அத்தியாயம் – 6
அத்தியாயம் – 6
அன்று வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையை நினைத்து பார்த்தார் இந்துமதி. அதுவும், அண்ணனின் கோபம் அறிந்தவருக்கு, அண்ணனின் விலகல் தான் அதிர்ச்சியை தந்தது.
அன்று மண்டபத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்தவர்கள், ராஜசேகர் அங்கு இருந்து கிளம்பிய அடுத்த நொடி, உண்மையை கூறுமாறு இந்துமதியிடம் கண்ணாலே கேட்டார் கிருஷ்ணன்.
“நான் சொல்லுறேங்க, அவ வாய் திறக்க மாட்டா” என்றார் வினீத் இந்துமதியின் கணவர்.
வினீத்திற்கு கல்லூரி காலத்தில் இருந்தே, இந்துவின் மேல் காதல். ஆனால் இந்துவின் செல்வநிலை, அவரை சற்று யோசிக்க வைத்தது.
இதற்கிடையில், அண்ணனின் திருமணத்தில் இந்துவிற்கு ராஜசேகர் மீது ஒரு வித ஆசை. அவரின் அழகு ஒரு பக்கம், தங்கைக்காக அவர் பார்த்து பார்த்து செய்யும் விதம். பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பாங்கு, எல்லாம் அவர் மீது ஒரு வித ஆசையை தூண்டிவிட்டது.
கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கும் அவர், படிப்பு முடியவும் அண்ணனிடம் சொல்லி பேச சொல்லலாம் என்ற முடிவிற்கு வந்து இருந்தார்.
ஆனால் அதற்குள் அங்கே ராஜசேகர், கற்பகத்தை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார் என்ற செய்தி, இவர் தலையில் இடியை இறக்கியது.
அதன் பின், இங்கே கிருஷ்ணனும், இந்துவும் பெற்றவர்களை இழந்து மெதுவாக மீண்டு கொண்டு இருந்தனர். ராஜசேகர் அப்பொழுது, மனைவி கர்ப்பமாக இருந்ததால் அவர் இங்கே வரவில்லை.
வினீத் தான் அப்பொழுது, இந்துவிற்கு ஆறுதலாக நின்றார் கல்லூரி வரும் பொழுது. வீட்டில், வாணி தன் மகன் அதிகனை வைத்து ஓரளவு தேற்றி இருந்தார் இந்துமதியை.
கற்பகத்திற்கு, அங்கே பிரசவ நேரத்தில் சிக்கல் வரவும் ராஜசேகர் பதறிவிட்டார். மனைவி, பிள்ளை பிழைத்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தார்.
ஆனால், அங்கே மருத்துவமனையில் அவர் மனைவியை காப்பாற்ற முடியவில்லை என்று கூறி பெண் குழந்தையை கையில் கொடுத்தனர்.
குழந்தையை அவரின் அன்னை கரத்தில் கொடுத்துவிட்டு, மனைவியை காண சென்றார். அங்கே அமைதியாக ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்ற மனைவியை பார்த்து, கண் கலங்கினார்.
நீண்ட நேரம் அவருடன் இருந்துவிட்டு, அடுத்த அடுத்த காரியங்களை கவனிக்க தொடங்கினார். மகளை எப்பொழுதும், அவர் கூடவே வைத்து இருந்தார்.
இந்த செய்தி அறிந்து, இந்து தன் திட்டத்தை செயல்படுத்த வாணியை பயன்படுத்திக் கொண்டார். தான் காதலிப்பது, ராஜசேகர் என்று கூறி அவரை திருமணம் செய்து வைக்குமாறு, கேட்டுக் கொண்டார் அழுகையுடன்.
அப்பொழுது, அவருக்கு தேவை சுகபோக வாழ்க்கை அது அவரால் கொடுக்க முடியும் என்று புரிந்தது. மேலும், வெளியுலகத்திற்கு தன் கணவன், அழகானவன் என்று காட்டிக் கொள்ள வேண்டும் அவருக்கு.
