arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 18
சக்கரவியூகம் chevron_right பகுதி 18 / 26

அத்தியாயம் 18

visibility 880
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (14 மதிப்பீடுகள்)
பகிர்

ஏழு என்ற எண்ணைக் கொண்டு நாம் ஒரு சக்கர வியூகத்தை அமைக்கலாம்.உதராணமாக நாம் 1/7 என்ற பின்னத்தை எடுத்துக் கொள்வோம். இந்த பின்னத்தை கணக்கிட்டால் மதிப்பு 0.142857 எனக்கிடைக்கும். ஒவ்வொரு முறையும் இந்த பின்னத்தை 1 முதல் 6 வரை பெருக்கினால் 142857 என்ற எண்கள் மாறி மாறி வரும்.

சக்கரத்தை உடைத்த ஒன்று:

இப்பொழுது நாம் 1/7=0.142857142857 என்ற எண்ணை ஏழால் பெருக்கினால் கிடைப்பது 1 ஆகும்.எனவே மேலே உள்ள எண்ணை ஏழால் பெருக்கினால் சக்கர அமைப்பு உடைந்து விடும்.எனவே முதல் தரத்திற்கு வந்து வீரராக வெளிப்படலாம்.ஏழால் பெருக்குவதைப் போன்ற மிக முக்கியமான ரகசியம் தெரியாததால் அபிமன்யு இறுதி அடுக்கில் சிக்கி மாண்டார்.

இப்போது சொல் ஸ்ரீதரா… உன்னால் அந்த சக்கரவியூகத்தை உடைக்க முடியுமா?

இளையத் தம்புரான் இன்னும் சில நிமிடத்தில் வந்து விடுவார் என்று ராஜீவ் ஆட்சியரை அழைத்துக்கூறியிருக்க, அவர் அவனை வரவேற்க விரைந்தார்… ஸ்ரீதரோடு!

இளையத் தம்புரான் மரபைப் பற்றி கவலைப்படாமல் நேரே வரும்போது தானும் மரபை கைவிடுவது தவறில்லை என்று நினைத்துக்கொண்டார்… அவருக்குத் தெரியவில்லை. அவன் மற்றவர்களுக்கு காரோட்டவும் கூடத் தயங்குவதில்லை என்று!

அதிலும் தமிழ் அவனிடம் ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து உனக்கும் டிபன் வாங்கிக்கொள் என்று கூறிய காட்சியைப் பார்த்திருந்தால் நிச்சயமாக நெஞ்சுவலி கண்டிருக்கும் அந்த மனிதருக்கு.

ஸ்ரீதருக்கு மனதுக்குள் வியப்பு.

கலெக்டர் எப்போதுமே எதற்கும் வளைந்து கொடுப்பதில்லை என்ற முடிவில் இருப்பவர். அவர் அப்படி இருப்பதனால் தான் அவனுக்கும் சற்று பொருந்தக் கூடியவராக இருந்தார். அவரே இப்போது இந்த அளவு இறங்கி வந்திருக்கிறார் என்றால் எவ்வளவு மரியாதையான குடும்பம் அது என்று எண்ணிக்கொண்டான்!

ஸ்ரீதரனை வரவேற்கப் போய்க்கொண்டிருக்கையில் அந்தக் குடும்பத்தோடு தனக்கு எவ்வளவு பரிச்சயம் என்பதையும் தம்புராட்டி எவ்வளவு அன்பானவர் என்பதையும் கலெக்டர் கூறினார். ஸ்ரீதரின் மனதில் இளையத் தம்புரானை பற்றிய அபிப்ராயம் உயர்ந்து இருந்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவனது கார ஆட்சியர் அலுவலக மாளிகைக்குள் நுழைந்தது.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து கம்பீரமாக கண்களிலிருந்த கூலரை கழட்டி தனது போலோ வி நெக் டிஷர்ட்டில் மாட்டிக்கொண்டு இறங்கிய ஸ்ரீதரன் வெர்மாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.

அந்த மிடுக்கும் தேஜசும் கவர்ச்சியும் இவர்களுக்கு மட்டுமே உரியது போல!

கலெக்டர் கீழிறங்கி வந்து அவனை வரவேற்க, “ஜோஸ் ஏட்டா… எப்படி இருக்கீங்க?” முகம் முழுக்க புன்னகையைப் பூசிக்கொண்டு ஸ்ரீதரன் கேட்க, கலெக்டருக்கு முகம் மலர்ந்தது.

“தம்புரானுக்கு என்னை நினைவிருக்கு போல இருக்கே…” என்று சிரித்தவர் அவனருகில் சென்று கை கொடுத்தார்.

