அத்தியாயம் 08
அத்தியாயம் 08
மூன்று நாட்கள் விடுமுறையில் இரண்டு நாட்கள் கரைந்து போயிருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை. இன்றைக்கு சுமித்ரா தலவாக்கலைக்குக் கிளம்ப வேண்டும். இன்று மாலை போனால் திங்கள் காலை வேலைக்குப் போவதற்குச் சரியாக இருக்கும். இவள் கொண்டு செல்வதற்காக அம்மா சில பண்டங்கள் சமைத்துக் கொண்டிருந்தார்.
“சுமி, இனி ஹோட்டல்ல சாப்பிடுறதை நிறுத்து, உனக்கு மட்டும் கொஞ்சம் சாதம் வடிச்சா போதும், ஒரு வாரத்துக்குத் தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணியிருக்கேன், அடுத்தவாரம் அப்பாக்கிட்டக் குடுத்து அனுப்புறேன்.”
“சரிம்மா.”
“அக்கா, நாம ரெண்டு பேரும் அருவி வரைக்கும் போயிட்டு வருவமா?” தங்கை ஆசையாகக் கேட்கவும் சுமித்ரா தலையை ஆட்டினாள். படிப்பு தலைக்கு மேல் இருந்ததால் சுமதி இப்படியெல்லாம் எங்கேயும் வெளியே போனதில்லை. இப்போதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே!
“ரொம்ப லேட் பண்ணிடாம வந்திடுங்க.”
“சரிம்மா.” இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். இளங்காலை வெயிலில் இப்படி நடப்பது மனதுக்குச் சுகமாக இருந்தது.
“அக்கா, கொழும்பு யூனிவர்ஸிட்டி கொஞ்சம் கஷ்டந்தான் போல, ரெண்டு வருஷ படிப்பை ஒரு வருஷத்துலேயே முடிச்சுட்டு உடனேயே ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிடுவாங்களாம்.”
“அப்பிடியா?!”
“ஆமாக்கா, முதல் வருஷத்தை முடிச்சுட்டா அதுக்கப்புறமா ஓகேயாம்.”
“அப்ப வீட்டுக்கு வர்றதை எல்லாம் யோசிச்சும் பார்க்காம நல்லா படிக்கணும் சுமதி.”
“அக்கா… ஹாஸ்டல் கிடைக்காட்டி என்னக்கா பண்ணுறது? அங்கெல்லாம் போர்டிங்குக்கு ரொம்ப செலவாகும்னு சொல்றாங்களே?”
“அதனாலென்ன சுமதி? அதான் இப்ப நானும் சம்பாதிக்கிறேனில்லை? நீ ஏன் கவலைப்படுறே?” பேசியபடியே இருவரும் அருவியை நெருங்கி இருப்பார்கள். சின்னதாக ஓர் நீரூற்று அங்கே கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது சரியாக அந்த கார் இவர்களை நெருங்கி நின்றது.
“யாருக்கா இது?!” அந்த கார் யாருடையது என்று இவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் காரிலிருந்து இறங்கியது ரேவதி. மாதவனின் அக்கா. பெண்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். எதற்காக இவர் இப்போது வருகிறார்?!
“உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?” தடாலடியாக வந்தது கேள்வி. நல்லவேளையாக வீதியில் யாரும் இருக்கவில்லை. ரேவதியின் முகத்திலிருந்த கோபம் பார்த்து இவர்கள் பயந்து போனார்கள்.
“என்ன சொல்றீங்க நீங்க?” சுமதிதான் வாயைத் திறந்தாள்.
“உன்னை வீடுவரைக்கும் கூட்டிட்டு வந்து உபகாரம் பண்ணினதுக்கு நீ நல்ல கைம்மாறு பண்ணியிருக்கேம்மா.” இது நக்கல்.
“நாங்க எந்தத் தப்பும் பண்ணலைங்க.”
“நீ பண்ணலைம்மா, இதோ நிற்கிறாங்களே உங்கக்கா! அவங்க என்ன பண்ணி வெச்சிருக்காங்க?”
“அவங்களும் எந்தத் தப்பும் பண்ணலைங்க.” இப்போது சுமித்ரா தங்கையின் கையைப் பிடித்து ‘பேசாதே’ என்று சமிக்ஞை செய்தாள்.
“தப்புப் பண்ணாமத்தான் அங்க ஒருத்தன் அந்த நாட்டியம் ஆடுறானா?”
“அதை நீங்க மாதவன் சார்கிட்டத்தான் கேட்கணும், என்னோட அக்கா மேல எந்தத் தப்பும் இல்லைங்க.” சுமித்ரா தடுக்கத் தடுக்க சுமதி பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் அக்காமேல் ரேவதி அநியாயமாக பழி சொல்வது பிடிக்கவில்லை.
“கொஞ்சம் அழகா இருந்துட்டா உங்களுக்கெல்லாம் பெரிய வீட்டுப் பசங்க கேட்குதா? மரியாதையா உங்க வேலை என்னவோ அதைப் பார்த்துக்கிட்டுப் போயிடுங்க, உதவின்னு கேட்டு வந்தா பெரியவீடு எப்பவும் பண்ணும், அதான் வேலை வாங்கிக் குடுத்தாச்சில்லை? அதை வெச்சுப் பொழைக்கிற வழியைப் பாருங்க, யாரும் தேவையில்லாம மனசுல ஆசையை வளர்த்துக்க வேணாம், அது நல்லதுக்கில்லை நான் சொல்லிட்டேன்.” எச்சரித்தவர் காரில் ஏறிப்போய்விட்டார்.