வாணிக்கோ, அண்ணன் இங்கே வந்துவிட்டால் இன்னும் இந்த வீட்டின் உரிமை தன் கைபிடியில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே, அவரை செயலில் இறங்க வைத்தது.
“வாணி! என் மனசில் கற்பகத்தை தவிர வேற யாருமில்லை. இப்போ எங்க காதலுக்கு சாட்சியா, என் மகள் இருக்காள், தயவு செய்து இங்க இருந்து கிளம்பு” என்று கூறிவிட்டு அவர் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.
“அம்மா! என்னமா இது? அண்ணனுக்கு என்ன வயசாகிடுச்சு? முதல அந்த பிள்ளையை எங்கேயாவது, அனாதை ஆஸ்ரமத்தில் விட்டுட்டு அவருக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கிற வழியை பாருங்க” என்று கூறிய அடுத்த நொடி, கீழே விழுந்து இருந்தார், செண்பகம் கொடுத்த அடி அப்படி.
“யாரடி அனாதை? அந்த பிள்ளையை அவன் கீழே கூட விடாம, பார்த்து பார்த்து வச்சுக்கிட்டு இருக்கான் உன் அண்ணன்”.
“அந்த மகராசி, எங்களை எப்படி எல்லாம் பார்த்துகிட்டா, உன் அண்ணனை எப்படி எல்லாம் பார்த்துகிட்டா தெரியுமா உனக்கு?!!”.
“நீ யார்னு எனக்கு தெரியும், தேவையில்லாதது பேசாம உன் வீட்டுக்கு கிளம்பும் வழியை பார்” என்றுவிட்டு உள்ளே சென்றார்.
தாயின் இந்த பதிலை அவர் எதிர்பார்த்தார், ஆனால் இப்படி தன்னை அறைந்து விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
அந்த கோபம் கூட, இப்பொழுது இறந்த கற்பகம் மேல் தான் திரும்பியது. இனி இங்கே வேலைக்காகது என்று எண்ணி, அவர் கிளம்ப நினைக்க, இந்துவா விடுவார்.
தான் நினைத்ததை அடைந்தே பழக்கப்பட்டவர், இப்பொழுது விட்டால் வேறு சந்தர்ப்பம் அமையாது என்று எண்ணி வாணியை மீண்டும் முடுக்கிவிட்டார்.
அதன் விளைவால், வீட்டில் அடுத்து அடுத்து பிரச்சினைகள் வெடித்தது. இதில், தடுப்பூசி கூட போட முடியாது போனது, அந்த பச்சிளம் குழந்தைக்கு.
எப்படியாவது, பிள்ளையை அழைத்துக் கொண்டு தனியாக அவர் செல்ல நினைக்க, வாணி அதற்கு முட்டுக்கையாக இருந்தார்.
“உன் வீட்டுக்காரர் விட்டுட்டு நீ மட்டும் உன் பிள்ளையை கூட்டிட்டு, இங்க வந்திடு அப்போ” என்ற ராஜசேகரை அதிர்ந்து பார்த்தார் வாணி.
“என்ன பேச்சு பேசுற அண்ணா?!!” என்றார் கோவமாக.
“நீ என்னை இன்னும் டார்ச்சர் பண்ணா, அடுத்து நான் அது தான் செய்ய சொல்லுவேன், ஏன் எனக்காக நீயும் தான் இரு இங்க” என்றவரை பார்த்து, அடுத்து என்ன பேச என்று தெரியாமல் முழித்தார்.
இங்கு இப்படி பிரச்சனை போய்க் கொண்டு இருக்கும் பொழுது தான், வினீத்திற்கு விஷயம் சென்றது.
உடனே அவர் நேராக சந்திக்க சென்றது, ராஜசேகரை தான். அதுவும், யாருக்கும் தெரியாமல் தன் காதலியை கரம் பிடிக்க அவர் நாடியது ராஜசேகரை தான்.
