அத்தியாயம் 1
அத்தியாயம் ஒன்று
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் தழுவி நின்ற கோவையின் இளங்காலைப் பொழுது, பனி மூட்டத்தின் மெல்லிய போர்வையை விலக்கிக்கொண்டு வெளிச்சத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தது. மருதமலையடிவாரத்துக் குளிர் காற்று மரங்களின் கிளைகளை அசைத்துச் செல்ல, வானுயர்ந்து நின்ற அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் முகப்பில் நின்றபடி, தன் விழிகளை உயர்த்தி அண்ணாந்து பார்த்தாள் ப்ரவலிகா.
ப்ரவலிகா மகாலட்சுமி.
அவளது மெல்லிய பவழ உதடுகள் கந்த சஷ்டி கவசத்தின் வரிகளைத் தன்னிச்சையாக உச்சரித்துக் கொண்டிருந்தன.
“ஜீவன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை”
நுழைவாயிலின் கம்பீரமான வளைவில் பித்தளை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த அந்தப் பெயர்ப் பலகையில் காலைச் சூரியனின் கிரணங்கள் பட்டுத் தகதகவென மின்னின. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருந்த அந்த வளாகம், ஒரு தனி நகரத்தைப் போலவே இயங்கிக் கொண்டிருந்தது. ஒருபுறம் ஆம்புலன்ஸ்களின் ஓயாத சைரன் சத்தம். மறுபுறம் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் அசைந்தாட அவசர அவசரமாக எட்டி நடை போடும் மருத்துவர்கள். இன்னொருபுறம் கவலை தோய்ந்த முகங்களோடு அங்கும் இங்கும் அலைமோதும் நோயாளிகளின் உறவினர்கள் என வளாகமே மருத்துவப் பரபரப்பில் மூழ்கியிருந்தது.
ஆனால், அந்தப் பிரம்மாண்டத்தைக் கண்டு ப்ரவலிகாவின் உள்ளத்தில் துளியும் உதறல் எழவில்லை. மாறாக, அவளது பாதங்கள் அழுத்தமாக அந்த வளாகத்தின் தரையில் ஆழமாகப் பதிந்தன.
வயது இருபத்து நான்கு. பார்த்த மாத்திரத்திலேயே எவரையும் கட்டிப்போடும் களையான முகம், வில்லென வளைந்த புருவங்கள், அறிவின் கூர்மை தெறிக்கும் பெரிய விழிகள், எழிலான நாசி. சந்தனமும் ரோஜாவும் கலந்த நிறம். முகத்தில் தன்னம்பிக்கை, எதையும் சாதித்து விடுவேன் என்ற உறுதி!
எம்.பி.பி.எஸ் படிப்பை மிகச் சிறந்த மதிப்பெண்களோடு முடித்து, தன் கட்டாயப் பயிற்சிப் பிரிவையும் (CRRI) வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, அடுத்து வரவிருக்கும் நீட்-பிஜி நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டே, ஜீவன் மருத்துவமனையில் “ஜூனியர் ரெசிடென்ட்” மருத்துவப் பணிக்காக நேர்காணலை முடித்துவிட்டு இன்று பணியில் சேர வந்திருக்கிறாள்.
பொள்ளாச்சியின் பாரம்பரியமிக்க குடும்பம் அவர்களுடையது. தந்தை செந்தில்நாதனுக்குத் திருப்பூரிலும் பொள்ளாச்சியிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளும், தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிற்சாலையும், நவீன விசைத்தறி நூற்பாலையும் சொந்தம். அந்த வட்டாரத்தில் செந்தில்நாதன் குடும்பம் என்றால் மரியாதை. அப்படிப்பட்ட செல்வச் செழிப்பான குடும்பத்தின் ஒரே வாரிசு, அவர்களுடைய தொழிலை விடுத்து மருத்துவப் படிப்புக்குள் நுழைந்ததை ஊரே வியப்பாகத்தான் பார்த்தது.
