arrow_back
ஆலங்காய் வெண்ணிலவே அத்தியாயம்-2
ஆலங்காய் வெண்ணிலவே chevron_right பகுதி 2 / 6

அத்தியாயம்-2

visibility 525
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

வெண்ணிலவு-2

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..!

கந்தர் அநுபூதியின் கடைசிப் பதிகத்தை முணுமுணுத்தவாறு திருநீற்றுப் பட்டையடித்துக் கொண்ட நெற்றியில் சின்னதாக சந்தனப்பொட்டும் குங்குமமும் இட்டுக்கொண்டார் மணிமாறன்.

தினமும் குளித்துவிட்டு வெளியில் வரும்போதே மனனமாய் சொல்ல ஆரம்பித்து, பூஜை முடிக்கும் நேரம் ஐம்பத்தியோரு பதிகத்தையும் படித்து முடித்து விடுவார். விவரம் தெரிந்த நாள்முதல் ஒட்டிக்கொண்ட பழக்கம் இது.

தீவிர முருகபக்தர், தனது சிறிய வீட்டிற்கு, ‘கார்த்திகை பவனம்’ எனப் பெயரிட்டு, சரவணபவ எந்திரத்தை வீட்டு நிலைவாசலின் மேற்சுவற்றில் பதித்து வைத்ததிலேயே அவரது பக்தியின் வீரியம் தெரிந்து விடும்.

மனைவி பவானி, மகன் செந்தூரன், மகள் கார்த்திகா கொண்ட சிறிய குடும்பத்தின் தலைவர். இந்த கூட்டில் மருமகள் வேலவர்ஷினியும் புதிதாக சேர்ந்துள்ளாள்.

பாரபட்சமற்ற அன்பில் அனைவரையும் அரவணைத்துக் கொள்பவர். ஆர்பாட்டமில்லாத நேர்மையான மனிதர். அதட்டவும் தெரியாது, எதற்கும் அதிரவும் செய்யாதவர்.

அடர் பாக்குநிற கரைவேட்டி, கை வைத்த வெள்ளை பனியனுமாக மத்திம வயதிற்கேற்ற மத்திம தோற்றத்தில் இருந்தார். இவருக்கு நேர்மாறாக மனைவியும் மகளும்! இவர் குணத்தைப் பார்த்தால், மனைவி பணத்தைப் பார்ப்பார்.

அலட்டலும் குதர்க்கமுமாக, எள்ளலாய் அடுத்தவரை  மட்டம் தட்டிப் பேசும் திமிர், பவானியின் இரத்தத்தில் ஊறிப் போன குணம். அம்மாவின் பழக்கம் மகளையும் வைரஸ் கிருமியாய் தொற்றிக்கொண்டு குடும்பத்தினரை ஆட்டி வைக்கின்றது. இவர்களின் இந்த அதிகப்படியான குணங்களே குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றதென மணிமாறன் சொல்வதும் உண்டு.

‘மகன் அப்பாவைப் போல!’ என மெச்சிக்கொள்ள வழியில்லாமல், செல்லும் இடமெல்லாம் விவகாரத்தை இழுத்துக்கொண்டு வரும் சாகசக்காரன் செந்தூரன்.

‘உன்னைத் தேடி பிரச்சனை வருதா? இல்ல, நீ அதை தேடி போறியான்னு தெரியலடா!’ என்பதுதான் மணிமாறனின் அதிகப்பட்ச கண்டிப்பும் முறைப்பும்! அதற்குமேல் குரலை உயர்த்திப் பேசி இவருக்கு பழக்கமில்லை. அப்படியொரு வாய்ப்பு ஒருநாளும் குடும்பத்தில் இவருக்கு வழங்கப்பட்டதும் இல்லை. எல்லாவற்றிக்கும், ‘சரி முருகா, சந்தோசம் முருகா’ தான்!

இவரது பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமத்து பேரூராட்சி. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பழனி பக்கத்து வீடாகவும், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஊர்கள் அண்டை வீடாகவும் இருக்கும் காரணத்தால் இவ்வூர் மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சந்தைகளைச் சார்ந்தே இருக்கும்.

