அதித்யாயம் 8
அத்தியாயம் 8: சாம்பல் பூத்த சுடரும், அழியா வாசமும்
காம்யவனத்தின் அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே, காற்று திசைமாறிச் சுழன்றடித்தது. தலைமுறை தலைமுறையாக மனித பாதங்கள் படாத அந்தப் புனித பூமியின் அமைதியை, அங்கு வீசிய நறுமணம் மெல்லக் கலைத்துக் கொண்டிருந்தது.
இப்போது தன்னிலை உணர்ந்து, பிரத்யும்னன் தன் ஆதிவடிவமான மன்மதனாகவே மாறி நின்றிருந்தான். தன் ரதியின் நினைவுகள் விழித்துக்கொள்ள, அத்தனை யுகங்களாக அவளைத் தேடி அலைந்தவன், இந்தத் தெய்வீகக் காட்டில் அவளுக்காகத் தான் செய்துவைத்திருந்த ஒவ்வொன்றையும் அவள் கண்களுக்குக் காண்பிக்கத் தொடங்கினான்.
அங்கிருந்த அடர் பச்சை மரங்களையும், கொடிவழிகளையும், விசித்திரமான இலைகளையும் காட்டியவன், அங்கிருந்த அரிய மலர்களின் நறுமணத்தை அவளது நாசி நுகருமாறு தன் கைகளால் ஏந்திக் காட்டினான். அந்த மலர்களின் காம்புகளிலிருந்து கசிந்த தேன் துளிகள், சூரிய ஒளியில் பொன்னென மின்னின.
“இந்த வாசனை உனக்கு எதை நினைவுபடுத்துகிறது, ரதி?”
பூக்களைத் தன் கைகளில் ஏந்தியபடி அவளருகே வந்து நின்றான். அவனது குரலில் யுகங்களைக் கடந்த காதலின் கனிவும், சற்றே தாபமும் கலந்திருந்தது.
அவனது கம்பீரமான கரங்களைப் பற்றி, அந்தப் பூக்களின் அடர்ந்த நறுமணத்தை மெல்ல உள்வாங்கினாள் மாயாவதி என்னும் ரதி. அவளது இமைகள் தாமரையாக மூடிக்கொண்டன. நாசியில் புகுந்த மணம், அவளது ஆத்மாவின் ஆழத்தில் உறைந்திருந்த பழைய நினைவுகளைத் தட்டி எழுப்பியது.
“ம்ம்ம்… இது… நாம் முதன்முதலில் தனிமையில் சந்தித்தபோது, தாங்கள் என் கூந்தலில் சூட்டி மகிழ்ந்த அந்தத் திவ்ய பூமாலையின் வாசனை!”
கண்களை மூடிக் கொண்டேயிருந்தவளின் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. காலம் உறைய, அந்தப் பழநினைவின் சுகத்தில் அவள் மெய்மறந்து நின்றாள்.
“சரியாகச் சொல்லிவிட்டாய், என் ரதி!”
பரவசமடைந்தவன், தன் கைகளில் இருந்த பூவிதழ்களை அவள் தலைமீது மென்மழையெனத் தூவினான். சிவந்த இதழ்கள் அவளது கூந்தலிலும் தோள்களிலும் வந்து விழுந்தன. அவளது பிஞ்சுக் கரங்களைப் மீண்டும் பற்றி, காட்டின் மேலும் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே, மரங்களின் கிளைகளில் பழுப்பு நிறமும் அல்லாமல், அடர் சிவப்பு நிறமும் அல்லாமல், விசித்திரமான வர்ணத்தில் கனிகள் கொத்துக் கொத்தாய்த் தொங்கின. அவற்றின் தோலில் ஒருவித ஒளிரும் காந்தி இருந்தது. அவற்றில் ஒரு கனியை மெல்லப் பறித்து, அவளுக்கு உண்ணக் கொடுத்தான்.
அதை வாங்கிக் கடித்தவள், அந்த திவ்ய சுவை நாவில் படர்ந்ததும் கண்களை அகல விரித்தாள்.