“ஏன் பாப்பா… நம்ம மில்லு, தோப்புன்னு இத்தனை தொழிலை யாரு பார்த்துக்கிறது? எதுக்குடா உனக்கு இந்த ஆஸ்பத்திரி வாசனையும் ரத்தமும் சீழும்? பேசாம நம்ம பிசினஸை கவனிச்சுக்கிட்டு ராணி மாதிரி வாழலாம்ல?” என்று உறவினர்கள் அவளிடம் ஆரம்பத்தில் கேட்டதுண்டு.
ஆனால் அவளது தந்தை செந்தில்நாதனுக்கு தன் ஒரே செல்ல மகளின் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என்ற இரண்டு எழுத்து சேர வேண்டும். ஆனால், அதற்காக அவர் அவளைக் கட்டாயப்படுத்தியதில்லை.
“ப்ரவி குட்டி ஆசைப்பட்டா படிக்கட்டும். ஆனா அதுக்காக வெளியூர்ல போய் கஷ்டப்பட வேண்டாம். பொள்ளாச்சியிலேயே பெரிய ஆஸ்பத்திரியை நான் கட்டித் தர்றேன். அவ அங்கேயே டாக்டரா இருக்கட்டும்…” என்று செந்தில்நாதன் உறுதியாக இருந்தார்.
“அதுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வேணுமேப்பா. அதுக்காகவாச்சும் நான் அங்க வொர்க் பண்ண போய்த்தானே ஆகணும்.”
“அதுக்குன்னு அந்த ஹாஸ்பிட்டலா? எதாவது பிரச்சனை வந்துற போகுதுடா குட்டி?” என்றவரின் முகம் கவலையை காட்டியது.
“அதெல்லாம் பார்த்துக்கறேன்ப்பா. என்ன கடிச்சா முழுங்கிற போறாங்க?” என்றவளின் பதில் அவரது வாயை அடைத்தது.
காயத்ரியோ எப்போதும் மகளின் பிரிவைத் தாங்க மாட்டாதவர். கோவைக்கு படிக்க போனதே அவருக்கு பிடித்தமில்லை தான். இப்போது வேலையும் கோவையே என்றால்?
“ப்ரவி… பொள்ளாச்சிலேயே எதாவது பண்ணலாம்லடா? நீ எதுக்கு தனியா கோயம்புத்தூருக்குப் போய் கஷ்டப்படணும்?”
“ம்ம்ம்… பொள்ளாச்சில இருந்துகிட்டு, குண்டுசட்டில குதிரை ஓட்ட சொல்றியா? இங்கருந்து எகிறி குதிச்சா கோயம்பத்தூரு… இதுக்கு இவ்வளவு நொனநாட்டியம் பேசுவியா?” தாயிடம் எகிறி அவரை பணிய வைத்திருந்தாள் ப்ரவா.
அவளுக்கு மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது அவளது லட்சியம். பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் களத்தில் நின்று தீவிர மருத்துவச் சூழல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத வேட்கை அவளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது.
தோளில் மாட்டியிருந்த லேப்டாப் பேக்கைச் சரிசெய்து கொண்டு, கையில் இருந்த அசல் சான்றிதழ்களின் கோப்பை நெஞ்சோடு அணைத்தபடி நிர்வாக வளாகத்தின் முகப்பை நோக்கி நடந்தாள் ப்ரவா.
அவளது செல்போன் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தது. திரையில் “மதுபாஷினி” என்ற பெயர் மின்னியது. காதில் போனை வைத்தவாறே வராண்டாவில் அடி எடுத்து வைத்தாள்.
“ஹலோ மது… எங்கடி இருக்க? நான் மெயின் பிளாக் என்ட்ரன்ஸ்ல நிக்கிறேன்…”
“அடிப்பாவி… உன்னை எங்கேன்னு தேடிட்டு இருக்கேன்! கேசுவாலிட்டி பக்கத்துல இருக்கிற டாக்டர்ஸ் லவுஞ்சுக்கு வாடி. நான் அங்கதான் ஃபைல்ஸோட வெயிட் பண்றேன்…” மறுமுனையில் மதுவின் குரல் பரபரப்பாக ஒலித்தது.
ப்ரவா விறுவிறுவென நடைபோட்டு லவுஞ்சை அடைந்தாள். அங்கே ஒரு கையால் ஆப்பிளைக் கடித்தபடி, மறு கையால் ஸ்டெதாஸ்கோப்பைச் சுழற்றிக் கொண்டிருந்தாள் மதுபாஷினி!
