• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode நீயும் செய்ய வா காதல்! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
864
Reaction score
1,200
Location
Bangalore
2

2.jpeg


It's the little things in life


“பட்டுச் சிரிப்பில்

உள்ளம் சரிந்திட

அகம் நனைந்தது

ஆசை சாரலில்..!!”


செங்கதிரோனின் கைரேகைகள் வானெங்கும் படர்ந்து இருள் நீக்கியதில் சர்வியின் சன்னல் வழியாய் பளீர் வெளிச்சம் அவள் அறையெங்கும் படர்ந்தது.


சற்று மங்கலான ஆரஞ்ச் நிற திரை சீலைகளும்… மங்கிய மஞ்சள் நிற சுவரும் பளீரென்றானது.. அவள் அவ்வறையை வடிவமைத்ததே இதை நினைத்துதானே… காலை கதிரவனின் ஒளி படரும்பொழுது அவ்வறை அதை அழகாய் பிரதிபலிக்க வேண்டும். மஞ்சளிலும் ஆரஞ்சிலும் பட்டுத் தெறித்து தரையில் விழும் கதிரொளி அவள் மனதில் புத்துணர்வை புகுத்த வேண்டும். அதனாலையே அவளறையில் பெரிது சிறிதென ஒவ்வொன்றையும் அவளே பார்த்து பார்த்து செய்திருந்தாள்.


சூரிய ஒளி சுள்ளென்று முகத்தில் அடிக்க எத்தனையாவது முறையாகவோ ஃபோன் அலாரத்தை ஸ்னூஸ் செய்ய உயர்ந்த கை பாதியிலேயே நின்றது.


அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து சென்று ஆதிராவை பார்த்து வந்தவள் வந்த பின் படுக்கையில் இப்படியும் அப்படியுமாய் புரண்டு… பல பொஸிஷன்களை மேற்கொண்டென கடைசியாய் ஐந்து ஐந்தரைக்கு கண்ணயர்ந்திருந்தாள்.


அவளது அலாரங்கள் அனைத்தும் ஐந்தில் இருந்து ஆறரை வரை பத்து நிமிடங்களுக்கு ஒன்று.. இருபது நிமிடங்களுக்கு ஒன்றென விடாமல் அடிக்குமாறு வேறு வைத்திருந்தாள். அதுவோ நேரம் காலம் பாராமல் அடித்து வைக்க கையை மட்டும் நீட்டி ஸ்னூஸ் செய்தவாரே அத்தனை அலாரங்களையும் கடந்தவள் கடைசி ஒன்றில் அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்தாள்.


அவள் கண்ணெதிரே சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரம்கூட தெரியாதளவு தூக்க கலக்கம் ஒரு புறமென்றால் மறுபுறம் அவளது எடையில் பாதியான முதுகு வரை நீண்டிருந்த சுருள் முடி அவள் உருண்டு புரண்டதில் அவள் தோள்தளைச் சுற்றி படர்ந்திருந்தது.


அத்தனை முடியையும் காதுக்கு பின் ஒதுக்க முயன்றவளாய் பக்கத்தில் கிடந்த ஃபோனை எடுத்துப் பார்த்தாள். மணி ஆறரை என்றது. நிம்மதி பெருமூச்சொன்றுடன் பொத்தென அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறு பின்னால் சரிந்தவள் பின் தன் இரு கைகளாலும் முகத்தை மூடி ஒரு முழு நிமிடம் அப்படியே அசையாமல் இருந்தாள். இன்னும் நேரமிருக்கிறது.. என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாய் மெல்ல எழுந்தமர்ந்தவளின் கறுப்பு நிற கயிறு கட்டப்பட்டிருந்த இடது கால் தரையில் பதிந்தன…


பொதுவாகவே சர்விக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லைதான். ஆதிரா திருஷ்டி கழிக்கிறேன் என்று அவளை நிற்க வைக்கும் பொழுதெல்லாம் அவளை எத்தனை கிண்டலடித்திருப்பாள்? ஆனால் ஏனோ இந்த கறுப்பு கயிறு அவள் கால்களுக்கு வெகுவாய் பொருந்திப்போவதாய் ஒரு எண்ணம்.. அதனாலையே விரும்பி கட்டிக் கொண்டாள். நம்பிக்கை ஏதுமின்றி பிடித்தத்திற்காகவென கட்டப்பட்டது…


