அத்தியாயம்-6
வெண்ணிலவு-6
“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? ஊரு உலகத்துல நடக்காததா? பேசாததா?” தன் பக்க நியாயத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தார் பவானி. இன்று விடிந்த பொழுதிலிருந்தே இதே பாட்டுதான்.
மறுபேச்சில்லாமல், “முருகா, முருகா!” என கேட்டுக் கொண்டிருந்த மணிமாறனுக்கு காதில் ரத்தம் வடியாத குறை!!
‘தன் பேச்சை வீட்டில் யாரும் காது கொடுத்து கேட்கா விட்டால், அன்றைய பொழுதை கலவரமாக்கி விடுவாள் மனைவி’ என்பதை அறிந்ததாலேயே பதில் பேசாமல் அமைதியாக இருந்தார் மணிமாறன்.
வழக்கம் போல காலை ஆறுமணிக்கு கலெக்சனுக்கு செல்ல கீழே இறங்கி வந்த செந்தூரனிடமும் இதே பேச்சை ஆரம்பிக்க, அவனோ முன்தின கோபத்தில் முகம் திருப்பிக்கொண்டு எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
எப்போதும் குடிக்கும் வரகாபி கூட வேண்டாமென்று மகன் சொல்லிவிட்டுப் சென்றதில் பவானியின் புலம்பல் ஆரஞ்சு அலர்ட்டில் இருந்து ரெட் அலர்ட்டுக்கு மாறி தீவிர புயலாக உருவெடுத்திருந்தது.
‘ரெண்டு மாச புள்ளைக்காக இவன் முகம் திருப்புனா, என் புள்ளைக்காக நான் யோசிக்க மாட்டேனா? எதார்த்தம் புரியாம இருக்கான் போக்கத்த பய…’ மகனின் நினைவில் மனதிற்குள் காய்ந்தார்.
அதன் பிறகும் மனத்தாங்கல் குறையாமல், “கல்யாணம் முடிஞ்சு, முழுசா மூணு மாசம் கூட முடியல, அதுக்குள்ள அந்த பொண்ணு மசக்கைன்னு சொல்றா!” பெருமூச்சோடு நீட்டி முழக்கினார் பவானி.
“எந்த பொண்ணு?” குதர்க்கமாகக் கேட்டார் மணிமாறன்.
“ம்ம், உங்க மருமக தான்…”
“ஏன் உனக்கு இல்லையா?”
“ம்ப்ச், பேச்ச மாத்தாதீங்க… ஆம்பள கல்யாணமான சோக்குல கொஞ்சம் அப்டியிப்டின்னு இருக்கத்தான் செய்வான். சின்னவயசு வேற, பொம்பள புள்ள இவதானே கவனமா இருக்கனும்.”
“ஏன், அதே சின்ன வயசு இவளுக்கு இல்லையா? எல்லாம் ஆண்டு அனுபவிச்ச கிழவியா நம்ம மருமக?” மணிமாறனின் குதர்க்க கேள்வியை எல்லாம் பவானி பொருட்படுத்தவே இல்லை.
“கல்யாணம் தான் அவசர அவசரமா முடிஞ்சதுன்னா புள்ளையும் அதே அவசரத்துல வரணுமா? ரெண்டு பேரும் கொஞ்சநாள் சந்தோசமா இருக்கலாம்ல… இப்போ பிள்ளை பெத்துக்கிறதுக்கு என்ன அவசரம்?
“என்னதான் சொல்ல வர்ற பவானி?” மனைவியின் நசநசப்பில், சிடுசிடுத்தார் மணிமாறன்.
“ரெண்டு பேருக்கும் வயசு இருக்கு, அதுக்குள்ள கர்ப்பம், கொழந்தன்னு வந்தா ரெண்டு பேருக்குமே கஷ்டம். இவளுக்கு என்ன… புள்ளைய பெத்துட்டு வீட்டுல அக்கடானு கால நீட்டிட்டு உக்காந்துக்குவா! அவனுக்கு தான் எல்லா கஷ்டமும்…” என மகனுக்காக உருகினார் பவானி.
