனை செய்து கொண்டு திரும்பாமல் இருக்க, நந்தினியின் சேலையைப் பற்றினான் ஈரமாக இருந்த தன் கையைத் துடைக்க!
அவனது பார்வை முழுக்க நந்தினியின் செழுமையான பின்னழகை மேய்ந்து கொண்டிருக்க, சக்தி அவளது சேலையைக் கொண்டு கையைத் துடைத்த போது நந்தினி சொல்ல முடியாத உணர்வுகளால் சூழப்பட்டிருந்தாள். அவனாலும் அந்தச் சேலையை விட மனமில்லை; அவளுக்குமே விட்டுவிடு என்று கூற முடியவில்லை!
வார்த்தைகள் ஏதுமில்லாத மௌனத்தின் அதீத சப்தத்தின்பால் வசப்பட்டிருந்த இருவருக்கும் அந்தச் சூழ்நிலை உணர்வுகளைக் கிளறி விட்டிருக்க, நந்தினி உடல் நடுங்கப் பாலை ஆற்றினாள்!
எதையும் பேசாமல் பாலை வாங்கி ஒவ்வொரு சொட்டாக ரசித்து அருந்தினாலும் பார்வை மேய்ந்து கொண்டிருந்தது நந்தினியைத்தான். அவனால் அவனது கண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஏன் அவ உன் ஒய்ப் தானே?” மிஸ்டர் மனசாட்சி குரல் கொடுக்க,
“இருந்தாலும் அவ ரொம்பச் சின்னப் பொண்ணு. படிக்கணுமே” அவனே அவனது மனசாட்சிக்குப் பதில் கொடுக்க,
“அவ கண்ணைப் பாரு. அதுல தெரியற லவ்வைப் பாரு. நந்தினி உன்னை அவ்வளவு காதலிக்கறா” மனசாட்சி அவளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க,
“எல்லாம் தெரியுது. முதல்ல அவ ஐஏஎஸ் எக்ஸாமுக்கு படிக்கட்டும். அதுவரைக்கும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது” ஒரு வழியாக முடிவெடுத்தவன், குடித்துக் கொண்டிருந்த டம்ளரை நந்தினியிடம் கொடுத்துவிட்டுத் தன் உணர்வுகளை மொத்தமாக மறைத்துக் கொண்டு,
“என்ன நந்தினி இன்னைக்குப் படிச்சியா? இல்ல மொத்தமா குக்கிங்ல இருந்துட்டியா?” புன்னகைத்தவாறே கேட்டுக்கொண்டு நிமிர்ந்தவனின் புன்னகை உறைந்தது!
அவன் அருந்தியதில் மீதமிருந்த பாலைக் குடித்தவள் கடைசிச் சொட்டையும் விடாமல் கிளாசை மேலே தூக்கிப் பிடித்தபடி வாயில் சரிக்க, ஏறி இறங்கிய அவளது நாபியும் அவளது அந்த எலுமிச்சை நிறத்தில் சிவந்த கழுத்தும் அவனை ஒரு வழி செய்ய, தலையை உலுக்கிக் கொண்டவன் அவசரமாக அந்த இடத்தை விட்டுப் பெயர்ந்தான்.
ஹாலில் அமர்ந்து முதலில் தன்னைச் சமன் செய்து கொண்டான். தலையைத் கோதி முகத்தைத் துடைக்க, கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகள் அமைதியடைந்தது. அவளுக்குமே அவளது நடுக்கத்தையும் ஏமாற்றத்தையும் மறைக்கச் சில நிமிடங்கள் தேவைப்பட்டது!
ஹாலில் இருந்த மியூசிக்கல் கடிகாரம் மணி பதினொன்று என்று அறிவிக்க, சமையலறையில் நந்தினி பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு தன்னை மீட்டுக்கொண்டு, வசூல் பணத்தை எடுத்து வந்தவன் நந்தினியை அழைத்து அவளிடம் கொடுத்தான்.
“நந்து… இந்த பணத்தைச் செல்ப்ல வெச்சுப் பூட்டிடு” என்று கொடுக்க, தன்னிடம் அவன் இது போல முதன்முதலாகக் கொடுப்பது நந்தினிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது!
“இது என்ன பணம் மாமா?” அவளால் கேள்வி கேட்காமலிருக்க முடியவில்லை.
