அத்தியாயம் 10
அத்தியாயம் 10
அந்த வாரஇறுதியில் வீட்டிற்கு வந்திருந்தாள் சுமித்ரா. வெள்ளிக்கிழமை வேலை முடிந்த கையோடு பஸ்ஸைப் பிடித்துவிட்டாள். தலவாக்கலைக்கு மாதவன் வந்ததையோ அங்கு நடந்ததையோ மறந்தும் அவள் யாரிடமும் சொல்லவில்லை. சுமதியிடம் கூட வாயைத் திறக்கவில்லை.
“அக்கா, அருவிக்கரைக்குப் போகலாமா?”
“இருட்ட ஆரம்பிச்சிடுச்சு, இப்போ எதுக்கு அருவிக்கரை?” அம்மா சத்தம் போடவும் சுமித்ரா அமைதியாகிவிட்டாள். ஆனால் தங்கை ஏதோ சமிக்ஞை செய்யவும் உஷாரானாள்.
“ப்ளீஸ்மா, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் நான் இங்க இருக்கப் போறேன், யூனி ஸ்டார்ட் பண்ணிட்டா அதுக்கப்புறமா இதுக்கெல்லாம் நேரம் இருக்காது, வேணாம்னு சொல்லாதீங்கம்மா.” அம்மாவின் தாடையைப் பிடித்துக் கெஞ்சியவள் ஒருவாறாக மணிமேகலையிடம் அனுமதி வாங்கியிருந்தாள்.
“என்ன சுமதி? எதுக்காக இப்போ இந்த அவசரப் பயணம்?”
“வாயை மூடிட்டு சீக்கிரமா வாக்கா, அப்பா வந்துட்டா அவங்கக்கிட்ட வேற பர்மிஷன் வாங்கணும்.” என்றவள் அவசர அவசரமாக அக்காவை அழைத்துக் கொண்டு அருவிக்கரைக்கு வந்து சேர்ந்தாள். இவர்கள் வருவதற்கு முன்பாகவே அங்கு பெரிய வீட்டின் கார் நின்றிருந்தது. இப்போது சுமித்ரா தங்கையைத் திரும்பிப் பார்த்தாள்.
“மாதவன் சாரோட அம்மா, உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க.” அன்றைக்கு பெரிய வீட்டிலிருந்து ஆட்கள் வந்ததை அக்காவிடம் சொல்லியிருந்தாள் இளையவள். சுமித்ராவால் அவள் காதுகளையே நம்ப முடிந்திருக்கவில்லை.
“எதுக்கு சுமதி?”
“தெரியலைக்கா, அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்பவே அக்கா எப்ப வருவான்னு கேட்டாங்க, இன்னைக்கு மத்தியானம் கால் பண்ணி சாயங்காலம் அருவிக்கரைக்கு வாங்கன்னு அவங்கதான் சொன்னாங்க.”
“ஓ…” இவர்கள் வருவதைப் பார்த்து காரிலிருந்து இறங்கினார் செல்லம்மா. பெண்கள் இருவரும் அவர் பக்கத்தில் தயங்கியபடியே வந்தார்கள். ஆட்கள் அரவமற்று இருந்தது அந்த இடம்.
“எப்பிடியிருக்கே சுமித்ரா?” குரல் மிகவும் நிதானமாக இருந்தது.
“நல்லா… நல்லாருக்கேம்மா.”
“ம்…” என்றவர் அவளருகில் வந்து கழுத்துத் துப்பட்டாவை விலக்கினார். பெண்ணின் கழுத்தில் அழகான மஞ்சள் கயிறு மின்னியது.
“அக்கா!” சுமதி அலற அவள் வாயைச் சட்டென்று பொத்தினாள் பெரியவள். ஆனால் சட்டென்று அக்காவின் கையைத் தட்டிவிட்டவள்,
“என்னக்கா இது?! என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கே?” என்றாள் ஆத்திரமாக.
“உங்கக்கா மேல எதுக்கு சுமதி ஆத்திரப்படுறே? இது என்னோட மகன் பண்ணின காரியம்.” நியாயமாகப் பேசினார் பெரியவர்.