“ஏட்டனை எப்படி மறக்க முடியும்? பெரிய தம்புரானின் பிரியத்துக்குரியவர் ஆயிற்றே நீங்க…” ஸ்ரீதரன் புன்னகையோடு கூறினான்.

“ப்ச்… நல்லவர்களைக் கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான்…” உண்மையிலேயே ஜோசுக்கு மனதில் வருத்தமாக இருந்தது.

“இவர்…” என்று அருகிலிருந்த ஸ்ரீதரை காட்டிக் கேட்டான்.

“அவர் டெபுடி கலெக்டர்… உங்களுடைய பெயர் தான். அவரும் ஸ்ரீதர்…” என்று ஜோஸ் சிரித்தார்.

“ப்ளீஸ் டூ மீட் யூ ஸ்ரீதர்…” என்று அவனிடமும் கைக்குலுக்கினான்.

“மீ டூ சர்…!”

இளையத் தம்புரானின் கைக்குலுக்கலிலிருந்த ஆளுமையே ஸ்ரீதரை அயர வைத்தது. இவன் அனைவரையும் அடக்கி ஆளப் போகிறவன் என்பதை அவனது உடல் மொழி ஸ்ரீதருக்கு உணர்த்தியது.

அதையும் தாண்டி இளையத் தம்புரானின் கண்களில் தென்பட்ட சிநேகபாவம் ஸ்ரீதரை உடனடியாக நட்புக்கொள் என்று தூண்ட, அவனுக்குச் சற்று தயக்கமாகக் கூட இருந்தது.

இளைய தம்புரானின் அந்தஸ்துக்கு முன் தாங்களெல்லாம் ஒன்றுமே இல்லையென்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே அந்த வசீகரம் இருக்குமே… அந்த வசீகரத்தை ஸ்ரீதரன் வெர்மாவிடம் இவன் உணர்ந்தான்.

ஜோஸிடம் பேசிக்கொண்டே முன்னே சென்றுகொண்டிருந்தவன், சற்று நின்று ஸ்ரீதரையும் தங்களோடு சேர்த்து கொள்ள, அந்தச் செய்கையும் ஸ்ரீதரை வசீகரித்தது. ஆளுமையோடு கூடிய புரிதல்!

“அப்புறம் ஜோஸ் ஏட்டா… என்ன விஷயமா என்னை பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள்?” அந்த கான்பரன்ஸ் ஹாலில் இருந்த சிறு சோபாவில் அமர்ந்தபடி இளையத் தம்புரான் கேட்க,

“உங்களுக்கே தெரியுமே தம்பிரானே… இன்னும் பத்து நாட்களில் தேர்தல் தேதி அறிவிச்சுடுவாங்க… ஆனால் இங்க நிலைமை சரியில்லை. உங்க ஆட்களை நீங்கக் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும்…” சற்று தயக்கத்தோடு அவர் கூறினார்.

“அப்ப… வாமனனை என்ன செய்யறதா உத்தேசம் உங்களுக்கு?” கால் மேல் காலிட்டு அமர்ந்து கொண்டு அதுவரை இருந்த நட்புத் தோரணை சற்று மாறி அமர்த்தலாகக் கேட்டான். அவனது அந்த மாற்றத்தை வியப்பாக மனம் குறிப்பெடுத்தது.

அமர்த்தலாக நிதானமாக… எப்படி இந்த மனநிலை சாத்தியமாகிறது இவனுக்கு என்றும் கூட தோன்றியது!

எதிராளியினால் அவனது குடும்பமே நிர்மூலமாகியிருக்கிறது! எவ்வளவோ இடைஞ்சல்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன… அதிலும் இப்போதைய நிலைமை பெரும் சவால் தான் என்பதும் திண்ணம்.

ஆனாலும் அவன் காட்டும் நிதானம் ஸ்ரீதரை யோசிக்க வைத்தது. இதற்குப் பின் வெறுமனே குடும்ப சொத்து தகராறோ வாரிசுரிமை தகராறு மட்டும் இல்லையென்று தோன்றியது. அதைக் காட்டிலும் ஏதோவொன்று இன்னும் பெரிதாக… மிகப்பெரிதான ஒன்று இருக்க வேண்டும்.

அவனது கேள்வியில் ஜோஸ் இன்னமும் தடுமாறினார்… வாமனனை அடக்காமல் இவனை மட்டும் அடக்க வேண்டும் என்று முயன்றால் முடியுமா?

