அத்தியாயம் இருபத்து ஒன்று
நந்தினியை எக்ஸாம் ஹாலுக்கு அனுப்பி வைத்து விட்டு குடோனுக்கு வந்தவனுக்கு அவளைக் காட்டிலும் பரபரப்பாக இருந்தது. அவளிடம் ‘ஜஸ்ட் சும்மா போய் பார்த்து விட்டு வா’ என்று தைரியம் கூறினாலும், உள்ளுக்குள் பதட்டம் குறையாமலிருந்தது. அவள் தைரியமாக இருப்பாளா, முடிவு சரியாக வராவிட்டால் அதை ஏற்றுக்கொள்வாளா என்ற எண்ணம் அவனைப் படுத்த, அன்றைய பணிகளை முடிப்பதில் தன்னைத் தானே முடுக்கிவிட்டான்.
ஆனாலும் மனதின் குழப்பம் அவனது வேலையைப் பாதிக்க, தேங்காய் பிரிக்கும் வேலையைச் செந்திலை மேற்பார்வையிடக் கூறி விட்டு, அருகிலிருந்த அவனது இஷ்ட தெய்வமான ஐயப்பனைக் காணச் சென்றான்.
“சுவாமியே சரணம் ஐயப்பா” என்று அவர் முன்பு அமர்ந்தபோது மனம் லேசானது.
கோவில்கள் பீஸ் கேட்காத மனோதத்துவ மருத்துவமனைகள்! எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் சற்று நேரப் பிரார்த்தனை, அதில் பலனிருக்கிறதோ இல்லையோ, மனம் மட்டும் மெல்லிய இறகாகி விடுவதை நிறைய சமயங்களில் உணர்ந்திருக்கிறான்.
அன்று நந்தினியை நினைத்து ஒரு பக்கம் குழப்பம் இருந்தாலும் மனதின் இன்னொரு மூலையை அரித்துக் கொண்டிருந்தது சித்ரா. அடுத்த நாள் கண்டிப்பாக வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டு வந்ததைத் தவறாமல் செய்தான் சக்தி. நந்தினிக்கு மனம் சித்ராவிடம் ஒப்பவில்லை என்றாலும் அவள் சிறு பெண் என்பது அவனது எண்ணம். சித்ரா பிரச்சனையில் சிக்கியிருப்பதாக அவனது புத்தி கறாராக உரைத்தது. அவனால் ‘எனக்கென்ன’ என்றும் இருக்க முடியவில்லை. ஆனால் அவன் சித்ராவின் வீட்டிற்குச் சென்றபோது அவள் மட்டுமே இருக்க, அவளது கணவனைப் பார்க்க முடியவில்லை.
அவளது முகம் சோர்ந்து தெரிய, எதையும் வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையில் அவள் இருப்பதாகவே தோன்றியது. நந்தினிக்குத் தேர்வு முடிந்தவுடன் இருவரையும் சந்திக்க வைத்த பின், என்ன பிரச்சனை என்று அவள் கேட்டால் சித்ரா சொல்லாமலா போய் விடுவாள்? மனதில் முடிவெடுத்துக் கொண்டு கண்களைத் திறந்தவன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.
ஹரிவராசனம் விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
யேசுதாஸின் குரல் சுகமாக வருடக் கோயிலைச் சுற்றி வரத் துவங்கினான். நந்தினி இந்நேரத்திற்குப் பாதி கிணறு தாண்டியிருப்பாள். காலை, மாலை என இரு தேர்வுகளையும் முடித்து விட்டு அவளையே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வரக் கூறியிருந்தான். முன்பு தனியாக எங்கும் சென்று பழக்கப்பட்டிராதவளைத் தற்போது அனைத்து வேலைகளுக்கும் தனியாகவே அனுப்பிப் பழக்கியிருந்தான். அவனது தொழிலும் அதற்கு உதவ, பெரும்பாலான நேரங்களில் அவன் எங்குமே உடன்வர முடியாத சூழ்நிலையிலிருப்பான்.
ஸ்டடி சர்க்கிள் சென்று வருவதாகட்டும், லைப்ரரி, பேங்க், பர்சேஸ் என அனைத்திற்கும் முணுமுணுத்துக்கொண்டே தனியே சென்று பழகியிருந்தாள். அவளது சிரமம் ஒரு வகையில் அவனுக்கும் சங்கடத்தைக் கொடுத்தது என்றாலும், அவள் எதையும் தனியாகச் சமாளிக்கப் பழக வேண்டுமே என்கிற எண்ணம் வந்து அவனது சங்கடத்தைப் போக்கிவிடும்.
