arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 13
சக்கரவியூகம் chevron_right பகுதி 13 / 26

அத்தியாயம் 13

visibility 943
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (12 மதிப்பீடுகள்)
பகிர்

அதிக ஒலி காதுகளைக் செவிடாக்குகிறது. அதிக ஒளி கண்களைக் கூசச் செய்கிறது. அதிக தூரமோ அதிக சமீபமோ காட்சியைக் காணத் தடை செய்கிறது. அதிக விரிவு அல்லது அதிக சுருக்கம் விரிவுரையை மறைக்கிறது. அதிக உண்மை நம்மை முடக்கிப் போடுகிறது.

-பாஸ்கல்

அவசரமாகப் பேருந்து ஏறியதில் மூச்சு வாங்கியது. உடலில் அந்த நடுக்கம் குறையவே இல்லை. உடன் அமர்ந்திருந்த ஸ்ரீதரன் அவளுடைய கையோடு தன் கையை கோர்த்து ஆறுதலுக்காக அழுத்தினான், அவளது நடுக்கத்தையும் குறைக்கும் பொருட்டு! நிமிர்ந்து அவனது கண்களை நேராகப் பார்த்தாள். அதில் பொய்மையோ புரட்டுத்தனமோ எதுவுமே இல்லை. அவ்வளவு நிர்சலனமாக இருந்தது அவனது கண்கள்.

ஒரு ஆண் உண்மையானவனா இல்லையா என்பதை அவனது கண்கள் கண்டிப்பாக உரைத்து விடும். தவறு செய்யும் ஆண்களால் கண்களை கண்டிப்பாக நேராகச் சந்திக்கவே முடியாது.

அவன் சந்தித்தான். விட்டு விலகாமல் அவளது கண்களை சந்தித்தான். அவளது நடுங்கிய கைகளை மேலும் இறுக்கி தனக்குள்ளே

நடுக்கம் ஓரளவுக்குக் குறைந்தாலும் அவள் முன் அந்தக் கேள்வி விஸ்வரூபமெடுத்து நின்றது. இந்தளவு ஸ்ரீதரன் எதற்காகத் துரத்தப்படுகிறான்? காரணம் என்ன?

அவன் உண்மையிலேயே நல்லவன் தானா என்று முன்பை போலக் கேட்க முரண்பட்டது மனம். அவன் வேறு யாருக்கு எப்படி என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. அவளுக்கு அவன் நல்லவன். அவனைக் கொஞ்சமும் விட்டுத் தரப்பிடிக்கவில்லை. விட்டுத் தரவும் முடியவில்லை.

***

காலைக் குளித்துவிட்டு வேலைகளையெல்லாம் முடித்து காம்ப்ளிமெண்ட்ரியாய் வந்த காலை உணவை உண்டுவிட்டு நிதானமாகக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்த போது அவசரமாகக் கதவை தட்டினான் ஸ்ரீதரன்.

“என்ன? என்னாச்சு?”

சற்றே மெல்லிய பதட்டத்தை காட்டியது அவனது முகம்.

“ஒண்ணுமில்லை தமிழ்… ப்ரேக்பாஸ்ட் ஆச்சா? நீ ரெடியா?” நிதானமாகக் காட்டிக்கொள்ள அவன் நினைத்தாலும் அவனது தொனி அவனுக்கு உதவவில்லை.

“ம்ம்ம் ஆச்சு… நீங்க சாப்பிடுங்க… உங்களுக்குத் தனியா வெச்சுருக்கேன்…” அவனது அந்தத் தொனியை கூர்மையாகப் பார்த்தபடி கண்களால் உணவைக் காட்டி அவள் கூறினாள்.

“உன் திங்சை பேக் பண்ணிக்க தமிழ்… கிளம்பலாம்…” என்றவன் தன்னுடைய ஷோல்டர் பேகை எடுத்துக்கொண்டான். ஷோல்டர் பேகிலிருந்த பிஸ்டல் அவனது பேன்ட் பின்புறத்திற்கு இடம் மாறியிருந்தது.

மீண்டும் அந்த பிஸ்டலை பார்த்தவள் அவனை உணர்வைத் துடைத்துக்கொண்டு வெறித்துப்பார்த்தாள். எவ்வளவு பேசினாலும் அவனிடமிருக்கும் அந்த ரகசியத்தன்மை அவளை வலிக்கச் செய்தது.

வெளிப்படையாகத் தான் கடத்தல் தொழில் செய்வதாகக் கூறிவிட்டால் கூட அவனைத் தான் நம்பக்கூடும், ஆனால் அவன் மறைத்து வைக்க வைக்க அவளுடைய மனதினுள் கசப்புத்தன்மை கூடிக்கொண்டே இருந்தது.

ஆனால் அவனாகவே கூறட்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவளாக இனியும் கேட்கப்போவதில்லை என்பதை மனதில் உறுதி எடுத்துக்கொண்டாள்.

அவன் எப்படித்தான் இருந்தாலும் அவனைக் குறித்த அக்கறையைக் கைவிடவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் இன்னமும் காலை உணவை எடுக்கவில்லை என்பதை உணர்ந்தவள்,

“நீங்க சாப்பிடுங்களேன்… நைட் கூட நீங்கச் சாப்பிடலை…” அவன் இரவு உணவும் உண்ணாததைக் குறிப்பிட்டு அவள் கூறினாள்.

“போற வழில பார்த்துக்கறேன் தமிழ்… இப்ப கிளம்பு…” அவசரமாகக் கிளப்ப, அந்த உணவு பொட்டலத்தை எடுத்துக்கொண்டாள்.

அவள் உணவை எடுப்பதைப் பார்த்ததும் அவனுக்குள் எரிச்சல். இருக்கிற அவசர சூழ்நிலையில் இந்த உணவு தான் முக்கியமா என்று!

“தமிழ்… அதை இங்கேயே வை…” எரிச்சலும் கோபமும் தன்னிடமிருந்து எட்டிப்பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் அவனால் அது முடியவில்லை.

“இல்ல… போற வழில சாப்பிடுங்க… வயிறு ரொம்ப காயக்கூடாது…”

“இல்லம்மா… எனக்குப் பசியில்லை. நீ மட்டும் கிளம்பு…”

“ம்ம்ம்… எப்படிப் பசிக்கும்? பாக்கெட் பாக்கெட்டா சிகரெட்டை ஊதித் தள்ளினா பசிக்குமா? அந்த உடம்பு என்னத்துக்கு ஆகிறது? இதையெல்லாம் சொல்ல நான் யார்?” முணுமுணுத்துக்கொண்டே தன்னுடைய ஷோல்டர் பேகை எடுத்தவளின் கண்களில் அவளையும் அறியாமல் மெல்லிய நீர்ப்படலம். அப்போதுதான் கவனித்தான். சிகரெட் வாடை அவனை இன்னமும் சுற்றிக்கொண்டிருந்தது. தன்னைத்தானே வைது கொண்டான்.