தந்தையின் பூர்வீகச் சொத்தாக தற்போது இவர் தங்கியிருக்கும் எழுநூற்றி சொச்ச சதுரடி வீட்டுமனை மணிமாறனின் கைக்கு வந்து சேர, அந்த அசையா பொக்கிஷத்தை பாதுகாத்து, அந்த வீட்டிலேயே வாழத் தொடங்கி வாழ்ந்தும் வருபவர்.

பஞ்சப்பாடு இல்லாமல் கைக்கும் வாய்க்கும் சரியாகப் போகும் வாழ்வதாரத்தில் சேமிப்பு என்கிற பேச்சிற்கே இடமில்லை. படிப்பை முடித்து பிள்ளைகளின் வருமானமென்று தனியாக வந்தாலும் இவரின் பட்ஜெட்டில் துண்டு விழுவது மட்டும் குறையவே இல்லை.

காரணம் மனைவி பவானி! மகளின் திருமண சேமிப்பிற்காக கணவர், பிள்ளைகளின் சம்பாத்தியங்கள் அத்தனையும் காபாந்து செய்து தன் முந்தானையில் முடிந்து கொள்ளத் தொடங்கியதில், இவரது செல்லப்பிள்ளையான வெத்தலை சீவல் பழக்கமும் இவரிடமிருந்து விடைபெற்றுப் போனது.

சமீப நாட்களாக மனைவி காட்டும் கெடுபிடியில் அலமலந்து முழிக்கிறார் மனிதர். ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபப்பட்டு கருணை காட்டும் ஒரே உறவு மருமகள் வர்ஷினி மட்டுமே!

திருமணத்திற்கு முன்னர், ‘மணி அங்கிள்’ என பாசத்தோடு அழைத்து வந்தவள், இப்பொழுது, ‘அங்கிள்’ என்பதோடு சுருக்கிக் கொண்டாள், அழைப்போடு பேச்சினையும் தான்!

மூச்சு முட்டிப் போகும் மாமியார், நாத்தனார் கெடுபிடிகளுக்கு முறைத்து, பதிலடி கொடுப்பதற்கே அவளது ஜீவன் தளர்ந்து போவதால் யாரிடமும் அதிகப்படியாய் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.       

“ஏனுங்க! கொடமெல்லாம் கழுவி வச்சுட்டேன், சீக்கிரமா தண்ணிக்கு கெளம்புங்க! வரிசை போயிடப் போகுது!” கைகளில் இருக்கும் பிளாஸ்டிக் குடங்களை வாசற்படியில் சென்று வைத்துக் கொண்டே மூச்சு வாங்கினார் பவானி.

சற்றே ஒடிசலான தேகமும், உழைத்து களைத்த முகமுமாக எப்போதும் ஏதோவொரு பரபரப்பில் இருப்பவர். ஆங்காங்கே எட்டிப்பார்த்த வெள்ளைநரையோடு இடைவரை நீண்ட பின்னலை கொண்டையாக்கி, தூக்கிக் கட்டியிருந்தார். வசதிக்கேற்ற உடையாக எளிதான பூனம் அல்லது கிரேப் சில்க் தாண்டி வேறெதுவும் உடுத்தி அழகு பார்த்ததில்லை. பணம் காசு விஷயத்தில் வெகு கறார் பெண்மணி!

தினசரி காலையில் ஏழு மணிமுதல் ஒன்பது மணிவரை மட்டுமே வரும் குடிதண்ணீரை பிடிக்கத்தான் கணவரை விரட்டிக் கொண்டிருக்கிறார் பவானி. இக்கால மினரல்கேன், வீட்டிற்கு வரும் ஆர் ஓ தண்ணீர், வாட்டர் பியூரிஃபையர் வாங்கும் அளவிற்கு அந்த ஊரில் உள்ளவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இன்னும் உயரவில்லை.

