அத்தியாயம் 1
ஆலங்காய் வெண்ணிலவு-1
பெளணர்மி நிலவு, கறுப்பு பல்லக்கில் பூமியை சுற்றி வரும் ஏகாந்த இரவு வேளையில், அந்த மேல்மாடி அறையிலிருந்து வந்த மெல்லிசைப் பாட்டு மேனியை சுகமாய் தள்ளாட வைத்தது.
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ
ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தன்னால்
உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே…
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே…
ஆடியோ பிளேயர் உருகிக் கொண்டிருக்க, பாவனையோடு ரசித்து தலையாட்டிக் கொண்டிருந்தான் செந்தூரன்.
ஆட்டோமேடிக் ரூம் ஃபிரெஷ்னர் நேரம் தவறாமல் தனது கடமையை செய்து மணம் பரப்ப, சற்று நேரத்திற்கு முன் அதை அறையில் செட் செய்து மாட்டியவனின் முகத்தில் ஏக திருப்தி!
“சூப்பர்டா சேரா!” தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு, பாடி ஸ்பிரேயை தன் உடலெங்கும் ‘சர் சர்’ என பீய்ச்சி அடித்துக் கொண்ட வேளையில் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.
மெல்லிய கொலுசொலியும் வளையோசையும் சிங்காரமாய் சிணுசிணுக்க, புதுமணப்பெண்ணை, தன்னோடு அறைக்கு அழைத்துக் கொண்டு வந்து மகனைப் பார்த்தார் பவானி. சன்னமான கரையிட்ட பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளையாக நின்றவனைக் கண்டு முகத்தில் நிறைவான புன்னகையை தவழ விட்டார்.
மல்லிகையோடு மனோரஞ்சிதமும் இணைந்து மணக்க, எளிமையான ரோஜாநிற ஷாஃப்ட் சில்க்கில் இருந்த மருமகளோடு மகனை ஒருசேரப் பார்த்து திருப்திபட்டுக் கொண்டார் பவானி.
“பார்த்துக்கோடா சேந்தா… நடந்ததெல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சு வாழ்க்கையை ஆரம்பிங்க! சின்னபுள்ளைங்களாட்டம் சரிக்குசரியா பேசிட்டு இருக்கக்கூடாது. உனக்கும் தான்மா!” என்றவரின் பேச்சு மருமகளைப் பார்த்து முடிய, “சரி ஆன்ட்டி!” பட்டும் படாமலும் பதிலளித்தாள் புது மருமகள்.
புதுப்பெண்ணின் பார்வையில் கணவன், மாமியார் உறவுக்கான மரியாதையோ, புது இடம் என்கிற மிரட்சியோ சுத்தமாக இல்லை. அலட்டலான பார்வையில் அசிரத்தையுடன் அவர்களை ஏறிட்டாள். அந்த பாவனையே மாமியாருக்கு கடுப்பைக் கிளப்பியது.
“ம்க்கும்… அத்தன சீக்கிரத்துல மாறிக்காத இந்த காலத்து புள்ளன்னு நிரூபிக்கிறா! ஆண்டின்னு கூப்பிட்டு என்னை போண்டியாக்காம இருந்தா சரி!” முணுமுணுப்போடு மேற்கொண்டு எந்த விதமான பதிலையும் எதிர்பார்க்காமல் கீழே சென்று விட்டார் பவானி.
“ஹிஹி, அம்மா கொஞ்சமில்ல, ரொம்பவே ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட்! மத்தபடி அவங்க பெஸ்ட் மம்மி தான்! நீ வொரி பண்ணிக்காதே, உள்ளே வா!” என்றழைத்து விட்டு அறையின் கதவைச் சாற்றினான் புது மாப்பிள்ளை செந்தூரன்.
வேகமாய் அவளருகில் வந்தவன், அவள் கையிலிருந்த புது பிளாஸ்க், டம்ளரை வாங்கி டேபிளில் வைத்தான். ஏனோதானோவென்று இருந்த ரெண்டு வகை இனிப்பும், பழங்களும் தனது இருப்பைக் காட்டி இன்றைய திருமண இரவினை அடையாளப்படுத்தின.
வெளிப்பார்வைக்கு மிகப் பழமையான பற்றாக்குறைகளை அடக்கிய நடுத்தரவர்க்க வீடாக இருந்தாலும், மாடியில் இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த பத்துக்குப்பத்து அறையினுள் நவீனகாலத்தின் அத்தியாவசியங்கள் எல்லாம் உள்ளடங்கி இருந்தது.
