அத்தியாயம் 19
“நான் என் தாயின் கருவிலிருக்கும் போது என் தந்தை அவளுக்கு விளக்கியதை கேட்டிருக்கிறேன், ஆனால் சக்கர வியூகத்தின் உள்ளிருந்து தப்பித்து வெளியே வரத்தெரியாது, ஆகவே நீங்கள் மீண்டும் சீக்கிரமாக வந்து என்னை மீட்க வேண்டும் எச்சரிக்கை” என்றான் அபிமன்யு. ஒப்புக்கொண்டார் தருமர், சொல்லியபடியே சக்கரவியூகத்தை தகர்த்து வழி செய்து உள்ளே சென்று அபிமன்யு உக்கிரமாய் போர்செய்தான். ஆனால் துரோணர், கர்ணன், துச்சாதனன், அசுவத்தாமன் ஆகியோர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவர்கள் மீண்டும் சக்கரவியூகத்தை வழியை அடைத்து உள் புகுந்தனர் பதினாறு வயது சிறுவனை போர் விதிகள் அனைத்தையும் மீறி அவனது கைகள், கால்கள், தலை என ஒவ்வொன்றாய் துண்டித்து கொன்றனர்.
இப்போது சொல் ஸ்ரீதரா நீ அர்ஜுனனா இல்லை அபிமன்யுவா?
அங்கிருந்த நாற்காலியில் மௌனமாகச் சாய்ந்து அமர்ந்தான் ஸ்ரீதரன் வெர்மா.
மனதில் சொல்ல முடியாத அழுத்தம். அவ்வப்போது தோன்றும், எங்காவது கண்காணாமல் போய்விட்டால் என்ன என்று?
ஆனால் காலம் தன்னை மீண்டும் மீண்டும் அதே சுழலுக்குள் இழுத்து விடுகின்றதே!
கண் காணாமல் போய்விடுவதுதான் இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வா என்று யோசித்தான். அது எவ்வளவு பெரிய சுயநலம் என்று மனம் சாடியது. ஒவ்வொருவரின் பிறப்புக்கும் அர்த்தம் உண்டு… தன்னுடைய பிறப்பின் அர்த்தமும் கிருஷ்ணன் கோவிலுக்காக இருக்கலாம்… இதைத் தாண்டியும் இருக்கலாம்.
ஆனால் இதற்கு நடுவில், ஒரு பெண், அவளது காதல், அவளது பிடிவாதம்… இவை அவனைப் பெரிதும் பயமுறுத்தியது. அவளாகப் பயமுறுத்த நினைக்கவில்லை தான் ஆனால் உள்ளுக்குள் பயந்தான் ஸ்ரீதரன். அவளது காதலைக்கண்டு மட்டுமே பயந்தான். அவளுக்காகப் பயந்தான். அவள் எப்போதும் நன்றாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பயந்தான்.
கைப்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அவனையும் அறியாமல் கண்ணீர் குளம் அவனது கண்களில்! அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால்? கண்டிப்பாக எதுவும் ஆகாது. தனது தாயும் தந்தையும் கிருஷ்ணன் கோவிலுக்காகத் தன்னை ஈன்ற ஆத்மாக்கள் ஒவ்வொருவரும் தனக்கு துணையிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டவன், ஒரு பெரிய மூச்சோடு நிமிர்ந்து அமர்ந்தான்.
அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீதர் இன்னமும் தலை நிமிர்த்தவில்லை. திருமணம் நிச்சயமாகி, ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் தற்கொலைக்கு முயன்றது எவ்வளவு பெரிய அதிர்ச்சியோ அதைக் காட்டிலும் அதிர்ச்சியைத் தந்தது இளையத் தம்புரானின் வார்த்தைகள்!
அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இவர்களுக்கு இது போன்ற செயல்களெல்லாம் விளையாட்டாகத் தெரிகிறதா? உள்ளுக்குள் கோபம் கனன்றது.
திருமணத்தைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும் தன் அன்னையும் தந்தையும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்தபோது மலைப்பாக இருந்தது.
இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டிருந்தவனின் தோளில் கை வைத்தான் ஸ்ரீதரன் வெர்மா.
“சாரி ஸ்ரீதர். அவள் இப்படியொரு காரியத்தைச் செய்வாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எப்படியும் இன்றைக்கு உங்களிடம் பேசிவிட நினைத்தேன்… ஆனால் அதற்குள் என்னனவோ நடந்துவிட்டன…” என்று உண்மையாக வருத்ததுடன் மலையாளத்திலேயே அவன் கூறினான். ஒற்றைக் கையால் தலையைத் தாங்கியவன் இன்னமும் நிமிரவில்லை.
“தமிழ் செய்ததுக்கு நான் தான் பொறுப்பு… நீங்க எடுக்கும் முடிவுக்கு நான் உடன்படுகிறேன் ஸ்ரீதர்…”
நிமிர்ந்து அவனைப் பார்த்தான் ஸ்ரீதர். நிமிடங்களுக்கு மதிப்பில்லை என்று யார் சொன்னது? இவனுக்குத் தெரியும்… நிமிடத்தில் வாழ்க்கை மாறுவதென்றால் என்னவென்று? கையில் கிடைத்த பொருள் நிமிடத்தில் கை நழுவவது என்றால் என்னவென்று!
“என்ன முடிவெடுக்க முடியும் தம்புரானே… எங்கள் குடும்பம் மிகவும் எளிமையானது. நானும் எளிமையானவன். உங்களைப் போன்றவர்களுடன் போட்டியிடும் அளவு…” என்று கூறப்போனவனை பேசவிடாமல் தடுத்தான் ஸ்ரீதரன். இருவருக்குமிடையில் மலையாளத்திலேயே சம்பாஷனை நடந்தது.
“நான் அப்படி நினைக்கவில்லை. பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேனே… இந்த விஷயத்தில் நீங்கள் எடுப்பதுதான் முடிவு ஸ்ரீதர்…”
“உங்களுக்காக உயிரை விடத்துணிந்த பெண்ணை நான் திருமணம் செய்வதா? அது சாத்தியம் இல்லை.” அவனை நிமிர்ந்து பார்க்காமல் அவன் கூறிய வார்த்தைகள் ஸ்ரீதரன் வெர்மாவின் உதட்டில் சிறுபுன்முறுவலை ஏற்படுத்தியது. உள்ளுர அவன் எதிர்பார்த்ததும் இதைத்தானே!
“தேங்க்ஸ்…” என்றவன், “அப்ப உங்க மனதை சமாதானப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்? கண்டிப்பாகச் செய்கிறேன். உங்களுக்காக…” மனமார அவன் கூறினான்.
அவனது முகம் உணர்வுகளைத் துடைத்திருந்தது.
“நீங்கத் திறமையான வியாபாரியாக இருக்கலாம்… உங்களது ரத்தத்தில் ஊறியிருக்கும் ஆளுமைத்திறன் இதையும் கொடுக்கல் வாங்கலாகப் பார்க்கலாம்… ஆனால் எனது உணர்வுகள் விற்பனைக்கு அல்ல…” என்றவன் எழுந்து கொண்டான்.
அதற்கு மேலும் இளையத் தம்புரனிடம் பேச முடியும் என்று தோன்றவில்லை. அவர் மேலிருக்கும் பிரமிப்பு மாறுவதை அவனே விரும்பவில்லை. இன்னும் சில நாட்களில் மனைவியாகி விடுவாள் என்று நினைத்த பெண்ணைச் சட்டென்று விட்டுத்தர அவன் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர் அல்லவே.
ஆனால் என்ன? இதுநாள் வரை அவளிடம் அவ்வளவாகப் பேசாமல் இருந்ததால் பெரிய அளவு ஏமாற்றம் தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டான். அவனது அந்தப் பதில் ஸ்ரீதரனை கவர்ந்தது. நேர்மையானவர்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும்… அத்தகையவர்களை அவன் மிஸ் செய்ய விரும்புவதில்லை.