“இது… நான் உங்களை முதன்முதலில் என் இல்லத்தில் விருந்துக்கு அழைத்தபோது, உங்களுக்காகப் பிரத்யேகமாகப் படைத்த அமுதக்கனி…”
யுகங்கள் கடந்திருந்தாலும், அவளது நினைவுகள் மாறாமல் அப்படியே பசுமையாக இருந்ததைக் கண்டு பிரத்யும்னனின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
“சரிதான் ரதி. இங்கிருக்கும் ஒவ்வொன்றிலும் நம் காதலின் சுவடுகள் பதிந்துள்ளன. இந்த வனத்தில் நாம் பகிர்ந்துகொண்ட அந்த ஆதி காதலைத் தான், என் தந்தையான பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த உலகம் முழுமைக்கும் பரவச் செய்தார்…”
அவன் காதலின் பெருமையைச் சொல்லிக்கொண்டே செல்ல, மாயாவதி அவனைச் செல்லமாகத் தடுத்தாள்.
“இதெல்லாம் சரிதான்… ஆனால் நான் உங்களிடம் வினவிய கேள்வி வேறு ஆயிற்றே?” தன் மனதிலிருந்த ஆவலை, செல்லக் கோபத்துடன் வெளிப்படுத்தினாள்.
“ம்ம்ம்… நினைவிருக்கிறது. அடுத்து நாம் அங்கேதான் போகப் போகிறோம்.”
அவன் காதலொளிரச் சிரித்துக்கொண்டே அவளது கரங்களைப் பற்றி அழைத்துச் சென்றான்.
அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சேர்வதற்கு முன்பே, காற்றோடு கலந்து வந்த நறுமணம் அவளது நாசியைத் தீண்டியது. அது என்னவென்று அவளுக்கு யூகிக்க முடிந்தது. இத்தனை காலம் சம்பராசூரனின் அந்தப்புரச் சமையலிலும், தன் இல்லத்திலும் அந்த வேலைகளில் தானே அவள் ஈடுபட்டிருந்தாள்? அதனால், அங்கிருப்பவை சமையலிலும் வழிபாட்டிலும் சேர்க்கப்படும் தெய்வீக வாசனை வஸ்துக்கள் என்பதை அவள் மிக இலகுவாகப் புரிந்துகொண்டாள்.
அடர்ந்த மூலிகைகளும் தானியங்களும் செழித்து வளர்ந்திருந்த ஒரு நிலப்பரப்பில் இருவரும் வந்து நின்றனர்.
“ரதி, இங்கிருப்பவை என்ன என்பது உனக்கு நன்றாகவே தெரியும். அதனால் உனக்கு ஒரு சிறிய சோதனை!” சற்றே பீடிகையுடனும் குறும்பான பார்வையுடனும் ஆரம்பித்தான் பிரத்யும்னன்.
“என்ன சோதனை? இவை அனைத்தும் உணவிலும் அமுதிலும் சேர்க்கப்படும் நறுமணப் பதார்த்தங்கள் தானே?” சாதாரணமாகக் கூறினாள்.
“உண்மைதான். ஆனால் இங்கே நான் வெறும் உணவிற்காக மட்டும் இவற்றை வளர்க்கவில்லை. பலவிதமான திவ்ய தானியங்களையும் மூலிகைகளையும் விதைத்துள்ளேன். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வீரியமும் குணமும் உண்டு. சுவையில் மட்டுமல்ல… அவற்றின் ஆத்ம குணத்திலும் வேறுபாடுகள் உண்டு. அதை உனக்குப் பிறகு விவரிக்கிறேன். இப்போது நீ செய்ய வேண்டியது ஒன்றுதான். உனக்கண்ணில் படும் முதல் பதினொரு வஸ்துக்களைப் பறித்து என்னிடம் கொண்டுவந்து தர வேண்டும். அவற்றின் நற்குணங்களை உன்னோடு நான் மந்திரப் பூர்வமாகச் சேர்த்துவிடுவேன். அது உனக்கு வரப்போகும் அனைத்துப் பிறவிகளிலும் பெரும் அரணாகத் துணைநிற்கும்.”
