அத்தியாயம் – 5
அத்தியாயம் – 5
அந்த இரவு யாருக்கும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை, அந்த வீட்டில்.
இந்து என்ற ஒரு பெண்ணால் எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிந்தது என்று அவர் மேல் கோபமும், வருத்தமும் சேர்ந்தே வந்தது.
வாணிக்கு, முதல் முறையாக அண்ணனின் இந்த மறுபக்கம் பயத்தை கொடுத்து அவருக்கு.
முதன் முதலில், அண்ணனுடன் நடந்த வாக்குவாதமும், அதன் பின் அவரிடம் பேசிய வார்த்தைகளையும் அசை போட்டார்.
“வாணி!! எனக்கு கற்பகம் தான் எப்போவும், அவ இல்லைனா வேற ஒருத்தின்னு என் மனசு மாறாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறிய தன் அண்ணனை வெறித்து நோக்கினார்.
“அங்க உன்னை மட்டுமே நினைச்சுகிட்டு, வர எல்லா வரனையும் தட்டி கழிக்கிறா என் நாத்தனார்”.
“ஆரம்பத்தில் இருந்தே, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்க தான் அவங்க வீட்டில் பேசினாங்க”.
“நீ தான் உலகத்தில் இல்லாத அழகியை, உனக்கு பிடிச்சு இருக்குன்னு அவளை கட்டின”.
“இப்போ பாரு, உன்னையும், பிள்ளையும் அம்போன்னு விட்டுட்டு போய் சேர்ந்துட்டா மகராசி. இங்க நீ தான கஷ்டப்படுற, முதல இந்த பிள்ளையை ஒரு அனாதை ஆசிரமத்தில் விட்டுட்டு, முதல இருந்து வாழ்க்கையை ஆரம்பி அண்ணா” என்றவரை தீர்க்கமாக பார்த்து முடியாது என்றார் ராஜசேகர்.
வாணிக்கு வேணுமானால், தன் காதல் தெரியாமல் இருக்கலாம். தன் பெற்றோருக்கு தெரியும் அல்லவா, இப்பொழுது தான் மனைவி இல்லாமல் இருப்பது தான் பிரச்சினையா இவர்களுக்கு?!! என்று ஆதங்கப்பட்டார்.
இந்துவின் குணம் பற்றி அறியாததும், மகன் மகளுடன் ஒரே வீட்டில் தானே இருக்க போகின்றனர் என்ற எண்ணம் தான் முதலில் அவர்களை சரி என்று சொல்ல வைத்தது.
அதன் விளைவாக, அடுத்து அடுத்து பல திருப்பங்களுடன் அவர் வாழ்வு நகர்ந்தது.
இதற்கிடையில், பிறந்த பிள்ளைக்கு என்ன தான் பால் கொடுத்து பார்த்துக் கொண்டாலும், இருந்த பிரச்சினையில் போட வேண்டிய தடுப்பூசிகளை போட மறந்தனர் பெரியவர்கள்.
அதன் விளைவாக அங்கே பாதிக்கப்பட்டு இருப்பது, அகனிதா தான். இன்று வரையும், அந்த பாதிப்பை சரி செய்ய முடியாமல், சக்கர நாற்காலியில் தானே அவள் வாழ்க்கை நகர்கிறது.
இதை எல்லாம் நினைத்து பார்த்தவர், மகன் நாளை என்ன கூற போகிறானோ என்று திகிலாகவும் இருந்தது.
இங்கே இவர் இப்படி இருக்க, அங்கே நடராஜனை தேற்றிக் கொண்டு இருந்தார் செண்பகம்.
“என் பையனை நானே புரிஞ்சிக்கல செண்பகம், எம்புட்டு விசனபட்டு இருப்பான் அப்போ” என்று அழுது கரைந்தார்.
“எல்லாம் நீங்க உங்க பொண்ணுக்கு கொடுத்த செல்லம் தான் இங்க வர கொண்டு விட்டு இருக்கு, நான் அப்போவே தலைபாட அடிச்சிக்கிட்டேன், இந்த சம்பந்தம் வேண்டாம்னு, இப்போ கரைஞ்சா ஆச்சா!!” என்று அவர் மேலும் திட்டிவிட்டு, பின் சமாதானப்படுத்தினார்.
இங்கே அறையில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் கேட்ட விஷயங்களை நினைத்து, வருத்தப்பட அங்கே மாடியில் ஒருவன் கோபத்தில் தன்னை வருத்திக் கொண்டு இருந்தான்.