“உங்களை மதிக்கிறேன் ஸ்ரீதர். இப்போதைக்கு இந்தப் பேச்சை ஆறப் போடலாம்…” என்று இடைவெளி விட்டவன்,
“உங்கள் உணர்வுகள் தான் விற்பனைக்கல்ல… ஆனால் நட்பை நான் கேட்கலாம் தானே…” என்று புன்னகைக்க, உண்மையிலேயே அந்த நொடி ஸ்ரீதரன் வெர்மா அவனைப் பெரிதும் வசீகரித்தான்.
இவன் வித்தியாசமானவன். உண்மையானவன். மரபுகளைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாதவன். ஸ்ரீதரின் மனதில் இளையத் தம்புரானை பற்றிய மரியாதை மேலும் உயரத்தான் செய்தது.
பதில் பேசாமல் அவனது கையை இளையத் தம்புரானிடம் கொடுக்க, அழுத்தமாகப் பற்றிக்கொண்டான் அவன்! அந்தப் பற்றுதலில் தெரிந்த நட்பு அவனை ஆற்றுப்படுத்தியது.
“ஸ்ரீதர்… இதை மட்டும் நினைவு வெச்சுக்கங்க… உங்களுக்கு ஒரு பொண்ணை செட் பண்ணாம…” என்று தமிழில் சூளுரைக்க ஆரம்பிக்க, அவன் கையெடுத்து வணங்கினான்.
“தெய்வமே… போதுமே… அய்யாவும் அம்மாவுமா வெச்ச ஆப்பு போதும் தம்புரானே…” அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை சற்று மாறிப் புன்னகையோடு கூறினான்.
“இந்தக் கெட்ட பேரைத் துடைக்காமல் ஓய போறதில்லை. நீங்க வேண்ணா பாருங்க…” என்று சிரித்துக்கொண்டே மீண்டும் ஆரம்பித்த ஸ்ரீதரன் வெர்மாவை பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் ஸ்ரீதர்.
“வேண்டவே வேண்டாம்… ஒரு நல்ல பொண்ணா பார்த்து நானே லவ் பண்ணி, நானே செட் பண்ணி, நானே கல்யாணம் பண்ணிக்கறேன் தெய்வமே… தம்புரானோட ஹெல்ப் வேண்டாவே வேண்டாம் தெய்வமே…”
“ஸ்ரீதர்… ப்ளீஸ்… நமக்குள்ள பேசும்போது இந்தத் தம்புரான் எல்லாம் வேண்டாமே… ஜஸ்ட் ஸ்ரீ போதும்…” இயல்பாகக் கூறினான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
அவன் அதை வெறும் பேச்சுக்காகக்கூட சொல்லவில்லை என்பதும் உண்மையாகத்தான் சொல்கிறான் என்பதும் புரிந்தது.
மென்மையாகப் புன்னகைத்தவனின் தோளில் கைபோட்டுக் கொண்டான் ஸ்ரீதரன் வெர்மா.
“ஸ்ரீ… இப்போது கல்யாணம் நின்றால் கண்டிப்பா அவர்கள் குடும்பத்தில் பெரிய குழப்பம் தான் வரும்… அதை எப்படிச் சமாளிக்க போகிறீர்கள்? அதிலும் இங்க இவ்வளவு குழப்பத்துக்கிடையில்…” கேள்வியாக அவனைப் பார்த்தான் ஸ்ரீதர்.
“ம்ம்ம்… பார்த்துக்கலாம் ஸ்ரீதர்…” என்று அவன் புன்னகைத்து, “உங்கள் வீட்டில் இருக்கவங்கவளை நீங்களும் சமாதானப்படுத்த வேண்டும் இல்லையா…?” என்று கேட்டான்.
“ம்ம்ம்… ஆமா… அம்மா கொஞ்சம் தெளிவா இருப்பார்கள். ஆனால் அவங்களையும் சமாளிக்க வேண்டும். பார்த்துக்கலாம்…” என்று அவன் கூற, அவனது தோளைத் தட்டிக்கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றான்.
***
அன்று அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஸ்ரீதரனுக்கு… எப்போதும் படுக்கையில் சிறிது நேரம் புரண்டு பின் எழுபவன் அன்றைக்குச் சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டான்.