“அவங்க இதைப் பண்ணும் வரைக்கும் இவ என்னம்மா பண்ணிக்கிட்டு இருந்தா? பூப்பறிச்சுக்கிட்டு இருந்தாளா?” இளையவளின் கோபத்தில் இருந்த நியாயத்தை செல்லம்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கு நீதான் பதில் சொல்ல வேண்டும் என்பதைப்போல இப்போது சுமித்ராவைப் பார்த்தார்.
“பார்க்கணும்னு சொன்னாங்க… இப்பிடி நடக்கும்னு… நான் எதிர்பார்க்கலை.”
“என்னத்தை எதிர்பார்க்கலை? தாலி கட்டப் பக்கத்துலதானே வந்திருப்பாங்க? அப்ப கூடவா உன்னால தடுக்க முடியலை? இவ்வளவு பிரச்சினை இங்க நடக்குது, அவங்க அக்கா என்னடான்னா இதே அருவிக்கரைல நம்மளை வாய்க்கு வந்த மாதிரி பேசிட்டுப் போயிருக்காங்க, நீ என்னடான்னா மாதவன் சாரைப் பார்த்துப் பல்லைக் காட்டிக்கிட்டு நின்னிருக்கே!” செல்லம்மா அங்கே இருப்பதையும் மறந்து ஆவேசமாகப் பேசினாள் இளையவள்.
“அன்னைக்கு இவங்கெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்தப்போ ஏதோ மனசு மாறி வந்திருக்காங்கன்னு நான் நினைச்சேன், ஆனா அது அப்பிடியில்லைன்னு இப்பதான் புரியுது, இதுக்கு மேல பண்ண எதுவுமே இல்லைன்னு வந்திருக்காங்க, அந்த வீட்டுல போய் உன்னால எப்பிடிக்கா நிம்மதியா வாழ முடியும்?” இப்போது சுமித்ரா செல்லம்மாவைச் சங்கடமாகப் பார்க்க அப்போதுதான் அவர் அங்கு இருப்பதையே உணர்ந்த சுமதி,
“என்னை மன்னிச்சிடுங்கம்மா, உங்க மேலயும் மாதவன் சார் மேலயும் எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு, ஆனா இது என்னோட அக்கா வாழ்க்கை, அதுல எந்தத் தப்பும் நடந்திரக் கூடாது.”
“நடக்காது சுமதி.”
“எப்பிடிம்மா நம்புறது? உங்க பொண்ணுக்கு எங்களைச் சுத்தமா புடிக்காது, அதை நாங்களே எங்கக் கண்ணால பார்த்துட்டோம், அவங்களைத் தாண்டி நீங்களும் எதுவும் பண்ண மாட்டீங்க, உங்கச் சின்னப் பையன் எங்களையெல்லாம் மனுஷங்களாவே மதிக்கிறதில்லை, உனக்குக் கொழும்பு தெரியுமா? நீயெல்லாம் அங்க வந்து என்ன பண்ணப்போறேன்னு எங்கிட்டயே கேட்டாரு, இப்பிடி இருக்கிற வீட்டுல இவளால குப்பைக் கொட்ட முடியுமா? இவளை உங்க வீட்டுல இருக்கிற ஒரு ஜீவனாவது மதிக்குமா?” முகம் சிவந்துபோகப் பேசும் பெண்ணுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் செல்லம்மா காரை நோக்கிப் போய்விட்டார்.
அந்தப் பெண் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. பிழை முழுவதும் மாதவன் மேல் இருக்கும்போது எப்படி அவரால் சுமித்ராவைக் குற்றம் சொல்ல முடியும்?! மாதவனின் திருமண விடயத்தில் செல்லம்மா நிறைய கனவுகள் வைத்திருந்தார். இளைய மகன் சரணை எப்போதும் அவர் நம்பியதில்லை. அவன் உல்லாசி, சுயநலவாதி.
மாதவன் அப்படியல்ல. வீட்டிற்குப் பிடிக்காது என்று தெரிந்த எதையும் அவன் இதுவரை செய்ததில்லை. அப்படிப்பட்ட மாதவனையே கோடு தாண்ட வைத்திருந்தது காதல்! வீட்டிற்கு வந்தவர் ஒரு மூச்சு நன்றாக அழுதார்.
அந்தப் பெண்ணை நினைத்த போது இன்னும் கவலையாக இருந்தது. தன் மகன் மாதவனின் மனதைக் கவர்ந்த பெண் அவள். வசதியான வீட்டில் பிறக்கவில்லை என்ற குறையைத் தவிர அவளிடம் என்ன இல்லை? அழகாக இருக்கிறாள், படித்திருக்கிறாள். குணமான பெண். இதைவிட குடும்பம் நடத்த வேறென்ன வேண்டும்?