பார்வையால் அந்த இடத்தை அளந்து விட்டு, ‘என் ரூம் அளவுக்கு இல்லன்னாலும் ரொம்ப மோசமில்ல’ என்று உள்ளுக்குள் நிறைவடைந்தவளாக அங்கிருந்த டபுள்காட் கட்டிலில் வந்தமர்ந்தாள் புதுமனைவி.
புத்தம்புது கட்டில், தலையணை, மெத்தையோடு குடும்பத்திற்கு தேவையான பீரோ, டிரெஸ்ஸிங் டேபிள், வாஷிங்மிஷின் எல்லாம் தாய் வீட்டுச் சீதனங்களாக வந்திறங்கி அந்த அறையினை நிறைத்திருந்தது. குடித்தனம் நடத்தக் கூடிய மேலும் பல பொருட்களும் மேலிருக்கும் அட்டாலியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவளின் பொருள் என்ற எண்ணத்தினால் தான் எந்தவித கூச்சமோ நெருடலோ இல்லாமல் இலகுவாக அவளால் அமர முடிந்ததாக நினைத்துக்கொண்டு விருப்பமில்லாமல் புது மனைவியிடம் பேசத் தொடங்கினான் செந்தூரன்.
“என்ன வேலு, ரூம் செட்டப் பிடிச்சிருக்கா? எல்லாம் ஒதுக்கி வச்சு நான்தான் அரேன்ஞ் பண்ணேன்!” வாயெல்லாம் பல்லாகச் சிரித்து பெருமை பேசியவனை கடமையே என்று பார்த்தாள்.
“என்ன பிடிக்கலையா? சொல்லு, மாத்தி வைக்கிறேன்!” கடமைவீரன் தோரணையில் அவசரமாகக் கேட்க,
“இப்ப எதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ற சேரா? இந்த ரூம் பிடிக்கலன்னா உடனே வேற வீடு பார்த்து என்னை குடி வைக்கப் போறியா?” பெண்ணின் கசப்பான கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் முழித்தான்.
“தயவுசெஞ்சு என்னை வேலுன்னு கூப்பிடாத… அப்படி கூப்பிடுறவங்களை அடிக்கணும் போல கடுப்பேறும் எனக்கு! எங்க வீட்டுல இதுக்கு தான் எந்த நேரமும் சண்டை பிடிப்பேன். இங்கேயும் அப்படி இருக்கணும்னா சொல்லு!” என்றவளின் கறார் பேச்சில் வேகமாக மறுத்தான்.
“வேற எப்படி கூப்பிடணும்னு நீயே சொல்லிடு!” மீண்டும் அசட்டுத்தனமாகச் சிரிக்க,
“ம்ப்ச், இப்படி லூசு மாதிரி சிரிக்கதேடா, எனக்கு பிடிக்கல!” என்று கடுகடுத்தவள்,
“எனக்கு இன்னொரு பேர் இருக்குனு கெத்தா டயலாக் சொல்லணும்னு எதிர்பார்க்கிறியா? இங்கே அவ்வளவு சீன் தேவையில்ல சேரா… வேலவர்ஷினி-ன்ற பேர்ல வேல எடுத்துட்டு எப்படினாலும் கூப்பிடு! நான் ஒன்னும் சொல்லமாட்டேன்” கறாராய் ஆரம்பித்து சின்னச் சிரிப்புடன் முடிக்க, பதிலுக்கு அகலமாய் சிரித்தான் செந்தூரன்.
“வர்ஷி, வசீ, வனி, வரூ” சொல்லிக்கொண்டே தொடர்ந்து தாடையில் விரலை வைத்து யோசிக்க,
“அடப்பாவி, எம் பேரை வச்சு பிஹெச்டி பண்ணப் போறியா? இப்படி ஆராய்ச்சி பண்ற? சிம்பிளா கூப்பிடேன்!” சலிப்புடன் சிடுசிடுத்தாள்.
“ஆசையா கூப்பிட வேணாமா? அதான் யோசிச்சேன்!” என்றவன்,
அவளது சுணங்கிய முகத்தைப் பார்த்து, “நீ எதுக்கு மூஞ்சிய சோகமா தூக்கி வச்சுட்டு இருக்க? உனக்கு இங்கே வசதி பத்தலையா? இல்ல இந்த கல்யாணமே பிடிக்கலையா?” சட்டென்று கேட்டவனுக்கு, அவளின் காட்டமான முறைப்பே பதிலாகக் கிடைத்தது .