“அவரும் இப்போது வந்துவிடுவார் தம்புரானே… கொஞ்சம் இருவரும் ஒத்துழைக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் பேசித்தீர்க்கலாம்… நாங்கள் இருக்கிறோமே…” சற்று திணறி அவர் கூறிமுடித்தார்.

“பேசி முடிக்க வேண்டிய விஷயமே இல்லை இது ஜோஸ் ஏட்டா… முடிந்து போன விஷயம்… தோண்டித் துருவாதீர்கள். நடப்பவை எல்லாம் நடக்க வேண்டியவையே…” என்றவன், அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல எழப் பார்த்தான்.

“தயவு செய்து சர்…! கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்களால் உங்கள் ஆட்களைக் கட்டுப்படுத்த முடியும். அதற்குப் பின் நீங்கக் கேட்பதை நாங்கள் முடிந்த அளவு செய்து தருகிறோம்…” ஸ்ரீதர் முன் வந்து பேச, அவனை சிறுப்புன்னகையோடு பார்த்தான்.

“முதல் பாயின்ட்… நான் கட்டுப்படுத்த மாட்டேன். எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையெனும் போது நான் யாரைக் கட்டுப்படுத்த முடியும்?…” என்று இடைவெளி விட்டவன்,

“இரண்டாவது. உங்களால் என்ன செய்ய முடியும்?” தீர்க்கமான பார்வையோடு அவன் கேட்டான்.

“அதை நான் சொல்கிறேன் ஸ்ரீதரா…” என்று உள்ளே நுழைந்தான் வாமனன்.

சட்டென ஒரு இறுக்கமான மௌனம் சூழ்ந்தது அங்கு!

வாமனன்… நெற்றியில் ஜவ்வாது மணத்தோடு கூடிய சந்தன பொட்டு… வேஷ்டி சட்டை… நடுத்தர வயது. கண்களில் எப்போதும் குடியிருக்கும் கூர்மையான பார்வை!

அந்தக் கூர்மை கள்ளத்தனத்தைப் பறைசாற்றுவதாக அவனுக்குத் தோன்றியிருக்கிறது!

“என்ன வாமனா? எப்படி இருக்க?” கேலிப்புன்னகையோடு ஸ்ரீதரன் கேட்டான். அதே புன்னகையை அவனுக்குப் பரிசாக்கினான் வாமனன்.

“என்னோட சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல் வந்துட போகிறது? நீ தான் மூன்று வருஷமா ஊரை விட்டு ஓடிட்ட…” கிண்டலாக அவன் கூறினான். அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல்,

“நான் ஊரில் இல்லை சரி… அப்பவும் உன்னால் எந்த ஒன்றிலுமே கை வைக்க முடிந்திருக்காதே…”

ஸ்ரீதரனின் பதில் உண்மைநிலையை கூற, உள்ளுக்குள் கோபம் பொங்கியது வாமனனுக்கு.

“ஜோஸ்… நான் யார் கூடவும் பேச வரலை… கிருஷ்ணன் கோவிலை அரசாங்கம் எடுத்துக் கொள்ள போகிறது! அதற்கான பூர்வாங்க வேலைகளை முடித்துவிட்டேன். யார் எதிர்த்தாலும் கண்டிப்பாக இது நடக்கும்…” என்றவன் அவ்வளவுதான் என்று எழுந்து கொள்ள, அதுவரை பொறுமையாக அமர்ந்திருந்த இளையத் தம்புரான்,

“ஜோஸ் ஏட்டா… கிருஷ்ணன் கோவில் போவோர் வருவோரின் சொத்தல்ல… வல்லிய கொட்டாரத்துக்கானது. அதை அரசாங்கம் எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி பிடிவாதமாக இதைச் செயல்படுத்துவேனென்று சொன்னால் யாருடைய உயிருக்கும் நான் உத்திரவாதம் கொடுக்க முடியாது…”

மிகவும் அடக்கப்பட்ட குரலில் கூறினாலும் எரிமலையின் சீற்றத்தை அந்தக் கண்களில் கண்டான் வாமனன். அந்தக் கோபத்தை ரசித்துப் பார்த்தான். அவனைக் கோபப்படுத்தி பார்ப்பதில் உள்ள சுகமே அலாதியானது என்று நினைத்துக்கொண்டான் வாமனன்.

அதே ரசனையோடு, “அரசாங்கம் என்பது நான் தான் ஸ்ரீதரா… நான் எடுக்கும் முடிவே இறுதியானது. அந்தக் கிருஷ்ணன் கோவில் இனி அரசாங்கத்துக்கானது. இதில் நீ மூன்றாம் மனிதன்…” என்று முடித்தான். அவனது தந்திரத்தை ஸ்ரீதரன் கையாளத் துவங்கினான்.

