arrow_back
En Ragasiya Kanavu Nee அத்தியாயம் 09
En Ragasiya Kanavu Nee chevron_right பகுதி 9 / 11

அத்தியாயம் 09

visibility 337
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 09

சடசடவென அனைத்தும் நடந்து முடிந்திருந்தன. சுமித்ரா பித்துப் பிடித்தது போல நின்றிருந்தாள். இவை அத்தனைக்கும் காரணமானவன் எதுவும் நடவாதது போல அங்கிருந்த மரமொன்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான். குனிந்து பார்த்தவளின் கண்களில் வீழ்ந்ததெல்லாம் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டிருந்த தங்கத் தாலிதான்!

நடந்து முடிந்த நிகழ்வின் விபரீதம் புரிந்தவள் அவனைக் குற்றம் சுமத்தும் பார்வைப் பார்த்தாள். ஆனால் அவனை எதுவும் பாதிக்கவில்லை. அவன் நினைத்ததை நடத்தி முடித்துவிட்ட திருப்தியில் அமைதியாக நின்றிருந்தான். ஆனால் பெண்ணுக்கு வயிற்றில் பயப்பந்து உருண்டது.

“என்ன பண்ணியிருக்கீங்க?” அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“எனக்குப் புடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கேன்.”

“நடுக்காட்டுல… ராத்திரி பத்து மணிக்கு யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா?”

“என்னை என்ன பண்ணச் சொல்றே? நியாயமா எல்லார்கிட்டயும் பேசிப் பார்த்தேன், என்னோட ஆசையைச் சொன்னேன், என்னை யாரும் கண்டுக்கலை, நீ உட்பட.”

“இப்ப மட்டும் இதை எல்லாரும் ஏத்துக்குவாங்கன்னு நீங்க நம்புறீங்களா?”

“அது அவங்கவங்க விருப்பம், ஆனா நீ ஏத்துக்குவே இல்லை?”

“…” மாதவன் இப்போது அவளருகில் வந்தான்.

“சுமி, உண்மையைச் சொல்லு, இப்போ இங்க அவசரமா, யாருக்கும் தெரியாம நடந்த விஷயத்துல உனக்கு உடன்பாடு இல்லைன்னாலும் மனசுல ஏதோவொரு மூலையில சந்தோஷமா இல்லை?” விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண். அவள் மனதை எப்படி அவனால் இத்தனைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிந்தது?!

“புடிச்சிருக்கில்லை? புடிச்சிருக்கில்லை சுமி?” குரல் குழைய இன்னும் அவளருகில் வந்தான் மாதவன்.

“எனக்குத் தெரியும்டா, உனக்கு என்னை ரொம்பப் புடிக்கும், ஆனா எதையும் வெளியே காட்டிக்காம உன்னையே நீ புதைச்சு வெச்சிருக்கே.” அவன் சொன்ன விதத்தில் அவளுக்குக் கண்களில் மளுக்கென்று நீர் திரண்டது. ஒரு கேவல் கேவியவள் அவன் மார்பிலேயே வீழ்ந்து அழுதாள்.

இத்தனை நாட்களும் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருந்த வேதனைக்கு வடிகால் கிடைக்கவே அழுது தீர்த்தாள் பெண். மாதவனும் அவளைத் தடுக்கவில்லை. அவள் தலையை, தோளை இதமாக வருடிக் கொடுத்தான். எதிர்க்கும் துணிவு அவனுக்கு இருந்ததால் அவன் இத்தனைத் தூரம் வேதனைப்படவில்லை. ஆனால் அவள் அப்படியல்ல. எதையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், எதிர்க்கவும் திராணியில்லாமல் அவள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.

“சுமி… இங்கப்பாரு, போதும் அழுதது.” அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவன் அந்தக் கன்னங்களைத் துடைத்துவிட்டான். சரியாக அப்போது அவன் அலைபேசி சிணுங்கியது. அம்மாதான் அழைத்துக் கொண்டிருந்தார்.