“ப்ச்… அது ஒரு மேட்டரா?”

“பின்ன இல்லையா?”

“சரி விடு…”

“நைட்லர்ந்து இதுவரைக்கும் எனக்குத் தெரிந்தே ஒரு பன்னெண்டு சிகரெட் இருக்கும்… கிட்டத்தட்ட அடிக்டட்… இது நல்லதில்லை.” அவளது குரலிலிருந்த அக்கறை அவனை வதைப்பது போல இருந்தது, அவனது அந்தராத்மா எதையோ உணர்ந்து கொண்டிருந்தது.

மௌனமாக அவளைப் பார்த்தான்.

அது என்னுடைய பெர்சனல் என்றோ, நீ அதைச் சொல்லாதே என்றோ சொல்ல முடியவில்லை அவனால். அந்த அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது. தேவையாகவும் இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு… அவனுடைய அன்னையும் இவளைப்போலத்தான். ஆனால் அப்போதெல்லாம் இந்தளவு தான் சிகரெட் உபயோகம் செய்ததில்லை என்று எண்ணிக்கொண்டான்.

எத்தனையோ விஷயங்களை தன்னுள் நீர்த்துப் போக செய்ய இது தேவையாக இருக்கிறது! ஆனால் அந்த விஷயங்கள் நீர்த்துப் போனதே இல்லை. மேலும் மேலும் வெறிக் கூடிக்கொண்டு தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்… இப்போது வேறெதையும் காட்டிலும்… இந்த நேரத்தில் கவனத்தை திருப்ப முடியாது.

ஆங்காங்கே வைத்த பொருட்களை எடுப்பதற்காக அவனைத்தாண்டிப் போக முயன்றவளின் கையை பிடித்தான் ஸ்ரீதரன்!

அவனிடமிருந்து கையை விடுவிக்கவும் அவள் முயலவில்லை, அவன் புறம் அவள் திரும்பவுமில்லை.

“தமிழ்…” மௌனமாகவே இருந்தாள். அவனைப் பார்க்கவுமில்லை.

“நீ சொல்றதெல்லாம் புரியுது…”

பதில் கூறாமல் அவனை பாராமல் மறுபுறம் அவள் பார்த்துக்கொண்டிருக்க,

“கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கறேன். ஆனா ஒரேடியா முடியாது…” சமாதானமாகக் கூறினான். ஏன் அவளை சமாதானம் செய்ய மனம் துடிக்க வேண்டும் என்ற கேள்வி அவன் முன்னே பூதாகரமாக எழுந்தது.

ஆனாலும் அவள் சமாதானமாகாமல் மறுபக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

“தமிழ் இந்தப்பக்கம் திரும்பு…” சற்று உறுதியாக ஆனால் மென்மையாக! குரலிலிருந்த ஏதோவொன்று அவளை அவன் புறம் திரும்பச் செய்தது.

“சரி… புட் பேக்கட்டை எடுத்துக்க, நான் வழில சாப்பிட்டுக்கறேன்.”

எடுத்துக்கொள் என்று கூறினானே தவிர அவளது கையை விடவில்லை. விடவில்லை என்பதைக் காட்டிலும் அவனால் விடமுடியவில்லை. தவறென்று அறிவு உணர்த்தினாலும் மனம் அதைத் திமிறி மீறிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தின் இறுக்கத்தையும் மீறி அவளது முகம் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. அவளது அந்த மகிழ்ச்சியைப் பார்க்கும் போது அவனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளது முகத்தை வாட விடக் கூடாது என்று தோன்றியது அவனுக்கு.

“நீ தனியாகத்தான் போகவேண்டும் தமிழ்… போய்டுவதானே?” குரல் நிராசையாக ஒலிக்க, சட்டென்று நிமிர்ந்து அவனைப்பார்த்தாள்.

“ஏன்?”

“இந்த ரிஸ்க்ல இன்னமும் உன்னை இன்வால்வ் பண்ண முடியாது…” அவளது கையை விட்டு விடாமல், கடினமாக அவன் கூறினான்.

“அதான் ஏன்? இது வரைக்கும் இன்வால்வ் பண்ணலையா?” அவளால் அப்படி முடிவெடுக்க முடியவில்லை.

“அது அன்எக்ஸ்பெக்டட்… இந்தளவுக்கு ப்ளான் பண்ணுவாங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை… எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன் நீ உங்க வீட்டுக்கு போம்மா…” என்றான் பொறுமையாக!

“இல்ல… உங்க கூட வரேனே…” மெல்லிய குரலில் அவள் கேட்டாள்.

“இல்லம்மா… நீயே பார்… இப்ப சிச்சுவேஷன் சரியில்லை.” என்று கறாராக அவன் கூற அதற்கும் அவளுக்கு மறுத்துபேச ஆசைதான். ஆனால் அதற்கான உரிமையோ சொந்தமோ தனக்கு கிடையாதே… மனம் தவித்தது ஏனென்று புரியாமல்! அந்த உணர்வைப் புரிந்துகொள்ளவோ வகைப்படுத்தவோ அவள் முயலவில்லை.

அவனுக்கு என்ன பிரச்சனையோ என்ற தவிப்பு… அவனுக்கு ஒன்றுமாகி விடக்கூடாது என்ற பயம், உள்மனதை கவ்விப் பிடித்தது.

மௌனமாக எங்கோ பார்த்து கொண்டிருந்தவளை அவனது பார்வை தழுவியது.

மௌனமாக அவனது கண்களை பார்த்தவளின் உலகம் சுழன்று அவன் கண்ணோடு கலந்தது. அவளுடைய அந்த விழியீர்ப்பு விசை அவனையும் சுழலுக்குள் ஈர்க்க, அனைத்தும் மறந்து போனது.

அவன் பிடித்திருந்த பிடி மேலும் இறுக, அவளை தன்னருகில் கொண்டு வர, தன்னிச்சையாக அவளும் உடன்பட்டாள். கண்ணோடு கண் கலந்தது. எவ்வளவு நேரம் அதே மோன நிலையில் இருந்தார்களோ?

அவளுடைய கைப்பேசி அழைத்தது.

உடல் தூக்கிவாரி வாரிப்போடச் கைப்பேசியை நோக்கித்திரும்பினாள்.

லோகாம்பாள் தான் அழைத்திருந்தார்.

என்ன காரியம் செய்யத்துணிந்து விட்டாள்.

உடல் வெளிப்படையாக நடுங்கியது.

ஏசி ஓடிக்கொண்டிருந்தாலும் லோகாம்பாவின் அழைப்பையும் ஸ்ரீதரனையும் மாற்றி மாற்றிப் பார்த்தவளின் உடல் வியர்வையில் தெப்பலாக நனைந்தது.

