arrow_back
ஆலங்காய் வெண்ணிலவே அத்தியாயம்-5
ஆலங்காய் வெண்ணிலவே chevron_right பகுதி 5 / 6

அத்தியாயம்-5

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

வெண்ணிலவு-5

பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறிய சிறிய கிராமங்களில் உள்ள கடை, மார்க்கெட் சந்தைப் பகுதிகளில் வாரம் மற்றும் தினசரி தவணை வசூலிக்கும் வேலை செந்தூரனுக்கு… காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வசூல் செய்து கொண்டு வருவான்.

காலை ஏழுமணிக்கே ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தொடங்கும் அவனது தினசரி வசூல் வேட்டை, மதியத்திற்கு மேல் அவனது ஊரில் தொடர்ந்து, மாலை தொட்டு இரவு வரை பழனி கோவிலின் நான்கு ரத வீதிகளில் முடிவடையும்.  

சிறுசிறு தொகைதான் என்றாலும், இவன் வேலை பார்க்கும் கம்பெனியின் ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிக்கே டஃப் கொடுக்கும். இவனது நேர்மைக்கு விலை வைத்து, ஐம்பதாயிரம் டெபாசிட் வாங்கிக் கொண்டுதான் இவனை வேலைக்கு சேர்த்துக் கொண்டனர்.

அந்தப் பணத்தை மணிமாறன் தனது சொந்த சேமிப்பில் இருந்து எடுத்துக் கொடுத்ததால் பவானிக்கு பெரும் மனமுடை. பெண்ணின் திருமணச் சேமிப்பு கரைந்து போயிற்றே என்று…

அன்றிலிருந்தே வீட்டில், குடும்ப நிர்வாகத்தில் பெரும் பிசுனாரித்தனத்தை அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த பழக்கம்தான், இன்றைக்கு உச்சாணிக் கொம்பில் ஏறி குடமுழுக்கு காணுகின்றது, அவ்வளவே..!!

தற்சமயம் தங்கியிருக்கும் சொந்த வீட்டினை அடமானம் வைத்து மகளின் திருமணத்தை நடத்திக் கொள்ளலாமென்று மணிமாறன் சொன்னாலும் கேட்டுக் கொள்வதில்லை.

‘இந்த வீடு, நம் காலத்திற்கு பிறகு மகனுக்கு சேர வேண்டிய சொத்து. அதில் கை வைக்க விடமாட்டேன்!’ என்ற வீம்பான முடிவில் நிற்கும் பிடிவாதப் பெண்மணி.

மகளுக்கு ஊர் மெச்ச திருமணம் நடத்தி, அழகு பார்க்க கொள்ளை ஆசை, அதன் பொருட்டு மகனுக்கும் கடன்சுமை, கஷ்டம் சேர்ந்திடக்கூடாது என்கிற கண்மூடித்தனமான அன்பில், தொலைநோக்கு யோசனையில் எல்லோரையும் வதைத்துக் கொண்டிருக்கிறார் என்றேதான் சொல்ல வேண்டும்.

காலையில் பாலில்லா கடுங்காபியில் ஆரம்பிக்கும் அவரது சிக்கனம், பந்திக்கு முந்தினால் மட்டுமே வயிறும் நிறையும் என்கிற எழுதப்படாத விதியில் வந்து நிற்கின்றது.

இன்றைக்கும் மருமகள் வர்ஷினியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டியில் இருக்கும் மாவை வழித்து மகனுக்கு தோசை சுட்டுக் கொடுத்து காலி செய்ததில் அறிந்து கொள்ளலாம். இவர் இப்படித்தான்!!

***

மதியம் மோர் சாதத்தை கரைத்து குடித்துக் கொண்டிருந்த செந்தூரன், அருகிலிருந்த ஊறுகாயை நக்கிப் பார்த்தே முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டான்.

“அய்ய… என்ன ஊறுகா ம்மா இது? வாயில வைக்கவே விளங்கல, வ்வேக்…” முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டவனின் மனம், முன்தினம் மனைவி போட்ட மாங்காய் ஊறுகாயை, அவளின் விரல் தொட்டே ருசி பார்த்ததை நினைத்து சிலிர்த்துக் கொண்டது .

