அத்தியாயம் 17
சக்கரவியூகம் என்பது போர்களத்தில் சுழலும் மரண இயந்திரம். சுழன்று கொண்டே இருக்கும் அந்த இயந்திரம் மரண ஹோமம் செய்ய காத்திருக்கும் சிறந்த போர்வீரர்களால் கட்டமைக்கப்பட்டது. அந்த வியூகத்தை உடைத்தேயாக வேண்டிய நிலையிலிருக்கும் நீ அர்ஜுனனா அபிமன்யுவா?
ஆலப்புழை ஆட்சித்தலைவர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆட்சித்தலைவரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மிக முக்கியமான அவசர சந்திப்புக்காக ஸ்ரீதர் தயார் செய்து கொண்டிருந்தான்.
ஒரு குடும்பத்தின் உட்பகையால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் தீவிரமாக இருந்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த கிருஷ்ணன் கோவில் படுகொலைகளை பற்றி அவனும் கேள்விப்பட்டிருந்தான்.
அப்போது அவன் அங்குப் பணியில் இல்லை. அங்கு வந்த போதே எச்சரிக்கை செய்திருந்தனர். அந்த நிகழ்வைப் பற்றியும், எப்போது வேண்டுமானாலும் அந்தப் பகைமை மீண்டும் வெடிக்கலாம் என்பதைப் பற்றியும்!
முக்கியமான அந்த அரச குடும்பத்தில் நடந்த குழப்பத்துக்கு மக்கள் கொடுத்த விலையும் அதிகம்.
ஆனாலும் மக்கள் மாவேலிக்கரையின் வல்லிய கொட்டாரத்தின் மீது கொண்ட அன்பை அவனும் தான் கண்களால் பார்த்து கொண்டிருந்தான்.
மூன்று வருடங்களாக மாவேலிக்கரை வராத இளைய தம்புரான் இப்போது மீண்டும் அங்கு வந்திருப்பது சந்தேகத்தை கிளப்பியது. அவர்களுக்குக் கிடைத்த தகவலின் படி திருவல்லா எம்எல்ஏ வாமனன் மிகத்தீவிரமாக ஸ்ரீதரன் வெர்மாவை தேடிக்கொண்டிருந்தார்.
அவர் தான் கிருஷ்ணன் கோவில் படுகொலைகளுக்குக் காரணம் என்றாலும் சட்டத்தின் முன் அது செல்லுபடியாகவில்லை. யாரோ முகம் தெரியாத இருவர் தாங்கள்தான் காரணம் என்று கூறி சரணடைந்து இருந்தனர்.
சட்டமும் தன் கடமையைச் செய்திருந்தது. அவர்கள் கீழ் நீதிமன்றத்தில் தண்டனையை வாங்கிக்கொண்டு மேல் கோர்ட்டில் விடுதலையும் பெற்று விட்டனர் என்பதுதான் அவனுக்குமே வேதனை.
இதுதான் இங்குள்ள சாபம்… வலியவன் மட்டுமே வலுக்க முடியும்!
ஓட்டைகளினால் நெய்யப்பட்ட சட்டை இந்திய சட்டம்.
அந்தச் சட்டத்தின் பிரதிநிதி அவன்! சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்ய கடமைப்பட்டவன். அதற்குத் தான் இந்த உத்தியோகமும்!
மனதின் மூலையில் ஒரு சிறு கசப்பு எழப் பார்த்தாலும் மனதைத் திடப்படுத்திக்கொண்டான்.
ஐஏஎஸ் படிக்கும் போது இருந்த தீவிரம் இப்போது நீர்த்துப் போயிருந்தது.
சுற்றிலும் நடக்கும் அநியாயங்கள், விதிமுறை மீறல்கள், அதிகார துஷ்ப்ரயோகங்கள் என அனைத்தும் அவனை சுரணையற்றவனாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தன.
வெளியிலிருந்து பார்க்கும் போது ஐஏஎஸ் அதிகாரி என்ற இந்த நிலை பலருக்கு பொறாமையைக் கொடுத்தாலும் ஸ்ரீதருக்கு பல சமயங்களில் மனச்சோர்வைத் தந்திருக்கிறது! நினைத்ததைச் செய்ய முடியாத பதவி எதற்கு என்ற மனச்சோர்வு!