“நீ என்ன வேண்டுமானாலும் முயற்சித்துக்கொள் வாமனா… கடைசி சாவி என்னிடம் தான் இருக்கிறது! என்னைத் தாண்டித்தான் எதுவுமே என்பதை மறந்துவிட்டாய்… நான் இருக்கும் வரை வரலாற்றை நீ கையிலெடுக்க விடமாட்டேன். இதைச் சவாலாகவே நினைத்துக்கொள்…” என்றவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள,

“பார்க்கலாமே… இதில் நீயா நானா என்று…” இருவருக்குமிடையில் மாட்டிக்கொண்ட ஜோசும் ஸ்ரீதரும் தலையைப் பியைத்துக் கொண்டார்கள்.

இருவரையும் அழைத்துப் பேசிச் சமாதானப்படுத்தலாம் என்றால்…

தலையை உலுக்கிக்கொண்டான் ஸ்ரீதர்.

இளைய தம்புரானின் கைப்பேசி அழைத்தது.

அங்கிருந்தவர்களை மேல் பார்வையாகப் பார்த்தவன், கைப்பேசியை காதுக்குக் கொடுத்தான். பார்வை மாறியது. புருவம் முடிச்சிட்டது.

சொல்ல வேண்டியதை மெல்லிய குரலில் கூறிவிட்டு கைப்பேசியை வைத்தான்.

ஜோசுடன் மற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தான் வாமனன்.

அருகில் அமர்ந்திருந்த வாமனனை கருத்தில் கொண்டு தன்னை தானே முழுவதுமாகக் கட்டுப்படுத்திக்கொண்டு, மௌனமாகச் கைப்பேசியையே வெறித்துப் பார்த்தான்.

கைப்பேசியில் அவனிடம் சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு மனம் ரணமாகிக்கொண்டிருந்தது.

அவனது தமிழ்நதி!

அவளது முட்டாள்தனமான செயல்!

அவளது செயல் முட்டாள்தனமாக இருக்கலாம்… ஆனால் அவள் இல்லாமல் இருக்க முடியுமா என்று மனம் கேள்வி எழுப்பியது. அந்த கணமே அவளைக் காண மனம் துடித்தது, தவித்தது!

ஆனால் அவனது உணர்வுகளை வாமனன் அறிய விடவில்லை. தெரிந்தால் தமிழுக்கு தான் ஆபத்து. மேலும் மேலும் அவளை நோகடிக்க அவன் விரும்பவில்லை.

பார்வையில் உணர்வுகளைத் துடைத்துவிட்டு ஸ்ரீதரை பார்த்தான்.

அவனது பார்வையின் அர்த்தத்தை ஸ்ரீதரால் உணர முடியவில்லை.

இன்னும் ஸ்ரீதருக்கு விஷயம் சொல்லப்படவில்லை என்று தோன்றியது.

அவனது சிந்தனை இப்படி ஓடிக்கொண்டிருக்கும் போதே ஸ்ரீதரின் கைப்பேசி அழைத்தது.

மதுரையிலிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவன்,

“எக்ஸ்கியுஸ் மீ…” என்று மன்னிப்பு கேட்டுவிட்டு காதில் வைத்துக் கிசுகிசுப்பாக,

“ஹலோ…” என்றழைத்தான்.

“நான் வாஸந்தி பேசறேன். தமிழோட சிஸ்டர்…” சுருக்கமாகத்தான் அவளும் கூறினாள்.

“சொல்லுங்க வாஸந்தி…” மெல்லிய குரலில் தமிழில் அவன் கேட்டான். அதைக் கேட்ட வாமனன்,

“என்ன தமிழோ?” என்று சற்று கேலியாக ஜோசிட்ம் கேட்டுவிட்டு… ஸ்ரீதரனின் புறம் திரும்பி,

“ஏன் ஸ்ரீதரா… நீ ஏதோ ஒரு தமிழ் பெண்ணைக் கல்யாணம் செய்துக்கிட்டயாமே?” குத்தலாக அவன் கேட்டதின் அர்த்தம் ஸ்ரீதரன் மட்டுமே அறிந்தது. அவனது முஷ்டி இறுகியது.

பதில் எதுவும் கூறாமல் வாமனனை கூர்ந்து பார்த்தான். அந்த நொடியில் அவனைக் கொன்றுப்போடும் கோபம் வந்தது. எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் தமிழையும் இழுப்பான்… சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.