“சொல்லுங்கம்மா.” செல்லம்மாதான் அழைக்கிறார் என்று தெரியவும் அவனிடமிருந்து விலகப்போனவளை அவன் அனுமதிக்கவில்லை.

“மாதவா, எங்கப்பா இருக்கே? இன்னும் வீட்டுக்கு வரலையே!” வேலை விஷயமாக எங்கேயாவது வெளியூர் செல்வதென்றால் தகவல் சொல்லிவிட்டுத்தான் செல்வான் மகன்.

“நான் தலவாக்கலைக்கு வந்திருக்கேன்மா.” சுமித்ரா இப்போது விதிர்விதிர்த்துப் போனாள்.

“எதுக்குப்பா இப்போ அங்க?” பெரியவரின் குரல் தடுமாறுவது இவளுக்குக் கேட்டது.

“சுமித்ராவைப் பார்க்க வந்திருக்கேன்.”

“ஓ!” அதற்கு மேலும் செல்லம்மாவிடம் இவன் எதையாவது உளறிவிடுவானோ என்று பயந்தவள் அவன் வாயைத் தன் கரத்தால் மூடினாள். இப்போது அவள் உள்ளங்கை உணர்ந்ததெல்லாம் அழகான அவனது இதழ் முத்தத்தைத்தான்!

“சரிப்பா, நான் வெச்சிடுறேன்.” அம்மாவின் குரல் இறங்கிப் போனது. அவளது கரத்தை அகற்றியவன்,

“அம்மாக்கிட்டச் சொல்ல விட்டிருக்கலாமில்லை, எப்ப இருந்தும் அவங்களுக்குத் தெரிய வேண்டியதுதானே சுமி?”

“இப்ப சொன்னா அவங்களால நிம்மதியா தூங்க முடியாது.”

“இப்ப மட்டும் தூங்கப் போறாங்களா என்ன? இந்நேரம் எங்கக்காக்கு கால் போயிருக்கும், காலையில அவங்க வீட்டுல இருப்பாங்க.” அவன் சொல்லி முடிக்க அவள் நடுங்க ஆரம்பித்திருந்தாள்.

“சுமி இங்காப்பாரு, நீ எதைப்பத்தியும் கவலைப்படத் தேவையில்லை, நானிருக்கேன், நான் எல்லாத்தையும் பார்த்துக்குவேன்.”

“ம்…”

“நீ எங்கூட நின்னா மட்டும் போதும், எனக்கு யானை பலம் வந்த மாதிரி, புரியுதா?”

“ம்…” இன்னும் அவளைத் தன்னருகே கொண்டு வந்தவன் அவள் புறங்கையில் முத்தம் வைத்தான். அவனிடமிருந்து விலகியவள் சற்று அப்பால் போய் நின்று கொண்டாள். மாதவனும் தடுக்கவில்லை. அமைதியாகப் புன்னகைத்தான். அவள் மனம் புரிந்தது.

“போகலாமா சுமி?” அவனுக்கு நடந்தது எல்லாமே உல்லாசமாக இருந்திருக்குப் போலும். குரலில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால் அவள் உள்ளுக்குள் பரிதவித்துக் கொண்டிருந்தாள்.

“ம்…” இருவரும் காரில் ஏறி உட்கார அந்த ப்ளாக் ஆடி அவள் வதிவிடத்தை நோக்கி நகர்ந்தது. அவள் குவார்ட்டஸுக்குள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவன் நேராக வீட்டிற்கு வந்துவிட்டான். விடிந்ததும் ஒரு பிரளயம் வெடிக்கக் காத்திருக்கிறது என்று அவனுக்கு யாரும் சொல்லத் தேவையிருக்கவில்லை!

“இந்த வீட்டுல என்னதான் நடக்குது? அங்க பொண்ணு வீட்டுக்காரங்க என்னடான்னா எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு ஃபோனுக்கு மேல ஃபோனை போடுறாங்க, இங்க என்னடான்னா உங்க மகன் தலவாக்கலைக்கு ட்ரிப் போய்க்கிட்டு இருக்காரு, இதை யாரும் என்னன்னு கேட்க மாட்டீங்களா?” காலையிலிருந்து ரேவதி இதைத்தான் பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அதைக் கேட்க மாதவன் வீட்டில் இருக்கவில்லை. ஃபேக்டரியில் முக்கியமான ஃபைல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“அப்பா, இதுக்கு மேலயும் நீங்க வாயை மூடிக்கிட்டு இருக்கிறது நல்லதுன்னு எனக்குத் தோணலை, மாதவனை நீங்க கூப்பிட்டுப் பேசுங்க.”