அவளிடம் பேசுவதோடு நிற்காமல், அங்கிருந்த பிரம்மாண்டமான மரத்தின் தடிமனான இலைகளைக் கொண்டு, ஒரு சிறிய பை போல மடித்துக் கைகளில் கொடுத்தான்.
‘வெறும் தானியங்களையும் வாசனைப் பொருட்களையும் வைத்துக்கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான்?’ என்று மனதிற்குள் யோசித்துக்கொண்டே, தன் தேடல் வேட்டையில் இறங்கினாள் மாயாவதி.
அவளது கண்ணில் முதலில் பட்டது கொடிபோலப் படர்ந்திருந்த மிளகுச் செடி. அதில் வெண்ணிற மிளகும், கரிய மிளகும் கொத்தாய்த் தொங்கின. அவற்றைச் செடியிலிருந்து ஒரு கையளவு பறித்துத் தன் இலைப்பையில் போட்டுக்கொண்டாள்.
பிறகு, தன் பார்வையில் பட்ட சீரகம், வாசனை பட்டை, காய்ந்த சிவப்பு மிளகாய், மங்கலம் தரும் பசு மஞ்சள் என ஒவ்வொன்றாகத் தேடித் தேடிச் சேகரித்தாள். மொத்தம் பதினொரு வகையான வாசனை தானியங்கள் சேர்ந்தவுடன், நிறைகுடமாய் நிமிர்ந்து நின்று, அவற்றை எடுத்துக்கொண்டு பிரத்யும்னனிடம் வந்தாள்.
அவன் அங்கே, செடி கொடிகளற்ற வெறும்காட்டு மண் தரையில் நின்று கொண்டிருந்தான். தன் தெய்வீக மனச் சக்தியால், அங்கே ஒரு யாகக் குண்டம் போலத் தீயை மூட்டியிருந்தான்.
அந்தத் தீ முதலின் கொழுந்துவிட்டு எரிந்து, விண்ணைத் தொடும் அளவுக்கு நீண்டு உயர்ந்தது. பின்னர், தன் பேராவலைச் சற்றே குறைத்துக்கொண்டு, மெல்ல மெல்லத் தரை இறங்கியது. பிரத்யும்னனின் உயரத்திற்கு ஏற்ப அது சாந்தமாக எரிந்துகொண்டிருந்த வேளையில், ரதி அவனிடம் தான் சேகரித்து வந்த இலைப்பையைக் கொடுத்தாள்.
அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தான் பிரத்யும்னன். அங்கே பிரகாசித்த மஞ்சளையும் மிளகையும் சீரகத்தையும் கண்டவன், மாயாவதியை ஏறெடுத்துப் பார்த்தான்.
‘எத்தனை பிறவிகள் எடுத்தாலும், எந்த ரூபத்தில் வந்தாலும்… நீ நிச்சயம் என்னிடம் வந்துதான் சேருவாய்!’ என மனதிற்குள் ஆழமாக நினைத்துக் கொண்டான்.
அவள் கொண்டுவந்த அந்தப் பதினொரு வகை தானியங்களையும் தரையில் தூய்மையான ஒரு இடத்தில் பரப்பி வைத்தான். அவற்றின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து, கண்களை மூடி அக்ஷர மந்திரங்களை ஜபம் செய்யத் தொடங்கினான். தன் ஆன்ம எண்ண அலைகளைச் சிறிது சிறிதாக அந்தத் தானியங்களுக்குள் செலுத்தினான்.
ஒவ்வொரு தானியத்திற்கும், ஒவ்வொரு மூலிகைப் பொருளுக்கும் இருக்கும் இயற்கைச் குணத்தோடு, அவனது காதலையும் ரதியின் ஆத்ம சக்தியையும் பிணைக்க நினைத்தான். அப்படிச் செய்வதன் மூலம், இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும், அவர்களுக்குள் இருக்கும் இந்த ஆதி பந்தமும் அன்பும் அணுவளவும் குறையாமல் நீடிக்க வேண்டும் என்று அந்த ஈசனிடம் வேண்டிக்கொண்டான்.
