arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 11
சக்கரவியூகம் chevron_right பகுதி 11 / 26

அத்தியாயம் 11

visibility 901
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (13 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தனை சதிராட்டங்களின் காரணம் அதிகாரம்.

அத்தனை சூழ்ச்சிகளின் காரணம் அதிகாரம்.

அத்தனை துரோகங்களுக்கும் காரணம் அந்த அதிகாரம்…

“ஐயோ… போன்…” வாயில் கைவைத்து அதிர்ந்த தமிழை இயல்பாகப் பார்த்தவன்.

“தெரியுமே… ஆமா என் போன் தான்…” என்று கூறினான்.

“இவ்வளவு காஸ்ட்லி போனை… நீங்க…” அவளது அதிர்ச்சி இன்னமும் மாறவில்லை.

“அதனால் என்ன தமிழ்?”

“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சீன் ஆகாது. உள்ள நர்ஸுக்கு ஆயிரம் ருபாய் எடுத்து நீட்டுதே இந்த லூசுன்னு நினைச்சா, இப்ப ஐபோனை குப்பை தொட்டியில் போட்டுட்டு என்னன்னு கேக்கறீங்க? நீங்க என்ன பைத்தியமா ஸ்ரீதர்?” கடுப்பில் வகை வகையாகத் திட்ட வேண்டும் என்பது போலத் தோன்றியது அவளுக்கு!

அவனோ அவளை வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவளை போலப் பார்வையிட்டான்.

“உங்க கிட்ட நிறைய மிதமிஞ்சி இருக்குன்னு என்கிட்டே காட்டவேண்டுமா? அப்படியெல்லாம் இம்ப்ரஸ் ஆகிற ஆள் நான் இல்ல… அதைப் புரிஞ்சுக்கங்க…”

“உன்னை இம்ப்ரஸ் பண்ணி எனக்கு என்ன கிடைக்கப்போகுது?” கிண்டலாக அவன் கேட்டான். அடுத்த வார்த்தையைக் கூற முடியாமல் திணறிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

“அப்ப ஏன் இப்படி எல்லாம் லூசுத்தனம் பண்றீங்க?” எரிச்சலாக அவள் கேட்டாள்.

“நான் லூசா?” என்று அவன் உதட்டில் வழிந்த சிறுப்புன்னகையோடு கேட்டான்.

“இல்லையா பின்ன? இந்த ஜேசெவனுக்கே லோகா கிட்ட எம்புட்டு வாங்கி கட்டிகிட்டேன் தெரியுமா? உங்களுக்கெல்லாம் கேட்பார் யாரும் இல்லை போலிருக்கு… அதான் இந்த விட்டேத்தித்தனம்… இல்லைன்னா தான்தோன்றித்தனம் நிறைய உண்டோ?”

யாருமில்லை போல என்ற அவளது வார்த்தைகள் அவனைச் சுருக்கென்று தைத்தது. ஆனாலும் மனதைத் துக்கத்தில் ஆழ்த்தாமல் தேற்றினான்.

குப்பைத்தொட்டியில் கிடந்த ஐபோன் செவனை ஏக்கமாக வேறு பார்க்கச் சொன்னது அவள் மனம்… ஆனாலும் அவன் முன் அது தலையிறக்கமாகப் போய்விடுமே என்ற பயத்தில் பார்வையை இழுத்துக் கட்டி வைத்தாள்.

“ம்ம்ம்… அறிவுக்கொழுந்தே… போனை வெச்சுதான் என்னை ட்ராக் பண்ண முடியும்…” புருவத்தை உயர்த்தி அவன் கேட்டான். அவள் அவனைக் கிண்டலாக முறைத்தாள்.

“ஆமா இவர் பெரிய அப்பாடக்கர்… அப்படி அப்பாடக்கரா இருந்தாலும் சிம்மை தூக்கி போட்டுட வேண்டியதுதானே?”

“போனுடைய ஐஎம்ஈஐ நம்பரை உங்க அப்பா வந்து மாஸ்க் பண்ணுவாரா?”

“இப்ப எங்க அப்பாவை இழுக்கலைன்னு நான் அழுதேனா?” கோபமாக அவள் கேட்டாள்.