ஆனால் இப்போது பொறுமை மிகவும் தேவை. அந்தப் பொறுமை இல்லாவிட்டால் வாமனனை கையாள்வது சிரமம். அதோடு தமிழ்நதியை பற்றி அவன் அறியவே கூடாது. இப்போதைக்கு ஏதோ ஒரு தமிழ் பெண் என்ற அளவு மட்டுமே அறிந்திருக்கிறான். இனியும் அப்படி மட்டுமே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

எதுவும் பதில் கூறாமல் ஸ்ரீதரின் பேச்சுக்குக் காதைத் தீட்டிக்கொண்டிருந்தான்.

“வாட்… என்ன சொல்றீங்க வாஸந்தி…” ஸ்ரீதர் அதிர்ந்து கேட்டான்.

“ஆமா… இப்ப மதுரையில் அட்மிட் பண்ணிருக்கிறோம். ஸ்டமக் வாஷ் பண்ணிட்டாங்க… ஆனால் ஐசியூ ல தான் இருக்கா…” என்று கூறினாள்.

“ஒரு நிமிஷம்… வெளியே வந்துடறேன்.” என்றவன். ஜோஸிடம் தலையாட்டிவிட்டு வெளியேற, “ஜஸ்ட் எ மினிட் ஜோஸ் ஏட்டா…” என்று இளையத் தம்புரானும் வெளியே வந்தான்.

“என்ன சொல்றீங்க வாஸந்தி… இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு ஏன் இப்படி?” அவனது குரல் பதற்றமடைய… வாஸந்திக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

ஸ்ரீதரின் அருகில் வந்த இளையத் தம்புரான்… அவனிடமிருந்து கைப்பேசியை வாங்கினான்… ஸ்ரீதர் அதிர்ந்து அவனைப் பார்த்தான்.

“ஒரு நிமிஷம் ஸ்ரீதர்…” என்று மலையாளத்தில் அவனிடம் கூறியவன், கைப்பேசியை காதுக்குக் கொடுத்து,

“வாசு…” என்று வாஸந்தியை பெயரிட்டு அழைக்க, ஸ்ரீதர் எதுவும் புரியாமல் பார்த்தான். வாஸந்திக்கும் அந்தப் புதிய குரலை அடையாளம் தெரியவில்லை.

“நீங்க?” என்று அவள் இழுத்தாள்.

“நான் பார்த்திபனுடைய ஃப்ரென்ட்…” என்று சுருக்கமாக கூறினான். வாஸந்திக்கு எதுவோ புரிவது போல இருந்தது.

“அந்த முட்டாள் என்ன பண்றா வாசு?” அவன் அதுவரை காட்டிய நிதானம் பறந்து போனது. மனம் நடுங்கிக்கொண்டிருந்தது.

“இல்ல… இப்பதான் டாக்டர் வந்து பார்த்தாங்க…” என்று கூறியவளின் குரல் கமறியது.

“முட்டாள். முட்டாள். அந்த முட்டாள் கிட்ட போனை கொடு…”

“இல்ல அவ இன்னும் மயக்கத்திலிருந்து…” என்று கூறும்போதே இடைமறித்தவன்,

“இல்ல வாசு. கண் முழுச்சுட்டா. கொண்டு போய் கொடு…” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை சூடு.

அவ்வளவு கோபத்தை இளையத் தம்புரானிடம் ஸ்ரீதர் எதிர்பார்க்கவில்லை. அதுவும் தமிழில் அவர் பேசும்போதே ஒருவாறாக யூகித்திருந்தான்.

ஆக தமிழ்நதி கேட்ட ஸ்ரீதரன் வெர்மா இவரா? இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவள் கேட்டதையும் இவன் இப்போது பேசுவதையும் தொடர்புப்படுத்திப் பார்த்தது மனம்… மனதைப் பிசைந்தது.

வாஸந்தி போனை எடுத்துக்கொண்டு சென்றாள்.

ஐசியூ விற்கு வெளியே அமர்ந்து அழுது கொண்டே இருந்த லோகாவையும் சித்ராவையும் கண்ணீரோடு பார்த்தாள். சுந்தரம் உடையவில்லை என்று காட்டிக்கொண்டிருந்தாலும் அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஒரு பெண்ணைப் பெற்று வளர்ப்பதென்பது அவ்வளவு எளிதா?

ஒவ்வொரு நாளும் அவளது வளர்ச்சியைப் பார்த்து ரசித்துப் படிக்க வைத்து ஆளாக்கி அவளுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பது தவறா?

தான் பெற்ற பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைப்பதும் தவறா என்று தான் அவளது மனதில் நினைவு ஓடிக்கொண்டிருந்தது!