அன்றைக்குத் தேர்வுக்கு அழைத்துப்போன போதே கறாராகக் கூறியிருந்தான்.
“ஏய் அரிசி மூட்டை! உட்கார்ந்து பே-ன்னு முழிக்காம ஆன்சர் ஷீட்டைப் பார்த்து கோடிங் பண்ணு. இன்னைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை அதிகம். ரெண்டு லோடு தேங்காய் பிரிக்கணும். அதனால ஈவினிங் நீயே ஆட்டோ பிடிச்சு வந்துடு. ஓகேவா?” என்று சீரியஸாக அவன் கூறிக்கொண்டிருக்க, அவனது மனையாளோ தேர்வு பதட்டத்தில் அவனது முகம் பார்த்தபடி நகத்தை மென்று துப்பிக் கொண்டிருந்தாள்.
“என்ன நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். நீ என்னடான்னா இப்படி நகத்தைக் கடிச்சுகிட்டு இருக்க?” அவளது விரல்களைப் பிரித்துவிட,
“ம்ம்ம்ம்ஹும்” தேர்வுக்குச் செல்லப் பயந்து கொண்டு தாயின் சேலையைப் பற்றிக்கொள்ளும் குழந்தையைப் போல அடம் பிடித்த நந்தினியைக் கண்டு சிரிப்பு பொங்கியது அவனுக்கு. ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு முறைப்பது போலப் பாவனை செய்து,
“அப்போ உனக்கு எக்ஸாமுக்கு போக வேணாம் இல்லையா?” என்று கேட்க, அவசரமாக மறுத்தாள் நந்தினி.
முன்பு போலப் படிக்கப் பிடிக்கவில்லை என்றால் ‘உன் பெற்றோர் பார்த்தவனையே கட்டிக் கொண்டிருக்கலாமே’ என்று கேட்டு விடுவானோ என்று பயந்தாள். அவனோடு சேர்ந்து இருந்த நாட்களில் எல்லாம் அது போல ஒரு வார்த்தையும் பேசவில்லை என்றாலும், உள்ளுக்குள் அந்த வார்த்தை நெருஞ்சி முள்ளாகத் தைத்திருப்பதை அவளால் மறக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை!
“இல்ல இல்ல… அப்படி இல்ல. சின்ன பயம். அதான் மாமா” தயங்கியவாறே அவள் உரைக்க, அருகில் வாவென அவன் பார்வையால் அழைக்க, அதே தயக்கத்தோடு அவனருகில் செல்ல, கைகளை விரித்து அவளை மென்மையாக அணைத்துக்கொண்டான். ஆதரவாக முதுகைத் தட்டிக் கொடுத்தவன்,
“ஹேய் அரிசி மூட்டை! பயம் வரும்போதெல்லாம் மாமனை நினைச்சுக்கோ. ஓகேவா?” என்று அவளது முகம் பார்த்துக் குறும்பாகக் கூறியவனை முறைத்தவள்,
“ம்க்கூம்! அங்க உங்களை நினைச்சுட்டு இருந்தா நான் எக்ஸாமை எழுத வேண்டாம்?” என்று அவனிடமிருந்து விலகித் தேர்வுக்குத் தேவையானவற்றை எடுத்து வைக்கத் துவங்கினாள்.
அந்தச் சிறிய பூஜை அறையில் விழுந்து வணங்கியவள், அடுத்து சக்தியின் காலிலும் விழுந்து வணங்க, அதிர்ந்து பின்வாங்கினான்!
“ஏய் என்ன பண்ற?” அதிர்ந்து கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் இயல்பான குரலில்,
“ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா ப்ளீஸ்”
“அதான் சுவாமியை நமஸ்காரம் பண்ணிட்டியே. இங்க எதுக்குடி விழற?” எரிச்சலாக வேறு இருந்தது; தேர்வுக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. விழுந்தவள் வேறு ‘ஆசீர்வாதம் செய்தால்தான் எழுவேன்’ என்று அடம் பிடித்துக்கொண்டிருக்க, என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை.
“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க. லேட் ஆகுது” அவளும் அவசரப்பட,
“சரி பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழு தாயே. இப்போ எழுந்திரு” என்று கூறி முடித்தபோது எழுந்தவள் முகத்தில் குறும்புப் புன்னகை.