மதுபாஷினி… ப்ரவலிகாவின் உயிர்த் தோழி! சேம் ட்வென்டி போர். படபட பட்டாசு. சிறகடிக்கும் பட்டாம்பூச்சி. சீரியஸ்னஸ் என்றால் என்னவென்று கேட்கும் ஒரிஜினல் கேங்க்ஸ்டர். கல்லூரிப் பருவம் தொட்டே ப்ரவாவின் நிழல். அம்மையாரும் ஜெனரல் மெடிசினில் ஜூனியர் ரெசிடென்ட்டாக இதே மருத்துவமனையில் இணைய வந்திருக்கிறாள்.
“ஹேய் செல்லகுட்டி!” என்று ப்ரவாவைக் கண்டதும் உற்சாகமாகக் கத்திய மது, அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டாள்.
“மது… மெதுவாடி! எல்லாரும் பார்க்குறாங்க…” ப்ரவா சுற்றிலும் பார்த்து நெளிந்தாள்.
“பார்க்கட்டுமே… கோயம்புத்தூரோட டாப் ஹாஸ்பிடல்ல நம்ம ரெண்டு பேரும் ஜூனியர் ரெசிடென்ட்ஸா காலடி எடுத்து வச்சிருக்கோம். இந்த சந்தோஷம் போதாதா? ஆமா, முகத்துல என்னடி இவ்வளவு டென்ஷன்? இன்னைக்கு நம்மளோட முதல் நாள்!” மது குறும்பாகக் கண்ணடித்தாள்.
“டென்ஷன் இல்லாம எப்படி மது? தமிழ்நாடு முழுக்கப் பேர் போன பெரிய கார்ப்பரேட் ஹாஸ்பிடல். இங்க இருக்கிற சீனியர்ஸ் எல்லாம் எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோன்னு கொஞ்சம் உதறலாத்தான் இருக்கு. அட்மினிஸ்ட்ரேஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு கேள்விப்பட்டேன்…” ப்ரவாவின் குரலில் மெல்லிய படபடப்பு எட்டிப்பார்த்தது.
மது அவளது தோளை ஆதரவாகத் தட்டினாள். “ப்ரவி, நாம மெரிட்ல படிச்சு பாஸாகி வந்திருக்கோம். சும்மா யாருடைய சிபாரிசுலயும் இங்க வரல. எதையும் தைரியமா பேஸ் பண்ணலாம். சேர்மனோட சன்னும் அவரோட கசினும் தான் எல்லாத்தையும் பார்த்துக்கறாங்க போல. முதல்ல எம்.டி சாரைப் போய் பார்த்து ரிப்போர்ட் பண்ணுவோம் வா…”
இருவரும் நிர்வாகக் கட்டிடத்தின் முதல் தளத்தை நோக்கி நடந்தனர். மார்பிள் தரையில் அவர்களது காலணிகள் ‘டக் டக்’ என ஒலித்தன. சுவர்களில் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளும், அதிநவீன மருத்துவச் சாதனங்களின் படங்களும் மாட்டப்பட்டிருந்தன.
முதல் தளத்தின் முனையில், ஒரு பிரம்மாண்டமான தேக்கு மரக் கதவு. அதன் அருகே பித்தளைப் பலகையில் கம்பீரமாகப் பொறிக்கப்பட்டிருந்தது:
“டாக்டர் ஜீவானந்தன் சக்திவேல், M.S. (General Surgery) – Managing Director”
முப்பது வயது! இந்த இளம் வயதிலேயே தந்தையின் மருத்துவமனையைத் தன் தோள்களில் சுமந்து, ஏழை எளியவர்களுக்கான சேவையாகவும், நவீன மருத்துவத்தின் சிகரமாகவும் மாற்றியிருக்கும் நவீன சித்தன்.
“மே வி கம் இன், சார்?” கதவை லேசாகத் தட்டிவிட்டு மது அனுமதி கேட்டாள்.
“எஸ், கம் இன்…” உள்ளேயிருந்து அழுத்தமான, கம்பீரமான ஒரு ஆண் குரல் அனுமதியளித்தது.