கை வலிக்க வலிக்க, அந்த பாக்சிங் பையை குத்திக் கொண்டு இருந்தான். அத்தை, அம்மாவின் பாசத்திற்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லுவது மட்டுமே உண்மை என்று நம்பி, தான் எத்தகைய தவறை செய்து இருக்கிறோம் என்று தன் மீது உள்ள கோபம் தான் அதிகம் அவனுக்கு.
அன்று எப்படிபட்ட வார்த்தையை தான் கூறினோம்!?? இதற்கு எல்லாம் தனக்கு மன்னிப்பே கிடையாது என்று புரிந்தது இக்கணம்.
அகனிதா மீது கோபம் கொள்ள, தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவன் முகத்தில் யாரோ கரியை பூசியது போல் இருந்தது அவனின் தற்போதைய நிலை.
அப்பொழுது அவனை தேடி மாடிக்கு வந்த திலக்கும், தீனாவும் அவன் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்தனர்.
“என்னடா!! அண்ணன் இப்படி இருக்கான்” என்று தீனா பதற, அவனை அமைதிப்படுத்தினான் திலக்.
“நமக்கே, ஷாக்கிங்கா இருக்கு, மச்சான் ஏற்கனவே நிறைய வேலை அம்மா, அத்தை மேல இருக்கிற பாசத்துல நிறைய வேலை பார்த்திட்டார் போல, அதோட எபெக்ட் போல டா” என்றான் திலக்.
அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே, அந்த பஞ்சிங் பாக்கின் நிலை பார்த்து அதிர்ந்து போயினர்.
“அண்ணா!! போதும் நிறுத்து, யார் மேல கோபம் உனக்கு?? ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கிற??” என்று வருத்தத்துடன் சற்று சத்தமாக கேட்டான் தீனா.
அப்பொழுது தான் அவனின் சத்தத்தில், நிமிர்ந்து பார்த்தான் அதிகன். இருவரையும் வெற்று பார்வை பார்த்துவிட்டு, அங்கு இருந்த இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்தான்.
“மச்சான்!! அகனிதா நினைச்சு வருத்தமா?!!” என்று கேட்டான் திலக்.
“அதுவும் தான், ஆனா என்னை நினைச்சு தான் கோபமே. அம்மா, அத்தை சொன்னா சரியா இருக்கும்னு நினைச்சு, நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்” என்று வருந்தினான்.
“அண்ணா!! நீங்க என்ன முடிவு எடுத்தாலும், எங்களுக்கு ஓகே, நாங்க உனக்கு பக்கபலமா இருப்போம்” என்று தீனா, திலக் இருவரும் அவனுக்கு ஆறுதல் அளித்தனர்.
ஒரு பெருமூச்சை வெளியிட்டு, இன்னும் என்ன என்ன ரகசியங்கள் இருக்கிறதோ என்று தான் யோசித்தான் இப்பொழுது.
அப்பொழுதே இருவருக்கும், சில பல வேலைகளை எல்லாம் பகிர்ந்து கொடுத்தான்.
மறுநாள் விடியல், இன்னும் என்ன திகிலை தர காத்து இருக்கிறதோ என்று ஒவ்வொருவரும் அஞ்ச, அதிகன், திலக், தீனா மட்டும் பாட்டி, தாத்தா அருகே சாவகாசமாக அமர்ந்து இருந்தனர்.
“ஐஸ்வர்யா, ஆதி நிச்சயம் இப்போ நடந்தே ஆகணும் அண்ணி” என்று இன்னும் அடங்காமல் பேசிக் கொண்டு இருந்தார் இந்துமதி.
“என் பையனுக்கு பிடிக்காத எதையும் செய்ய நான் தயாரில்லை, நீ முதல உன் மாப்பிள்ளையை, பசங்களை கூட்டிட்டு கிளம்பு” என்று முதல் முறையாக தங்கைக்கு எதிராக ஒன்றை கூறினார்.
“அண்ணா!! நான் எதுக்கு போகணும்??” என்று சட்டமாக பேசியவரை பார்த்து, நேற்று போல் இன்றும் அவள் கன்னத்தில் ஒரு அரை கொடுத்தார்.
