arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 12
சக்கரவியூகம் chevron_right பகுதி 12 / 26

அத்தியாயம் 12

visibility 906
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (13 மதிப்பீடுகள்)
பகிர்

நீ அரசியலை உன் தொழிலாகத் தேர்ந்தெடுத்து விட்டுப் பின்னர் நாணயமாக இருக்க முடியாது.

-லூயி மெக்ஹென்றி ஹோ

அடிபட்டதால் உடல் வலி அதிகமாக இருந்தது. பெய்ன் கில்லர் கொடுத்திருந்தாலும் தமிழ்நதியால் உடல் வலியைத் தாள முடியவில்லை. கால்களை நீட்டிச் சற்று ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் தான். ஆனால் இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமே இல்லை என்பது அவளுக்குப் புரிந்துதானிருந்தது.

“தமிழ்… கொஞ்சம் பொறுத்துக்க, பஸ்ஸ்டான்ட் கிட்ட ஹோட்டல் இருக்காம்…”

தமிழின் முகத்தில் அவஸ்தை வெளிப்படையாகத் தெரிந்தது.

“என்னம்மா… என்ன பண்ணுது?” அவனது மனம் உருகிப்போனது. இவள் தனியாகச் சென்றிருந்தால் இப்போது அவளது வீட்டிற்கே போயிருக்க கூடும். தன்னோடு வந்த காரணத்தால் எத்தனை இடர்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தபோது மனம் வருந்தியது.

“ம்ம்ம்… கொஞ்சம் ரெஸ்ட் ரூம் போகணும்…”

சொல்வதற்கு மிகவும் சங்கடப்பட்டு தலையைக் குனிந்து கொண்டே மெல்லிய குரலில் அவள் கூறினாள்.

“ஸ்ஸ்ஸ்… சரி சரி…” என்று அவன் தலையாட்டி விட்டு, “தமிழ், உன்னுடைய போனில் பாரேன்… இங்க ஏதாவது லாட்ஜ் இருக்கான்னு…” என்று கேட்டான்.

“லாட்ஜா?” மிரண்டு போய் அவள் கேட்டாள்.

“ம்ம்ம்… இங்க நல்ல லாட்ஜ் எதுவும் இருக்க மாதிரி தெரியலை… ஜஸ்ட் ஏதோ இருந்தா கூடப் போதும்… அப்படி ஏதாவது இருக்கான்னு பார்…” அவன் இயல்பாகத்தான் கேட்டான். அவளுடைய கண்கள் தான் பதட்டத்தில் அலைபாய்ந்தன.

“லாட்ஜெல்லாம் ஒன்றும் வேண்டாம்…” திக்கித்திணறி அவள் கூறினாள்.

“இதில் என்ன இருக்கு? ஜென்ட்ஸ் எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக முடியும். லேடீசை அப்படி எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்ல முடியாது…” அவன் தன் மனதில் பட்டதை கூற, அவள் முற்றிலுமாக மறுத்தாள்.

“நோ… நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்… லாட்ஜ் வேண்டாம்…”

“தமிழ்… உளறாதே… உனக்கு வேற காலில் அடிபட்டிருக்கு… பெய்ன் கில்லர் அன்ட் ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்து இருக்கு… ஒரு ஒன் ஹவர் ரெஸ்ட் எடுக்கணும்மா நீ…”

குழந்தைக்குச் சொல்வதை போலப் பொறுமையாக அவன் கூறினான். அவளோ ஒப்புக்கொள்ளவே முடியாது எனப் பிடிவாதமாக மறுத்தாள்.

“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற தமிழ்? நான் தான் கூட இருக்கேன்ல…” அவனுக்குச் சற்றும் புரியவில்லை. எதற்கெல்லாம் பிடிவாதம் பிடிப்பது என்று அளவில்லை?

“இல்ல… ஒரு ஆளோடு லாட்ஜ்ல தங்கினேன்னு தெரிஞ்சுது, என்னை லோகாம்பா தோலை உறிச்சு உப்புக்கண்டம் போட்டுடும். செத்தேன்…”

கண்களில் அவள் கூறியதற்கான பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த அச்சம் அவளைச் சீண்டிப்பார்க்க சொன்னது.

“அதான் நீ இங்க இருக்கியே… உங்க அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக்கலாம்…” கள்ளப்புன்னகையோடு கூறினான். கண்கள் தெறித்து விடும் போல அவனை முறைத்தாள்.

“வாட்… எவ்வளவு தைரியம்… பெற்றவர்களை ஏமாற்ற சொல்றீங்களே… உங்களுக்கு ஷேமா இல்ல?”

“இதில் என்ன இருக்கு? அவங்களுக்கு தெரிஞ்சாதானே திட்டுவாங்க… தெரியாமல் போலாம்ன்னு சொன்னேன்… இது ஒரு குற்றமா யுவர் ஆனர்?” என்று அவன் கண்ணடிக்க.