“டெய்லியும் பத்து குடம் பிடிக்கிறீங்கல்ல, இன்னைக்கு கடைசியா பிடிச்சா என்னான்னு, ரெண்டாவது வீட்டு அன்னம், எனக்கு முன்னாடி வரிசை வைக்க வந்தா! அவ பேச்சுக்கு வக்கணையா வாயடைச்சுட்டு தான், கொடத்தை வச்சுட்டு வந்துருக்கேன்! வெரசா போயி அடிங்க!” மனைவியின் படபட பேச்சிற்கு காதைப் பொத்திக் கொண்டு, “முருகா!” என்று முணுமுணுத்தார் மணிமாறன்.

“தெனமும் குழாயடிச் சண்டை போடலன்னா உனக்கு தூக்கம் வராதா பவானி?” ஆதங்கத்தோடு அமைதியாய் கேட்க,

“நானா வீம்புச் சண்டைக்கு போனா சொல்லுங்க… அவளுக வந்து வாயை கொடுத்தா, நான் பதில் பேசாம விடமாட்டேன்! யாருகிட்ட…” தனது வாய்ஜாலத்தை தானே மெச்சிக்கொண்டு பெருமிதப்பட்டார்

“என்னவோ போ… உன்னை வச்சே யாரும் என்கூட சாதரணமா கூட பேசுறதில்ல” என குறைபட்டுக் கொண்ட மணிமாறன்,

“கொடம் கழவி வைக்க, ஒத்தாசைக்கு யாரையாவது அனுப்பி வை!” என்றவரின் பார்வையும் வீட்டைச் சுற்றி வந்தது.

பவானியும் யோசித்துக் கொண்டே, “எந்தக் கழுதைய கூப்பிட்டாலும் நீயா நானான்னு தப்பிக்கப் பாக்கும்!” என்றவரின் பார்வை வட்டத்தில் வசமாய் சிக்கினாள் வர்ஷினி.

தனது அறையிலிருந்து குளித்து முடித்து அப்போது தான் கீழிறங்கி வந்தாள். ஆனந்த ஆரம்பமாக தினமும் பெட்காபி குடித்து, கண்ணும் மூளையும் சுறுசுறுப்பாக்கிக் கொள்ளும் போதையில் வளர்ந்தவளுக்கு, இங்கு வந்த நாள்முதல் அந்த போதைக்கு ஊறுகாயாக கூட ஒருநாளும் சரியான நேரத்திற்கு காபி கிடைப்பதில்லை.

‘வீட்டில் சும்மா இருப்பவள்’ என நொடித்தே நாளொன்றுக்கு ஒரு டம்ளர் காபி கொடுப்பதற்கே கணக்கு பார்க்கும் பவானி, சமயத்தில் பாலில்லாத வரகாபி கொடுத்தே கடுப்பைக் கிளப்புவார்.

சமையல் செய்வதற்கான கைப்பக்குவம் சரியாக வரவில்லையென்ற காரணத்தால் வீட்டில் சிறுசிறு வேலை, சுற்று வேலை, சுத்த வேலை என பொழுதுக்கும் மருமகளை விரட்டியே பெண்டு நிமிர்த்தி விடுவார் பவானி.

வேலைக்கு செல்லக்கூடாதென்று புகுந்த வீட்டு உறவுகள் அனைவரும் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருக்க, நேரம், பொழுது கரைய கடனே என்று கடமையை செய்து கொண்டிருக்கிறாள் வர்ஷினி.

இன்று காலையில் எழுந்து அமரும் பொழுது, அந்த நிமிடமே காபியை குடித்தே ஆகவேண்டுமென்கிற ஆவல் அவளை வாட்டியெடுத்து விட்டது. இங்கு வந்து வாழ ஆரம்பித்த இரண்டு மாத காலங்களில் இப்படியெல்லாம் ஆவல் கொண்டதில்லை.

‘பசியா? அல்லது நாக்கு ருசியைத் தேடுகிறதா?’ புரியாத குழப்பத்தோடு கீழிறங்கியவளை மாமியாரின் அழைப்பு நிகழ்விற்கு அழைத்து வந்தது.