“இது என் மாமியார் வீடு, இங்க வச்சு இனி எதுவும் பேச வேண்டாம் பார்க்கிறேன், நீ உன் புருஷன் வீட்டுக்கு பிள்ளைகளை கூட்டிட்டு போ”.
“இனி எது பேசுறதா இருந்தாலும், அங்க வச்சு பேசிக்கலாம். ஐஸ்வர்யா, திலக் உங்க அம்மா, அப்பா கூட கிளம்புங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
அதிர்ந்து நின்ற திலக்கை, தீனாவும், அதிகனும் சமாதானப்படுத்தினர்.
ஐஸ்வர்யாவுக்கு, அவள் ஒரு கணக்கு வைத்து இருக்க, இப்பொழுது நடப்பதை எல்லாம் பார்த்து அடுத்து என்ன என்ற குழப்பத்தில் இருந்தாள்.
“ஐசு!! வா போகலாம்” என்று திலக் தான் அவளை அங்கு இருந்து கூட்டி சென்றான்.
இனி இங்கே தனக்கு மதிப்பு இல்லை என்று தெரிந்த இந்து, வேண்டாவெறுப்பாக அவளின் கணவர் வினீத்துடன் கிளம்பி சென்றாள்.
புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது, அந்த இடம். வாணிக்கு, இனி தன் பேச்சு இங்கு எடுபடாது என்று புரிந்து, முதல் முறையாக அமைதி காத்தார்.
பெரியவர்களுக்கு, அடுத்து இனி அகனிதா என்ன நினைக்கிறாள்?!! அவளை காண சென்ற தன் மகன் நிலை என்று யோசிக்க தொடங்கினர்.
இங்கே கிருஷ்ணன் தங்கை கிளம்பிய பிறகு, அறைக்குள் இருந்து வெளியே வந்தவர், மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அதிகனிடம் பேச ஆரம்பித்தார்.
“அதிகா!! நாம நாளைக்கு கிளம்பலாம், இனி இந்து அவ வாழ்க்கையை பார்க்கட்டும். அவ பிள்ளைங்க மேல மட்டும் ஒரு கண் இருக்கட்டும், அவ பசங்க இனி நம்ம பொறுப்பு”.
“இவளை நம்பி இனி பசங்களை விடுறதா இல்லைபா” என்றார் கிருஷ்ணன்.
அவரின் கவலை புரிந்து, அதிகனும் சரி என்றான்.
பின்னர் அவரவர் வேலைகளை பார்க்க செல்ல, பெரியவர்கள் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.
அப்பொழுது செண்பகத்திற்கு, தன் மகனிடம் இருந்து போன் வர எடுத்து பேச தொடங்கினார்.
“ராஜா!! பேத்தி கிட்ட எல்லாம் பேசியாச்சா, என்ன சொல்லுறா என் பேத்தி?” என்று ஆவலுடன் தெரிந்து கொள்ள கேட்க, அவர் சற்று தயக்கத்துடன், அகனிதா கூறியதை கூறினார்.
அதைக் கேட்ட பாட்டிக்கு, சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. இதை தான் பேத்தியிடம் எதிர்பார்த்தார் அல்லவா, உடனே மகனிடம் எதை பற்றியும் கவலை படாமல் இருக்குமாறு கூறிவிட்டு போனை வைத்தார்.
“வாணி!! மாப்பிள்ளையை கூப்பிடு” என்று கூறிவிட்டு, எல்லோரையும் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“நாளைக்கு என் பேத்தி இங்க வரும் பொழுது, நீங்க எல்லாம் கிளம்பினா நல்லா இருக்கும் மாப்பிள்ளை” என்று சங்கத்துடன் கூறினாலும், அதில் ஒரு சிறு கட்டளை இருந்ததை உணர்ந்தே இருந்தார் கிருஷ்ணன்.
அவருக்கு புரிந்தது, தாங்கள் இங்கே இனி அதிகப்படி என்று. தங்கையின் வாழ்க்கைக்காக என்று, தாங்கள் அந்த பிள்ளையை பெண் என்றும் பாராமல் நடத்திய விதம் தவறு என்று புரிந்தது இப்பொழுது.
“கவலைபடாதீங்க அத்தை, இனி இங்க வர கூடிய சூழல் அமையாது. நாங்க நாளைக்கு காலையில் சீக்கிரம் கிளம்பிடுவோம்” என்று கூறிவிட்டு அதிகனிடம் ஒரு பார்வை பார்த்து சென்றார்.