“ரேவதி, நீ கொஞ்சம் அமைதியா இரும்மா.”

“என்னப்பா பேசுறீங்க? இதுக்கு மேலயும் எப்பிடி அமைதியா இருக்க முடியும்?”

“சரிம்மா, நீ சொல்ற மாதிரியே நான் மாதவன்கிட்டப் பேசுறேன்னு வெச்சுக்கோ, எனக்கு அந்தப் பொண்ணைத்தான் புடிச்சிருக்கு, எனக்கு அவளைக் கட்டி வைங்கன்னு சொன்னா என்ன பண்ணுறது?”

“ஓ! அப்பிடி வேற சொல்லுவானா அவன்?! அவனுக்கு அந்தளவு தைரியம் இருக்காப்பா உங்கக்கிட்டப் பேச?” இப்போது வெற்றிவேல் மகளைப் பார்த்துப் புன்னகைத்தார். மாதவனைப் பற்றி இன்னும் ரேவதி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் தோன்றியது. அன்று மாலை மோகனும் மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.

“அத்தை, என்ன காலங்காத்தாலயே ரேவதி இங்க கிளம்பி வந்துட்டா? அப்பிடியென்ன அவசரம்?”

“அது மாப்பிள்ளை…”

“அதான் என்னோட அருமைத் தம்பி இருக்கானில்லை? அவன் நேத்து ராத்திரி தலவாக்கலைக்குப் போயிருக்கான், அம்மா கேட்டதுக்கு அந்தப் பொண்ணைத்தான் பார்க்கப் போனேன்னு சொல்லியிருக்கான்.” மனைவியின் முகத்திலிருந்த கோபத்தைக் கணவன் ரசிக்கவில்லை. ஏற்கனவே இந்தப் பிரச்சனை வளர்ந்து கொண்டு போகிறது. இந்த நேரத்தில் தன் மனைவி இப்படி விசிறி விடுவது நல்லதல்ல.

“மாமா, இந்த விஷயத்துல நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்க?” அன்றைக்குக் கேட்ட அதே கேள்வியை இன்றைக்கும் வெற்றிவேலைப் பார்த்துக் கேட்டார் மோகன்.

“மாப்பிள்ளை, எனக்கு மாதவன்கிட்டப் பேசவே பயமா இருக்கு.”

“மாமா!” வீட்டுத் தலைவரின் பேச்சில் அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள். அந்தப் பகுதியே வெற்றிவேலைப் பார்த்துப் பயப்படும். அவரானால் மகனிடம் பேசப் பயப்படுகிறாரே!

“மாதவனோட புடிவாதம் என்னன்னு உங்களுக்குத் தெரியாது, ஒருவேளை அவன் மனசுல இருக்கிற ஆசை தீவிரமா இருந்தா அவன் எங்கிட்ட எதையும் பேசத் தயங்கமாட்டான்.”

“ம்…” மாமனார் பேச்சிலும் நியாயம் இருப்பதாகத்தான் மோகனுக்குத் தோன்றியது.

“எனக்கு இந்தப் பொண்ணைக் கட்டி வைங்கப்பான்னு சொன்னதுக்கு அப்புறமா என்னால எதுவும் பண்ண முடியாது, அப்பிடியே ஏதாவது பண்ணினாலும் அடங்கிப் போற ரகமில்லை அவன்.” அதை அன்று மாலையே ஆணித்தரமாக நிரூபித்தான் அந்த வீட்டின் மூத்த ஆண் வாரிசு.

“ராத்திரியில காரைப் போட்டுக்கிட்டு தலவாக்கலை வரைக்கும் போய் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு அதைத் தைரியமா அம்மாக்கிட்டயே சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா மாதவா?” அக்கா ஆரம்பித்தாள்.