அவனை முறைத்துவிட்டு பல்லைக் கடித்து கொண்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

“என்ன இங்கிலீஷ்… அவ்வளவுதானா உன்னுடைய ரியாக்ஷன் எல்லாம்? நான் இன்னும் எக்ஸ்பெக்ட் பண்ணேனே…” முழுவதுமாக அவளைக் கலாய்க்கும் மூடுக்கு வந்திருந்தான் ஸ்ரீதரன்.

தன்னை மட்டும் இங்கிலீஷ் என்று கலாய்க்கிறானே… இவனை என்ன சொல்லிக் கலாய்ப்பது என்று தீவிர யோசனையில் இறங்கினாள்.

அவளுக்கு அப்போதைக்கு எதுவும் தோன்றாமல் அவனை முறைக்க மட்டும் தான் முடிந்தது.

“வேண்டாம்… என்னைக் கொலைகாரி ஆக்காதீங்க… நான் எந்த ரெஸ்ட் ரூமுக்கும் போகலை… என்னை முதலில் பஸ் ஏத்தி விடுங்க…” சந்தைக்குப் போனும் ஆத்தா வையும் காசு கொடு என்று சப்பாணி கூறுவது போல அதையே அவள் மீண்டும் மீண்டும் கூறினாள். அவனுக்குத் தான் சிரிப்பை அடக்க முடியாமல் போயிற்று!

“சரி சரி… மறுபடியும் அழுகாதே…” என்றவன் அந்தப் பச்சை பசுமையாக இருந்த பிரதேசத்தில் காரைக் கொண்டு போய் நிறுத்தினான்.

அது என்ன இடமென்று கண்களால் தமிழ் துழாவ, அது ஒரு ரிசார்ட் போலத் தோன்றியது. காலைச் சூரியனின் தூரிகை அப்போதுதான் வரைந்திருந்தது போல… இடம் கொள்ளை அழகு!

“இன்னும் கொஞ்சம் போனா திருவண்ணாமலை வரும் போல… இது ரிசார்ட்…”

“இங்க எதற்கு வந்திருக்கிறோம்?” கலக்கமாக அவள் கேட்டாள்.

“நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம் தமிழ்… ஐ ஆம் டேம் டயர்ட் மா… ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட்… நான் ப்ரொபஷனல் டிரைவர் கிடையாது…” வார்த்தைகளில் எவ்வளவு சோர்விருந்ததோ அதைக் காட்டிலும் அவன் முகம் அதிகமான சோர்வை பிரதிபலிக்க,

“ம்ம்ம்…” என்று ஒப்புதலாகத் தலையசைத்தாள் சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி. இது எங்குச் சென்று முடியுமென்று தெரியவில்லை.

கடவுளே காப்பாற்று என்று அந்த நேரத்திலும் ஒரு கோரிக்கையை வைத்தாள்.

ஒவ்வொரு தனித்தனி குடிலாக இருந்தது. சுற்றிலும் அழகு அள்ளியது! ஒவ்வொரு குடிலை சுற்றிலும் சிறு தோட்டம்… கூழாங்கல் பாதை… ஆங்காகே பவுன்டெயின் அமைக்கப்பட்டு அந்த நீரோட்டம் வேறு செவிக்கு இதமாக இருக்க, காலை நேரத்துப் பறவைகளின் ஒலியில் அந்த இடமே அவ்வளவு ரம்யமாகக் காட்சி தந்தது. அவளது ரசிக மனம் அத்தனையும் உள்வாங்கிக்கொண்டது. அத்தனை பிரச்சனைகளையும் மீறி!

பச்சைப்பசேலென்ற அந்தச் சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது. வலியும் கூடக் குறைந்தது போன்ற பிரமை. பசி வயிற்றைக் கிள்ளியது. தூக்கமோ கண்களை அழுத்தியது. எதையும் பார்க்காமல் ஓடிச் சென்று படுக்கையில் கவிழ்ந்து விடலாம் போலத் தோன்றியது.

காரை விட்டு ஸ்ரீதரன் இறங்க, அவனைத் தொடர்ந்தாள் தமிழ்நதி… இருளில் அவள் கவனிக்காத அவனது கம்பீரம் தமிழ்நதி இப்போது கவனித்தாள். அவ்வளவு அழுத்தமான தன்மை, பார்வையில் கூர்மை. நிமிர்வான அந்த நடையைப் பார்த்தபோது அவனது ஆளுமையை உணர்ந்தாள்.

அவனது அந்தத் தாடியைத்தான் அவளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. ட்ரிம் செய்திருந்தாலாவது தேவலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தாள். ஆனால் அவனது அந்தத் தாடி தான் அவனது அத்தனை குறும்புத்தனத்தையும் மறைத்து வைத்துக் கொள்கிறது என்றும் எண்ணிக்கொண்டாள்.

எப்படியெல்லாம் கலாய்க்கிறான் பாவி!