இருவரும் உள்ளே நுழைந்தனர்.
அறைக்குள் மிதமான குளிரும், மருத்துவக் கோப்புகளின் வாசனையும் பரவியிருந்தது. நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த பெரிய சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் ஜீவானந்தன்!
மாநிறத்திற்கும் சற்று அதிகமான வசீகரத் தோற்றம், உடற்பயிற்சியினால் உறுதிபெற்ற பரந்த தோள்கள், நேரான கூர்மையான பார்வை, உதட்டோரம் எப்போதும் நின்றாடும் ஒரு மெல்லிய புன்னகை. வெண்ணிற கோட்டும், அதன் பாக்கெட்டில் செருகப்பட்டிருந்த விலையுயர்ந்த பேனாவும் அவனது நிர்வாக ஆளுமையை அப்பட்டமாகப் பறைசாற்றின. அவன் ஒரு கோப்பைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான்.
“ப்ளீஸ் டேக் யுவர் சீட்ஸ்…” கோப்பிலிருந்து தலையை நிமிர்த்தாமலேயே கையை அசைத்து அமரச் சொன்னான் ஜீவா.
இருவரும் எதிரே இருந்த தோல் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
ஜீவா கோப்பை மூடிவிட்டு, நிதானமாகத் தலையை உயர்த்தி இருவரையும் பார்த்தான். அவனது கூர்மையான கண்கள் இரு இளம் மருத்துவர்களையும் ஒரு நொடி ஊடுருவி ஆராய்ந்தன.
“டாக்டர் மதுபாஷினி அண்ட் டாக்டர் ப்ரவலிகா… ரைட்?” அவனது குரல் கறாரான நிர்வாகியின் தொனியில் ஒலித்தது.
“எஸ் சார்…” மது மரியாதையுடன் தலையசைத்தாள்.
“வெல்கம் டூ ஜீவன்ஸ். உங்க ரெண்டு பேரோட அகாடமிக் டிராக் ரெக்கார்டும் ரொம்ப நல்லா இருக்கு. கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்ல நல்ல மார்க்ஸ் வாங்கி முடிச்சிருக்கீங்க. நீட்-பிஜிக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டே இங்க ஜூனியர் ரெசிடென்ட்ஸா ஜாயின் பண்ண விரும்புறதா அப்ளிகேஷன்ல மென்ஷன் பண்ணிருந்தீங்க…” ஜீவா நிதானமாகக் கூறினான்.
“எஸ் சார். பிராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸும் வேணும், அதே சமயம் அடுத்த வருஷம் பிஜி சீட் எடுக்கணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம்…” மது பதில் சொன்னாள்.
ஜீவா தன் நாற்காலியில் சற்று முன்னோக்கிச் சாய்ந்தான். அவனது கண்கள் ப்ரவாவின் முகத்தில் நிலைத்தன.
ப்ரவா அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு தலைமை மருத்துவருக்குரிய அத்தனை மிடுக்கும் கம்பீரமும் அவனிடம் வெளிப்பட்டது.
ஜீவாவின் புருவங்கள் லேசாக உயர்ந்தன. அவனது உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
“டாக்டர் ப்ரவலிகா… நீங்க ரொம்ப அமைதியா இருக்கீங்க? ஹாஸ்பிடல் வொர்க் லோட் பத்தி ஏதாவது தயக்கமா?” அவன் நேரடியாக அவளிடம் கேட்டான்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்… வொர்க் லோடுக்கு நாங்க தயாராத்தான் வந்திருக்கோம். எமர்ஜென்சி சூழல்களைக் கையாளுறதுதான் ஒரு உண்மையான டாக்டரோட பலம். அதை முழுமையா கத்துக்கத்தான் இங்க வந்திருக்கோம்…” ப்ரவா தன் குரலில் சற்றும் நடுக்கமில்லாமல், உறுதியான கம்பீரத்தோடு பதிலளித்தாள்.
அவளது தெளிவான பதிலைக் கேட்டு ஜீவாவின் முகம் மலர்ந்தது. அவனது தலையை ஆமோதிப்பாக அசைத்தான்.