ஆயிற்று… இனி அவனும் அந்த அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவான்… மாற்றப்பட்டுவிடுவான்.
வாமனன் போன்ற ஆட்கள் இருக்கும் வரை கண்டிப்பாக தங்களைப் போன்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டான்.
ஸ்ரீதரன் வெர்மாவை கண்டுபிடிக்க, அவனை முடித்துக் கட்ட அரசாங்கத்தின் ஒவ்வொரு இயந்திரத்தையும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தான் வாமனன். எதன் பொருட்டு இதைச் செய்கிறீர்கள் என்று யாரையாவது கேட்டால் அவர்கள் கையை காட்டுவது ஸ்ரீ வாமன வெர்மாவை மட்டுமே.
“கொச்சு தம்புரான் வந்தாகி விட்டதா?” ஆட்சித்தலைவரின் கேள்வியில் எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. அவருக்குமே ஸ்ரீதரனை பார்க்க வேண்டும். அத்தனை பிரச்சனையிலும் தன் பக்கத்தவர்களை அடக்கிவிட்டு அனைத்தையும் விட்டுவிட்டு நிம்மதியைத் தேடிப்போவதாக போனவனைப் பற்றி அவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும்.
“இன்னும் வரலை சர்…! வந்தால் நேரே நம்முடைய கான்பரன்ஸ் அறைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.”
பொதுவாக ஸ்ரீதரன் வெர்மாவின் குடும்பத்தினர் யாரும் இப்படி அலுவலகத்திற்கு வருவதில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அவர்களைத் தேடிப்போவது தான் மரபாக ஆலப்புழை வரையுமே இருந்தது.
ஸ்ரீசாக்தர் இருந்த போதும், ஸ்ரீவித்யாலக்ஷ்மி தம்புராட்டியையும் நேரில் சென்று பார்ப்பதுதான் எப்போதுமே நடந்து வந்திருக்கிறது.
ஆனால் ஸ்ரீதரன் அவற்றையெல்லாம் கடைப்பிடிக்கவில்லை. ஆட்சித்தலைவர் கைப்பேசியில் அழைத்து அவனைக் காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த போது எந்தவித அலட்டலும் இல்லாமல், மரபைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்காமல் நேரில் தானே வருவதாகக் கூறியிருந்தான்.
அதிலும் ஸ்ரீதரையும் பார்க்க விரும்புவதாகக் கூறவும் கலெக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு எளிமையை அந்த வல்லிய கொட்டாரத்தில் எவரிடமும் அவர் கண்டதில்லை. முன்னர் அங்கு டெபுடி கலக்டராக வேலை செய்த அனுபவமும் அவருக்கு இருந்ததால் ஸ்ரீதரன் வெர்மாவின் எளிமையைச் சொல்லி சொல்லி மாய்ந்து தான் போனார்.
அவற்றைக் கேட்ட ஸ்ரீதரும் இளைய தம்புரானை பார்க்க ஆவலாக இருந்தான்.
ஆனால் அப்போதைய தலையாய பிரச்சனை என்னவென்றால் இளைய தம்புரான் வந்ததிலிருந்து இரு பக்கமும் அடிபொடிகள் அடிக்கடி மோதிக்கொண்டார்கள். அதிலும் நான்கு சம்பவங்களில் பெரிய அளவில் இரு பக்கமுமே வன்முறை வெடிக்க இருந்தது.
கிருஷ்ணன் கோவிலையும் கோவிலகத்தையும் மையப்படுத்தி நடந்து கொண்டிருந்த இந்தச் சம்பவங்கள் பொது மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது.
சீப் செக்ரட்டரி அழைத்து என்னவென்று கேட்டிருந்தார்… நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறிக்கொண்டிருந்தாலும் வாமனன் மேல் படுதீவிர கோபத்தில் இருந்த வல்லிய கொட்டாரத்தின் ஆதரவாளர்களால் எப்போது வேண்டுமானாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட நேரிடும் என்று உளவுத்துறையும் எச்சரித்து இருந்தது.
அவர்களின் மேலும் தவறில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுடைய பிரியத்துக்குரிய தம்புராட்டியையும் அவரது கணவரையும் இழந்திருக்கின்றனர்… கிருஷ்ணன் கோவிலும் கோவிலகமும் ரத்தத்தில் குளித்திருக்கிறது! அதன் தாக்கம் இப்போது வரைக்குமே இருக்கிறது என்றால் எந்த அளவு அவர்கள் இளைய தம்புரானால் அடக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.