சீரான நடையுடன் அந்த ரிசப்ஷனை நெருங்க, அங்கிருந்த அந்தப் பெண் நிமிர்ந்துப் பார்த்து,

“ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ சர்?” என்று கேட்டாள். அவளது பார்வை அவனை மொய்த்தது. அவ்வளவு சுவாரசியம் அந்தப் பெண்ணின் கண்களில். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த தமிழுக்கு காரணம் தெரியாமல் கோபம் வந்தது. ஏன்? எதற்காக இந்த எரிச்சல்? என்று கேள்வி கேட்டது மனம்.

“மே ஐ ஹேவ் டூ ரூம்ஸ் ப்ளீஸ்…” ஸ்டைலான ஆங்கிலத்தில் அவன் கேட்டு வைக்க, அதில் வேறு தமிழின் எரிச்சல் அதிகமானது. இவன் சீன் காட்டவில்லை என்று யார் அழுததாம்?

“வாட் டைப் ஆப் ரூம் சர்?” பின்னால் நின்றிருந்த தமிழை பார்த்தவாறு அவள் கேட்டாள்.

“டூ சிங்கிள்…” என்று கூறியதில் அவளது முகம் லைட் போட்டார் போலப் பளிச்சென்று ஆனது.

“சாரி சர்…! ஒன்லி தி சூட் ரூம் அவைலபிள்… ஆர்… யூ ஹேவ் டூ டேக் டேக் டபுள் ரூம்… சிங்கிள் ரூம் நாட் அவைலபிள் சர்…!” சற்று வருத்தமாகத் தான் கூறினாள். அதையெல்லாம் உணர்ந்தானா இல்லை, தான் தான் உணர்கிறோமா என்பது அவளுக்குப் புரியவில்லை.

கேள்வியாகத் தமிழை அவன் பார்க்க அவளது பார்வையிலும் குழப்பம்.

“என்ன தமிழ்? இரண்டு டபுள் ரூம் எடுத்துக்கலாமா?” என்று கேட்டான்.

“எவ்வளவு ஆகும்?” அவனிடம் கிசுகிசுப்பாக அவள் கேட்டாள். அவளையே பார்த்த அவன் குறும்பு புன்னகையோடு,

“என்ன ஒரு இரண்டு லட்சம் ஆகுமாம்… ஓகே வா? குடுக்கறியா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“ம்ம்ம் ஆசை தோசை…”

“எனக்கு ஆசையும் வேண்டாம் தோசையும் வேண்டாம்… உன்னுடைய கார்டை கொடு போதும்…” சிரித்துக் கொண்டே அவன் கேட்டான்.

“ம்ம்ம்…” கண்களை விரித்து உறுத்து முறைத்தாள்.

“ஏன் அதுக்கு கண்ணகி தேவியாட்டம் முறைக்கிற? யக்ஷி வந்து முன்னாடி நிக்கற மாதிரி இருக்கு…” கண்களில் சிரிப்போடு அவன் கூறினான்.

“இருக்கும் இருக்கும்…” அவள் முறைப்பைக் கைவிடாமல், “சரி எவ்வளவு ஒரு ரூமுக்கு?” என்று மீண்டும் கேட்டாள்.

“பைவ் ப்ளஸ் பைவ்…” என்று கூறிவிட்டு மிகவும் இயல்பாக அவளது கைப்பையை திறந்தான்.

“ஹலோ என்ன என்னுடைய பேகை திறக்கறீங்க?” அவனிடம் சண்டைக்கு நின்றவளைப் புன்னகையோடு பார்த்தவன்,

“ஒரு பத்தாயிரம் என்னை நம்பிக் கொடுக்க மாட்டியா?” குரலில் குறும்பு சற்றும் குறையாமல் அவன் கேட்டான்.

“மாட்டேன்…” தீர்மானமாக அவள் கூறினாள்.

“திருப்பி உனக்கு இரண்டு பங்கா கொடுத்துடறேன்னு சொன்னாக்கூட கொடுக்க மாட்டியா?” இன்னமும் அவனது குரலில் குறையாத விளையாட்டுத்தனத்தை உணர்ந்தவள்,

“விளையாடாதீங்க…” என்று சலித்துக்கொண்டாள்.

“நிஜமாகவே உன்னுடைய கார்ட்டை கொடு தமிழ்… காரணமாகத்தான்…” சீரியசான குரலில் கேட்டான். அவளும் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு அவளது டெபிட் கார்டை அவனிடம் கொடுத்தாள்.

“பணம் இருக்கா? இல்ல மொத்தமா ஷாப்பிங் பண்ணி காலி பண்ணிட்டியா?” அவன் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“ம்ம்ம்… நான் அதிகமா செலவு செய்றது இல்ல… கொஞ்சம் கஞ்சம் தான்…” உதட்டைச் சுளித்து கொண்டு அவள் கூறினாள்.