முகம் கழுவி துடைத்து வெளியேறியவள் அடுக்களையினுள் நுழைந்தாள்…


“பட்டூஸ் டீ தாயேன்..” என்றவாரே


அடர் நீல நிறத்தில் ஆங்காங்கே சிதறியிருந்த ஆரஞ்ச் நிற பூக்களுமான அந்த ஸ்லீவ்லெஸ் டீஷர்ட்டும், அதற்கேற்றார்போல கறுப்பு நிறத்திலான ஷார்ட்ஸுமாய் வந்து நின்றவள் மொத்த கூந்தலையும் உச்சந்தலையில் கொண்டையாக்கியிருக்க அவளது மெலிந்த தேகமும் அடர்ந்த கேசமும் அவளது வயதை இன்னும் குறைத்து அவளை பள்ளி மாணவியாக்கிவிட்டிருந்தது..


அடுக்களையில் செல்லம்மாவிற்கு உதவியாய் நின்றிருந்த ஆதிரா சர்வி கேட்ட அவளது டீயை கலக்கியவாறே மகளை கண்டிக்கவும் தவறவில்லை!


“என்ன சர்வி இது? ஆச்சி பார்த்தா திட்டப் போறாங்க! இன்னுமா குளிக்கலன்னு…” என்க அவளோ சமையல் மேடைமேல் ஒரே ஜம்பில் ஏறியமர்ந்தவளாய் அவள் கையிலிருந்த டீயை வாங்கி பருகியவாரே…


“பசிக்குது பட்டூஸ்! இதுல குளிச்சிட்டு வர வரைக்கும்னா… நோ வே!” என்க ஆதிராவோ,


“ஹ்ம்! இப்போ மட்டும் ஆச்சி பார்க்கனும்! அப்பறம் இருக்கு உனக்கு..”


“என்ன பண்ணுவாங்க? சாப்பாட கட் பண்ணிருவாங்களா.. அப்படி பண்ணா செல்லம்மா சமையல ரொம்பவே மிஸ் பண்ணுவேன்தான்…” என்றவள் செல்லம்மாவிடம் திரும்பி “ ஏன் செல்லம்மா… அப்படி ஏதாவது ஆச்சுனா எனக்கு நீங்க தனியா பேக் பண்ணிரமாட்டீங்க!?” என்று கேலியாய் கேட்க அதை உணர்ந்தவர் இதழிலும் புன்னகை மலர்ந்தது.


ஆதிராதான், “உன் கள்ளத்தனத்துல ஏன் செல்லம்மாவையும் கூட்டு சேர்க்கற!?” என்க


“சரி… அப்போ நான் வேணும்னா பழையபடத்துல வர்றா மாதிரி ஹால்ல டெண்ட் அடிச்சு ‘லோகநாயகி சோறு வேணும்னு’ போராட்டம் பண்ணவா?” என்று தீவிரமாய் கேட்க ஆதிராவின் மனக்கண்ணில் சர்வி சாட்சாத் காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரனாய் தெரிந்தாள்.. நினைத்துப் பார்க்கவே குபீரென்று சிரிப்பு பொங்கிட, அவள் கையில் இருந்த கப்பை பிடுங்கியவராய்…


“போ! போய் குளிச்சிட்டு வா ஓடு!” என்று விரட்ட இரண்டெட்டு எடுத்து வைத்த சர்வி, ஆதிரா ரசத்துக்கு தாளிக்க அதன் வாசத்தை ஆழ்ந்து ரசித்தவளாய்..


“என்ன ஸ்மெல் இது!? உனக்கு மட்டும் எப்படி பட்டூஸ் இப்படி வருது? செம!” என்க அவளை முறைத்தவளோ, “நெய்ல சீரகம் பொறிஞ்சா யார் செஞ்சாலும் அப்படிதான் ஸ்மெல் வரும்… வேணா நீ ட்ரை பண்ணிப் பாரேன்..” என்றிழுக்க அவளோ,


“நோ நோ.. ஒரு உறைல ஒரு கத்திதான் இருக்கனும்.. அது பட்டூஸாகவே இருக்கட்டும்..” என்று நழுவினாள்.