இப்போது வந்துள்ள இளைய தம்புரானும் இந்த விஷயத்தை எளிதில் விட்டுவிடப் போவதாக தெரியவில்லை எனவும் உளவுத்துறை எச்சரித்து இருந்தது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் வன்முறையை அரசாங்கம் விரும்பவில்லை. தேர்தலாவது சுமுகமாக முடிய வேண்டுமே என்றிருந்தது.
ஸ்ரீதரன் வெர்மா வன்முறையில் இறங்க மாட்டார் என்று அவனுக்கு ஒரு ஓரமாக நம்பிக்கை இருந்தது.
காலமும் அது ஏற்படுத்திய காயமும் அல்லவா இதற்கான பதிலை சொல்ல வேண்டும்.
***
கையில் திருமணப் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தாள் தமிழ்நதி.
இன்னும் ஏழு நாட்கள்!
நாட்களை எண்ணிக்கொண்டு தான் இருக்க முடிந்தது. ஆனால் அவளால் இந்தத் திருமணத்தை ஏற்கவே முடியவில்லை.
நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகி வந்தது. இவ்வளவு நாட்களும் லோகாவும் சித்ராவும் பத்திரிக்கை வைப்பதில் மும்முரமாக இருந்ததால் பெண்ணின் நிலை பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. சுந்தரம் அவ்வளவு உற்று நோக்குபவர் அல்ல… அதனால் அவரும் அறியவில்லை.
ஆனால் அந்த வேலை முடிந்து இருவருமாக வீட்டில் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த போது தான் தமிழ் விட்டத்தையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது.
அன்றுதான் வாஸந்தியும் சென்னையிலிருந்து வந்திருந்தாள், திருமணத்திற்காக!
தமிழ் திருமணம் முடித்து ஆலப்புழை சென்று விடுவாள் என்ற கவலையும் அவளுக்கு இருந்தது.
புகழுக்கும் அந்தக் கவலை இருந்தது என்றாலும் அவன் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. தனது அய்த்தான் கலக்டராக்கும் என்ற மிதப்பில் இருந்தவனுக்கு வேறெதுவும் தெரியவில்லை.
சில உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே பிரத்யோகமானது. அவர்களால் மட்டுமே உணர்ந்தும் உள்வாங்கிக்கொள்ளவும் முடியும்.
“அக்கா ஏன் மா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா?” தமிழைப் பார்க்கையில் வாஸந்தி கேட்ட முதல் கேள்வி அதுவே!
“தெரியலடி… ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறா… நானும் விதம் விதமா கேட்டு பார்த்துட்டேன். எதையுமே சொல்லாத பொண்ணை என்ன பண்றது?” சித்ரா கவலையாகக் கூறினார்.
“சென்னையில் இருந்தவரைக்கும் அக்கா இப்படி இல்லையேம்மா… நாங்க அன்னைக்கு கார்ல அனுப்பி விடும் போது கூட அவ்வளவு கலகலப்பாகத்தானே இருந்த… இப்ப இப்படி இருக்கான்னா…” சித்ராவிடம் கூறியவாறே தனக்கு முணுமுணுக்க, சித்ரா அவளை வித்தியாசமாகப் பார்த்தாள்.
“கார்ல அனுப்பி விட்டீங்களா? எப்ப டி? அவ அன்னைக்கு பஸ்ல வந்ததா தானே சொன்ன…” சித்ராவுக்கு திக்கென்று இருந்தது.
“இல்லமா… பெரியம்மா திட்டுவாங்கன்னு நாங்க சொல்லலை… அன்னைக்கு பஸ் டிக்கட் கிடைக்கலை… அதான்…” என்று அவள் மென்று விழுங்க, சித்ரா வாஸந்தியை முறைத்தாள்.
“நீங்கள்லாம் ரொம்ப பெரிய மனுஷிங்க ஆகிட்டீங்க… நீங்களே முடிவெடுத்து நீங்களே அனுப்பி விட்டு… எல்லாம் நல்லா இருக்குடி…” கடுகடுவென கூறினார்.