இந்துவின் குணம் அறிந்தவர், ஆகையால் இந்துவின் மேல் ஒரு பார்வையை வைத்து தான் இருந்தார்.
“என் பெயர் வினீத்” என்று அறிமுகம் செய்ததோடு, இந்துவை காதலிக்கும் விஷயத்தையும், அவரின் குணத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“எனக்கு கற்பகம் தான் எல்லாமே, அவ இல்லாத இந்த உலகத்தில், என் குழந்தைக்காக மட்டுமே வாழ நினைக்கிறேன், நீங்க தாராளமாக இந்துவை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றார் ராஜசேகர்.
“அங்க தான் சிக்கல் இருக்கு, உங்க வேஷத்தில் தான் நான் இருக்கணும் அங்க, இல்லைனா இந்து எப்படி என்ன செய்வானு தெரியாது” என்றார் வினீத்.
“அப்போ சரி, இந்த விஷயம் இன்னும் ஒருத்தருக்கு தெரிஞ்சா தான், அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்க” என்றார் யோசனையுடன்.
“இதை பத்தி, நீங்க ஏன் உங்க தங்கச்சி புருஷன் கிட்ட பேச கூடாது. எனக்கு தெரிஞ்சு, இது எல்லாம் அவருக்கு தெரியாது நினைக்கிறேன்” என்றார் வினீத்.
“இல்லை, அவர் வேண்டாம். அவருக்கு தங்கச்சி பாசம் ஜாஸ்தி, ஏதாவது ஒரு கட்டத்தில் உளறிட்டா, நாம மாட்டிப்போம்” என்றார் ராஜசேகர்.
“என் பக்கம் வேண்டாம், அவங்க எல்லாம் கொஞ்சம் பயந்த சுபாவம், உங்க பக்கம் ஸ்ட்ராங்கான ஒரு ஆள் இருக்கணும்” என்றார் வினீத்.
“ம்ம் அப்போ இந்துவோட தாய் மாமா தான் சரி, அவர்கிட்ட கேட்டு பார்ப்போம்” என்றார் ராஜசேகர்.
உடனே நேரம் கடத்தாமல், வினீத் மூலம் விஷயம் அவருக்கு கடத்தப்பட்டது.
மறுநாள் தன்னுடன் ஒருவரை அழைத்துக் கொண்டு ஊருக்கே வந்துவிட்டார்.
“என்னபா கிருஷ்ணா!! இப்படி தங்கச்சி கல்யாணத்தை முடிக்க, என் கிட்ட கூட சொல்லாம இங்க வந்துட்ட” என்றார் ஆதங்கம் கலந்த கோபத்துடன்.
“மாமா!! நீங்க எப்படி இங்க?!!” என்று ஆராய்ச்சியாக பார்த்தார் கிருஷ்ணன்.
ஏனெனில், இங்கு வரும் வரைக்கும் தங்கையின் திருமணம், நடக்க விடாமல் செய்ய என்ன செய்யலாம் என்று தான் யோசித்தார் கிருஷ்ணன்.
அவள் ஆசைபட்டாள் என்பதற்காக, அவரால் இரண்டாம் தாரமாக எல்லாம் கொடுக்க அவர் மனம் ஒப்பவில்லை.
இதில் சொந்தங்களுக்கு தெரிந்தால், தன்னை பற்றி மட்டுமல்லாது தங்கையையும் பேசுவர் என்று பயந்து தான், யாருக்கும் சொல்லாமல் இங்கே வந்தது.
“எனக்கு எப்போவும் என் தங்கச்சி தான் முதல, அவ பிள்ளைகளை அப்படியே விட நான் ஒண்ணும் மனுஷத்தன்மை இல்லாதவன் இல்லை” என்றார் சுள்ளென்று.