தனிமை உறுத்தியது. தாயின் மடியை மனம் தேடி களைத்தது! தமிழிடமும் அவ்வளவாகப் பேசவில்லை. ஸ்ரீதரனிடம் கைப்பேசியை வாங்கி பேசியதோடு நின்று விட்டிருந்தது. அவனிடமும் கைப்பேசி எண்ணை அவளிடம் தர வேண்டாம் என்று கூறியிருந்தான்.
சில காரியங்களை முடித்தபிறகு தான் வேறெந்த நினைப்புமே என்ற தீவிர முடிவில் இருந்தான்!
தேதியை பார்த்தான்…
செப்டம்பர் பதினைந்து!
உடல் அதிர்ந்தது! ஒவ்வொரு வருடமும் மன அழுத்தம் தாங்க முடியாமல் தன்னை தவிக்க வைக்கும் தேதியல்லவா!
மறக்கவே முடியாத நாள்… தாயும் தந்தையும் ஒருசேர தன்னை விட்டு சென்ற நாள்.
வாமனனின் சதிகளை அறியாமல் அன்று தேவ பிரசன்னத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் ஸ்ரீ சாக்தர்… எப்போதும் நடக்கும் தேவ பிரசன்னம் தான்.
கிருஷ்ணன் கோவிலில் எதாவது பெரிய விழா நடக்க இருக்கும் போது தவறுகள் நேர்ந்து விடாமலிருக்க தங்களது குடும்பம் எப்போதுமே கடைப்பிடித்து வரும் முறை இந்த அஷ்டமங்கள தேவ பிரசன்னம்.
தங்கள் குடும்பம் என்றில்லை. ஒவ்வொரு தேவஸ்தானத்திலும் அஷ்டமங்கள தேவப்ரசன்னம் பார்ப்பதை ஒரு கடமையாகவே வைத்திருந்தனர்.
ஏதாவது தவறுகள் நேர்ந்திருந்தாலும் அது தேவ பிரசன்னத்தில் வெளிப்பட்டு விடும் என்பது ஐதீகம்.
அஷ்டமங்கள தேவப்ரசன்னம் என்பதை அறிவித்தவுடன் ஊர்மக்கள் முன்னிலையில் ஒரு குழு கோவிலில் கூடும். குழு என்பது நன்கு கற்றறிந்த பிரசன்ன ஜோதிடர்கள். குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.
தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும்.
கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம் நடக்கும் நிமித்தங்கள் துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார்.
கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.
உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள்.
கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.
அந்த அஷ்டமங்கள தேவப்ரசன்னத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாம பணிக்கர் கிளம்பும் போதே மலத்தை மிதித்துவிட்டு வந்திருந்தார்… அந்த மனிதருக்கு அப்போதே மனம் திடுக்கிட்டது. அடுத்து ஒருவன் ஆட்டை வெட்டுவதையும் பார்த்து விட்டார்…
மனம் நடுங்கிக்கொண்டிருந்தது…
தன்னை சுத்தம் செய்துவிட்டு கோவிலின் வடக்கில் வரைந்திருந்த சக்கரத்தின் முன் அமர்ந்தவரின் வாய் அவரையும் அறியாமல், “குருவாயூரப்பா… எல்லாரையும் காப்பாற்று…” என்று முணுமுணுத்தது…
அங்கிருந்த குழுவில் ஒருவரின் முகமும் தெளிவை காட்டவில்லை. மக்களோடு அமர்ந்திருந்த ஸ்ரீ சாக்தர்,
“பணிக்கரே… என்ன விஷயம்… எல்லாரும் ஆரம்பிக்காம உட்கார்ந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
“இதோ ஆச்சு” என்று வேகமெடுத்தார்.