“இல்லம்மா… பெரியம்மா தான்…” என்று திருதிருவென விழித்துக் கொண்டே கூறினாள்.
அவளைப் பொறுத்தவரை குறும்புத்தனம் இருக்குமே தவிர, முக்கியமான பிரச்சனை என்று வந்தால் சித்ராவின் வார்த்தையைச் சற்றும் மீற மாட்டாள். தமிழ்நதியும் அதுபோலவே தான் என்பது தான் அவளது பிரச்சனை.
“அப்படித்தான் வரணும்ன்னு இருக்கா? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன?”
“இல்லமா… சொல்லக்கூடாதுன்னு இல்ல… பெரியம்மா திட்டுவாங்கன்னு…”
“பெரியம்மாவையே இழுக்காதடி… என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அக்காகிட்ட நான் சொல்லியிருக்க மாட்டேனா? ஒன்னு கிடக்க ஒன்னாகியிருந்தா என்னாவாகறது?”
அவர் கூறுவதும் உண்மைதானே… ஆனால் இவர்கள் நினைக்குமளவு அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே என்ற நினைவும் அவளுக்கு இருந்தது.
“காரில் வர்றது ஒரு பெரிய விஷயமாம்மா?” சற்று கோபமாகக்கூட இருந்தது வாஸந்திக்கு! சொல்லாமல் வந்தது தவறுதான் என்றாலும் உப்பு பெறாத விஷயத்தை ஏன் இவர்கள் ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தோன்றியது.
“ஒத்தை பொம்பளை பிள்ளையை அவ்வளவு தூரம் தனியா அனுப்பறது தப்புதாண்டி… இதில் உன்னுடைய எதிர்வாதத்தைக் கொண்டு போய் உடைப்பில் போடு… இன்னொருதரம் இப்படி ஏதாவது கோக்குமாக்கு பண்ணீங்க… தொலைச்சுடுவேன் பார்த்துக்க, பெரிய மனுஷிங்க…” என்று திட்டிவிட்டு போக, அவர் போன திசையை முறைத்துப் பார்த்தாள்.
தானே உண்மையுரைத்து தானே சிக்கி தானே திட்டையும் வாங்கிக்கொண்டு நிற்பது ஒருவிதத்தில் அவளுக்குப் புன்னகையை வரவைத்தது.
“இது ஆவறதுல்ல…” என்று நினைத்துக்கொண்டு தமிழ்நதியை பார்க்கப்போனாள்.
அன்று தமிழ்நதி அவளது சித்தி வீட்டில் தான் இருந்தாள். திருமண வேலைகளைப் பார்ப்பதற்காக பெரியவர்கள் அனைவரும் நிற்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.
தனியாக வீட்டில் இருக்க வேண்டாமென்று இங்கு அனுப்பிவிட்டிருந்தார் லோகாம்பாள்… இளையவர்கள் மூன்று பேராலும் மூத்த கிழவி என்று அழைக்கப்பெறும் அப்பத்தாவோடு!
“அப்பத்தா… இன்னைக்கு கோலா உருண்டை குழம்பு வெச்சு கொடுக்கறியா?”
அப்பத்தா செய்து தரும் கோலா உருண்டை குழம்பு தமிழ்நதிக்கு வெகுப் பிரியமானது. அவரது பக்குவத்தை அவரது மருமகள்கள் இருவரிலும் ஒருவர் கூட நெருங்க முடியவில்லை என்பது வேறு விஷயம்.
வெறுமையான பார்வையோடு அவரது பேத்தி கேட்டபோது அந்தப் பெரியவருக்கு மனதைப் பிசைந்தது.
திருமணக்களை என்பதே சற்றும் இல்லாமல் இருந்த அவளது தோற்றத்தை நினைத்து மனம் ஏதோ தவறென்று உணர்த்தியது.
“உனக்கு இல்லாததா ராசாத்தி…” என்று அவரும் பட்டியில் கட்டியிருந்த இளம் வெள்ளாட்டை அடிக்கச் சொல்லி… அடுத்த இரண்டு மணி நேரத்தில் கறி பிரியாணியோடு, கோலா உருண்டை குழம்பு, கறி வறுவல் என்று செய்து அசத்தியிருந்தார்.