“என்ன சொல்லுது உங்க மூத்த மகன் வாழப்போற வீடு?” அன்று சாயங்காலம் குடும்பத்தோடு வந்த ரேவதி நக்கலாக அம்மாவிடம் கேட்டார். செல்லம்மா எதுவும் பேசாமல் பேரனைத் தூக்கிக் கொஞ்சினார்.
“ரேவதி, இதென்ன பேச்சு? உனக்குப் புடிக்குதோ புடிக்கல்லையோ உங்கண்ணன் அந்த வீட்டுலதான் வாழுறதுன்னு முடிவெடுத்துட்டான், இதுக்குமேல எதுக்கு இந்தத் தேவையில்லாத பேச்செல்லாம்?”
“மாப்பிள்ளை…” செல்லம்மாவின் குரல் கலங்கியது.
“அத்தை, ரேவதி பேச்சை நீங்க கண்டுக்காதீங்க, என்னைப் பொறுத்தவரைக்கும் காசு, பணம் இல்லையே தவிர குறைன்னு சொல்ல அந்த வீட்டுல எதுவுமே இல்லை, நல்ல மனுஷங்க, படிச்ச பொண்ணு, எனக்கென்னமோ மாதவனோட தெரிவு ரேவதி கோபப்படுற அளவுக்கு மோசமில்லைன்னுதான் தோணுது.” கணவனின் பேச்சில் ரேவதி கோபமாக உள்ளே போய்விட்டார்.
“மாப்பிள்ளை, சுமித்ரா ஊருக்கு வந்திருக்கா.”
“ஓ… போய் பார்த்தீங்களா அத்தை?”
“ஆமா மாப்பிள்ளை, ரெண்டு, மூனு தடவை அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேன், ஆனாலும் நம்ம வீட்டுப் பொண்ணா நினைச்சு என்னைக்கும் பார்த்ததில்லை, அதான் இன்னைக்கு…” இதுதான் தாய் மனதா? மகனின் கல்யாணம் பற்றி எண்ணற்ற கனவுகள் இருந்தாலும் ரேவதி போல செல்லம்மாவால் அந்தப் பெண்ணை வெறுக்க முடியவில்லை.
“என்ன சொன்னாங்க?”
“அக்காவோட கழுத்துல கிடந்த தாலியைப் பார்த்துட்டு அந்தச் சின்னப் பொண்ணு கோபப்பட்டுச்சு, அந்தக் கோபத்துல நியாயம் இருக்கிறதால என்னால எதுவும் பேச முடியலை.”
“ம்…”
“மாப்பிள்ளை, நாம இனியும் தாமதிக்க வேணாம், ரொம்ப நெருக்கமானவங்களை அழைச்சு அவங்க வீட்டுக்குப் போய் அடையாளம் போட்டுட்டு வந்திடலாம்.”
“ம்… சரி.”
“நடந்த விஷயம் அவங்க வீடு வரைக்கும் போகலை, சுமித்ரா எதுவும் சொல்லலை, இன்னைக்கு என்னாலதான் சுமதிக்கும் இந்த விஷயம் தெரிய வந்திச்சு, இதுக்கு மேலயும் தாமதம் பண்ணி அந்தச் சின்னப் பொண்ணுங்களுக்குச் சங்கடத்தைக் குடுக்க நான் விரும்பலை.”
“அதுவும் சரிதான், இந்த வாரம் போனா சரியா இருக்குமா?”
“ஆமா மாப்பிள்ளை, சனி, ஞாயிறு அந்தப் பொண்ணு வீட்டுல இருக்கு, தகவல் சொல்லிட்டு நாம வர்ற வெள்ளிக்கிழமை போகலாம், அதுக்குரிய ஏற்பாடுகளை நான் பண்ணுறேன், நீங்க ரேவதியை…”
“அதை நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க, யாருக்கெல்லாம் சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அவங்களை அழைச்சிடுங்க.”
“சரி மாப்பிள்ளை.” செல்லம்மா அதற்குமேல் ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட சரணும் அம்மாவை அழைத்து ஆச்சரியப்பட்டான்.