அதில் முகம் வாடி போனார் கிருஷ்ணன்.
“உன்னை தப்பு சொல்லல கிருஷ்ணா, உன் மனசு புரியுதுயா, நான் இருக்கேன் தைரியமா இரு” என்றார் அவரின் தாய் மாமா சபரீசன்.
அதன் பின் தான், கிருஷ்ணனுக்கும், புதிய தெம்பு வந்தது. சபரீசன், எவ்வளவோ இந்துவிடம் பேசி பார்த்தார், ஆனால் அவர் தான் ராஜசேகரை தான் திருமணம் செய்வேன், இல்லை என்றால் இறப்பேன் என்று மிரட்ட தொடங்கிவிட்டார்.
சபரீசனுக்கு, அவளின் இந்த பிடிவாதம் எங்கு இருந்து வந்தது என்று புரிந்து கொண்டார். முடிவு எடுத்ததை செயலாக்க, அவர் ஒரு வாரத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று விட்டார் கிருஷ்ணனிடம்.
“மாமா!! என்ன பண்ணுறது இப்போ??!!” என்று கவலை கொண்டார் கிருஷ்ணன்.
“உன் தங்கச்சி பிடிவாதம் தெரியும் தானே, விடு ஏதோ நல்ல பையனா இருக்க போய் தப்பிச்சா, இல்லைனா யோசிச்சு பாரு”.
“மனசை தேத்திக்கிட்டு, வேலையை பாரு. நான் வெளி வேலை பார்க்கிறேன், நீ எல்லோரையும் கூட்டிட்டு ஜவுளி கடைக்கு போய் துணி எடு, நேரா டவுனுக்கு போயிடு” என்று அவர் கட்டளையிட்டார்.
அவர்கள் அந்த பக்கம் செல்ல, இவர் வேறு பக்கம் சென்று விட்டார். அங்கே, ராஜசேகர் அவர் மகளுடன் இருக்க, கூட வினீத்தும் அங்கே தான் அந்த பழைய ஓட்டு வீட்டில் இருந்தார்.
“தம்பிங்களா!! ஆள் மாறாட்டம் தப்புதான், ஆனா இங்க ரெண்டு உயிர் தப்பிக்க நாம இதை செய்றோம்”.
“தம்பி வினீத்!! இந்து எனக்கும் பொண்ணு தான், ஆனா அது கொஞ்சம் பிடிவாதகாரி, கொஞ்சம் அப்போ அப்போ அவங்க அம்மா மாதிரி அவசரக்குடுக்கை வேற”.
“நீங்க தான் இப்போ சூதனமா இருக்கணும். உங்களை நம்பி தான், இங்க எல்லாம் நடக்குது, புரியும் நினைக்கிறேன்” என்றார்.
“புரியுது சித்தப்பா, நம்ம பேசின மாதிரி மௌனமா இருந்து அவ நடவடிக்கை வச்சு தான் அடுத்து என்னன்னு யோசிக்கணும்” என்றவர் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து இருப்பது பற்றியும் சொன்னார்.
“வருஷத்தில் இரண்டு தடவை, இந்த பக்கம் வர மாதிரி பார்த்துக்க. அதே மாதிரி அவ ராஜசேகர் கிட்ட அப்போ நெருங்க கூடாது”.
“அந்த தம்பி அங்க இருந்தாலும், அதுக்கு அங்க ஒரு பிரச்சினையும் வர கூடாது இப்போவே சொல்லிட்டேன்” என்றார்.
“கண்டிப்பா பிரச்சினை வராது சித்தப்பா, ஆனா எனக்கு அவளை அங்க கூட்டிட்டு போக தான் விருப்பம், அங்க போய்ட்டா அப்புறம் என் கூட இருந்து தானே ஆகணும்” என்ற வினீத்தை பார்த்து தீயாய் முறைத்தார்.