“அவ புள்ளைய பெத்தா, இவனுக்கென்ன கஷ்டம் வந்திடப் போகுது? நான் இப்படிதான் கஷ்டப்பட்டேனா? உன்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கல…”
பொய்க்கோபத்துடன் மனைவியை கடிந்து கொள்ள, சட்டென சுதாரித்தார் பவானி. ‘பழனியாண்டி மலையேறிட்டா, பாட்டு பாடி மலையிறக்குறது ரொம்ப கஷ்டமாச்சே முருகா!’ இத்தனை நேரம் இல்லாத கரிசனை வார்த்தையில் குழைந்தது.
“யாரு இல்லன்னு சொன்னா முருகா… அப்படி என்னை பாக்கப் போயி தானே, தேடி வந்த சமையல் ஆர்டர் எல்லாம் கைய விட்டுப் போச்சு! சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோமே, மறந்தாச்சா?” நொடித்துக்கொண்டே சொன்ன மனைவியை கண்டனப் பார்வை பார்த்தார் மணிமாறன்.
“நான் உங்களை தப்பு சொல்லலங்க… நம்ம காலத்துல இருந்த மாதிரியே இந்த ஊரும் உலகமும் இருந்தா எனக்கு இந்த கவலையே இல்ல… இப்ப இருக்குற தேவைகளும் விலைவாசியும் அனுசரிச்சு போற மாதிரியாவா இருக்கு?
மருமக விசயத்துல பொறந்த வீட்டுல பாப்பாங்கன்னு உறுதியா சொல்ல முடியல… பிரசவத்துக்கு அப்புறம் அவன்தான் அவளைப் பாக்கணும். அப்புறம் குழந்தைக்காக அதிகமா சம்பாதிக்க ஓடனும். அதுக்கு ஏத்த மாதிரி பெரிய சம்பளம் வர்ற வேலையும் அமையணும்.
குழந்தைய பாக்குறதுக்கே இவளுக்கு பொழுது சரியா இருக்கும். அப்புறம் நம்ம புள்ளைக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்? சம்சாரி வாழ்க்கையில சன்யாசியா வாழுறதெல்லாம் ரொம்ப கஷ்டம் முருகா!” பவானியின் சுருதி ஏறியிறங்கியதில்,
‘நான் இப்படி யோசிக்கலையே… பொம்பள யோசனை எப்பவும் தனிதான்!’ என மணிமாறனின் தலையும் ஒரு மார்க்கமாகவே தலையாட்டியது.
ஆனாலும் யோசனையோடு, “நாம அப்படியெல்லாம் விலகி வாழலையே பவானி?” மணிமாறன் சொல்ல
“நாம வாழ்ந்த காலம் வேற… இவங்க வாழுற காலம் வேற முருகா!! உங்ககூட சைக்கிள்லயும் நான் டபிள்ஸ் உக்காந்து வந்துடுவேன். ஆனா உங்க மருமக அப்படியா? அவளோட வளர்ப்பென்ன? வாழ்ந்த வாழ்வென்ன? எல்லாம் யோசிக்கனுமில்ல…” பவானி சமயோசிதமாக சமாளித்ததில் வாயடைத்துப் போனார் மணிமாறன்.
அதே நேரத்தில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த வர்ஷினி, மாமியாரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் மாடிப்படியிலேயே அமர்ந்து விட்டாள்.
அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க வேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனால் அவளைப் பற்றிய பேச்சின் வீரியம் அதை செய்ய வைத்தது.
“நம்ம புள்ளைக்கு வயசிருக்கு, காலம் இருக்கு, இப்ப இருந்தே குடும்ப பாரத்தை தூக்கி சுமக்கணும்னு என்ன தேவை அவனுக்கு? இவன் வயசுக்கு இப்ப இருந்தே செக்கு மாடா இழுக்க ஆரம்பிச்சுட்டா, முப்பதுக்கே குடும்ப வாழ்க்கை சலிக்க ஆரம்பிச்சிடும்.
அந்த நிலமையில அவன் என்ன சுகத்தை அனுபவிக்க முடியும்? வாழ்க்கையே வெறுத்து போயிடுவான்!” என நன்றாக மூளைச்சலவையில் இறங்கினார் பவானி.