“ஆஹா! நல்லா சமாளிக்கற..” ஆதிராவின் குரலில் கேலி இழையோட இளையவளோ,


“அப்படியில்ல பட்டூஸ்… நாம மனுஷங்கல்லாம் ஏதாவது ஒரு விஷயத்துல யாரயாவது சார்ந்துதான் இருக்கோம்… நான் ரொம்ப இன்டிபெண்டண்ட்னு சொல்லிக்கிட்டாலும் ஏதோ ஒரு விதத்துல நமக்கு யாரோ ஒருத்தர் தேவைப்படறாங்க… அது எதுக்காக வேணாலும் இருக்கலாம்.. இங்க மத்தவங்கள சார்ந்து வாழாத மனுஷன்னு யாரையும் சொல்லிடவே முடியாது. ஏன்னா எல்லாரும் ஏதோ ஒருவிதத்துல இன்னொருத்தர சார்ந்து இருக்கோம், நேரடியாவோ இல்ல மறைமுகமாவோ... அதுக்காக இந்த சுயத்த இழந்து இன்னொருத்தங்க இல்லன்னா நாம வாழவே முடியாதுனு நினைக்கறாங்க பாரு.. அதுதான் தவறான விஷயம்... அது சார்ந்திருக்கிறதில்ல முட்டாள்த்தனம்!..” என்று சர்வி வெகு தீவிரமாய் பேசிக்கொண்டிருக்க


“இப்போ ஏன் நீ ரொம்ப ஃபிலோஸஃபிகலா இறங்கற சர்வி? இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ?” என்று ஆதிரா சரியான பாய்ண்ட்டை பிடித்துவிட சர்வியோ,


“அதாவது பட்டூஸ்... நான் சொன்னேன்ல எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்துல டிபெண்ட்டண்ட்தான்னு... அதே மாதிரிதான்! நானும் நீயும் சமையலும்... மோரோவர் அதுக்கான கட்டாயமும் எனக்கு வரலையே..." என்று எதையோ கொண்டு வந்து இதில் சேர்த்தவள் லோகநாயகி வரும் அரவம் கேட்டு அறைக்கு ஓடிவிட்டாள்.


அதே சமயம் மற்றொரு வீட்டில்...


கொதிக்க கொதிக்க ஆவி பறக்கும் வெண்ணீர் பானையை தூக்கி வந்து ஃபேனுக்கு அடியில் வைத்தவனுக்கு வேர்த்து விறுவிறுக்க அதை கவனித்தாற்போல ஃபேன் ஆன் ஆனது. ஆனால் இவனிடமோ அர்ச்சனை மட்டும் குறைந்தபாடில்லை.


“இத்தனை வயசாச்சு... ஒரு வெண்ணீர்கூட சரியா வைக்கத் தெரியல! எல்லாம் உங்க அக்காவ சொல்லனும்!!...” என்று கௌதம் சத்தமாய் முணுமுணுப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒன்றுண்டு.


அது அருண்! தான் குளித்துவிட்டு வரும்வரை வெண்ணீரை பார்த்துக் கொள்ளும்படி இவன் பல முறை அறிவுறுத்திவிட்டு சென்றிருக்க அருணோ வழக்கம்போல் சொதப்பியாயிற்று! வேண்டுமென்று அருண் செய்வதில்லை ஆனால் ஏனோ அப்படியாகிவிடுகிறது.


பேச நினைத்தவனின் மூக்கை தீண்டிய நெய் வாசத்தில் இமை மூடி ஆழ்ந்து சுவாசித்த அருண் “வாவ்!! செம்ம ஸ்மெல்... அப்படியே எங்க அக்கா வைக்கற ரசம் மாதிரி..” என்று ரசித்து உரைக்க இடுப்பில் கை வைத்தபடி முறைத்து நின்றான் கௌதம்.


“அது வெண்ணீர்! அப்போ உங்கக்கா ரசம் வைச்சா இப்படிதான் இருக்குமாக்கும்!? நோட் பண்ணிக்கறேன்..” என்க ஒரு கணம் விழித்த அருண் பின் அடுக்களையினுள் நுழைய அருணுக்கு பின்னாலே நுழைந்த கௌதமின் முகத்தில் இப்பொழுது அசடு வழிந்தது.


“அப்போ இது என்னவாம்?” என்று அடுப்பில் கொதித்து கொண்டிருந்த ரசத்தை காட்டி கேட்க அவனோ ரசத்தை தாளித்துக் கொட்டி மூடிவைத்துவிட்டு திரும்பினான்.


“நெய்ல சீரகம் போட்டு யார் தாளிச்சாலும் இப்படிதான் வாசம் வரும்..” என்றுவிட்டு சாப்பிட எடுத்து வைக்க அருண் மதியத்திற்கு பேக் செய்யவென வேலை வேகமாய் நடந்தது.