“என்னோட தைரியம் அதோட நிற்கலைக்கா, நான் அந்தப் பொண்ணோட கழுத்துல தாலியே கட்டிட்டேன்.”

“மாதவா!” யார் அதிகமாக அலறியது என்று யாருக்கும் தெரியாது. அந்த வீடே ஸ்தம்பித்துப் போய் நின்றது.

“மாதவா! என்னப்பா இதெல்லாம்?” செல்லம்மா அழவும் வெற்றிவேல் தன் மருமகனைத் திரும்பிப் பார்த்தார். மோகனுக்குமே இந்தச் செய்கை அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.

“அப்பா, எனக்கு சுமித்ராவைப் புடிச்சிருக்கிங்கிற செய்தி உங்க காதுக்கும் வந்திருக்கும், முறைப்படி இந்த விஷயத்தைப் பேசி எங்கக் கல்யாணத்தை நடத்தி வைங்கன்னு கேட்கலாம்னுதான் நான் நினைச்சிருந்தேன், ஆனா அதுக்குள்ள அக்கா புகுந்து ஆட்டத்தைக் குலைச்சுட்டா, எனக்கு வேற வழி தெரியலை, உங்களுக்குச் சொல்லாம நான் இப்பிடிப் பண்ணினது பிழைதான், அதுக்கு என்னை மன்னசிச்சிடுங்க.”

“நான் என்னடா ஆட்டத்தைக் குலைச்சுட்டேன்?!” இது ரேவதி. தம்பியின் செய்கையில் அதிகமாக ஆடிப்போனது அவராகத்தான் இருக்க வேண்டும்.

“ரேவதி! போதும் நிறுத்து!”

“என்னங்க நீங்க என்னை மிரட்டுறீங்க? தப்புப் பண்ணினது அவன், அவனை முதல்ல கண்டிச்சுப் பேசுங்க.”

“யாரு தப்புப் பண்ணியிருக்கா, யாரைத் தண்டிக்கிறதுங்கிறது இப்போ பிரச்சினை இல்லை, எதுவா இருந்தாலும் இனி மாமா முடிவெடுப்பாங்க, நீ வாயை மூடு.” மோகன் போட்ட அதட்டலில் ரேவதியின் கண்கள் கலங்கிப் போயின. இருந்தாலும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே நின்றிருந்தார்.

“இப்பவும் மரியாதையா அந்தப் பொண்ணோட இந்த வீட்டுல குடும்பம் நடத்தணும்னுதான் நான் நினைக்கிறேன், அது உங்களுக்கெல்லாம் கவுரவக் குறைச்சலா இருந்துச்சுன்னா தாரளமா சொல்லுங்க, நான் வேற எங்கேயாவது வாடகைக்கு வீடு பார்த்துக்கிறேன்.” இந்த நேரடியான தாக்குதல் கொஞ்சம் அதிகப்படியாக இருக்க மோகன் தனது மாமனாரைப் பார்த்தான். சிறிது நேரம் அமைதி காத்தவர்,

“மாதவா, இது உன்னோட வாழ்க்கை, அது எப்பிடி அமையணும்னு நீ முடிவெடுத்துட்டே, இதுக்கு மேல நானோ உங்கம்மாவோ பேச எதுவுமில்லை, இந்த வீட்டோட மாப்பிள்ளையா உங்கத்தான் முன்ன நின்னு எல்லாத்தையும் பண்ணுவாரு.” என்றவர் எழுந்து அவரது அறையை நோக்கி நடந்தார்.

“எனக்கு நீங்கதான் அப்பா, நான் இன்னும் வெற்றிவேல் ஐயாவோட பையன்தான்.” சொன்ன மகனை நின்று திரும்பி ஒரு பார்வைப் பார்த்தார் பெரியவர்.

“அந்த நினைப்பு உனக்கு இருக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” அழுத்தமாக அப்பா சொல்ல ரேவதியின் முகத்தில் ஓர் ஏளனப் புன்னகைத் தோன்றியது. அத்தோடு பேச்சு முடிந்தது என்று பெரியவர் உள்ளே போக பெண்களும் உள்ளே போய்விட்டார்கள்.