“பரவால்லையே… நல்ல பொண்ணு…” என்று அவளுக்குச் சர்ட்டிபிகேட்டை கொடுத்துவிட்டு ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தமிழின் டெபிட் கார்டை நீட்டினான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரிசப்ஷன் பெண்ணின் சுவாரசியம் அதிகமாகியிருந்தது.

ஏனோ உள்ளுணர்வு அவனை எச்சரித்து இருந்தது. தான் முதலில் பெட்ரோல் பங்கில் கார்டை உபயோகப்படுத்தியதே தவறு என்று கூறியது.

அரசாங்கத்தின் அத்தனை துறைகளையும் உபயோகித்துக் கொண்டு தன்னை துரத்திக் கொண்டிருக்கும் வாமனன் தன்னுடைய கார்டை மட்டும் எப்படி விட்டு வைப்பான்.

கண்டிப்பாக விட்டு வைக்கமாட்டான் என்று மீண்டும் மீண்டும் உள்ளுணர்வு எச்சரிக்கவும் தான் தமிழின் டெபிட் கார்டை உபயோகப்படுத்தினான்.

“ஒரே ஒரு டபுள் ரூம் போதும்… கொஞ்ச நேர ரெப்ரெஷ்மென்ட் தானே…” சிறியதாகிவிட்ட குரலில் அவள் கூற, அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

“என்ன திடீர் மாற்றம்? அப்புறம் அது போச்சு இது போச்சுன்னு என்னைக் குற்றம் சொல்லக் கூடாதாக்கும்…” குறும்பு கிருஷ்ணனாக அவன் கூறினான்.

“எது போச்சுன்னு?” புரியாமல் அவள் கேட்டாள்.

“புரியாத வரைக்கும் சந்தோஷம்…” என்று அவன் கண்ணடிக்க, அவள் தன்னுடைய கைப்பையால் அவனுடைய முதுகில் இரண்டு அடி வைத்தாள்.

சிரித்தவாறு அறைகளைப் பதிவு செய்துவிட்டு தங்களுடைய குடிலை நோக்கிச் சென்று கொண்டே,

“தன்னுடைய பணமென்றால் மட்டும் எவ்வளவு கருத்து இந்தப் பொண்களுக்கு…” சிரித்துக் கொண்டே அவளைக் கலாய்க்க,

“ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்ன்னு சொல்லுவார்கள், எங்க பக்கத்தில்… உங்களை மாதிரி எண்பதாயிரம் ரூபாய் போனை குப்பைத்தொட்டியில் போட்ட மாதிரியா இருப்பாங்க?”

கழுத்தை நொடித்துக் கொண்டு அட்டண்டர் திறந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாள். ஏசியின் சில்லிப்பு உடலைத் தாக்கியது. அறை அவ்வளவு அழகாக இருந்தது. ஒவ்வொரு துளியிலும் ஆடம்பரம். அறை வடிவமைப்பு வித்தியாசமாக இருக்க, அதன் மாதிரி அவளை ஈர்த்தது. சுவர்கள் கற்களால் கட்டப்பட்டிருக்க, அதன் அமைப்பே பழமையான அதே சமயத்தில் ஒரு கிராமப்புற உணர்வைக் கொடுத்தது. இப்போதெல்லாம் செயற்கையாக இந்த ரஸ்டிக் அமைப்பைக் கொண்டு வருவதுதானே நடப்பு வழக்கும் கூட!

“இப்ப உனக்கு என்ன கஷ்டம்? போனா போயிட்டு போகுது. அதான் உன்னுடையது இருக்கே… ஜேசெவன். எனக்குத் தர மாட்டியா என்ன?”

அவன் அறையைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் அவளைப் போல ஆர்வமாக பார்த்துக்கொண்டிராமல் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் ஷூவை கழட்டி விட்டுப் படுக்கையில் விழுந்தவன், கிண்டலாகக் கேட்டான். அவனுக்கு முன் வந்து நின்று கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள் தமிழ்.

“ம்ம்ம் அடுத்தது என் போனை குறி வெச்சுட்டீங்களா? பிச்சு பிச்சு… லோகாவுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான். என்னை வெட்டிப் பொலி போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பா…”

விட்டால் அதையும் தான் செய்துவிடுவான் என்று தோன்றியது. எதைப்பற்றியும் சற்றும் கவலைப்படாதவன். இவன் செய்வதை மட்டும் செய்துகொண்டே போக வேண்டும். சுற்றியிருப்பவர்களைப் பற்றிக் கவலை இருக்காது போல… மனம் சற்று கோபமாக அவனைத் திட்டிக்கொண்டிருந்தது.

ரெஸ்ட்ரூமிற்கு சென்று கடமைகளை முடித்து விட்டு முகம் கழுவி விட்டு வந்தவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அலங்காரமே இல்லாத முகம் தான். பயண அலுப்போடு அடிபட்டதன் வேதனையையும் தாங்கிக் கொண்டவள் தான். ஆனால் அவ்வளவு அழகாகத் தோன்றினாள் அவனைப் பொறுத்தவரை!