உலகில் இருக்கும் அனைத்து வாசனைப் பொருட்களுக்கும் அதிபதியானவன் அவன். அவை அனைத்தும் அவன் சொல்லைக் கேட்கும். அப்படி இருக்க, அவற்றையே அவன் தனக்கும் ரதிக்கும் அழியாப் பாலமாக அமைக்க நினைத்தான்.
பிரத்யும்னன் செய்யும் அத்தனை காரியங்களையும் மாயாவதி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் மந்திரங்களைச் சொல்லி முடித்ததும், கண்கள் திறந்து அவளை அருகே அழைத்தான்.
“ரதி, இந்த அக்னி பகவானின் முன் நின்று நீ ஒரு சத்தியம் செய்.”
“என்னவென்று சத்தியம் செய்வது?” என்று புரியாமல் திருதிருவென விழித்தாள்.
அவன் அவளது கண்களை ஆழமாகப் பார்த்துச் சொன்னான்:
” ‘உங்கள் அனைவரையும் நான் மனதார மதிக்கின்றேன். உங்களை ஒரு நாளும் மறக்கமாட்டேன். நான் எப்போது உங்களை ஆத்மார்த்தமாக நினைத்து வேண்டினாலும் எனக்கு நீங்கள் ஓடிவந்து உதவ வேண்டும். நான் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்… நீங்களும் என்னை மறக்காமல் இருக்க வேண்டும்…’ என்று இந்தத் தானியங்களை நோக்கிச் சொல்!”
அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும், அச்சுப்பிசகாமல், அதே பக்தி உணர்வோடு அவள் சொல்லி முடித்தாள்.
“நல்லது ரதி. இப்போது ஒவ்வொரு வஸ்துவாக எடுத்து உன் உடலில் தீண்டுவேன். பின்பு நீ அதை வாங்கி அந்தத் தீயில் அர்ப்பணிக்க வேண்டும்.”
அவன் சொல்லவும், ஏதோ ஒரு மெல்லிய சிலிர்ப்புடன் தலையாட்டினாள்.
அவன் முதலில் பசு மஞ்சளை எடுத்தான். அவளது சிரசில் வைத்து ஆசீர்வதித்து விட்டு, அவளது கைகளில் கொடுத்தான். மாயாவதி அதை இரு கைகளாலும் பவ்யமாகப் பெற்றுக்கொண்டு, மனதிற்குள் பிரத்யும்னனை வேண்டி அக்னியில் எறிந்தாள்.
அடுத்து அவளது நெற்றி, நயனங்கள், நாசி, அதரம், கழுத்து, மார்பு, இடை, கரம், தொடை, பாதம் என ஒவ்வொன்றாக அந்த வாசனைப் பொருட்களால் தீண்டினான்.
அவன் விரல்களும் அந்தத் தானியங்களும் தீண்டிய ஒவ்வொரு இடமும் அவளுக்குள் ஒரு பேரலை கிளர்ச்சியை உண்டாக்கியது. யுக யுகங்களாக அவனோடு அவள் கூடித் திளைத்த காமனின் லீலைகளை நினைவூட்டியது. அவளது மேனி சிலிர்த்தது; மூச்சுக்கற்று சூடானது; எண்ணம் எல்லைகளையெல்லாம் கடந்து எங்கெங்கோ ஓடியது.
நெருப்பில் விழுந்து எரிந்துகொண்டிருந்த அந்த பதினொரு வஸ்துக்களும் சேர்ந்து, நறுமணம் மிக்க ஒரு அடர்ந்த நறுமணப் புகையை உண்டாக்கின. அந்தப் புகை காம்யவனத்தின் அந்தப் பகுதியை மெல்ல நிரப்பியது. அதில் இருவரும் சூழப்பட்டு, அந்த திவ்யப் புகைக்குள் தங்களை மறந்து மறைந்து போயினர்.