பனிரெண்டு வீட்டையும் ஒதுக்கி, நடுவில் மூலத் தெய்வத்தை ஆவஹனம் செய்துவிட்டு,
“கர்ப்பகிருகத்தை மூடிடுங்க…” நிமிர்ந்து பார்க்காமல் உரைத்தார் அஸ்வத்தாம பணிக்கர்…
தேவப்ரசன்னம் பார்க்கும் போது கருவறையை திறந்து வைப்பதில்லை. மூல தெய்வம் சக்கரத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டுவிட்டதால் இந்த முறைமை!
நிமிர்ந்து கூடியிருந்த கூட்டத்தை நிதானமாக ஒருமுறை பார்வையிட்டார்
பட்டு வேஷ்டியில் தோளில் பட்டு துண்டோடும் கழுத்தில் பெரிய தங்க சங்கிலியில் கட்டியிருந்த ருத்ராட்சத்தோடும் அமர்ந்திருந்தார் ஸ்ரீசாக்தர். கண்களில் தீர்க்கமும் தீட்சண்யமும்… அழுத்தமாக அமர்ந்திருந்தார்.
பத்து வயது பெண் குழந்தை ஒன்று ஸ்ரீ சாக்தருக்கு அருகே நின்றுகொண்டிருந்தது…
கைக் காட்டி அழைத்தார்… ஆர்வமாக ஓடிவந்தாள் அந்த பிள்ளை.
அவளது கையில் ஒற்றை தங்க நாணயத்தை கொடுத்தவர், சக்கரத்தை மூன்று தரம் சுற்ற சொல்லி ஒரு கட்டத்தில் வைக்க சொன்னார்… அந்த குழந்தையும் வைத்துவிட்டு போனது…
குழுவாக பிரசன்னத்தை கணித்தவர்கள் முகத்தில் பெரும் பதட்டம்…
“ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி, கிருஷ்ணரின் சேவகனான தெய்வத்திரு ஸ்ரீ சுதர்சனர் தம்புரானை வணங்கி, அவரது பிரதிநிதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ சாக்தர் தம்புரானை வணங்கி பிரசன்னம் உரைப்பதை நாங்கள் கூறுகிறோம். இன்னமும் நான்கு நாளைக்கு இது குறித்த விவாதங்கள் நிகழும்… கேள்விகளை அப்போது கேட்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.” என்று இடைவெளி விட்ட அஸ்வத்தாம பணிக்கர்,
“கிருஷ்ணர் கோவிலுக்கும் மாவேலிக்கர கோவிலகத்துக்கும் இது நல்ல காலமில்லை. இனி கோவிலின் புனிதங்களும் மரபுகளும் மீறப்படும். கோவிலின் மரபு வழியில் வந்த பெரும் பொக்கிஷங்கள் களவு போகும் காலமிது என்று பிரசன்னத்தில் தெரிகிறது.
கோவிலில் ரத்தாபிஷேங்கங்களும் கோவிலகத்தின் தலைகட்டிற்கு பெரும் ஆபத்துக்களும் காத்திருக்கின்றன… பொக்கிஷம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் தலையை காப்பது சிரமம்… அப்படி காப்பாற்றப் பட்டாலும் இன்னமும் நான்கு ஆண்டுகளுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது.”
கண்களை மூடிக்கொண்டு யாரையும் பார்ப்பதற்கு அஞ்சியவராக அஸ்வத்தாம பணிக்கர் கூறி முடிக்க, அதீத மௌனம் அங்கே!
அனைவரது பார்வையும் சாக்தரின் மேல் படிந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை… ஆனால் அத்தனை பேரும் ஒற்றுமையாக இருந்தது ஒரே எண்ணத்தில் தான்…
“குருவாயூரப்பா… கோவிலகத்தை காப்பாற்று…” என்பதுதான்!
“கோலஸ்வரூபத்தின் வாரிசுக்கு ஆபத்தில்லை தானே பணிக்கரே?”
தனக்கு வந்த ஆபத்து என்னவானாலும் சாக்தரால் சமாளித்து விட முடியும்… ஆனால் தன் மகனுக்கு ஏதாவது ஒன்றென்றால்?