அந்த நொடியே மனம், ‘என் வஷி போட்டது மாதிரி வருமா!’ என்று மனைவியை மெச்சி பின்பாட்டு பாட, ‘இதை அப்படியே வெளியே சொன்னா ஆப்பு ஆன் தி வே ராசா!’ மனசாட்சி எச்சரித்தது.

“ஏண்டா, முந்தா நேத்து நீ கொண்டு வந்து கொடுத்த காயில போட்டது தான் இது!” என்றார் பவானி.

“நானா?”

“ஆமாடா, இருபது ரூபாய்க்கு பதினைஞ்சு பழம் வாங்குனேன்னு பெருமையா சொன்னியே?” பவானி படம் போட்டு விளக்கவும், செந்தூரனின் தலையில், ‘ஆஹா’ என்று தேள் கொட்டியது.

மண்டைக்குள் கொசுவர்த்தி சுழன்றதில், “உச்சந்தலை சூடு தாங்க முடியல, சர்பத் போட்டு குடிக்க,ரெண்டு பழம் குடுக்கா!” இரண்டு நாட்களுக்கு முன்பான  மார்க்கெட் பேச்சு நினைவிற்கு வந்தது.

“பத்து ரூவா வச்சுட்டு பழத்தை எடுத்துக்கோ!” வியாபாரம் செய்யும் பெண்மணி கறாராகப் பேச,

“உன் வீட்டு புள்ளகிட்டயே காசு கேப்பியாக்கா? உன் கடனை முடிச்சு விடுறதுக்கு தானே டெயிலியும் நான் வசூலுக்கு வர்றேன்!” வராத பாசமழையை கொட்டி உச்சு கொட்டினான் செந்தூரன்.

“என்கிட்டே வட்டி வாங்கறவன், உனக்கு சம்பளம் கொடுத்து வசூலுக்கு அனுப்பி வைக்குறான், நீ எனக்காக வாரேனு உருகுறியாக்கும்! சும்மா கதை விடாத…”

“என்னக்கா இப்படி சொல்லிட்ட? நாம என்ன அப்பிடியா  பழகிட்டு இருக்கோம்!”

“ம்க்கும், அடிக்கடி நெஞ்சை நக்காதடா… இந்தா, இடத்தை காலி பண்ணு!” என்று நான்கு பழத்தை அவன் கையில் வேண்டா வெறுப்பாய் திணித்து விட்டு, “பணத்தோட பழத்தையும் வசூல் பண்ணிக்கிறான் பாவி!’ என பொல்லாத வசவையும் அந்த பெண்ணிடம் வசூல் செய்தது நினைவிற்கு வந்தது.

இப்படியாக பலரிடம் பலவிதமாய் தாஜா செய்து பதினைந்து பழத்தை கொண்டு வந்து அம்மாவிடம் தந்திருந்தான். நான்கு பேரிடம் நல்லபேர் வாங்கவில்லை என்றாலும், வாய் நிறைய திட்டு வாங்கி தன் தேவையை நிறைத்துக் கொள்வதில் செந்தூரன் ரோசமே பார்ப்பதில்லை.

“சொரணை கெட்ட பய… எவ்வளவு வைஞ்ஜாலும்(திட்டு) சிரிச்சுகிட்டே ஓசி வாங்கிட்டு போறான்!” நாலுபேர் நாலுவிதமாக மெச்சிப் பேசி, வாங்கி வந்த பழத்தில் போட்ட ஊறுகாய் தான் அவனுக்கு கசந்து போனது.

‘இருவது ரூவாவ ஆட்டைய போட என்னென்ன கிறுக்குத்தனம் பண்ண வேண்டியிருக்கு!’ என நொந்து போன மனதை, அதே மிச்சம் பிடித்த இருபது ரூபாயில் பில்டர் சிகரெட் வாங்கி புகைவிட்டு ஆற்றிக் கொள்வான். கொசுறாக வாசனை பாக்கையும் போட்டு மென்று துப்பி விடுவான்.