“அடேய்!! யாரடா நீ?!! அவளை லேசுல எடை போடாத, அவ அண்ணனும் ஒரு கொக்குமாக்கு பைய தான், தங்கச்சி பாசத்துல லூசு மாதிரி எதையாவது செஞ்சிட போறான்” என்றவர் இருவரை பற்றியும் தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறினார்.
கேட்ட இருவரும் அதிர்ந்து போயினர், கிருஷ்ணன் தங்கை பாசத்தில் பலவீனமானவரே தவிர நல்ல மனிதர்.
ஆனால் இந்துவின் மறுபக்கம், கேட்ட இருவருக்கும் என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.
பிடிவாதத்தின் முழு உருவமாக மட்டுமில்லாமல், தனக்கு வேண்டும் என்பதை நிறைவேற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை அறிந்து தான் திகைத்து போயினர்.
“இப்போ புரிஞ்சுதா!! அதனால தான் ஆள் மாறாட்டம் தப்புன்னு தெரிஞ்சும், அவளோட இந்த குணத்துக்காக தான் நான் ஒத்துகிட்டேன்”.
“இனி தன் பிள்ளைக்காக மட்டுமே வாழ முடிவெடுத்து உறுதியா இருக்கிறான் ராஜசேகர், கட்டாயத்துல அவளுக்கு வாழ்க்கைபட்டு உயிரை விட்டுட்டானா, அந்த பாவம் சும்மா விடுமா?”.
“பொம்பளை பிள்ளை தனியா தவிச்சு போயிரும்யா, அப்பா, அம்மா இல்லாம”.
“அதனால தான் சொல்லுறேன், வினீத் தம்பி நீங்க தான் சூதானமாக இருக்கணும்”.
“நீ வர நேரம், இந்த தம்பி அங்க இருக்க மாட்டார். நீங்க ரெண்டு பேரும் தான் எப்போவும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும், சொல்லிட்டேன்” என்றார் சபரீசன்.
அவருக்கு மனிதர்களை எடை போட தெரியும், அதுவும் தங்கை பிள்ளைகளை பற்றி முழுவதுமாக அறிந்த ஒரு நல்ல மனிதர். அதனாலயே, இவரை கொண்டு வேலையை முடிக்க நினைத்தனர் வினீத்தும், ராஜசேகரும்.
திருமண நாளும் வந்தது, இதோ வினீத் ராஜசேகராக அங்கே நின்று, அவர் காதலி இந்துவை கரம் பிடித்து விட்டார்.
ஆயிரம் தவறுகள் இந்துவின் பக்கம் இருந்தாலும், நிச்சயம் ஒரு நாள் நிதர்சனம் அவருக்கு புரியும் என்று நம்பினார் வினீத்.
அதன் பிறகு, ராஜசேகராக வினீத் அங்கே இருக்கும் பொழுது அவர் எப்பொழுதும் மௌனத்தை கடைபிடித்தார். இருட்டில் மட்டுமே, இல்லற வாழ்க்கை என்று இந்து அறியாமல் அதை பார்த்துக் கொண்டார்.
வெளிநாடு செல்லும் பொழுது, பெரிய சண்டையை இழுத்து விட்டு தான் செல்வார். அப்பொழுது சண்டை மட்டும் போடாமல், அவரின் தன்மனத்தையும் சீண்டிவிட்டு செல்வார்.
இதனால் வினீத் சென்ற பிறகு, ராஜசேகர் அங்கே இருக்கும் பொழுது பேச கூட மாட்டார் இந்து. தனி அறையில் தான் இருவரும் வசிப்பர், அந்த அளவுக்கு மனைவியை புரிந்து வைத்து இருந்தார் வினீத்.
இப்படியே நாட்கள் கடக்கும் பொழுது தான், மகளை பார்க்க ஊருக்கு சென்ற ராஜசேகர் பிடிபட்டார்.
அதன் பிறகு தாயிடம் மட்டும், சில விஷயங்கள் கூறிவிட்டு உடனே செய்ய கூறினார்.