அதிலும் திருவிதாங்கூரின் ஸ்வர்ணலக்ஷ்மியை ஸ்ரீதரனுக்கு பேசிவரும் வேளையில் இந்த செய்திகள் அவருக்கு மனதுக்குள் கிலியை பரவ செய்தது. கோலஸ்வரூபத்தினை காக்க யாராவது வர மாட்டார்களா என்ன?
“இளையத் தம்புரானுக்கு ஆபத்தில்லை ஆனாலும் அவர் அக்ஞான வாசம் போகும் நேரமென்று பிரசன்னம் கூறுகிறது தம்புரானே…”
பிரசன்னம் படிக்கையில் உணர்வுகளை கலக்க கூடாது என்ற விதிமுறையிருந்தாலும் அஸ்வத்தாமனால் தாள முடியவில்லை. அவர் அந்த வல்லிய கொட்டாரத்தின் சாதாரண பிரஜை… கோவிலையும் பொறுப்பாக பார்த்து கொள்ளும் ஊழியன்..
தந்தை வழியாக மகனுக்கு அந்த பொறுப்பு வர, தன்னுடைய பிரசன்ன ஜோதிடர் என்ற பணியோடு மனமுவந்து கோவில் பணியையும் செய்து கொண்டிருந்தார்…இந்திய சட்டம் எல்லாம் மற்றவர்களுக்குத்தான்… இவர்களை போன்றவர்களுக்கு இன்னமும் அவர்களது தம்புரான் தான் தெய்வம்!
மக்கள் அனைவரும் கலைந்து போய் வெகு நேரமாகி இருந்தது.
ஸ்ரீ வித்யாலட்சுமி தம்புராட்டி கோவிலை பயபக்தியோடு வலம் வந்து கொண்டிருந்தாள். கண்களில் பணிவும் பக்தியும். சந்தன நிற கசவுப்பட்டில் அவளை பார்க்கும் போதே அவளை சுற்றி ஏதேனும் ஒளிவட்டம் இருக்கிறதா என்று தேடிப்பார்க்க தோன்றும்.
அத்தனை லட்சணமான முகம்… நெற்றியில் துலங்கிய சந்தனம்… சற்றே பூசிய உடல்வாகு… கேரளத்தின் சந்தன நிறம்… உடன் வேட்டியும் மேல் துண்டும் அணிந்தபடி சாக்தர்…
“அஸ்வத்தாமன் கணித்து விட்டான் வித்யா… நாம் பயந்தது நடந்துவிடும் போலத்தான் தோன்றுகிறது.” வேதனையாக அவர் கூறினார். ஒரு பெருமூச்சொன்று கிளம்பியது தம்புராட்டியிடம்.
“ம்ம்ம்…” என்று மட்டும் அவர் கூறினார்.
“எப்படி இருந்தாலும் வாமனன் உன் அண்ணனின் மகன்… அவன் உரிமை கோருவதை தவறென்று ஏன் நினைக்கிறாய்?” மனைவியிடம் அவர் கேட்டார்.
“என் வீட்டின் உரிமையை நான் எப்படி விட்டு கொடுப்பேன்? என் மகனது உரிமையை நான் தட்டிவிடலாமா?”
அவள் கேட்பதும் நியாயம் தான் என்று தோன்றியது. ஆனால் பொதுவாக மருமக்கதாயம் என்பதே அருகி வரும் நிலையில், தங்களை போன்ற சில மரபுகள் மட்டுமே அந்த கலாசாரத்தை காத்து கொண்டிருக்கின்றது.
வீட்டில் பிறந்த பெண்ணுக்குரிய உரிமையை அவளும் எப்படி விட்டு தருவாள் என்று நினைத்துக்கொண்டார்…
ஆனால் வாமனன் பிடிவாதக்காரனாயிற்றே!
அதிலும் எப்படியாவது காரியத்தை சாதித்து கொள்ள நினைக்கும் வறட்டு பிடிவாதக்காரன்.
ஸ்ரீதரனின் மாமன் இறந்த பிறகு அவனது அட்டகாசம் அதிகமாகித்தான் விட்டது. இத்தனைக்கு அவனது தாய் வழி சொத்துக்களோடு வல்லிய கொட்டாரத்தின் சொத்துக்கள் பலவற்றை அவனுக்கு கொடுத்திருந்தார் ஸ்ரீ சுதர்சனர்!