“இவங்க பேசுற பேச்சைப் பார்த்தியாக்கா? எவ்வளவு கொழுப்பு இருக்கணும்?!” இளையவள் கோபத்தின் உச்சத்திற்குச் செல்ல சுமித்ரா எதுவும் பேசாமல் அருவியை நோக்கி நடந்தாள். அவளின் அலைபேசி தங்கையிடம் இருந்தது அவளுக்கு மறந்து போனது. சுமதி எதைப்பற்றியும் யோசிக்காமல் மாதவனை அழைத்ததை இவள் கவனிக்கவில்லை. ரேவதி பேசிய வார்த்தைகளே காதில் ரீங்காரமிட சலசலக்கும் நீருக்குப் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.
“என்னாச்சு சுமதி?” அடுத்த இரண்டாவது நிமிடம் அந்த ப்ளாக் ஆடி இவர்கள் இருந்த அருவியின் ஓரமாக வந்து நின்றது.
“மாதவன் சார்! என்ன நடக்குது இங்க? உங்கக்கா கிளம்பிவந்து எங்களைக் கன்னாபின்னான்னு திட்டுறாங்க! என்னமோ எங்கக்கா தப்புப் பண்ணின மாதிரி பேசுறாங்க!”
“என்ன சொன்னாங்க?” அவன் கேட்கவும் சட்டென்று தங்கையை நிமிர்ந்து பார்த்தாள் சுமித்ரா. அக்காவின் பார்வையை மீறிக்கொண்டு பேசும் தைரியம் பெண்ணுக்கு இருக்கவில்லை.
“நீ என்னைப் பார்த்துப் பேசு சுமதி, எங்கக்கா என்ன சொன்னாங்க?”
“அவங்க தப்பா எதுவும் சொல்லலை சார், உண்மையைச் சொன்னாங்க.” இது சுமித்ரா.
“அந்த உண்மை என்னன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா?” எதற்காகக் கோபப்படுகிறோம் என்று தெரியாமலேயே மாதவன் இப்போது கோபப்பட்டான்.
“உங்களுக்கெல்லாம் பெரிய வீட்டுப் பசங்க கேட்குதான்னு கேட்டாங்க, அதான் வேலை வாங்கிக் குடுத்தாச்சில்லை, அதை வெச்சுப் பெழைங்க, வீணா மனசுல ஆசையை வளர்த்துக்க வேணாம்னு சொன்னாங்க, போதுமா?” சுமித்ராவும் பேச நினைக்கவில்லை. ஆனால் தன்னை மீறி வெடித்திருந்தாள்.
“அவங்க பேசும் வரைக்கும் நீ வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தியா?”
“மாதவன் சார், எங்களால வேற என்ன பண்ண முடியும்? முதல்ல இதெல்லாம் என்ன சார்? ரொம்ப இக்கட்டான ஒரு நிலையில உங்கக்கிட்ட நாந்தான் உதவி கேட்டேன், நீங்களும் பண்ணினீங்க, இல்லைன்னா என்னால இந்தளவு நல்ல ரிசல்ட் வாங்கியிருக்க முடியாது, அதுக்காக?” சுமதியின் தொண்டை அடைத்துக் கொண்டது. மேலே பேச முடியாமல் தடுமாறினாள். மாதவனும் தலையைக் கோதிக் கொண்டவன் சற்று நேரம் பேசாமல் நின்றிருந்தான். சூழ்நிலை மிகவும் கனமாக இருந்தது.
“சுமதி, உங்கக்காவை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, அவளைக் கல்யாணம் பண்ணணும்னு நான் ஆசைப்படுறேன், இது தப்பா?” நேரடியாகவே மாதவன் கேட்கவும் சுமதி பேச்சற்றுப் போனாள்.
“எனக்கு மட்டும் ஆசை இருந்தா பரவாயில்லைம்மா, உங்கக்கா மனசுலயும் ஆசை இருக்கு, ஆனா அதை அவ மறைக்கிறா?”
“மறைக்காம என்ன பண்ண முடியும் சார்? மனசுல ஆசை இருந்தும் அவ சம்மதம் சொல்லலை, அதுக்கே உங்கக்கா இந்தப் பேச்சுப் பேசுறாங்களே, ஒருவேளை சம்மதம் சொன்னா என்னாகும்?”
“சுமதி, எந்த வீட்டுல காதலுக்கு வரவேற்பு இருந்திருக்கு? எல்லா வீட்டுலயும் இது நடக்கிறதுதான், அதுக்காக நம்ம மனசுல இருக்கிற ஆசையைத் தூக்கிப்போட முடியுமா?”
“ஒருவேளை உங்க வீட்டுக்குச் சமமா நாங்களும் இருந்தா இப்பிடியெல்லாம் யோசிக்க முடியுமா இருந்திருக்கும், இதைப்பத்தி சிந்திக்கிற நிலைமைல கூட நாங்க இல்லை மாதவன் சார்.”
“என்ன சுமதி பேசுறே நீ? எந்த உலகத்துல இருக்கிறே?”
“சார், உங்களுக்குத்தான் விஷயம் புரியலை, வெளிநாடு பார்த்துட்டு வந்த உங்களுக்கு இதெல்லாம் ஈஸியா இருக்கலாம், ஆனா எங்களுக்கு அப்பிடியில்லை சார், உங்கக்கா பேசின பேச்சைக் கேட்டு நாங்க கூனிக்குறுகிப் போய் நிற்கிறோம், இதுக்கு மேலயும் என்ன பேச்செல்லாம் வரும்னு தெரியலை.”