“சாரி அத்தான், எனக்கு வேற வழி தெரியலை.”

“என்னாச்சு மாதவா? எதுக்கு இவ்வளவு அவசரம்?”

“அவங்க வீட்டுல சுமித்ராக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, அக்கா போய் சத்தம் போட்டது அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு, இதுக்கு மேலயும் தாமதிச்சா நான் சுமித்ராவை இழக்க வேண்டி வரும், அதுக்கு நான் தயாரில்லை.”

“ஓ…”

“மாப்பிள்ளை வேறு யாருமில்லை, என்னோட ஃப்ரெண்ட் நிமலன், என்ஜினியரா வேலை பார்க்கிறான், அவங்க வீட்டுக்கு இவங்க போய் மாப்பிள்ளைக் கேட்டிருக்காங்க.”

“அந்தளவுக்குப் போயிட்டாங்களா?”

“சுமித்ராவை யாருமே மறுக்க மாட்டாங்க, நிமலனோட வீட்டுல சம்மதம் சொல்லிட்டா என்னோட நிலைமை என்னத்தான்? என்னோட இடத்துல இருந்து யோசிச்சுப் பாருங்க, நானும் இப்பிடியெல்லாம் நடந்துக்கணும்னு நினைக்கலை, ஆனா அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுட்டேன்.”

“புரியுது.” எவ்வளவு தைரியமாக வெளியே காட்டிக் கொண்டாலும் அன்று மாலை தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற ராஜசேகரைப் பார்த்து இவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். எதற்காக இந்த மனிதர் இப்போது இங்கே வந்திருக்கிறார்?! நடந்த விஷயம் அவர்களுக்கும் தெரிந்து போய்விட்டதா?!

“மாதவன் சார், இது உங்களுக்கே நல்லா இருக்கா?” கவலைத் தோய்ந்த முகத்துடன் அவர் கேட்டபோது மற்றையவர்கள் நிலை குலைந்தாலும் மாதவன் நிதானமாகத்தான் இருந்தான். அவனுக்கு சுமித்ரா மேல் நம்பிக்கை இருந்தது. நடந்த நிகழ்வை அத்தனைச் சுலபத்தில் அவள் வீட்டில் சொல்லிவிட மாட்டாள்.

“என்னாச்சு?” மோகன் நிலைமையைத் தன் கையில் எடுத்துக் கொண்டார்.

“எங்க வீட்டுப் பொண்ணுக்கு நாங்க மாப்பிள்ளைப் பார்த்திருந்தோம், அவங்களுக்கும் இந்தக் கல்யாணத்தை நடத்துறதுல பூரண சம்மதம், நடுவுல புகுந்து எல்லாத்தையும் குழப்பினா என்னங்க அர்த்தம்? ஏன்? எங்க பொண்ணுங்களும் நல்லா வாழக்கூடாதா?”

“வார்த்தைகள் தப்பா வருது, உங்க பொண்ணு நல்லா வாழக்கூடாதுன்னு இங்க யாரும் நினைக்கலை.”

“மாதவா, கொஞ்சம் பொறுமையா பேசு.” மாதவனை அடக்கினார் மோகன்.

“அப்பிடி நீங்க நினைச்சிருந்தா எதுக்கு சார் நாங்க பேசின கல்யாணத்தை நிறுத்தணும்? இதை என்னன்னு நாங்க எடுத்துக்கிறது? பெரிய வீடு எங்களுக்கு எப்பவுமே நல்லதுதான் பண்ணியிருக்கு, ஏன்? நீங்கக் கூட எங்களுக்கு நல்லதுதான் பண்ணியிருக்கீங்க, ஆனா அது எல்லாத்தையும் துடைச்சுப் போடுற மாதிரி இப்பிடியொரு காரியத்தை எதுக்காகப் பண்ணினீங்க?”

“நான் எதுக்காகப் பண்ணினேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.”