“மாமா நீங்களே சொல்லிருக்கீங்க பதினாறு பெத்துக்கோன்னு. ஞாபகம் வெச்சுக்கோங்க” என்று கண்ணடித்துச் சிரிக்க, கையிலிருந்த பேப்பரைச் சுருட்டி அவளது பின் பக்கத்தில் அடித்தவாறே,
“வாலு… அறுந்த வாலு” என்று சிரிக்க,
அதே மனநிலையோடு தேர்வு அறை வரை அவனுடைய அறிவுரைகளையும் ஊக்கமருந்துகளையும் கேட்டுக்கொண்டே சென்றவள், அறையில் நுழையும் முன் சக்தியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். வேர்த்து நடுங்கியதை உணர்ந்தவன்,
“சியர் அப் நந்து! இந்த எக்ஸாம்லாம் ஒண்ணுமே இல்ல. ஜஸ்ட் ஹேவ் எ ட்ரை. அவ்வளவுதான். ஓகே” என்று இறுகக் கையைப் பிடித்துக்கொண்டு கூற, கண்கள் கலங்கியது நந்தினிக்கு. ஆனால் அந்தத் இறுக்கம் அவளுக்குப் பெரும் பலத்தைக் கொடுப்பது போலத் தோன்றியது.
“ம்ம்ம்”
“ஆல் தி பெஸ்ட்” என்று புன்னகையோடு முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு கையை இறுக்கியவன், பின்பு விட்டுவிட்டு அவளை உள்ளே போகக் கூறினான்.
“தேங்க்ஸ் மாமா” என்று அவனைப் பார்த்தவள் ஹாலுக்குள் நுழைந்தாள். அவனது கண்களிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தவன், பெருமூச்சோடு குடோனுக்குக் கிளம்பினான்.
காலையில் நடந்ததை நினைத்துக்கொண்டே கோயிலை வலம் வந்தவன் தனது கை கடிகாரத்தைப் பார்த்தான். முதல் தேர்வு முடிந்திருக்கும். எதற்கும் சென்று பார்க்கலாமா என்று தோன்றியது; ஆனாலும் தன்னைத் கட்டுப்படுத்திக்கொண்டான்.
சுவாமியை மீண்டும் தரிசனம் செய்துவிட்டுத் திரும்ப, அங்கே கண்களை மூடியவாறு சித்ரா அமர்ந்திருந்தாள். கண்களிலிலுருந்து விடாமல் கண்ணீர் பெருகிக் கொண்டிருக்க, துடைக்காமல், கண்களையும் திறக்காமல் இருக்க, அருகில் சென்றவன்,
“சித்ரா” மெலிதாக அழைத்தான். ஆனாலும் அதற்கு எதிரொலி இல்லாததை கண்டவன், இந்த முறை சற்று அழுத்தமாகச் சப்தமாக அழைக்கவும் திடுக்கிட்டு விழித்தாள்.
“அ… அண்ணா” குரல் வெளிவராமல் சண்டித்தனம் செய்தது.
“என்னம்மா? இப்படி அழுதுட்டு இருக்க? என்னாச்சு?” அவனது குரலில் உண்மையான அக்கறை இருக்க, அது அவளது அழுகையை இன்னமுமே அதிகப்படுத்தினாலும் அதைக் காட்டிக்கொள்ளும் மனநிலையில் இல்லை அவள்.
“ஒன்னும் இல்லண்ணா. ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணிட்டு இருக்கேன்” என்று சுவாமியை கை குவித்து வணங்கி விட்டு எழுந்து கொள்ள முயல, தலை சுற்றிப் போய் மீண்டும் அமர்ந்தாள்.
“சாப்பிட்டியாம்மா?” கோபமாகச் சக்தி கேட்க, யோசித்தவளுக்கு நினைவு வரவில்லை. எப்போது சரியாக உண்டோம் என்பதையே மறந்து மரத்துப் போயிருந்தது மனம். அவள் திருதிருவென விழிப்பதைப் பார்த்துச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சக்தி எழுந்தான்.
“சித்ரா கிளம்பும்மா”
“எங்கண்ணா?” அவள் புரியாமல் கேட்க,
“நம்ம வீட்டுக்குத்தான். முதல்ல உன்னைச் சாப்பிட வைக்கணும். இல்லைன்னா எங்க விழுந்து வைப்பன்னே தெரியலையே” கவலையாக அவன் கூற, கசப்பாகச் சிரித்தாள்.