“இப்ப முடிவா என்னதான் சொல்றே?” இவ்வளவு நேரமும் சுமதி மாத்திரம் பேச சுமித்ரா அமைதியாகத்தான் அமர்ந்திருந்தாள்.
“விட்டிருங்க சார், இந்தப் பேச்சை இதோட விட்டுருங்க.” உறுதியாகப் பெரியவள் சொல்ல மாதவனின் கண்கள் கனலைக் கக்கின.
“சுமித்ரா! என்னை நீ ரொம்பவே காயப்படுத்திறே! என்னோட அன்பை நீ இவ்வளவு துச்சமா மதிக்கிறதை நான் விரும்பலை! இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்!” என்றவன் கோபமாகக் கிளம்பிப் போனான். நேராக அந்த ப்ளாக் ஆடி பெரிய வீட்டின் முன்பாகப் போய் நின்றது. அக்கா ரேவதியின் வீட்டு காரும் அங்கே நிற்க மாதவனுக்குள் ஜுவாலை கிளம்பியது.
“உம் மனசுல நீ என்னக்கா நினைச்சுக்கிட்டு இருக்கே? பெரிய இவன்னா? அம்மா வீட்டுக்கு வந்தமா, போட்டதைத் தின்னமா, போனமான்னு இருக்கணும், அதை விட்டுட்டு யாருக்குப் பாடம் எடுக்கக் கிளம்பி வந்திருக்கே?” மாதவன் இதுவரை இப்படி யாரிடமும் பேசியதில்லை. செல்லம்மா திகைத்துப்போய் நின்றிருந்தார் என்றால் ரேவதி வாயடைத்துப் போனார்.
“என்னாச்சு மாதவன்?” அப்போதுதான் வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் மோகன். அத்தானைக் கண்டதும் இளையவனின் கோபம் இருமடங்கானது.
“நீங்களும் இதுக்கு உடந்தையா அத்தான்? வீட்டுல இருக்கிற பொம்பிளைங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்க்க மாட்டீங்களா?”
“என்னப்பா ஆச்சு? விஷயத்தைச் சொல்லேன்.”
“உங்க வொய்ஃப் இப்ப எதுக்கு சுமதியையும் அவங்க அக்காவையும் போய் பார்க்கணும்?” இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு சுமதிதான் நல்ல பழக்கம், பிரசித்தம். அதனால் அவள் பெயரையே உச்சரித்தான் மாதவன்.
“எதுக்குப் போய் பார்த்தே ரேவதி? இந்தளவு மாதவன் கோப்படுற அளவுக்கு அப்பிடி என்ன பண்ணியிருக்கே?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை மாப்பிள்ளை…”
“என்ன ஒன்னுமில்லை? இல்லை என்ன ஒன்னுமில்லைன்னு கேட்கிறேன்?” அம்மாவை மீறிக்கொண்டு வந்தது மகனின் குரல்.
“அத்தான், எனக்கு சுமித்ராவைப் புடிச்சிருக்கு, அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணினா என்னோட லைஃப் சந்தோஷமா இருக்கும்னு தோணிச்சு, இது தப்பா?” மாதவன் போட்டு உடைக்க வீட்டுப் பெண்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். இவன் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. வெற்றிவேலும் அப்போது வீட்டில்தான் இருந்தார். உள்ளே அவர் அறையில் ஏதோ வேலையாக இருந்தவர் காதிலும் இந்தப் பேச்சு விழுந்தது. மாதவனுக்கும் அப்பா வீட்டில் இருக்கிறார் என்று தெரியும். தெரிந்துதான் பேச்சை ஆரம்பித்திருந்தான்.
“மாதவா, இது ரொம்பப் பெரிய முடிவு, கொஞ்சம் யோசிச்சுப் பண்ணலாமே.” மோகன் மிகவும் நிதானமாகப் பேசினார்.
“அத்தான், இது இன்னைக்கு, நேத்து எடுத்த முடிவில்லை, இந்த முடிவு எனக்குள்ள வந்து ரொம்ப நாளாச்சு, நான் மனசுக்குள்ள வேதனையோடதான் சுத்திக்கிட்டுத் திரியுறேன், இதுக்கு நடுவுல எதுக்கு அத்தான் இவங்கெல்லாம் வர்றாங்க?”
“ஏன்டா! நீ புரிஞ்சுதான் பேசுறியா? இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு அந்தப் பொண்ணுக்கு எந்தத் தகுதியும் இல்லை, இதுல அவ உன்னை வேணாம்னு வேற சொல்லுறாளா?” இது ரேவதி.
“அத்தான், வேணாம்னு சொல்லுங்க, உங்க வொய்ஃப் திரும்பத் திரும்பத் தப்பாவே பேசுறாங்க, எங்கிட்ட மோத தைரியம் இல்லாம அம்மா சொன்னதைக் கேட்டுக்கிட்டுத் தேவையில்லாம அந்தப் பொண்ணுங்கக்கிட்டப் போய் பேசியிருக்காங்க, அவங்க மேல எந்தத் தப்பும் இல்லை, இன்னைக்கு வரைக்கும் ஒதுங்கிப் போறவங்களைத் தேடிப்போய் தொல்லைப் பண்ணுறது நாந்தான்.”
“எதுக்கு உனக்கு இந்தத் தேவையில்லாத வேலை? அதான் வீட்டுல நமக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ணைப் பார்த்திருக்காங்கல்லை? அதைக் கட்டிக்கிட்டுச் சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே?”