“வேணாம் தம்பி, உங்க மனசுல இருக்கிற எண்ணம் நடக்காது, ஏணி வெச்சா கூட எட்டாத இடத்துக்கு நாங்க ஆசைப்படலை, எங்கப் பொண்ணும் ஆசைப்படமாட்டா, அன்னைக்கு அன்னைக்கு சம்பாரிச்சாலும் நிம்மதியா வாழணும்னு நினைக்கிற ரகம் நாங்க, நாங்க தள்ளியே நிற்கிறோம், இதுக்கு மேல நீங்களும் எங்க வழிக்கு வராதீங்க.” என்றவர் இரு கையையும் கூப்பிவிட்டு விடைபெற்றுக் கொண்டார். போகும்போது ரேவதியை ஒரு பார்வைப் பார்க்கத் தயங்கவில்லை.

“பார்த்தீங்களா இந்த மனுஷனுக்கு இருக்கிற கொழுப்பை! எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வீட்டு வாசப்படியில வந்து நின்னு இப்பிடிப் பேசுவாரு!” இப்போது மாதவன் தன் அக்காவைப் பார்த்த பார்வையில் நெருப்புப் பறந்தது. மோகனும் தன் மனைவியைக் கண்டிப்புடன் பார்த்தவர்,

“அத்தை, இப்ப என்ன பண்ணுறது?” என்று கேட்டார்.

“எனக்குத் தெரியலை மாப்பிள்ளை, நீங்க எது பண்ணினாலும் எனக்குச் சம்மதந்தான்.”

“சரி, அப்பிடீன்னா நீங்களும் நானும் நாளைக்கு அந்த வீட்டுக்குப் பொண்ணு கேட்டுப் போகலாம்.” இப்படியொரு அனுசரணையை மோகனிடமிருந்து மாதவன் கூட எதிர்பார்க்கவில்லை.

“நான் எதுக்கு மாப்பிள்ளை? நீங்க ரேவதியைக் கூட்டிட்டுப் போங்க.”

“இல்லைத்தை, அது சரியா வராது, நீங்களும் நானுந்தான் போகணும், அதுக்குரிய ஏற்பாடுகளைப் பண்ணுங்க.” என்றவர் அத்தோடு முடிந்தது பேச்சு என்பது போல தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.‌ மாதவனின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. செல்லம்மாவின் முகத்தில் குழப்பம். ரேவதியின் முகம் கோபத்தைக் காட்டியது!

அடுத்தநாள் மாலை பெரிய வீட்டின் கார் ராஜசேகரின் வீட்டின் முன்பாகப் போய் நின்றது. வாசலுக்கு வந்த சுமதி திகைத்து நின்றதெல்லாம் ஒரு கணம்தான். காரிலிருந்து இறங்கிய செல்லம்மாவைக் கண்டதும் ஓடிப்போய் வரவேற்றாள்.

“வாங்கம்மா, வாங்க வாங்க.” எப்போதும் இவளைப் பார்த்து மலர்ந்து சிரிக்கும் பெண்மணியின் வதனம் இன்று இலேசாக வாடியிருந்தது.‌

“வாங்க சார்.”

“அப்பா வீட்டுல இருக்காங்களாம்மா?”

“இருக்காங்க சார்.” என்றவள் இவர்களை உள்ளே அழைத்துப் போனாள். செல்லம்மாவின் கண்ணசைவில் ட்ரைவர் இரு கூடைகளில் பழங்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்.

“வாங்க, உட்காருங்க.” இப்போது ராஜசேகரும் மணிமேகலையும் வந்துவிட்டார்கள். வந்தவர்களை வரவேற்பது முறை என்பதால் உதிர்ந்த வார்த்தைகள் அவை என்று சொல்லத் தேவையிருக்கவில்லை.

“ஐயா, நடந்தது நடந்து போச்சு…”

“ஐயையோ தம்பி, நீங்க போய் என்னை ஐயான்னுக்கிட்டு.” பெரியவீட்டு மருமகனின் பணிவில் ராஜசேகர் மலைத்துப் போனார்.