‘சிகரெட் பிடிக்கிறத கெட்ட பழக்கம்னு கதை கட்டி விட்டவனை எல்லாம் சுட்டுப் பொசுக்கனும். வயசான கெழடுங்க தான் இப்படின்னா, பொண்டாட்டியும் பக்கத்துல சேத்துக்க மாட்டேன்றா!’ ஆதங்கப்பட்டவனின் கை, முன்தினம் மனைவியிடம் பட்டென அறை வாங்கிய கன்னத்தை தடவிக் கொடுத்தது.

‘பாவி, பாவம் பாக்காம அறஞ்சுட்டா… சிங்கிள் கிஸ்சுக்கு கூட வழியில்லாம தரையில புரண்டு படுக்க வேண்டியதா போச்சு…’ செந்தூரனின் இருபது ரூபாய் கள்ளக்கணக்கின் கதை சுவாரஸ்யம் பாதி, நிராசை மீதியாக நினைவிற்கு வந்தது.

“சரி, சரி நீட்டி முழக்காதம்மா! வாயில வைக்க முடியல, எதையாவது செஞ்சு சரி பண்ணு!” என்று ஊறுகாய் ஜாடியை தள்ளி விட்டான்.

“எகத்தாளம் தான்டாஉனக்கு! அவ்ளோ கசப்பாவா இருக்கு?” கேட்ட பவானியும் ஊறுகாயை எடுத்து ருசி பார்த்து, “கொஞ்சம் கசப்பு தான், ஆனா நீ முகம் சுளிக்கிற அளவுக்கு இல்ல, ரொம்ப மூஞ்சை தூக்காதே!” என்று முகம் கோணிக் கொண்டார்.

“எப்பதான் நான் சொல்றத சரின்னு சொல்லிருக்க நீ?” என்றவன் ஏதோ ஞபகம் வந்தவனாய், “ஏம்மா, வர்ஷி சாப்பிட்டாளா?” வேகமாகக் கேட்டான். தந்தை பேச்சை கடைபிடிக்கிறானாம், மெச்சிக் கொள்ள வேண்டியது தான்!

“அவ ஏன் கீழே வரப்போறா? அதான் உங்கப்பா ரெண்டு வேள சாப்பாட்டையும் அவ கையில திணிச்சிட்டு போயிடுறாரே… கேட்டா மட்டும் இல்லன்னு சத்தியம் பண்ணாத குறையா சாதிப்பாரு!”

“என்னம்மா சொல்ற?”

“ஒன்னுந் தெரியாத மாதிரியே, என்னன்னு என்கிட்டயே கேக்குற பார்த்தியா, உன்னையெல்லாம் எதைக் கொண்டு சாத்த?”

“அதையெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். அப்பா எதாவது சொன்னாராம்மா?” வேகமாக அடுத்த கேள்விக்கு தாவினான்.

“என்ன சொல்லணும்?”

“இல்ல, வர்ஷிக்கு உடம்பு சரியில்ல, அடிக்கடி வாமிட் பண்றா, டல்லா இருக்கா!”

“ம்ம், சொன்னாரு, சொன்னாரு! அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நீ இதைப்பத்தி யோசிக்காதே! பேசிட்டே இருக்காம கலெக்சனுக்கு கெளம்பு!” தாய் சொன்னதில்,

‘அம்மாவே வர்ஷினிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு, அது போதும், கவலை விட்டுச்சு!” என நெஞ்சளவு நிம்மதியடைந்து வேலைக்கு கிளம்பினான் செந்தூரன்.

***

அன்றைக்கு இரவு வீட்டிற்கு வந்த கார்த்திகா சிறிய அளவிலான பவுச் ஒன்றை வர்ஷினியின் கையில் திணித்து, “போயி செக் பண்ணிட்டு வா!” என்றாள்.

“என்னடி இது?” என்ற வர்ஷினியும் அந்த கவரைப் பார்க்காமல் கேட்க,

“ம்ம், கொழந்த வெளையாடுற செப்பு சாமான்! கேக்குறா பாரு கேள்விய… படிச்சவ தானேடி நீ? போ, போயி செக் பண்ணி சொல்லு!” என வள்ளென்று எரிந்து விழுந்தாள் கார்த்திகா.