“என்ன சொல்லு.. உன் கை மணமே தனிதான்!” என்ற அருணையே வைத்த கண் வாங்காமல் பார்த்த கௌதம், “உங்கக்காவ விடவா?” என்று கொக்கி போட சுதாரித்தவனாய்,


“அக்காவோட ப்ராடெக்ட் அக்காவ போலத்தான இருக்கும்..” என்று நழுவிட


“இத சொல்லியே தப்பிச்சிருங்க.. ஒரு நாளில்லை ஒரு நாள் வசமா மாட்டப் போறீங்க பாருங்க!! அப்போ கவனிச்சிக்கறேன்..” என்றவாரே கிளம்பியவனை ட்ராப் செய்துவிட்டு கிளம்பிய அருணிற்கு வயது நாற்பதை தாண்டி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.


கல்லூரிப் பேராசிரியராய் இருக்கும் தம்பியுடன் தன் மகனை விட்டுவிட்டு ஆஸ்த்ரேலியா பறந்த மஞ்சரியின் சமயலைப் பற்றிதான் இத்தனை நேர பேச்சும். கௌதம் என்னதான் அக்கா மகன் என்றாலும் அருணுடன் தங்கியிருந்த இந்த ஐந்தாறு வருடங்களிலேயே இருவரிடையும் அத்தனை நெருக்கம் வந்துவிட்டிருந்தது.


கௌதம் சமையல் விஷயத்தில் அப்படியே மஞ்சரியைப்போல செய்வதை ரசித்துச் செய்யும் ரகம். ஆனால் அருணோ அவனுக்கு நேரெதிர்.. சமைப்பதில் என்றுமே கௌதமிற்கு குறையேதும் இருந்ததில்லைதான். ஆனால் தான் கேட்கும் சின்ன சின்ன விஷயங்களில் அவர் கோட்டை விடுவதில் இப்பொழுது நடந்ததைப்போலவே எதையாவது தொடங்க அவர் நழுவிடுவார்.


ஆடாமல் அசையாமல் பொறுமையாய் தன் முன்னிருந்த கண்ணாடியிலேயே கவனம் பதித்து இமைகளுக்கு மேல் ஐ-லைனரிட்டவளை சத்தமெழுப்பி கலைத்தது அவளது ஃபோன்.


ஐ-லைனரை மூடி அதனிடத்தில் வைத்துவிட்டு டேபிளில் கிடந்த ஃபோனிடம் விரைந்தவள் அதை எடுத்துப் பார்க்க அதில் "மாம்ஸ்" என்ற பெயரைத் தாங்கியபடி ஒளிர்ந்தது அந்த பத்து இலக்கங்கள்..!!


சர்விக்கு இந்த அழைப்பு எதற்கென்றும்.. எதனால் என்றும் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஒரு மலர்வு..!! அழைப்பை ஏற்றாள்.


"மாம்ஸ் சௌக்கியமா? என்ன திடீர் தேடல்? அந்த அடுத்தவீட்டு அனகோண்டா எப்படியிருக்கு?" என்று படபடக்க மறுமுனையில் இருந்த ஆதவனின் இதழோ அழகாய் விரிந்தது.


தங்கை மகள் என்பதை தாண்டி சர்வசக்தி அவரது செல்லமகள். அதிக நாட்கள் ஒன்றாய் கழித்திராவிடினும் சர்வி அவரிடமும் அவர் குடும்பத்திடமும் காட்டும் ப்ரியமும் நெருக்கமும் அலாதியானது. அதுமட்டுமின்றி, எப்படி என அவரை பல முறை சிந்திக்க வைத்ததும்கூட! முதல் முறை சிறுமியாய் அவள் அவர் வீட்டுக்கு வந்தது இன்னும் நினைவிருக்கிறது... மறக்கக்கூடியவையா அவையெல்லாம்!?


அவள் கேட்கும் அந்த அடுத்தவீட்டு அனகோண்டா ஆதவனின் பக்கத்து வீட்டுப் பெண்மணிதான். ஊரில் ஒருவரை விடாமல் அவர் இழுத்து வைத்து பேசியதில்... ஒரு நாள் கடுப்பு கரைகடந்து சர்வி அவருக்கு வைத்தப் பெயர்தான் அனகோண்டா!