“குட்… அந்த தெளிவு ரொம்ப முக்கியம். ஆனா ஒரு விஷயம்… என்னை ‘சார்’னு கூப்பிட வேண்டாம். ஜஸ்ட் கால் மீ ஜீவா. இந்த ஹாஸ்பிடல்ல நோ ஓவர் ஃபார்மாலிட்டிஸ். சீனியர், ஜூனியர்னு தேவையில்லாத ஈகோ எல்லாம் இங்க கிடையாது. வொர்க் அட்மாஸ்பியர் ஃப்ரெண்ட்லியா இருந்தாதான் நாம மனசு விட்டு வேலை பார்க்க முடியும். நோயாளிகளை கவனிக்கும்போது ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கணும், அவ்வளவுதான்…” ஜீவா சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தான்.
“தேங்க்யூ… ஜீவா…” மது புன்னகையுடன் கூறினாள்.
ப்ரவா மெல்லிய தலையசைப்போடு அதை ஏற்றுக்கொண்டாள்.
அப்போது, அறையின் கதவு படாரெனத் திறக்கப்பட்டது!
“ஜீவா! அந்த போஸ்ட்-எம்ஐ (Post-MI) பேஷன்ட்டுக்கு வென்ட்ரிகுலர் டாக்கிகார்டியா (Ventricular Tachycardia) டெவலப் ஆகியிருக்குடா. எல்வி இஜெக்ஷன் ஃப்ராக்ஷன் (LVEF) 30%க்கு கீழ போயிடுச்சு. கார்டியோவர்ட்டருக்கு அரேஞ்ச் பண்ண சொல்லியிருக்கேன்…”
அதிவேகமாகப் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்த உருவத்தைக் கண்ட வினாடி, ப்ரவலிகாவின் உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு! நாற்காலியின் கைப்பிடிகளை அவளது கைவிரல்கள் தன்னிச்சையாக இறுகப் பற்றின.
டாக்டர் விஷ்வஜித்!
முப்பத்தொன்று வயது! ஜீவாவை விட ஒரு வயது மூத்தவன். மருத்துவமனையின் தலைமை இதய நோய் நிபுணர் (Senior Interventional Cardiologist).
உயரமான, கட்டுமஸ்தான தேகம். கூர்மையான நாசி. ஆனால், ஜீவாவின் முகத்தில் இருந்த அந்த இதமான இளகிய சிரிப்பு இவனிடம் மருந்துக்கும் இல்லை. மாறாக இறுக்கம் அவனது முகத்தில் ஒரு பாறையைப் போல உறைந்திருந்தது. அவனது கண்கள் எச்சரிக்கை உணர்வோடும் தகதகத்தன. வெண்ணிற கோட்டின் மீது தொங்கிய ஸ்டெதாஸ்கோப்பும், கையில் இருந்த ஈசிஜி ஃபைல்களும் அவனது வேகத்தை உணர்த்தின.
அவனைக் கண்ட வினாடி ப்ரவாவின் நெஞ்சுக்குள் இனம் புரியாத ஒரு பாச அலை ததும்பி வழிந்தது. கண்களில் சட்டென்று நீர் முட்டியது.
மது ப்ரவாவின் கையை மேசைக்கு அடியில் பலமாக அழுத்திப் பிடித்தாள். ‘கண்ட்ரோல் ப்ரவி…’ என்று மதுவின் விரல்கள் அவளை எச்சரித்தன.
“விஷ்வா… டிஃபிபிரிலேட்டரை 150 ஜூலுக்கு செட் பண்ணச் சொல்லுடா. அமிடரோன் (Amiodarone) ஐவி லோடிங் டோஸ் கொடுத்தீங்களா?” ஜீவா உடனடியாக எழுந்தான்.
“எல்லாம் கொடுத்தாச்சு ஜீவா. கேத் லேப் டீம் ரெடியா இருக்கு. நான் அங்கதான் போயிட்டு இருக்கேன்…” என்று படபடவெனப் பேசிய விஷ்வாவின் கண்கள், அப்போதுதான் எதிரே அமர்ந்திருந்த இரு இளம் பெண்களின் மீதும் விழுந்தன.
அவனது கண்கள் சட்டென்று குறுகின. புருவங்கள் முடிச்சிட்டன.