“இன்னைக்கு வசூல். மொத்தம் ரெண்டு லட்சம் இருக்கு” என்று கூறி அவளது வயிற்றில் புலியை கரைத்தான்.
“எப்படி இவ்வளவு பணம்?” அது வரை இருந்த உணர்வு மொத்தமும் மாறிப் பணத்தைப் பார்த்துப் பயந்தாள். இது நேர் வழி இல்லாமல் வேறு வழியாக இருந்துவிட்டால் என்ன செய்வது?
“லோடு இறக்கினதுல மொத்த வசூல்மா” அவளுக்கு ஏன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே அவனுக்குப் புரியவில்லை. விளக்கம் கொடுப்பதே பிடிக்காத ஒன்றாயிற்றே.
“அப்படி என்ன பண்றீங்க? என்கிட்டே ஒண்ணுமே சொல்லக் கூடாதா? நான் என்ன வேற்று ஆளா? இது நல்ல வழில வந்ததுதானே?” சரமாரியாக அவள் கேள்வி கேட்க, அவனுக்கு என்ன சொல்வதென்பதே தெரியவில்லை.
“விட்டா என்னை கொள்ளைக்காரன் ரேஞ்சுக்கு நினைப்ப போலிருக்கு. லூசு… பணத்தை வெச்சு லாக் பண்ணிட்டு வா… சொல்றேன்” அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே அறைக்குச் சென்றவள் செல்பில் வைத்துப் பூட்டினாள். அவனைத் தேட, சக்திவேல் பால்கனியில் நின்றுகொண்டு வானத்தைப் பார்த்திருந்தான். அவனருகில் போய் நிற்க,
“ம்ம்ம் சொல்லுங்க”
“என்ன சொல்றது?”
“அவ்வளவு பணம் எப்படி வந்தது? நீங்க என்ன பண்றீங்க? எனக்குப் பதில் சொல்லத்தான் உங்களுக்குப் பிடிக்காது. ஆனா என் புருஷன் சம்பாரிக்கற பணம் நேர்வழியா இல்லையான்னு கூடத் தெரியாம நான் எப்படி இருக்கறது?” சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்க,
“ஏன் நான் சம்பாரிக்க மாட்டேனா? உனக்கு அவ்வளவு நம்பிக்கையா என் மேல?” ஒரு மாதிரியான குரலில் அவளிடம் கேட்க, தலையை அவசரமாக ஆட்டி மறுத்தாள்.
“இல்ல… அப்படி கிடையாது… ஆனா இவ்வளவு பணம்…” அவள் தடுமாறி ஒருவாறு முடிக்க,
“நான் இப்போ என்ன பண்றேன்னு உனக்குத் தெரியாது இல்லையா?” என்று இடைவெளி விட்டவன்,
“மொத்தமா பருப்பு மிளகாய் எல்லாத்தையும் தூத்துக்குடி, அருப்புக்கோட்டை மாதிரி ஊர் மண்டில வாங்கி இங்க ஹோல்சேல் மார்க்கெட்ல சப்ளை பண்றேன். அதோட தேங்காயும்… அதுக்குத் தான் லாரி வாங்கினேன் செகன்ட் ஹேன்ட்ல. செந்தில் இப்போ காலேஜ் ட்ரிப் ஓட்றது இல்ல; வேனை சேல்ஸ் பண்ணியாச்சு. நம்ம லாரில தான் டிரைவரா போறான். போதுமா?”
“அப்படியா” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள்,
“ம்ம்ம் முதல்லையே கரூர்ல சின்ன அளவுல பண்ணிட்டு இருந்ததுதான். இங்க லார்ஜ் ஸ்கேல்ல பண்றோம். சரியா?”
“ம்ம்ம் சரி… ஆனா அவ்வளவு பணத்தை எப்படி இன்வஸ்ட் பண்ணீங்க?” மீண்டும் சந்தேகம் தோன்ற,
“ஏய் லூசு! நான் இத்தனை வருஷமா இதே லைன்ல இருக்கேன். என்கிட்டே அவ்வளவு கூடவா பணம் இருக்காது? முதல்ல எனக்குத் தேவை அதிகம் இருந்ததில்லை. யாருக்காகச் செலவு பண்ணச் சொல்ற? இப்போ நீ இருக்க. ஏன் உங்க ஆளுங்க சொன்ன மாதிரி என்னை பிச்சைக்காரன்னே நினைச்சுட்டியா” அவளை முறைத்தவாறே கேட்க,
பதிலுக்கு அவளும் முறைத்துவிட்டுப் பதில் பேசாமல் உள்ளே போக முயல, சட்டென்று அவளது கைகளை இழுத்துத் தன் கைகளோடு சேர்த்து வைத்துக்கொள்ள, கோபத்தோடு கைகளை உருவ முயற்சித்த நந்தினியின் செய்கை அவனுக்குப் புன்னகையை வரவழைத்தது.