“இப்படி குலைக்குற நேரத்துக்கு என்னனு சொல்லியிருக்கலாம்.” பதிலடி கொடுத்த வர்ஷினிக்கும் கையில் இருப்பது என்னவென்று புரிந்து போனது.

மெதுவாய் அனுசரணையாய் விசாரிக்க வேண்டியதை, மதியமே பவானி அதட்டி உருட்டி கேட்ட நிமிடத்திலிருந்து வர்ஷினியின் மனதிற்குள்ளும் சிறுசிறு சந்தோஷத் தூறல்கள் பூமழையாய் பொழிய ஆரம்பித்திருந்தன.  

ஏனோதானோவென்று இலக்கில்லாமல் செல்லும் திருமண வாழ்க்கையில் இனிமேல் ஒரு பிடிப்பு எற்பட்டு விடுமென்று கனவும் காணத் தொடங்கியிருந்தாள்.

இரவு செந்தூரன் வந்ததும் இதைப் பற்றி சொல்லலாம் என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்த வேளையில், நாத்தனார் கையில் கொடுத்ததை சற்றும் கவனிக்காமல் விட்டிருந்தாள்.

கைவசம் மொபைல் இருந்திருந்தால் அந்த நிமிடமே செய்தியை செந்தூரனிடம் சொல்லி சந்தோஷித்திருப்பாள். வீட்டில் இருப்பதோ அரதப் பழசான பட்டன் செல்போன். அதையும் பவானி அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்.

மொபைல் ரீசார்ஜ் போன்ற அதிகப்படியான செலவுகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்று அதை பழகிக் கொள்வதைக் கூட தவிர்த்திருந்தார் பவானி.

அப்பேற்பட்ட மொபைல்போனை அடுத்தவர் தொட்டுப் பார்க்க விடுவாரோ!! ஆக வர்ஷினியின் ஆசை எப்போதும் போல கானல் நீராகி கரைந்தே தான் போனது.

வர்ஷினியின் ஆசைக்கு மோசம் செய்யாமல் கர்ப்பத்தின் உறுதியை அழுத்தமான இரண்டு கோடுகளைக் காட்டிச் சொல்லியது கார்த்திகா கொடுத்த பிரக்னேன்சி கிட்… மசக்கைக்காரியின் உள்ளமும் பூரித்து குலுங்கியது.

“தேங்க்ஸ்டி கார்த்தி, நீ அத்தையாகப் போற!” என்றாள் முகம் மலர்ந்து.

“சுத்த மூளை செத்தவளா இருக்கியேடி! இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் மொத மொதல்ல புருசன்கிட்ட சொல்லி சந்தோசப்படனும். நான் அத்தையாகி எனக்கென்ன கிடைக்கப் போகுது?” கார்த்திகாவின் பதிலில் சப்பென்று அறை வாங்கியதைப் போல உணர்ந்தாள் வர்ஷினி.

“இன்னும் அழுத்தமா கொட்டு வச்சு சொல்லு கார்த்தி… உன் அண்ணன் கொண்டு வர்ற சம்பளமே இவங்க ரெண்டு பேரு வயித்தை ரொப்பிக்க காணாது. இதுல இன்னொரு ஆளா? அதுவும் கொழந்தைன்னா சும்மாவா! எவ்வளவு செலவிருக்கு? எவ்வளவு பத்திரமா பக்குவமா பாத்துக்கணும்!

இதுக்கெல்லாம் இவ அப்பன்கிட்ட கேக்க முடியுமா? இல்ல இவ ஆத்தா தான் வந்து மகளை தாங்கிக்கப் போறாளா? அப்படியும் இல்லன்னா, இவதான் அங்கே இருந்து வாங்கிட்டு வரப் போறாளா? ஏற்கனவே தண்ணி தெளிச்சு விட்ட கதையா தான், அவங்க இந்த பக்கம் எட்டிப் பாக்காம இருக்காங்க!”

பாரபட்சம் இல்லாமல் மருமகளை நோகடித்தார் பவானி. அதைக் கேட்ட வர்ஷினிக்கு கை கால்கள் உதற ஆரம்பித்தன.