“அண்ணா… இப்போ இருக்க நிலைமைல பத்தாவது மாடில இருந்து விழுந்தாலாவது யூஸ் ஆகும். இருக்கட்டும். ஏதாவது ஆகி எனக்கு விடுதலை கிடைச்சா போதுமே”
துக்கத்தை அடக்கிக் கொண்டு சித்ரா கூறிய வார்த்தைகள் சக்தியைத் தாக்கியது. சிறு தங்கையாகவே பார்த்துப் பழகப்பட்டுவிட்ட பெண்ணை இப்படி ஒரு விரக்தியான நிலையில் யோசித்துப் பார்க்க முடியாமல் அவனது மனம் கலங்கித் தவிக்க,
“இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காதம்மா. சியர் அப்… கிளம்பு. நந்துவைப் பார்த்துப் பேசினா உனக்கும் கொஞ்சம் ரிலிஃபா இருக்கும்” என்று அவசரப்படுத்த, “நந்து” என்ற அவளது தயக்கம் புரிய,
“வீட்ல இல்ல. அம்மணிக்கு இன்னைக்கு எக்ஸாம். காலைல ஒரு டார்ச்சர் செஷனை முடிச்சுட்டுதான் போயிருக்கா. வந்துடுவா. மீதி செஷனை உன்னை வெச்சுக் கண்டினியூ பண்ணட்டும்” என்று சிரிக்காமல் கூற, அவள் தனது கவலையை மறந்து சிரிக்கத் துவங்கினாள்.
“இன்னுமா விடலை உங்களைத் டார்ச்சர் பண்றதை?” என்று சிரித்து விட்டு,
“இல்லண்ணா… நான் வரலை. நந்து கூடக் கொஞ்சம் சண்டையாகிடுச்சு காலேஜ்ல” என்று மெலிதான குரலில் கூறினாள்.
“தெரியும்மா… சொல்லிருக்கா” என்று நிறுத்தவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடைவெளி விட்ட சக்தி,
“சின்னப் பிள்ளைங்கன்னு ரெண்டு பேருமே ப்ரூவ் பண்றீங்க. பிரெண்ட்ஸுக்கு நடுவே சண்டை சகஜம். அதை நீயும் விட்டுடனும், அந்த லூசும் விட்டுடனும். அதையே பிடிச்சுத் தொங்கக் கூடாது. சரியா?”
கறாரான குரலில் ஆசிரியரைப் போல மிரட்டியவனைப் பார்க்கப் பாந்தமாக இருக்க, அதே நேரத்தில் கீர்த்திவாசன் நினைவுக்கு வந்தான். தன்னை இன்னும் சிறு பிள்ளையாகச் சக்தி பாவிக்க, ஏன் தன் கணவன் இப்படி வக்கிரம் பிடித்து அலைய வேண்டும்?பிறப்பும் வளர்ப்பும் பெரிய அளவில் இல்லாத சக்தியின் குணம் உயர்ந்ததாக இருக்க… நற்குடியில் பிறந்து நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்டதாக கூறி கொள்ளும் கீர்த்திவாசனின் செயல்கள்? அவளுக்கு தெரிந்தவரை அவள் அறிந்தவரை சக்திவேல் காண அரிதான தானாக வளர்ந்த ஒரு வலம்புரி சங்கு… அந்த சங்கை சுட்டாலும் வெண்மையையே தரும்.
பெருமூச்சோடு எழுந்தவள் சக்தியோடு நடந்தாள்.
***
சக்தி தோசை வார்த்துப் போட, சித்ரா கணக்கே வைக்காமல் உண்டு கொண்டிருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகான நிம்மதியான உணவாகத் தோன்றியது அவளுக்கு. அவளது வீட்டில் சரியாக உண்டது எப்போது என்று நினைத்துப் பார்த்தாள்; ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவே அதிகமாகத் தோன்றும். மனதில் நிம்மதியில்லாமல் எங்கிருந்து உண்பது, உறங்குவது? இரண்டுமே அவளை விட்டுச் சென்று நாட்களாகி விட்டதே.
“அண்ணா! தேங்காய் சட்னி சூப்பரா இருக்கு” அந்த எளிய உணவே அமிர்தமாக இறங்கியது.