மன்மதன் உச்சரித்த மந்திரத்தின் வீரியமும், ரதியின் தற்போதைய பிரக்ஞையும் அவர்களை ஒன்றாய் பிணைத்தது. அந்தப் புகை காற்றில் மெல்லக் கலைந்து மறையும் வரை, இருவரும் பாசக் கட்டுப்பட்டவர்களாக, அசைவற்று நின்றனர்.
தீ இன்னமும் சாந்தமாக எரிந்துகொண்டிருந்தது. இருவரும் ஏதோ ஒரு புதுவிதமான பந்தத்தில் இணைந்தது போல உணர, பிரத்யும்னன் மெல்ல முன்னேறி அவளது மென்மையான தோள்களைப் பற்றினான். அவனது காதலும் தாபமும் நிறைந்த பார்வையின் பொருள் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
ஆனாலும்… அவளுக்குள் ஒரு பெரிய தர்ம சங்கடமும் உறுத்தலும் இருந்தது.
இப்போதுதான் அவனுக்கு முனிவரின் சாப விமோசனம் கிடைத்து, பழைய மன்மத உடல் கிடைத்திருக்கிறது. இந்தச் சூழலில், லௌகீகமான முறையில் மேலும் ஒரு தர்ம சங்கடத்தை அல்லது பாவத்தைச் செய்ய அவள் விரும்பவில்லை.
பிரத்யும்னன் அவளது மனவோட்டத்தையும், அவளது கண்களில் தெரிந்த தயக்கத்தையும் நன்றாக உணர்ந்தான்.
“ரதி!” தோள்களைப் பற்றியவாறே அவளது கண்களை உற்று நோக்கினான்.
“அது… அதுதான் இப்போது பெரிய பிரச்சனை!” அவனது கரங்களை மெல்லத் தன் தோளிலிருந்து விலக்கினாள் மாயாவதி.
“நீ நினைப்பது எனக்கு நன்றாகவே புரிகிறது ரதி. ஆனால் நம்மைப் பொறுத்தவரை அது ஒரு பிரச்சனையே அல்ல…” அவளுக்கு உண்மையை உணர்த்த முயன்றான்.
“இல்லை… உங்களுக்குத் தான் புரியவில்லை! நானும் நீங்களும் ரதியும் மன்மதனும் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் இந்த உலகம் நம்மை வேறு விதமாகப் பார்க்கிறது. மாயாவதியாகவும் பிரத்யும்னனாகவும் பார்க்கும்…” மிகவும் அழுத்தமாகக் கூறினாள்.
“எனக்கு என்றோ ஒரு நாள் அழியப்போகும் இந்த உலகத்தைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை, ரதி! எத்தனையோ யுகங்கள், எத்தனையோ இரவுகள் காத்துக் கிடந்து உன்னை அடைந்திருக்கிறேன். என்னால் உன்னை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டும் வாழ முடியுமா? அதுவும்… நீ என்னை வளர்த்த தாய் என்ற உலகத்தின் நினைப்போடு? அது எனக்கு மரணத்தை விடக் கொடுமை! உண்மை தெரியாமல் இருந்தவரை எனக்குள் ஒன்றும் தோன்றவில்லை… இப்போது உண்மை தெரிந்த பிறகு… உன்னைத் தீண்டாமல் என்னால் இருக்க இயலாது ரதி!”
அவனது கம்பீரமான குரல் உடைந்து, ஏக்கத்தால் தேய்ந்தது.
“உங்களிடம் நான் ஒன்று கூற வேண்டும்…” அவனுக்கு நேர் எதிரே சென்று நின்றாள் மாயாவதி.
அவளது முகத்தில் ஒரு தீர்க்கமான முடிவு தெரிந்தது. என்னவென்பது போல அவளை வேதனையோடு பார்த்தான் பிரத்யும்னன்.