‘கர்ப்ப பரிசோதனைக்கே இத்தனை எதிர்ப்பா? இவர்களை சகித்துக்கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்ள முடியுமா?’ என அங்கலாய்த்தது பெண்மனம்.

இனிப்பு கொடுத்து கொண்டாடிக் கொள்ள வேண்டாம். சந்தோசம் எனச் சொல்லி புன்னகையை உதிர்ப்பதற்கும் பஞ்சமாகிப் போனதா இந்த பெண்களுக்கு…

“என்ன அத்தை சொல்றீங்க? உங்களுக்கு பேரக் கொழந்தை வர்றதுல சந்தோசம் இல்லையா?” மென்று முழுங்கிய குரலில் மெதுவாகக் கேட்டாள் வர்ஷினி.

“எம் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சதுலயே எனக்கு சம்மதம் இல்லை. இதுல பேரக்கொழந்தய தூக்கிக் கொஞ்சுறதுக்கு மட்டும் எனக்கு ஆசை முளைச்சிடுமா? நீயே இங்கே ஒசி டிக்கெட் கணக்குல தான் சோறு சாப்பிட்டுட்டு இருக்க… உன்னோட சேர்த்து இன்னொரு ஆளும் வரதுன்னா எப்படி ஏத்துக்க முடியும்?

எம்புள்ள கை நெறைய சம்பாதிச்சு கொண்டு வந்து கொடுத்தா நான் ஏன்டிம்மா இத்தன சொல்லப் போறேன்? ஒழுங்கான வருமானத்துக்கு வழிய பாரு… அப்புறம் புள்ள, குட்டின்னு கனவு காணலாம்” பொருமித் தள்ளி விட்டார் பவானி.

பாவம் பார்க்காமல் அனலைக் கக்கிய வார்த்தைகள் என்றாலும் மாமியாரின் பேச்சில் நிதர்சனம் இருப்பதை உணர்ந்தாள் வர்ஷினி. மனம் முழுவதும் பெருத்த ஏமாற்றம்.

‘யாரும் தனக்காக இல்லை, தன்னை ஒரு மனுஷியாகக் கூட பார்க்கவில்லை’ என்கிற ஆற்றாமை மட்டுமே உள்ளுக்குள் பரவி பெரும் வலியைக் கொடுத்தது.

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” கடப்பாறையை முழுங்கியவளாக மீண்டும் கேட்டாள் வர்ஷினி.

“என்னத்த சொல்லச் சொல்ற? எனக்கு இஷ்டமில்ல… மீறி நீ புள்ள பெத்துக்கனும்னா அதுக்கேத்த வருமானத்தை வீட்டுல கொடுக்கப் பாரு!” பவானி கறாராய் கூற,

“அதெப்படிம்மா முடியும்? இப்பவே இவ மசக்கையில வாமிட் பண்றான்னு சொல்ற… இதுல இவ எப்படி வேலைக்கு போயி, சம்பாத்தியம் பண்ணி வீட்டுக்கு காசு குடுக்கப் போறா?” ஏளனச் சிரிப்புடன் குத்திக் காண்பித்தாள் கார்த்திகா.

“டூ மச்சா பேசாதே கார்த்தி!” வர்ஷினி முறைக்க,

“என்னடி டூ மச், என்னை மாதிரி நீ வேலைக்கு போற ஆளா? உன் வேலைய பாத்துக்க கூட துப்பில்லாத சுத்த சோம்பேறி நீ! உண்மைய சொன்னா ரோஷம் வருதா உனக்கு?” என பகபகவென்று சிரித்தாள் கார்த்திகா.  

“எல்லா நேரமும் என்னை மட்டம் தட்டி பேசனும்னே யோசிப்பியா கார்த்தி? உனக்கு ஏண்டி இந்த சின்னபுத்தி?” வர்ஷினி சட்டென மூண்ட கோபத்தில் வெடிக்க,

“நான் எப்பவும் இப்படித்தான் பேசுறேன்னு தெரியுதுல்ல, பின்ன என்ன புதுசா ரோஷம் பொத்துக்கிட்டு வருது உனக்கு? என்கூட சண்டை போடுறதை விட்டுட்டு, அடுத்து என்ன பண்றதுன்னு யோசி, போ!

ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ வர்ஷினி! நீயா துணிஞ்சு தெளிவான முடிவெடுத்தா தான் உண்டு. என் அண்ணனை எந்த காலத்துலயும் நம்பிடாதே! அவன் ஒண்ணத்துக்கும் வெளங்க மாட்டான். என்ன சொன்னாலும் அம்மா, ஆட்டுக்குட்டினு பெத்தவ முந்தானைய பிடிச்சுகிட்டே தான் வந்து நிப்பான்!” கார்த்திகாவின் ஏளனப் பார்வையும் இகழ்ச்சிப் பேச்சும் தடையின்றி வெளியில் வந்தது.  

“எல்லா நேரமும் அம்மாவை தேடுறது அவ்வளவு பெரிய தப்பா? உன் அம்மாவை தான் நீ பேசிட்டு இருக்க, அந்த நெனைப்பு இருக்கா உனக்கு?” வர்ஷினியும் பதிலாகக் கேட்க,

“ஏன் இல்லாம… அவங்களும் தானே கேட்டுட்டு இருக்காங்க! புள்ளையோட லட்சணம் அம்மாவுக்கே தெரியும்.” என்று உதட்டை சுளித்தாள் கார்த்திகா.

“அப்படி இருக்கறவன் தான், கம்பெனி பணத்தை ஆட்டைய போட்டு பிரெண்ட்ஸ் கூட ரம்மி விளையாண்டதை அம்மாட்ட சொல்லாம மூடி மறைச்சிருந்தானோ!”

வர்ஷினியின் நாசூக்கான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போயினர் அம்மாவும் மகளும்! அதற்கு மேல் யாரோடும் பேசப் பிடிக்காமல் வழக்கம் போல அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள் வர்ஷினி.

அவளின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழம்பித் தவித்தது. இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பதென்றே அவளுக்கு தெரியவில்லை. கிறுக்கு பிடித்த நிலைதான்!

அம்மாவிடம் விஷயத்தை சொல்லி யோசனை கேட்கலாம் என்றால் கையில் மொபைல் வேறு இல்லை. தகவல் பரிமாற்றம் மிகமிக எளிதான இந்தக் காலத்தில் அந்த வசதிக்கே வாய்ப்பு இல்லாத, இப்படியான பற்றாக்குறை வாழ்க்கை பெரும் சலிப்பை தந்தது.

‘பிறந்த வீட்டுப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன்’ என்று தந்தையிடம் ரோசப்பட்டு பேசி, இங்கே வாழ வந்தாயிற்று. அந்த சம்பவங்களை எல்லாம் நினைத்தால் அவளுக்கே அவளை பிடிக்காது.

“மொதல்ல ஒரு மொபைலாவது வாங்கச் சொல்லணும். இந்த அம்மாவும் தான், இங்கே வந்து பொண்ணை எட்டிப் பாத்து, அவளுக்கு வேண்டியதை வாங்கித் தந்தா என்னவாம்? புருஷன் பேச்சை அப்படியே கேக்குறாங்களாம்!

அப்படியே பெருமையா கௌரவமா ஒதுங்கியே இருக்கட்டும். இவங்க இந்த லட்சணத்துல இருந்தா, யாரா இருந்தாலும் பேசத்தான் செய்வாங்க!” என புலம்பித் தீர்த்தாள்.

மனம் கணவனின் வரவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கியது. வலுவான வருமானத்தை அமைதியான எதிர்காலத்தை  எப்பாடுபட்டாவது கட்டமைத்துக் கொள்ள வேண்டுமென பல சிந்தனைகளில் மனம் உழன்றி தவித்தது,

இரவு பத்துமணிக்கு மேல் உணவை முடித்துக் கொண்டே வந்தான் செந்தூரன். எப்போதும் போல, ‘மனைவி சாப்பிட்டாளா?’ என்று யோசிக்கவில்லை. அறிவுரையை கேட்டு நடப்பதெல்லாம் ஒன் டைம் ஓடிபி(otp) போலத்தான்! அறைக்குள் நுழைந்ததும் நொடியும் இடைவெளி கொடுக்காமல் கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.