“நமக்கு ஏத்தமாதிரி பொண்ணா? இங்க என்ன நாம குடும்பத்தோட கல்யாணம் பண்ணிக்கப் போறோமா? நான் எனக்கு ஏத்தமாதிரி பொண்ணைப் பார்த்து வெச்சிருக்கேன், நான் அந்தப் பொண்ணைத்தான் கட்டிக்குவேன்.”
“மாதவா, கொஞ்சம் பொறுமையா பேசுப்பா.” செல்லம்மா இப்போது அழ ஆரம்பித்துவிட்டார். வெற்றிவேல் தனது அறையிலிருந்து எழுந்து வெளியே வரும் அரவம் கேட்கவும் மாதவனை இழுத்துக்கொண்டு மோகன் தோட்டத்திற்கு வந்துவிட்டார்.
“பாருங்கப்பா இவன் பேசுற பேச்சை…” ரேவதி அப்பாவிடம் ஆரம்பிப்பது இவர்கள் காதிலும் கேட்டது.
“மாதவா, நல்லா யோசிச்சுதான் முடிவு பண்ணியிருக்கியா?”
“அத்தான், நான் ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை, சும்மா அழகைப் பார்த்து லவ் வர்ற வயசுலயும் நானிப்போ இல்லை, எனக்கு சுமித்ராவை ரொம்பப் புடிச்சிருக்கு.”
“சரி, அந்தப் பொண்ணு என்ன சொல்லுது?” இதை மோகன் கேட்டபோது மாதவனின் முகம் அவ்வளவு கவலையைக் காட்டியது.
“அவளுக்கு என்னைப் புடிக்கும், ஆனா ஒத்துக்க மாட்டேங்கிறா? இது நடக்க வாய்ப்பே இல்லை எங்கிறப்போ எதுக்கு வீணா இதைப்பபத்திப் பேசணும்னு ஒதுங்கிப் போறா.”
“ஓ…” இதுவரைப் பார்த்திராத சுமித்ரா மேல் மோகனுக்கு மரியாதை உருவானது.
“அப்போ எப்பிடிப்பா? பொண்ணே உன்னைவிட்டு ஒதுங்கும் போது உன்னால என்ன பண்ண முடியும்?”
“அதை நான் பார்த்துக்கிறேன் அத்தான், என்னை மறுக்கிற ஒவ்வொரு தருணத்துக்கும் அவ பதில் சொல்லியே ஆகணும்.”
“இப்போ நீ சின்னப் பையன் மாதிரி பேசுறேப்பா.”
“இல்லைத்தான், ரொம்ப வலிக்குது, அவ மனசுல ஆசை இருக்கு, எங்கூட நின்னு அவளும் போராடுறதை விட்டுட்டு இப்பிடி ஒதுங்கிப் போனா என்ன அர்த்தம்? காதல்னா எந்த வீடு சம்மதிக்கப் போகுது? எனக்கு ஆறுதலா இருக்காம என்னைத் தனியா விட்டுட்டு வேடிக்கைப் பார்க்கிறா, அதுக்கு அவ பதில் சொல்லியே ஆகணும்.” மாதவனின் குரலில் இருந்த வைராக்கியம் மோகனைக் கவலைக்குள்ளாக்கியது.
“அவசரப்படாம எல்லாத்தையும் நிதானமா பண்ணலாம், அதான் இப்போ வீட்டுல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சில்லை? என்னன்னு பார்க்கலாம், நீ அமைதியா இருப்பா.” மாதவனை அமைதிப்படுத்திய மோகனுக்குள் கவலைப் புகுந்து கொண்டது. காலதாமதம் செய்வது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்று தெளிவாகப் புரிந்தது. அன்று மாலையே மாதவன் வீட்டிலில்லாத சமயம் பேச்சை ஆரம்பித்தார்.
“மாமா, இன்னைக்கு வீட்டுல நடந்த பிரச்சினை என்னன்னு உங்களுக்குத் தெரியும், ஆனா இதுவரைக்கும் நீங்க எதுவுமே பேசலை.”
“இதுல அப்பா பேச என்னங்க இருக்கு? மாதவன் செய்றது சரின்னு நீங்களும் சொல்றீங்களா?”‘ வெற்றிவேல் அமைதியாக அமர்ந்திருக்க இப்போதும் ரேவதிதான் எகிறிக் கொண்டு வந்தார்.
“ரேவதி, இது ஆத்திரப்படுற விஷயமில்லை, மாதவன் சரி, பிழை எங்கிறதைத் தாண்டி இன்னைக்கு நீ பண்ணின காரியம் ரொம்பத் தப்பு, நிலைமையை இன்னும் இன்னும் சிக்கலாக்காதே, உன்னோட தம்பி தப்பான முடிவுகளை எடுத்திருவானோன்னு நான் இப்போ பயப்பிடுறேன்.”
“என்ன மாப்பிள்ளை நீங்க சொல்றீங்க?” செல்லம்மா அழ ஆரம்பிக்கவும் வெற்றிவேல் இலேசாக அசைந்தார்.