“இவங்க…?” விஷ்வாவின் குரலில் அப்பட்டமான அந்நியத்தன்மையும் அதிகாரமும் தெரிந்தது.
“இவங்கதான் நம்ம புது ஜூனியர் ரெசிடென்ட்ஸ் விஷ்வா. டாக்டர் மதுபாஷினி, அண்ட் டாக்டர் ப்ரவலிகா. இன்னைக்குதான் ஜாயின் பண்றாங்க…” ஜீவா இருவரையும் கைகாட்டி அறிமுகப்படுத்தினான்.
மது உடனடியாக எழுந்து நின்று, மரியாதையான புன்னகையோடு, “குட் மார்னிங் சார்…” என்று தன் கையை நீட்டினாள்.
விஷ்வா அவளது நீட்டிய கரங்களை ஒரு கணம் உற்று நோக்கினான். அவனது கைகள் பாக்கெட்டுகளுக்குள்ளேயே தங்கிவிட்டன. பெண்களிடம் இயல்பாகப் பழகுவதையோ, நெருக்கம் காட்டுவதையோ அறவே தவிர்ப்பவன். வெறும் தலையசைப்போடு, “வெல்கம்…” என்று அளந்த வார்த்தைகளோடு மட்டும் முடித்துக்கொண்டான். அவனது முகத்தில் எந்தவிதச் சலனமுமில்லை; வழக்கமான இறுகிய அமைதி மட்டுமே குடியிருந்தது.
அடுத்து அவனது பார்வை ப்ரவலிகாவின் மீது படிந்தது.
ப்ரவா தள்ளாடிய கால்களோடு மெல்ல எழுந்து நின்றாள். அவனை நேருக்கு நேர் பார்க்கும் அந்தத் தருணம் அவளது தொண்டையை முழுமையாக அடைத்தது. அவனது தோற்றமும், அவனது கண்களில் தென்பட்ட அந்தத் தீராத தனிமையும் அவளது நெஞ்சை ஏனோ பிசைந்தது. அவளால் கைகளை நீட்ட முடியவில்லை.
“ஹலோ டாக்டர்…” என்று மிக மெல்லிய குரலில் சொன்னவளின் விழிகளில் கண்ணீர் கரைகட்டி நின்றது! அலைமோதும் பாசமும் தவிப்பும் அவளது இமைகளைத் தாண்டித் துளிர்க்கத் துடித்தன.
விஷ்வா அவளைக் கூர்ந்து நோக்கினான்.
பொதுவாக புதிய மருத்துவர்கள் தன்னிடம் பேசும்போது பவ்யம் காட்டுவார்கள் அல்லது அவனது கடுகடுப்பான தோற்றத்தைக் கண்டு ஒருவித பயத்தோடு ஒதுங்குவார்கள். ஆனால், இந்தப் பெண்ணின் கண்களில் அச்சமில்லை; மாறாக, எதற்காகவோ ததும்பும் கண்ணீரும், இனம் புரியாத ஒரு பாசத் தவிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன!
அந்தக் கண்கள்… அதில் அலைமோதிய அந்த ஈரப்பதம்… விஷ்வாவின் மனதிற்குள் ஏதோ செய்தது! காலத்தின் ஆழத்தில் எங்கோ புதைந்துபோன ஒரு பிம்பம் சட்டென்று தொட்டுச் சென்றது போன்ற ஒரு விசித்திரமான வலி அவனது நெஞ்சினடியில் மெலிதாக அதிர்ந்தது.
அவளது விழிகளில் தெரிந்த அந்தத் துயரத்தைப் பார்த்தும் பார்க்காதது போல, தன் பார்வையை மெல்ல அவளிடமிருந்து விலக்கிக் கொண்டான். தன் முகத்தின் இறுக்கத்தை இன்னும் ஒரு படி அதிகமாக இழுத்துப் போர்த்திக்கொண்டவன், அவளது ஹலோவுக்கு பதிலாக லேசாகத் தலையை மட்டும் அசைத்துத் தன் கவனத்தைக் கையில் இருந்த கோப்புகளுக்கு மாற்றிக்கொண்டான்.