“இந்தக் காம்யவனத்திற்கு வரும் முன்பே… உங்களை என்னால் ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து பார்க்க முடியவில்லை! மகரிஷி நாரதர் உங்களைச் சிறு குழந்தையாக என் கையில் கொடுத்தபோது, உங்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்கெனவே ஏற்றேன். ஆனால், உங்களை வளர்க்கும்போது எனக்குள் தாயுணர்வு வரவில்லை…
உங்களது பருவ வயதில் நீங்கள் வேறு பெண்களிடம் பேசினால் என் மனம் பொறுக்காது. அது என்னவென்றே தெரியாத ஒரு தவிப்பு… உங்களது பேரழகைக் கண்டு நான் பலமுறை மனதிற்குள் ரசித்திருக்கிறேன். ஆனால் வயது, நமக்குள் இருக்கும் இந்த வளர்ப்பு உறவு என்னை எச்சரித்துக்கொண்டே இருக்கும். மிகவும் சிரமப்பட்டு அந்தத் தாபத்தை அடக்கிக்கொள்வேன். பலமுறை என் மன உறுதியைக் காப்பாற்றும்படி அந்த பரமசிவனிடம் கதறி வேண்டியிருக்கிறேன்!
அப்படி இருந்த நான்… இன்றுதான் அவை அனைத்திற்கும் என்ன காரணம் என்பதை உணர்ந்தேன்! நீங்களும் நானும் ஆதி காதலர்கள், காந்தர்வ மணம் செய்து கொண்டவர்கள் என்ற உண்மை விளங்கினாலும்… நான் எடுத்திருக்கும் இந்தப் பாவிப் பிறப்பிற்கு அந்த வாழ்க்கையை வாழ முடியாது!
பார்க்கும் ஒவ்வொருவரிடமும் சென்று நம் ஆதி உறவை விளக்கவும் முடியாது. எல்லாவற்றையும் விட… என் மனசாட்சியும் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனால்…!”
சொல்ல முடியாமல் தொண்டை அடைக்கத் தவித்தாள்.
அவள் கூறிய அனைத்தையும் நிதானமாகக் கேட்டவன், அவளது கண்களில் வழியும் கண்ணீரைக் கண்டு, அடுத்துக் கூறப்போகும் கொடூரத்தை ஊகிக்க முடியாமல் அவளிடமே கேட்டான்:
“அதனால்…??”
“அதனால்… நாம் என்னுடைய அடுத்த ஜென்மத்தில் நம்முடைய காதலைத் தொடரலாம்! இந்த மாயாவதி ஜென்மத்தை நான் வெறுக்கிறேன். இருந்தாலும் உங்களுக்கு இனி அழிவும் இல்லை, மறுபிறப்பும் இல்லை. நான் ரசித்த உங்களது இந்தத் திவ்ய உருவத்தை மீண்டும் காண நான் விரைந்து வருவேன்… எனக்கு விடை கொடுங்கள்!”
பேசிக்கொண்டே, அவள் மெல்ல மெல்லப் பின்னால் நகர்ந்தாள்.
“மாயா… நில்! எங்கே போகிறாய்?!” அவனது இதயமும் கண்களும் கலங்கித் துடித்தன.
“நான் மீண்டும் இந்தத் தீக்கு என்னை இறையாக்கப் போகிறேன்! மீண்டும் நான் இதே காட்டில் உங்களை வந்து சந்திப்பேன்… விதி நம்மை நிச்சயம் ஒன்று சேர்க்கும்! என்னைத்தடுக்காதீர்கள்… வருகிறேன்!”
அடுத்த நொடி, அவன் பதறிப் பேசுவதைக் கேட்கக்கூட அவள் அங்கே இல்லை. ‘வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டே, எரியும் அக்னி குண்டத்திற்குள் பாய்ந்துவிட்டாள்!
எதுவும் செய்ய முடியாமல், உயிர் கிழியும் அளவுக்கு ஓலமிட்டுக் கதறினான் அவளது ஆதி காதலன்! அந்த அடர்ந்த காம்யவனமே அவளது மறைவைக் கண்டு குலுங்கி அழுதது; பிரத்யும்னன் தன் ரதியை மீண்டும் இழந்து பித்துப் பிடித்துப்போனான்.

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!