“சீரியல், சினிமா பார்த்துட்டு வந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்காதே… என் விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடக்கல, அதை மனசுல பதிய வைச்சுக்கோ!”
“பின்ன எதுக்காக கோபமாவே பேசிட்டு இருக்க? ஒருவேள…” என்றவன் சற்று நிறுத்தி, “ம்ஹ்ம்…” தொண்டையை செருமிக் கொண்டு,
“வந்து, அவன்… அதான் உன் எக்ஸ் பாய் பிரெண்ட மறக்க முடியலையா?” தயக்கத்துடன் கேட்டுவிட்டு முகம் திருப்பிக் கொண்டான்.
அவளது கடந்த காலத்தை பற்றி அவளிடத்தில் பேசவோ நினைக்கவோ கூடாதென்று பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டு, அவனுமே முடிவெடுத்தும் இருந்தான். ஆனாலும் மனதில் எழுந்த குறுகுறுப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் கேட்டுவிட,
அதற்கு எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காமல், “சுலபத்துல மறக்கற மூஞ்சியா அந்த நாயெல்லாம்?” உஷ்ணம் குறையாமல் பல்லைக் நறநறத்துக் கொண்டே பதிலளித்தாள் வேலவர்ஷினி.
“என்ன சொல்ற வர்ஷினி? இன்னுமா அவனை நினைச்சுட்டு இருக்க!” அப்பாவியாகக் கேட்ட புதுக்கணவனுக்கு பதட்டம் குறையவில்லை.
“நம்ப வச்சு கழுத்தறுத்த துரோகிய எப்படி அவ்வளவு சீக்கிரமா மறக்க முடியும்? எப்ப என் கையில கிடைச்சாலும் அவனை வெட்டிப் போட்டுட்டு தான் மறு வேலை பாப்பேன்! இன்னைக்கு நான் எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கிறதுக்கு அந்த நாதாரி தான் காரணம்!” பல்லிடுக்கில் வார்த்தைகள் அரைபட, குரோதம் குறையாமல் பேசியவளைப் பார்த்து மிரண்டு போனான் செந்தூரன்.
‘ஐயோடா, இவ என்ன ரிவென்ஜ் எடுக்குற மூட்ல இருக்கா? சும்மா இருந்தவளை கேள்வி கேட்டு சொரிஞ்சு விட்டுடேனோ! எப்படி சமாளிக்கிறது?’ மனதில் மூண்ட யோசனையுடன்,
அவளைப் பார்த்து, “கூல் டவுன் வசீ! அவனை பழி வாங்கி நீ என்ன சாதிக்கப் போறே? வீணா உன் ஃபியூச்சர் தான் ஸ்பாயில் ஆகும். நடந்த எல்லாத்தையும் மறந்துடு!” நிதானமாக சமாதானம் செய்தான்.
“நான் மறக்க நினைச்சாலும் முடியாதே சேரா… ஒரு துரோகிய நம்பி ஏமாந்து போயிட்டேன்னு என்னை கரிச்சு கொட்டின என் குடும்பமே, அவங்களுக்கு துரோகம் பண்ணி ஏமாத்துன உன் தலையில என்னை கட்டி வைச்சுட்டாங்களே! இதுல என்ன நியாயத்தை பார்த்தாங்கன்னே தெரியல!” வார்த்தைகள் ஒவ்வொன்றும் குதர்க்கமாகவே வந்து விழுந்தன.
விருப்பமில்லா பாவனையில் தன்னை மேலும் கீழுமாக எடை போட்டவளை நேருக்குநேராகப் பார்க்கத் துணிவின்றி தலைகுனிந்தான் செந்தூரன். இத்தனை நேரமாய் மெல்லிசை கேட்டு மனதை சுகமாக்கிக் கொண்ட இனிமையெல்லாம் எங்கோ பறந்து போனது.
“என்னை காதலிச்சு ஏமாத்தி, என் நகையை தூக்கிட்டு போனவன் துரோகின்னா, என் அப்பா கம்பெனி பணத்தை கையாடல் பண்ணி ஏமாத்தின நீயும் துரோகி தானே! உனக்கு எப்படி என்னைக் கட்டிக் கொடுக்கலாம்? நீயே சொல்லு! இதுல என்ன நியாயம் இருக்கு? கொஞ்சங் கூட லாஜிக் இல்ல தானே!” கோபத்துடன் அழுத்தமாய் ஆரம்பித்து, இலகுவாய் குற்றம்சாட்டியவளை எச்சில் விழுங்கியபடி இமைக்காமல் பார்த்தான் செந்தூரன்.