தன்னையுமறியாமல் அவளது கண்களும் நனைந்தது.

நடுங்கிய கையோடு கைப்பேசியை எடுக்க, லோகாம்பாள் எடுத்த எடுப்பில்,

“ஏன்டி ஊருக்கு கிளம்பினா ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா? வாசு சொல்லித்தான் தெரியனுமா?”

“இல்… இல்லம்மா… சர்ப்ரைஸா வந்து நிக்கலாம்ன்னு ப்ளான் பண்ணேன்…” சற்று திக்கி திணறி அவள் கூறினாள்.

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஜன்னலின் வழியாக ரிசப்ஷனை பார்த்தான்.

மாதவன்குட்டி கையிலிருந்த புகைப்படத்தை காட்டி விசாரித்துக் கொண்டிருந்தான். அது அவனது படமாகத்தான் இருக்க வேண்டும்.

முகம் இறுகியது. விடாமல் துரத்திக்கொண்டிருக்கின்றானே! அவன் இப்போது மட்டும் தான் தனியனாக இருக்கும் போது வந்து நின்றால் அவனையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கப்போவதில்லை ஆனால் தமிழ் உடனிருப்பதால் தான் அவனுக்குத் தயக்கமே… தனக்காக எய்யப்பட்ட விஷ அம்பு அவளைத் தாக்கிவிட கூடாது!

வெளியில் சென்றால் ரிசப்ஷன் வழியாகத்தான் காரை சென்றடைய முடியும். என்ன செய்வது என்று நெற்றியைச் சுருக்கிக்கொண்டு யோசித்தான்.

“சரி… ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை? இந்நேரத்துக்கு எல்லாம் வந்துடுவியே…” கறாராக லோகாம்பாள் தமிழிடம் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு நொடி என்ன சொல்வது என்று யோசித்தாள். லோகாம்பாவிடம் எப்போதுமே ரிகர்சல் எடுத்துக்கொண்டு பேசுவதுதான் வழக்கம்.

அதிலும் இப்போது என்ன சொல்வது என்பதே அவளுக்குப் புரியவில்லை.

“ம்மா… நடுவுல பஸ் ப்ரேக்டவுன் ஆகிடுச்சு… வந்துடறேன்ம்மா…” தயங்கிக் கொண்டே அவள் கூறியதில் திடுக்கிட்டுப் போனார் லோகா.

“ஏய் என்னடி சொல்ற? அப்பாவை வர சொல்றேண்டி… வயசு பொண்ணு நடு ரோட்டுல நின்னுட்டா இருக்க?” அவரது குரலில் பதட்டம் தெரிய அவரிடம் இந்த விஷயத்தில் பொய்யுரைக்க நடுங்கித்தான் போனாள்.

லோகாவிடம் பொய்யுரைப்பது ஒன்றும் புதிது அல்லதான் ஆனால் அவையெல்லாம் சற்றும் உள்நோக்கமில்லாத பொய்கள். ஆனால் இது?

அவளது நடுக்கத்தை மறைக்கக் குரலில் கடினத்தைச் சிரமப்பட்டு கொண்டு வந்தவள்,

“ம்மா… ஏம்மா… ஏன்? நான் என்ன சின்ன குழந்தையா? எனக்கு இதுகூட தெரியாதா? என் கூட துணைக்கு பஸ்ஸில் வந்தவர்கள் அத்தனை பேரும் இருக்காங்க… சும்மா நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாத…” அவர் சற்று அசந்த சந்தர்ப்பத்தில் போட்டுத் தாக்க, அவரால் பதில் பேச முடியவில்லை. ஆனாலும் விட்டு விடுவாரா லோகாம்பாள்?

“சரி பயமுறுத்தலை… எங்க இருக்க? அதையாவது சொல்லு…”

அவசரமாக யோசித்தவள்,

“ம்ம்ம்… விழுப்புரம் தாண்டி ஏதோ காட்டுப்பக்கம் நிற்குதும்மா…” என்று திணறிக்கொண்டே கூறினாள்.

“சரி அப்படீன்னா நீ விழுப்புரம் சித்தி வீட்டுக்கு போய்டேன். அவளும் ரொம்ப நாளா வர சொல்லிட்டு இருந்தா தானே?” லோகாம்பாள் தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்… இவளோ பல்லை கடித்துக் கொண்டு இதற்கு என்ன பொய் சொல்வது என்று யோசித்தாள்.

அவளின் இந்த திணறலை அவ்வப்போது பார்த்தவனுக்கு அந்த நிலையிலும் வாய் விட்டுச் சிரிக்கவேண்டும் போலத் தோன்றியது. மாதவன் குட்டியோ அவனது காரின் பக்கத்திலேயே நின்று கொண்டு ஹோட்டல் ஊழியன் ஒருவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

ஆக காருக்கு இருவரும் செல்ல வேண்டுமென்றால் மாதவன் குட்டியை தாண்டித்தான் செல்ல வேண்டும். காரில் தான் ஏறுவதைப் பார்த்தால் கண்டிப்பாகக் கண்டுகொள்வான். மற்ற நேரமென்றால் அதே காரிலேயே அவனையும் அழைத்துக்கொண்டு போய் வாமனனை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு விட முடியும்!

ஆனால் உடன் தமிழ் இருக்கும் போது?

எதுவேண்டுமானாலும் நடக்கும் சாத்தியம் இருக்கிறதே!

தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதை காட்டிலும் காப்பாற்றியேயாக வேண்டிய விஷயங்களுக்காகத்தான் அவனது இந்தப் பொறுமையும். இனியும் பொறுமையாக இருக்கக் கூடாது என்று மற்றவர்கள் வெறி கொண்டு எழுந்த போதும் கூட அவர்களை அடக்கி விட்டுத் தான் சென்னை வந்ததும் அந்தப் பொறுமையினால் தான். அந்த அளவு பொறுமையை தான் கைக்கொண்டதும் ஓட விட்டு அடிப்பதற்குத்தான் என்பதை வாமனன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறானே.

அதுவுமில்லாமல் இவளும் பயந்துவிட கூடாது. எந்த நேரத்திலும் அவளது மனதில் தான் குறைவாக நினைக்கப்படுவதை அவன் விரும்பவில்லை.

“ம்மா… சித்தி வீட்டுக்கெல்லாம் நான் இப்ப போயிட்டு இருக்க முடியாது. நீ வந்தா கூடப்போறேன். உன் தங்கச்சி வீட்டுக்காரர் சட்டுன்னு முகத்தைக் காட்டுவார். எனக்கு தேவையில்லாமல் கோபம் வரும்… கல்யாணம் வெச்சிருக்க நேரத்தில் இது தேவையா? யோசிச்சுக்கோ…” நேரடியாக மிரட்டாமல் சுற்றி வளைத்து மிரட்ட, லோகா உண்மையிலேயே ஒப்புக்கொண்டார்.