“சரி இழுக்கலை விடு… ட்ராக்கிங் பண்றவங்க போன் ஐஎம்ஈஐ நம்பரை வெச்சுதான் பண்ணுவாங்க… எத்தனை சிம் மாற்றினாலும் ட்ராக் பண்ணலாம்… ஜிபிஎஸ் கோஆர்டினேட்ஸ கண்டுபிடிக்கலாம்… அதுவும் இந்த மாதிரி காஸ்ட்லி போனில் ட்ராக்கிங் ரொம்ப ஈசி… இப்ப சொல்லு… வெச்சுக்கலாமா?” கிண்டலாக அவன் கேட்டான். அவளது முகம் சிறுத்தது.

குரலைச் சற்று தழைத்தவன்,

“நான் தனியா போகும்போது இப்படி நடந்திருந்தா எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுப்பேன் தமிழ்… இப்ப உங்களைப் பத்திரமா கொண்டு போய்ச் சேர்க்கணும்… அதற்கப்புறம் அவனுங்களை கவனிச்சுக்கறேன்.” என்று அவன் பல்லைக் கடிக்க,

அவள் பதிலொன்றும் பேசவில்லை.

“அந்தப் போனை தூக்கிட்டு அலைஞ்சுட்டு இருந்தா நான் இங்க தான் இருக்கேன்னு காட்டி கொடுக்கிற மாதிரி ஆகிடும். உங்களுக்கும் சேர்த்து தான் ரிஸ்க்… அந்த ரிஸ்க் இப்ப வேண்டாம்… இது மாதிரி சந்தர்ப்பத்தில் தயவு தாட்சண்யம் பார்க்காம தூக்கி போடறதுதான் பெட்டர்…” சற்று பொறுமையாகவே அவன் கூற, அவளது புருவம் குழப்பத்தில் முடிச்சிட்டது.

“யாருக்குக் காட்டி கொடுக்கிற மாதிரின்னு சொல்றீங்க?”

“ம்ம்ம் என்னைத் தேடறவங்களுக்கு…” மொட்டையாக அவன் கூறினான்.

“அதான் யாரு?”

“அது உனக்குத் தேவையில்லை தமிழ்…” சிரமப்பட்டுச் சேகரித்து வைத்தப் பொறுமையெல்லாம் பறந்து விடும் போலத் தோன்றியது. எப்போது ஒருமையில் பேசுவான், எப்போது பன்மையில் பேசுவான் என்பதெல்லாம் அவளுக்கும் புரியவில்லை.

“எனக்குத் தெரியனும்… யாரோ உங்களைப் பாலோ பண்றாங்க… ஷூட் பண்றாங்க… நீங்களும் பிஸ்டல் வெச்சுட்டே சுத்தறீங்க… எனக்குத் தெரிந்தே ஆக வேண்டும்…”

“என்ன தெரியனும்? எதற்குத் தெரியனும்?” கோபமாக அவன் கேட்டான்.

“நீங்க யாரென்று தெரியனும்… நிஜமாகவே நீங்க நல்லவங்க தானா இல்லையான்னு தெரியனும்… ஒருத்தரைக் கொலை செய்கிற அளவுக்கு ஒரு கூட்டம் அவரைத் தேடுதுன்னா அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு கூடத் தெரியாம…” என்று இடைவெளி விட, அவளது மனம் தவித்தது. இவன் எத்தகையவன் என்பதை அறியாமல் தனது மனம் வேறு பேதலித்துக் கொண்டிருக்கின்றதே!

“நான் நல்லவனா கெட்டவனான்னு தெரிந்து என்ன பண்ண போற? உன்னைக் கொண்டு போய் உங்க வீட்டில் விட்டா அப்புறம் நீ யாரோ நான் யாரோ தமிழ்…” வெட்டிவிட்டார் போல அவன் பேச… தமிழ் தான் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“யாரோவா?” வார்த்தைகள் அவளது தொண்டைக்குள் சிக்கப் பார்த்தன.