அவள் கேட்டதற்கு அவனிடத்தில் பதில்லை. நியாயமான கேள்வி தான்! ‘எந்த நம்பிக்கையில் என்னை நம்பி பெண்ணைக் கொடுத்தார்கள் இவளின் பெற்றோர்?’ என்ற யோசனை மனதிற்குள் மூண்ட நேரத்தில்,
“சொல்லு சேரா, அந்த பணத்தை எல்லாம் என்ன பண்ண?” வர்ஷினி விடாமல் கேட்க,
“என்ன? எந்த பணத்த?” ஏதுமறியாதவனாக இவன் திக்கித் திணற,
“இந்த அப்பாவி சீன் எல்லாம் வெளியே வச்சுக்கோடா! என்கிட்ட பொய் சொல்லி நீ தப்பிக்க முடியாது. என்ன செஞ்ச? அஞ்சு லட்சத்தி சொச்ச பணத்தை எல்லாம் எங்கே ஒளிச்சு வச்சுருக்க?” அதிகாரமாய் மிரட்டலுடன் கேட்க, இவனுக்குள் கிலி பரவியது.
‘சண்டாளி, நிக்க வச்சு கேள்வி கேக்குறாளே! ஃபர்ஸ்ட்நைட்ன்னு கொஞ்சமாச்சும் பாவம் பாக்குறாளா பாரு!’ மைண்ட்வாய்சாக வடிவேலு டயலாக்கும் அவனுக்கு சாதகமாக மனதில் ஓடியது.
பயமும் தயக்கமும் ஒருநொடி தான்! தனது தடுமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிதப்பான பார்வையுடன் அவளை ஏறிட்டான்.
“இப்ப எதுக்கு அதெல்லாம் கேட்டுட்டு இருக்க? செஞ்ச தப்ப ஒத்துகிட்டு நான்தான் சரண்டர் ஆயிட்டேனே! உங்கப்பா தான் போலீஸ்ல பிடிச்சு குடுக்காம உன்னை என் தலையில கட்டி வச்சுட்டாரு! உன்னை வச்சு வாழ்றது தான் எனக்கான பனிஷ்மென்ட்னு நினைச்சுட்டாரு போல…
எந்த நியாயமா இருந்தாலும் அங்கே போயி கேளு! ஜெயிலா, கல்யாணமான்ற ஹெவி சிட்சுவேசன்ல தான் நானும் உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன். இதுக்கு மேல எதைப் பத்தியும் கேக்காதே!”
செந்தூரன் தனது ஆணித்தரமான நியாயத்தை கூறி நிற்க, இம்முறை அவளிடத்தில் பதிலில்லை. நொடிநேரம் அமைதியாகக் கடந்தது. இத்தனை நேரமாக கோபத்தில் கொதித்தவள் தனக்குள்ளே பலவாறு யோசித்து தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டாள்.
“ரெண்டு பேரையும் பலியாடாக்கி, எங்கப்பா பழி தீர்த்துகிட்டாரு! நீ என்ன பண்ணுவ? விடு, இனிமே பேசல!” தடாலடியாக இறங்கி வரவும்,
“உங்கப்பா வில்லனா இருந்தாலும், உன்மேல இத்தன வெறுப்பா இருக்கக்கூடாது. எனக்கும் உன்மேல கோபமெல்லாம் இல்ல வசீ! பாவம் நீ, எவ்வளவு ஆசையா அவனை லவ் பண்ணியிருப்ப? ஆனா அவன் தான்…” என தொடரப் போனவனை,
“நிறுத்துறியா உன் பேச்ச… உன் விசயத்தை நான் பேசமாட்டேன். அதே மாதிரி என் விசயத்தையும் நீ பேசாதே! எனக்காக யாரும் பாவம் பார்த்து பரிதாபப்பட வேணாம்.” என்றவளின் இறங்கிய கோபம் சட்டென்று வீரியம் கொள்ள இவன்தான் திண்டாடிப் போனான்.