“என்ன மம்மி? எப்பப் பார்த்தாலும் என்னோட பெரிய பையன் அப்பிடி, இப்பிடின்னு அலப்பறைப் பண்ணுவீங்க, உங்க சின்னப் பையனைச் சல்லிக் காசுக்கும் மதிக்கமாட்டீங்க, இப்ப என்னடான்னா உங்க பெரிய பையன் பெரிய குண்டைத் தூக்கி உங்க தலையில போட்டிருக்காரு போல!” எப்போதும் அம்மாவோடு கேலி பேசுவதென்றால் ‘மம்மி’ என்றுதான் அழைப்பான் சரண். இன்றைக்கும் கேலியாகத்தான் கேட்டிருந்தான். ஆனால் செல்லம்மா விசும்ப ஆரம்பிக்கவும் இளையவனுக்கு ஒருமாதிரியாகிப் போனது.
“அம்மா, எதுக்கு இப்போ அழுறீங்க? நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்மா.”
“சரண், உங்கண்ணா பார்த்திருக்கிற வேலையைப் பார்த்தியா? அவனோட கல்யாணத்தைப் பத்தி நான் எவ்வளவு கனவு வெச்சிருந்தேன், எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டானேப்பா.”
“ஏம்மா? உங்க கனவைக் கலைக்கிற மாதிரி அண்ணா அப்பிடி என்ன பண்ணிட்டான்? அவன் ஆசைப்பட்டிருக்கிற பொண்ணுக்கு என்ன குறை? வசதி இல்லை, அவ்வளவுதானே? அதான் வேண்டியளவு பணம் நம்மக்கிட்ட இருக்கேம்மா? வர்றவங்க வேற அள்ளிக்கிட்டு வரணுமா?”
“நான் பணத்தை யோசிக்கலைடா, சொல்லிக்கிற மாதிரி அந்தக் குடும்பம் இல்லையே, யாராவது பொண்ணு யாருன்னு கேட்டா பக்கத்து எஸ்டேட்டுல வேலை பார்க்கிறவரோட பொண்ணுன்னா சொல்ல முடியும்? யோசிச்சுப் பாரு.”
“அது… நீங்க சொல்றது சரிதான், ஆனா வர்ஷா மாதிரி பெரிய இடத்துப் பொண்ணைக் கட்டிட்டு ரெண்டு வருஷத்துல டிவோர்ஸ் வாங்கிறதை விட இது எவ்வளவு மேல் இல்லைம்மா?”
“அந்த வார்த்தையெல்லாம் சொல்லாத தம்பி!”
“உலகத்துல நடக்கிறதைத்தான் நான் சொல்றேன், நீங்க கவலைப்படாதீங்க, ஆரம்பத்துல சில சங்கடங்கள் வந்தாலும் அண்ணாவோட வாழ்க்கை நல்லா இருக்கும்னுதான் என்னோட உள்மனசு சொல்லுது.”
“நல்லது நடந்தா சரிதான் தம்பி.” குரல் கலங்கப் பேசிய செல்லம்மாவிற்குப் புதிய தெம்பு வந்தது போலவிருந்தது. தனது சின்ன மகனுக்கு எங்கிருந்து இத்தனை முதிர்ச்சி கிடைத்தது?! எத்ததனைத் தெளிவாகப் பேசுகிறான்! சதா ரேவதியோடு பேசிப்பேசி அந்த வீட்டிலிருக்கும் குறைகள் மாத்திரம்தான் எனக்குத் தெரிகிறதா? அந்தச் சின்னப் பெண் எத்தனை அழகாக, பொறுப்பாக, படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கிறாள். நாளைக்குத் தனக்குப் பிறக்கப் போகும் பேரக்குழைந்தைகளுக்கு இந்த இயல்புகள்தானே வரப்போகின்றன. காசும் பணமும் இங்கு கொட்டிக் கிடக்கும்போது எதற்காக அந்தஸ்தைப் பற்றி நான் கவலைப்பட வேண்டும்?! தேவையில்லை என்று எண்ணியவர் கணவரைத் தேடிக்கொண்டு போனார்.
“என்ன செல்லம்மா?” அப்படி வெற்றிவேல் கேட்கும்போது அவர் குரல் எப்போதும் கனிந்து போகும்.
“இன்னைக்கு அந்தப் பொண்ணைப் போய் பார்த்துட்டு வந்தேங்க.”