வேறு வழியில்லாமல் அவனது செயல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு, வாதாடினாலும் அவனது கருத்தைம் ஒப்புக்கொண்டு, எல்லைகளை தீர்மானித்துக் கொண்டு அதைத் தாண்டாமல், பெரிதாகக் கூப்பாடு போடாமல் அனைத்தையும் சமாளித்துக் கொண்டிருந்த தமிழ்நதி அவனைப் பெரிதும் ஈர்த்திருந்தாள்.

“என்ன நீ எப்ப பார்த்தாலும் லோகா அதை செய்வா இதை செய்வான்னு சொல்ற? அவர்கள் உன் அம்மா தானே? மரியாதை கொடுத்து பேச மாட்டியா?”

“மரியாதை மனசில் இருந்தால் போதும்… லோகா எங்க அம்மா… எல்லாம் பாசத்தில் கூப்பிடறது!”

“எவ்வளவு பாசமா இருந்தாலும் கொஞ்சம் மரியாதையைக் கொடுக்கவேண்டும் தமிழ்…” நின்று கொண்டிருந்த அவள் புறம் திரும்பிப் படுத்து கொண்டு அவன் கூறினான்.

“என்னுடைய பாசத்தை இப்படித்தான் எனக்கு வெளிப்படுத்தத்தெரியும்… இப்ப போய் நான் லோகாவ வாங்க போங்கன்னு கூப்பிட்டா உனக்கு என்னடி ஆச்சு ஆத்தான்னு என்னைத் தான் சந்தேகமா பார்ப்பா…” என்று அவள் சிரித்தாள். அவனுக்குமே அவளது பதில் புன்னகையை வரவழைத்தது.

“அம்மா இஸ் அல்வேய்ஸ் அ அம்மா… அவங்களுக்கு நாம எப்பவும் சின்ன குழந்தைகள் தான் இல்லையா?” உணர்ந்து அவன் அதைக் கூறும் போது முகம் மென்மையைத் தத்தெடுத்தது.

“ம்ம்ம்… கண்டிப்பா… உங்க அம்மாவும் உங்களுக்கு அப்படித்தானே…”

“ம்ம்ம் ஆமா… எங்க அம்மா தான் என்னுடைய டியர் மோஸ்ட் ஃப்ரென்ட் தமிழ்… எத்தனைக் கடமை இருந்தாலும் என்னை அவர்கள் தன்னுடைய கண்ணுக்குள்ள வெச்சு தான் பார்த்துகிட்டாங்க…” சொல்லும் போதே அவனது முகத்தில் பரவசம்… அதோடு இனம் புரியாத வேதனையும் வந்து குடிகொண்டது.

“ம்ம்ம்… இப்ப அவர்கள் கேரளாவில் இருக்காங்களா? இல்ல உங்க கூடவா?” இயல்பாக வந்து விழுந்த அந்தக் கேள்வியில் இறுகியது அவன் முகம். வாழ்க்கையில் பேரிழப்புகளையெல்லாம் கடப்பாரையை விழுங்கி ஜீரணம் செய்வது போல ஜீரணித்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றானே!

“ம்ம்… என் கூடவே தான் இருக்கிறார்கள். பட் பிசிக்கலி ஷி இஸ் நோ மோர்…” விட்டத்தை வெறித்தவாறு அவன் கூறினான்.

“சாரி…” உண்மையிலேயே அவளுக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்கு அவளது வருத்தம் சங்கடத்தை கொடுத்தது. தாயின் நினைவுகளோடு தொடர்ச்சியாக வந்த நினைவுகளின் தாக்கத்தினை அவள் முன் வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை.

மறக்க வேண்டிய நினைவுகள் என்றாலும் மறக்கக் கூடாத நினைவுகள். நினைக்கும் போதே ரத்தத்தைக் கொதிக்க செய்யும் நினைவுகள். நரம்பு ஆத்திரத்தில் முறுக்கிக் கொண்டது. அத்தனை பொருட்களையும் அடித்து நொறுக்க வேண்டும் என்பது போன்ற ஆத்திரம்! எவ்வளவு தான் கட்டுப்படுத்த நினைத்தாலும் முடிவதில்லை. அதிலும் நேற்றைய இரவுக்குப் பிறகு அந்தக் கோபமும் ஆத்திரமும் மிக அதிகமாக இருந்தது.

எதுவும் பேசாமல் எழுந்து கொண்டு குளியலறைக்குச் சென்றவன், கொதிக்கும் மனதோடு ஷவர் அடியில் நின்றான். குளிர்ந்த நீர்த் தலையோடு இறங்கியது. எவ்வளவு தான் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டே இருந்தாலும் அந்த வெம்மை குறைந்துவிடப் போவதில்லை.

அவ்வளவு வன்மம் மனதினுள்ளே… மூன்று வருடமாகச் சேர்த்து வைத்த வன்மம்… தான் இதில் தோற்று விடக் கூடாது. தோற்று விட்டால் தர்மங்கள் தோற்றுவிடும். போர் என்று வந்துவிட்டால் அனைத்தும் சரியே.