அவனது தடுமாற்றத்தை அவனது முகமே வெளிப்படையாகக் காட்டிக் கொடுத்தது. எதுவும் பேசாமல் தனது பழைய தலையணை, போர்வையை கையில் எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நகர்ந்தவனை,
“இப்ப என்ன பண்ற நீ?” பின்னோடு பேசியவளின் குரல் தடுத்து நிறுத்தியது
“இல்ல வசீ, ஒரே ரூம்ல சேர்ந்து படுக்கணும்னா ஒரு மாதிரியா இருக்கும்ல?”
“நான் சொன்னேனா அப்படி?”
“சொல்லல தான், ஆனாலும் பிரைவசி இருக்காதில்லையா? நானுமே கொஞ்சம் ஷை டைப் தான்! என்னாலயும் சட்டுன்னு உன்கூட ஒரே ரூம்ல…” என்று மென்று முழுங்க
“நமக்கு கல்யாணம் ஆகிருச்சு சேரா! நீ வெளியே போயி படுத்தா திரும்பவும் அட்வைஸ் பண்றேன்னு கழுத்தறுப்பாங்க! தேவையா நமக்கு?”
“ம்ப்ச், இப்ப என்னதான் செய்யச் சொல்ற?”
“ரெண்டு பேருமே கட்டில்ல படுப்போம்! நான் அடக்க ஒடுக்கமா தான் படுப்பேன், பயப்படாதே!”
“இல்ல, அது உனக்காக, உன் வீட்டுல வாங்கிக் கொடுத்தது!”
“போடா மடையா… ஒரு மஞ்ச கயித்தை கட்டினதுக்காக கொஞ்சங்கூட யோசிக்காம காலத்துக்கும் என்னை வச்சு காப்பாத்தணும்னு முடிவு பண்ணியிருக்கியே… அதை விடவா கட்டில்ல இடம் கொடுக்கிறது பெருசு? சும்மா சென்டிமென்டா பேசி டைம் பாஸ் பண்ணாம வந்து படு!” இலகுவாய் பேசி கட்டிலை தட்டிவிட்டு ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள் வர்ஷினி.
(இனி அவள் வர்ஷினி தான், ஹீரோயினுக்கு பிடிக்காத பேரை நாமளும் சொல்ல வேண்டாம் மக்களே… தேவைப்படும் நேரத்தில் மட்டும் வேலுன்னு கூப்பிட்டு அவளுக்கு கடுப்பை கிளப்புவோம். ஹிஹி!)
அவள் சொன்னதும் தான் தாமதம் மனதின் குழப்பங்கள் நீங்கியவனாக கட்டிலின் மறு ஓரத்தில் வந்து படுத்துக் கொண்டான் செந்தூரன். வீட்டில் சேந்தா… மற்ற எல்லாருக்கும் சேரா!
அவன் கட்டிலில் படுத்ததும் இயல்பாய் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “நீ எதுக்கும் கஷ்டப்படுத்திக்காதே வசீ! உனக்கு இங்கே இருக்க பிடிக்கலன்னா சொல்லிடு, எதாவது சொல்லி உங்க வீட்டுக்கு உன்னை அனுப்பி வைக்க நானாச்சு!” தன்போக்கில் மீண்டும் வார்த்தை வளர்க்க,
“திரும்பவும் மொத இருந்து ஆரம்பிக்காதேடா! என் உயிரே போனாலும் நான் அந்த வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டேன்!” என்றாள் கண்ணை மூடிக்கொண்டு! இப்போது அவள் குரலும் சற்று கோபம் தணிந்து ஒலித்தது.
“கோபத்துல இப்படிதான் பேசுவ! அதைப்பத்தி அப்புறமா யோசிப்போம்”
“நோ, நோ! நான் சொன்னா சொன்னதுதான்! எம்மேல நம்பிக்கை இல்லாம, கடமைக்கு கல்யாணம் பண்ணி என்னை வெளியே தள்ளுனவங்க வீட்டுக்கு நான் ஏன் போகணும்?”
“பின்ன, தனியா நின்னு சாதிச்சு காட்டுறேன்னு அவங்களை பகைச்சுக்கப் போறியா? முடியுமா உன்னால?”
“உனக்கெதுக்கு இந்த கவலையெல்லாம்? உன் ரூம்ல நான் தங்கறதுக்கு இடம் மட்டும் கொடுத்தா போதும். என்னோட தேவைகள் எல்லாத்துக்கும் வேலைக்கு போயி சம்பாதிச்சு நானே பார்த்துப்பேன்! இன்னொரு தடவ அந்த வீட்டுக்கு போற பேச்ச எடுக்காதே சேரா!”
