அத்தியாயம் இருபத்து இரண்டு
வெகு நாட்களுக்குப் பின் நந்தினியைப் பார்த்ததால் சித்ராவுக்கு என்ன பேசுவதென்றே புரியாமல் அவளை நோக்கி,
“நந்து…” ஆதரவைத் தேடிய கன்றாகத் தழுதழுக்க, நந்தினியின் முகம் வெறுப்பைச் சுமந்தது.
“ஆக மொத்தம் நீ சொன்னதைச் செய்து காட்டிட்ட இல்லையா?” முழுமையான வெறுப்போடு சித்ராவை வெறித்த பார்வை பார்த்தபடி கேட்க, சித்ரா புரியாத பார்வை பார்த்தாள்.
“நந்து…” சித்ராவினால் அவளுடைய மனக்குழப்பத்திலிருந்து வெளிவந்து நந்தினியின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு நந்தினி புரிந்து கொண்டதும் கூற வருவதும் முழுமையாகப் புரிய, அவளது முதிர்ச்சியில்லாத நினைவு கோபத்தை ஏற்படுத்தினாலும் அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இதுவல்ல என்பதை உணர்ந்தான்.
“நந்து!” கறாரான கோபமான அவனது அதட்டல் அவளைத் திடுக்கிட வைத்தாலும், சக்தியை வலி மிகுந்த பார்வையோடு பார்த்து,
“நீங்க எப்படி மாமா இப்படி?” கண்களில் சட்டெனக் கண்ணீர் வழிய அவள் கேட்ட தோரணை அவனுக்குள் கோபத்தை அதிகப்படுத்தியது. எப்படி இப்படி மிகச் சரியாகத் தவறான புரிதலிலேயே ஒவ்வொரு செயல்களையும் செய்கிறாள் என்பது அவனுக்குப் புரியாத ஒன்றாக இருந்தது.
அவசரம்… அனைத்திலும் அவசரம்… முடிவெடுப்பது செயலாற்றுவது என அனைத்திலும் அவசரம் என்று நொந்துக்கொண்டான்.
“அறிவுகெட்ட கூமுட்டை! என்னை பேச வெச்சுடாத. இந்தப் பொண்ணு இருக்குன்னு பார்க்கறேன். இல்லைன்னா இப்போ நீ உளறிட்டு இருக்கறதுக்குச் சப்புச் சப்புன்னு கன்னத்துலையே ரெண்டு அரை தான் வாங்குவ” அவளது கண்ணீரைப் பார்த்த கோபத்தை அவளிடமே காட்டி கொண்டிருந்தவனின் செயல் அவளை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக அவளுள் வெறுப்பை அதிகமாக்கியது.
“ஏன் மாமா? அந்த அளவு என்னை பிடிக்கலையா?” வாழ்க்கையே வெறுத்துப் போனது போல அவள் கேட்ட கேள்வி அவனை கொதிக்க வைக்க, சித்ராவுக்கு இருவரின் வாக்குவாதத்தைப் பார்த்துப் பயம் சூழ்ந்தது.
“நந்து… நீ தப்பா நினைச்சுட்டு இருக்கடி” என்று கூற வந்தவளைப் பார்த்து முறைத்துச் கையைக் காட்டி நிறுத்தக் கூறினாள்.
“ஆமா தப்பாத்தான் நினைச்சுட்டு இருந்தேன் ரொம்ப. இப்போ தானே தெரியுது ஒவ்வொருத்தரோட லட்சணமும்” சக்தியைப் பார்க்கப் பிடிக்காமல் அவளை வெறுப்பாகப் பார்த்துச் கூற, சித்ரா விக்கித்துப் போனாள். சக்தியோ உள்ளுக்குள் துண்டு துண்டாகச் சிதறிக்கொண்டிருந்தான்.
சொன்னது அவள்தானா இல்லை தனது கற்பனையா என்பதும் அவனுக்குப் புரியவில்லை. உண்மையில் நேசம் கொண்டிருந்தால் நம்பிக்கை வைத்திருக்க மாட்டாளா? நந்தினியின் காதல் இவ்வளவுதானா? முதலில் அவளுடையது காதல்தானா? அல்லது வெறுமனே வயதுக் கோளாறா? தன்னுடைய காதல் அவளைச் சிறிதும் தீண்டவில்லையா? அவனுக்குள் பூத்த பூ அவளுக்குள் பூக்கவில்லையா?