“ஆமான்டி நீ வேணும்னே செஞ்சாலும் செய்வ… என் தங்கச்சி வீட்ல வம்பிழுத்துட்டே வந்து வைப்ப… அப்புறம் அந்த மனுஷன் மூஞ்சில நான் எப்படி முழிக்கறது?” என்று அவர் அங்கலாய்க்க,

“ஆமா… உன் தங்கச்சியும் தங்கச்சி வீட்டுக்காரரும் ரொம்ம்ம்ம்ப நல்லவங்க… நான்தான் வம்புக்காரி…” அவளும் பதிலுக்கு நொடிக்க, ஸ்ரீதரன் வாய்கொள்ளாமல் சிரித்தான். லேசாகச் சப்தம் வர, தமிழ் அவனை முறைத்தாள், வாயில் விரலை வைத்து உஷ் என்று காட்டி!

“ஏய்… இப்படியே வம்பிழுத்துட்டு இருக்காதே… வாயைக் கொஞ்சம் தச்சு வைடி ஆத்தா…”

“ம்ம்ம்… நீ வா, என் வாய் சும்மா தான் இருக்கு… தச்சு வைப்பியாம்…” என்று வம்பிழுத்துவிட்டு கைப்பேசியை வைக்க, அவனால் அதற்கு மேலும் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

வாய்விட்டு சிரித்தவனைப் பார்த்து முறைத்தாள்.

“லோகா கிட்ட பொய் மேல் பொய்யா நான் சொன்னது உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?”

இடுப்பில் கைவைத்து கொண்டு அவனிடம் சண்டைக்கு நின்றவளைப் பார்க்கையில் மேலும் அடக்க முடியாமல் அவன் சிரித்தான்.

“நீ பேசாமல் கதை எழுதலாம்… எப்படி ஸ்பான்டேனியஸா பொய் சொல்ற!” என்று மீண்டும் சிரித்தான்.

“ம்ம்ம்… அந்த ஸ்பான்ட்டேனிட்டி உங்க கிட்ட இருந்து கத்துகிட்டதுதான்…” என்று அவள் இடித்துரைக்க, அவனது புன்னகை விரிந்தது.

அவள் எதனால் இப்படி இடித்துரைக்கிறாள் என்பதையும் உணர்ந்திருந்தான். தன்னைப் பற்றி எதையும் கூறவில்லை என்பதை அவ்வப்போது குத்திக் காட்டுகிறாளாம்… ஆனால் அதற்கெல்லாம் அசந்தால் அவன் ஸ்ரீதரன் அல்லவே!

“ம்ம்ம்… அப்படியா! வெரி பைன்… ஒரு நாள் இருந்ததிலேயே என்கிட்டே இருந்தது இவ்வளவு நீ கத்துகிட்டா, கூடவே இருந்தா எவ்வளவு கத்துப்ப? ஓ மை காட்… அது எனக்கே டேஞ்சர்…! உன்னை முதலில் உங்க ஊர்க்கு பேக் பண்ணனும்…”

கிண்டலாகக் கூறுவது போலவே அவன் கூறினான். அவனை உறுத்து பார்த்தாள்.

“நீங்கத் தப்பிக்க நினைக்கிறது என்கிட்டே இருந்து இல்ல ஸ்ரீதரன். உண்மையிடம் இருந்து. நேர்மையிடம் இருந்து…” உணர்வே இல்லாத குரலில் அவள் கூறினாள். அவனிடம் கள்ளமில்லை என்றால் அவனைப் பற்றிக் கூற வேண்டியதுதானே.

“நான் இப்ப தப்பிக்க நினைக்கிறது உனக்காகத்தான் தமிழ்… நான், நானா எதை வேண்டுமானாலும் பேஸ் பண்ணுவேன்… அந்தத் தைரியம் இருக்கு, துணிச்சல் இருக்கு… எதையும் சந்திக்காமல் தவிர்ப்பது இந்த மாவேலிக்கர ஸ்ரீதரன் வெர்மாவுக்கு பழக்கமில்லை.”

உறுதியான அவனது வார்த்தைகளில் சற்றும் பொய்மையில்லை. அவனது முகத்தில் தெரிந்த மிடுக்கும் திமிரும் அவனது கம்பீரத்தை மேலும் கூட்ட, ஒரு நொடி அசந்து போனாள்.

அந்தத் திமிரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த மிடுக்கு அவளை வசீகரித்தது. கண்ணெடுக்காமல் அவனைப் பார்த்தாள்.

“ஓ மை காட்… உன்ட்ட பேசிட்டு, இருக்கற சிச்சுவேஷனை மறந்துட்டேன்…” என்றவன் அவளது உடையை நோட்டமிட்டான்.

முந்தைய தினத்தை போலவே லாங் ஸ்கர்ட் தான். சந்தன நிற நெட்டட் லாங் ஸ்கர்ட்டோடு ஷார்ட் ஸ்லீவ் டியுனிக் ஷர்ட் அணிந்திருந்தாள். இடது கையில் எப்போதும் போல ஒரே ரிஸ்ட் வாட்ச். வலது கையில் சிறு பிரேஸ்லெட். சங்குக்கழுத்தோடு ஒட்டி உறவாடிய மெல்லிய செயின்.

பிரமாதமாகப் பொருந்தியிருந்தது.

அதிலும் அவளது சந்தன நிற மேனிக்கு அந்த இளமஞ்சள் ஷர்ட் அவ்வளவு அழகாகப் பொருந்தி அவளை மேலும் அழகாகக் காட்ட ஒரு நொடி பேச்சற்று தான் போனான். அதோடு பட்டாக விரித்து விடப்பட்டிருந்த கூந்தல் இடை தாண்டி முழங்கால் தொட்டு காற்றில் அலைபாய்ந்து அவனது இதயத்தை அலைபாய விட்டது.

மனம் ஒரு நொடி அவளை கசவுப்பட்டில், வேம்பநாட்டு காயலின் பின்னணியில் படகு இல்லத்தில் அவனருகே மனையாட்டியாக இருத்தி கற்பனை செய்து பார்த்தது.

ரவிவெர்மனின் ஓவியம்!

அடுத்த நொடி தன்னை சுதாரித்தவன்,

“என்ன இன்னும் யக்ஷியாட்டம் முடியை விரிச்சு விட்டுட்டு இருக்க? எப்பதான் கிளம்ப போற தமிழ்?” தனது மயங்கிய மனநிலைக்கு முற்றிலும் மாறாக முகத்தில் எரிச்சலைக் காட்டி அவன் கேட்டான்.