“சரியா போச்சு போ! நீ வேலைக்கு போறது தெரிஞ்சா, உங்கப்பா என்னையும் என் குடும்பத்தையும் தான் உள்ளே தள்ளுவாரு! தாலிகட்டி முடிஞ்சதும் கோவில்ல வச்சு, உன் முன்னாடி தானே இதை சொன்னாரு, மறந்துட்டியா வசீ?”
“அவருக்கு வேற வேலையில்ல, வாய்க்கு வந்ததை பேசிட்டு எப்பவும் வில்லனா பெர்ஃபார்ம் பண்ணுவாரு! அதெல்லாம் ஒரு பேச்சா ஏன் மதிக்கிற?”
“வேறன்ன செய்யச் சொல்ற? என் பொண்ணு கஷ்டப்படுறா, அழறானு தெரிஞ்சது குடும்பத்தையே ஃபோர்ஜரி கேஸ்ல உள்ளே தூக்கி வச்சுருவேன், உங்க வீட்டுலயும் கல்யாணத்துக்கு ஒரு பொண்ணிருக்கு, அதை ஞாபகத்துல வச்சுட்டு வாழ்க்கையை ஆரம்பிங்கனு அவர் சொன்னது அவ்வளவு சீக்கிரத்துல மறந்திட முடியுமா? நீ எப்படியோ… ஆனா எனக்கு திக்கு திக்குன்னு தான் இருக்கு” என்றபடி நெஞ்சை நீவிக்கொண்டான்.
“அவ்வளவு பயந்தவனா நீ?” நக்கலுடன் கேட்க,
“பயம்னு சொல்ல முடியாது, எனக்காக என் குடும்பமும் சேர்ந்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிற சராசரி பையன் தான் நான்!” அமைதியாக அலட்டிக்கொள்ளாமல் அவன் கூற,
“அப்புறம் எதுக்குடா பணத்தை கையாடல் பண்ணி ஊரை விட்டு ஓடுன?” சட்டென்று வந்த ஊசிமுனைக் கேள்வியில் முகம் வியர்த்துப் போனது செந்தூரனுக்கு!
“அது… கையாடல் பண்ணனும்னு பிளான் பண்ணல! ஷேர் மார்க்கெட்ல நல்லா லாபம் கிடைக்கும்ன்னு பிரெண்ட்ஸ் கேங் சொன்னாங்க! அதான் ரோட்டேஷன் பண்ற மாதிரி பணத்தைப் போட்டு எடுத்துடலாம்னு அகலக்கால் வச்சேன். அது கவுத்தி விட்ருச்சு! நல்லா ஏமாந்துட்டேன்!
படுபாவிப் பசங்க, ஆசை காட்டியே நஷ்டக்கணக்கு காமிச்சு பணத்தை காணாம ஆக்கிட்டாங்க… எனக்கு திருட்டு பட்டம் கிடைச்சதுதான் மிச்சம்!” மேற்கூரையில் ஓடும் மின்விசிறியைப் பார்த்து, தான் ஏமாந்த கதையை சொல்லி முடித்தான்.
“அடப்பாவி! பொண்ணுங்க நாங்கதான் நல்லபடியா வாழணும்ன்ற ஒரே எய்ம்ல யோசிக்காம நகையும் பணமும் கொடுத்து ஏமாந்து போறோம்னா, நீங்களும் குறுக்கு வழியில சம்பாதிக்க நினைச்சு ஏண்டா வீணா போறீங்க? இந்த காலத்துல ஹார்ட்வொர்க் விட ஸ்மார்ட்வொர்க் தான் வருமானத்தை அள்ளித் தருது.
சோம்பேறிய இருக்கறது தப்பில்ல… ஆனா மூளையை சரியா யூஸ் பண்ணாம உலகம் தெரியாத கேனக்கிறுக்கனா இருக்கறதுதான் ரொம்ப பெரிய தப்பு! இனிமேலாவது ஒழுங்கா உழைச்சு முன்னேறப் பாரு!” வர்ஷினியும் நீளமாக அறிவுரை சொல்ல, கடமையாக சரியென்று தலையசைத்தான்.
“சரிங்க மேடம், நீங்க மட்டும் தான் எனக்கு அட்வைஸ் பண்ணாம இருந்தீங்க! அந்த குறையும் தீர்ந்து போச்சு!”