“எனக்கு நந்து அளவுக்கெல்லாம் சமைக்கத் தெரியாது. ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்குச் செய்தேன் சித்ரா” என்று புன்னகைக்க, அவளோ சப்புக் கொட்டிக்கொண்டு உண்ண, அதைப் பார்த்தவனுக்கு மனதுக்குள் இரக்கம் பிறந்தது. எவ்வளவு வசதியான குடும்பத்தில் பிறந்தும், அதைக் காட்டிலும் வசதியான இடத்தில் வாழ்க்கைப்பட்டும் இந்தப் பெண்ணுக்கு நிம்மதி இல்லையே!
“நந்துவுக்கு என்ன எக்ஸாம் ண்ணா?” அடுத்த தோசையை உள்ளே தள்ளிக்கொண்டே அவள் கேட்க,
“சிவில் சர்வீஸ் பிரிலிம்ஸ்” இயல்பாகக் கூறியவனை கண்களை விரித்து ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“வாவ் நிஜமாவா? அவளோட ஒரே ஆம்பிஷன் அதுதானே. பரவால்ல நந்து… மேரேஜ் வகைல ஷி இஸ் கிப்டட்” வெகு இயல்பாகக் கூறினாலும் அதனுள் பொதிந்திருந்த வலியை அவள் மட்டுமே உணர்ந்தாள்.
“இல்லம்மா… நான் தான் கிப்டட். உள்ளுக்குள்ள ரசிச்சுட்டு இருந்த பொண்ணை ‘இந்தா வச்சுக்கோ’ன்னு கடவுளா பார்த்து என்கிட்டே கொடுத்தாரே. அப்போ யார் லக்கி?” என்று புன்னகையோடு கேட்க, அது அவனது தன்னிலை விளக்கமாகத் தெரியாமல் அவளுக்குத் தரப்பட்ட பதிலாகவே தோன்றியது.
“அடடா! உங்களுக்குள்ள இப்படி ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் ஒளிஞ்சுட்டு இருந்ததே தெரியலையே” என்று சிரித்துவிட்டு, “ரெண்டு பேருமே லக்கி தான் போதுமா?” புன்னகை முகத்தோடு கை கழுவினாள். கழுவி முடிக்கும் வரை காத்திருந்த சக்தி நிதானமாகக் கேட்டான்.
“என்னம்மா பிரச்சனை? உன் அண்ணன்கிட்ட சொல்ல மாட்டியா? உனக்காக நாங்க ரெண்டு பேரும் இருக்கோம் சித்ரா” ஆழமான அவனது வார்த்தைகள் அதுவரை இருந்த துன்பத்தை மறந்த மனநிலையை மாற்றியது; கண்களில் நீரை கோர்க்க வைத்தது. ஒன்றும் கூறாமல் மெளனமாக இருந்தவளை மீண்டும் அவனது கேள்வி தட்டியெழுப்பியது.
“சொல்லும்மா”
“இல்லண்ணா எதுவுமே செய்ய முடியாது. அப்படி ஒரு பாழுங்கிணத்துல தள்ளி விட்டுட்டாங்க. இப்போ எனக்கு அதில இருந்து எப்படி வெளிய வர்றதுன்னு கூடத் தெரியல” மெளனமாக கண்ணீரில் கரைந்தபடி மெலிதான குரலில் கூற, சக்தியின் புருவம் முடிச்சிட்டது.
“என்னம்மா? அப்படி என்ன சீரியஸா? மாப்பிள்ளை வீட்ல ஏதாவது வரதட்சணை கேட்டு…” என்று தயங்கி நிறுத்த, அவள் இல்லையென்று தலைகுனிந்தவாறே மறுத்தாள்.
“அப்புறம் வேற என்னம்மா?” புரியாத தன்மையினால் அவனுக்குப் பதட்டம் சூழ்ந்தது.
“உங்ககிட்ட சொல்லக் கூட முடியாதுண்ணா. ப்ளீஸ் விட்டுடுங்க” அவளுக்குத் தன் நிலையை நினைத்து அசிங்கமாக இருந்தது. ஒரு ஆணிடம் எப்படிச் சொல்வது?
“இல்ல சித்ரா… முதல்ல கொஞ்சம் நெருடலாத்தான் இருந்தது. ஆனா இப்போ வேற வழியே இல்ல. சொல்லித்தான் ஆகணும். திரும்ப உன்னை வீட்டுக்கு அனுப்பவே பயமா இருக்கும்மா”
உடன்பிறப்பு இருந்தால் இப்படித்தான் தனக்காகத் துடிக்குமோ என்று தோன்றியது சித்ராவுக்கு. கீர்த்திவாசனுடனான அவளது வாழ்க்கை அவளை வெறுப்பின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்க, மெலிதான அவளது அழுகை கரையை உடைத்த வெள்ளமாக மாற, இடம் பொருள் எல்லாவற்றையும் மறந்து கதற ஆரம்பித்தாள்.