“இப்பத்தானே சொன்னீங்க… கிளம்பறதா…” கேட்ச் கிளிப்பில் தலைமுடியை அடக்கிக்கொண்டே கூறினாள்.

“ப்ச்… அவசரம் புரியாமல் வழக்கடிக்காதே… கிளம்புமா…” இத்தனை நேரம் அவளை வளைத்து வளைத்து சைட்டடித்துவிட்டு இப்போது அவசரப்படுத்தினான்.

அவனை முறைத்துக்கொண்டே கைப்பேசியில் பேசுவதற்காகக் கீழே வைத்த தன்னுடைய ஷோல்டர் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள், உணவு பையையும் எடுத்துக்கொண்டு!

“இத்தனை நேரம் விதண்டாவாதம் செய்ததுக்கு சாப்பிட்டு இருக்கலாம்ல…” முணுமுணுத்தவளின் குரல் அவனுக்கும் ஸ்பஷ்டமாய் கேட்டது.

ஆனாலும் கண்டுகொள்ளாமல் தவிர்த்தான்.

“ஷால் இருக்கா?”

“ஏன்?” அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள். அவனது பார்வையோ அவளது முகத்துக்குக் கீழ் இறங்கவே இல்லை. பார்த்தது முதலே அவளும் கவனித்து கொண்டு தானிருந்தாள். பார்வையின் நேர்மையை!

அதனாலேயே அவளால் அவனிடம் தயக்கமின்றி உரையாட முடிந்தது. கல்மிஷமான பார்வை என்றுமே பெண்களிடம் நட்புணர்வைத் தோற்றுவிப்பதில்லை!

“சும்மா தான்…”

“ம்ம்ம்…” என்று எடுத்துக் கொடுக்க, அதை அவளிடமே கொடுத்து.

“நார்த் இந்தியன் பொண்ணுங்க போடற மாதிரி போட்டுக்க,” என்று கூற அவளும் அதைச் செய்தாள்.

அவனது ஷோல்டர் பேகிலிருந்த கூலரை அவளிடம் கொடுத்தவன், தானும் அணிந்து கொண்டான்.

அறையை விட்டு வெளியேறிக்கொண்டே, “வெளியே நான் என்ன செய்தாலும் கண்டுக் கொள்ளாதே… கொஞ்சம் கூட அசையாதே… எந்த வகையிலும் அதிர்ச்சியைக் காட்டாதே… சிரித்து பேசிக்கொண்டே வரவேண்டும். வேற எங்கயும் பார்க்காதே…” வரிசையாக அவளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க,

“ஆமா பெரிய மகாராஜா பார்… உத்தரவு போடறாங்க… அதுவும் வரிசையா!… நீங்க உத்தரவு போட்டவுடனே சரிங்க எஜமான்னு செய்வேன்னு நினைச்சீங்களா?” என்று அவள் ஆரம்பிக்க,

“ஆஹா கபாலிடாங்கற மாதிரி இங்கிலீஷ் ரிவர்டான்னு வசனம் பேச போறியா இங்கிலீஷ்?” கிண்டலாகச் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“பேசினாலும் பேசுவேன்… இங்கிலீஷ்ன்னு மறுபடியும் சொன்னா உங்க முகத்தில் ஒரு குத்து விட்டாலும் விடுவேன்…” என்று அவனைப் பார்க்காமல் சொல்லிக்கொண்டு வர, ரிசப்ஷனுக்கு சமீபமாக வந்தார்கள் இருவரும்.

வெளியே மாதவன் குட்டி தன் ஆட்களோடு நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

“குத்து தானே… எப்படி விடுவ?” என்றவாறு அவளை தன் புறத்திற்கு இழுத்து இடையோடு அணைத்துக்கொண்டு நடந்தான், முகத்தில் குறும்பு புன்னகையோடு!

அவளது உடல் அதிர்ந்தது.

இவன் என்ன செய்கிறான் அதுவும் பொது இடத்தில் என்ற கொதிப்பில் அவனிடமிருந்து விலக முயல,

“தமிழ்… கொஞ்சம் அலட்டாமல் வா… மாதவன்குட்டி நின்றுகொண்டு இருக்கிறான்…” பல்லைக் கடித்து கொண்டு கிசுகிசுப்பாக அவன் கூறினாலும் முகத்தில் புன்னகை உறைந்தே இருந்தது!

“நான் அலட்டறேனா?” என்று கடுகடுத்தவள், “அது யார் மாதவன் குட்டி?”

“என்னைப் பாலோ பண்ணிட்டு இருக்க ஆள்… அவனுக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் அவ்வளவுதான். நாம இப்படிப்போனா யாரோ ஹஸ்பன்ட் அன்ட் ஒய்ப்ன்னு கண்க்ளுட் பண்ணிடுவான்…” கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அவன் கூறினான்.

“என்ன…” அவளது இதயம் படபடத்தது!

“ம்ம்ம்… காட்டிக் கொள்ளாதே… சிரி…” என்று அவனும் புன்னகைத்தவாறே அவளை நடத்திக்கொண்டு போக,

“எங்கே இருக்கிறான்?”

“நமது கார் பக்கத்தில் நின்றுகொண்டு இருக்கிறான். திரும்பாதே… இரண்டு சுமோ நமது வண்டி பக்கத்தில் நிற்குது பார்… இரண்டு வண்டிலையும் ஆட்கள் இருக்கிறார்கள்…” என்றவன் அவளை மேலும் இறுக்கமாக தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடந்தான்.

சங்கடமாக நெளியத் துவங்கினாள் தமிழ்.

“ஸ்ரீதர்… தயவுசெய்து விடுங்க… பப்ளிக் பிளேஸ்…” கெஞ்சும் குரலில் அவள் கேட்டாள். அவளைத் திரும்பி பார்த்தவனின் கண்களை அவளால் பார்க்க முடியவில்லை. கூலர்ஸ் அணிந்திருந்த காரணத்தால்!

ஆனால் சிவந்திருந்த அவளது முகத்தைப் பார்த்தவனின் பார்வை காதலோடு கலந்து அவளைத் தழுவியது! இடையைப் பற்றியிருந்த அவனது பிடி இறுகியது.

“ப்ளீஸ்…” நடுக்கமாக வெளிவந்த வார்த்தைகளில் தன்னை முழுவதுமாக தொலைத்தவனால் அவளை விடமுடியுமென்றோ விட்டுக்கொடுக்க முடியுமென்றோ தோன்றவில்லை.

மிகவும் சிரமப்பட்டு தன்னை மீட்டுக்கொண்டவன்,

“கொஞ்ச நேரம் தான். அதுக்குள்ளே உன்னைக் கடித்து முழுங்கிட மாட்டேன். இப்ப அவன் நம்மை அடையாளம் கண்டுட்டா ரொம்ப கஷ்டம்”

“கூச்சமா இருக்கு…” கிசுகிசுப்பாக அவள் கூறினாள்.