“கலெக்டரம்மாவுக்குக் கோபம் கூட வருமா?” சிரித்தபடி அவளைச் சீண்ட,
“ம்ம்ம்… ரொம்ப வரும்” வேறு பக்கம் பார்த்தபடி அவனுக்குப் பதில் கொடுக்க, அவனுக்கு அந்தத் கோபத்தையும் ரசிக்கவே தோன்ற, அந்த ரசனையான பார்வை அவளது கோபத்தை அதிகப்படுத்தியது.
“அப்படியா? அம்மணிக்குக் கோபத்துல கன்னமெல்லாம் ரெட்டிஷ் ஆகிடுச்சே” வேண்டுமென்றே அவளது கன்னத்தைத் தடவ, ஒரு நொடி அதிர்ந்தவள் அடுத்த நொடி அவனது கையைத் தட்டிவிட்டாள்.
“உங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னப்போ நீங்க சம்பாரிக்கறீங்களா இல்லையான்னு எனக்குத் தெரியாது. நீங்க படிச்சு இருக்கீங்களா இல்லையான்னு கூடத் தெரியாது. உங்களை மட்டும் தான் எனக்குத் தெரிந்தது, பிடிச்சது. ஆனா ஏன் இப்படிப் பேசறீங்க? நான் ஹாஸ்டல்ல இருந்தப்போவும் அப்படித்தான்; கண்டபடி பேசறீங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கு மாமா” கண்கள் கலங்கியபடி நந்தினி கூற, அவளை இழுத்து அணைத்துக்கொள்ள நெஞ்சம் பரபரத்தது.
“அச்சச்சோ! இதென்ன அமுல் பேபி அழுவறாங்க” அவளை மீண்டும் சீண்டியவன்,
“சாரி நந்தினி. நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கலை. அன்னைக்கு அவனுங்க அப்படிப் பேசினதுல உள்ளுக்குள்ள ஒரு கோபம் இருந்துட்டே இருக்கு. அதான் உன்கிட்ட அப்பப்போ காட்டிடறேன். சாரிம்மா”
அவன் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டவளுக்கு உள்ளுக்குள் வலி படர்ந்தது. அந்தத் கோபத்தைத் தான் தன்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறானா? தன்னுடைய காதலும் நேசமும் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா? யாருமே வேண்டாம் என்று மறுத்துத் தன்னவன் மட்டுமே போதுமென்று இருக்கும் தன் மனதை அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லையா? நந்தினியால் இந்த வலிகளைத் தாள முடியவில்லை.
ஆனால் சக்திவேல் கூறிய அர்த்தமே வேறு என்பதை நந்தினி உணரவில்லை. சொல்லாத காதலும் ஊமை பேசும் வார்த்தைதான் என்பதை சக்திவேல் உணரவில்லை.
***
இருவரும் இருந்த அப்பார்ட்மென்ட் பக்கமாகவே குடோனைப் பிடித்திருந்தான் சக்திவேல். இல்லை குடோன் இருந்த பகுதியில் தான் அப்பார்ட்மென்ட்டைப் பார்த்திருந்தான். அப்போதுதான் வந்திறங்கிய தேங்காய் லோடை இறக்கிக் கொண்டிருந்தனர். உடன் சக்தியும் வேலை பார்த்துக்கொண்டிருக்க, சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தனர்.
நேரம் இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. லோடை இறக்கித் தரம் பிரித்துக் காலையில் கோயம்பேடுக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயம். சற்றும் இடைவெளி இல்லாமல் காய்களை ஆட்களோடு சேர்ந்து பிரித்துக் கொண்டிருந்த சக்திக்குச் சிறிது ஓய்வு தேவைப்பட்டது.