“ரொம்ப அலுத்துக்காதே பையா! நானும் உன்னோட சேர்ந்த ஆர்வக்கோளாறு லிஸ்டுதான்! பட், என் ஃபார்முலா எல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு எல்லாத்தையும் துடைச்சு போட்டுட்டு போயிட்டே இருக்கணும்ன்றது தான்! இல்லன்னா மூச்சு விடக்கூட விட மாட்டானுங்க! குத்திக் காமிச்சு குதர்க்கமா பேசியே உசுரோட கொன்னு போட்ருவாங்க!” என்றவளின் நினைவுகள் எல்லாம் அவளது தவறுக்காக அனுபவித்த வலிகளை நினைவுபடுத்தியதில் முகம் கசங்கிப் போனது.
இத்தனை நேரமாக தோரணையாக பளிச்சென்று பேசியவளின் முகம், சட்டென்று சோர்ந்து போனதை பார்க்கப் பிடிக்காதவனாக, “ம்ப்ச், விட்டுத் தள்ளு வசீ! என்னை சொல்லிட்டு நீ ஃபீல் பண்ணிட்டு இருக்க…” என்று அவள் உள்ளங்கையை தன் கைகளுக்குள் வைத்து பொத்திக் கொண்டான்.
சொரசொரப்பான ஆணின் உள்ளங்கைகளில் பெண்ணின் மென்மையான கரம் பதிந்ததில் இருவருக்குமே மெல்லிய சிரிப்பு!
“எவ்வளவோ ஷாஃப்டா இருக்கு, வேலையே செய்ய மாட்டியா?” கேட்கத் தெரியாமல் கேட்டு முறைப்பினை பரிசாக வாங்கிக் கொண்டான்.
“பொண்ணுங்க கை பொதுவா இப்படித்தான்டா இருக்கும். நீ இப்பதான் ஃபீல் பண்றியா?” வர்ஷினியின் கேள்விக்கு ஆமென்று தலையசைத்தான்.
“உன்னை ரோட் சைட் ரோமியோ ரேஞ்சுக்கு நினைச்சுருந்தேனே!” என்றவளின் பேச்சில் அவசரமாய் குறுக்கிட்டு,
“நான் ரொம்ப நல்ல பையனாக்கும்!” கெத்தாக பதிலளித்தான்.
“என்னமோடா… உனக்கும் எனக்கும் முடிச்சு போட்டு வச்சுட்டாங்க! இந்த லைஃப்ல எங்கேயும் தேங்கி நிக்காம தெளிவா ஓடக் கத்துக்கணும். மறந்தும் வேற குறுக்கு வழியோ, வேற வாழ்க்கையோ யோசிக்கக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணியிருக்கேன்! நீ என்ன சொல்ற?” அவளின் கைகளை விலக்கிக் கொள்ளாமலேயே கேட்க, அவனுக்கும் மனம் குளிர்ந்து போனது.
“எனக்கும் அதே எண்ணம் தான் வசீ! எப்படித்தான் வாழப் போறாங்களோன்னு இளக்காரமா நினைச்சவங்க எல்லாம், பாரேன் எப்படி வாழுறாங்கனு அசந்து போயி பாக்கணும்! பாப்போம்… நம்ம வாழ்க்கை எப்படி போகுதுனு?” இயலாமையோடு பெருமூச்சு விட்டுக் கொள்ள,
“அட லூசு, நல்லா இருப்போம்னு நம்பிக்கையா சொல்ல வருதா உனக்கு? பாசிட்டிவா திங்க் பண்ணுடா பையா!”
“அதென்ன பையா, பையான்னு கூப்பிடுற?”
“உன்னைப் பத்தி எங்க வீட்டுல பேசும்போது, ஓடிப்போன திருட்டுப்பையன்னு சொல்லி, அப்புறமா அந்தப்பையன், இந்தப்பையன்னு சொல்லித்தான் பேசுவாங்க! ஒருநாளும் மாப்பிள்ளைன்னு பேசினதில்ல… அப்படி கேட்டுப் பழகி எனக்கும் அதுவே பதிஞ்சு போச்சு!” கபடமில்லாமல் சிரித்தாள்.
“அது ஏன் வர்ஷினி, நாம செஞ்ச தப்பை எல்லாம் மறைக்காம ஒத்துக்கிட்டும் நம்மை ஏன் நல்ல புள்ளைங்க லிஸ்டுல சேர்க்கல?” மிக முக்கியக் கேள்வியாகக் கேட்க,
“உசுரோட நடமாட விட்ருக்காங்களேன்னு சந்தோசப்படு! இவரை நல்லபுள்ளைன்னு வேற சொல்லணுமாம்ல!?” கேலியாக கன்னத்தில் இடித்தாள்.