“ஏன் இங்கிலீஷ்…?” குறும்பாக அவன் கேட்டான்.

“ப்ளீஸ்ஸ்…”

“நான் என்ன உன்கிட்ட ரொமான்ஸ் பண்ணவா இடுப்பை பிடிக்கறேன். ஒரு டூ மினிட்ஸ்…” அவள் புறம் குனிந்துவாறு கிசுகிசுப்பாகக் கூற, அவள் அவஸ்தையாக நெளிந்தாள். இடையைத் தழுவிக்கொண்டிருந்த கை அதன் மென்மையை உடையைத் தாண்டி உணர்ந்து கொண்டிருந்தது.

“எனக்கு இடுப்பை யார் தொட்டாலும் பிடிக்காது…” சற்று கோபமாகக் கூற, அவளது இடையை இன்னும் சற்று இறுக்கிப் பிடித்துக் கொண்டு,

“ஆஹான்…” என்று கேலியாகக் கூறியவன், “சொல்லிடுவேன்… அப்புறம் கோபப்படுவ… ” என்று கிண்டலாகக் கூற, அவள் இன்னமுமே நெளிந்தாள். அவளது அந்த கூச்சத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன அப்படி? சொல்லுங்க…” உள்ளுக்குள் பரபரப்பாக இருந்தது. அப்படி என்னதான் கூறுகிறான் என்று!

“இல்ல… இன்னொரு நாள் தனியாச் சொல்றேன். இப்ப நான் சொல்லி, நீ அடிச்சு, எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்த்து… எனக்கு இது தேவையா?” சிரித்துக் கொண்டே அவள் கேட்டாள்.

அவனை முறைத்தாள் அவள்… சரியான கள்ளன், “உன்னை பஸ் ஏத்தி விடவேண்டுமா வேண்டாமா?” ஒரு நொடி மனம் துவண்டு பார்த்தவள், அடுத்த நிமிடம்,

“கண்டிப்பா…” என்று கூறினாள்.

“அப்பக் கொஞ்ச நேரம் உன்னுடைய மவுத்தை க்ளோஸ் பண்ணிட்டு ஆடாம அசையாம வா…” என்று சிரித்து கொண்டே கூறியவன் ரிசார்ட்டுக்கு வெளியே வந்துவிட்ட பின் தான் அவளது இடையை விட்டான். தயாராக இருந்த ஆட்டோவில் அவளை ஏற்றியவன், அவனும் ஏறிக்கொண்டு,

“பஸ்ஸ்டான்ட் போங்க…” என்று ஆட்டோ டிரைவரிடம் கூறினான். ஆட்டோ பேருந்து நிலையத்திற்கு விரைந்தது.

தங்களைத் தாண்டி சென்ற மாதவன் குட்டியின் ஒரு சுமோ அவளுக்குள் கிலியை பரப்பியது. அதிலிருந்து ஆட்கள் எட்டிப்பார்க்கிரார்களா என்று பார்த்து கொண்டே அவள் வர, ஸ்ரீதரன் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அவளது நடுக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது.

எதுவாக இருந்தாலும் பார்த்துவிடலாம் என்ற முடிவில் இருந்தான்.

பின்னால் பிஸ்டல் இருப்பதை இரண்டொருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்.

“டென்ஷன் வேண்டாம் தமிழ்… நான் இருக்கேன்ல…” அவளது கையை அழுந்த பற்றிக் கொள்ள, அவனது கையை அவளும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அதில் அவன் மேல் அவள் கொண்ட நம்பிக்கையை மட்டும் அவன் பார்க்கவில்லை. தன்னை குறித்தான பயத்தையும் அக்கறையையும் பார்த்தான். மனதுக்குள் ஏதோ அசைந்தது!

எப்படியாவது ஜீவித்தேயாக வேண்டும் என்ற நிலையில் இருப்பவன் எதையும் செய்ய துணிந்து விடுவானே! இனி எந்த வழியும் இல்லை எனும் போது வருமே ஒரு துணிச்சல்… அது கஞ்சாவை விட மோசமானது. என்னதான் ஆகிறது பார்த்து விடுவோமே என்ற அதீத மனத்திடத்தைத் தந்து விடக் கூடியது. அது ஒருவிதமான போதை.

அந்தப் போதையின் வாழ்நாள் சற்று குறைவு தான். ஆனால் ஸ்ரீதரனைப் பொறுத்தவரை அந்தப் போதை அவனை வெறியேற்றிக் கொண்டிருந்தது. பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து விடாதே என்று நொடிக்கு நொடி நினைவுபடுத்தி அடக்க முடியாத அளவு வெறியேற்றிக் கொண்டிருந்தது.

ஸ்ரீதரன் துணிந்து தான் மாதவன் குட்டியின் முன்னாலேயே தமிழை அழைத்துக்கொண்டு வந்தான். அவனுக்கு அடையாளம் தெரியக்கூடாது என்று தான் அவனோடு ஒட்டிப்பிறந்த இரட்டையான தாடியை தியாகம் செய்து தியாச்செம்மல் ஆனான்.

ஆக மொத்தம் ஒரு மாதிரியாக என்னன்னவோ செய்து தமிழை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த போதும் மனம் ஒரு ஓரத்தில் தவித்துக்கொண்டிருந்தது.

அவளோடு இருக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறதே என்று!

திருவண்ணாமலை பேருந்து நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வளைவைப் பார்த்தவுடன் தான் அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. ஆனாலும் நடுக்கம் குறையவில்லை.

அவளது அந்த நடுக்கத்தைப் பார்த்தவனுக்கு இவளைத் தனியாக அனுப்பிவிட்டு நிம்மதியாக மாதவன் குட்டியை தேடிப்போக முடியாது என்று தோன்றியது.

“தனியா போக முடியுமா தமிழ்?” உண்மையிலேயே அக்கறையாக அவன் கேட்டான். தயக்கமாகத் தலையாட்டினாள்.

“நீங்க ஜாக்கிரதையா இருங்க ஸ்ரீதரன்…” வார்த்தைகள் வெளிவராமல் முரண்டுப் பிடித்தன… கண்களில் குளம்கட்டிய நீரோடு!

இதோ இப்போது இவன் போய்விட போகிறான். இனி இவனைப் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் கண்ணில் வழிந்தது. அந்த ஏக்கம் அவனது அடிமனதை அசைத்துப்பார்த்தது.

“வேளாவேளைக்கு சாப்பிடுங்க…” என்று அவனிடம் சாப்பாட்டு கேரி பேகை அவள் கொடுக்க, அதை ஆழ்ந்து பார்த்தவனால் ஏனோ தாள முடியாத உணர்வு ஏற்பட்டது.