அன்றொரு நாள் ஹாலிவுட் பக்கம் பேச்சு போக... யாரோ அனகோண்டாவை இழுக்க கொஞ்சம்கூட ஈவு இறக்கமின்றி "எங்க தோட்ட வீட்லயும் இருந்தது.." என்று தொடங்கியவர் அனகோண்டாவில் இருபது சீரீஸ் எடுக்கமளவு கண்டெண்ட்டை அவிழ்த்துவிட... நொந்து நொறுங்கியவளின் மனம் முடிவே செய்துவிட்டது.. வந்ததல்ல அனகோண்டா.. இப்பொழுது பேசிக்கொண்டிருப்பதுதான் என...


இத்தனை வருடங்கள் கழிந்தும் அவள் அந்த அனகோண்டாவை மட்டும் மறந்தபாடில்லை!


"எல்லாரும் சௌக்கியம் சர்விமா.. நீ எப்படியிருக்க? அம்மா எப்படியிருக்கா? என் அம்மா எப்படியிருக்காங்க?" என்று விசாரிக்க


"ஆல் ஃபைன் மாம்ஸ்! இதானே வேணாங்கறது.. ஆச்சி எனக்கு அர்ச்சனை பண்ணதாலதான கூப்பிட்டீங்க? அப்பறம் ஏன் இப்படி?" என்றவளின் குரலில் கேலியிருந்தாலும் நீ அழைத்த காரணத்தை நானறிவேன் என்ற பொருள் மறைந்திருந்தது.. அதை ஆதவனும் அறிவார்.


"அப்படியில்லடா... என்னாச்சு? என்ன ப்ரச்சனை? அந்த அரவிந்த் எதாவது ப்ரச்சனை பண்ணாரா?" என்று பொறுப்பான தாய்மாமனாய் மாறிட இவளோ,


"ப்ரச்சனைலாம் ஒன்னுமில்ல மாம்ஸ்... எப்பவும்போலதான்... ஆச்சி ஒரு பக்கம்.. நான் இன்னொரு பக்கம்.. அரவிந்த் ஆ? அவரென்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?"


"சர்விமா.. எல்லாரையும் அவ்ளோ ஈசியா எடுத்துக்கக்கூடாதுடா! ஆச்சிக்கிட்ட நான் பேசறேன்.."


"அதெல்லாம் வேண்டாம் மாம்ஸ்... ஆர்க்யூமெண்ட் இல்லாத வீடெது? இல்ல difference of opinion இல்லாத உறவுதான் இருக்கா? என் ஆச்சி என்ட்ட கோச்சிக்கறாங்க..." என்றுவிட


"அடேங்கப்பா!! உன் ஆச்சியாமா? அதுசரி..." என்று கிண்டலாய் இழுத்தவர் கணப்பொழுதில் சீரியஸாய் மாறினார்,


"ஆனா இத கேட்டா அம்மா நிஜமாவே சந்தோஷப்படுவாங்க... இவ்ளோ பேசறல்ல ஆச்சிட்ட ஆர்க்யூ பண்ணாம இருந்தாதான் என்ன?" என்க கடகடவென சிரித்தவள்,


"அது வேற டிபார்ட்மெண்ட் மாம்ஸ்! பாசத்துக்காக பாய்ண்ட்ஸ விட்டுகுடுக்க முடியுமா?"


"உன்ன உங்கம்மா லா சேர்த்திருக்கனும்!! தப்பி BBAல சேர்த்துட்டா.."


"ஹா..ஹா.. மாம்ஸ்! எங்கம்மா சேர்த்துவிட்ட படிப்பு அழைக்கிறது... கிளம்பறேன் பை..." என்றாள் மணியை பார்த்துவிட்டு.


"ஓகேடா! ஹேவ் எ க்ரேட் டே அஹெட்! பை" என்றபடி அழைப்பை துண்டித்தவரினுள் சிறு துளி இதம்..


கண்ணாடியில் ஒருமுறை தன்னை சரிபார்த்துக் கொண்டாள் சர்வி. நேவி ப்ளூவிலான பலாஸோ பேண்ட்டும் பிங்க் நிற ஷார்ட் டாப்பிலுமாய் இருந்தவள் பாதி முடியை இழுத்து க்ளிப்பிற்க்குள் அடக்கியபடி தோள் பையை தூக்கிக்கொண்டு வெளியேறினாள்.


"என்னாச்சு? ஏன் லேட்?" என்ற ஆதிராவிடம் கண்ணசைவிலேயே லோகநாயகியின் அறையை காட்டியவள், "மாம்ஸ் கூப்ட்றுந்தாங்க.. அதான் லேட்!" என்றாள் செருப்பை மாட்டிக்கொண்டே.