வினீத்திற்கும் தகவல் பறந்தது, உடனே அவர் சபரீசனை தான் தொடர்பு கொண்டார்.
“அவ வீம்புக்கு ஏதாவது செய்வான்னு தான், ஆரம்பத்தில் இதை எல்லாம் சரி பண்ணி வைங்க சொன்னேன், இப்போ ஆட ஆரம்பிசிட்டா” என்று பல்லை கடித்தார் அவர்.
“அவளை பொறுத்த வரைக்கும், ரெண்டு பிள்ளைங்க ராஜசேகர் பிள்ளைங்க அவங்களுக்கு தான் சொத்து உரிமை வரணும் நினைக்கிறா” என்றார் வினீத்.
“இனிமேலும் இந்த வேஷம் தேவையா??” என்றார்.
“கண்டிப்பா தேவை, நான் இங்க இன்னும் ஆறு மாசம் தான் இருப்பேன், அப்புறம் இனி அங்க தான் சித்தப்பா”.
“பிள்ளைங்க கல்யாணம் பேசும் பொழுது, சரியா அப்போ நான் என் வேஷத்தை கலைச்சிடுவேன் சித்தப்பா” என்றார் வினீத்.
அதன்படி, நடந்த அத்தனையும் வினீத் சொல்லி முடித்து, இது எல்லாம் இந்துவுக்கு இரண்டாம் பிள்ளை பெற்ற பொழுதே தெரியும் என்பதையும் சேர்த்து கூறினார்.
“என்ன அப்போவே தெரியுமா?!!” என்று அதிர்ந்தார் கிருஷ்ணன்.
பின்னே, இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தும், அவரின் சுயநலத்திற்காக இங்கே எத்தனை எத்தனை பொய்கள், மகன் மனதிலும் எத்தனை வஞ்சம் விதைத்து வைத்து இருக்கிறாள் என்று அவர் மேல் அவ்வளவு கோபமும், வருத்தமும் சேர்ந்தே வந்தது.
“அப்படி என்ன உனக்கு இங்க நாங்க குறை வச்சோம் இந்து?? இல்லை புரியல, எதுக்காக நீ இதை எல்லாம் செய்ற?!! என்ன தான் பிரச்சனை உனக்கு?” என்று ஒரு கட்டத்தில், பொறுக்க முடியாமல் கேட்டார் கிருஷ்ணன்.
“ம்ச்!! உனக்கு அது எல்லாம் சொன்னா புரியாது அண்ணா, எனக்கு இப்போ என் பொண்ணுக்கு ஒரு வழியை சொல்லு”.
“சின்ன வயசில் இருந்து, அவளுக்கு அதிகன் தான் அப்படின்னு முடிவு பண்ணினது தானே, உன் பையன் கிட்ட சொல்லி, இப்போவே கல்யாணம் வச்சிடலாம்” என்றார் இந்துமதி அப்பொழுதும்.
வாணி தான் இத்தனை நடந்து இருக்கிறதா, என்று திகைத்து போனார்.
இதில் இந்துவின் கையில் அவர் பொம்மலாட்டம் போல், இருந்து இருக்கிறார் என்று அறிந்து, தான் இத்தனை நாட்கள் முட்டாளாக இருந்தது அறிந்து அதிர்ந்து இருந்தார்.
எல்லாம் கேட்ட பெரியவர்கள் ஒரு பக்கம் அதிர, மறுபக்கம் அதிகன் தான் அதிக காயம் கொண்டான். தாய் ஒரு பக்கம், அவரின் சுயநலத்திற்காக ஒன்று செய்ய நினைக்க, அத்தை பாசம் வைத்த ஒருவர் என்ன மாதிரியான மனநிலையில் இருந்து உள்ளார் என்பதை அறிந்து அதிர்ந்து விட்டான்.