“சிகரெட் ரொம்பப் பிடிக்காதீங்க… அப்புறம் மற்றதும் அப்படித்தான்… ”

உயிரை விட்டுப் பிரிவதை போல… இதயத்தை பியைத்து எடுத்துக்கொண்டு அவள் போவதை போல… இத்தனைக்கும் முதல் மாலை சந்தித்த பெண் என்பதே நினைவில்லை. காலம் காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததைப் போன்ற உணர்வு… அவனுள்ளே பொங்கிக் கொண்டிருந்தது!

கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்தவன், மூச்சை இழுத்து வெளியே விட்டான். ஒரு முடிவு செய்தவனாக அவளைப் பார்த்தான்.

திருச்சி செல்லும் பேருந்து புறப்பட காத்திருந்தது.

அவளது கையைப்பிடித்தவன், வேகமாக நடந்துபோய் அதில் ஏறி அமர்ந்தான். அவளுக்கும் மூச்சு வாங்கியது.

என்னதான் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கால் காயம் வலித்துக்கொண்டு தானிருந்தது.

“ஸ்ஸ்ஸ்… ம்மா…” என்று அவள் முட்டியைப்பிடித்துக் கொள்ள,

“ரொம்ப வலிக்கிறதா?” அவன் நிதானத்துக்கு வந்திருந்தான்.

“ம்ம்ம்ம்… வலிக்கவே இல்லை. நல்ல்ல்லா இருக்கு…” சற்று கோபமாக அவள் கூறினாள். ஹப்பாடா அவள் இயல்புக்குத் திரும்பி விட்டாள் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“ஹஹா… சரி அப்ப பஸ்ல இருந்து இறங்கி ஓடியே சோழவந்தான் போய்டுவன்னு சொல்லு…” என்று சிரித்தான்.

“உங்களுக்கு என் வலியப் பார்த்தா சிரிப்பா இருக்குல்ல…” என்று முகத்தைத் திருப்பி கொள்ள.

“ஏய் தொட்டாச்சிணுங்கி… ஒவ்வொன்றுக்கும் இப்படியா சிணுங்குவ? இந்தக் குட்டி பாப்பாவைப் போய் நான் பெரிய பாப்பான்னு நினைச்சுட்டேனே…” என்று மீண்டும் அவளை வார,

அந்தப் பாப்பா என்ற சொல் அவளைக்கொதிக்கச் செய்தது.

அவளது தந்தை சுந்தரத்திடம் மல்லுக்கு நிற்கும் ஒரே விஷயம் இந்தப் பாப்பா என்ற சொல்லுக்காகத்தான். எப்போதுமே அவர் அவளைப் பாப்பா என்று தான் அழைப்பது. அதனாலேயே புகழேந்தி இவளை பெரியப்பாப்பா என்றும் வாஸந்தியை சின்ன பாப்பா என்றும் ‘அன்போடு’ அழைத்து வம்பிழுப்பான்.

அத்தோடு விட்டுவிடுவானா?

“சின்ன பாப்பா பெரிய பாப்பா… சந்திச்சாலே கலக்கல் தான்ப்பா…” என்றும் தனது குரல் வளமையைக் காட்டுவது வழமையான ஒன்றானதால் அவளுக்கு அந்தப் பாப்பா என்ற சொல்லின் மீதே அதீத கடுப்பு தோன்றியிருந்தது. யாராவது பாப்பா என்றிழைத்து விட்டால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டுத் தான் மறுவேலை அவளுக்கு!

“வாட் பாப்பா… ஹவ் டேர் யூ ஆர் காலிங் மீ பாப்பா…” அவள் உறுத்து விழிக்க, அவளது அந்த முறைப்பு அவனுக்குச் சிரிப்பை வரவைத்தது.

“பாப்பா ஏன் முறைக்குது?” கள்ளச்சிரிப்போடு அவன் கேட்டான். அவனது பழைய அவதாரத்திற்கு வந்திருந்தான். அதாவது கலாய் மோடை ஆன் செய்திருந்தான்.

“ம்ம்ம் அதுக்கு உங்க மண்டையை உடைக்கவேண்டுமாம்…” என்று அதே தொனியில் கூறினாள்.

“பாப்பா ரொம்ப வயலன்ட் பாப்பாவா இருக்கே…” என்று அதற்கும் அசராமல் பதில் கொடுத்தவனை பார்க்கையில் கோபம் வந்தாலும் அதைப் பிடித்து வைக்க முடியவில்லை.

உதடுகளின் ஓரத்தில் அவளையும் மீறிப் புன்னகை வழிய,

“சிரிப்பு வந்தா சிரிக்கவேண்டும். அதை விட்டுட்டு இப்படி முறைக்க ட்ரை பண்ணக்கூடாது பாப்பா…”

“பாப்பா பக்கத்தில் இருக்கப் பீப்பா ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. அதை எப்போ தூக்கி வெளிய போடலாம்ன்னு யோசிக்கிறேன்.” என்று அவனது ராகத்தைப் படிக்க,

“அந்தப் பீப்பா பாப்பாவோடு சோழவந்தான் வருதாம்… முடிந்தால் அதைத் தூக்க சொல்லு பாப்பா…” என்று அவன் கண்ணை சிமிட்ட… அவள் அதிர்ந்து விழிப்பதற்கும் நடத்துநர் விசிலூதி வண்டியை ஓட்டுநர் கிளப்பவும் சரியாக இருந்தது.

“ஸ்ரீதரன்… என்ன நீங்க? உங்க வண்டி ஸ்பர்சால நிற்குது. நீங்க… இப்படி…” என்று அவள் தடுமாற.

“ம்ம்ம்… அது பாட்டுக்கு நிற்கட்டும், அதுக்கு காவலாகத்தான் மாதவன் குட்டி இருக்கிறானே…” எதையும் கண்டுகொள்ளாத குரலில் அவன் கூறினான். அவள் அதிர்ந்து விழித்தாள்.

“விளையாடாதீங்க ஸ்ரீ… கிளம்புங்க…” பேருந்து கிளம்பிக்கொண்டிருக்கும் பதட்டத்தில் அவளையும் அறியாமல் ஸ்ரீ என்று அழைத்துக் கூறிவிட, அவள் புறம் நன்றாகத் திரும்பி அமர்ந்தவன்.

“ஒன்ஸ் மோர் ப்ளீஸ்…” என்று கண்ணை சிமிட்ட… என்னவென்று புரியாமல் விழித்தாள்!

“என்ன?”

“அழகா ஸ்ரீன்னு கூப்பிட்டியே… அதைத்தான்…” என்று சிரித்துக்கொண்டே கூறினான். அவள் தலையில் கைவைத்துக்கொண்டு சிவந்த முகத்தைக் கவிழ்த்துக்கொண்டாள்.