“ஒன்னும் பிரச்சினை இல்லைல்லை?” முகம் இப்போது இறுகிப் போனது. கணவரின் கரத்தைப் பற்றிக் கொண்டார் மனைவி.
“நடந்தது எதுவும் அவங்க வீட்டுல யாருக்கும் தெரியாது, நான் சொன்னதுக்கு அப்புறமாத்தான் அந்தச் சின்னப் பொண்ணுக்கு விஷயம் தெரிஞ்சுது, இது நியாயமான்னு என்னைப் பார்த்துக் கேட்டுச்சு.”
“ம்… தப்பா எதுவும் பேசிடல்லையே?”
“ஐயையோ! அந்த வீடு அப்பிடிப்பட்டது இல்லைங்க, ஆனா எங்கக்கா உங்க வீட்டுக்கு வந்து சந்தோஷமா வாழுவாளான்னு கேட்டுச்சு.”
“ஏனப்பிடி? அந்தப் பொண்ணுக்கு இங்க என்ன குறை வந்திடப்போகுது?”
“ரேவதி, அவதான் இந்தக் கல்யாண விஷயத்துல ரொம்பக் கோபமா இருக்கா, அது அந்தப் பொண்ணுங்களுக்கும் தெரியும்.” என்றவர் சற்றுமுன் இளைய மகன் தன்னிடம் பேசியதையும் சொன்னார்.
“நீங்க ரேவதியைக் கூப்பிட்டுக் கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்க, புடிக்குதோ புடிக்கல்லையோ, மாதவனோட சம்சாரம்னு இந்த வீட்டுக்கு வர்ற பொண்ணுக்கு உண்டான எல்லா மரியாதையையும் நாம குடுத்துத்தானே ஆகணும்?”
“ம்… இப்ப என்ன பண்ணுறதா இருக்கே?”
“வர்ற வெள்ளிக்கிழமை அவங்க வீட்டுக்குப் போய் அடையாளம் போட்டுட்டு வரலாங்க, இதுக்கு மேலயும் தாமதிக்க எனக்கு விருப்பம் இல்லைங்க.”
“சரிம்மா, பண்ணு, நீ கடைக்குப் போறியா, இல்லை நகைகளை வீட்டுக்குக் கொண்டுவரச் சொல்லட்டுமா?”
“இல்லைங்க, நான் கடைக்கே போறேன், எனக்கு இன்னும் கொஞ்சம் பொருட்களும் வாங்க இருக்கு.”
“சரிம்மா.” அடுத்து வந்த நாட்களில் வேலைகள் துரிதமாக நடைபெற்றன. வெற்றிவேல் மகளிடம் என்ன பேசினாரோ, அதன்பிறகு ரேவதி வாயைத் திறக்கவில்லை. சரணும் அந்த வெள்ளிக்கிழமை வீடு வந்திருந்தான். பெரிய வீட்டில் கல்யாணக்களை வந்திருந்தது. மிகமிக நெருக்கம் என்று நினைத்த சிலருக்கு அழைப்பு விடுத்திருந்தார் செல்லம்மா.
அந்த வாரம் முழுவதும் சுமதி தன் அக்காவை வார்த்தைகளால் பந்தாடிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். சுமித்ரா சொன்ன காரணங்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை. அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் தனக்குத் தெரிந்த அத்தனை வசை மொழிகளையும் அக்கா மேல கொட்டினாள் இளையவள்.
“நீ தப்புப் பண்ணிட்டேக்கா, அந்த மனுஷன் மேல உனக்கொரு அபிப்பிராயம் இருக்கு, அதை நான் மறுக்கலை, ஆனா அந்த வீடு உன்னை இப்பிடிப் பயங்கரமா எதிர்க்கறப்போ உன்னால எப்பிடி அங்க நிம்மதியா வாழ முடியும்? தாலியைக் கட்டித் தன்னோட வீட்டைச் சம்மதிக்க வெச்சிருக்காரு அந்த மனுஷன், அவர் மேல எனக்கு எவ்வளவு மரியாதை இருந்துச்சு, ச்சே!”
“சுமதி, ப்ளீஸ் இப்பிடியெல்லாம் பேசாதே.”