“சரிதான், கோடியா கோடியா கொள்ளையடிச்சு ஓடிப்போன ஃபோர்ஜரியை எல்லாம் விவிஐபி ரேஞ்சுக்கு தூக்கி வச்சுப்பாங்க! சின்னச்சின்ன தப்பு செஞ்சவங்களை எல்லாம் மனுஷன்னு கூட பாக்காம தூக்கிப் போட்டு மிதிப்பாங்க!” தொடர்ந்த பேச்சின் சுவாரஸ்யத்தில் கன்னத்தில் பதிந்த அவளது விரலை பிடித்து சொடுக்கு எடுத்து விட்டான் செந்தூரன்.
“விட்ரா, விட்ரா! வருங்காலம் நம்மை ஹானஸ்டா பேசுற மாதிரி வாழ்ந்து காட்டிடுவோம்!” அசால்டாக சொன்னவளின் பாவனையில் செந்தூரனின் கண்கள் பளபளத்தது.
“நிஜமாவா சொல்ற?” ஆச்சரியத்துடன் கேட்டவன்,
“அந்த வருங்காலத்துல நாம சேர்ந்து இருப்போமா? பிரிஞ்சு இருப்போமா?” யோசனையோடு முகம் சுருக்கியவனின் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்தாள் வர்ஷினி
“மூஞ்சி… நல்லதாவே நினைக்க மாட்டியா? நமக்கு கல்யாணம் நடந்ததே நாம நல்லா வாழ்றதுக்குதான்னு நம்பிக்கை வை! இதே நம்பிக்கையோட வாழ ஆரம்பிப்போமே! எதுக்கு தயங்கிட்டு இருக்கணும்? முடியுமா இல்லையானு ஒரு கை பார்த்துடலாம்!”
நம்பிக்கையாகக் கூறி புருவத்தை ஏற்றி இறக்க, மெத்தனப் பார்வையில் அவளின் மேதாவிப் பேச்சில் குப்புற விழுந்தான் செந்தூரன்.
“என்ன சொல்ற வசீ? என்னால நம்ப முடியல!”
“நம்பாதே! இப்படியே அண்ணாந்து சீலிங்ஃபேன் பார்த்துட்டு இரு, நல்லாவே விளங்கிடுவ!” கடுப்புடன் உதடு சுழித்து திரும்பிப் படுக்க,
“ஏய், வசீ, கோச்சுக்காதே! நானெல்லாம் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட், லேட் பிக்கப் பெர்சனாலிட்டிமா! கொஞ்சம் டைம் கொடு, பிக்கப் பண்ணிடுவேன்!” என்றவனின் பேச்சு சற்றுநேரம் அர்த்தமில்லாமல் நீண்டு, கொஞ்சலாய் கெஞ்சலாய் சிரித்து இல்லறத்தின் அர்த்தத்திற்கு அழகாய் அடியெடுத்து வைத்தது.
மனம் விரும்பி புரிதலோடு வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள் ஒரு ரகம். கிடைத்த வாழ்க்கையை பலமாக பற்றிக்கொண்டு அனைத்திற்கும் வளைந்து கொடுத்து வாழ்வை வளமாக்கிக் கொள்பவர்கள் இன்னொரு ரகம்.
‘ஜஸ்ட் லைக் தட்’ என வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து, ஒத்து வரவில்லையெனில் எளிதாக விலகிச் செல்வது இக்கால இளைஞர்களின் வழக்கமாகவே மாறிவிட்டது .
ஒட்டாத திருமணங்களும் தாம்பத்தியத்தில் இணைந்த பிறகு புரிதலுடன் வாழ ஆரம்பித்த ஜோடிகளும் உண்டு. இவர்கள் எந்த ரகத்தில் சேரப் போகிறார்கள் என்பதை காலம் சொல்லும் வரை நாமும் காத்திருப்போம்.
இருவரும் இணைந்து பயணிக்கும் வாழ்க்கைப் பாதை இன்னல்களை களைந்து வெற்றியைக் கொடுக்குமா அல்லது தோல்வியில் துவண்டு பிரிவினை பரிசளிக்குமா என்பதை கதையின் போக்கில் காணலாம் மக்களே…





அழகான ஆரம்பம்❤️
நன்றிம்மா