“ம்ம்ம்… அந்த யாரோவுக்கு என்னவானா என்ன? உன்னுடைய லைப் இதுதான்னு உனக்கு முடிவு செய்ய உங்க அம்மா அப்பா இருக்காங்க… அவர்கள் சொல்றதை கேட்டுட்டு நல்ல பொண்ணா கல்யாணம் செய்துகொண்டு புருஷன் கூடக் குடும்பம்…” என்று வலியோடு இடைவெளி விட்டவன், “நடத்து…” என்று முடித்தான்.

அவனது மனதுக்குள் அணுகுண்டு வெடித்தது போலிருந்தது.

ஆனால் அவளுக்கும் அவனுக்குமான உறவு என்பது அவ்வளவே!

ஸ்ரீதரனுக்கு வேறு வழியில்லை.

அதிலும் புலியின் வாலைப் பிடித்து விட்ட தன்னை புலி எப்போது வேண்டுமானாலும் அடித்து விடக்கூடும்.

இந்தக் குழப்பங்கள் அவளுக்குத் தேவையில்லாத ஒன்று என்று யோசித்தவன் எதுவும் பேசாமல் காரை நோக்கிப் போக, அவனது கையைப் பற்றினாள் தமிழ்நதி.

“அவ்வளவுதானா?” அவளது குரல் நடுங்கியது. எல்லையைத் தாண்ட முடியாத நிலையில் அவளிருப்பதை ஐயம் திரிபற அவள் உணர்ந்தாலும் அவனது அந்த வார்த்தைகளை அவளால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“பின்ன… வேறென்ன?” அவனாவது உண்மையினை உரைத்தானா என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

அவனிடமிருந்து உண்மை எதுவுமே வரப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். தன்னிடமிருக்கும் அந்த ஈர்ப்பு அவனிடமிருந்தால் எதையும் மறைக்க வேண்டும் என்ற தேவையிருக்காதே.

நடுங்கும் உதடுகளைக் கட்டுப்படுத்த முயல… அது தோல்வியில் முடிந்து கண்களில் கண்ணீர் தேங்கியது. சிரமப்பட்டு அவள் கண்ணீரை உள்ளிழுப்பதைப் பார்த்தவன்,

“அழுகை எதற்குமே தீர்வாகாது…” வேறு புறம் பார்த்துக் கொண்டு கூறினான்.

“எனக்கு வலிக்குது. அழுகாச்சியா வருது. அதைப் பற்றி உங்களுக்கு என்ன?” கண்களைத் துடைத்துக் கொண்டு ரோஷமாக அவள் கூறினாள்.

“ஆமா எனக்கென்ன…” என்று கூறியவாறே காரில் ஏறப்போக, நன்றாக விடியத் துவங்கியிருந்ததில் சுற்றுப்புறம் தெளிவாகத் துவங்கியிருந்தது.

அப்போதுதான் அந்தக் காரைத் தெளிவாகப்பார்த்தாள்.

இதுவரை இரவின் தாக்கத்தில் தெளிவாகப் பார்க்கவில்லை அவள். அதோடு பார்க்கும் எண்ணமும் வரவில்லை. பெரிதாக நினைக்கவுமில்லை.

ஆனால் விடிந்தபின் தெளிவாகியது.

அது அவர்களைப் போன்ற மத்திய வகுப்பினர் தள்ளி நின்று ரசிக்கும் பிஎம்டபுள்யூ!

அவளைப் பொறுத்தவரை அது அப்படிதான். பிஎம்டபுள்யூ, ஆடி, ஜாகுவார் ரக கார்களெல்லாம் அவர்களைப் போன்ற விவசாய குடும்பங்களுக்கு எட்டாத ஒன்று தான். அவளது குடும்பம் பெரிய குடும்பமே தவிரத் தேவை இல்லாமல் ஒரு ஆடம்பரத்தையும் செய்ததில்லை.

ஃபேஷன் டிசைனிங் தான் தனது வேலை என்றான பின் தான் இப்படியெல்லாம் ஆடம்பர கார்கள் இருக்கின்றன என்பதை அவள் அறிந்ததும்.