ஜீவா இருவரையும் ஒரு கணம் கூர்ந்து கவனித்தான். விஷ்வாவின் அந்தத் தயக்கமும், ப்ரவாவின் கண்களில் தெரிந்த அந்தத் துயரமும் அவனது கூரிய பார்வையில் தப்பவில்லை. சூழலின் அமைதியைக் கலைக்க நினைத்த ஜீவா, விஷ்வாவின் தோளைத் தட்டினான்.
“ஓகே விஷ்வா… நீ கேத் லேப் போயிட்டு இரு. இவங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு கார்டியாலஜி ஐசியூல தான் போஸ்டிங். அசிஸ்ட் பண்ணட்டும்…” ஜீவா இயல்பாகப் பேச்சை மாற்றினான்.
விஷ்வா அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தன் ஸ்டெதாஸ்கோப்பைச் சரிசெய்தபடி கதவை நோக்கித் திரும்பிய அந்த நொடியில்…
அறையின் சுவரில் இருந்த எமர்ஜென்சி அலாரம் காதைப் பிளக்கும் சத்தத்தோடு ஒலிக்கத் தொடங்கியது! சிவப்பு விளக்கு சுழன்று சுழன்று எரிய ஆரம்பித்தது…
ஜீவாவின் மேஜையில் இருந்த எமர்ஜென்சி ஹாட்லைன் போன் அலறியது.
ஜீவா உடனடியாக ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
“சார்! கேசுவாலிட்டி இன்சார்ஜ் டாக்டர் அருண் பேசுறேன்! சேலம்-கோவை பைபாஸ்ல ஒரு தனியார் ஆம்னி பஸ்ஸும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிடுச்சு சார்! மோர் தேன் ஃபிப்டீன் கிரிட்டிகல் கேசுவாலிட்டீஸ்! பலருக்கு பாலிட்ராமா (Polytrauma), மேசிவ் பிளட் லாஸ்! நாலு ஆம்புலன்ஸ் இப்போ ஹாஸ்பிடல் கேட்டை ரீச் ஆகிடுச்சு சார்!”
அறையிலிருந்த காற்று சட்டென்று கனத்துப் போனது.
ஜீவாவின் முகத்தில் இருந்த குறும்பு அடியோடு மறைந்தது. அவன் ஒரு நொடியில் போர்க்களத்தின் தளபதியாக மாறினான்.
“விஷ்வா! உடனடியா எமர்ஜென்சி கோட் ரெட் (Code Red) அனவுன்ஸ் பண்ணு! பிளட் பேங்க்ல எல்லா நெகடிவ் குரூப் பிளட்டையும் கிராஸ்-மேட்ச் பண்ணி ரெடியா வைக்கச் சொல்லு! கேத் லேப் டீமை ஸ்டாண்ட்-பைல வை! மைனர் அண்ட் மேஜர் ஓடிகளை இப்போவே ஸ்டெர்லைஸ் பண்ணி ஓபன் பண்ணுங்க!” ஜீவா அதிரடியாகக் கட்டளைகளைப் பிறப்பித்தான்.
பின் அவன் தன் கூரிய பார்வையை ப்ரவா மற்றும் மதுவின் மீது செலுத்தினான்.
“டாக்டர்ஸ்… உங்களுக்கான உண்மையான எக்ஸாம் இப்போ ஆரம்பிக்குது! புக்ல படிச்ச தியரியை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு களத்துல இறங்குங்க! மூவ் டு கேசுவாலிட்டி, நவ்!”
ஜீவா தன் கோட்டை உதறிக்கொண்டு வாசலை நோக்கிப் பாய, விஷ்வா அவனுக்கு இணையாக விரைந்தான்.
ப்ரவலிகா தன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை முழுமையாகத் துடைத்தெறிந்தாள். அவளது முகத்தில் அச்சத்தின் சுவடு கூட இல்லை. கழுத்தில் கிடந்த ஸ்டெதாஸ்கோப்பை வலது கையால் இறுகப் பற்றியவள், தன் சக மருத்துவர்களுக்குப் பின்னால் ஒரு போர்க்களத்து வீராங்கனையாக, மின்னல் வேகத்தில் எமர்ஜென்சி வார்டை நோக்கிக் காலடிகளை எடுத்து வைத்தாள்!