அதை எதையும் ஸ்ரீவித்யா லக்ஷ்மி ஆட்சேபிக்கவே இல்லை. ஆனால் வல்லிய கொட்டாரத்தின் வாரிசுரிமை மட்டும் தன் மகனுக்கு தான் என்பதில் உறுதியாக இருந்தார்.
அன்றைய சம்பவங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உடல் நடுங்கியது!
அன்று தன் பெற்றோர் இருவரையும் பொட்டலமாக கட்டித்தான் வீட்டிற்கு கொண்டு வர முடிந்தது. அவ்வளவு கோரமான தாக்குதல்… தாக்கியவர்கள் இரண்டு பேர் தான் என்றார்கள்…வெறித்தனமாக தாக்கியிருக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. தன் பெற்றோர் இருவரோடு கோவிலில் கணக்கு பார்த்துக்கொண்டிருந்த அஸ்வத்தாமனையும் தம்புராட்டியை காப்பாற்ற வந்த இன்னும் இரண்டு பேரையும் கூட கொன்றிருந்தனர்!
கிருஷ்ணன் கோவில் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது…
ஒரு மாதத்திற்கும் மேல் அவனால் உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. தாயற்ற வாழக்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தந்தையின் கண்டிப்பில்லாத நாட்களை கற்பனைக் கூட செய்யமுடியவில்லை.
ஆனாலும் காலம் அவனை அப்படித்தான் செய்து வைத்தது…
அவனையும் வாமனன் துரத்தாமல் இல்லை. அவனை பொறுத்தவரையில் வல்லிய கொட்டாரத்தின் வாரிசு அவன் மட்டும் தான். வேறு யாரையுமே வாமனன் அங்கே அனுமதிக்கவில்லை.
அவனுடன் போராடிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர் அப்போது! கோபத்தில் அவனை கொன்றாலும் கொன்று விடுவோம் என்று பயந்தான். வாமனனை பார்க்கும் போதெல்லாம் அந்த வெறி அவனுக்குள் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
ஆனால் தான் அவனை கொன்றுவிட்டால்? சட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. அதன் பின் தன்னை நம்பி பொறுப்புக்களை விட்டுவிட்டு போயிருந்தவர்களின் உயிருக்கு தான் பதில் கூற வேண்டாமா?
அனைத்தையும் விட அப்போதைய கோபத்தை அடக்குவதும் சற்று தள்ளி இருப்பதுமே முக்கியமாக பட்டது. உணர்வை விட அறிவை அப்போது உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனம்.
அதன் பொருட்டே அவன் சென்னைக்கு போனதும்… சென்னை வாழ்க்கை அவனை பல விதங்களில் பண்படுத்தியது. லட்சியத்தை வளர்க்க சொன்னது. மன உறுதியை இன்னும் அதிகமாக்கியது…
அந்த உறுதியோடு அன்று படுக்கையிலிருந்து எழுந்தான். மனம் பரபரப்பில் ஆழ்ந்து இருந்தது…ஏதோ ஒன்று நடக்கப் போவதை அறிவித்துக்கொண்டிருந்தது. குளித்து முடித்து நேராக கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றான் ஸ்ரீதரன்…
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்திருந்தது. ஸ்ரீதரன் அங்கு வந்து!
அதிகாலை வாகசார்த்து முடித்து வாகப்பொடியோடு திவ்யமாக காட்சியளித்துக் கொண்டிருந்தான் வெண்ணை திருடும் கள்வன்.
அவனை கண்டதும் திருமேனிகள் வணக்கம் தெரிவிக்க, தலையை அசைத்து பதில் வணக்கம் கூறிவிட்டு கோவிலை சுற்றி நடக்கத் துவங்கினான்…
சில்லென்ற காலை நேரக் காற்று உடலைத் தழுவிச் சென்றது. மேலே போர்த்தியிருந்த துண்டை அவ்வப்போது சரி செய்து கொண்டான். நேராக யானை கொட்டகைக்கு சென்றான்.