உள்ளுக்குள் அதிர்ச்சியாக இருந்தது. கால் டாக்சியாக உபயோகப்படுத்துவார்களா என்று! அதையும் உபயோகப்படுத்த ஒரு கூட்டம் உள்ளது. அது இந்திய மக்கள் தொகையில் ஒரு மிகச்சிறிய அளவே என்பதெல்லாம் அவள் அறியாத ஒன்று!

கண்டிப்பாக இல்லை என்று தான் தோன்றியது அவளுக்கு!

இவன் டிரைவர் என்று தான் இது வரைக்குமே நினைத்திருந்தாள்.

உண்மையில் இவன் யார்?

“தமிழ் சீக்கிரம் காரில் ஏறும்மா… இட்ஸ் கெட்டிங் லேட்… பக்கத்தில் தான் பெட்ரோல் பங்க் இருக்காம்… போட்டுட்டு போகணும்…” அசையாமல் மருத்துவமனை வாசலிலேயே நின்று கொண்டிருந்தவளை பார்த்து அழைத்தான்.

அவளது முகத்தில் கோபச்சூடு!

கால்வலி வேறொரு பக்கம்… மாற்றி மாற்றிக் கிடைத்த அனுபவங்களால் தலைவலி ஒரு பக்கம்.

மூச்சு விடுவதும் சிரமமாக இருந்தது.

வெறுமையாக அவனைப் பார்த்தவள் அவள் அமர்ந்திருந்தப் புறத்திற்கு வந்தாள்.

கதவைத் திறந்து தன்னுடைய ஹேன்ட் பேகை எடுத்துக் கொண்டவள், “கொஞ்சம் டிக்கிய திறந்து விடுங்க…” அமைதியாகக் கூறினாள்.

“ஏன்?” அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி அவன் கேட்டான்.

“நான் இங்க இருந்து பஸ் பிடித்துப் போய்க்கறேன்.”

“எதற்கு?” இறுக்கமாக அவன் கேட்டான்.

“பிஎம்டபுள்யூல போய் இறங்கற அளவு நான் பெரிய ஆள் இல்லை.”

“நைட் முழுக்க இதில் தானே வந்த? அப்ப மட்டும் பெரிய ஆளா?”

“கவனிக்கலை… எனக்குத் தெரியலை…” அவனைப் பார்க்க ப்ரியம் இல்லாமல் வேறு புறம் திரும்பிக்கொண்டு கூறினாள்.

“இப்ப மட்டும் என்ன தெரியும் தமிழ்? சும்மா பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாதே… இருக்கிற டென்ஷனை இன்னும் கொஞ்சம் ஏத்தி விடாதே…”

“நான் உங்களை டிரைவர்ன்னு நெனச்சேன்…” உதட்டைக் கடித்து கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு கூறியவளின் கண்களில் கண்ணீர்.

“சரி அதனால் இப்ப என்ன?” அவளது உணர்வுகள் அவனுக்குப் புரியவில்லை.

ஆனால் அவளது மனம் தான் கிடந்தது அடித்துக்கொண்டது.

“உங்களை எப்படி நம்பறது? நம்பணும்னு நினைத்தாலும் முடியலை… பயமா இருக்கு…”

ஸ்ரீதரின் மனதில் சுருக்கென்று தைத்த வலி, பல்கிப் பெருகி வியாபித்துக் கொண்டிருந்தது.

“சரிம்மா… என்னை நம்ப வேண்டாம்… உங்களுக்கு என்ன? பஸ்ல தானே ஏற்றி விடனும்?” என்று மீண்டும் பன்மைக்கு தாவ… அவள் அவன் புறம் திரும்பக்கூட இல்லை.

திரும்பி அவனைப் பார்த்தால் அழுது கரைந்து விடுவோம் என்ற பயம் அவளுக்கு! ஆனால் அதைப் பார்த்த அவனுக்கு இதயம் ரணமானது!

“காரில் ஏறுங்க தமிழ்… போற வழில நானே பார்த்து ஏத்தி விட்டுடறேன். அதுக்கு முன்ன டீசல் போட வேண்டும்…” பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு அவன் கூறினான்.