ஐசியூ என்பதால் ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட உடுப்பை அணிவித்து அவளை உள்ளே அனுமதித்தனர். மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோலஸ்வரூபத்திலிருந்து தகவல் பறந்திருந்தது.

ஐசியூ வின் குளிர் அவளது மனதைத் தாக்கியது. எத்தகைய முடிவை எடுத்து விட்டாள் இந்தத் தமிழ்நதி என்று நினைத்தபோது நடுங்கியது.

காதலென்று வந்துவிட்டால் யாரையும் கண்ணுக்குத் தெரியாதா?

பெற்ற அன்னையும் தந்தையும் முக்கியமில்லையா?

சகோதர சகோதரிகள் அவளது நலத்தை விரும்புவார்கள் இல்லையா?

அவள்மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பத்தா அவளுக்குத் தேவைப்படவில்லையா?

அப்படி என்ன பொல்லாத காதல் வேண்டியிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு!

இத்தனை பேரையும் மறக்கச் செய்துவிட கூடியதா அந்தக் காதல்?

அவளுக்குச் சற்றும் புரியவில்லை. தமிழ்நதி இவ்வளவு தீவிரமாக ஒருவனை விரும்புவாள், அவனுக்காக உயிரை விட்டுவிடத் துணிவாள் என்பதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பார்த்திபனின் நண்பன் என்று பேசியவன் தான் காதலனா?

எதாவது புரிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்!

ஆனால் புரிந்தால் தானே?

கட்டிலில் கிழிந்த நாராகக் கிடந்தாள் தமிழ்நதி… செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை. ஸ்டமக் வாஷ் செய்து இருந்தனர்… முகம் வீங்கியிருந்தது. அருகில் இருந்த நர்ஸ் ட்ரிப்சை மாற்றிவிட்டுச் சென்றாள்.

“அக்கா…” மெல்லிய குரலில் அழைத்தாள் வாஸந்தி.

சிரமமாகக் கண்விழித்துப் பார்த்தாள்.

“உனக்குப் போன்…” என்று அவளிடம் போனை நீட்ட, “ம்மா இங்க போனெல்லாம் கொடுத்துப் பேசச் சொல்லக் கூடாது…” என்று அந்த நர்ஸ் எதிர்ப்பு தெரிவிக்க, “ஒரு ரெண்டே வார்த்தை தாங்க…” என்று அவள் கேட்டாள்.

“யார் போனில்…” சிரமாகக் கேட்டாள் தமிழ். ஸ்டமக் வாஷ் செய்ய டியுபை உள்ளே விட்டதால் தொண்டை முற்றிலுமாகச் செயல்பட மறுத்தது. வலி வேறு!

“பார்த்திபனுடைய ஃப்ரென்ட்டாம்…” என்று அவள் கூறிய வார்த்தை அவளை உயிர்க்க செய்யப் போதுமானதாக இருந்தது. அவசரமாகச் கைப்பேசியை வாங்கியவள் சிரமத்தைப் பார்க்காமல் கையூன்றி எழுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.

“ஸ்ரீ…” குரலில் அவ்வளவு வலி… கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

“வாயை மூடு… அறிவிருக்காடி உனக்கு? முட்டாள். முழு முட்டாள்…” ஸ்ரீதரன் கொதித்தான் அங்கே!

ஸ்ரீதரனுக்கு கோப அதிர்வின் அளவு அதிகமாகிக்கொண்டிருந்தது.

தமிழ்நதி கண்களில் கண்ணீர் நதி!

“எதுக்காக இப்படிச் செய்த தமிழ்? செத்து போய்ட்டா எல்லாம் முடிஞ்சு போய்டுமா? கொஞ்சம் கூட எதையுமே யோசிக்க மாட்டியாடி?”

நிதானத்தை முற்றிலுமாக இழந்திருந்தான் ஸ்ரீதரன். அவனால் எந்த நிலையையும் சமாளிக்க முடியும். வாமனனை கூடச் சமாளித்துவிட்டு தான் வந்திருந்தான். ஆனால் தமிழ்?

அவனால் சற்றும் தாள முடியவில்லை. அவளில்லாத உலகத்தில் அவனுக்கென்ன வேலை என்று தோன்றியது!

அவனுடைய உலகம் அவளால் மட்டுமே ஆக வேண்டும் என்று மனம் தவித்தது.

“ஒரு வார்த்தை என்கிட்டே பேசியிருக்கலாமே… இத்தனை நாளில்…” கஷ்டப்பட்டு வார்த்தைகளைத் தேடித்தான் அவளால் பேச முடிந்தது.