காதலா? சக்தியின் மனம் விழித்துக் கொண்டு கேள்வி கேட்க,
‘காதல் தான்… காதலில்லாமல் வேறு என்ன?’ என்று அவனது இன்னொரு மனம் சாட, கண்களை இறுக மூடித்திறந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் கையை நீட்டி அவளை நிறுத்தக் கூறினான்.
“நிறுத்து நந்தினி!” அவனது ‘நந்து’ என்ற அழைப்பு மாறி நந்தினியாகிவிட, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். சித்ராவின் மனமும் அதிர்ந்து இருந்தது; அவளால் இருவருக்கும் இடையில் பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை. அவசரமாகச் சக்தியை இடையிட்டாள் சித்ரா.
“அண்ணா ப்ளீஸ்! நந்து தான் தெரியாம பேசறான்னா நீங்களும் பேசாதீங்க ப்ளீஸ்” என்று அவனை வேண்ட, நந்தினி கேலியான சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
“ஹ ஹா… சபாஷ்! அண்ணாவா? எப்படி சித்ரா இப்படிப் பச்சோந்தி மாதிரி? அண்ணான்னு சொல்லி இன்னும் கொச்சைப்படுத்தாதடி. வேணாம்” அவளது கோபத்தைச் சமாளிக்கும் வழி அறியாமல் தவித்தாள் சித்ரா; சக்தியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.
“ச்சீ நிறுத்து! முதல்ல உங்க ஆளுங்க முன்னாடி நீ சொன்ன வார்த்தையவே என்னால இன்னும் ஜீரணம் பண்ண முடியல நந்தினி. இன்னமும் என்னை அசிங்கப்படுத்தாத! வாயை அடக்கு… வார்த்தையைக் கொட்டிட்டா அள்ள முடியாது” நடுவில் காணாமல் போன கோபமனைத்தும் மீண்டிருக்க, அவனது அந்த ஆவேசம் அவளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. சித்ராவுக்கோ தீராத தலை வேதனையைக் கொடுக்கும் போலத் தோன்றியது.
“அண்ணா… அவ என்னை என்னவோ சொல்லிட்டுப் போறா. என்னோட பிரெண்ட் அவ… ப்ளீஸ். நீங்களும் கோபப்பட்டு வார்த்தையை விடாதீங்க” என்று அவனிடம் கெஞ்சிவிட்டு நந்தினியிடம் திரும்பி,
“நந்து ப்ளீஸ்… அன்னைக்கு என்கிட்டே நீ கேட்ட பேசவே மாட்டியான்னு. இப்போ நான் கேக்கறேன்… ப்ளீஸ் நந்து என் கூடப் பேசு… ப்ளீஸ்… ஏன்னா” என்று கண்ணீர் மல்க அவளை வேண்டியவள்,
“எனக்கு இப்போதைக்கு வேற யாருமே கிடையாதுடி” என்று சரிந்து அமர்ந்து அழத் துவங்கினாள்.
அவளது அந்த வார்த்தைகளும் அந்த அழுகையும் நந்தினியை உலுக்க, அவளோடு சரிந்து அமர்ந்தவளுக்கும் அழுகை வரும் போலத் தோன்றியது. அவளது கோபம் என்பது அவ்வளவுதான். எப்போதுமே மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டிவிட்ட பின் தெளிவாகிவிடுபவளுக்கு, உயிருக்கு உயிராகப் பழகிய தோழியின் கண்ணீர் உறுத்தாமல் இருக்குமா? சட்டெனச் சித்ராவைத் தாங்கிக் கொண்டவள்,
“ஏய் சித்து என்னடி? ஏன் இப்படி அழற? என்னாச்சு?” பதறியவாறு கேட்டவளை நோக்கி கசப்பாகப் புன்னகைத்தாள்.
“எல்லாமே போச்சுடி… வாழ்க்கையே போச்சு” அழுது கொண்டே அவள் கூற,
“என்ன சொல்ற சித்து? விளங்குற மாதிரிச் சொல்லு” நந்தினியின் கண்களிலும் நீர் சூழ்ந்தது.
“கல்யாணம்ங்கற பேர்ல என்னைத் தூக்குல தொங்க விட்டுட்டாங்க நந்து” என்று வெறுத்து அழுகையோடு ஒவ்வொன்றாகக் கூறி, “இப்போ நான் செத்த பிணம்டி” என,
“சித்து!” கண்ணீரோடு அதிர்ந்து பின் வாங்கியவளை வெறுத்த பார்வை பார்த்தான் சக்தி.