“இவளும் சூட்டிகையா இருந்து, எம் புள்ளயும் கை நிறைய சம்பாதிச்சா நான் ஏன் இத்தனை சொல்லப் போறேன்? இந்த காலத்துல வீடு, காரு, பணம் சம்பாதிச்சுட்டு தானே வாழவே ஆரம்பிக்கிறாங்க…
இவனுக்கு மட்டும் இப்ப இருந்தே செக்கு மாடாட்டம் குடும்பம் குழந்தை குட்டிய இழுக்கணும்னு தலையெழுத்தா என்ன?” நீண்ட அங்கலாய்ப்பில் முடிக்க மணிமாறனின் மனமும் குழம்பித்தான் போனது.
“நம்மையே நம்பி வந்த பொண்ணை பாக்க வேணாமா பவானி? அவளுக்கும் ஆசை இருக்கும்ல…”
“அவளை யாரு மறந்தா? இன்னும் கொஞ்சநாள் நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கட்டுமே! அப்புறம் குழந்த நிக்கும்போது அந்த குழந்தையும் ஆரோக்கியமா புஷ்டியா பொறக்கும்ல? எல்லாம் உடைச்சு சொல்லனுமா முருகா?!”
முழுக்க முழுக்க மகனின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தே பேசிக் கொண்டிருக்கும் மனைவியின் நிதர்சன பேச்சினை மணிமாறனால் தடுக்க முடியவில்லை.
ஊரார் மதிக்கும்படியாக கௌரவமான அந்தஸ்தான நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிள்ளைகளும் வாழ வேண்டுமென்று நினைக்கும் சராசரி தகப்பனாக மணிமாறன் யோசிக்க, ‘அதே சராசரியில் நின்று யோசிக்கும் மனைவியை குறை கூறுவானேன்?’
ஆக மொத்தம் குழந்தை தற்போதைக்கு தேவையில்லை என்பதை கணவரின் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்து விட்டார் பவானி.
ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் மருமகளுக்கு இவர்கள் பேசும் நியாயமெல்லாம் அவளுக்கான அநியாயமாகத் தான் தெரிந்தது. மாமியார் சொன்ன கருத்தை உண்மையில் எப்படி எடுத்துக் கொள்வதென்றே அவளுக்கு புரியவில்லை.
‘நேற்றைய தினம் நிலையில்லாத வருமானம், அதிகரிக்கப் போகும் செலவினங்களை முன்வைத்து குழந்தையை தட்டிக் கழித்தவர், இன்று தன்னை எதற்கும் லயக்கில்லாதவள், அவரது மகனின் சந்தோஷம் குறைந்து விடும் என்று குறைபட்டுக் கொள்வதும் ஏனோ?’ என பெண்மனம் யோசித்தது.
எந்தச் சூழ்நிலையையும் போராடித்தான் வெல்ல வேண்டும் என்பதும் இதுதானோ! வாழ்க்கையே போராட்டகளம் தானே! மாமியாரின் பேச்சு அத்தனை கசப்பானதான ஒவ்வாமையை கொடுத்தாலும், பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது எதற்காக என்ற கேள்வியில் தொக்கி நின்றது அவளின் மனம்.
‘பெண்கள் என்றால் ஆண்களின் இச்சையை தீர்ப்பதற்கும், பிள்ளைகளை பெற்றுப் போடுவதற்கும் மட்டுமே என்று நினைப்பதும் ஒரு பெண்தான்!’ என்னும் நிதர்சனம் புரிந்த நொடியில் அவளின் எரிச்சலும் கோபமும் பன்மடங்காக கூடிப் போனது.
‘பெண்ணை பெண்ணாக மதிப்பதற்கு, பெண்ணுக்கே கஷ்டமா இருக்கிறதா?’ என்றுதான் அவளுக்குள் அத்தனை ஆதங்கம்.
அப்படிப்பட்ட பெண்ணின் கையில் வளர்க்கப்பட்ட பிள்ளை தான் இவளின் கணவன் என்ற பார்வை அவளுக்கு வந்திருக்க, அவனின் மீதான நம்பிக்கையும் சற்று சறுக்கியது. தன் குழந்தைக்கு தான் மட்டுமே பாதுகாப்பு என்ற உண்மையும் வர்ஷினியின் மனதில் வலுக்க ஆரம்பித்தது.