ஆல் ஈஸ் பேர் இன் லவ் அன்ட் வார்.

ஆம் போர் தான். அதர்மத்துக்கு எதிரான போர்… தனது இருப்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய போர்.

கொந்தளித்துக் கொண்டிருந்த மனதைச் சற்று குளிர்வித்துக் கொண்டான். குளித்து முடித்து விட்டு அவளை சங்கடப்படுத்தாமல் உள்ளேயே உடை மாற்றி விட்டு வந்தான். தாடியை கிளீன் ஷேவ் செய்துவிட்டு!

கட்டிலில் அமர்ந்து கொண்டு கால் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவள், அவன் வரவும் சட்டென்று ஸ்கர்ட்டை இழுத்து விட்டுச் சரியாக அமர, அவளது அந்தச் செயலை பார்த்தும் பார்க்காதது போலத் தலையை துவட்டினான்.

“குளிச்சுட்டு ஆயின்மென்ட் போடு தமிழ்…” அவள் புறம் திரும்பாமல் அவன் கூறினான். நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கையிலிருந்த ஆயின்மென்ட் தான் அவளையுமறியாமல் கீழே விழுந்தது. இருதயம் ஒரு நொடி நின்று பின் வேலை செய்தது.

தாடிக்குள் மறைத்து வைத்த முகத்தைக் கண்டதில் அவளது புலன்கள் சில நொடிகளுக்கு வேலை நிறுத்தம் செய்தன. மாநிறத்தைச் சற்று தாண்டிய இறுக்கமான முகம் தான் ஆனால் அதுவே அவனுக்கு அதிகபட்ச கம்பீரத்தை கொடுக்க, கற்றை மீசை என்னைத் தடவிப்பார் என்று அழைத்தது!

அதிலும் அந்த டிஷர்ட்டும் ஜீன்ஸும் அவ்வளவு பொருத்தமாக இருந்தது. அவனது கம்பீரத்தை மேலும் கூட்டியது. ஏற்கனவே அவன் அதிகபட்ச உயரம்… இப்போது இன்னமுமே உயரமாகத் தெரிந்தது. அவளால் கண்களை அகற்ற முடியவில்லை.

“என்ன தமிழ்… ஷேவ் பண்ணது நல்லா இருக்கா?” குறும்பாக அவன் கேட்க, “ஹாங்” என்ன என்பதைப் போல அவள் பார்த்தாள். தான் அவனைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே அவள் உணரவில்லை.

“இங்கிலீஷ்…” ராகமாக அவனழைக்க, உணர்வை மீட்டுக் கொண்டு முறைத்தாள். வெளியில் முறைத்தாலும் உள்ளுக்குள் லஜ்ஜையாக இருந்தது. ச்சே இப்படியுமா அவனைப் பார்த்து வைத்து மாட்டிக் கொள்ள வேண்டும்? அதிலும் அவன் குறும்பாக அவளையே பார்த்து அழைத்தது வேறு அவளை மேலும் லஜ்ஜையில் ஆழ்த்த, தன்னை தானே குட்டிக் கொண்டாள்.

அவள் குட்டிக் கொள்வதை பார்த்தவனுக்குச் சுவாரசியம் மேலும் கூடியது. கண்களில் சிரிப்போடு அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, அவள் சிறுபிள்ளை போல அவனைப் பார்த்து முறைத்து,

“என்ன?” என்று கேட்டாள்.

“இல்ல பார்த்துட்டே இருந்தியே… அவ்வளவு அழகாவா இருக்கேன்…” கண்ணைச் சிமிட்டி அவன் கேட்ட கேள்வியில் கடுப்பானாள். என்னதான் அழகை ரசித்தாலும் அது மட்டுமே முக்கியமா என்ன? அதிலும் ஆண்களுக்கு?

“ஆண்களுக்கு அழகு முக்கியமில்லை.” என்று அவள் நிறுத்த, அவளைச் சுவாரசியமாக பார்த்தவன்,

“பின்ன வேறென்ன முக்கியம்?” என்று கேட்டான்.

“உண்மை… நேர்மை… தன்னம்பிக்கை… இதெல்லாம் தான் முக்கியம்… அழகு நிரந்தரம் கிடையாது. ஆனா உண்மை எப்பொழுதும் நிரந்தரமானது. உண்மைக்கு மாற்று எதுவுமே கிடையாது. நேர்மையைக் கைக்கொள்வது கஷ்டம் தான் ஆனால் அந்த நேர்மை மட்டுமே மடியில் கனம் இல்லாமல் நம்மைப் பயணப்பட வைக்கும்… உண்மையும் நேர்மையும் ஒருத்தர் கிட்ட இருந்தா தன்னம்பிக்கை தானா வந்துடும்…”

மிகவும் தெளிவாக அவள் கூறியதன் அர்த்தம் அவனுக்கும் புரிந்தது. ஆனால் அவளிடம் தற்போது உண்மையாக இருக்க முடியுமா? தன்னளவில் என்றாலும் இப்போது சாத்தியம் கிடையாது என்பதால் அவளது அந்தக் கேள்வி சுழலில் சிக்க அவன் விரும்பவில்லை.

அதைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்து விட நினைத்தான்.

“உனக்குப் பொறாமை இங்கிலீஷ்… நான் ரொம்ப அழகா இருக்கேன்னு உனக்குப் பொறாமை… அதான் என்னென்னமோ பேசி டைவர்ட் பண்ற…” என்று அவன் சிரித்தான். அவனது கண்களை எட்டாத அந்த சிரிப்பின் காரணத்தை அவள் உணர்ந்தாள். உண்மையை மறைக்க நினைக்கும் போது வரும் சங்கடமான உண்மையில்லாத சிரிப்பு அது! பார்க்கலாம் இது எவ்வளவு தூரமென்று!

“ஓவர் ஹெட்வெய்ட் உடம்புக்கு ஆகாது பாஸ்… அடங்குங்க…” என்று முடித்தாள்.

“உண்மையை இந்த உலகம் எந்த காலத்தில் ஒத்துகிட்டு இருக்கு… ஆனானப்பட்ட கலிலியோவையே உலகம் உருண்டைன்னு சொன்னதுக்காகக் குருடாக்கின உலகமடா இது…” என்று சிரித்தவனை ஆச்சரியமாக பார்த்தாள். அப்படியா என்று கேட்க தோன்றியது. அதுவரை அவளறியாத தகவல் அது!

“நிஜமாகவா?” என்று ஆர்வத்தை மறைத்த குரலில் அவள் கேட்டாள்.

“எது நான் அழகாங்கறதா?” கேலியாக அவன் கேட்க

“அட பக்கி…” என்று முணுமுணுத்தவள், “கலிலியோவை குருடாக்கினது?” என்று கேட்டாள்.

“ம்ம்ம் அப்படியும் ஒரு தியரி இருக்கு… ஆனால் அவர் டெலஸ்கோப்ல வானியல் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தப்போ கண்கள் பறிபோய்ட்டதா சொல்வார்கள். ஆனால் உலகம் தட்டைன்னு நம்பிட்டு இருந்த காலத்தில் உலகம் உருண்டைன்னு சொன்னா மத குருமார்களுக்கு கோபம் வராதா? அதனால் அவருடைய கண்களைக் குருடாக்கினதா செவிவழி செய்தி இருக்கு…” தலை வாரிக்கொண்டே எங்கிருந்தோ எங்கேயோ போய் அவன் விளக்க, ஆர்வமாக அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஹேய்… போதும் என்னை சைட்டடிச்சது. கண்ணு போடாத இங்கிலிஷ்…” மீண்டும் அவளைக் கலாய்க்க, மீண்டும் அவனை முறைத்தாள் தமிழ்நதி.

“நெனப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறதாம்…” என்று கழுத்தை நொடித்துக் கொண்டவள், “என்னடா ஆளே அடையாளம் தெரியலையேன்னு பார்த்தேன்…” என்று உதட்டைச் சுளித்து கொள்ள, அவன் வாய் விட்டுச் சிரித்தான்.

“சரி, நீ உன் வேலையெல்லாம் முடிச்சுட்டு ரெஸ்ட் எடு தமிழ்… நான் கொஞ்சம் வெளியே இருக்கறேன்.” அவளது உணர்வுகளை மதித்து அவளுக்குத் தனிமை கொடுக்க நினைக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனால் இரவு முழுவதும் கண் விழித்து காரை ஓட்டி வந்திருக்கிறானே என்ற பரிதாபமும் அவளுக்குள் இருந்தது.

“நீங்கக் கொஞ்சம் படுங்க… ஐ கேன் மேனேஜ்… சோபா இருக்கே…” அவனுக்குச் சமாதானம் கூற முயன்றவளைக் குறும்பாக பார்த்தவன்,

“ஒரு பொண்ணோட ஒரே ரூம்ல… ஓ மை காட்… அப்புறம் என்னுடைய கற்பு என்னாகறது?” என்று அவன் கண்ணை சிமிட்ட, ஒரு நொடி புரியாத பார்வை பார்த்தவளின் முகம் அடுத்த நொடி செவ்வானமானது.

“யூ ஸ்டுபிட், இடியட், கூஸ்… உங்களுக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு… இதை நான் சொல்லணும்…” பல்லைக் கடித்து கொண்டு அவள் கூறினாள்.

“அதான் நீ சொல்லலியே… அதனால் தான் என்னுடைய கற்பை நான் காப்பாத்திக்கறேன்.” என்றவன் இடைவெளிவிட்டு,

“பீல் ஃப்ரீ தமிழ்… நான் கொஞ்சம் வெளியே இருக்கிறேன். ப்ரேக்பாஸ்ட் இங்க காம்ப்ளிமென்டரி… அப்ப நான் ஜாயின் பண்ணிக்கறேன்.”