“வேற எப்பிடிப் பேசச் சொல்றே? ஏதோ மனசு மாறி மகனோட ஆசைக்குச் சம்மதிச்சிருக்காங்கன்னு பார்த்தா இங்க எல்லாம் தலைகீழா இருக்கு, அப்பா, அம்மாக்குத் தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தியா?”
“ஐயையோ! அப்பிடி எதுவும் பண்ணிடாதே!”
“காதல் உன்னோட கண்ணை மறைச்சிடுச்சா? வந்த வரைக்கும் லாபம் எங்கிற மாதிரி அந்த மனுஷன் கட்டின தாலியோட வந்து நிற்கிறே?!”
“இப்பிடியெல்லாம் நடக்கும்னு நான் யோசிக்கலைடி, பேசி சமாதானம் பண்ணலாம்னு நினைச்சுத்தான் போனேன், என்னை மன்னிச்சிடு சுமதி.”
“அன்னைக்குக் கல்யாணம் பேசி மாமியாரும் மருமகனும் வர்றாங்க, சரி, நம்ம வீட்டுக்கு வர அந்தப் பெரியவரோட கவுரவம் இடம் குடுக்கலை, அந்த அக்காக்காரி எண்ண பண்ணுறா? அவளுக்குமா நம்ம வீட்டுக்கு வர முடியலை?”
“இதெல்லாம் மாதவன் சாருக்குத் தெரியாம இருக்கும்னு நினைக்கிறியா?”
“தெரிஞ்சாலும் என்ன பண்ண முடியும்? வேலை எல்லாத்தையும் விட்டுட்டு உங்கூட வீட்டுலயே காவல் காத்துக்கிட்டு இருக்க முடியுமா?” அதற்குமேல் சுமித்ரா எதுவும் பேசவில்லை. அவர்களின் திருமண வாழ்க்கைப் பற்றிய எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அவளால் எதை தங்கையிடம் உறுதியாகக் கூற முடியும்? ஆனால் எல்லாவற்றையும் மாதவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை மலை போல இருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை. ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டிலிருந்து பின்னேரம் வருவதாகத் தகவல் வந்திருந்தது. மணிமேகலை கொஞ்சம் பரபரப்பாகக் காணப்பட்டார். பெரியவீட்டு மனிதர்கள் வருகிறார்கள். எந்தக் குறையும் இல்லாமல் அவர்களைச் சிறப்பாகக் கவனித்து அனுப்ப வேண்டும். அவர் சிந்தனை இதைத் தாண்டி வேறெதிலும் தற்போது இல்லை.
“என்ன மணிக்கா? ஜாக்பாட் அடிச்ச மாதிரி பெரிய பொண்ணுக்குச் சம்மந்தம் அமைஞ்சு போச்சு!”
“எத்தனை நாள் கவலைப்பட்டிருப்பீங்க, பொண்ணுங்களை நல்ல இடத்துல கட்டிக் குடுக்கணும்னு, உங்க கனவு வீண்போகலை!” அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் இதுவே பேச்சாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டார் வருவதால் ஒருசிலருக்கு முறையாக அழைப்பு விடுத்திருந்தது பெண்வீடு.
“சுமி, இன்னைக்கு என்ன உடுத்தப் போறே?” உதவி செய்யவென்று பக்கத்து வீட்டு அக்கா ஏற்கனவே வந்திருந்தார். இப்போது சுமித்ரா அம்மாவைப் பார்க்க,
“பட்டுப்புடவை ஒன்னு எடுத்து வெச்சிருக்கேன் சுமி, கொண்டுவந்து காட்டு.” என்றார் மணிமேகலை. இது இப்போது அவசியம்தானா என்றுதான் பெண்ணுக்குத் தோன்றியது. ஆனால் புடவையைப் பார்த்தபோது வாயை மூடிக்கொண்டாள். குங்கும நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்த புடவை. ஜரிகை வேலைப்பாடு. அம்மா ப்ளவுஸையும் தைத்தே வைத்திருந்தார்.
“ரொம்ப அழகா இருக்கு மணிக்கா, சுமியோட நிறத்துக்கு எடுப்பா இருக்கும்.” அந்தப் பெண்மணி சொன்னாற் போல புடவையை சுமித்ரா உடுத்திய போது அங்கிருந்த அனைவரும் பிரமித்துப் போனார்கள். இதற்கு முன்பும் அவள் பட்டுப்புடவை உடுத்தியதுண்டு. ஆனால் அது சாதாரண புடவையாக இருக்கும். ஆனால் இம்முறை மகளுக்காக அம்மா பார்த்துப் பார்த்துத் தேர்வு பண்ணியிருந்தார்.