“வேண்டாம்…” பிடிவாதமாகக் கூறினாள்.

“நான் பொறுமையானவன் எல்லாம் கிடையாது. கோபப்படுத்தாம ஏறுங்க… பார்த்திபனுக்கு நான் தான் பதில் சொல்லணும்… கொண்டு போய் உங்களைப் பத்திரமா சேர்த்துடறேன்.” கோபத்தில் பற்களைக் கடித்து கொண்டு அவன் கூறினான். அவள் கண்கள் குளமாகியது!

மௌனமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே அமர்ந்தாள்.

அவளைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் காரை ஸ்ட்ராட் செய்தான்.

அவளது கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத கோபம் அவளுக்கு… பதில் சொல்ல முடியாத கோபம் அவனுக்கு!

இதற்கான பதிலை யார் அறிய முடியும்?

சுற்றுப்புறத்தை நோட்டமிட்டுக் கொண்டே யாராவது தொடர்கின்றனரா என்று பார்த்துக் கொண்டே ஸ்ரீதரன் காரை ஓட்டிக் கொண்டிருக்க, தமிழ் தன்னுடைய கைப்பேசியில் பார்த்திபனுக்கு அழைக்க முயன்று தோற்று கொண்டிருந்தாள்.

அந்த விடியற்காலையில் அவன் விழிப்பது முடியாத செயல் என்று அவனது கைப்பேசியை ஆப் செய்து விடுவான் என்பதை மறந்து விட்டுத் தொடர்ந்து முயன்றாள்.

“ச்சே…” கைப்பேசியை பார்த்துக் கொண்டே எரிச்சலாக அலுத்துக்கொண்டவளை திரும்பிப் பார்த்தான் ஸ்ரீதர்.

“யாருக்கு ட்ரை பண்ற தமிழ்?” சற்றே அவனது கோபம் தணிந்திருந்தது.

“பார்த்திபனுக்கு… யூஸ்லெஸ் பெல்லோ… எருமை… என்னை ஒரு சைக்கோ கிட்ட மாட்டி விட்டுட்டு நிம்மதியா தூங்கிட்டு இருக்கான் அவன்…” அவனிடம் பதிலைக் கூறாமல் தனக்குத் தானே கூறிக்கொள்வது போலக் கடுகடுக்க, மெல்லிய புன்னகை படர்ந்தது அவனது முகத்தில்…

“நான் சைக்கோவா?” சிரித்தபடியே கேட்ட அவனை முறைத்துப் பார்த்தாள் தமிழ்.

“நான் உங்க கிட்டப் பேச விரும்பலை…” அதே இறுக்கத்தோடு அவள் கூற, சிறுப்பிள்ளை போலத் தோற்றமளித்தாள் அவனுக்கு!

“இன்னும் பார்த்துக்க போறது கொஞ்ச நேரம் தான். அதுக்குள்ள இவ்வளவு சண்டை போடவேண்டுமா? நாம ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?” இறுக்கம் கலைந்து, சற்றே நல்ல மனநிலையில், உதட்டில் ஒட்டிக்கொண்ட இயல்பான புன்னகையோடு அவன் கேட்டான்.

“யார் என்னன்னு தெரியாதவர்கள் கூடவெல்லாம் நான் ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கறது இல்லை.” அப்போதும் அவனைப் பார்க்காமலே அவள் பதில் கூறினாள்.

“சரி… நான் ஸ்ரீதரன் வெர்மா… டேக்சி பார் யூ ங்கற இந்தச் சின்னக் கால் டேக்சி நிறுவனம் நடத்திட்டு இருக்கிறேன். மலையாளி, தட் இஸ் உன்னைப் பொறுத்தவரை கொலையாளி. அல்லே?” என்று சிரிக்க அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.

டேக்சி பார் யூ சிறிய நிறுவனமா?

அதைக் கேட்டும் விட்டாள்.

“என்ன அது சின்ன நிறுவனமா?”

உள்ளுக்குள் மலைப்பாகத்தான் இருந்தது.