‘என் பிள்ளையை, நான் பெத்து வளர்க்க யாரோ முடிவு பண்ணனுன்ற அவசியமில்ல… இவர் பிள்ளைக்காக இத்தனை பாக்கும்போது, என் புள்ளைக்காக நான் பாக்க மாட்டேனா?’
மனதிற்குள் வீம்புடன் எடுத்த முடிவில் அப்போதில் இருந்தே இந்த குழந்தை தனக்கு கண்டிப்பாக வேண்டுமென்றே உறுதியை மனதில் பதியமிட்டுக் கொள்ளத் தொடங்கினாள்.
அதே சமயத்தில் மாமியார் சொல்வது போல வருமானத்திற்கும் யோசிக்கத் தொடங்கியதில் அவளின் பசியும் மசக்கையும் மறந்திருந்தாள் என்றே சொல்லலாம். அதையும் தாண்டி எந்நேரமும் தலைசுற்றல் மயக்கத்தில் கிறுகிறுக்கத் தொடங்கியது அவளின் தேகம்.
வெயிலுக்கும் மழைக்கும் தகப்பனின் பணமென்ற குடையின் கீழ் குளிர் காய்ந்தவளுக்கு சட்டென வெளியில் சென்று வேலையை தேடிக்கொள்ளும் வேகம் வரவில்லை. அதைப் பற்றிய சிந்தனை கூட இம்மியளவும் தோன்றவில்லை. படிப்பு சான்றிதழ்கள் எல்லாம் பிறந்த வீட்டில் பத்திரமாய் இருக்க, எதை வைத்து வேலை தேடுவது? ஆன்லைனில் தேடும் அளவிற்கு வசதி வாய்ப்பு இல்லை. நேரில் சென்று வேலை கேட்பதற்கும் சர்டிபிகேட் ஜெராக்ஸ் வேண்டுமே!! விவேகமில்லாத வீம்பான முடிவில் வீரியம் இல்லவே இல்லை.
மனமெல்லாம் ஒருவித பயம் பிடித்தாட்டியது. இதுநாள் வரையில் எதைப் பற்றியும் ஒழுங்காக யோசிக்காமல் ஏனோதானோவென்று முடிவெடுத்து சொதப்பி வைப்பவள், குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் மட்டும் பலமான உறுதியோடு தான் இருந்தாள்.
அதன் காரணமே கணவனுக்கு தன் மீது உள்ளது அன்பா, ஆசையா, காதலா, காமமா என மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி அவனது ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கத் தொடங்கினாள்.
“உங்கம்மா என்ன சொல்றாங்க சேரா?”
“என்ன கேக்குற வஷி?”
“குழந்தை விஷயத்துக்கு அவ்வளவு பேசினாங்களே… அதை கேக்குறேன்!”
“அவங்க சொல்றதும் நியாயம் தானே…” என்றவனை கலவரமாகப் பார்த்தாள்.
“என்னடா இப்படி சொல்ற! அப்ப நம்ம குழந்தை?!”
“ஏய், ஏன் அதுக்குள்ள தப்பா நினைக்குற? நானும் ரொம்ப சின்சியரா யோசனை பண்ணிட்டு இருக்கேன். ஒரு வாரம் வெயிட் பண்ணு, ஒரு முடிவெடுக்குறேன்,”
”அபார்ட் எல்லாம் வேணாம்டா… கடவுள் கொடுத்த எதையும் மறுக்கக்கூடாதுன்னு எங்கம்மா சொல்வாங்க… அவங்க சொன்னதை மனசுல வச்சு தான் உன்கூட வாழனும்ன்ற முடிவுக்கே நான் வந்தேன்.
இப்ப நமக்காக, நம்மை நம்பி வந்த குழந்தையை தூக்கிப்போட்டா பாவம் இல்லையா? நமக்காக வந்த ஒரு உயிரை நாமளே கொல்லலாமா? எத்தனை பேரு குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க… வேண்டாம் சேரா… ப்ளீஸ்!!”
வார்த்தையோடு அழுகையும் வந்து விட, தன்னியல்பையும் மீறி அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் வர்ஷினி. எங்கே தன் பிள்ளை தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற நினைவே அவளின் அழுகையை அதிகமாக்கியது.