அவரது அப்பத்தா அப்படித்தான். சமையலில் அவர் படுபயங்கர வல்லுநர் என்பதோடு ஒரு ஆட்டை அடித்தால் சுற்றியுள்ள உறவுகளுக்கு எல்லாம் மீதமிருக்கும் கறியை பட்டுவாடா செய்து விடுவார்.
இதற்காகவே பட்டியில் ஆடும் கோழியும் வகைதொகையில்லாமல் வளர்த்து வருபவர்!
“அப்பத்தா… நீ வைக்கிற குழம்பை நினைக்கும் போதே எனக்கு ஆனந்தக் கண்ணீர் தான் வருது…” அப்பத்தாவை வம்பிழுத்துக் கொண்டிருந்த வாஸந்தியை மெல்லிய புன்னகையோடு பார்த்தாள் தமிழ். தட்டில் நிரப்பிக்கொண்டு தன்னுடைய அறைக்குக் கிளம்பியிருந்தாள்.
“அம்புட்டு பிரியமா ராசாத்தி…” அப்பத்தா ஆசையாகக் கேட்டார்.
“அம்புட்டு காரம் அப்பத்தா…” என்று கிண்டலாக கூறிய வாஸந்தியை முறைத்தார் அவர்…” ஆனால் என்ன எப்படியோ ருசியைக் கொண்டு வந்தர்ற… அநியாயத்துக்கு டேஸ்டா செஞ்சிருக்க கிழவி…” என்று கிண்டலடித்து இலவசமாக சிலபல தலைக்குட்டல்களை வாங்கிக்கொண்டாள் அவள்!
“கத்துக்கடி வாயாடிக்கொமரி… ஒண்ணுமே செய்யத்தெரியாம மாமியா வீட்டுக்குப் போனா கொமட்டுல குத்துவாடி உன் மாமியா…” என்று அவளை நிஜமாகவே குமட்டில் இடித்துக் காட்டினார்.
“ம்ம்ம்… நீ எதற்கு இருக்கக் கிழவி… உன்னை கூட்டிட்டு போய்ட மாட்டேன்…” என்று கன்னத்தை தடவிக்கொண்டே கூறினாள்.
“அடப்பாவி…” என்று அவர் வாயடைத்துப் போக, சிரித்துக்கொண்டே தட்டை எடுத்துக்கொண்டு தமிழ்நதியை தேடிப்போனாள்.
அறையில் தமிழ்நதியோ கையில் தட்டை வைத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தக் கண்களில் வாஸந்தி கனவைப் பார்க்கவில்லை. மகிழ்ச்சியும் தெரியவில்லை.
“அக்ஸ்… என்னாச்சு உனக்கு?”
அவளிடமே நேரடியாகக் கேட்டு விட்ட தமக்கையை உணர்வற்ற பார்வை பார்த்தாள்.
“என்ன அக்ஸ்… நீ தானே கோலா உருண்டைக் குழம்பு கேட்ட… அதையும் சாப்பிடாம விட்டத்தை பார்த்துட்டு தட்டுல கோலம் போட்டுவிட்டு இருக்க?”
வாசந்தி பிடிவாதமாக கேட்க, “அப்பத்தா கையால் செய்து சாப்பிடனும் போல இருந்தது வாசு…” குரல் கமற கூறினாள்.
“எங்க க்கா போய்ட போற நீ? இங்க இருக்க அலெப்பி தானே… இதற்கா இவ்வளவு சீனை போடற?” வாஸந்தி சலித்துக்கொண்டாள்.
“ம்ம்ம்… ஆனால் போனா திரும்ப வர முடியுமா?”
வெறுமையான அவளது சொற்கள் வாஸந்திக்கு சந்தேகத்தை எழுப்பியது..
“என்னக்கா சொல்ற? திரும்ப வர முடியுமாவா? லூசா நீயி?” முறைத்துக்கொண்டே கேட்டாள். தமிழ்நதி பதில் கூறவில்லை.
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவும் இல்லை. இந்தத் திருமணம் வேண்டாமேன்பதில் மட்டும் மனம் உறுதியாக இருந்தது. ஆனால் அதைப் பெரியவர்களிடம் கூற மனதில் உறுதி இல்லை.
“அக்கா உண்மையை சொல்லு… என்னாச்சு? இந்தக் கல்யாணம் உனக்கு புடிக்கலையா?” வாஸந்தி கிடுக்கிப்பிடி போட,
அதற்கும் தமிழ் பதில் கூறாமல் தட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் கண்ணீர் குளம்!