“எதுக்கும்மா இவ்வளவு காஸ்ட்லியா?”
“காஸ்ட்லியா இல்லாம வேற எப்பிடி உடுத்தப் போறே? ஏற்கனவே அவங்க நம்மளை ஒரு தினுசா பார்க்கிறாங்க.” அதற்குமேல் அம்மா பேசுவதைக் கேட்க அங்கே மகள் நிற்கவில்லை.
“இந்தா, இந்தப் பூவை வெச்சுக்கோ.” சுமதியும் நல்லதாக ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். எப்போதும்போல ஒரு கையில் மெல்லிய தங்க வளையல்கள், கழுத்தில் ஒரு செயின். இதைத்தவிர வீட்டுப் பெண்களிடம் வேறு நகைகள் இல்லை. சரியாக மாலை ஐந்து மணிபோல மாப்பிள்ளை வீடு வந்துவிட்டது. இதில் அதிசயம் என்னவென்றால் ரேவதியும் வந்திருந்தார்.
“வாங்க வாங்க.” வெளியே பெரியவர்கள் வந்தவர்களை வரவேற்க சுமதி அவசரமாகத் தங்கள் அறைக்கு வந்தாள்.
“அக்கா, அந்த ரேவதியும் வந்திருக்கா, பெரியவர் வரலை, சரண் வந்திருக்கான்.”
“மாதவன் சார் வரலையா?”
“இப்பவே மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வருவாங்களா? லூசு மாதிரி பேசுறே!” என்றவள் வெளியே போய்விட்டாள். ஹாலில் மோகன் பேசும் குரல் கேட்டது. சரியாக அப்போது சுமித்ராவின் அலைபேசி சிணுங்கியது. மாதவன்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ…”
“சுமித்ரா…” இன்றுவரை அவள் பெயரை அவன் இப்படி உச்சரித்து சுமித்ரா கேட்டதில்லை. நாடி நரம்பெங்கும் ஊடுருவிய அந்தக் குரலில் மெய்மறந்தவள் போல சில நொடிகள் அப்படியே நின்றிருந்தாள். அந்தச் சில நொடிகளில் அவனும் எதுவும் பேசவில்லை. அவள் உணருவது போல அவனும் உணர்ந்திருக்க வேண்டும். இருவரும் சில நொடிகள் அந்த மௌனத்தை ரசித்தார்கள்.
“அம்மா வந்திருக்காங்க…” என்ன பேசுவதென்று தெரியாமல் அவன்தான் பேச்சை ஆரம்பித்தான்.
“ம்…” உன் அக்காவும் வந்திருக்கிறார்கள் என்று அவள் சொல்லவில்லை.
“என்ன சொன்னாங்க?”
“இப்பதான் வந்திருக்காங்க, நான் ரூம்ல இருக்கேன்.”
“ஓ… இப்ப உன்னை நான் பார்க்கணுமே சுமித்ரா, ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பு.”
“இப்ப வேணாம், யாராவது பார்த்தா தப்பாகிடும்.” என்றாள் சட்டென்று. திடுதிடுப்பென்று தாலி கட்டியதைப் போல இப்போது இங்கே அவன் வந்திறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
“சரி, நீ எடுக்க வேணாம், சுமதிக்கிட்டச் சொல்லு, அவ எடுத்து அனுப்புவா.”
“ம்ஹூம்… அவ உங்க மேல ரொம்பக் கோபத்துல இருக்கா, எங்கிட்டக் கூட பழைய மாதிரி பேசுறதில்லை.”
“ஏன்?” மாதவன் கேட்டுக்கொண்டிருக்கும் போது வெளியே பேச்சுக் குரல்கள் பலமாகக் கேட்டன. சுமித்ராவும் ஒரு கணம் திகைத்துப் போனாள்.
“சுமி, அங்க என்ன சத்தம்?”