“வந்துட்டியா வர்ஷினி! சீக்கிரமா பொரியலுக்கும் சாம்பாருக்கும் தாளிச்சு வை! கார்த்திக்கு ரெண்டு தோசை ஊத்தி வச்சுடு! அப்படியே அவளுக்கு மதியச் சாப்பாடும் கட்டி வச்சுடு! நான் இவர்கூட தண்ணிக்கு போயிட்டு வந்துடுறேன்!” கணவரைக் காட்டியபடி உத்தரவிட்டுக் கிளம்ப முயற்சித்தார்.

அடுக்கடுக்காய் மாமியார் சொன்ன வேலைகள் என்னவென்று புரிந்து கொள்வதற்கே வர்ஷினிக்கு நொடிநேரம் பிடித்தது. புரிந்ததும் முரட்டு ரோசம் கொண்டவளாக சிலிர்த்துக் கொண்டாள்.

‘கார்த்திக்கு தோசை ஊத்தி வை! சாப்பாடு கட்டி வை!’ மாமியாரின் உத்தரவுகள், அவளின் காதுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதைப் போலக் காந்தியது.

‘அந்த திமிர் பிடிச்ச கழுதைக்கு, நான் சர்வீஸ் பண்ணனுமா? சான்சே இல்ல, என் கையால இவளுக்கு பச்சத்தண்ணி கொடுக்கிற நாள்தான் என்னோட இறந்தநாள்!’ மனதிற்குள் குமுறிக் கொண்டவளாக,  மாமியாரிடம் வேகமாக மறுத்து தலையசைத்தாள்.

“இல்ல ஆன்ட்டி, எனக்கு தோசை வட்டமா ஊத்த வராது. கருகிப் போயிரும். அப்புறம் தாளிப்புக்கு எந்த எண்ணெய் ஊத்தணும், எந்த பருப்பு போடணும்னு தெரியாம இன்னும் கன்பியூசன்லதான் இருக்கேன். அதனால நான் அங்கிள் கூட போறேன், நீங்க அடுப்புல பாருங்க!” வேண்டாத சிரிப்பை ஒட்டி வைத்துக் கொண்டு நழுவ முயற்சிக்க, தலையில் அடித்துக் கொண்டார் பவானி!

“கருமம், கருமம்! என் வீட்டுக்குன்னு வந்து சேர்ந்திருக்கு பாரு! சமைக்க தெரியாது, பருப்பு தெரியாதுன்னு இன்னும் எத்தனை நாள்தான் சொல்லிட்டு இருக்க போற? வீட்டுலயே உருண்டுகிட்டு மூணு வேளையும் கொட்டிக்க மட்டும் தெரியுது!” வெறுப்போடு பல்லைக் கடித்த நேரத்தில்,

“பவானி பேச்சை கொற… உள்ளே போயி வேலையைப் பாரு!” என்றார் மணிமாறன்.

மனைவியின் சொல்லம்புகளை இவரும் இவர் பிள்ளைகளும் வாங்குவதிலும் தாங்குவதிலும் தவறில்லை. ஆனால் மருமகள் அடுத்த வீட்டுப்பெண்! வலுக்கட்டாயமாக இந்த வீட்டோடு தன்னை பொருத்திக்கொண்டு வாழத் தொடங்கியிருப்பவளை குதர்க்கம் பேசியே குற்றவாளியாக்குவது பெரும் தவறாயிற்றே!

மருமகளும் ஒருநேரம் பதில் பேசி, சிலநேரம் அமைதியாகக் கடந்தும் போய்விடுகிறாள். தனது மனவருத்தத்தை பொதுவில் ஒருமுறை இவள் இறக்கி வைத்தாலே போதும், குடும்பமானம் சந்தி சிரித்து விடும்!

‘தங்கள் குடும்பத்தையே நம்பி வந்தவள் என்ற நல்ல செயலுக்கே அவளிடம் கடுமை காட்டாமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால் தான் என்ன!’ என்பதுதான் மணிமாறனின் எண்ணம். அதை மனைவியிடம் சொல்லியும் அவ்வப்போது தனது எதிர்ப்பை காட்டியும் வருகிறார் தான்! ஆனால் அதை மதிக்கும் அளவிற்கு அவருக்கு அந்த வீட்டில் செல்வாக்கில்லை.  