“அக்கா… நீ என்னுடைய தமிழக்காவான்னு எனக்கே சந்தேகமா இருக்கு? எவ்வளவு தைரியமா இருப்ப? எவ்வளவு தெளிவா பேசுவ?” ஆற்றாமையோடு அவள் கூறினாள். நிமிர்ந்து தங்கையை பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது!
“எல்லாம் அவனோடு போய்டுச்சே வாசு…” கமறிய குரலில் திக்கித்திணறி அவள் கூறினாள்.
“எவனோடு?” கூர்மையாகப் பார்த்தாள் வாஸந்தி.
“சொன்னா… என்ன நடக்க போகுது? ஒன்னும் யூஸ் இல்ல…” விரக்தியாக அவள் கூறினாள். தமிழ்நதியின் நிலை முற்றிலுமாக சரியில்லை என்பதை உணர்ந்தாள். அவள் அவளது நிலையில் இல்லை என்பதும்… பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதும் அவளுக்குப் புரிந்தது.
“ஏன்க்கா இப்படி பேசற? எனக்குப் பயமா இருக்குக்கா…”
“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் வாசு… என்னால் முடியாது…” உடையவா உடைக்கவா என்று காத்திருந்த கண்ணீர்க்குளம் கடைசியில் உடைந்தே விட்டது.
“எனக்கு வேண்டாம்…” என்று புலம்பியவளை, “க்கா…” என்று அதிர்ந்து பார்த்தாள்.
“இதை முதலையே சொல்லலாம்ல…”
“அப்பச் சொல்ல ஒரு காரணமும் இல்லையே வாசு…” முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் அவள் குலுங்க,
“இப்ப எப்படிக்கா சொல்றது? இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணத்தை வெச்சுக்கிட்டு…” அவளுக்குப் பயமாக இருந்தது. தமக்கை முற்றிலுமாக தன் நிலையை விட்டு மாறியிருந்தாள்!
“நான் என்ன பண்ணுவேன்டி… அதுக்காக மனசாட்சியை ஒதுக்கி வெச்சுட்டு நடக்க முடியலையே…”
“அக்கா… எல்லாருக்கும் அவங்க ஆசைப்பட்ட வாழ்க்கையா கிடைச்சுடுது? கிடைச்ச வாழ்க்கையை பெஸ்ட்டா வாழத்தான் பழகிக்கணும்… அத்தானும் ஐஏஎஸ் ஆபீசர் க்கா… அவரை ஏன் வேண்டாம்ன்னு சொல்ற? அவரை விடவா ஒருத்தரைப் பார்க்க போற?” மனத்தாங்கலுடன் அவள் கேட்டாள்.
“எனக்கு அவனைத் தவிர வேற யாருமே பெஸ்ட்டா தெரியலையே…” அதற்கும் முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
“இந்த நேரத்தில் கல்யாணத்தை நிறுத்த கூடாதுக்கா… அது தப்பு… உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் கெட்டு போய்டும்…” பெரிய மனுஷியாக வாஸந்தி உபதேசம் செய்ய,
“கல்யாணம் நடந்தாலும் கெட்டு போய்டும் வாசு…” முதுகு குலுங்கியது. வாஸந்திக்கு கண்களில் கண்ணீர்!
“க்கா…”
“அதான் வாசு… யாருடைய வாழ்க்கையும் கெட்டுப்போக கூடாதென்று முடிவு பண்ணிட்டேன்…” என்றவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.
இப்போது அந்தக் கண்களில் உறுதி வந்திருந்தது.
“என்னக்கா சொல்ற?”
“ஆமா வாசு…” கண்களைச் சிரமப்பட்டு திறந்துகொண்டு கூறினாள்.
“அக்கா…” அதிர்ச்சியில் நா எழும்பாமல் அழைத்தாள்.
“அப்பா தென்னை மரத்துக்கு வாங்கி வெச்சிருந்த பூச்சி மருந்தை…” என்று கூறும் போதே அவளுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வர, மெல்ல மயக்க நிலைக்குச் சென்றாள் தமிழ்நதி!
ஸ்ரீதரனின் தமிழ்நதி!






😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