கடவுளே இதற்கு எப்படியெல்லாம் கலாய்க்க போகிறானோ என்றெண்ணிக்கொண்டு,

“சரி சரி… தெரியாமல் சொல்லிட்டேன். தயவு பண்ணி விட்டுடுங்க… பச்சைபுள்ளை தாங்க மாட்டேன்…” கைகூப்பி அவள் கெஞ்சி, “கிளம்புங்க… அங்க உங்க வண்டி இருக்கு…”

“இருக்கட்டும் தமிழ்… உன்னைத் தனியா விட்டுவிட்டு என்னால் நிம்மதியா போக முடியாது. உன்னைக் கொண்டு வந்து சோழவந்தான்ல விட்டுடறேன்.”

“அப்ப உங்க கார்?”

“காரை பார்த்தா இப்ப மேடி கிட்ட மாட்டிக்க வேண்டியதுதான். எனக்குக் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கு இங்கிலீஷ்… அதை முடிச்சதுக்கு அப்புறம் அவன் என்ன அவனுடைய அப்பனையும் ஸ்ட்ரைட்டா டீல் பண்ணிக்கறேன்.” சிரித்துக்கொண்டே அவன் கூறினான்.

“ஆனால் அவ்வளவு காஸ்ட்லி கார்… இவ்வளவு கொழுப்பு ஆகாது உங்களுக்கு…” பல்லைக்கடித்துக் கொண்டு அவள் கடுப்படிக்க,

“ப்ச்… எப்ப பார்த்தாலும் அது காஸ்ட்லி இது காஸ்ட்லின்னு புராணம் தானா? இந்த சிச்சுவேஷனை கூட ரசிக்கவேண்டும் இங்கிலீஷ்… அதை விட்டுட்டு எப்பப் பார்த்தாலும் லாக்ரதம் புக் மாதிரி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பாலோ பண்ணிட்டே இருக்காத…”

“ஆமா… நல்லா ரசிங்க… ஒரு கோடி ரூபாய் காரை எவனாவது ஸ்வாஹா பண்ணட்டும். அதையும் ரசிங்க…” என்று முகம் திருப்ப,

“அதையும் ரசிச்சிட்டா போச்சு…” என்று அவன் அவளைப் பார்த்த பார்வையில் ரசனை என்ற ஒன்றைத்தவிர வேறில்லை.

“உங்களுக்கு பணத்துடைய அருமை தெரியாமல் வளர்த்துட்டாங்க ஸ்ரீதர். அதான் இந்த அடாவடித்தனம்…”

“ம்ம்ம் அப்படியா?” என்று கேட்டவனுக்கே அவனது சொத்து மதிப்பைப் பற்றி முழுவதுமாக தெரியாது என்பதையும் அவள் நம்புவாளா?

சிரித்துக்கொண்டான்!

இரண்டு சகோதரர்கள் சிறு இடத்துக்காக அடித்துக்கொள்ளும் போதெல்லாம் கிருஷ்ணர் சிரிக்கிறாராம்.

அதுபோலத்தான் இப்போதும் அவன் சிரித்தான்.

“தமிழ், கையில் இருக்க வரைக்கும் தான் பணம், நமது கைய விட்டு போனா பிணம்… அதனால் பணத்துக்கு நிறைய மதிப்பு கொடுக்க கூடாது…” என்று முடித்தவனின் மனம், ‘அந்த பணத்தை மையமாக பண்ணித்தான் இப்போதைய ஆடுபுலி ஆட்டமே தமிழ்… இதில் நான் புலியாகத்தான் இருப்பேன்…’ என்று சூளுரைக்க, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தது பேருந்து.

சரியாக அதே நேரத்தில் பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது இரண்டு சுமோவும், அவனைத்தேடி!

அதைக் கவனித்துவிட்ட ஸ்ரீதரன், “தமிழ் அசையாதே… அந்த சுமோ உள்ள வந்துட்டு இருக்கு…” அவளுடைய கழுத்து வளைவில் சாய்ந்துகொண்டு அவன் கூறினான். அவனது அந்த அருகாமை அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதிலும் பின்கழுத்தைத்தீண்டிய அந்த மூச்சுக்காற்று அவளைச் சிலிர்க்க செய்தாலும் அவளது கண் முன் தெரிந்த அந்த இரண்டு சுமோவும் அவளுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது.

அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் ஆறுதலாக கையைப்பிடித்து இறுக்கித் தன்னோடு வைத்துக்கொண்டான்.

அவளுள் அந்தக் கேள்வி விஸ்வரூபமெடுத்தது!

அவனை ஒரு குற்றவாளியாகவோ தவறு செய்பவனாகவோ பார்க்கவியலாமல் மனம் துவண்டது.

அவளையும் அறியாமல் அவனது தோளில் சாய்ந்து கொள்ள, ஸ்ரீதரன் அவளது தோளில் கைபோட்டுக் கொண்டு சிகையை இதமாக வருடினான்!

‘நான் உன்னை விட்டு விடுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை.’ இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அவனுக்கு முன்பாக படமாக வீற்றிருக்க, ஸ்ரீதரனின் முகத்தில் என்றுமில்லாத அமைதி.

தமிழ்நதிக்குக் காலையில் எடுத்துக்கொண்ட மருந்தின் ஆளுகையோடு மனக்குழப்பமும் ஒன்றாகச் சேர்ந்து கொள்ள, அவனது தோளிலேயே கண் மூடினாள்!

அந்த நேரம், ஸ்ரீதரன் மிகப்பெரிய முடிவொன்றைச் செய்தான்.

தமிழ்நதியை அவன் விட்டுத்தரப் போவதில்லை.

அவள் அவனுக்குரியவள். அவனுக்காகவே பிறந்தவள்!

அவளோடு தான் அவனது வாழ்க்கை!

அவளுக்காக அவன் செய்த முடிவுகள் பலரது தலைவிதியை முடிவு செய்தது. மாற்றி எழுதியது.

ஒரு வம்சத்தின் வரலாறு திருப்பி எழுதப்பட்டது!

திருத்தி எழுதப்பட்டது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 14

பகவான் சிரித்துக் கொண்டே கர்ணனிடம் சொன்னார், ‘அடே துஷ்டனே, எந்த சமயம் திரௌபதி நிர்வஸ்திரமாக்கப்பட்டுக் கொண்டிருந்தாளோ, அந்த சமயம் உன்னுடைய தர்மம் எங்கே போய் விட்டது? எப்போது அபிமன்யு அநியாயமாக கொல்லப்பட்டானோ, அந்த சமயம் உன்னுடைய தர்மம் எங்கே போய் விட்டது?…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

உங்கள் கருத்தைப் பகிருங்கள்