“தோ வந்துட்டாரு நம்ம வீட்டு நல்லவரு… உத்தமரு… அமைதி, அன்புன்னு எந்நேரமும் கொடிபிடிக்க! எல்லாம் என் தலையெழுத்து!” கணவரைப் பார்த்து கோபத்துடன் பவானி நொடித்துக்கொள்ள, எந்த உணர்ச்சியுமின்றி குடங்களை கையில் எடுத்தாள் வர்ஷினி.

“இவ்வளவு பேசுறேன், கொஞ்சமாவது கலங்குறாளா பாரு! இவ அம்மாக்காரி என்னான்னுதான் பெத்து போட்டாளோ? நகைநட்டு இல்லாம தரித்திரமா இவ வந்து சேர்ந்ததையே என்னால ஜீரணிக்க முடியலன்னா, இந்த கழுத ஒண்ணுமே தெரியாத தண்டமால்ல இருக்கா!”

பவானியின் நரம்பில்லா நாக்கு வரம்பு மீறி வன்மத்தை கக்க, கேட்டும் கேட்காத பாவனையில் வெளியேறிக் கொண்டிருந்தாள் வர்ஷினி. கொஞ்சம் கொஞ்சமாய் ரோசத்தை முழுங்கப் பழகிக் கொண்டதின் தொடர்ச்சி, இப்போது சுத்தமாய் சுயம், ‘செத்தே போய் விடுவேன்’ என அரற்றியது. அனைத்தையும் அமைதியாய் முழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு நடந்தாள்.

மனைவியின் பேச்சை தொடர்ந்து கேட்க முடியாமல் மீண்டும் வேகமாய் காதைப் பொத்திக் கொண்ட மணிமாறன், “முருகா, முருகா!” என தன்னை சமன் செய்தபடி மனைவியை இயலாமையுடன் பார்த்தார்

“வாயிருக்குனு பேசாதே பவானி, குடும்பத்துக்கு நல்லதில்ல! ஏதோ தன்னோட சூழ்நில சரியில்லாம போனதால மருமக பதில் பேசாம இருக்கா! அதை சாதகமாக்கி பாவத்தை சேர்த்துக்காதே! அவ்வளவுதான் சொல்லிட்டேன்!” அதிராமல் கண்டித்தபடி குழாயடிக்கு விரைந்தார்.

“ம்க்கும், தீர்ப்பு சொல்லி முடிச்சிட்டாரு இந்த வீட்டு நாட்டாமை! கேட்டுட்டுதான் மறுவேலை பாக்கணும்!” கடுப்போடு அடுப்படிக்கு விரைந்து வேலையைத் தொடர்ந்தார் பவானி.

குழாயடியில் வரிசை நீண்டிருந்தது. பவானி சண்டை பிடித்து முதல் பத்து பேருக்குள் குடத்தை வைத்திருக்க, அதற்கே அங்கிருந்தவர்களிடையே ஏகப்பட்ட முணுமுணுப்புகள் கிளம்பிய வண்ணமாய் இருந்தன.

“தெனமும் பத்து குடம் பிடிச்சிட்டு போறாங்க! நாங்க ரெண்டு கொடம், நாலு கொடம் தானே வச்சுருக்கோம்! ஒருநாள் எங்கள முன்னாடி விட்டா என்னவாம்?” பின்னோடு நின்றிருந்த ஒருபெண் வர்ஷினியின் காதுபடவே குறைபாட்டு பாட,

“எனக்கொன்னும் பிரச்சனை இல்லக்கா! நீங்க சொன்னீங்கனு முன்னாடி விட்டுட்டு என் மாமியார்கிட்ட திட்டு வாங்க நான் ரெடி! நீங்க ரெடியா அவங்ககிட்ட வசவு வாங்கி கட்டிக்க?” என்றவள் சிரிப்போடு நக்கலாகப் பேசி, புருவத்தை ஏற்றி இறக்க,

“ஆத்தி, உன் மாமியா பேசவா செய்யுது! சாக்கடைய தூர் வாரின கணக்கா வன்மத்தை வாந்தியால்ல எடுத்து வைக்குது! மனமா நீயே பிடிச்சுக்கோ ஆத்தா! எங்களை உன் மாமியாட்ட கோத்து விடாதே!” பலரும் பலவிதமாய் பயந்து ஜகா வாங்கினர்.