“தெரியலைங்க.” என்றவள் அலைபேசியைக் கட்டிலில் வைத்துவிட்டு அப்படியே எழுந்து வந்தாள். அறைக்கதவை இவள் திறக்கும் போது,
“அப்பிடி என்னத்தை நான் தப்பாச் சொல்லிட்டேன்னு நீ இந்த ஆட்டம் போடுறே? பொண்ணு வீடு ரொம்ப சாதாரணமா இருக்கேன்னு அத்தை கேட்டாங்க, அதுக்கு ஆமான்னு நானும் பதில் சொன்னேன்.” ரேவதி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“நாங்க ரொம்ப சாதாரணமான வீடுன்னு தெரிஞ்சுதானே பொண்ணெடுக்க வந்திருக்கீங்க? அதுக்கப்புறம் எதுக்குத் தேவையில்லாத பேச்சு?” இது சுமதி. அவள் முகம் சிவந்து போயிருந்தது. இங்கு நடக்கும் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் மாதவன் அலைபேசி மூலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை சுமித்ரா கூட உணரவில்லை. திடுக்கிட்டுப் போய் நின்றிருந்தாள்.
“தேவையில்லாத பேச்செல்லாம் இங்க யாரும் பேசலை, உண்மையைச் சொன்னா உனக்கெதுக்குக் கோபம் வருது?”
“சுமதி! நீ அமைதியா இரு!” மணிமேகலை இளைய பெண்ணை அடக்கினார்.
“இல்லைம்மா, அவங்க பேச்சு ரொம்பத் தப்பா இருக்கு, எனக்குக் கேட்கணும்னே எகத்தாளமா பேசுறாங்க.”
“நான் எகத்தாளம் பேசுறதுக்கும் உனக்கொரு தகுதி இருக்கணும்மா.”
“ரேவதி!” செல்லம்மாவும் மோகனும் ஒன்றாக அதிர்ந்திருந்தார்கள்.
“போனாப்போகுது, நம்ம தம்பி ஆசைப்பட்டுட்டானேன்னு கிளம்பி வந்தா இங்க பொடிசுங்க எல்லாம் ரொம்பப் பேசுது, இப்பவே இந்த ஆட்டம்னா கொஞ்சம் சொல்லிக்கிற மாதிரியும் இருந்துட்டா, அம்மாடியோவ்!” இந்த வார்த்தைகளில் பெண்வீடு ஆடிப்போனது. சுமித்ராவின் கண்கள் கண்ணீரை வடிக்க ஆரம்பித்தன.
“அம்மா, நீங்க பெரியவீட்டு மனுஷங்கதான், அதுக்காக இப்பிடியெல்லாம் பேச வேணாம், அப்பிடி எம் பொண்ணுங்க எதுலயும் குறைஞ்சு போகலை.” இது ராஜசேகர்.
“சித்தப்பா, ரேவதி தெரியாம பேசிட்டா, நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க.”
“இல்லைப்பா, இவ்வளவு வார்த்தைகள் வந்து விழுந்ததுக்கு அப்புறமும் எம் பொண்ணு உங்க வீட்டுல சந்தோஷமா இருப்பான்னு நான் நினைக்கலை, நீங்க உங்க வசதிக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ணைப் பார்த்துக்கோங்க, எங்களை விட்டுருங்க.” என்றவர் இரு கைகளையும் கூப்பினார்.
“ஐயையோ! நீங்க அப்பிடியெல்லாம் பேசக்கூடாது, இது நம்ம புள்ளைங்களோட வாழ்க்கை, சின்னஞ்சிறுசுங்க ஆசைப்பட்டுட்டாங்க, அந்த ஆசையை நிறைவேத்தி வெக்க வேண்டியது நம்ம கடமை.” செல்லம்மாவின் கண்களும் கலங்கியிருந்தன. விலக்கிவிட்டுப் போகும் உறவா இது? இந்த வீட்டுப் பெண்ணின் கழுத்தில் அவர் மகன் கட்டிய தாலி இருக்கிறதே! அதை அவரே அவர் கண்ணால் பார்த்தாரே!
“இல்லைம்மா, எங்களை மன்னிச்சிடுங்க…” ராஜசேகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த ப்ளாக் ஆடி வீட்டு வாசலின் முன்பாக சர்ரென்று வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய மாதவன் புயல் போல உள்ளே வந்தான். அங்கிருந்த அத்தனைப் பேரும் அவன் வரவை அப்போது எதிர்பார்க்கவில்லை. ரேவதி முகம் வெளுக்க நின்றிருந்தார்.






Super mam, please next episode சீக்கிரமா போடுங்க மேம்❤️
Super ma.