“பேசலைன்னா நினைக்கவே இல்லைன்னு அர்த்தம் கிடையாது தமிழ்…”

“அது எனக்குத் தெரியாதே… அவ்வளவு பழக்கம் இல்லையே…” குரல் உடைந்தது அவளுக்கு!

“பழக்கமே இல்லாதவனுக்காக எதுக்குடி உயிரை விடத் துணிஞ்ச? அறிவிருக்கவ செய்யற காரியமா இது?”

“ஏன்னா… உங்களைத் தவிர வேறு யாரையுமே நினைக்க முடியலை… பத்திரிக்கையில் ஸ்ரீதர் வெட்ஸ் தமிழ்நதின்னு பார்க்கும்போது எனக்கு உங்களை மட்டுமே நினைக்கத் தோன்றியது. சரி கல்யாணம் முடிந்ததுக்கு அப்புறமும் அதே மாதிரி தோன்றினா? அது எவ்வளவு பெரிய துரோகம்? அதை ஏன் நீங்கப் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?”

ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூறினாள். அதைக் கேட்டவனுக்கு நிலம் நழுவியது!

உண்மைதானே!

எப்படியும் தமிழ்நதி தனக்குத்தான் என்ற உறுதியில் தான் வேண்டுமானால் இருக்கலாம்… ஆனால் அவளுக்கு அந்த உறுதியைத் தரத்தவறியது யார் குற்றம்?

ஆனாலும் அந்த நேரத்தில், தன்னுடைய உயிரே தனக்கு சொந்தமில்லை எனும்போது எப்படி அந்த உறுதியை அவன் தர முடியும் என்று மனம் கேட்டது.

அப்போது அந்த முடிவை எடுத்தான். வாழ்வானாலும் இறப்பானாலும் அது அவளுடனே போகட்டும் என்று!

“உன்னை விட்டுக் கொடுத்துட மாட்டேன் தமிழ்… அதை நீ நம்பனும்…”

“அதை ஒரு தடவை கூட என்கிட்டே நீங்கச் சொல்லவே இல்லை.” கண்ணீரோடு அவள் கூறினாள்.

ஒரு பெரிய மூச்சை எடுத்துக்கொண்டான்.

“இப்போதும் என்னால் சொல்ல முடியாது. இங்க தலைக்கு மேல் பிரச்சனைகள் இருக்கிறது. நாளைக்கு நான் உயிரோட இருப்பேனான்னு கூட எனக்கு தெரியாது. இப்படி இருக்க நிலைமைல என்னால் உன்னை இதில் இழுக்க முடியாதென்று முதல்லையே உன்கிட்ட சொல்லிட்டேன்…”

“நீங்க எதுவுமே செய்ய வேண்டாம்… உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீங்க என்ன செய்யறீங்கன்னு கூட இனிமே கேட்கமாட்டேன். ஆனால் ஒரு வார்த்தை… எனக்காக வெய்ட் பண்ணுன்னு சொல்லுங்க… என்னுடைய வாழ்நாள் முழுக்க வெய்ட் பண்றேன்.”

அவளது காதல் ஸ்ரீதரனை கொன்றது! இத்தனை காதலை அவனால் அப்போது தாங்க முடியவில்லை. ஆனால் அவன் கண் முன் இருந்த பிரச்சனைகள் அவனை விழுங்கப் பார்த்தன.

“நம்ம காதலை விடப் பெரிய விஷயம் கிருஷ்ணன் கோவிலும் கோவிலகமும் தமிழ்… என்னைப் பொறுத்தவரை…! அதை நான் காப்பாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். அந்தப் போராட்டத்தில் நான் உயிரோடு இருப்பேனா என்றே தெரியவில்லை. என்றைக்கு இருந்தாலும் என் தலைமேல் கத்தி தொங்கி கொண்டு தான் இருக்கிறது கண்ணம்மா…”

முதன் முறையாக அவன் தன் மனம் விட்டு அவனது பிரச்சனையை அவளிடம் கூறினான்.

“அப்படி நீங்கப் போனா உங்க பின்னாடியே நான் வந்துடுவேன்…” முகத்தை மூடிக்கொண்டு தமிழ்நதி அழ… ஸ்ரீதரனின் கண்களில் கண்ணீர் மேகங்கள்!

மற்றவர் முன்னிலையில் தன்னுடைய உணர்வுகளைக் காட்டக் கூடாது என்று நினைப்பவன். எந்த நேரத்திலும் அதை விடாமல் பின்பற்றியவனும் கூட… ஆனால் ஒரு பெண்ணின் காதலின் ஆழத்தைத் தாள முடியாமல் அவனது கண்கள் நீரில் மிதந்தன.