"சரி நீ ஆச்சிட்ட சொல்லிட்டு கீழ என்ட்ரன்ஸ்ல வெய்ட் பண்ணு நான் வண்டியெடுத்துட்டு வரேன்.." என்றவள் சாவியை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட ஆச்சியிடம் சொல்லிவிட்டு குடுகுடுவென ஆதிராவிற்கு முன் என்ட்ரன்ஸிற்கு வந்து காத்திருக்க தொடங்கினாள் சர்வி..


என்றும் இந்நேரத்தில் அவளுக்கு கம்பனி குடுக்கும் நிலாவை அன்று வெகு நேரமாகியும் காணவில்லை. நிலா அதே அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் குட்டி தேவதை... மூன்றாம் வகுப்பு மாணவி.. அவளும் இதே நேரத்தில்தான் ஸ்கூல் பஸ்ஸுக்காக அங்கு காத்திருப்பது.


அபார்ட்மெண்ட் பொடிசுகளுக்கு சர்வியக்கா ஃபேவரெட் என்றால் சர்விக்கோ நிலா ஸ்பெஷல்!


அன்று சர்வி வந்ததிற்கு பிறகு வந்த நிலாவின் வதனத்தில் பொலிவில்லை..


அவளுயரத்திற்கு குனிந்தமர்ந்தவள் "மூனுக்கு என்னாச்சு?" என்று பரிவாய் விசாரித்தாள்.


கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு வாயைத் திறந்தாள் நிலா "ஹோம் வர்க் எழுதல.. "என்று உள்ளே சென்றுவிட்ட குரலுடன்.


அவளது பதிலில் சட்டென சிரித்துவிட்டவள் நிலா முறைக்கவும்


"ச்ச! இவ்ளோதானா? இதுக்கா ஃப்யூஸ் போன பல்ப் மாதிரி மூஞ்ச வச்சிருந்த?" என்று வேறு சொல்லிவிட அவள் எதிர்பார்த்ததிற்கு நேரெதிராய் நிலாவின் முகம் சுருங்கியது.


அதற்குள் வந்துவிட்ட ஆதிரா வேறு "சர்வி" என்று அவளை அழைத்துக்கொண்டிருக்க


"ஒரு நிமிஷம் பட்டூஸ்" என்றவள் நிலாவிடம்


"நான்லாம் எத்தனை தடவை எழுதாம போய் அடிவாங்கிருக்கேன் தெரியுமா? ஆனா இப்பொல்லாம் ஒழுங்கா எழுத ஆரம்பிச்சிட்டேன்... பேசாம இனி ஈவ்னிங் வீட்டுக்கு வா நாம சேர்ந்து உக்காந்து ஹோம் வர்க் எழுதிடுவோம்ன?" என்றவள் இளையவள் முகத்தில் புன்னகை மலரவே நிம்மதியுற்றவளாய் ஆதிரா கொடுத்த ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறினாள்.


ஆதிரா கல்லூரியில் இறங்கிக்கொள்ள சர்வியோ நடுரோடென்றும் பாராமல் அன்னையின் கன்னத்தில் இதழ் பதித்தது மட்டுமின்றி அவளிடமிருந்தும் பெற்ற பின்னரே அவளை அவ்விடமிருந்து நகரவிட்டாள்.


முதலில் எத்தனையோ முறை ஆதிரா சொல்லிப் பார்த்துவிட்டாள்.. இது ஸ்கூல் வாசலில்லை காலேஜ் வாசல் என அவள் கேட்டாதானே!? " என் பட்டூஸ்க்கு நான் குடுக்கறேன்.." என்று மறு கன்னத்திலும் கொடுத்துவிட்டு செல்வாள்.


ஆதிரா காம்பஸினுள் நுழைய சர்வி வண்டியில் தான் படிக்கும் கல்லூரியை நோக்கிப் பறந்தாள்.


இதுதான் அவர்களது வழக்கம். தினமும் காலையில் வண்டியை எடுக்கும் ஆதிரா அவள் காலேஜில் இறங்கிக்கொள்ள சர்வி அங்கிருந்து தன் காலேஜிற்கு சென்றிடுவாள். ஏனெனில் ஆதிரா ப்ரொஃபஸர் ஆதலால் அவர் கிளம்ப கொஞ்சம் நேரமெடுக்கும். முதலில் கிளம்பும் சர்வி பொறுமையாய் ஆதிராவின் காலேஜ் வாசலில் வந்து காத்திருக்கவும் ஆதிரா வரவும் அவள் ஓட்டுவதற்காக பின்னால் தள்ளி அமர்ந்துக் கொள்வாள். பின் இருவருமாய் சேர்ந்து மாலை நேரத்திற்கு இதமாய் பக்கத்து கடையில் டீ குடித்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு ஐஸ்க்ரீமையும் உள்ளே தள்ளிக்கொண்டே வீட்டிற்கு செல்வர்.