“அந்தப் பொண்ணே அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கு. இதுல நீ வேற கேவலமா நினைச்சுட்ட இல்ல?” குரலில் வெறுப்பு மண்டி கிடக்க, அவளை நடுங்கிய பார்வை பார்த்தாள். சித்ரா கூறியதன் தாக்கமும் நடுக்கமும் இப்போதைக்குக் குறையப் போவதில்லை என்று தோன்றியது.
“சித்து… எப்படிடி? எப்படி தாங்கின இவ்வளவு டார்ச்சரை? இப்படியெல்லாம் கூட நடக்குமா? எப்படி சித்து? என்னால தாங்க முடியலைடி” நடுங்கியவாறே அவள் கூற, மீண்டும் சித்ராவின் முகத்தில் கசப்பான புன்னகை தோன்றியது.
“இதோட நின்று போகலை நந்து. ஒரு நிமிஷம் தனியா வா” சக்தி முன் கூற சங்கடப்பட்டு அவளைத் தனியாக அழைத்தாள் சித்ரா. தானும் எழுந்து கொண்டு அவளையும் கை பிடித்து நந்தினி எழுப்ப முயல, சித்ராவின் முகத்தில் வேதனையின் சாயல்! அதைக் கண்டுகொண்ட சக்திக்கு உள்ளமெல்லாம் பதறியது; இந்தப் பெண் செய்த தவறுதான் என்ன? ஜன்னல் வழியே வெட்டவெளியை வெறித்தான்.
சிலுசிலுவென வீசிய தென்றல் காற்றும் கோடையில் பெய்ய ஆயத்தமாகிக்கொண்டிருந்த மழை மேகங்களும் அவனது எண்ணத்தைத் தீண்டவில்லை. சித்ரா பற்றிய கவலை அவனுக்கு முன் நின்றது என்றால் நந்தினியை நினைத்துக் கோபத்தில் திளைத்தது மனம். உறவென்று அழைக்க யாருமில்லாமல் வாழ்ந்துவிட்ட சுயம்பு; அவனுக்குக் கிடைத்த முதல் உயிரான உறவே அவனை நம்பாததில், அது ஒரு நிமிடமாகவே இருந்தாலும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இருவரும் வரும் அரவம் கேட்ட சக்தி நிமிர்ந்து பார்க்க, கருமை சூழ்ந்த முகத்தோடு நந்தினி வர, அவளைத் தொடர்ந்து வந்த சித்ரா சக்தியெல்லாம் வடிந்தது போல ஹாலில் இருந்த அந்தச் சேரில் அமர்ந்தாள். அவளது கண்களில் கண்ணீர் வற்றியிருக்க, அதற்கு மாறாக நந்தினியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது தெரிய, அவனது கோபத்தை விடுத்து அவளருகில் சென்று கையைப் பற்றிக்கொண்டான்.
“என்னாச்சு?” அவளுக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுப்பாக அவன் கேட்க, அவளால் பதில் கூற முடியவில்லை. கேவிக்கொண்டிருந்தவளைத் தோளோடு அணைத்துக்கொண்டு,
“ப்ச்… நீயே இப்படி அழுதா அந்தப் பொண்ணை யாரு தேத்தறது? முதல்ல அழுகையை நிறுத்து” கோபமாக அவன் கூற, அழுகையை நிறுத்த முயன்று தோற்றாள். கேவி கொண்டே,
“அவன் என்ன மனுஷனா மிருகமா மாமா? உ… உடம்பு முழுக்க” என்று இடைவெளி விட்டவள், “சூ… சூடு வெச்சிருக்கான். அதுவும் இல்லாம அவ்வளவு கா… காயமா இருக்கு. ஏன்… ஏன்… மாமா… அதை என்னால பார்க்கக் கூட முடியலையே… சித்து பாவம் மாமா” என்று கூறிவிட்டு மீண்டும் அழ, அதை உணர்வே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
“ராஸ்கல்!” கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுத்த சக்தி, செல்பேசியைக் கையில் எடுத்து நேராக அழைத்தது முத்துவேலுக்கு! சித்ராவின் தந்தை!
“நான் சக்திவேல் பேசறேன்” கடுமையான குரலில் ஆரம்பிக்க, ஒரு நிமிடம் குழம்பிய முத்துவேல் நினைவு வந்தவராக,
“ம்ம்ம் சொல்லு” அவரைப் பொறுத்தவரை அவர்களது இனத்துப் பெண்ணை இழுத்துக் கொண்டு போனவன் சக்தி; அதே கோபத்தோடு அவர் பேச,
“எங்க இருக்கீங்க?” அவரைப் பார்த்து இரண்டில் ஒன்று முடிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு!