“செந்தில்… பக்கத்துல கடைக்குப் போய் எல்லாருக்கும் டீ சொல்லிடு. அதோட ஆளுக்கு நாலு புரோட்டா சொல்லிடு” என்று அவனிடம் கூறிவிட்டு,
“அரை மணி நேரம் எடுத்துக்கங்க. டீ குடிச்சுட்டு புரோட்டா சாப்பிட்டுட்டு வந்துடுங்கடா” அவனிடம் வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கூறிவிட்டு ஓய்வாக வெளியே வந்தான்.
வெளியே பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருக்க, செல்பேசியில் நந்தினியை அழைத்தான்.
“நந்து…”
“சொல்லுங்க மாமா…”
“இன்னைக்குக் கொஞ்சம் லேட் ஆகும் போலத் தெரியுது. நீ சாப்பிட்டுக் கதவைப் பூட்டிடு. நான் கீ போட்டுத் திறந்துக்கறேன்”
“ஏன் இவ்ளோ லேட்? நீங்க இன்னைக்குச் சீக்கிரமாவே வருவீங்கன்னு நினைச்சேன்”
“என்ன பண்றது? தேங்காய் லோடு பிரிக்கணும் நந்தினி. எப்போ முடியும்ன்னு சொல்ல முடியாது. சரி பேங்க்ல அமௌன்ட்ட டிபாசிட் பண்ணிட்டியா?”
வீட்டில் வைத்திருக்க வேண்டாமென்று வசூல் பணத்தை வங்கியில் கணக்கில் வரவு வைக்கச் சொல்லியிருந்தான். அவளுக்கு அதன் முறைகள் எல்லாம் தெரியாது என்று மறுத்தபோதும், பரவால்லை இதையெல்லாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலுகட்டாயமாக அவளை அனுப்பி வைத்திருந்தான், பொள்ளாச்சியிலிருந்து செல்பேசி மூலமாகவே!
“ம்ம்ம் கட்டிட்டேன். ஆனா கைல பணமா வெச்சுருக்கும் போது பயமாவே இருந்துது. ஏன் மாமா இதையெல்லாம் நீங்களே செய்ய மாட்டீங்களா?”
“ஏங்க அம்மிணி! கலெக்டரா ஆகணும்ன்னு கனவு மட்டும் காணத் தெரியுது. அந்தப் பணத்தைப் பேங்க்ல டிபாசிட் பண்ண இவ்வளவு சலிச்சுக்கற. உன் கிட்ட ஒரு மாவட்டத்தையே கொடுத்தா மாவாட்ட மட்டும் தான் முடியும்ன்னு சொல்லுவ போல இருக்கே” வேண்டுமென்றே அவளைத் தூண்ட,
“ம்ம்ம் அதெல்லாம் அப்போ நாங்க கரெக்டா இருப்போம். ரொம்ப வாராதீங்க” விட்டுக்கொடுக்காமல் அவளும் பேச, நந்தினியிடம் பேசியவாறே திரும்பியவனின் கண்களில் பட்டாள் ஒரு பெண்.
எங்கோ பார்த்துக் கொண்டு சாலையைக் கடக்க முயற்சி செய்ய, இரவு நேரமாதலால் டேங்கர் லாரி அதிவேகமாக வந்து கொண்டிருக்க, பித்து பிடித்தார் போல எதையும் கவனிக்காமல் நடுச் சாலைக்குப் போய்க்கொண்டிருந்தாள்.
“நந்து அப்புறம் பேசுறேன்” அவசரமாக இணைப்பைத் துண்டித்துவிட்டு அவளை நோக்கி ஓடினான் சக்திவேல்.
டேங்கர் லாரி ஓட்டுநராலும் அந்த வேகத்தில் நிறுத்த முடியாமல், சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் ஹாரனை முழங்க விட, அந்தப் பெண்ணோ காது கேளாதவள் போலச் சாலையின் மையத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அவசரமாகச் சாலைக்கு ஓடிய சக்தி அந்தப் பெண்ணை இழுத்துக்கொள்வதற்கும் டேங்கர் லாரி க்ராஸ் செய்வதற்கும் சரியாக இருக்க, சற்று தூரத்தில் போய் ஓரமாக அந்த லாரி நின்றது. அந்த டிரைவர் கொலைவெறியோடு கீழே இறங்கி அவர்களை நோக்கி வர, தான் காப்பாற்றிய அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தான் சக்திவேல்!
அதிர்ந்தான்.
சித்ரா!