“சரி, நான் உங்களைச் சித்தப்பான்னு கூப்பிடட்டுமா? நடந்ததை எல்லாம் ரெண்டு குடும்பமும் மறந்துட்டு இனி நடக்க இருக்கிறதை என்னன்னு பார்க்கிறது நல்லதில்லையா?” இப்போது செல்லம்மாவின் கண்கள் அந்த வீட்டை வட்டமிட்டன. இரண்டு அறைகள் கொண்ட சின்ன வீடு. பெரிய வீட்டோடு ஒப்பிட்டால் பத்தில் ஒரு பங்கு வரும். இங்கு வந்து தன் மகன் மாதவன் வாழ்வதா?!

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க தம்பி?”

“சித்தப்பா, மாதவன் கட்டினா உங்க மூத்த பொண்ணைத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நிற்கிறான், உங்கக்கிட்ட மறைக்க எனக்கு எதுவுமில்லை, ஆரம்பத்துல நாங்களும் அவனோட மனசை மாத்த எவ்வளவோ பேசிப்பார்த்தோம், ஆனா மாதவனோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை.”

“இது சரியா வராதுப்பா, கல்யாணம் பேச பொண்ணோட அம்மா வந்திருக்காங்க, ஆனா அப்பா வரலை, நீங்க வந்திருக்கீங்க, உங்க சம்சாரம் வரலை, இந்தக் கல்யாணம் எவ்வளவு தூரம் சாத்தியப்படும்னு நீங்க நினைக்கிறீங்க?” இப்போது மோகன் வாயடைத்துப் போய் அமர்ந்துவிட்டார். இந்த நியாயமான பேச்சுக்கு என்ன பதில் சொல்வது?!

“சித்தப்பா, காலப்போக்குல எல்லாமே சரியாகும், ஒருசில விஷயங்களை நீங்க விட்டுக் குடுக்கிறது நல்லதுன்னு எனக்குத் தோணுது, நம்ம பசங்க நல்லா, சந்தோஷமா வாழணும், நமக்கு இப்போ அதுதான் முக்கியம்.”

“சுமதி, அக்கா வீட்டுல இல்லையா?” இது செல்லம்மா. நிலைமையைச் சீர்பண்ண அவரும் தன்னாலான முயற்சியில் இறங்கினார்.

“இல்லைம்மா, அக்கா தலவாக்கலைல இருக்கா.”

“ஓ… இந்த சனி, ஞாயிறு வீட்டுக்கு வருவாளா?” இப்போது சுமதி தன் அம்மாவைப் பார்க்க,

“வருவாங்க.” என்றார் மணிமேகலை. இவர்கள் பேசுவதைப் பார்த்தால் நேற்று தன்மகன் செய்த காரியம் இன்னும் இந்த வீட்டுக்கு வந்து சேரவில்லை என்றுதான் தோன்றியது. யாருக்கும் தெரியும் முன்பாக நல்ல காரியத்தைச் சீக்கிரமே செய்வது நல்லது என்று செல்லம்மா தீர்மானித்துவிட்டார்.

“யாருக்கு யார்னு ஆண்டவன் போட்ட முடிச்சை யாராலயும் மாத்த முடியாது, நடந்ததை எல்லாம் மறந்துட்டு நல்ல காரியத்தைச் சீக்கிரமா நடத்தலாம், எம் பொண்ணு அன்னைக்கு இந்த வீட்டுப் பொண்ணுங்களைப் பார்த்துப் பேசினதுக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.”

“ஐயையோ! என்னம்மா பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க!” மணிமேகலை பதறிப்போனார்.

“அப்ப நாங்க கிளம்புறோம்.”

“இல்லையில்லை, ஏதாவது சாப்பிட்டுட்டுத்தான் போகணும்.”

“இல்லைம்மா, எல்லாம் பேசி முடிவானதுக்கு அப்புறந்தான் கை நனைக்கணும், கூடிய சீக்கிரமே நாங்க தகவல் சொல்லி அனுப்புறோம்.” என்றவர்கள் அத்தோடு கிளம்பிவிட்டார்கள். அவர்கள் சென்றபிறகு ராஜசேகர் இலேசாகப் புன்னகைத்தார்.