ஆதிராதான் ஒற்றை காலில் நின்று சர்வியை வேறு காலேஜில் சேர்த்தது. ஏனெனில் அவளுக்காகவென அவள் சண்டையிட்டதைவிட ஆதிராவிற்காக சர்வி சண்டையிட்டதே அதிகம்.. இதில் இருவரும் ஒரே இடத்தில் என்றால்? நிச்சயம் மூன்று வருடங்களில் யார் மண்டையையாவது சர்வி உடைத்திருக்கக்கூடும்.


வண்டியை ஸ்டூடண்ட்ஸுக்கான பார்க்கிங் லாட்டில் நிறுத்திவிட்டு குட்டி ஓட்டத்துடன் க்ளாஸினுள் நுழைந்த சர்வியின் முகம் முழுதும் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன.. அவளிடத்தில் சென்று அமர்ந்தவள் தீவிர யோசனையில் இருப்பதின் அடையாளமாய் ஒரு காதில் மட்டும் இயர்ஃபோனிருந்தது. அவளது எண்ணம் முழுதும் நிலாவைச் சுற்றியே வந்தது.


சற்று நேரம் அமைதியாய் பொறுத்துப்பார்த்தவர்களோ அவள் இன்னும் அதே யோசனையில் இருக்கவே எப்பொழுதும்போல முதல் பெஞ்சில் இருந்தவர்கள் பின்னாலும் மூன்றாவது பெஞ்சிலிருந்தவர்கள் முன்னாலும் திரும்பி அமர்ந்தவர்களாய் பேசிக்கொண்டிருந்தவர்களில் இருந்து பூரணி சர்வியின் இயர்ஃபோனை எடுத்து தன் காதில் வைத்துக்கொண்டாள்.


"மெல்லச் சிரித்தாய்..

என் உள்ளம் சரித்தாய்..

விழியாலே என்னை நீ தீண்டினாய்..." என்ற வரிகள் அவள் செவி வழி செல்ல கண்களிரண்டும் குறும்பில் மின்ன ஃபோனிலிருந்த இயர்ஃபோனை பிடுங்கியவள்,


"மேடம் என்ன பாட்டு கேக்கறாங்க பாருங்க!" என்று கத்த அப்பொழுதே சர்வியும் கவனித்தாள் அப்பாட்டை..!!


சிந்தனைக் கடலில் நீந்திக் கொண்டிருந்தவளுக்கு பாட்டு "மார்கழி பூவே"விலிருந்து "மெல்லச் சிரித்தாய்"க்கு மாறியதை அவள் உணர்ந்திருக்கவில்லை.


"ஆஹா..." என்று ஐவரும் ஒரு சேர இழுக்க தலையிலடித்துக் கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தாள் சர்வி.


சஹி "இவ மட்டும் எப்படி எப்பவும் பக்கீஸ் லவ் மோட்லையே இருக்கா?" என்க அதற்கு தியாவோ,


"ஒன்பது கிரங்களும் ஓரே நேர்கோட்ல நின்னா அப்படிதான் சஹி.."


நிது" அப்போ நம்ம கிரகம்லாம் எப்படி நிக்கும் தியா?" என்று சீரியஸாய் வினவ


கடுப்பிலிருந்த தியா "நடுரோட்ல நிக்கும் நிது!"என்றுவிட அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சர்விக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.


"ஏன் லேட்? காலைலயே உன் ஆள க்ரௌண்ட்ல பாத்தேன்.." என்ற தியாவைக் கண்ட சர்வியின் கண்கள் இரண்டும் மின்னியது அச்செய்தியில்.


"அவன் ஒன்னும் என் ஆளுலாமில்ல!" என்றவளின் குரலை அப்படியே ஒதுக்கினர் மற்ற ஐவரும்.


அதில் பூரணியோ


"சக்தி நீ அழகா இருக்கனு நினைக்கல..

உன்ன நான் லவ் பண்ணுவேன்னு நினைக்கல..