ஏனென்றால் சென்னையில் வெளியே போகும் போதெல்லாம் பத்து டிஎப்யூ வண்டிகளையாவது பார்க்காமல் அவள் திரும்பியதில்லை. தோழிகள் வெளியே போவதென்றால் டேக்சி புக் செய்வதும் டிஎப்யூவில்தான்.

“ஒரு நூறு டேக்சி தான் நம்ம சொந்த வண்டி தமிழ்… மற்றது எல்லாம் நம்ம கூட டை அப்ல இருக்க டேக்சிஸ்…” என்றவன். சற்று இடைவெளி விட்டுவிட்டு,

“மூன்று வருஷத்துக்கு முன்ன ஆலப்புழையை விட்டுச் சென்னை வந்தபோது எனக்கு எந்தக் குறிக்கோளும் இல்லை தமிழ்… ஆனால் இங்க வர வேண்டிய கட்டாயம்… அங்க இருக்க முடியாத சூழ்நிலை… என்ன செய்றதுன்னு யோசிச்சப்ப பார்த்திபன் தான் இந்த ஐடியா கொடுத்தான். அப்ப வெறும் அஞ்சு டேக்சியோட ஆரம்பித்தேன்… டிரைவர் இல்லைன்னா நாம தான் போயாகனும்… அப்படித்தான் பார்த்தி உனக்காகக் கேட்டப்ப நானே வந்தது. அதோடு எனக்கும் மதுரையில் வேலை இருந்தது. அந்த வேலையும் பார்த்துடலாம்ன்னு வந்தேன். சோ என் வண்டியை எடுத்துட்டு வந்தேன்…” என்று இடைவெளி விட, அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழ்.

அவனிடம் ஏதும் பொய்மை தெரிகிறதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள் போலும்!

“என்ன தமிழ் என்னையே சைட்டடிச்சுட்டு இருக்க?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“ஆமா… இவர் அப்படியே மன்மதன்… இவரைச் சைட்டடிக்க நாங்க காத்துகிட்டு இருக்கமாக்கும்?” அவள் உதட்டைச் சுளித்துக்கொண்டாள். அதைக் கேட்டவனுக்கு புன்னகை விரிந்தது.

“சரி நான் சொல்லிட்டேன். இனிமே இரண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்… ஓகே வா…”

“உங்க பிசினஸ் ஓகே… நீங்க யார்ன்னு சொன்னீங்க ஓகே… ஆனால் ஏன் உங்களைக் கொல்றதுக்கு க்ரூப்பா அலையறாங்க? நீங்களும் பிஸ்டல் வெச்சிருக்க அளவுக்கு என்ன விஷயம் இருக்கு?”

குறிப்பாக அவள் முக்கியமான பாயிண்ட்டை பிடித்து விட, அவனது சிரிப்புத் துணி கொண்டு துடைத்தது போலத் துடைக்கப்பட்டு இறுக்கம் வந்தமர்ந்தது.

சரியாகப் பெட்ரோல் பங்க்கும் வந்துவிட, அதற்குப் பதில் கூறாமல், “டேங்க்கை நிரப்பிடுப்பா…” என்று அவனது கார்டை எடுத்து அங்கிருந்த ஒருவனிடம் கொடுக்க, கார்டை பெற்றுக்கொண்டான் அவன்!

டேங்க்கை அவன் நிரப்பிக்கொண்டிருக்கும் போதே, “இங்க பக்கத்தில் சாப்பிட நல்ல ஹோட்டல் இருக்கா தம்பி?” என்று அவனிடம் கேட்டான்.

“இருக்குண்ணே… இன்னும் ஒரு கிலோமீட்டர் போனா பஸ்ஸ்டான்ட் பக்கத்தில் ஆரியபவன்னு ஒரு ஹோட்டல் இருக்கு… டிபன் நல்லா இருக்கும்” என்று அவன் கூறினான்.

“தேங்க்ஸ் தம்பி…” என்று அவனிடம் கார்டை வாங்கியபடி உள்ளே அமர்ந்தான்.

அதே நேரத்தில்,

கேரளத்தின் திருவல்லாவில்…

“எடா பட்டி… இப்போளும் அவனே திரேயிக்கியானு?( இன்னுமாடா அவனை தேடிகிட்டு இருக்கீங்க?)” மலையாளத்தில் அதீத கோபத்தில் யாரிடமோ போனில் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன்.