“என்ன அண்ணா! பேசாம இருக்க? ஏற்கனவே நாம பேசியது தானே, இவங்க கல்யாணம்” என்று அப்பொழுதும் தன் பிடிவாதத்தில் இருந்தவரை பார்த்து வெறுத்து விட்டார் கிருஷ்ணன்.
“எனக்கு விருப்பமில்லை, நாளைக்கு முதல் வேலையா உங்க குடும்பத்தை கூட்டிட்டு கிளம்பிடுங்க” என்று அறிவித்து விட்டு சென்றான் அதிகன்.
அதில் கோபமடைந்த இந்து, வினீத்தை பார்த்து முறைத்து விட்டு சென்றார். வினீத்திற்கு தெரியும், அவர் மனைவி இப்படித்தான் யோசிப்பார் என்று, அதனால் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார் இப்போதைக்கு.
“உங்களை யார் வேஷத்தை களைக்க சொன்னது?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் இந்து.
“பிள்ளைங்களுக்கு இப்போ கூட விஷயத்தை சொல்லலைனா, நல்லா இருக்காது இந்து. நீ என்ன நினைக்குற கூட எனக்கு தெரியுது, இத்தனைக்கும் நம்ம கிட்ட இப்போ தேவையான சொத்து, பிள்ளைங்களுக்கு சேர்த்து வச்சு இருக்கோம் தானே அப்புறம் என்ன?” என்றார் ஆதங்கத்துடன்.
“சில விஷயம் உங்களுக்கு புரியாது, நீங்க சும்மா இருங்க. ஏற்கனவே, நான் செம கோபத்தில் இருக்கேன் நீங்க இப்போ எதுவும் பேசாதீங்க” என்றுவிட்டார் இந்து.
அவர் எதாவது செய்ய நினைக்க, அதை புரிந்தது போல் அவரை எதையும் யோசிக்க விடாமல் செய்து சென்னை அழைத்து வந்து விட்டார் வினீத், தன்னுடைய வீட்டிற்கு.
நாட்கள் செல்ல செல்ல, இப்பொழுது இந்துவிற்கு அகனிதா அங்கே தந்தையுடன் சந்தோஷமாக இருப்பதை அறிந்து, அவளின் நிம்மதியை குழைக்க திட்டமிட தொடங்கிவிட்டார்.
அவர் ஒன்றை கவனிக்க மறந்துவிட்டார், இத்தனை நாட்கள் அதிகன் அவளுக்கு துன்பத்தை அளித்து இருக்கிறான், ஆனால் இனி துன்பத்தை அவளுக்கு கொடுக்க போவதில்லை.
அதற்கு பதில் இனி அவளுக்கு பாதுகாப்பும், மகிழ்ச்சியும் மட்டுமே கொடுக்க போகிறான். இதில் இந்துவையோ, அல்லது வேறு யாரையும் அவளுக்கு துன்பத்தை நெருங்க விட போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான்.
இனி அதிகன், அகனிதா மோதல்கள் அதிகம்.
தொடரும்..






மூனறு ஆண்கள் செய்ததும் தப்பு தானே ,இந்து என்ன காரணத்துக்காகவேனும் ராஐசேகரை திருமணம் முடிக்க அடமா இருந்து இருக்கலாம்,
இவங்க புரிய வைத்து இருக்கலாம்.
இந்துக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை தன்னுடைய கணவரா ராஐசேகரை தானே நினைத்து இருப்பாங்க,
இவங்க செய்ததும் தப்பு தான் உண்மை தெரிந்தும் கமுக்கமா இருந்து இருக்காங்க.
வெளி உலகுக்கு ராஐசேகர் தானே கணவனாக தெரிந்து இருக்கார்.
இந்து உணமை தெரிந்தவுடன் பெரியவர்களிடம் உண்மையை சொல்லி ராஐசேகரிடம் இருந்து பிரிந்து போயிருக்கணும்.
Nice