“என்னப்பா சிரிக்கிறீங்க?”

“இல்லை சுமதி, நம்ம வீட்டுல எதுவும் சாப்பிடப் புடிக்காம அந்தம்மா என்னென்னமோ காரணம் சொல்லிட்டுப் போறாங்க, இந்த லட்சணத்துல நாம எப்பிடிம்மா சமித்ராவை அந்த வீட்டுல கட்டிக் குடுக்கிறது?”

“அப்பா… நாமளா எதுவும் கேட்டுப் போகலை, அவங்கதான் கேட்டு வந்திருக்காங்க, நாம மறுப்பா எதுவும் சொல்லிட வேணாம்பா, அக்காக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்குப்பா.” இப்போது ராஜசேகர் பெருமூச்சு விட்டார்.

“என்ன மணி நீ எதுவும் பேசாம இருக்கே?”

“இதுல நான் பேச என்ன இருக்குங்க? நல்ல வரனை அந்தப் பையன் தட்டி விட்டுட்டான், இனியும் அதானே நடக்கப் போகுது!”

“அதுக்காக? சுமித்ராவை அங்க கட்டிக் குடுத்தா சந்தோஷமா இருப்பான்னு நீ நினைக்கிறியா? பெரியவரோட பொண்ணு மாசத்துல பாதி நாள் இங்கதான் இருக்கு, பெரியவரோட சம்சாரம் அவங்க பொண்ணை மீறி எதுவும் பண்ணுறவங்க மாதிரியும் தெரியலை, எதை நம்பி நம்ம பொண்ணை நாம கட்டிக் குடுக்கிறது?”

“மாதவன் சாரும் அந்த வீட்டுலதானேப்பா இருக்காங்க.”

“சுமதி நீ நினைக்கிற மாதிரி இல்லைம்மா, ஒரு பெண்ணுக்குப் புருஷன் மட்டும் நல்லவனா அமைஞ்சா பத்தாது, மாமியார், நாத்தனாரும் நல்லா இருக்கணும், இல்லைன்னா போற இடத்துல அவளால குப்பைக் கொட்ட முடியாது.”

“மாதவன் சாரோட அம்மா ரொம்ப நல்லவங்கப்பா, ஆரம்பத்துல ஏத்துக்கலைன்னாலும் போகப்போக அக்காவை அவங்களுக்குப் புடிச்சிரும், ஆனா அவங்க அக்காவைப் பத்தி எனக்கும் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லைத்தான், ஆனா மோகன் சார் அதுக்கு இடம் குடுக்க மாட்டாங்கன்னு நான் நினைக்கிறேன்.”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை, எம் பொண்ணுக்குப் பெரிய வீட்டு சம்மந்தம் வந்திருக்குன்னு சந்தோஷப்படுறதா? இல்லை அவ அங்கப் போய் சுகப்படுவாளான்னு கவலைப்படுறதா?” என்ற ராஜசேகர் எழுந்து வெளியே போய்விட்டார். அம்மாவும் பின்புறம் இருந்த தோட்டத்திற்குச் செல்லவும் சுமதி தனது அலைபேசியோடு அறைக்கு வந்துவிட்டாள். இங்கு நடந்தது அனைத்தையும் அக்காவிடம் சொல்லாவிட்டால் அவளுக்குத் தலை வெடித்துவிடும் போலிருந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 10

அத்தியாயம் 10அந்த வாரஇறுதியில் வீட்டிற்கு வந்திருந்தாள் சுமித்ரா. வெள்ளிக்கிழமை வேலை முடிந்த கையோடு பஸ்ஸைப் பிடித்துவிட்டாள். தலவாக்கலைக்கு மாதவன் வந்ததையோ அங்கு நடந்ததையோ மறந்தும் அவள் யாரிடமும் சொல்லவில்லை. சுமதியிடம் கூட வாயைத் திறக்கவில்லை."அக்கா, அருவிக்கரைக்குப் போகலாமா?""இருட்ட ஆரம்பிச்சிடுச்சு, இப்போ எதுக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்