அவர்களின் பேச்சைக் கேட்டபடியே குடம் கழுவி வைத்து தண்ணியடிக்கும் வேலையை வர்ஷினி தொடர, மருமகள் நிரப்பிக் கொடுக்கும் குடத்தை தோளில் சுமந்துகொண்டு வீட்டிற்குச் சென்றார் மணிமாறன்.

கடைசி இரண்டு குடத்தை ஆளுக்கொன்றாக சுமந்து கொண்டு வருகையில், “சாரி வர்ஷிமா! இன்னைக்கு உன் அத்தை ரொம்பவே உன்னை பேசிட்டா! இவகிட்ட எத்தனையோ முறை சொல்லிப் பார்த்துட்டேன்! இவ தன்னை மாத்திக்கிறதாவே இல்ல! இவ பேசுறதும் இல்லாம மகளையும் பேசவிட்டு வேடிக்கை பாக்கறது தான் என்னால தாங்க முடியல! நீ வருத்தப்படாதே, எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்!” குரலில் வாஞ்சை ததும்பியிருக்க, மன்னிப்பு கோர முடியாமல் கெஞ்சலாய் மருமகளைப் பார்த்தார்.

“அட சும்மா இருங்கஅங்கிள், என்னை சொல்லிட்டு நீங்க வொரி பண்ணிக்கிறீங்க! இதுக்கெல்லாம் கோவிச்சுட்டு போகணும்னா எப்பயோ நான் இந்த உலகத்த விட்டே போயிருக்கணும். என் சூடு சொரணையெல்லாம் என் அம்மா வீட்டுலயே செத்துப்போச்சு! அத்தை பேசற பேச்சும் தெனமும் கேட்டு அலுத்துப் போச்சு! புது டயலாக் சேர்த்து திட்டச் சொல்லுங்க!” சகஜமான சிரிப்புடன் சோகத்தைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்கு நடைபோட்டாள் வர்ஷினி.

‘எப்படி எப்படியோ வாழ வேண்டிய புள்ள, என் வீட்டுக்கு வந்து கஷ்டப்படுதே முருகா! இந்த இக்கட்டுல இருந்து எம் மருமகள காப்பாத்தேன்!” தாளமுடியாமல் பழனிமலையை பார்த்து முணுமுணுத்துக் கொண்டே மருமகளைப் பின்தொடர்ந்தார்.

***

மணிமாறன் வீட்டினை அடையும் போதே அந்த சிறிய போர்டிகோவில் அமர்ந்து, அவரின் மகள் கார்த்திகா ஒரு பெண்ணிற்கு காய்ச்சலின் அளவை பார்த்துக் கொண்டிருந்தாள். காம்பவுண்டு சுவரையொட்டி இரண்டு வாகனம் வைக்கும் இடத்தில் இவளுக்கென்று சிறிய டேபிளும் இரண்டு சேர்களும் எப்போதும் இருக்கும்.

பிஎஸ்சி நர்சிங் முடித்து பழனியில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்து வருகிறாள். வேலை நேரம் தவிர்த்து வீட்டிலிருக்கும் ஓய்வு நேரத்தில் சிறுசிறு உடல் உபாதைகளுடன் வருபவர்களுக்கு உடனடி நிவாரணமாக மாத்திரையும் ஊசியும் போட்டு மருத்துவம் பார்ப்பாள்.

அதிலும் சரிவரவில்லை என்றால் மருத்துவரை பார்க்க வேண்டுமென ஆலோசனையும் கூறி அனுப்பி வைப்பாள். அநேக கிராமங்களில் செவிலியர் மருத்துவம் பார்ப்பது வழக்கம் தான்!

இவளின் கைராசிக்கு இவள் செய்யும் அவசர மருத்துவமே பெரும்பாலனவர்களுக்கு உடல் உபாதைகளைக் குறைத்து விடுவதால் ஊருக்குள் இவளுக்கு ஏககிராக்கி! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் பழக்கமாக, அவசர மருத்துவம் பார்த்தே மாத சம்பளத்திற்கு நிகராக கையையும் பர்சினையும் நிறைத்துக் கொள்கிறாள்.