அவன் ஸ்ரீ வாமனன் வெர்மா.

“சேட்டா… நீங்கச் சொன்ன இடத்துக்கு வந்து பார்க்கிறதுக்குள்ள ஆளையும் காணோம் காரையும் காணோம்… ஆனால் போன் சிக்னல் அங்க தான் இருக்குன்னு நீங்கச் சொல்றீங்க?”

“ஆமா… அங்கதான். ஒழுங்கா தேடிப்பாருங்கடா…”

“இல்ல சேட்டா… அவன் அந்த ஹாஸ்பிட்டல்ல இல்ல… அதோடு அவனுடைய ஒய்ப் அவன் கூட இருக்கா… அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்ணிட்டு போனதா அங்க இருந்த நர்ஸ் சொன்னா…”

அவன் அந்த நர்ஸிடம் வாங்கிய விஷயத்தைப் போனில் கூற, மறுபுறம் அலறியது.

“என்னடா சொல்ற? ஒய்ப்பா? எப்படி? நமக்குத் தெரியாமல் எப்போது நடந்துது இது?” அவனது கட்டுப்பாட்டையும் மீறி அவன் கத்த… இங்கே பேசிக்கொண்டிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஸ்ரீதரனையும் தமிழையும் அவ்வளவு அன்யோன்ய தம்பதிகளாக அந்த நர்ஸ் அவனிடம் கூறி சிலிர்த்திருந்தாள், சித்தரித்திருந்தாள்.

“தெரியவில்லை சேட்டா…” அப்பாவியாக அவன் பதில் கூறினான்.

“ச்சை… உன்னையெல்லாம் நம்பி… நான் உருப்பட்ட மாதிரிதான். உருப்படியா லாரிய விட்டும் அடிக்கத் தெரியல… நேரா போய் ஷூட் பண்ணுடான்னா விட்டுட்டு வந்து நிக்கறான்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு அவசர நோட்டிபிகேஷனாக வந்த செய்தியைப் பார்த்து ஆனந்தக்கூத்தாடினான்.

“அடேய்… மாவேலிக்கர மாதவக்குட்டி… அந்த ஸ்ரீதரன் அங்க தா இருக்கிறான். நீ இருக்க இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தள்ளி ஒரு பெட்ரோல் பங்க் உண்டு… அங்க அவனுடைய கார்டை ஸ்வைப் பண்ணிருக்கிறான். சீக்கிரம் போ…” என்று அந்த வாமனன் விரட்ட, மாதவக்குட்டி தலைதெறிக்க ஓடிக் காரை ஸ்டார்ட் செய்தான்.

எப்படியாவது வாமனனிடம் நல்ல பெயரை வாங்கிவிடும் குறிக்கோள் மட்டுமே அவனுக்கு.

திருவல்லா எம்எல்ஏ வின் கடைக்கண் பார்வை பட்டால், தான் அங்கே சாதிக்கும் விஷயங்கள் அநேகம் என்பது அவனுடைய கணக்கு!

ஸ்ரீதரன் வெர்மாவை மட்டும் தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டால் தன்னுடைய வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமே!

மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பர்.

இங்குக் காலம் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தில் ஆடு யார் புலி யார் என்பதை வாமனன் முடிவெடுத்து விடக்கூடுமோ?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 12

நீ அரசியலை உன் தொழிலாகத் தேர்ந்தெடுத்து விட்டுப் பின்னர் நாணயமாக இருக்க முடியாது. -லூயி மெக்ஹென்றி ஹோ அடிபட்டதால் உடல் வலி அதிகமாக இருந்தது. பெய்ன் கில்லர் கொடுத்திருந்தாலும் தமிழ்நதியால் உடல் வலியைத் தாள முடியவில்லை. கால்களை நீட்டிச் சற்று ஓய்வெடுத்தால்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘🥳🥳🥳🥳🥳🥳😍😍😍🥳🥳🥳🥳🥳🥳

உங்கள் கருத்தைப் பகிருங்கள்