உன்னிக்கிருஷ்ணன் சாதுவாகப் படுத்திருந்தது.
அவன் மீனாட்சியின் மகன்.
கோவில் யானை!
தம்புராட்டி இருந்தபோது யானைகளின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டும். அவர் அதற்கு மட்டும் மலைத்ததில்லை. பெரும்பாலும் கோவிலுக்கு வரும் போதெல்லாம் தன் கையாலேயே யானைகளுக்கு அமுது படைப்பதும் உண்டு.
அதிலும் மீனாக்ஷி அவருக்கு மிகவும் விசேஷம்… சிறுப்பிள்ளையாக அவளைக் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து வந்தது முதல் தன் சொந்த பிள்ளையாகச் சீராட்டி இருக்கிறார். அவளுக்கு ஒன்றென்றால் ஸ்ரீவித்யா தவித்து விடுவார்.
கோவிலில் வைத்து வாமனன் அந்தப் படுகொலைகளை நிகழ்த்தியபிறகு மீனாக்ஷி வெறிப் பிடித்தார் போலச் சில நாட்கள் அலைபாய்ந்து கொண்டிருந்து விட்டு எதுவுமே உண்ணாமல் பத்து நாட்களில் உயிரை விட்டிருந்தது.
உன்னிக்கிருஷ்ணனனை பார்க்கும்போது ஸ்ரீதரனின் மனம் கசிந்தது.
மென்மையாக அதன் தும்பிக்கையை தடவிக்கொடுத்தான். மீனாக்ஷி இருந்த வரை அத்தனை குறும்பாக இருந்தவன் இந்த உன்னிக்கிருஷ்ணன்… அவளுக்குப் பின் வெகு அமைதியாக மாறியிருந்தான்.
தன்னைப் போலவே!
ஸ்ரீதரனின் ஸ்பரிசம் பட்டவுடன் கண்விழித்து அவனைப் பார்த்தான் உன்னிக்கிருஷ்ணன். தன் தோழனைக் கண்டவுடன் கண்கள் கசிந்தது அவனுக்கு.
அவனை மிருகம் என்று யார் சொன்னது? ஸ்ரீதரனை பொறுத்தமட்டிலும் தன்னை தேடிக்கொண்டிருந்த குழந்தையாகப் பட்டான். இரு கைகளாலும் அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டான். அவனையும் அறியாமல் ஸ்ரீதரனின் கண்களில் கண்ணீர் கசிந்தது.
உன்னி தன் தும்பிக்கையால் ஸ்ரீதரனை வளைத்துப் பிடித்துக்கொண்டான். இருவருக்குமே அது உணர்வுப்பூர்வமான பரிமாற்றம்.
“ஏன்டா… உன்னை விட்டுவிட்டு போயிட்டேன்னு நினைக்கிறியா?” கண்களில் நீரோடு அவன் உன்னியைக் கேட்டான். அதன் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
“இல்லடா… இனிமே உன்னை விட்டுவிட்டு போ மாட்டேன். கண்டிப்பா போ மாட்டேன்…”
உன்னியின் தும்பிக்கையை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
ராஜீவ் தயங்கியபடி இருவருக்கும் அருகில் வந்தான். இளையத் தம்புரான் யானைக் கொட்டாரத்தில் இருப்பதைத் திருமேனிகள் அவனுக்குக் கூறியிருந்தார்.
“என்ன ராஜீவ்…”
உன்னிக்கு இளம் கரும்புகளை கொடுத்தபடியே ராஜீவை பார்த்து ஸ்ரீதரன் கேட்டான்.
“இன்றைக்கு அரசாங்க அதிகாரிகள் உங்களைப் பார்க்க வருகிறார்கள் போல… கோவிலை அரசாங்கம் எடுத்துக்கொள்ளப் போகிறதா செய்தி வந்தது…”
ஆக வாமனன் தன் வேலையைக் காட்டிக்கொண்டிருக்கின்றான். என்ன செய்வது என்று ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தான்.
“ம்ம்ம் வரட்டும் ராஜீவ்…”






😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