“அந்தப் பொண்ணு மனசுல ஆசை இருந்தாலும் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு அது ஒதுங்கித்தான் போகுது, அதுக்கே உன்னோட தம்பி கொலை வெறியில இருக்கான், இப்போ நீ பண்ணின வேலையால அந்தப் பொண்ணு இன்னும் ஒதுங்கித்தான் போகப்போகுது, சுமித்ராவோட ஒதுக்கம் அவனை ரொம்பப் பாதிக்குது, அவனோட புடிவாதம் ஜாஸ்தி ஆகுது,”
“இவனுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா? அதான் அந்தப் பொண்ணு ஒதுங்கிப் போகுதில்லை, எதுக்கு மடையன் மாதிரி பின்னாடியே போறான்?”
“இதுக்குப் பதில் உன்னோட தம்பிதான் சொல்லணும் ரேவதி, ஒருவேளை நீங்க யாரு தடுத்தும் கேட்காம அவன் இந்தக் கல்யாணத்தை நடத்திக்கிட்டா அதுக்கப்புறம் அவனோட வாழ்க்கை எப்பிடி இருக்கப் போகுதுன்னு யோசிச்சுப் பாருங்க, எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு புரியலை, அவனை மிருகமாக்கிடாதீங்க!”
“அதுக்காக எங்கப்பா இப்போ அந்த வீட்டுக்குப் பொண்ணு கேட்டுப் போக முடியுமா?” இப்போது அந்த வீட்டில் இருந்த யாரும் எதுவும் பேசவில்லை. சம்பந்தப்பட்டவர்களே அமைதியாக இருக்கும்போது மோகனால் என்ன பண்ணிவிட முடியும்?! அவரும் அமைதியாகிவிட்டார்.
இந்தக் களேபரம் முடிந்து பத்து நாட்கள் ஆகியிருக்கும். அன்று ஒரு வேலையாக மாதவன் டவுனுக்கு வந்திருந்தான். இப்படி வரும்போது எப்படியும் நண்பர்களைச் சந்திக்க வாய்ப்புகள் அமைந்து போகும். இன்றைக்கும் அப்படித்தான். அவனோடு படித்தவர்களைக் காணக்கிடைத்தது.
“எப்பிடி இருக்கே மாதவா?” நண்பர்களுக்குள் பேச்சு ஆரம்பமானது.
“எப்ப எங்களுக்கெல்லாம் கல்யாண விருந்து போடப்போறே? நம்ம நிமலனைப் பார்த்தியா? வேலை கிடைச்ச கையோட கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட்டான்.”
“அட! நம்ம நிமலனா? எனக்கு இது தெரியாதே?!” இந்தத் தகவல் மாதவனுக்குப் புதிது என்பதால் ஆச்சரியப்பட்டான்.
“உங்க ஊர் பொண்ணுதாம்பா, இந்த முறை ஐலன்ட் ரேங்க் எடுத்த பொண்ணிருக்கில்லை, அவங்களோட அக்காதான் பொண்ணாம்.” இப்போது மாதவனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது.
“உங்களுக்கு யாரு சொன்னா? இந்தக் கதை உண்மையா?”
“அட ஆமா மாதவா, நம்ம பசங்க வாயில இப்ப பேச்சே இதானே! ஏன் உனக்குத் தெரியாதா?”
“இல்லை.” என்றவன் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. நேராக அந்த ப்ளாக் ஆடி சின்னைய்யாவின் வீட்டின் முன்பாகப் போய் நின்றது. நிமலன் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு சின்னதாகக் கல் வீடொன்று கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவன் காரை கண்டதும் பெரியவர் ஓடி வந்தார்.
“வணக்கம் சாமி.”
“சின்னைய்யா, நான் கேள்விப்பட்டது உண்மையா?”
“சாமி என்ன கேள்விப்பட்டீங்க?”
“நிமலனுக்குக் கல்யாணம் பேசுறியா?”
“ஆமா சாமி, அவனுக்கும் வயசு போகுதில்லை?” நடப்பது என்னவென்று தெரியாமல் வாயெல்லாம் பல்லாகப் பதில் சொன்னார் பெரியவர்.
“வீட்டு வேலை இன்னும் முடியலை, என்ன திடீர்னு கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சிருக்கீங்க?”
“வீட்டை முடிச்சதுக்கு அப்புறந்தான் கல்யாணம்னு நாங்களும் முடிவு பண்ணியிருந்தோம், ஆனா பொண்ணு வீட்டுக்காரங்க அவங்களா கேட்டு வரும்போது எதுக்கு சாமி வேணாம்னு சொல்லணும்? அதுவும் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரின்னு எல்லாரும் சொன்னாங்க.”
“அந்த நல்ல பொண்ணை இந்த மாதவனுக்கு ரொம்பப் புடிக்கும்னு அந்த வீட்டுல உனக்கு யாரும் சொல்லலையா சின்னைய்யா?”
“சாமி! நீங்க என்ன சொல்றீங்க?! எனக்கு ஒன்னும் புரியலை?”
“நிமலனுக்குக் கல்யாணம் பண்ணுறது ரொம்ப நல்ல விஷயம், ஆனா இப்ப பார்த்திருக்கிற இந்தப் பொண்ணு வேணாம், நீ வேற பொண்ணு பாரு, கல்யாணத்தை நானே முன்ன நின்னு நடத்தி வெக்கிறேன்.” என்றவன் கோபமாகக் கிளம்பிவிட்டான். சின்னைய்யா அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து நின்றதை இவன் கவனிக்கவே இல்லை. இப்போது அந்த ப்ளாக் ஆடி சுமித்ராவின் வீட்டின் முன்பாகப் போய் நின்றது.
“வீட்டுல யாரு?” அதிகாரமாக இவன் குரல் கொடுக்க சுமதிதான் வாசலுக்கு வந்தாள்.