“என் அம்முக்குட்டி, என் வசிக்குட்டி, என் செல்லம் சந்தோஷமா இருக்குடி!” என கொஞ்சியே மனைவியை மூச்சு முட்ட வைத்தான்.

“போதும் சேரா… விடு, என்னை!” என்றவள் அவனை விட்டு தள்ளி நின்றாள்.

“அம்மா சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசம்டி!”

“என்ன சொன்னாங்க?”

“நமக்கு பாப்பா வரப்போகுதுன்னு சொன்னாங்க! அதைக் கேட்டதுல இருந்து எனக்கு அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருக்கு.” என்றதும் வர்ஷினிக்கு சப்பென்று ஆகிப்போனது.

அமைதியாய் ஆசையாய் அவனிடத்தில் சொல்ல வேண்டுமென ஆர்வத்துடன் காத்திருந்தாள். அந்த ஆசையிலும் மண் விழுந்தாயிற்று!

‘இந்த சின்ன சந்தோசத்த அனுபவிக்க கூட இந்த வீட்டுல கொடுப்பினை இல்ல… கார்த்தி சொன்னதும் சரிதான்! இப்படிதான் காலம் முழுக்க இருக்க வேண்டி வருமோ? லைஃப் ஃபுல்லா நான் இவனுக்கு ரெண்டாம் பட்சம் தானா!’ சட்டென பின்னடைந்த மனதை முயன்று சமன்படுத்திக் கொண்டாள். 

“அத்தை, அது மட்டும் தான் சொன்னாங்களா?” என இவள் மெதுவாக கேட்க,

“ஏன், வேற என்ன இருக்கு?” என்றான் குழப்பமாக!

“இல்ல, குழந்தை வந்தா செலவு அதுஇதுன்னு என்கிட்ட பேசினாங்க! அதை உன்கிட்ட சொல்லலையா?” என தாழ்ந்த குரலில் கேட்டாள்.

அவளும் தானே இத்தனை நேரமாக அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையின் வரவை சந்தோசமாக கொண்டாடாமல் அதற்கான வரவு செலவுகளை பற்றி யோசிக்கும் மனதை நினைக்கவே கூசிப்போனது

‘ச்சே… என்ன கண்றாவியான மனசு இது? இப்படி எங்கம்மா, என்னை நினைச்சிருந்தா நான் இந்த உலகத்துக்கு வந்திருப்பேனா? பொறக்கப் போற குழந்தைய பத்தி நல்லவிதமா யோசிக்காம, அதுக்கு ஆகப்போற செலவுக்கணக்கை நினைச்சு பாக்கற நான் சுத்த சுயநலவாதி தான்!

இந்த கும்பல் என்னை இப்படித்தான் மாத்தி வச்சுடுச்சு, எல்லாம் இவனோட வாழ்ந்த ரெண்டு மாச சகவாச தோஷம்!’ என தன்னைத்தானே பழித்துக் கொண்டாள்.

“என்ன யோசனை வர்ஷி? நீயா ஏதோ கேட்ட, அப்புறம் அமைதியாகிட்ட… என்னதான் ஓடுது இந்த மண்டைக்குள்ள?” என அவளின் தலையைப் பிடித்து செல்லமாய் ஆட்டினான்.

“உனக்கு புரியலையா சேரா? இந்த குழந்தைக்கான வருமானத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு குழந்தை பெத்துக்க சொல்றாங்க உங்கம்மா… அதுதான் சரின்னு கார்த்தியும் சொல்றா! என்ன மாதிரி மெண்டாலிட்டி இது? எனக்கு சுத்தமா பிடிக்கல!” வர்ஷினி கண்ணீரோடு சொல்லி முடிக்க செந்தூரனின் முகமும் கோபத்தில் சிவக்கத் தொடங்கியது.  

“அப்படியா பேசுறாங்க? இரு, என்னன்னு கேட்டுட்டு வர்றேன்! இந்த கார்த்திக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? வாயை வைச்சுட்டு சும்மா இருக்க மாட்டாளா அவ!” கோபத்தில் பேசியபடியே வேகமாக படியிறங்கி கீழே சென்றான்.