“உடம்பை பார்த்துக்க தமிழ்… இனிமே பாய்சன் சாப்பிட போறதா இருந்தா சொல்லு… நானும் உன் கூட ஜாயின் பண்ணிக்கறேன்.” கேலியாகச் சொல்வது போலத் தோன்றினாலும் அவன் உண்மையை மட்டுமே கூறினான்.

“சரி சொல்றேன். அதுக்குமே உங்கபோன் நம்பர் எனக்கு வேண்டும். எங்க இருக்கீங்கன்னே தெரியாமல் எப்படி சொல்றது?” குத்தலாக அவள் கேட்டாள். அவள் நிலைக்குத் திரும்பியதை அவன் உணர்ந்தான்.

“டெபுடி கலெக்டர் ஸ்ரீதர் சர் கிட்ட கேள்… அவர் கூடத்தான் இருக்கிறேன்.” என்று இயல்பாகக் கூறினாள். அவள் அதிர்ந்தாள்.

“அவர்… எனக்குப் பார்த்த மாப்பிள்ளை…” திணறியது அவளது குரல்.

“ம்ம்ம்… தெரியும்… எல்லாமே தெரியும் தமிழ்… அதான் நான் சொன்னேனே… பார்க்கலைன்னா நினைக்கவே இல்லைங்கறது அர்த்தம் கிடையாது. அவர் கிட்ட பேசிடலாம்ன்னு தான் இன்றைக்கு அவரைப் பார்க்க வந்தேன். அதுக்குள்ளே நீ இப்படியொரு முட்டாள்தனத்தை செய்து வெச்சிருக்க, நான் பார்த்துக்கறேன்டா… எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்க மாட்டேனா? நம்பு தமிழ்…”

“உங்களை நம்பாம வேறு யாரை நம்புவேன்?” தழுதழுத்தாள் அவள். அவனுக்குமே குரல் உடைந்திருந்தது. விட்டால் இப்போதே பறந்து சென்று அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. அவனது அந்த வார்த்தைகளை எல்லாம் அருகிலிருந்து தடுமாற்றத்தோடு கேட்டுக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

“உங்களை இப்போது பார்க்க முடியாதா?” ஏக்கமாக அவள் கேட்டாள்.

“இல்லம்மா… இங்க இருந்து அசையக் கூட முடியாது. பிரச்சனை ரொம்ப அதிகமா இருக்கிறது.”

“ப்ளீஸ்… ஒரு தடவை…”

“சாரி தமிழ்… எங்க இருந்தாலும் உன்னை நான் கவனிச்சுட்டே தான் இருப்பேன்… அதை மட்டும் நம்புடா… ஆனால் இப்போது என்னால் வர முடியாது. கொஞ்ச நாள் பொறுத்துக்க, இங்க இருக்க பிரச்சனையை முழுசா முடிச்சுட்டு வந்துடறேன். ப்ளீஸ் தமிழ்…”

“நான் இப்படியே செத்து போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? அப்பக் கூட என்னைப் பார்க்க வர மாட்டீங்களா?” மன அழுத்தம் மிகுந்திருக்க ஆற்றாமை தாள முடியாமல் தான் கேட்டாள். கேட்டவளுக்கே கேட்டதின் பொருள் பிடிக்காமல் தான் கேட்டாள்.

முகம் இறுகினான் ஸ்ரீதரன்!

“இன்னொரு தடவை என்னை நீ இப்படி எமோஷனல் ப்ளாக்மைல் செய்யலாமென்று நினைக்காதே… இப்போது எமோஷன்ஸ்க்கு என்கிட்ட வேலையே இல்லை.”என்று கறாராக முடித்துவிட்டான்!

மௌனமாகக் கண்களில் கண்ணீரோடு கைப்பேசியைப் பார்த்தாள் தமிழ் நதி.

ஸ்ரீதரனின் தமிழ்நதி!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

"நான் என் தாயின் கருவிலிருக்கும் போது என் தந்தை அவளுக்கு விளக்கியதை கேட்டிருக்கிறேன், ஆனால் சக்கர வியூகத்தின் உள்ளிருந்து தப்பித்து வெளியே வரத்தெரியாது, ஆகவே நீங்கள் மீண்டும் சீக்கிரமாக வந்து என்னை மீட்க வேண்டும் எச்சரிக்கை" என்றான் அபிமன்யு. ஒப்புக்கொண்டார் தருமர்,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

உங்கள் கருத்தைப் பகிருங்கள்