“அம்மா, அப்பா யாரும் வீட்டுல இல்லையா சுமதி?”
“இல்லை சார், வெளியே போயிருக்காங்க.” சுமதிக்கு இலேசாகப் பயம் தொற்றிக்கொண்டது. மாதவன் எதையோ கேள்விப்பட்ட பின்புதான் இங்கு வந்திருக்கிறான் என்பதை அவனது கர்ஜித்த குரலே சொன்னது.
“இந்த வீட்டுல என்ன நடக்குது? எதை மனசுல வெச்சுக்கிட்டு நிமலனோட வீடு வரைக்கும் உங்கப்பா, அம்மா போயிருக்காங்க?” இப்போது இளையவளுக்கு உதறல் எடுத்தது.
“அது…”
“இதுக்கு நீயும் உடந்தையா?”
“மாதவன் சார், எங்க நிலைமைல இருந்து…”
“மண்ணாங்கட்டி! உங்க நிலைமை உங்க நிலைமை! அப்பிடி என்னதான் ஆச்சு உங்க நிலைமைக்கு? அந்தப் பாழாப்போன பெரிய வீட்டுல நான் பொறக்காம இருந்திருந்தா இன்னைக்கு எதுவும் பேசாம சுமித்ராவை எனக்குக் கட்டிக் குடுத்திருப்பீங்கதானே?” இவன் சத்தம்போட்டுக் கொண்டிருக்கும்போதே ராஜசேகரும் மணிமேகலையும் வந்துவிட்டார்கள். நடு வீட்டில் நின்றுகொண்டு ருத்ர தாண்டவம் ஆடக்கொண்டிருந்த மாதவனைப் பார்த்து அவர்களும் திகைத்துப் போனார்கள்.
“வாங்க சார், உங்களுக்கே இது நியாயமா இருக்கா? அதான் உங்கப் பொண்ணுங்க தெளிவா சொல்லியிருப்பாங்களே, எனக்கு சுமித்ரா மேல அபிப்பிராயம் இருக்குன்னு, அது தெரிஞ்சும் நிமலனோட வீட்டுக்குக் கல்யாணம் பேசிப் போயிருக்கீங்கன்னா என்ன அர்த்தம்?” மாதவனின் தாக்குதல் நேரடியாக இருந்தது.
“தம்பி, நீங்க இந்த ஊரோட பெரியவீட்டுப் பையன், எங்க நிலைமைல இருந்தும் நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும், இதுக்கு நாங்க சம்மதம் சொன்னா உங்க வீடு எங்களைக் குத்தம் சொல்லும், இப்பவே உங்க அக்கா எங்கப் பொண்ணுங்கக்கிட்டத் தப்பா பேசியிருக்காங்க, இப்பவே இப்பிடீன்னா உங்க ஆசைக்கு நாங்க தலையை ஆட்டினா எங்க நிலைமை என்ன ஆகிறது? இந்த ஊருக்குள்ள நாங்க எப்பிடி நிம்மதியா வாழுறது? நான் வேலை பார்க்கிற இடம் மட்டுமில்லை, இப்ப சுமித்ரா வேலை பார்க்கிற இடம் வரைக்கும் உங்கப்பாவுக்குச் செல்வாக்கு இருக்கு, நாளைக்கு அவருக்கு எங்கமேல கோபம் வந்து ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டா எங்க நிலைமை என்ன தம்பி? இதையெல்லாம் யோசிச்சுத்தான் நாங்க முடிவு எடுக்கணும்.”
“நீங்க என்னைப் பத்தித்தான் யோசிக்கலை, உங்க பொண்ணோட மனசுல இருக்கிற ஆசையையும் புரிஞ்சுக்கலையா?” மாதவனின் குரல் இப்போது வெகுவாக இறங்கியிருந்தது.
“தகுதிக்கு மீறி அவ ஆசைப்பட்டிருக்கப்படாது, அப்பிடி ஆசைப்பட்டிருந்தா அவ அனுபவிச்சுத்தான் ஆகணும், எல்லாரோட ஆசையும் எல்லா நேரமும் நிறைவேறாது தம்பி, நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையோட சேர்ந்து ஓடணும், இல்லைன்னா கஷ்டப்படணும்.” இது மாதவனுக்கான செய்தி.
இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் கோபமெல்லாம் இப்போது சுமித்ரா மேல்தான் திரும்பியது. இது அத்தனைக்கும் காரணம் அவள்தான் என்ற எண்ணம் இவனுக்குள் வலுப்பெற்றது. இந்தச் சமயத்தில் அவள் தன்னோடு நின்றிருந்தால் இவர்கள் யாரும் இவனைப் பார்த்து இப்படிப் பேசியிருக்க முடியாது.
“உங்களோட இறுதி முடிவென்ன?”
“விட்டுருங்க தம்பி, நீங்க எங்களுக்கு நிறைய உதவி பண்ணியிருக்கீங்க, அதை என்னைக்கும் நாங்க மறக்க மாட்டோம், பிரதி உபகாரமா திருப்பிக் குடுக்க எங்கக்கிட்ட எதுவுமே இல்லாத சாதாரண மனுஷங்க நாங்க.”
“இந்த உலகத்துலேயே என்னை சந்தோஷப்படுத்தக் கூடிய ஒரு விஷயம் உங்கக்கிட்டத்தான் இருக்கு. அதை மறந்துட்டு நீங்க பேசுறீங்க.”