”அழாத வர்ஷி, இங்க பாரு, என்னை பாருடி!” என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன், ”வேண்டாம்டி… உனக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்… எந்த சப்போர்ட்டும் இல்லாம இருக்கோம். நமக்கு இந்த குழந்தை வேண்டாம்.
இப்போ அபார்ட் பண்ணா வெறும் ரத்தம் மட்டும் தான், கஷ்டம் தெரியாது. அது ஒருவேளை பிறந்து வளர்ந்து நம்மால சரியா பாத்துக்க முடியலைன்னா… கொழந்தைய வளக்க காசில்லாம நாம திண்டாட வேண்டி வந்தா?” என்று அவளிடம் அவனும் கெஞ்ச, அவளால் அழ மட்டுமே முடிந்தது.
“இல்லடா, என்னால பாத்துக்க முடியும். நான்… நான் சமாளிச்சுப்பேன்! நம்ம கல்யாணத்தப்ப பெரிய இவன் மாதிரி பேசினியே, அதை நம்பித்தானேடா நான் உன் கூட வாழவே ஆரம்பிச்சேன்”
“பேச்சுக்கு என்ன… எப்படின்னாலும் பேசலாம், ஆனா எதார்த்தம் பாக்கணும்ல…”
“நம்மால முடியும்டா… உன்னால முடியும், ஹோப் இல்லாம பேசாதே சேரா!”
“இல்ல, அம்மா ஒத்துக்க மாட்டேன்றாங்க… நமக்கு வேண்டாம்!” அவன் பிடிவாத முடிவில் நிற்க,
“இப்ப பிரச்சனை உங்கம்மா ஒத்துக்காதது மட்டுமா? இல்ல, உனக்கே இந்த குழந்த வந்தது பிடிக்கலையா?” அழுகை மறந்து கோபமாய் கேட்டாள்.
”வெட்டிப்பேச்சு பேசாத வர்ஷி… அம்மா ஒவ்வொன்னையும் எடுத்து சொல்லச் சொல்ல எனக்கே இப்டி ஆயிடுச்சேன்னு கடுப்பா இருக்கு. நான் ஜாக்கிரதையா இருந்துருக்கணும். அவசரப்பட்டுட்டேன். நீயாவது சொல்லியிருக்கலாம்ல…” என அவளையே குற்றவாளி ஆக்கினான் செந்தூரன்.
“இதுக்கும் மேல எதாவது பேசின அறைஞ்சுடுவேன்டா! ஓடிப் போயிரு எரும!” என்றவளும் அவனது வார்த்தைகளைக் கேட்டு அடங்காத கோபத்தில் கொந்தளித்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து, “ஹாஸ்பிடல் வந்து கன்பார்ம் பண்ணிக்கோ வர்ஷினி!” என்று கார்த்திகா அழைக்க அவளையும் நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்
“போகணும், ஆனா உன் ஹாஸ்பிடலுக்கு வரமாட்டேன். நீ ஏதாவது பண்ணி அபார்ட் பண்ணிடுவ… நான் தனியா போயிக்கறேன்!” என்று மென்று முழுங்கிப் பேசியதில் வர்ஷினியின் தடுமாற்றமும் பயமும் தான் தெரிந்தது.
“அடிப்பாவி! ஏண்டி என்னை கொலைகாரி ரேஞ்சுக்கு பாக்குற?” என்று கார்த்திகாவும் சண்டைக்கு கிளம்பியதில் மணிமாறன் தான் தடுத்து நிறுத்தினார்.
“கார்த்தி, நீயே அவளை புரிஞ்சுக்காம பதிலுக்கு பதில் பேசினா என்ன அர்த்தம்? அவ போக்குல விடு!” என்று மருமகளின் முகம் பார்த்தவர்,
“உன் முடிவுல உறுதியா இருக்கறது முக்கியமில்ல, அதுக்கான தெளிவும் பலமும் உனக்கு இருக்கணும் வர்ஷிமா… ரெண்டு நாளா நீ சரியா சாப்பிடுறதே இல்ல… மொதல்ல சாப்பிடு, அப்புறம் தெளிவா யோசிக்கலாம்!” அன்பாகப் சொன்னார்.