அது நாளை எந்த பிரச்சினையும், உன்னால் வர கூடாது. உடனே கிளம்பிட வேண்டும், என்ற கட்டளை இருந்தது.
அதை புரிந்து கொண்ட அதிகனும், பெருமூச்சு விட்டான். பிறந்ததில் இருந்து, சற்று ஈகோ பிடித்து திரியும் அவன் அவ்வளவு எளிதில் சில விஷயங்களை விட்டு கொடுக்க மாட்டான்.
இப்பொழுது, அவன் மனதில் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது அகனிதாவிடம், எப்போவும் போல் தான் என்ற அகந்தையுடன் இருந்தவனுக்கு, அதை சற்று மாற்றிக் கொள்ள முடியாமல் இருப்பது தான்.
இந்த ஈகோ தான் அவளிடம், அவன் தோற்க காரணமாக இருக்க போகிறது என்று அவன் அறிந்து கொள்ள தவறினான்.
மறுநாள் அவர்கள் கிளம்பியவுடன், மகள் அகனிதாவுடன் வந்து சேர்ந்தார் ராஜசேகர்.
அகனிதா மனதில் ஒருவித ஆசுவாசம் இப்பொழுது. இனி தன்னை பார்த்து யாரும் இனி வெளியே செல் என்று சொல்ல முடியாது.
இது இப்பொழுது தன் பாட்டி வீடு மட்டுமில்லை, தந்தையின் வீடும் இது தான்.
இத்தனை நாள் ஏதோ அந்நிய வீட்டில் இருப்பது போல் தான், அவளுக்கு இருந்தது அந்த சம்பவத்தின் பின்.
ஆகையால் வார இறுதியில் எப்பொழுதும், இங்கு இருந்து அங்கே சென்று விடுவாள்.
இனி மூச்சுமுட்டும் நிலை, தனக்கு இல்லை இந்த வீட்டோடு என்ற சந்தோஷத்துடன் உள்ளே தந்தையோடு சென்றாள்.
முகம் மலர வந்த பேத்தியை காண, செண்பகத்திற்கும், நடராஜனுக்கும் அவ்வளவு சந்தோஷம்.
“பாட்டி!! தப்பா எடுத்துக்காதீங்க, இந்த வீட்டை அப்பா பேருக்கு மாத்திடுறீங்களா” என்று தயக்கதுடன் கேட்டாள்.
“எப்போ நீ இங்க வர சம்மதிச்சியோ, அப்போவே உங்க தாத்தா கிட்ட அதுக்கான வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டேன் டா தங்கம்” என்றார் பாட்டி.
அவளின் மனநிலையும், உடல்நிலையும் புரிந்த ஒரே ஜீவன் அல்லவா அவர்.
நாளை அதிகன் இது என் பாட்டி வீடு என்று கூறி, மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு வந்தால் அது அவளுக்கு இன்னும் இங்கே ஒட்டாமல் போய்விடும் என்ற பயமே, செண்பக பாட்டிக்கு.
உடனே இதற்கு தீர்வு தான், மகன் பெயரில் எழுதி வைக்க எடுத்த முடிவு. அகனிதா துன்பப்படும் பொழுது, கூடவே இருந்து பார்த்தவர் ஆயிற்றே.
பேத்தியின் மனநிலை புரிந்து, உடனே செயல்பட்டு இருந்தார். அவளின் நிம்மதிக்காக அவர் ஒன்று செய்ய, அங்கே இந்துமதிக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை.
“அடியே அகனிதா!! உன் ஒருத்திக்காக அந்த கிழவி என்ன வேலை எல்லாம் பார்த்திட்டா” என்று கொந்தளித்துக் கொண்டு இருந்தார்.
அவளின் நிம்மதியை கெடுக்க, இவர் இங்கே திட்டம் ஒன்றை தீட்ட, அப்படி எல்லாம் இனி உன் திட்டம் செல்லுபடியாகாது என்று அதிகன் மறைமுகமாக, இந்த ஆட்டத்தில் இறங்கி அடிக்கவும், அகனிதாவை பாதுகாக்கவும் களம் இறங்கினான்.
தொடரும் …






இந்து இன்னுமா உங்களுக்கு மனசாட்சி விழித்துகொள்ளவில்லை..?
Nice
இந்த இந்துமதி பணப் பேராசைப் பிடித்த பொம்பளையாக இருக்கும் போல