“மன்னிச்சிடுங்க தம்பி, நீங்க கேட்கிறதைக் குடுத்திட்டு எங்களால இந்த ஊர்ல நிம்மதியா வாழ முடியாது.”
“சரி…” என்றவன் அதற்குமேல் பேசாமல் கிளம்பிவிட்டான். போகும்போது சுமதியை ஓர் பார்வைப் பார்க்கத் தவறவில்லை அவன். மிகவும் வேதனையாகிப் போனது இளையவளுக்கு. மாதவன் எத்தனை இனிமையான மனிதன். அவனைவிட வேறு யார் தன் அக்காவிற்குப் பொருத்தமாக இருக்க முடியும்?! அவனே இத்தனை ஆசைப்பட்டுக் கேட்டும் சம்மதம் சொல்லமுடியாத இக்கட்டான நிலையில் காலம் அவர்களை நிறுத்தி இருக்கிறதே!
ஆனால் மாதவன் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தான். எந்தப் பக்கம் திரும்பியபோதும் அவன் பார்த்தது நிராகரிப்பைத்தான். இந்த உலகத்தையே அவனால் எதிர்த்து நிற்க முடியும். சுமித்ரா என்ற ஒருத்தி அவன் பக்கம் நின்றிருந்தால். கடை வீதிக்குச் சென்றவன் அவனுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டான். உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த ஜுவாலையை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த ப்ளாக் ஆடி நேராக தலவாக்கலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்பியிருந்தான். இந்த வாழ்க்கை தனக்கு என்ன வைத்திருக்கிறது என்று ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆவேசம் பிறந்திருந்தது. நேரம் இரவு ஒன்பது மணி. மனித நடமாட்டம் அடங்கும் வரை காத்திருந்தவன் சுமித்ராவை அலைபேசியில் அழைத்தான். அழைப்பு வெகுநேரமாக ஏற்கப்படவில்லை. அவன் கொதிப்பு உச்ச நிலையை அடையும் முன்பாக அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ…” ஹீனமாக வந்தது குரல்.
“வெளியே வா சுமித்ரா.”
“என்ன?!” அவள் அதிர்ந்து போனாள்.
“உன்னோட குவார்ட்டஸுக்கு முன்னாடிதான் கார் நிற்குது, நீ வெளியே வா.” அதிகாரமாக வந்தது அவன் ஆணை.
“என்ன பேசுறீங்க நீங்க? யாராவது பார்த்தா என்னாகிறது?”
“எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை, இப்ப நீயா வெளியே வரலைன்னா நான் உள்ளே வர வேண்டியிருக்கும், உனக்கு எது வசதியோ அதைப் பண்ணு.”
“மாதவன் சார், நான் சொல்றதை…”
“சுமித்ரா!” அவன் போட்ட சத்தத்தில் அவளுக்குச் சர்வாங்கமும் நடுங்கியது.
“அஞ்சு நிமிஷம் குடுங்க… ட்ரெஸ் மாத்திக்கிட்டு…”
“அஞ்சு நிமிஷத்துல நீ எம் பக்கத்துல இருக்கணும், இல்லைன்னா உனக்கு முன்னாடி நானிருப்பேன்.” அதற்குமேல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவன் சொன்னதைச் செய்வான் என்று தோன்ற அவசர அவசரமாக கைக்கு அகப்பட்டதை எடுத்து உடுத்திக் கொண்டவள் அறையைப் பூட்டினாள். நல்லவேளையாக யாரும் அவளைப் பார்க்கவில்லை.
அந்த ப்ளாக் ஆடி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. இந்த இரவு வேளையில் இவன் எங்கே, எதற்காகப் போகிறான்?! சுமித்ரா பேசவும் பயந்தவளாக அமர்ந்திருந்தாள். நல்லவேளையாக அவள் இருந்த பகுதியில் இரவு வேளையில் அத்தனை நடமாட்டம் இருக்காது. இவள் உணவு வாங்கும் ஹோட்டலும் எட்டு மணியோடு அடங்கிவிடும். காரை அவன் வளைத்துத் திருப்ப அவளுக்கு எங்கே போகிறோம் என்று புரிந்து போனது. அன்று அவர்கள் சென்ற அருவிக்கரை. காரை நிறுத்தியவன் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு?”
“நிமலன் வீட்டுல உங்கப்பா, அம்மாக்கு என்ன வேலை?” அவன் கேள்வி அவளுக்குப் புரியவில்லை. நிமலனை அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரே ஊர்க்காரர்கள். அந்த வகையில் இவள் பெற்றோர் அங்கு போயிருக்கலாம். இதில் தவறென்ன இருக்கிறது?!
“தெரியலை… சும்மா போயிருக்கலாம்.”
“அப்பிடி ஊர் சுத்துற அளவுக்கு உங்கப்பா ஃப்ரீயான ஆளா?” இல்லைதான். ராஜசேகருக்கு எப்போதும் எஸ்டேட்டில் ஓய்வில்லாத வேலை இருக்கும்.
“உங்க வீட்டுல என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாது?”
“என்ன நடக்குது?” உண்மையிலேயே நிமலனை இவளுக்காகப் பேசியது இவளுக்குத் தெரியாது. அன்று ரேவதி இவர்களிடம் நடந்துகொண்ட விதம் பார்த்து சுமதி வீட்டில் அத்தனையையும் சொல்லிவிட்டாள். இதற்கு மேலும் மறைத்தால் தப்பாகிவிடுமோ என்று சுமித்ராவும் வாயைத் திறக்கவில்லை. அன்றிலிருந்து மணிமேகலை ஆரம்பித்துவிட்டார்.