“இல்ல அங்கிள், எனக்கு இந்த பேபி வேணும்” என்று பிடிவாதத்துடன் அவளால் அழ மட்டுமே முடிந்தது.
“சரி, உன் முடிவுக்கு யாரும் தடை சொல்லாம நான் பாத்துக்கறேன்! ஆனா பொறக்கப் போற குழந்தைக்கு போஷாக்கு கொடுக்கணும் இல்லையா? மொதல்ல சாப்பிடும்மா!” என்று வற்புறுத்தி அவளை சாப்பிட வைத்தார்.
இரண்டு நாட்களுக்கு பிறகான ஆகாரத்தை அவளின் உடலும் கருவும் சட்டென்று ஏற்றுக் கொள்ளாமல் வெளியில் தள்ள, வாந்தியாக எடுத்து வைத்து அந்த இடத்திலேயே மயங்கிப் போனாள்.
“இந்த எழவுக்கு தான் வேணாம்னு நான் சொல்றேன். இவளை எல்லாம் பாக்கனும்னு எனக்கென்ன தலையெழுத்தா?”
வெறுப்பைக் கொட்டிய பவானி, மருமகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மணிமாறன் தான் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கே அவளை ரத்த பரிசோதனைக்கு அனுப்பிய மருத்துவர் மணிமாறனிடம், “உங்க மருமக ரொம்ப வீக்கா இருக்காங்க… மனசுல நிறைய குழப்பத்தோட இருக்காங்கனு நினைக்கிறேன். அவங்களுக்கு சப்போர்ட்டா பேசுங்க, முடிஞ்ச அளவுக்கு தைரியம் குடுங்க! இப்படியே இருந்தா குழந்தை தங்காது. ரொம்பவே பத்திரமா இருக்கணும். கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்ல இருக்கறது பெட்டர்!” என்று சொல்லியே அனுப்பி வைத்தார்.
மருத்துவர் கூறிய அறிவுரைகளை மணிமாறன் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை. குறைந்த பட்சம் வர்ஷினியிடம் சொல்லி இருந்தாலாவது தன்னைத்தானே அவள் பார்த்துக் கொண்டிருப்பாள்.
ஏதோதோ பேசி பவானியின் முடிவை மாற்றி விட்டார் மணிமாறன். அம்மா அமைதியாகிப் போனதால் மகனின் சத்தமும் குறைந்து போனது.
“எப்படியோ சாதிச்சுட்டடி கள்ளி!” என்று மனைவியை மீண்டும் கொஞ்சத் தொடங்கி விட்டான் செந்தூரன்
“போடா முட்டாள்… யார் என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டி வைக்குற!” என்று அவள் வெறுப்பை உமிழ அசால்ட்டாக துடைத்துக் கொண்டான்
“விடு வர்ஷி! நான் என்ன பத்து புள்ளை பெத்து வாழ்ந்து பாத்தவனா, எல்லாத்துக்கும் உக்காந்து யோசிக்க? அம்மா சொன்னா கேட்டுக்கறேன். இப்ப நீயும் உன் முடிவு இதுதான்னு சொல்லிட்ட, நானும் சரின்னு மனசு மாத்திக்கலையா! நமக்கு குழந்த வரப்போகுது, அதைக் கொண்டாடுவோம்!” என்றதோடு பேச்சை முடிக்க, கணவனின் தெளிவான பேச்சில் தனது முடிவில் திடமாகிப் போனாள் வர்ஷினி.
“இனிமே அபார்ஷன் அதுஇதுன்னு பேச மாட்டியே?”
“ம்ஹீம்… இனிமே என் யோசனை எல்லாம் நம்ம செல்லக்குட்டி பத்திதான்…”
“ஆஹான், அப்ப என்னைப் பத்தி யோசிக்க மாட்டீங்களா சார்?”
“ஐடியா குடுக்கப் போறதே நீதானேடி… கேக்குறா பாரு கேள்விய?” சிரிப்போடு மனைவியை அணைத்துக் கொண்டான்.
கணவனின் ஆதரவு என்றும் தன்பக்கம் தான் என்ற பூரிப்பில் முன்னை விட அதிகமாய் அவனிடம் அன்பு காட்டத் தொடங்கினாள்.