“என் பொண்ணைப் பார்க்க மெட்ராஸ் வந்துருக்கேன். என்ன விஷயம் சொல்லு” தானே வந்து அவனிடம் சிக்கினார்!
“பொண்ணைப் பார்க்கணும்னா இங்க வாங்க. உங்க பொண்ணு எங்க வீட்ல இருக்கு” என்று கூற, அவர் குழம்பினார்.
“ஏன் உன் வீட்ல இருக்கு?” கடுப்பாக அவர் கேட்க, சக்தி கோபத்தின் உச்சிக்குச் சென்றான்; மரியாதை காற்றில் பறந்தது.
“யோவ்… அறிவிருக்காய்யா உனக்கு? போயும் போயும் அப்படி ஒரு மிருகம் தான் கிடைச்சானா? ஒரு பொண்ணை விஷம் வெச்சுக் கொன்னாச்சு இன்னொரு பொண்ணை உசுரோட கொன்னாச்சு! ச்சை… மனுஷனா நீ? உன் அருமை மாப்பிள்ளை மட்டும் என் கைல கிடைச்சான் என் கையால தான் அவனுக்குச் சமாதியே” கோபத்தில் கொந்தளித்தான்!
“டேய்… மரியாதையா என் பொண்ணை விட்டுடு. கண்டதையும் சொல்லிக் கொடுத்து நந்தினியை ஓட்டிக்கிட்டுப் போனது பத்தாதாடா உனக்கு? எவ்வளவு தெனாவட்டு இருந்தா எனக்கே போன் பண்ணி இப்படிச் சொல்லுவ” கோபத்தில் அவரும் எகிற, அருகில் இருந்த சித்ராவின் தாய் வேணி அவரைச் சமாதானப்படுத்தினார். சித்ராவை நினைத்து அவருக்கு உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது; அதனால் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று கணவரை அழைத்துக்கொண்டு கிளம்பியிருந்தார்.
இருவருக்கும் இடையில் வார்த்தைகள் வலுத்தன. இங்கு நந்தினியும் சித்ராவும் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர் என்றால், அங்கு முத்துவேலுக்கு அருகில் இருந்த வேணி அவரைச் சமாதானப்படுத்த, உடன் அமர்ந்திருந்த கீர்த்திவாசன் உணர்வுகளைத் துடைத்துவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
புழுவாக நினைத்தவளுக்காக ஒருவன் பேசுவதா?
முத்துவேலிடமிருந்து செல்பேசியை வாங்கியவன்,
“சார்… நான் கீர்த்தி பேசறேன். கொஞ்சம் என் ஒய்ப் கிட்ட போனை கொடுங்க” அவனது தோரணை யாரையும் ஏமாற்றிவிடக் கூடியது என்பதை சக்தி உணர்ந்தான். கோபம் கரைகடந்தது.
“என்னடா… ஒன்னும் தெரியாதவன் மாதிரி பேசுனா உன்னைச் சும்மா விட்டுடுவோமா?” என்று சக்தி எகிற ஆரம்பிக்க, அவன் தணிந்தே பேசினான்.
“சார்… நீங்க என்னைத் தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க. ப்ளீஸ் என் ஒய்ப் கிட்ட கொடுங்க” என்று ஒரு மாதிரியாகக் கெஞ்ச ஆரம்பிக்கவும் அவனுக்கே அசிங்கமாக இருந்தது அவனை நினைத்து!
சித்ரா செல்பேசியை நடுங்கிக்கொண்டே வாங்க, கீர்த்திவாசன் முத்துவேல் மற்றும் வேணியை விட்டுச் சற்றுத் தூரமாகச் சென்றான்.
“ஹலோ…”
“என்னடி அங்க போய் உட்கார்ந்துட்டு வர மாட்டேன்னு சொல்ற? என்ன என் ட்ரீட்மென்ட் எல்லாம் மறந்து போச்சா?”
அவளோ மௌனத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தாள்.
“இப்போ நீ இங்க வரலைன்னா… உங்க அம்மாவும் அப்பாவும் இங்க தான் இருக்காங்க. அப்புறம் வீடியோஸ் எல்லாம் செம கிளியர். எப்படி வசதி?” புன்னகை முகத்துடனே அவனும் கேட்க, சித்ரா நடுங்கிப் போய் சேரில் தொப்பென்று அமர்ந்தாள்!