ஆனா இதெல்லாம் நடந்திருமோனு பயமாயிருக்கு.." என்று ஆண் குரலில் வேறு பேச அருகில் இருந்தவளை கழுத்தோடு சேர்த்திழுத்து இவள் கொட்ட முயல பூரணியோ...


"ஏ..ஏ! அவன் போறான் பாரு" என்க அதை முதலில் நம்பாமல் போனவள் பின் ஏதோ தோன்ற எழுந்து குடுகுடுவன வகுப்பறை வாசலுக்கு ஓடினாள்.


அங்கிருந்தபடியே அவள் வெளியே எட்டிப் பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவன் இருப்பதற்கான அறிகுறியே இருக்கவில்லை. சிறு ஏமாற்றம் துளிர்த்தது.


முதன் முதலாய் அவனை தீம் பார்க்கில்தான் அவள் சந்தித்தது.


முதல் வருடத்தில் எக்ஸ்கர்ஷன் என்றப் பெயரில் அவர்கள் கல்லூரி நிர்வாகம் தீம் பார்க்கை செலக்ட் செய்திருக்க.. அதே பார்க்கிற்கு நாலைந்து முறை சென்று வந்திருந்தாலும் நண்பர்களுடன் என்று அவள் பெயரை கொடுத்திருக்க மற்ற ஐவரும்கூட அதே தான் செய்திருந்தனர். அதில் பூரணி மட்டும் முதலில் "இந்த பழைய பாடாவதி ஐடியாவ முதல்ல பேன் பண்ணனும்!!" என்று பொங்கிவிட்டே கிளம்பினாள்.


முதலில் கேம்ஸை முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு வாட்டர் கேம்ஸிற்கு போகலாம் என்பது அவர்களது திட்டம். அதே போல் ஒவ்வொன்றாய் விளையாடியபடி வந்தவர்கள் ஒரு கேமிற்காக வரிசையில் நின்றிருந்தப் பொழுதுதான் அவள் அவனைப் பார்த்தது.


இவர்கள் மூணாவது வளைவில் நிற்க முதல் வளைவில் நின்றிருந்தவன் சர்விக்கு நேர் பக்கவாட்டில் நின்றிருந்தான். வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவளின் கவனத்தில் முதலில் பதிந்தது.. ஆழமாய் பதிந்தது அவனது புன்சிரிப்பு..!!


அப்படியொரு சிரிப்பு... அவளால் மறக்க முடியாத... மறக்ககூடாதென்று அவள் நினைக்குமளவு அவளை ஈர்த்த புன்னகை அது..!! அவனது புன்னகை அவளுக்கு ஒருவித ப்ளஸன்ட் ஃபீலைக் கொடுத்தது.. அவளை ரசிக்க வைத்தது.. அவனையே கவனிக்க வைத்தது.


முதல் வரிசையில் நின்றிருந்தவனின் முறை வந்துவிட அந்த கேம் முடிந்து அவன் அவ்விடம்விட்டு நகரும்வரை அவனையேதான் பார்த்திருந்தாள் அவள்.. அந்த புன்னகைக்காகவே..!! இவள் முறை வருவதற்கு முன்பே அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.


பின் அவளும் விளையாட்டில் கவனமாகிவிட்டாள்தான். ஆனால் அவனை மறுபடியும் அவளது கல்லூரி வாசலிலேயே பார்ப்பாள் என்று சர்வி நினைத்திருக்கவில்லை..


அவன் வெளியாள் என்று அவள் நினைத்திருக்க அவனோ அத்தனை நாள் அதே காலேஜில்தான் இருந்திருக்கிறான்.


அதற்கு பிறகு எப்பொழுதாவது அவள் கண்ணில் படுவான். இவளும் அவன் முகத்தில் அந்த புன்னகையை தேடுவாள்.. ஆனால் சர்வி செய்த மாபெரும் பிழை, இதை பூரணியிடம் பகிர்ந்தது.


வெளியில் அவன் இல்லாமல் போகவே இது பூரணி செய்த சதியெனப் புரிந்தவளோ அங்கிருந்தபடியே உட்புறமாய் திரும்பி நின்று,


"இந்த பூராண இன்னைக்கு நான் நசுக்கல.." என்று சொல்லிக்கொண்டே போனவளின் வார்த்தைகள் உறைந்தது அவள் பின்னிருந்து "எக்ஸ்க்யூஸ் மீ" என்று ஒலித்த ஆண் குரலில்..
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,575
Reaction score
42,979
Age
40
Location
Tirunelveli
Interesting update 👍👍👍👍
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top