பவானியின் தொலைநோக்கு சிந்தனைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் நாட்கள் நகர ஆரம்பிக்க, செந்தூரனும் அம்மாவிடம் பேசுவதை வெகுவாகக் குறைத்திருந்தான்.
அவனது ஒதுக்கத்தைப் பார்த்து, ‘வரப்போகும் பிள்ளைக்காக, ரெண்டு மாதத்திற்கு முன்னால் வந்த மனைவிக்காக, என்னை தவிர்க்கிறான்’ என பெற்றவளாக தாயின் மனம் பரிதவிக்க ஆரம்பித்தது.
ஒரு வாரம் அமைதியாகக் கழிய, வார இறுதியில் செந்தூரன் அவளை நெருங்கியிருந்தான். ஏனோ இந்த முறை குழந்தைக்கான பேச்சை எடுக்காமல் அமைதியாகத் தான் அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
ஆனாலும் பவானியின் பேச்சு நிழலாக நின்று மனதிற்குள் ஏனோ இந்த முறை அவனுடன் சேருவதற்கு வலித்தது. தன்னை மனைவியாக பார்க்கிறானா அல்லது இச்சைக்கு மட்டும் தேடுகிறானா என்று தான் பெண்மனம் ஆராய்ந்தது.
எப்போதும் ரசித்து அவன் ஆசைக்கு கிறங்குபவள் இன்று அந்த சூழ்நிலையையே வெறுத்தாள். அதற்கெல்லாம் மேலாக அன்றிரவு செந்தூரன் பேசிய விதத்தில் அவள் கொதித்துப் போயிருந்தாள்.
”நீ சும்மாவே குண்டு மாம்பழமா இருக்க… குழந்தை பொறந்தா இன்னும் வெயிட் போட்ருவியா? அப்போ பாக்க எப்படி இருப்ப? உன்னைப் பாத்து பயந்து ஒடுற அளவுக்கு வெயிட் போட்டுடாதேடி, எனக்கு பிடிக்காது.” என சிரித்தவன்,
“தொப்பை வைக்காம பாத்துக்கோ, குளோசா கட்டிப் பிடிக்க முடியாது, அப்புறம்…” என அந்தரங்கமாய் சில வார்த்தைகளை மூச்சு வாங்கிக்கொண்டே சொல்ல, அவனை அமைதியாக முறைத்தாள்.
‘இத்தன ரசனை பாக்குறவன், இப்ப மட்டும் எதுக்கு வந்த? எந்திரிச்சி போடா…’ என தள்ளிவிடத் தோன்றியது.
ஆனால் அதற்கு மாறாக வர்ஷினியின் கைகள் அவன் முதுகை இறுக்கமாய் கட்டியணைத்துக் கொண்டது. அது கணவனின் மீதுள்ள கோபத்தாலா, ஆசையாலா என்பது அவளுக்குதான் வெளிச்சம்
“மூச்சு முட்டுது வஷி, கையை எடு!!” என்றவனை முன்னைப் போலவே முறைத்தாள்.
உண்மையில் அவள் கோபமாக முறைக்கிறாள் என்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. எப்போதும் போல விளையாட்டாய் அவனை முறைக்கிறாள் என்றே நினைத்துக் கொண்டான்.
கூடல் முடிந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு படுக்கைக்கு வந்தவனிடம், “நான் குண்டாயிட்டா என்னை தேட மாட்டியா சேரா?” அர்த்தமற்ற கேள்வியை கேட்க,
“பக்கத்துல வந்து நின்னா, தன்னால ஆசை வரணும். இல்லன்னா கஷ்டம் தானே!” அவனும் பதிலை மழுப்பி இருக்க, அவள் மொத்தமாக உடைந்து போய்விட்டாள்.
‘உடல் இச்சைக்கு மட்டுமே, இவன் என்னைத் தேடுகிறான்’ என்ற முடிவிற்கே வந்திருந்தாள்.
அந்த நொடியே காதல், பாசம், அக்கறை போன்ற மேற்பூச்செல்லாம் காணமால் பொய், அவன்மேல் இருந்த நல்லெண்ணம் மொத்தமாய் சரிந்து விழத் தொடங்கியது.





Supper