அப்போது தான் அப்பா, அம்மா, தங்கை என மூவரும் விளக்கணைத்து தலை சாயத் தொடங்கியிருந்த நேரம், கொதிப்புடன் வந்து நின்றான் செந்தூரன், அவன் பின்னோடு வர்ஷினியும்!

“சட்டுன்னு பேசிடாதே டா!” என சொல்லிக்கொண்டே கீழிறங்கியவளுக்கும், தனக்காக கணவன் கேள்வி கேட்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறுகிறது என்ற சின்ன சந்தோஷம். 

“வர்ஷிகிட்ட என்னம்மா கேட்டீங்க?” பவானியிடம் படபடத்தவன்,

“ஏய் கார்த்தி, தேவையில்லாம நீ ஏன் எங்க விசயத்துல மூக்கை நுழைக்குற? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை!” என தங்கையிடமும் காய்ந்தான்.

“என்னடா சொல்ற?” பவானி புரியாமல் கேட்க,

“ம்ம், உன் மருமக மந்திரிச்சு விட்ருக்காம்மா… அதான் தாம்தூம்னு இங்கே வந்து குதிக்கிறான்!” கார்த்தி நொடித்துப் பேச,

“தெளிவா சொல்லேன்டி!” பவானி அலுத்துக்கொள்ள,

“குழந்தையோட செலவுக்கு என்ன பண்ணப் போறனு நாம கேட்டோம்ல… அதுக்கு பதில் சொல்லத்தான் துரை வந்து நிக்கிறாரு!” கார்த்தி எகத்தாளமாய் பேச,

அதைக் கேட்ட நொடியே, “திமிரெடுத்த கழுத, வாயிலயே போடப்போறேன் பாரு!” என்றவாறே மகளை அடிக்கவே வந்து விட்டார் மணிமாறன்.

வர்ஷினி மட்டும் இடையில் புகுந்து தடுக்கவில்லை என்றால் கார்த்தியும் தந்தையிடம் அடி வாங்கியிருப்பாள். அதன் பிறகு சூழ்நிலையே பெரும் கலவரமாகிப் போயிருக்கும்.

“வாயா, இல்ல சாக்கடையாடி உங்க ரெண்டு பேருக்கும்? முருகா, முருகா…” என பல்லைக் கடித்தவர், வெளியில் சென்று விட்டார்.

இப்படியான சமயங்களில் அரைமணி நேரம் நடந்து சென்று கோபம் தணிந்த பிறகு வருவதுதான் மணிமாறனின் வழக்கம். அவர் வெளியே செல்லவும் வர்ஷினியும் கணவனை இழுத்துக் கொண்டு மேலே வந்து விட்டாள்.

“உன்னோட இந்த கோபத்தால, என் வருத்தத்தை மனசு விட்டு வெளியே சொல்லிக்க கூட முடியலடா! ஏன்தான் நீ இப்படி இருக்கியோ?” என படபடத்து, மனச் சஞ்சலத்துடன் அன்றைய இரவு பட்டினியாக தூங்கிப் போனாள் வர்ஷினி.

குத்திக் கிழிக்கும் வார்த்தைகளைக் கேட்டு வர்ஷினியை சுருட்டிப் போடும் பசியும் தனது வேலையை சரியாகச் செய்ய மறந்தே போயிருந்தது.

     

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம்-6

வெண்ணிலவு-6“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? ஊரு உலகத்துல நடக்காததா? பேசாததா?” தன் பக்க நியாயத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தார் பவானி. இன்று விடிந்த பொழுதிலிருந்தே இதே பாட்டுதான்.மறுபேச்சில்லாமல், “முருகா, முருகா!” என கேட்டுக் கொண்டிருந்த மணிமாறனுக்கு காதில் ரத்தம் வடியாத…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

  1. செந்தூரனை நமபினால் இவள் நடுத்தெருவில் தான் நிற்கணும்,தனக்கென ஒருவேலையை இவள் தேடிக்கணும்.
    கார்த்தி கொடுக்கா கொட்டினாலும் அதுக்கு பின்னாடி ஞாயம் இருக்கு அதை இவள் புரிந்து கொள்ளவில்லை.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்