“இரண்டு ரூமாவது எடுத்து இருக்கலாம்…” ஆதங்கமாக அவள் கூறினாள்.

“ஹே இட்ஸ் ஓகே… தப்பில்ல மா…”

“உங்களுக்கும் டயர்ட்டா இருக்குமே… கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுங்க ப்ளீஸ்…” அவளது வார்த்தைகளில் உண்மையிலேயே அக்கறை இருந்தது. இரவு முழுவதும் எத்தனையோ இடர்களைத் தாண்டி சிரமப்பட்டு, அதோடு வாகனத்தையும் ஓட்டி இப்போது எவ்வளவு அசதியில் இருப்பான் என்ற கவலை!

அவளது அந்தக் கவலையும் அக்கறையும் அவனது அன்னையை அவனுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருந்ததுதான் வேதனையாக இருந்தது. வேண்டாம் இந்த அக்கறை என்று அவனுக்குக் கத்தி கூற வேண்டும் போல தோன்றியது. ஆனாலும் அவளைக் காயப்படுத்த நினைக்கும் போதே அவனது மனம் வலித்தது.

இந்த வலிக்குப் பெயர் என்ன என்று மீண்டும் மீண்டும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருந்தான்!

வலிக்கும் என்பதை அறிந்தே அந்த வலிக்குள் சுகமாக ஆழ்ந்து விட வேண்டும் போல தோன்றியது. மூளையோ அவனது தலையை தட்டி அவன் முன் இருக்கும் ராட்சச மிருகங்களைப் பட்டியலிட்டது. பிரச்சனைகளின் வீரியம் அவனை வெப்பப்படுத்தியது. என்ன வேண்டுமானாலும் நேரக் கூடிய சாத்தியம் இருக்கிறதே… அந்தச் சூழ்நிலையில் தமிழையும் இழுத்து அவளையும் வேதனையிலாழ்த்த வேண்டுமா?

அப்படியே தான் நினைப்பதை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் நடக்கக்கூடியதா இது? அதற்காகத் தான் விட்டுக்கொடுக்க வேண்டியவற்றை மூளை பட்டியலிட்டது. பட்டியல் பெரிதுதான். செய்து விடலாம்… ஒரே நிமிடத்தில்!

ஆனால் தான் காக்க வேண்டியது ஒரு பரம்பரையின் சத்தியத்தை, தர்மத்தை, வழிவழியாக பாதுகாத்து வரும் ரகசியங்களை அல்லவா!

இந்த முள்பாதையின் கொடுமை தன்னோடு போகட்டும். இவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டான்.

மிகவும் நாகரிகமாக விலகிப்போனவனின் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோவொரு சொல்ல முடியாத பிரச்சனையில் சிக்கியிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. அத்தனை பிரச்சனைகளிலும் அவனது முகம் மாறவே இல்லையே! அந்த ஒரு சில நேரங்களைத் தவிர!

சங்கடங்களை எல்லாம் புன்னகையுடனே சந்திக்க மனம் எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும். அவனது அந்தப் பக்குவம் அவளை ஆச்சரியப்படுத்தியது, அவனை நோக்கி மேலும் ஆகர்ஷித்தது.

அது சூரியனின் ஆகர்ஷணம் என்பது அவளுக்குப் புரியவில்லை. சூரியன் ஆகர்ஷிக்கலாம் ஆனால் அதை நோக்கிச் சென்றால் அதன் வெப்பத்தில் தான் எரிந்து விடுவோம் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை. அந்த வெப்பம் அவளைத் தீண்டினால் என்னவாகும் என்பதை அவள் அறியும் போது?

ஸ்ரீதரனை பொறுத்தவரை அந்தப் பக்குவத்தை வாழ்க்கை அவனுக்குக் கொடுக்கவும் எத்தகைய சுழலில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தது என்பதை அவளறியவில்லை! எத்தனை இழப்புக்களைக் கடந்து வந்திருக்கிறான் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை!

அவளது ஈர்ப்பு மென்மையிலிருந்து வன்மையாக மாறிக்கொண்டிருந்தது.

தடுமாறிக்கொண்டிருந்த மனம் மேலும் தடுமாறத்துவங்கியது.

மனமோ நிராசையில் தவித்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 13

அதிக ஒலி காதுகளைக் செவிடாக்குகிறது. அதிக ஒளி கண்களைக் கூசச் செய்கிறது. அதிக தூரமோ அதிக சமீபமோ காட்சியைக் காணத் தடை செய்கிறது. அதிக விரிவு அல்லது அதிக சுருக்கம் விரிவுரையை மறைக்கிறது. அதிக உண்மை நம்மை முடக்கிப் போடுகிறது. -பாஸ்கல்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

உங்கள் கருத்தைப் பகிருங்கள்