“இதுக்குத்தான் ஆரம்பத்துல இருந்தே நான் உங்கக்கிட்டச் சொன்னேன், சுமிக்கு மாப்பிள்ளைப் பார்க்கலாம்னு, நீங்க என்னோட பேச்சைக் கேட்கலை.” அம்மாவின் புலம்பல் அதிகமாகவும் அடுத்தநாளே கிளம்பி தலவாக்கலை வந்துவிட்டாள் பெரியவள்.
“சுமதி, அந்தப் பையன் விஷயத்துல அக்காவோட நிலைப்பாடு என்ன? உங்கிட்ட ஏதாவது சொன்னாளா?” தனிமையில் பெண்ணிடம் விசாரித்தார் ராஜசேகர். இந்த விஷயத்தில் பையனுக்கு மாத்திரம்தான் ஈடுபாடு இருந்தால் ஒரு தகப்பனாக இவர் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் சுமித்ராவுக்கும் விருப்பம் இருந்தால்!
“அக்காக்கும் மாதவன் சாரை புடிக்கும்பா.”
“ஓ…” அதற்குமேல் ராஜசேகர் காலத்தைக் கடத்தவில்லை. மனைவி சொல்வது சரியென்று தோன்றவும் சுமித்ராவிடம் அபிப்பிராயம் கேட்காமலேயே கல்யாணப் பேச்சை ஆரம்பித்து விட்டார்கள்.
“உங்க வீட்டுல உனக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறாங்கன்னு உனக்குத் தெரியாது?” இப்போது சுமித்ராவின் தலை குனிந்தது.
“சுமித்ரா! எனக்குப் பதில் சொல்லு.”
“அம்மா அந்தப் பேச்சை ஆரம்பிச்சாங்க, அது எப்பவும் வீட்டுல நடக்கிறதுதான்னு நான் கண்டுக்கலை.”
“ஆனா இப்போ உங்கம்மா வெறும் பேச்சோட நிறுத்தலை, நிமலன் வீட்டுக்கு மாப்பிள்ளைக் கேட்டுப் போயிருக்காங்க.”
“என்ன?!” இவள் திடுக்கிட்டு அருகிலிருந்தவனைப் பார்க்க அவன் பார்வை இவளைத் துளைத்தது.
“நிமலன் வீட்டுல இதுக்குச் சம்மதம் சொல்லிட்டா அப்புறம் உனக்குக் கல்யாணமா? பெரிய வீட்டுக்குத் தகவல் வரும், உங்கக் கல்யாணத்துக்கு வந்து நான் ஆசீர்வாதம் பண்ணணுமா?”
“சார்…”
“இங்கப்பாரு, இன்னொரு தடவை என்னை சார்னு கூப்பிட்டே! உன்னைக் கொல்லவும் நான் தயங்கமாட்டேன், இறங்கு.”
“ஆங்…”
“காரைவிட்டு இறங்கு.” என்றவன் தானும் இறங்கி அவள் பக்கக் கதவையும் திறந்துவிட்டான். நேரம் இப்போது இரவு பத்து. அருவியின் சலசலப்பு இன்னிசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. காட்டுப் பூவின் நறுமணம் பச்சை வாசத்தோடு நாசியை நிரப்பியது. வண்டுகள் ரீங்காரமிட்டன. மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தன. பெண்ணின் முன்பாக வந்து நின்றான் மாதவன்.
“சுமித்ரா, உனக்கு என்னைப் புடிக்குமா?” கண்களைப் பார்த்து அவன் கேட்ட மாத்திரத்தில் அவள் கண்கள் கலங்கிப் போயின. ஒரு நிமிடம் அவன் முகத்தில் கனிவு வந்து போனது.
“இது உணர்ச்சி வசப்படுற நேரமில்லை, எனக்கு உன்னோட பதில் வேணும், நல்லா யோசிச்சு பதில் சொல்லு, உனக்கு என்னைப் புடிக்குமா?”
“இப்பிடி…”
“தேவையில்லாத பேச்சுக்கள் வேணாம், இது நடக்கும், நடக்காது அதைப்பத்தியெல்லாம் நாம அப்புறமா யோசிக்கலாம், இப்போ எனக்கு உன்னோட பதில் மட்டுந்தான் வேணும், புடிக்கும், புடிக்காது, ரெண்டுல ஒரு பதிலை மட்டும் சொல்லு.”
“புடிக்கும்.” மிகுந்த தயக்கத்திற்கு மத்தியில் வந்தது அவளது பதில். சற்றும் தாமதிக்காதவன் காரை திறந்து எதையோ எடுத்தான். அவள் என்னவென்று உணரும் முன்பாக பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டியிருந்தான் மாதவன்!
“என்ன பண்ணுறீங்க நீங்க?!”
“அந்த ஆண்டவனும் இந்தக் காடும் அருவியுந்தான் நமக்கு நடந்த கல்யாணத்துக்குச் சாட்சி, உங்கழுத்துல இருந்து நான் கட்டின இந்தத் தாலி இறங்கிச்சுன்னா நான் உயிரோட இல்லைன்னு அர்த்தம்.”
“ஐயையோ!” அவள் தன் காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டாள்.
“இதுதான் இந்த மாதவனோட முடிவு, அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம்.” என்றவன் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டான். உடம்பெல்லாம் நடுங்க, ஸ்மரணை தப்பியவள் போல அப்படியே நின்றிருந்தாள் சுமித்ரா!






Very interesting.