தற்சமயம் இந்த வீட்டில் அதிகமாய் சம்பாதிக்கும் ஒரேநபர் கார்த்திகா மட்டுமே! அவளது திமிருக்கும் அலட்டலுக்கும் சொல்லவா வேண்டும்! மகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட பவானிக்கு இது ஒன்றே போதுமானதாக இருக்கின்றது.

“எம் மகள போல வருமா? அவ அறிவென்ன… கைராசி என்ன! என்கிட்டே மட்டும் பணங்காசு கைகொள்ளாம இருந்திருந்தா எம் பொண்ண டாக்டருக்கு படிக்க வைச்சு அழகு பாத்துருப்பேன்!” மகளின் பெருமையை பீற்றிக் கொள்ள ஆரம்பித்தால் சோறுதண்ணி வேண்டாம் அந்த அம்மாவிற்கு!

“ஒரு மூடி டானிக்ல அர டம்ளர் வெதுவெதுப்பா தண்ணி கலந்து குடிக்கணும். ஒரு நாளுக்கு மூணு வேளைன்னு மூணு நாளுக்கு குடிங்க! அப்பதான் நீர்கடுப்பு மட்டுபடும். சளி, இருமலுக்கு ஊசி போட்ருக்கேன், தூக்கம் வரும் வீட்டுக்கு போயி தூங்கிடுங்க! ரெண்டு நாள் மாத்திரையும் கொடுக்குறேன், சேர்த்து எடுங்க!” என்றபடி மருந்து மாத்திரைகள் கொடுத்து அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தாள் கார்த்திகா.

நோயாளி சென்றதும் முகத்தில் போட்டிருந்த மாஸ்க் மற்றும் கிளவுஸினை கழட்டி அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டாள். சுத்தம், சுகாதாரம் பார்ப்பதில் வெகு கறார்!

கார்த்திகா, இருபத்தியிரண்டு வயது அழகுப்பெண்! காலைநேர புத்துணர்ச்சியுடன் இயல்பான அவளது அழகும் சேர்ந்து அவளை புத்தம்புது பூவாய் மலரச் செய்திருந்தது. குண்டுக் கன்னங்களும் மஸ்காரா விழிகளும் ரோஜாநிறமுமாக சர்வ லட்சணத்துடன் அம்சமாய் இருந்தாள்.

வெக்கையை தணிக்க உதட்டில் பூசிய மெல்லிய டின்டெட் லிப்பாம் கூட அவளின் அழகை மெருகேற்றிக் காட்டியது. தனது வாளிப்பான தோற்றத்திலும் எழிலிலும் எப்போதும் அதிகப்படியான கவனத்தை செலுத்தி நேர்த்தியான அழகுச் சிலையாக எளிமையாக வலம் வருபவள்.

அவளது செவிலி சீருடையான வெள்ளை சல்வாருடன் இளநீல ஓவர் கோட்டும் அவள் உடலமைப்பிறகு சிக்கென பொருந்தி அழகியாய் காண்பித்தது.

‘ஷப்பா… கண்ணு கூசுதே! இவ வேலைக்கு போறாளா அழகிப் போட்டிக்கு போறாளா?’ மனதிற்குள் முணுமுணுத்த வர்ஷினியே அவளை ஓரக்கண்ணால் ரசித்தாள்.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம்-3

வெண்ணிலவு-3வேலவர்ஷினி, கார்த்திகா இருவருக்கும் ஒரே வயது. ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் படித்தவர்கள். கல்லூரி செல்லும்போது தான் பிரிந்தனர். ஆனால், ‘நண்பேன்டா!’ எனுமளவிற்கு இருவருக்கும் நட்பு பாராட்டிக் பழக்கமில்லை.சிறுவயது முதலே படிப்பு, விளையாட்டில் துணை சேராமல், பேச்சு மற்றும் பழக்க வழக்கத்தில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 2

  1. Thaniபொதுக் கருத்துThani

    மாமியாருக்கு வாய் ரொம்ப நீளம் தான்.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்