“என்னால முடியல… எனக்கு அந்த வாழ்க்கையே வேண்டாம். இல்ல நான் வாழவே வேண்டாம். செத்துட்டா போதும். தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கறதுக்கு என்னை மொத்தமா கொன்னுடச் சொல்லுங்கண்ணா” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் கதற, சக்திக்குப் பதறியது.
“என்னம்மா சொல்ற? என்னாச்சு?”
“எப்படிச் சொல்றதுன்னே எனக்குத் தெரியல. சொல்லவே கூசுது. எங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகச் சொல்றாங்க. ஆனா இந்தக் கொடுமையை எப்படி அட்ஜஸ்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியலையே” அவளது கதறல் நிற்காமல் தொடர,
“சித்ரா! என்னாச்சுன்னு முதல்ல சொல்லு. கேட்க யாருமில்லைன்னு நினைச்சுட்டு இருக்காங்களா? எவன் என்ன சொன்னா என்ன நான் கேட்கறேன். நீ அழாம நடந்ததைச் சொல்லு” அவளது கதறல் அவனுக்குள் கோபத்தை ஏற்படுத்த, கொந்தளித்தான்.
“இல்ல… அவனைக் கேட்கவே முடியாது. கேட்டா என் மானம் தான் போகும்” அழுகையினூடே அவள் கூற,
“ஏன்?” கோபமாகக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டான்.
“ஏன்னா… விஷயம் வெளிய வந்துதுன்னா அவன் எடுத்த வீடியோ எல்லாத்தையும் நெட்ல போடுவேன்னு மிரட்டறான் ண்ணா. நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க” தேம்பிக்கொண்டே சித்ரா கேட்ட கேள்வியில் ஆடிப் போனான் சக்திவேல்.
“என்னம்மா சொல்ற?” அதிர்ந்து அவன் கேட்டது கசப்பான புன்னகையை மலர வைத்தது.
“ஆமா… அதுவும் என்னைச் சும்மா அவன் வீடியோ எடுக்கலை. வி… வித… விதமா டார்ச்சர் பண்ணி… எடுத்தது. ஐயோ என்னால முடியல… காந்துது… என் உடம்பே காந்துதே” மடங்கி அமர்ந்து நடந்தவற்றைக் கூறிக்கொண்டு மீண்டும் கதற ஆரம்பித்தவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் மலைத்தான். அவள் கூறிக்கொண்டிருந்த நிகழ்வுகள் அவனை அதிர்ச்சியின் விளிம்புக்குக் கொண்டு செல்ல,
“ஹய்யோ! வேணாம்மா… வேணாம்… சொல்லாத… நிறுத்து” என்று அவளை அவசரமாக நிறுத்தியவனுக்கு அதற்கும் மேலும் கேட்க முடியவில்லை. அந்த முகம் தெரியாத மிருகத்தைக் கொன்றால் என்னவென்று தோன்றியது. மனிதனா அவன்?
மிருகம் என்று கூட வரையறுக்க முடியாத ஜென்மம்! அப்போதே அவனை வெட்டிப் பலியிட வேண்டும் என்ற கோபம் கொந்தளிக்க, மனமோ கதறிக்கொண்டு இருக்கும் அந்தப் பெண்ணை முதலில் தேற்றச் சொன்னது.
அவளை எழுப்பித் தோளோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு,
“இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்மா. உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்” ஆவேசமான அவனது வார்த்தைகள் சித்ராவுக்கு மிகுந்த நிம்மதியைத் தர, அவனது தோளில் சாய்ந்து கண்ணீர் வற்றும் வரை அழுதாள்.
அந்த மிருகத்தை எப்படி கையகப்படுத்துவது என்று அவனும் யோசித்துக்கொண்டு சித்ராவை ஆதரவாகத் தலையை வருடிக்கொண்டிருக்க, கதவு திறந்தது.
முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்க நுழைந்த நந்தினி, இருவரையும் பார்த்து அதிர்ந்து நின்றாள்.
நடந்தவற்றை அறியாத அவளுக்கு, தன் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டிருந்த சித்ராவையும், அவளது தலையை வருடிக்கொண்டிருந்த சக்தியையும் பார்த்தபோது காலடியில் பூமி விண்டு போவது போலத் தோன்றியது.





